இந்த வலைப்பதிவில் தேடு

சொலவடைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொலவடைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பக்கட்டைக் கழுவி குழந்தையை ஊற்றாதே!

பக்கட்டைக் கழுவி குழந்தையை ஊற்றாதே! 


சற்று வேடிக்கையான பழமொழி தான். கொஞ்சம் கொடுமையானதும் கூட. 

இதை நமது கலாச்சாரத்தில் பொருத்திப் பார்ப்பது சற்று கடினம் தான். நம் ஊர்களில் கைக்குழந்தைகளை குளிப்பாட்ட பெரியவர்கள் இரண்டு கால்களை நீட்டி, அதில் இருகால்களுக்கு நடுவே உண்டாகும் இடைவெளியை ஒரு பள்ளமாகப் பயன்படுத்தி குழந்தையை அதில் கிடத்தி குளிப்பாட்டுவதை இப்போது கூட நாம் பார்க்கலாம். ஆனால் ஐரோப்பிய தட்பவெட்பத்தில் அல்லது வீடுகளின் அமைப்பினாலும் அதெல்லாம் சாத்தியம் இல்லை. பெரும்பாலும் பெரியவர்களது குளிக்கும் தொட்டி போலவே வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான ஒரு குளியால் தொட்டி இருக்கும். அதில் தண்ணீர் நிறப்பி குளியல் அறையிலோ அல்லது பெரியவர்களின் குளியல் தொட்டிக்குள்ளோ அதை வைத்து தண்ணீர் நிரப்பி, குழந்தையை அதில் குளிப்பாட்டுவர்.  பின் குழந்தையை மாற்றி, துடைத்து,  இறுதியாக அந்த சிறிய தொட்டித் தண்ணீரை கழுவி ஊற்றி, அதை உலர்வதற்காக அப்புறப்படுத்தி வைப்பார்கள். 

பழமொழியானது, "குழந்தையைக் குளுப்பாட்டிய தொட்டியை கழுவிக் கவுக்கும் பெண்ணே, அழுக்கு நீரைக் கழுவி ஊற்று, குழந்தையையும் சேத்தி ஊற்றிவிடாதே!" என்பதாகும். 

எதை உணர்த்துவதற்கு இவ்வளவு கடுமையான பழமொழி? 

Jeter le bébé avec l'eau du bain (ஜெத்தே ல-பேபே அவெக் லோ-த்யு-பேங்)

ஏதோ சிந்தணையில் இருந்த பெண்மணி, குழந்தையைக் குளுப்பாட்டி தண்ணீரை அகற்றுவதற்கு முன் அதில் இருந்த (அவ்வளவு பெரிய) குழந்தையை கவனிக்காது போனது போல.. முக்கியமான விஷயத்தைப் விட்டுவிட்டு அவசியமற்றதைப் பிடித்து தொங்கிக்கிக்கொண்டு இருக்காதே! 

இதைத்தான் சற்று கிண்டலாகவும் கொஞ்சம் கோபமாகவும் வெளிப்படுத்துகிறது இந்த சொல்லாடல்.               

Voir midi à sa porte - உன் வீட்டில் பகலா?

#005 

உன்வீட்டில் இப்போது நன்பகலா? என்று மொழிபெயர்க்கலாம். நல்லதொரு சொலவடை. 

பிரெஞ்சில்: Voir midi à sa porte (சொல்லிப் பாருங்கள்: வார் மிடி அ-சா-போர்த்)

அப்படியே நேரடியாக பொருள் கொண்டால் "அவரவர் வாசலில் நன்பகலைப் பாருங்கள்" என்று வரும். என்ன சொல்ல வருகிறார்கள். 

