இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜூன், 2010

நீரின்றி அமையாது உலகு!

"கோடை வந்தாலும் வந்தது...தண்ணீருக்கு ஒரே பிரச்சணை" இதை நீங்கள் ஊர், நிலப்பரப்பு பேதமின்றி தமிழ்நாட்டிலும் இன்னபிற நாட்டிலும் கேட்கக்கூடிய ஒரு செய்தி. இந்த தண்ணீர் பிரச்சணை எல்லா 'தண்ணீரு'க்கும் பொருந்தும். சென்னையில் வெயில் காலங்களில் பீர் பாட்டிலின் டிமேன்டை பூர்த்தி செய்ய முடியாமல் கண்ணாபின்னா என்று போலி சரக்குகள் புழங்குகின்றன. புட்டிப்படுத்தப்படும் கோக், ஃபேன்டா போன்ற குளிர்பானங்களும் பெரும்பான்மையானவை போலியே! பள்ளி சிறுவர்கள்கூட முதல் மடக்குலையே சொல்லிவிடுகிறார்கள். வீட்டுக் குடிநீர் கேன்கள் நிரப்புவதிலும் தாமதம். அடிப்படை சுகாதாரத்திற்கும்கூட நீரிண்மையால் அனேகர் இடம் மாறி இடம் மாறி குடிபெயர்வதும் கோடையில் நடப்பது வழக்கமான செயல். தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டுவிட்ட குடும்பங்கள் இயல்பான மனநிம்மதியோடு இருப்பது இயலாதது. வீட்டுப் பிரச்சனைகள் துடங்கவும், சொற்கள் தடிக்கவும் இதுவே ஒரு நல்ல துடக்கமாக ஆகிவிடுவதுண்டு. வீட்டில் தண்ணீர் போதான்மை என்பதற்க்காகவே எந்த உறவினரையும் வீட்டிற்கு அழைக்க கூச்சப்படு ஒதுங்கி வாழும் எவ்வளவோ பேர் உண்டு.

இவ்வாறு கோடை, சூடு என்பதை மட்டும் கடந்து தீராத தண்ணீர் பற்றிய பய உணர்வை அளித்தபடியே இருக்கிறது. இவ்வாறாக ஒரு கோடக்கால வாரயிறுதி மதியப்பொழுதிலே வீட்டு குடிநீர் கேன் காலியாகி விட்டிருந்தது. தண்ணீர் சப்ளைக்காரன் தற்போது ‘இருப்பு’ இல்லை என்றும், கிடைக்க தாமதமாகும் என்றும் சொல்லிவிட்டான். காத்திருந்து காத்திருந்து...இரவும் ஆனது. உணவு அருந்தகூட தண்ணீர் இல்லை. அடுத்த அறைக்காரன் முட்டை புரோட்டாவுடன் கோக் அருந்துக்கொண்டிருந்தான். காசு கொடுத்தாலும் குடிதண்ணீர் கிடைக்காத கோபம் தான் மெலோங்கியிருந்தது. தெருக்கோடிக் கடையிலிருந்து 2 Aquafina பாட்டில்களும் கொஞ்சம் தண்ணீர் பாக்கெட்டும் வாங்கி வந்தேன். இரவு மெல்ல அடங்கியிருந்தது. தண்ணீர் தாகம் அப்போதைக்கு தீர்ந்துவிட்டதால் தண்ணீர் பற்றிய கோபம் எல்லாம் பல மணிநேரத்திற்கு முன்பே தணிந்து விட்டுருந்தது.

மொட்டை மாடியிலிருந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சோடியம் விளக்கின் வெளிச்சத்திற்குக் கீழ் ஒரு சிறுவன் ஒரு அடி..பம்ப்பில் குதித்து குதித்து தண்ணீர் இரைத்துக்கொண்டிருந்தான். மறுமுனையில் ஒரு பெண்மணி இரண்டு பக்கெட் துணிகளைத் துவைத்துக்கொண்டுருந்தாள். அவள் துணிகளை அலசும் சத்தமும், அவன் தண்ணீர் இரக்கும் சப்தமும் மாறி மாறி அடங்கிய இரவில் தனித்து ஒலித்துக்கொண்டிருந்தது. சில நேரம் இதயே கவனித்துக்கொண்டிருந்தேன். பின் அந்தப் பெண்மணி துவைத்த துணிகளை தூக்கிக்கொள்ள, இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீரை சைக்கிளில் வைத்து தள்ளியபடி கூடவே நடந்து சென்றான் அந்த சிறுவன்.

இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்மந்தம்?

கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கக்கூடிய; கிடைத்திருக்க வேண்டிய குடி தண்ணீரை நான் ஏன் ஒரு 'பெரிய' தொகை கொடுத்து வாங்கிவந்திருக்கிறேன். ஏன், ஒரு டம்ளர் 'டீ' ரூ: 2999-/- என்று சொன்னால் நான் அதை வாங்குவேனா? நான் சுத்தமானது என்று நம்பும் இந்த அடைக்கப்பட்ட தண்ணீர் உண்மையிலேயே சுத்தமானது தானா? கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த என்னுடைய 'பதபடுத்தப் பட்ட தண்ணீரை வாங்குவது' என்ற நிலைப்பாடு ஒரு நாளில் எடுக்கப்பட்டது இல்லை. ஏதோ காரணங்களால் நிர்பந்திக்க்கப்பட்டு, உந்தப்பட்டு, நம்பவைக்கப்பட்டு தான் நான் இந்த நுகர்பொருளை வாங்கிவந்திருக்கிறேன். இதற்குப் பின்னால் உள்ள சதிவேலைகள் என்ன?

[இது மட்டுமல்ல. காஃபி சென்டர்களில் ஒரு கட்டன் காப்பி '40 ரூ'பாய்க்கு விற்பதும் அதை வாங்கிக் குடிக்க கூட்டம் அங்கு அலைபாய்வதும்! ஒரு தோசை '58 ரூ'பாய்க்கு விற்பது அதை உண்ண குடும்பத்துடன் ஒரு திருவிழாவிற்கு போவதைப்போல போவது, பின்னொரு நாளில் யாராவது முன்னிலையில் "என்ன இருந்தாலும் சரவணபவன் ஆனியன் ஊத்தாப்பம் போல வருமா?" என்று பெருமை பொங்க சொல்லி நடப்பது, 1000 ரூபாக்கு நெருங்கிய விலையில் ஒரு நேர Buffet உணவை பெருமை தோணிக்க உண்ணச்செல்வது (அங்கு வைக்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலை 120 ரூபாய்!). இவைகளையும் மேற்கூறிய சதிகளில் சேர்த்துக்கொள்ளலாம்.]

1970களில் குளிர்பான கம்பெனிகளுக்கு ஒரு வருத்தம் உண்டானது. அது என்னவென்றால், ஒருவனது வாயில் ஃபனல் வைத்து ஊற்றினாலும் ஒரு அளவுக்கு மேல் கார்பனேட்டட் நீரை ஒருவனால் உட்கொள்ள முடியாது. மேலும் அது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் உட்கொள்ளும் அளவு மாறுபட்டது, ஒரு வர்த்தகக் கம்பனியானது நிகரில்லா லாபத்தையும், அது எவ்வளவு வருட பழைய கம்பனியாக இருந்தாலும் வருடாந்தர வளர்ச்சியையும், முதலாளிகளின் பணப்பெருக்கத்தையும் பிரதானமாக வைத்து சுழலும் ஒரு செயல்பாடு. இப்படிப்பட்ட அளவிட முடியாத மற்றும் முற்றிலும் மாறுபடும் 'விற்பனை' (sales) யை நெடுங்காலம் நம்பியிருக்க முடியாது. அதற்காக புதிதாக அனைவரும் உட்கொள்ளும்படியான நுகர்பொருளை தயார் செய்ய வேண்டும். அல்லது அனைவரும் வயதுபேதமின்றி அதிகமாக உட்கொள்ளும் ஒரு மூலப்பொருளையே 'நுகர்பொருளாக' உற்பத்தி செய்யலாம்! என்று முடிவுசெய்தது. அந்த கண்டுபிடிப்பு தான் 'தண்ணீர்'.

'தண்ணீரை' உற்பத்தி செய்வதா? என்னது??? . அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள். முதல்முதலாக தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தபோது இருந்த எதிர்வினையும் அப்படி தான் இருந்தது! "ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதா? இதை வேறு விற்க வந்து விட்டார்கள்" என்று.

குளிர்பானக் கம்பனிகள் கையை பிசைந்து கொண்டு நின்றன. என்ன செய்யலாம்? தண்ணீர் பாட்டிலுக்கென்று பலுக்கல் (demand) [அவ்வளவு கஷ்டப்பட்டு தமிழ் வார்த்தை போட வேண்டாம். இனி demand என்றே அழைப்போம்] இல்லையேல், demand-ஐ உருவாக்குவது தான் அந்த வழி!. செயற்கையான டிமேண்ட் அல்லது உற்பத்திசெய்யப்பட்ட டிமேண்டை (manufactured demand) ஏற்படுத்துவது.

அதற்கு என்ன செய்யலாம்?

முதலில் நீங்கள் குடித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் நல்ல தண்ணீர் அல்ல என்று உங்களை நம்ப வைப்பது!

ஒரு தண்ணீர் பாட்டில் கம்பனி தலைவர் இவ்வாறு அறிவித்தார் "இனி குழாய் தண்ணீர் குளிக்கவும், கழுவவும்மட்டுமே தலைப்பட்டிருக்கிறது, குடிக்கும் தகுதியை அது இழந்து விட்டது" என்று. அதாவது ஏற்கனவே உங்களிடம் உள்ள ஒரு விஷையத்தை இல்லாததாக உங்களை நம்ப வைப்பது; மற்றும் உங்களிடம் ஒரு பாதுகாப்பற்ற உணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்துவது.

அந்த நுகர்பொருளின் மீது நீங்கள் சார்ந்திருக்கும்படியாக உங்களை ஆக்குவது.

நீங்கள் புட்டிப்படுத்தப்பட்ட தண்ணீரை உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் வாங்காதிருப்பது அவர்கள் ஆரோக்கியத்திற்கு செய்விக்கும் துரோகம் எனும்படியாக விளம்ப்ரம் செய்வது.

அந்தப்பொருளின் மீது உங்களுக்கு மோகத்தை ஏற்படுத்துவது. உங்களுக்கு புட்டிப்படுத்தப்பட்ட தண்ணீர் முதலில் 'மினரல் வாட்டர்' என்றே அறிமுகப்படுத்தப்பட்டது! (இன்னும் அந்த சொல் நம்மிடையே புழக்கத்தில் இருப்பதை அறிவீர்கள்). ஒரு கட்டத்தில் மேலும் இப்படிப்பட்ட நுகர்பொருளை வாங்குதல், உங்கள் 'வாழ்க்கை முறை' யை மேம்படுத்துவதாகவும், அல்லது அப்படியொரு தோற்றத்தை அளிப்பதாகவும் உங்களை ஏமாற்றுவது.

மேலும் உங்களுக்கு நல்ல தண்ணீரை வழங்கும் மகத்தான 'சேவை'யை அவர்கள் செய்வதாக காட்டிக்கொள்வது. உதரணத்திற்கு 'தண்ணீர்' பாட்டில்கள் என்பது மனித குலத்திற்காக படைக்கப்பட்ட் ஒரு உன்னதமான படைப்பு என்று Nestle-வின் தலைவர் பெருமை பொங்க ஒரு அறிக்கை விட்டார்.

மேலும் புட்டிப்படுத்தப்பட்ட தண்ணீர் எல்லாம் இமாலாலய Glacier-களிலிருந்து உருகிவரும்போதே பாட்டில் கொண்டு பிடித்து வந்ததைப்போன்று விளம்பரப்படுத்தி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவது. Aquafina பாட்டில் கவர்களில் பார்த்தால் தெரியும். இரண்டு மலைகளில் இருந்து நீர் சுரந்து ஆறாக வருவது போல அமைந்திருக்கும். உண்மையில் காட்டப்படும் அந்த இரண்டு மலைகளுக்குப் பின்னால் இருக்கும் இரகசியம் உங்களுக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட அதே குழாயடி நீர் தான்!.

