இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பக்கட்டைக் கழுவி குழந்தையை ஊற்றாதே!

பக்கட்டைக் கழுவி குழந்தையை ஊற்றாதே! 


சற்று வேடிக்கையான பழமொழி தான். கொஞ்சம் கொடுமையானதும் கூட. 

இதை நமது கலாச்சாரத்தில் பொருத்திப் பார்ப்பது சற்று கடினம் தான். நம் ஊர்களில் கைக்குழந்தைகளை குளிப்பாட்ட பெரியவர்கள் இரண்டு கால்களை நீட்டி, அதில் இருகால்களுக்கு நடுவே உண்டாகும் இடைவெளியை ஒரு பள்ளமாகப் பயன்படுத்தி குழந்தையை அதில் கிடத்தி குளிப்பாட்டுவதை இப்போது கூட நாம் பார்க்கலாம். ஆனால் ஐரோப்பிய தட்பவெட்பத்தில் அல்லது வீடுகளின் அமைப்பினாலும் அதெல்லாம் சாத்தியம் இல்லை. பெரும்பாலும் பெரியவர்களது குளிக்கும் தொட்டி போலவே வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான ஒரு குளியால் தொட்டி இருக்கும். அதில் தண்ணீர் நிறப்பி குளியல் அறையிலோ அல்லது பெரியவர்களின் குளியல் தொட்டிக்குள்ளோ அதை வைத்து தண்ணீர் நிரப்பி, குழந்தையை அதில் குளிப்பாட்டுவர்.  பின் குழந்தையை மாற்றி, துடைத்து,  இறுதியாக அந்த சிறிய தொட்டித் தண்ணீரை கழுவி ஊற்றி, அதை உலர்வதற்காக அப்புறப்படுத்தி வைப்பார்கள். 

பழமொழியானது, "குழந்தையைக் குளுப்பாட்டிய தொட்டியை கழுவிக் கவுக்கும் பெண்ணே, அழுக்கு நீரைக் கழுவி ஊற்று, குழந்தையையும் சேத்தி ஊற்றிவிடாதே!" என்பதாகும். 

எதை உணர்த்துவதற்கு இவ்வளவு கடுமையான பழமொழி? 

Jeter le bébé avec l'eau du bain (ஜெத்தே ல-பேபே அவெக் லோ-த்யு-பேங்)

ஏதோ சிந்தணையில் இருந்த பெண்மணி, குழந்தையைக் குளுப்பாட்டி தண்ணீரை அகற்றுவதற்கு முன் அதில் இருந்த (அவ்வளவு பெரிய) குழந்தையை கவனிக்காது போனது போல.. முக்கியமான விஷயத்தைப் விட்டுவிட்டு அவசியமற்றதைப் பிடித்து தொங்கிக்கிக்கொண்டு இருக்காதே! 

இதைத்தான் சற்று கிண்டலாகவும் கொஞ்சம் கோபமாகவும் வெளிப்படுத்துகிறது இந்த சொல்லாடல்.               

Voir midi à sa porte - உன் வீட்டில் பகலா?

#005 

உன்வீட்டில் இப்போது நன்பகலா? என்று மொழிபெயர்க்கலாம். நல்லதொரு சொலவடை. 

பிரெஞ்சில்: Voir midi à sa porte (சொல்லிப் பாருங்கள்: வார் மிடி அ-சா-போர்த்)

அப்படியே நேரடியாக பொருள் கொண்டால் "அவரவர் வாசலில் நன்பகலைப் பாருங்கள்" என்று வரும். என்ன சொல்ல வருகிறார்கள். 

கற்பனை செய்து பாருங்கள், பற்பல ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கடிகாரங்கள் கண்டுபிடிக்காத காலம் என்றோ, அல்லது ஒவ்வொரு வீட்டிலும் கடிகாரம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேறியிராத காலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் நேரம் அறிவதற்காக முன்வாசலில் ஒரு நேரங்காட்டிக்  கருவியை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் உலக்கை போன்ற ஒன்று என்று வைத்துக்கொள்வோம். வெயில் (இருக்கும் நாட்களில்) அதன் நிழலை வைத்து இன்ன நேரம் ஆகிவிட்டது என்று கணிப்பார்கள். வீட்டிறகுள்ளிருந்து நேரம் பார்க்க நினைக்கும் ஒருவர் தனது தலையை லேசாக சாய்த்து வாசலைப் பார்த்தாலே தெரிந்துவிடும். கருவியின் நிழல் காலையில் மெல்ல வளர ஆரம்பித்து, நண்பகலில் சுருங்கி பின் பிற்பகலில் நீண்டு மறையும். 

வேடிக்கை என்னவென்றால் ஒரு வீட்டுக்காரர் அவரது வாசலைப் பார்த்து நன்பகல் ஆகிவிட்டது என்பார். ஆனால் இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒருவரது வீட்டில் இன்னும் கருவி நன்பகலை காட்டாமல் இருக்கலாம். சில வினாடிகளில் அவர் வீட்டிலும் வந்துவிட்டிருக்கும். ஆகவே அவனவன் பார்த்தது அவனவன் பகல்! இரண்டுபேர் ஒரே நேரத்தில் பகலைப் பார்க்காது போகலாம். 

அப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் பார்வையும் வேறுவேறு, அவரவர் வாசலில் நின்று பார்த்தால் தான் அவர்கள் தரப்பு நியாயம் தெரியும் என்பதை வழியுறுத்தவே இந்த சொலவடையை பயன்படுத்துகிறார்கள். Chaqu'un voir midi à sa porte - அவரவர் அவர் வீட்டு வாசலிலிருந்து அவரது பகலைக் காண்கிறார்கள்.