கற்பனை செய்து பாருங்கள், பற்பல ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கடிகாரங்கள் கண்டுபிடிக்காத காலம் என்றோ, அல்லது ஒவ்வொரு வீட்டிலும் கடிகாரம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேறியிராத காலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் நேரம் அறிவதற்காக முன்வாசலில் ஒரு நேரங்காட்டிக்  கருவியை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் உலக்கை போன்ற ஒன்று என்று வைத்துக்கொள்வோம். வெயில் (இருக்கும் நாட்களில்) அதன் நிழலை வைத்து இன்ன நேரம் ஆகிவிட்டது என்று கணிப்பார்கள். வீட்டிறகுள்ளிருந்து நேரம் பார்க்க நினைக்கும் ஒருவர் தனது தலையை லேசாக சாய்த்து வாசலைப் பார்த்தாலே தெரிந்துவிடும். கருவியின் நிழல் காலையில் மெல்ல வளர ஆரம்பித்து, நண்பகலில் சுருங்கி பின் பிற்பகலில் நீண்டு மறையும். 

வேடிக்கை என்னவென்றால் ஒரு வீட்டுக்காரர் அவரது வாசலைப் பார்த்து நன்பகல் ஆகிவிட்டது என்பார். ஆனால் இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒருவரது வீட்டில் இன்னும் கருவி நன்பகலை காட்டாமல் இருக்கலாம். சில வினாடிகளில் அவர் வீட்டிலும் வந்துவிட்டிருக்கும். ஆகவே அவனவன் பார்த்தது அவனவன் பகல்! இரண்டுபேர் ஒரே நேரத்தில் பகலைப் பார்க்காது போகலாம். 

அப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் பார்வையும் வேறுவேறு, அவரவர் வாசலில் நின்று பார்த்தால் தான் அவர்கள் தரப்பு நியாயம் தெரியும் என்பதை வழியுறுத்தவே இந்த சொலவடையை பயன்படுத்துகிறார்கள். Chaqu'un voir midi à sa porte - அவரவர் அவர் வீட்டு வாசலிலிருந்து அவரது பகலைக் காண்கிறார்கள்.      

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ça ma madeline de proust - உங்கள் மேடலின் எது?

#004

எது உங்களது மேடலின் ?

ஃப்ரெஞ்சு மொழியில் அழகான சொலவடைகள் நிறைய இருப்பதைப்பற்றி முன்னொருமுறை எழுதியிருந்தேன் அல்லவா. அந்த வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது. ça ma madeline... அதன் முழு வடிவம் "ça ma madeline de proust" என்பது. இந்த சொற்றொடருக்கு ஒரு பின்கதை உண்டு. அதற்கு முன் ப்ரூஸ்டை பார்த்துவிடலாம். 

உங்களுக்கு Marcel Proust ஐ தெரிந்திருக்கலாம். ஃரெஞ்சின் மிக முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவர். அவரது À la recherche du temps perdu (ஆ லா ரிஷர்ஷ் த்யு தா(ந்) பெர்த்யூ) நாவல்  இலக்கிய உலகில் ஒரு சாதணையாக சொல்லப்படுகிறது. சுமார் 13 ஆண்டுகள் 7 பகுதிகளாக 4000 பக்கங்களில் எழுதப்பட்ட மிகப்பெரிய நாவல் அது. அதில் மூன்று பகுதிகள் அவர் இறந்தபிறகே வெளிவந்தது. 

