இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஜூலை, 2007

மதிலுகள் - வைக்கம் முகமது பஷீர்

Why Should I be free?
Who wants freedom??
- Vaikom Mohammed Basheer

"ஒரு இனம், பஷீர் மூலம் புதையுண்டு கிடந்த தங்கள் மன முகங்களை வெளிப்படுதிக்கொண்டுவிட்டது. பஷீர் நேர்மாற்றி, அவருடன் ஒப்பிட்டு பேச நம் மொழியில் யாரும் இல்லை. மேலும் அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். தமிழின் இன்றைய தேவை அது. "
(மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி)

மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமானவரும் தலைச்சனுமான பஷீர், இந்திய இலக்கியத்தை உலக மேடைக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான பிரதிநிதி. தன்னுடைய இயல்பான இலக்கிய நடையும், வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. தமிழிலில் அவைரை ஒத்துக்கூற எழுத்தாளர்கள் இல்லை.தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தில் காணப்படும் ஒரு வித இறுக்கம் (அவர்கள் எழுத்தை பொறுத்தமட்டில்), பஷீருக்கு நேர்மாறான ஒன்று। மலையாளத்தில் அவருடன் ஒத்து போகும் எழுத்தாளர் என்றால் கவிஞர் குஞ்ஞுன்னியைச் சொல்லலாம்.

பஷீரின் மிகைப்படுத்தல் இல்லாத வழக்கு, இயல்பு வாழ்க்கையிலிருந்து வெளியே வரமறுக்கும் அவரது கதாபாத்திரங்கள் - இவைகளினால்தான் மலையாளிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பஷீரின் பாத்திரங்கள் மெல்லிய இதையம் படைத்தவர்கள். பஷீரின் பெரும்பாண்மையான கதைகளில் அவரேதான் நாயகன்.வாசனையையும் சப்த்தத்தையும் நேசித்த பஷீர், வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அதனதன் ருசியோடு பருகியவர். வாழ்க்கைதான் பஷீரின் தத்துவம்.

தோற்றம் மறைவு இடையிலான வாழ்வைத்தவிற பிறிதொன்றுமில்லை என்று நம்புகிறவர் பஷீர். அதனால் தான் அவர் காலத்தால் அழியாமல் வாழ்கிறார்.

ஒவ்வொரு மலையாளிகளாலும் கட்டாயம் படிக்கப் பட்டதும், இன்னும் ஒவ்வொருவரின் மனதிலும் புது மெருகு குறையாமல் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் கதை 'மதிலுகள்'.


"கற்களால் ஆன அந்த உயர்ந்த மதில்கள் வானத்தை முட்டிக் கொண்டிருந்தன. அவை என்னையும் சென்ட்ரல் ஜெயிலையும் வளைத்துக் கொண்டிருந்தன" என்று துடங்குகிறது அந்த நாவல். பஷீர் என்கிற இளைஞன் பிடிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக இலக்கியப்பணியில் ஈடுபட்டதற்காக சிறைக்கு கொண்டுவரப் படுகிறான். சிறை ஒன்றும் அவனுக்கு புதிதல்ல, இருந்த போதும் இம்முறை அவனைக் கொண்டு வந்ததற்கான காரணம் அவனுக்கு பெருமையளிப்பதாய் இருந்தது. இந்த தண்டனை ஒன்றும் அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை. அதற்க்கும் போராட வேண்டியிருந்தது. தனது கேசை கோர்டுக்கே எடுக்காமல், உள்ளூர் ஜெயிலிலேயே ஒரு வருடகாலத்திற்கு மேல் கழித்தார்கள்। பின் உண்ணாவிரதமெல்லாம் இருந்துதான் இந்த தண்டனை கிட்டியது.

அந்த உள்ளூர் ஜெயிலை விட்டு வருகையில் கான்ஸ்டபிள் ஐயா 2 கட்டு பீடிகள், ஒரு பெட்டி தீக்குச்சி மற்றும் ஒரு பிலேடை கொடுத்து விட்டார்। பிலேடு எதற்கு என்கிறீர்களா?. சிறைச்சாலையில் பீடி கிடைப்பதை விட தீப்பெட்டி கிடைப்பது பெரிய கஷ்டம். ஒரு தீக்குச்சியை 2 அல்லது மூன்றாக பிளந்து தான் உபயோகப்படுத்த வேண்டும். அப்படியும் பீடி, சிகரட் எல்லாம் ஜெயில் போலீஸ் மூலமாக கிடைக்கும் தான். ஏன் அரசியல் காரணமாக அடிக்கடி வெளியே சென்று வரும் ட் ஆனால த‌லைவர்கள் கூட இருந்தார்கள். ஆனால் என்ன, அதற்கெல்லாம் கொஞ்சம் செலவாகும்.... என்று புலம்பியபடி ஜெயிலர் அறையை அடைகிறான் பஷீர். அவனது பீடி, தீக்குச்சி, பிளேடும் பரிமுதல் செய்யப் படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது என்கிறார் ஜெயிலர். பின் அவற்றை எடுத்து தன் தொப்பிக்குள் இட்டுக்கொள்கிறார். அமைதியாக பஷீர் ஜெயிலரைத் தொடர்ந்து நடக்கத் துவங்குகிறான். "ஜெயிலர் ஐயா... உங்களுக்கு எத்தனை குழந்தைக" என்கிறான் பஷீர். அதற்கு ஜெயிலர், "ஏன்... நாலு"...சற்று அமைதிக்குப் பின் நீங்க திடீர்னு செத்துப் போயிட்டா உங்க குழந்தைகளை யாரு பாதுப்பாங்க"॥ இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெயிலர், சற்றே யோசித்து..."ஆண்டவன் பாதுப்பான்" என்று சொல்லி மீண்டும் நடக்கத் துடங்குகிறார். "எனக்கென்னவோ அப்படித்தோனல... ஆண்டவன் கண்டிப்பா உங்கள நிக்க வச்சு கேள்வி கேப்பான்... பாவம் அந்த பஷீரின் பீடியையும் பிளெடையும் பிடிங்கிகிட்டையே... நீ விளங்குவையா?..ன்னு கேப்பான்" சட்டென முறைப்புடன் திரும்பிய ஜெயிலர், பஷீரைக் கண்டதும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் துடங்கினார். பீடி,தீப்பெட்டி, பிலேடையும் பஷீரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இரும்புக்கம்பிகள் நிறைந்த வரந்தாவை கடந்து சென்றார்கள். எல்லா கைதிகளும் உள்ளே அடைக்கப் பட்டிருந்ததாலோ என்னவோ, பெரும் நிசப்த்தம் நிலவியது. நாளை காலையே தூக்குக் கயிற்றை முத்தமிடுபவன், சுதந்திரமாய் வெளியே போவதன் கனவினில் வாழ்பவன், இங்கேயே செத்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் அன்பிற்குறியவர்களை நினைத்து உத்திரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவன் என பல விதமானவர்களைக் கடந்து பஷீரின் அறையை வந்தடைந்தார்கள். அவர் ஜெயிலுக்குள் நுழைந்தவுடனேயே ஒரு மகரந்தமான பெண் வாடை வீசுவதை உணர்ந்தான். ஜெயிலர்... "யோவ் நீ அதிஷ்டக்காரன் தான்" என்று சொன்னான். அதன் காரணம் புரியவில்லை. பிறகு தான் தெரியவந்தது. அவன் அறையை ஒட்டிய இரண்டு மதில்சுவர்கள் இருந்தன. வலது பக்கத்தில் இருந்தது சுதந்திரமான வெளி, நகரம். மற்றொரு மதிலின் மறுபுறம் இருந்தது கனவின் வாசனை, பெண்கள் ஜெயில்.

சாயிங்காலம் அழைத்து வ‌ரப்பட்ட கைதிகள் அன்றைய கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்। அதனால் பஷீருக்கு இரவு உணவு மறுக்கப்படுகிறது. கத்திக் கூச்சலிடவேண்டும் போலிருந்தது. பிறகு "ச்சீ...சோத்துக்குப் போய் இப்படி நடந்துகொள்வதா?...நாட்டுக்காக ஒரு நேரம் பட்டினி கிடந்தால் என்ன!" என்று நினைத்தவாரே அமைதியாகி, ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். அப்போதுதான் புரிந்தது அவசரத்தில் ஒரு முழு தீக்குச்சியையும் பற்றவைத்தது. சிறையில் முழு தீக்குச்சியை பற்றவைபது என்பது ஆடம்பரம். நாலு இழுப்புகளை இழுத்துவிட்டு, பீடியை அனைத்துவிட்டு பத்திரப்படுத்திக்கொண்டான்... நாளைய தேவைக்கு. அப்படியே உறங்கிப்போனான். இருள் பரவி அவன் அறை எங்கும் பரவியது. இப்படித்தான் துடங்கியது அவனது முதல் நாள் சென்ட்ரல் ஜெயில் வாழ்க்கை.

