“ஆவணப்படங்களின் ப்ரத்யேகதை என்னவென்றால் அவை உண்மையான மனிதர்கள் பற்றி பேசுகிறது” என்று ஒரு முறை போலாந்து இயக்குநர் க்ரைஸ்டாப் கீஸ்லோஸ்கி சொன்னதாக நினைவு.
யான் ஆர்தஸ் பெர்த்ரான் (Yaan-Arthus Bertrand) பற்றி பலருக்கும் அறிமுகம் தேவை இருக்காது. 2009-ல் வெளிவந்த HOME என்ற ஆவணப்படம் மிக பிரபலம். உலகின் மிக அழகான நிலப்பரப்புகளை ஹெலிகாப்டர் மற்றும் ஹாட் பலூன்களின் மூலம் ஒளிப்பதிவு செய்து, அதன் மூலமே மனித இனம் தன்னிலும் மிகப்பழைமனியான இந்த கிரகத்தை எப்படி மோசமாக இந்த குறுகியகாலத்தில் சீரழித்துவந்துள்ளது என்பதைப்பற்றி பேசியது.
இப்போது 2015-ல் வெளிவந்திருக்கும் அவரது HUMAN திரைப்படம் உலகம் என்னும் கிரகத்தின் நிலப்பரப்புகளில் இருந்து வெளிவந்து அதனுடைய மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசுகிறது. உலகம் முழுவதும் உலகம் முழுவதையும் படம் எடுத்தவர் என்ற முறையில் பலநாடுகள் சுற்றி பலபேர்களைப் பார்த்து அனுபவப்பட்ட யானிடம் இருந்த கேள்வி இதுதான் “மனித இனம் தோன்றி இவ்வளவு வருடங்கள் ஆனபோதும் மனிதர்கள் ஏன் இன்னும் ஒருவரோடு ஒருவர் ஒத்திசைவாக வாழ மறுக்கின்றனர்…தலைமுறைகள் தாண்டி இது ஏன் இப்படியே தொடர்கிறது? ஏதோ ஒரு வகையில் மனித இனம் இன்னும் நாகரீகமடையவில்லையோ? ” போன்ற கேள்விகள் தான் இந்த திரைப்படத்தை எடுக்கத் தூண்டியுள்ளது.
65 நாடுகளுக்கு பயணித்து 2000 பேருக்கு மேல் பேட்டிகண்டு மூன்று பகுதிகளாக வெளிவந்திருக்கிறது. பல்வேறு விஷயங்கள் குறித்து பல்வேறு நிலப்பரப்பிலிருந்து வரும் மாந்தர்கள் பேசுகிறார்கள். அவர்கள் நிலப்பரப்பு பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டு அவர்கள் நேரே நம்மைப்பார்த்து பேசுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கரை மணிநேர திரைப்படத்தைக் காணத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அது ஒரு திரைப்படம் அல்ல, மாறாக ஒரு நீண்ட உடையாடலின் துவக்கம் என்பது புரியவரும். அந்த உரையாடல் நம்மை அவர்கள் உலகிற்கு அழைத்துச் செல்கிறது, நம்மை புன்னகைக்க வைக்கிறது, வியக்கவைக்கிறது, சிலநேரங்களில் அழவைக்கிறது. ஏதோ ஒரு கண்டத்தில் நாம் அறிந்திராத ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரனுடைய வியர்வை வாசம் நமது வரவேற்பறையில், அவரது கண்ணீர் பிசுபிசுப்பை நமது உள்ளங்கைகளில் உணரும் தருணம் - அது மிக அரிதாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. அதைதான் சாத்தியப்படுத்துகிறது HUMAN
மானுடத்தின் மிக முக்கியமான ஒரு பதிவாக இந்த திரைப்படம் நிலைத்திருக்கும். சினிமா என்பது ஒரு நூற்றைம்பது வருட பழைமையான கலை தான். பல நூற்றாண்டு பழைமையான ஓவியங்கள் சிற்பங்கள் எப்படி மனிதகுலத்தின் கதைகளை சொல்லியவண்ணம் இருக்கிறதோ அதுபோல இந்த நவீண கலைவடிவம் மனிதவாழ்வின் முக்கியமான ஆவணமாக பாதுகாக்கப்பட வேண்டும். இன்று பேசப்பட்டிருக்கும் இந்த பலவகையான அம்சங்கள் பல வருடங்கள் கழித்து நாம் நமது சமூகத்தை மறுபரிசீலனை செய்துபார்க்க ஒரு அளவுகோலாகவும் இருக்கும். ஒரு 50 வருடங்கள் கழித்து இந்தத் திரைப்படம் பார்க்கப்படுகையில் “நல்லவேளை இப்போது இந்த துயரங்கள் இனி இல்லை” என்று ஒரு தலைமுறை கூறுமாயின் நாம் நல்லதொரு சமூகத்தை முன்னெடுகின்றோம் என்று நம்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக