இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

ரொட்டித்துண்டுகள்


For Bread Alone - மொஹம்மத் ஷூக்ரி என்ற மொரோக்கன் எழுத்தாளருடைய நாவலை வாசிக்க நேர்ந்தது. ஒரு அடிமை தேசத்தின் மக்களின் வீழ்ச்சியை அப்பட்டமாக பேசுகிறது இந்த நாவல். ஷூக்ரியின் இருபது வயதுவரையான சுயசரியாகத்தான் கொள்ள வேண்டும். இருபது வயது வரை ஒரு எழுத்து கூட எழுதபடிக்கத் தெரியாத ஒருவராக இருந்த ஷுக்ரிக்கு சிறையில் தான் முதன்முதலாக அரபி கற்கிறார். பின்னர் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். 

தனது தொலைந்துபோன பால்யத்துக்கு பதிலை இறைஞ்சி ஒரு பதிலற்ற கேள்வியாக நிற்கிறது இந்த புத்தகம். வெறும் ஒரு தனிமனித வாழ்வின் கதையாக மட்டும் இல்லாமல் அது ஒரு தேசத்தின் குரலாகவும் தான் ஒலிக்கிறது For Bread Alone.

சாருநிவேதிதா அவர்கள் ஒரு புத்தகவெளியீட்டில் தான் ஷூக்ரியைக் குறிப்பிட்டிருந்தா. சுவாரஸ்யமாக இருந்ததால் உடனே வாங்கிப் படித்தேன். இல்லையென்றால் வாழ்நாள் முழுக்க இந்த புத்தகத்தை நான் படிக்க நேர்ந்திருக்குமா தெரியாது. இந்த புத்தகம் என்று இல்லை, சாரு சொல்லி தான் யோசா, புக்கோவ்ஸ்கி, நவ்வல் சாத்வி, ஹூலியோ கொத்தசார் போன்ற எழுத்தாளர்களை எனக்குத் தெரியவந்தது. இவ்வாறான எழுத்தாளர்கள் பற்றி வேறு படைப்பாளிகள் யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. புதிய தமிழ் தலைமுறை வாசகர்களின் வாசிப்பு ரசனையை மேம்படுத்துவதில் சாருவின் பங்கு மிகமுக்கியமானது என்று சொல்வதில் எந்த இன்ஹிபிஷனும் தேவையில்லை.

என்னுடன் பணிபுரியும் ஒருவர் மொரொக்கோவைச் சேர்ந்தவர், பாரீஸில் வாழ்பவர். அரபி எழுதி வாசிக்கக்கூடியவர். அவரிடம் இந்த புத்தகத்தைப் பற்றியும் ஷூக்ரி பற்றியும் கேட்டேன். அவருக்கு தெரிந்திருக்கவில்லை. இப்படி ஒரு ஆள் இருப்பதையே அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதை அறிமுகபடுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அவசியம் படிப்பதாக சொன்னார். Irony என்னவென்றால் மொரொக்கோவில் அரபியில் எழுதப்பட்ட புத்தகம் இந்தியாவில் வாசிக்கப்பட்டு பகிரப்பட்டு அது ஒரு மொரொக்கனை மீண்டும் சென்றடைகிறது.