மறு நாள் காலையில் சென்று ஒவ்வொரு அரசியல் தலைவராகப் பார்த்துவந்தான். தலைவர்மார்களுக்கு தேவையான எல்லாமே கிடைத்துக்கொண்டிருந்தது. நள்ளிரவில் மதிலுக்கு அப்பாலிருந்து "பொத்...பொத்..."தென்று சப்த்தம் கேட்கும். தலைவர்மார்களுக்கு தேவையானவற்றை பொட்டலங்களாக வந்து விழும். கடிதப் போக்குவரத்தும் இப்படித்தான். அதிகாலையில் எல்லோரும் போய் பொறுக்கிக்கொள்வார்கள். ஒரு தலைவர் எப்போதும் ஒரு டின்னில் சீனிமிட்டாய் வைத்திருப்பார், ஒருவரோ ஊறுகாய், மற்றொருவர் ஃப்ரூட் சால்ட். ஒருவர் ஒரு தலையனை அளவுள்ள கார்ல் மார்க்ஸின் புத்தகம். ஒருவர் இரண்டு சீட்டுக்கட்டு வைத்திருந்தார்.ஆனால் யாரிடமும் டீத்தூள் இல்லை. என்ன தான் ஜெயிலாக இருந்தாலும் அவனால் டீ இல்லாமல் மட்டும் இருக்க முடியவில்லை. அதிஷ்டவசமாக ஜெயில் வார்டர்கள் அவன் நண்பனாகிவிடதால் தினந்தோறும் டீ, கோழி, முட்டை என்று எதற்கும் குறைவில்லை. அருகே ஒரு பலமரத்தடியில் சிறிய உடற்பயிற்சிகள், ஒரு டீ, மனம்போனபடி பீடி இழுவை என்று சுகமாக போனது வாழ்க்கை. பதிலுக்கு இவனும் பன்னீர்த்தோட்டம் அமைப்பது, தோட்ட வேலைகள் செய்வது என்று ஜெயிலுக்குள் சற்றே பிரபலமாகத்தான் செய்தான் பஷீர். தோட்ட வேலைகளுக்காக ஒருகத்தியும் கூட அவனுக்கு கொடுக்கப் பட்டிருந்தது. தன் கைப்பட பன்னீர்த்தோட்டங்கள் ஜெயிலுக்குள் வளர்வதைக் கண்டு சந்தோஷமடைந்தான். ஆனால் இந்த சுகங்கள் எல்லாம் நீண்ட நாள் நீடிக்க வில்லை.

எல்லோரும் உறங்கிப்போயிருக்கும் மதிய நேரங்களில் பஷீர் உறங்கப்போவதில்லை। சில சமயம் ஜெயில் மத்தியில் உயர்ந்திருந்த உயரிய பலா மரத்தின் உச்சி வரை எறிப் பார்ப்பான். தூரத்தில் சுதந்திரமான நகரம் தெரியும். அங்கிருப்பவர்கள், இங்கு நடப்பதேதும் தெரியாமல் கும்மாளமிட்டுக்கொண்டிருப்பதாக தெரியும். ஒரு மெல்லிய கவலை மேலெழத்துடங்கும். பொதுவாகவே பஷீர் அறையிலிருந்து வெளிவருவதை நிறுத்திக் கொண்டான். அப்படியே வந்தாலும் தன் செடிகளுடனும், அணில்களுடனும் தான் பேசிக்கொண்டிருப்பான். அப்படியொரு மதியப் பொழுதில்தான் அந்த அதிர்ச்சியான செய்தியை வார்டர் தெரிவித்தார்.


"அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுதலை செய்யப் போகிறார்கள்" என்றார்। எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்। எங்கு பார்த்தாலும் ஒரே ஆனந்த கோலாகலம் தான். எல்லோருடைய ஆடைகளையும் கொஞ்ச நேரத்தில் சின்ன ஜெயிலர் வந்து கொடுத்தார். பஷீர் தனது ஆடையை துவைத்து தேய்த்து ஒரு பேப்பருக்குள் மடித்து வைத்துக் கொண்டான். எல்லோரும் முடிவெட்டிக் கொண்டார்கள். பஷீரும் அங்கங்கு வளர்ந்திருந்த முடிகளை வெட்டிக்கொண்டான்.

விடுதலை ஆர்டர் வந்தது.அதில் எல்லோருடைய பேரும் வாசிக்கப் பட்டது। ஒருவனுடைய பெயரைத்தவிற। அது வேறு யாருமில்லை, பஷீரின் பெயர் தான். ஆர்டர் அனுப்பி வைக்கும் இடத்தில் தவறேதும் நடந்திருக்குமா என்று ஜெயில் சூப்பெரெண்டு மெனக்கெட்டு ஃபோன் போட்டு பார்த்தார்। பின்னர் உறுதி செய்யப்பட்டது.

பஷீருக்கு விடுதலை இல்லை !!!

எல்லா தலைவர்மாரும் புறப்பட்டார்கள்। பஷீர் நினைத்துக் கொண்டான்,ஃப்ரூட் சால்ட், கார்ல் மர்க்ஸின் 'தாஸ் கேப்பிடல்', இரண்டு சீட்டுக்கட்டு, ஒரு புட்டி நிறைய நார்த்தங்காய் ஊறுகாய், பெரிய மிட்டாய் டின் ஒன்றில் வற்றல், சர்க்கரை, புகையிலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாமே இனி எனக்குத் தான்.
எல்லோரும் போய்விட்டார்கள்। ஒரு சப்த்தம் இல்லை। எங்கு பார்த்தாலும் ஆளில்லாத ஊரில் நிலவுவது போல மயான அமைதி. அழிந்துபோன ஒரு நகரத்தின் சந்தடியற்ற தெருவழியே நடந்து செல்வதைப் போலிருந்தது .பஷீரைத்தவிற ஒரு ஈ, எறும்பு இல்லை. ஒரு ஆபத்து வருவதைப் போல ஒரு உணர்வு. மகிழ்ச்சி இல்லை, சிரிப்பு இல்லை. இரவும் பகலும் மனதில் ஒரே போராட்டம்.

எதோ ஒரு தீர்மாண‌ம் எடுத்துவிட்டவன் போல, கார்ல் மர்க்ஸின் 'தாஸ் கேப்பிடல்'லை சின்ன ஜெயிலருக்கு கொடுத்து விட்டான். சர்க்கரையை ஆஸ்பத்திரியில் கொடுத்து எல்லோருக்கும் விநியோகிக்கச் சொன்னான். சீட்டுக்கட்டை ஜெயில் வார்டனுக்கும், புகையிலையை தினமும் கஞ்சி கொண்டுவரும் பையனுக்கும் கொடுத்துவிட்டான்.ஃப்ரூட்சால்டை கீழே கொட்டிவிட்டான். ஊறுகாயை மட்டும் தானே வைத்துக் கொண்டான். மனதில் சற்றும் அமைதியே இல்லை. "ஆண்டவா இவன் ஒரு அப்பாவி, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ தான் சொல்ல வேண்டும். ஐயோ... என்னால் சிரிக்கக் கூட முடியவில்லையே..." என்று இறைவனிடம் மனமுரிகி பிராத்தனை செய்கிறான்.

ஜெயிலிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்ற எண்ணம் மேலெழுகிறது. தன்னை அனைத்து நிற்கும் ஒரு மதில் சுவறைக்கடந்தால் மற்றொரு மதில் சுவர். அதன் மேல் நடந்து சென்று குதித்தால் தப்பித்து விடலாம். இரவானால், வார்டர் எப்படியும் தூங்கிவிடுவார். ஆனால் அதுவொன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. காவலர்கள் இரவு முழுவதுமாக கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ஒரே வழி இருக்கிறது. நல்ல மழைப்பொழுதாய் இருப்பின் யாரும் இருக்க மாட்டார்கள். அதுவே தப்பிக்க சரியான வழி என்று யோசித்துக் கொண்டான். தப்பிக்க தேவையான பொருட்கள்,தன் தோட்டக் கத்தி, சேகரித்தக் கயிறுகள் என தயாராக‌ நல்லதொரு மழைஇரவுக்காய் காத்திருக்கத் துடங்கினான்.

இதற்கிடையே ஆண்கள் ஜெயிலுக்கும், பெண்கள் ஜெயிலுக்குமிடையே ஒரு துளை இருந்ததைக் கண்டான்.அது சிமென்ட் போட்டு அடைக்கப் பட்டிருந்தது. ஒரு காலத்தில் இந்த துளை வழியாக ஆண்கள் பெண்களது முகத்தையும், பெண்கள் ஆண்கள் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். இப்போதும் கூட இந்தத் துளை வழியாகத் தான் பெண் வாடை ஆண்கள் ஜெயிலுக்குள் வீசுகிறது போலும். அப்போது இருந்த வார்டன் துளைவழியாக அந்தப் பெண்களைப்பார்க்க காசு வசூலித்ததாகவும், அதைத் தொடர்ந்துவந்த பிரச்சனைகளினால் தான் அந்தத் துளை அடைக்கப் பட்டதாகவும் பேசிக்கொண்டனர்.