மார்செல் ஒரு பெரிய நாவலை எழுத திட்டமிட்டு ஆனால் எந்தபுள்ளியிலிருந்து அதைத் துடங்குவது என்று தெரியாமல் ரைட்டர்ஸ் ப்ளாக்கால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் காலை உணவிற்காக டீ யும் மேடலினும் தரப்பட்டது. மேடலின் என்பது மாவு, முட்டை, வெண்ணையில் செய்யபட்ட கடல் சிப்பி வடிவில் இருக்கும் ஒரு வகை கேக். அந்த மேடலினை டீயில் முக்கி வாயிலிடும் வேளையில் அது நாக்கில் கரையும் போது உருவான அந்த ப்ரத்தேகமான வாசனை அவருக்கு தனது பால்யகால நினைவுகளை எல்லாம் நினைவுபடுத்தியது. சிறுவனாக இருக்கும் போது தனது ஆண்டின் அறைக்கு செல்லும் வேளைகளில் அவள் டீயில் முக்கிய மேடலின்களைத் தருவாள். அந்த நினைவுக்கீற்று என்றோ மனதின் அடி ஆழத்தில் தொலைந்து போன ஒரு ஞாபகம். முற்றிலும் முக்கியத்துவமில்லாத ஒரு நிகழ்வு. ஆனால் இந்த காலையின் மேடலினின் மணம் சட்டென்று அவருடைய கடந்தகாலத்தின் ஜன்னல்களை திறந்து போட்டது. அவரது பால்யத்தைக் குறித்தும் நினைவுகளைக் குறித்தும் எண்ணங்கள் மடைதிறந்தன. தனது நாவல் இது குறித்து தான் இருக்கப்போகிறது என்று முடிவு செய்தார். அப்படி எழுதத் துடங்கியது தான் 13 ஆண்டுகள் அவர் எழுதிய 4000 பக்க நாவல் À la recherche du temps perdu ("தொலைந்த காலத்தின் தேடலில்..." என்று வைத்துக்கொள்ளலாம்). 

இந்த ஒரு நிகழ்வைதான் இந்த சொற்றொடர் ça ma madeline de proust குறிக்கிறது. ஏதோ ஒரு சிறிய நிகழ்வோ, ஒரு உணவோ, ஒரு செய்கையோ, ஒரு குரலோ, பெரும்பாலும் ஒரு வாசனையோ சட்டென்று (இல்லையென்றால்) மறந்துவிட்டோம் என்று நினைத்த உங்கள் குழந்தைப்பருவ சம்பவத்தையோ அதை ஒட்டிய நினைவையோ  ஞாபகத்தின் அடியாழத்திலிருந்து கொண்டு வரும் என்றால் அது தான் உங்கள் மேடலின். ça ma madeline (ச ம மேடலின்). அதாவது உங்கள் Involuntary memory யில் இருந்து ஒரு சம்பவத்தை/ ஞாபகத்தை வெளிக்கொணரும் என்றால், அப்படியொன்றை நீங்கள் கண்டுகொண்டீர்கள் என்றால் அதை நீங்கள் "ça ma madeline" என்று சொல்லிக்கொள்ளலாம். 

என்னளவில் சுத்தமான சாக்லேட்டின் மணம் எனது 6ம் வகுப்பை எனக்கு நினைவுபடுத்தும். முகமது ரஃபி உடனே நினைவுக்கு வருவான். அவர் துபாயில் படித்துவிட்டு இடையில் வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்தான். அதுவரை எங்களுக்கு பழக்கமில்லாத வெளிநாட்டு மிட்டாய்களைக் கொண்டுவருவான். பகிர்வான். அந்த ஒரு வருடம் தான் எங்கள் வகுப்பில் அவன் படித்தான். எல்லோரிடமும் உடனே நட்பாகிக்கொண்டான். சாக்லேட்டின் வாசனை என்னை எனது 6 வகுப்பிற்கு கொண்டுசென்றுவிடும். ça ma madeline de proust!. உங்களது மேடலின் எது? 








வெள்ளி, 2 செப்டம்பர், 2016

மூன்று ஸ்டாப் தொலைவு என்பது எவ்வளவு?

#002.

சொலவடைகள் (les expressions) ஒரு மொழிக்கு அழகு சேர்ப்பவை. பொதுவாக எல்லா மொழிகளிலும் சொலவடைகள் இருக்குமென்று நம்புகிறேன். ஆனால் யாமறிந்த மொழிகளிலே சொலவடைகளை அதிகமாக பயன்படுத்துகிற மொழி ஃபிரெஞ்சு. தமிழில் சொலவடைகளை சிறப்பு இடங்களில் மட்டுமே பயன்படுத்துவதாக தோன்றுகிறது. அதாவது ஒரு செய்தித்தாளிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ நாம் தினம் தினம் பேசும் சந்தர்ப்பங்களிலோ சொலவடைகளை அதிகமாக பயன்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு "நாய்க்கு பேரு முத்துமாலை" "செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி" "மொளச்சு மூணு எலை உடுல" போன்ற சொலவடைகளை நாம் தினசரி பயன்படுத்துவது இல்லை. அது சற்று செயற்கைத்தனமாகவும் தோன்றிட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லாமல் மிகவும் கிளிஷே தனமாக இருக்கும். அதற்கு முக்கியமான ஒரு காரணம் நமது பெரும்பாலான சொலவடைகள் பழமொழிகள் என்றளவிலேயே நின்றுவிட்டதுதான்.