அப்படி விற்கப்படும் தண்ணீர் சுத்தமாக உள்ளதா என்ற உத்திரவாதம் உங்களுக்கு உண்டா? என்றால், அதுவும் இல்லை!

தண்ணீர் வியாபாரம் கொள்ளை லாபம் கொழிப்பதால் தெருக்கிழாயில் தண்ணீர் பிடித்து பாக்கெட் செய்து விற்கும் வியாபாரிகள் பெருக்கெடுத்துவிட்டார்கள். அதிகாரத்தினரும் அவர்களுக்கு மாலை மரியாதையுடன் அனுமதி வழங்கி ஆசிவதிக்கிறார்கள். சில்லரைக்கடைகளில் விற்கும் அனைத்து கம்பனி தண்ணீர் பாட்டில்களையும் Random-மாக பரிசோதனைக்கு உட்படுத்தினால் எவ்வளவு இந்த சோதனையில் தேறும்? சரியான உற்பத்திமுறையில் செய்யப்படாத தண்ணீர் மாசுபடுத்தப்பட்ட தண்ணீரைக்காட்டில் கேடானது ஆகும். ஆக... உங்கள் உடலுக்கு கெடுதியான, மற்றும் 'மிகவும்' விலை உயர்ந்த உற்பத்தி நீரை நாம் ஏன் இன்னும் வாங்குகிறோம்?

இது ஒருபுறம் என்றால் இது போக, காத்திருக்கிறது இன்னொரு பிரச்சனை - எரிதலும் அரிதல் நிமித்தமும்:

நிலத்தடியில் பெட்ரோலியம் அகழ்ந்து; பின் அதன் உபரிகளைக் கொண்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் உருவாக்கி; நீரையும் காற்றையும் மாசுபடுத்தி; குழாயடி நீர் பிடித்து; மலையருவி லேபிள் ஒட்டி; மொத்தக் கொள்ளைக்காரன் வாங்கி; பின் அதை சில்லரைக் கொள்ளைக்காரன் வாங்கி; பின் அதை நாம் வாங்கி; 2 நிமிடத்தில் குடித்துவிட்டு ரெயில் பெட்டியிலோ, பஸ் சீட்டுக்கடியிலோ ரோட்டிலோ குப்பைத்தொட்டியிலோ போட்டுவிடுகிறோம். அவை அங்கிங்கெனாதபடி எங்கும் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் மலைகளாக புறநகரங்களில் சென்றடைகிறது. அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், நானும் நீங்களும் போடும் குப்பைகள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக சில முதலாம் உலகநாடுகள்) இந்த மாதிரியான கழிவுகள் ஒரு விலையின் அடிப்படையில் இந்தியாவில் வந்து 'Dump' செய்யபடுகிறது, Recycling என்ற பேரில்.

இதற்கு அரசாங்கமும் அனுமதிக்கின்றது. ஆனால் அங்கு நடப்பது Recycling அல்ல....Down-cycling தான். அதாவது கழிவாகக் கொண்டுவரப்பட்ட அந்த பிளாஸ்டிக்குகள் இங்கு மறுபடியும் உருக்கபட்டு மூன்றாம் தர பிளாஸ்டிக் பாட்டில்களாகவும், இன்னபிற 'உபையோக' சாதனங்களாகவும் உருவாக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் உருக்கப்படும் போது பிளாஸ்டிக் கூறுகள் அவை மக்கிப் போகும் தன்மையை ஒவ்வொருமுறையும் இழக்கிறது. மேலும் உருக்க முடியாத நிலைக்கு வரும்போது, அது நம் பூமியில் அப்படியே புதைக்கப்படுகிறது.

தன் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல, ஆனால் அதற்காக அடுத்தவன் வீட்டில் குப்பையைக்கொட்டுவது என்பது அடாவடித்தனம். அதை நம்மவர்களும் காசு கொடுத்து வாங்கி அதில் எச்சில் பொருக்குவதை விவரிக்க, நம் வளமான தமிழில் ஒரு வடிவான ஒரு சொல் இருக்கின்றது. அதைப்போட்டு நிரபிக்கொள்ளவும்.