திடீரென்று ஒரு நாள் அங்கு விளையாடும் அணில்களில் ஒன்றைப் பிடித்து வளர்க்க வேண்டுமென்று தோன்றியது. அதனால் அணில்கள் நிறைய இருக்கும் பெண்கள் ஜெயிலின் மதிலோரம் நடந்து கொண்டிருந்தான், தன்னை மறந்து விசிலடித்தபடியே. .அப்போது தான் அவன் காதில் தேவகீதம் ஒன்று ஒலித்தது. அது ஒரு பெண்ணின் குரல்.

"யார் அங்கே விசிலடிப்பது?"
பஷீரின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. பெண்கள் ஜெயிலிலிருந்து வரும் குரலல்லவா??.
" நான் தான்.."
"கொஞ்ச‌ம் ச‌த்தமாக‌ ...இர‌ண்டுபேருக்கும் ந‌டுவில் சுவ‌ர் இருக்கிற‌த‌ல்ல‌வா... நான் என்றால்..." என்று குர‌ல் திரும்ப‌வும் வ‌ந்த‌து.

பின் பெய‌ர், த‌ண்ட‌னைக்கால‌ம், செய்த‌ குற்ற‌ம் என்று எல்லாம் பேசிக்கொண்டார்க‌ள். அவ‌ள் பெய‌ர் நாராயணி. வ‌ய‌து இருப‌த்தியிர‌ண்டு. பதினேழு வருடம் தண்டனைக்காலம். படித்திருக்கிறாளாம். சிறைக்கு வந்து ஒருவருடம் ஆகிறது... என்று எல்லாம் அறிந்து கொண்டான்.
சற்று நேரம் பேச்சி எதுவும் இல்லை. பிறகு கேட்டாள்:

"ஒரு ரோஜா செடி தருவீர்களா??"
"உனக்கெப்படி தெரியும் இங்கு ரோஜா செடி இருப்பது" எனறான்
"இது ஜெயில்தானே... இங்கு எல்லோருக்கும் எல்லாமே தெரியும்.இங்கு இரகசியம் என்று எதுவும் கிடையாது. ஒரே ஒரு ரோஜாச் செடி...தருவீர்களா??" என்றாள் சற்றே அவசரமான தோணியில்.

பஷீர் சற்று உரக்கவே " நாராயணீ...இந்த உலகில் உள்ள பூச்செடிகள் எல்லாம் உனக்கு தான் சொந்தம்... இது போதுமா..?" என்றான். அவனுள் மகிழ்ச்சி பொங்க.

நாராயணி குலுங்கிக்குலுங்கிச் சிரித்தாள். பின் "ஊஹூம்...எனக்கு ஒரு செடி போதும்" என்றாள்.

பஷீர் என்ன இந்தப் பெண் ஒரு செடி கேட்க்கிறாள். நான் என் உயிரையே இவளுக்காக தர தயாராக இருக்கிறேன், என்று நினைத்துக் கொண்டான். பெண்களின் தேவைகள் எப்போதும் மிகச்சிறியதானவையும், அடிப்படையானதவுமாக‌வே இருக்கிறது.
"அப்படியே நில்...கொண்டு வர்ரேன்॥" என்று ஓடினான்। அவன் ஓட்டத்தில் அதுவரையில் விளையாடிக் கொண்டிருந்த அணில்கள் பயந்து மரத்தில் ஏறிக்கொண்டன.

அவன் தோட்டத்திலேயே மிக அழகான ரோஜாச் செடியொன்றை வேரோடு எடுத்து அதனடியில் சாக்கொன்றைக் கட்டி மதிலருகே எடுத்துச் சென்றான்.

"நாராயணீ..." என்றழைத்தான்.
பதிலேதும் இல்லை.
மீண்டும் அவன் "..ஓ.." என்று சப்த்தமெழுப்பினான்.
பதிலுக்கு அவள் சிரித்தாள். "நான் முதலில் கூப்பிட்டபோது எங்கு போயிருந்தாய்?""இங்கு தான் இருந்தேன்... நான் இல்லாத மாதிரி நடித்தேன்.."" நீ கள்ளிதான்.."
அவள் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். "ரோஜாச்செடி கொண்டுவந்தீர்களா...." என்றாள்.