சொலவடைகள் வேறு . பழமொழிகள் வேறு என்று நம்புகிறேன் நான்.  பழமொழிகள் நிலையானது. பெரும் மாற்றங்கள் இல்லாமல் அப்படியே உபயோகித்து வருபவை. அதற்குப்பின்னால் தீர்க்கமான ஒரு நிகழ்வோ அல்லது ஒரு கதையோ புராணமோ இடம்பெறும். ஆனால் சொலவடைகள் அப்படியல்ல. அது மொழியுடன் சேர்ந்து வளர வேண்டும். பரந்துபட்ட துறைசார் சொலவடைகள் தோன்ற வேண்டும். பகிரப்பட்ட வேண்டும். சொலவடைகளுக்கு ஒரு எளிமையான பின்புலம் போதுமானது. அது ஒரு தொலைக்காட்சி விளம்பரமாகவோ, ஒரு சினிமா வசனத்திலிருந்து உருவானதோவாகக்கூட இருக்கலாம். அப்படிப்பட்ட சொலவடைகள் ஒட்டுமொத்தமாக அந்த மொழியை செழுமையாகவும் உயிர்ப்புடனும் வைத்திருக்கும். அதற்கு ஃபிரெஞ்சு மொழியில் நல்ல உதாரணங்கள்  உண்டு.

"trois  metro retard " என்று ஒரு வழக்கு எனக்கு மிகவும் பிடித்தமானது . metro என்பது நகர தொடர்வண்டி நிறுத்தங்கள் என்று கொள்க . ஒருவர் je suis trois metro en retard (ஜஸ்வி த்ருவா மெத்ரோ அன் ரிதார்) என்று சொன்னால் அவர் மூன்று ஸ்டேஷன் தள்ளி இருப்பதாக அல்ல அர்த்தம். மாறாக அவர் செய்யும் ஒரு பணியையோ அல்லாது காரியத்தையோ - அதை கிட்டத்தட்ட முடிக்கப்போகிறேன் என்று சொல்லுவதாகப் பொருள். அதாவது ஒரு நண்பரைப்  பார்க்க போகும்போது "இப்போ எங்கு இருக்கிறாய் " என்று அவர் போன்செய்தோ குறுஞ்செய்தியிலோ கேடடால் சொல்வோம் அல்லவா...2 ஸ்டாப் முன்னாடி இருக்கிறேன் என்று, அதுபோல தான். ஆனால் அந்த "அருகில் நெருங்கிவிட்டமையை" ஒரு காரியத்தின் மேல் பயன்படுத்துவது தான் இங்கு வித்தியாசம்.

 மேலும் அந்த சொலவடை அந்த கலாச்சாரத்தைப் பற்றியும் கொஞ்சம் வெளிப்படுத்துகிறது. மெட்ரோ அவர்கள் வாழ்வில், மொழியில் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பது தெரிகிறது. அப்படியென்றால் மெட்ரோக்கள் எத்தனை நூற்றாண்டுகளாக அங்கு புழக்கத்தில் உள்ளன என்று தெரியவருகிறது. இப்படி இரு சிறிய சொலவடை ஒரு மொழிக்குள்ளும் கலாசாரத்துக்குள்ளும் எட்டிப் பார்ப்பதற்கு ஒரு ஜன்னலாக அமைந்துவிட முடியும்.  அப்படிப்பட்ட இன்னும் சில சொலவடைகளை பிறகு பார்க்கலாம்.

(தமிழில் அப்படி நீங்கள் உபயோகிக்கும் விருப்பமான சொலவடைகளிருந்தால் பகிரலாம்).