நாம் பெருபான்மையாகக் குடிக்கும் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் இப்படியாக 2ம் 3ம் முறை டவுன் சைக்கிள் செய்யப்பட்ட பொருட்களாக இருக்கலாம்! ஜாக்கிறதை!

இறுதியாக

இந்த கட்டுரையின்(?) இறுதியில் நாம் சில அடிப்படையான உண்மைகளை கவனிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட எல்லா ‘தண்ணீர்’ கம்பனிகளுக்கு இருக்கக்கூடிய 'மார்க்கெட்' என்னவென்றால் உங்களுக்கு கிடைக்காமல் போன, அல்லது கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமையான 'சுகாதாரமான தண்ணீர்'. இதை உங்களுக்கு மறுத்தவர்கள் யார்? அல்லது உங்களுக்கு மறுக்கப்படும் சுகாதாரனமான தண்ணீரால் லாபமடைபவர்களுக்கு துணைபோகிறவர்கள் யார்? என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்

லாபம் கொட்டும் வியாபாரிகள் வயிற்றில் அடிக்காமல் இருப்பதற்கு வேண்டியே அரசுகள் தண்ணீர் விஷயத்தில் குறைந்த அக்கறை காட்டுகிறதா? என்பதை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

பிளாஸ்டி பாட்டில்கள் உருவாக்குதல்; பின் அதை பாதுகாப்பாக dispose பெய்தல்; பணம் கொழிக்கும் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருத்தல் இதையெல்லாம் விட்டு விட்டு 'எல்லோருக்குமான' சுகாதாரமான தண்ணீருக்கான கட்டமைப்புக்காக அரசுகள் செயல்படலாம்

உண்மையாகவே உங்கள் பகுதி தண்ணீர் மாசுபட்டதாகவும் குடிக்க தகுதியற்றதாகவும் இல்லாதவரை தண்ணீர் கேன்களை உபயோகிக்காதீர்கள். உங்களைப் போல கேன் வாங்க வசதியற்றவர்கள் அதே மாசுபட்ட தண்ணீரைத் தான் குடிக்க நேரிடுகிறது. நாம் நமது பகுதி குடிதண்ணீரின் மேல் காட்டும் அக்கரையின்மையால், மற்றவர்கள் தொடர்ந்து அந்தத்தண்ணீரையே குடிக்க சபிக்கப்படுவார்கள்.

வீட்டில் காய்ச்சிய நீரை உபயோகிக்க குழந்தைகளைப் பழக்கப்படுத்துங்கள். பிரையாணங்களின் போது தண்ணீரை வீட்டிலிருந்து கொண்டு போகும் பழக்கத்தை (மீண்டும்) கொண்டு வாருங்கள். வீட்டுப் பொருளாதாரத்திற்கும் உடலுக்கும் அதுவே நல்லது.

சுகாதாரமான தண்ணீருக்கான கட்டமைப்புக்காக குரல் கொடுங்கள். அல்லது அப்படி குரல் கொடுப்பவர்களை ஆதரியுங்கள்.

யவனோ ஒரு வெளிநாட்டு கம்பனிக்காரன் உருவாக்கிய ‘manufactured demand’ க்கு நாம் இனியும் கீழ்படியாது இருபோம். நாம் நமக்கான சொந்த demand-களை உருவாக்குவோம்.

விலை கொடுத்து தண்ணீர் வாங்குவது என்பது (மீண்டும்) கேலிக்குள்ளாக வேண்டிய விஷயம் ஆகும்போது தான் நமது உரிமைகளுக்கான சுயமதிப்பும் மீட்டெடுக்கப்படும். அதுவரை ஒவ்வொருமுறை நீங்கள் புட்டிப்படுத்தப்பட்ட தண்ணீரை வாங்கும் போதும் உங்கள் அடிப்படை உரிமைகளில் ஒன்று மறுக்கப்படுவதை நினைவில் கொள்ளுங்கள்!

- பிரவீன்.