இவன் பதில் ஒன்றும் பேசவில்லை, ஏனென்றால் அப்போது பேசமுடியாதபடிக்கு ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவள், அவன் பெயரைச்சொல்லி அழைத்தாள். இவனுக்கு நன்றாகக் கேட்டது. அவள் மீண்டும் பேசினாள்

" தெய்வத்தை மட்டும் நான் இத்தனை அன்போடு கூப்பிட்டிருந்தால்..."
" கூப்பிட்டிருந்தால்..."
"அன்போடு கூப்பிட்டிருந்தால்...என்றல்லவா சொன்னேன்" என திருத்தினாள்
"தெய்வமே என் முன் வந்திருக்கும்...என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்".
அதற்கு "இல்லை நான்...அப்போது ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன்...ஒவ்வொரு மலரிலும்....ஒவ்வொரு இலையிலும்... மொக்கிலும்".
அவள் எதுவும் பேசவில்லை.
"நாராயணீ..." என்றழைத்தான்.
நாராயணி தனக்கு அழுகை வருகிறது என்றாள்.
அவன் அமைதியாய் இருந்துவிட்டு, பின் பேசத்துடங்கினான்...
ரோஜாச்செடியை வீணாக்கக் கூடாதென்றும்...ஒரு குழியைத்தோண்டி, கடவுளின் பெயரைச் சொல்லி நடவேண்டும் என்றும், தினமும் பிரியப்பட்டவரை எண்ணி தண்ணீர் ஊற்றினால் நன்கு வளரும் என்று சொன்னான். ஒரு உயர்ந்த கம்பை அவள் நீட்ட ரோஜாச்செடியை அதன் வழியே கடத்திவிட்டான்.

ஒரு சாம்ராஜ்யத்தையே கையில் பிடித்துவிட்டதைப் போல அவள் குதூகலித்தாள்.
"சரி நான் மலர்களைப் பரிக்கப் போகிறேன்" என்றான்.
"என் தலையில் வைக்கவா..."
"இல்லை...இதையத்தில் வைக்க...".

அந்த செடியின் மலர்கள் ஒவ்வொன்றிலும் அவன் இதழ்கள் பதிந்திருக்கின்றன. மதிலுடன் சேர்ந்து நின்று அந்த கற்சுவரை வருடினான். அவள் தான் செடியை நட்டு தங்களை நினைத்து தண்ணீர் ஊற்றுவதாகவும். எப்போதும் மதிலின் மேல் பகுதியை பார்க்குமாறும், அதில் இந்த கம்பு தெரியும் போதெல்லாம் தான் அங்கு இருப்பதாகவும் சொன்னாள். "கம்பைக் கண்டவுடன் தாங்கள் வருவீர்கள் தானே..." என்று கேட்டாள்" நிச்சையமாய்..."
ஒரு விம்மல் சத்தம். "என்ன நாராயணீ...""தெய்வமே...எனக்கு அழுகை வருகிறது...""ஏன்...""தெரியவில்லை..."

பஷீரின் மனது கஷ்டமாகவே " நாராயணீ... நீ முதலில் போய் செடியை நட்டுவிட்டு வா..." என்றான்.
அறைக்குத் திரும்பினான். அன்றுதான் அறை மிகவும் குப்பையாக இருப்பதை உணர்ந்தான். எல்லாம் சரிசெய்து வைத்தான்.உலகம் திடீரென்று அழகாக மாறிவிட்டதைப் போல இருந்தது. தொடர்ந்துவந்த பகல் பொழுதுகள் அவன் மதிலைப் பார்த்தவண்ணமே அமர்ந்திருந்தான்.ஒரு நாள் அந்த திவ்யக்காட்சி அவனுக்குத் தெரிந்தது. மதில்மேல் ஒரு கம்பு தலையைச் சிலுப்பிக் கொண்டு நின்றது. பஷீர் பாய்ந்து சென்றான்.

"என்ன பஷீர்... எங்கே போகிறீர்கள்..." என்று கேட்டவண்ணமே சின்ன வார்டன் தோன்றினார். இந்த ஆள் அந்தக் கம்பைக்காணாத வண்ணம் வார்டருக்குபேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். எங்கே போய் விடுவாளோ என்ற பயம் வேறு. நல்ல வேளையாக சீக்கிரம் அவரை அனுப்பிவைத்துவிட்டு மதிலுக்கு ஓடினான். மதிலருகே ஒரே அமைதி. இவன் மட்டும் அவளின் பெயர் கூறி அழைத்தான்.

"..ம்..என்ன வேண்டும் உங்களுக்கு...""ஏன்..""பிறகென்ன..எத்தெனை நேரம் உங்களுக்காக காத்திருப்பது, இந்தக் கம்பைக் கையில் பிடித்டுக்கொண்டு...கைகளே கடுப்பெடுக்கத் துடங்கிவிட்டன!!"
" நான் வேண்டுமானால் கையைத் தடவிக்கொடுக்கட்டுமா??"" எங்கே தடவிக்கொடுங்கள் பார்ப்போம்" என்று தன் கையை மதில்சுவரின் மீது வைக்கிறாள். பஷீர் மதிலின் மறுபுறம் சுவரைத் தடவிக்கொடுக்க கண்களில் நீர் பெருகுகிறது.

இப்படியே பல பகல்ப்பொழுதுகள் மதில்ப்புற சம்பாக்ஷண்ங்களில் போகிறது. திண்பண்டங்கள் - கேள்விறகு, மீன், முட்டை என்று எல்லாமே கம்பின் வழியாக நாராயணி கொடுத்துவிடுகிறாள். பஷீரும் தன்னிடமுள்ள ஊறுகாயை கொடுத்து, எல்லோருக்கும் கொடுக்கும்படியாகச் சொல்கிறாள். "எல்லோருக்கும் கொடுக்கிறேன்...ஆனால் நீங்கள் காதலிப்பது என்னை மட்டும் தானே என எள்ளுகிறாள். ரோஜாச்செடி நன்றாக வளர்கிறது.

மாதங்கள் கரைகிறது. பகல் பொழுதுகள் மதிலைப்பார்த்தவண்ணமும், இரவுகள் ஒருவரைஒருவர் நினைத்தவண்ணமும் கடக்கிறது. அப்படியொரு இரவில் பஷீர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கனமழை இரவொன்று வருகிறது. இரு மதில்கள், ஒரு புறம் சுதந்திரவெளி, மறுபுறம், முகம் கூடப் பார்த்திராத தன் காதல். யோசித்தவண்ணமே உறங்கச்சென்றுவிடுகிறான். ஏனோ அவனுக்கு இப்போது தப்பித்து போகவேண்டுமென்று தோன்றவில்லை.

ஒரு நாள், 'எததனை நாள் நாம் இப்படியே பேசிக்கொண்டிருப்பது... எத்தனை இரவுகள் தான் நான் அழுது தீர்ப்பது... உங்களை எப்படிக் காண்பது' என்று கேட்க்கிறாள். அப்போது தான் பஷீர் தன்னை ஆஸ்பத்திரியில் பார்க்கலாம் என்று சொன்னான். இன்று திங்கட்கிழமை, வரும் வியாழக்கிழமை பதினோரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவேன் என்று சொன்னாள் நாராயணி. 'எப்படி'...என்றதற்கு 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டாள். மீண்டும் புற‌ப்ப‌டும் போது சொல்லிச்சென்றாள், "ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்...வியாழ‌க்கிழ‌மை...ப‌தினோரு ம‌ணீ..". அவ‌ள் சென்ற‌ பின்னும் கூட‌ வெகுநேர‌ம் ம‌திலோர‌மாக‌வே நின்றிந்துவிட்டுப் போனான் ப‌ஷீர்.

செவ்வாய்க்கிழமையிலிருந்தே தயாராகிவிட்டான். முடிவெட்டிக்கொண்டு, அன்றைக்கு அணியவேண்டிய துணியை துவைத்து, மடித்து வைத்துக் கொண்டான். புதன் கிழமையும் இருவரும் பேசிக்கொண்டார்க்ள். ஒருவருக்கொருவர் தான் எப்படியிருப்போம் என்று சொல்லிக்கொண்டார்கள். தனது வலது கன்னத்தில் ஒரு மச்சம் இருக்கும் என்று அவள் சொல்லிவைத்திருந்தாள். நீண்ட நாள் காத்திக்கொண்டிருந்த அந்த தினம் வந்தது.

வியாழன் காலை ஒரு விழாப்பொழுதைப் போல விடிந்தது. பஷீர் காலையிலிருந்தே ஒரே பாட்டும் கூத்தாகவும், அணில்களோடும், மலர்களோடும் பேசியபடி மகிழ்ச்சியாக இருந்தான். மணி பத்திருக்கும் போதே சென்று ஆஸ்பத்திரியருகே நின்று விட்டான். ஒரு ரோஜாப் பூவைப் பறித்து கையில் வைத்துக் கொண்டான்.

அப்போது தான் சின்ன ஜெயிலர் வந்தான், சிரித்துக்கொண்டே!. அவன் கையில் ஒரு பொட்டலம் வைத்திருந்தான். அது அவன் சிறைக்கு வந்தபோது போட்டிருந்த ஆடை. "பஷீர் நீங்கள் சாதரண உடையணிந்து நான் பார்த்ததே இல்லை...இந்தாங்க இதப் போட்டுட்டு வாங்க" என்றான். இதைச்சொல்லும் போதே மதிலுக்குப் பின்னால் ஒரு கம்பு உயர்ந்தது. நடுங்கிய குரலில் பஷீர் " இல்லை கசங்கிவிடுமே..." என்றான்.

"பரவாயில்லை போட்டுட்டு வாங்க பாப்போம்" என்றான்.
வேஷ்டியையும் ஜிப்பாவையும் அணிந்துவிட்டு வந்து "எப்படி இருக்கு சார்" என்று கேட்டான் பஷீர்.
"பிரமாதம் பஷீர்..."
" நௌ...யூ கேன் கோ...யூ ஆர் ஃப்ரீ..." என்றான் " நீங்க இனி சுதந்திரப் புருஷர்...நீண்ட நாளாக நிலுவையில் இருந்த உங்களது விடுதலை ஆர்டர் வந்துவிட்டது".

இதைக்கேட்டு நடுங்கிவிட்டான். கண்கள் இருண்டுவிட்டன. காது குப்பென்று அடைத்துவிட்டது. பைத்தியம் பிடிப்பது போலாகிவிட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
"வை ஷூட் ஐ பி ஃப்ரீ...ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம்?"(ஏன் என்னை விடுதலை செய்கிறீர்கள்...யாருக்கு வேண்டும் விடுதலை).

உங்களை விடுதலை செய்ய ஆர்டர் வந்திருகிறது. இனி நீங்கள் இருக்க அனுமதியோ, அவசியமோ இல்லை என்று தெரிவித்தான் வார்டர். படுக்கையை அவனே சுருட்டினான். எழுதிய சில கதைகளை ஜேபியில் திணித்தான். ஊருக்கு போகும் பைசாவையும் கொடுத்தான்.

தன் அறை இழுத்துப் பூட்டப்பட்டது. மதிலுக்குப் பின் கம்பு உயர்ந்தவண்ணமே இருந்தது. கனத்த இதயத்துடன் தனது பன்னீர்த்தோட்டத்தின் மத்தியில் நின்றான். அதில் ஒரு ரோஜாவைக் கிள்ளி கையில் வைத்துக் கொண்டான். கண்களில் நீர் மல்கியது...
சிறையின் பெரிய இரும்புக் கதவுகள் பயங்கரமான சப்த்தத்துடன் பஷீரின் முதுகுக்குப் பின்னால் சாத்தியது...

என்று நிறைவடைகிறது கதை.

பிரியப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை விட வேறு என்ன வேண்டியிருக்கிறது. வேறு எதை சுதந்திரம் என்று சொல்கிறீர்கள். ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம் என்று வினவுகிறார் பஷீர். மதிலருகே நின்ற நாராயணி என்ன ஆனாள், ரோஜாவுடன் சென்ற பஷீர் என்ற இளைஞன் என்ன ஆனான் என்ற முடிவில்லா கேள்விகளை காலங்கள் கடந்து கேட்டுக் கொண்டிருக்கிறது 'மதிலுகள்' நாவல்.
பின்னாளில் அடூர் கோபாலகிருஷ்ணனால் படமாக எடுக்கப் பட்ட 'மதிலுகள்' உலக அரங்கில் வெகுவாகப் பேசப்பட்டது. பஷீர் கதாபத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தமிழர்களால் வாசிக்கப் படவும், சுவாசிக்கப் படவும் வேண்டிய மிக முக்கியமான‌ எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர். இந்த பதிவை பஷீரின் 13வது நினைவு தினத்தில் அமர்ந்து எழுதி முடிக்கிறேன் என்பது மிகுந்த சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.


5, ஜூலை, 2007
சென்னை.