இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

ஜாராவின் காலணிகள் - அயல் சினிமா

( மிகுந்த சமாதானமும் பேரமைதியையும் கொடுத்த பள்ளி மரங்களுக்கு...)


எவருடைய கவனத்தையும் ஈர்க்க நினைக்காமல் நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் சிறப்பாகவே அமைகின்றன. கவனிப்பாரற்ற தனிமையின் காரணமாக நாம் செய்யும் சில முட்டாள்த்தனங்கள் சில சமையம் ஒரு கண்திறப்பு நிகழ்வாகவோ, சில சமையம் மிக அரிதான படிப்பினைகளை கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது.

பள்ளியில் மணியடித்த பின்னும் வீட்டிற்குச் செல்ல மணமற்றவனாக அனைவரும் சென்றுவிட்ட ஆள் நடமாற்றமற்ற மைதானத்தை க் கண்டபடி அமர்ந்திருப்பேன். வகுப்பறைகளின் வெளியே சீரான வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் திட்டுகள் தான் என்னுடைய வசிப்பிடம். அங்கு அமர்ந்தபடியே தூரத்தில் கடந்து செல்லும் ஒன்றிரண்டு ஜோடி கால்களைக் கண்டபடி இருப்பேன். பல விதமன கால்கள். வெண்மையான அழகிய கால்கள், காயத்தழும்புகள் நிறைந்த கால்கள், பூனைமயிரடர்ந்த கால்கள்,போலியோ கால்கள், சாக்ஸில் ரப்பர்பேண்ட் சுற்றி ரத்தம் கட்டிய கால்கள்,வெட்கும் கால்கள், டீச்சரிடம் வாங்கிய பிரம்படியை பாவாடையால் மறைக்கும் கால்கள் என‌ நாளடைவில் அந்த கால்களே எனக்கு மிகவும் பரிட்சயமாயின.



கால்களை கவனிக்கத் துடங்கிய பிறகு மனிதரின் முகங்கள் தனித்துவமற்றவையாக தோன்றியது. ஏனென்றால் கால்கள் பொய்பேச அறிந்திருக்க்வில்லை... போலியாக‌ புன்னகைக்க பழக்கப்பட்டிருக்கவில்லை.

நகர நாகரிகத்தில் எல்லா மனிதற்களுடைய முகமும் ஒன்று போலவே இருக்கின்றன. எல்லா முகங்களும் 'குட்மார்னிங் சார்' சொல்கின்றன. எல்லா முகங்களும் வழிந்து தலைசொரிகின்றன, எல்லா முகங்களும் கடன்கேட்டால் முகம் திருப்புகின்றது அதனாலோ என்னவோ எனக்கு இப்போதெல்லாம் எவரது முகமும் நினைவிலிருப்பதில்லை.

அப்போது பள்ளி சாய்ங்காலங்களில் சிறியதும் பெரியதுமாக பென்சில் ஊக்குகள் கீழே கிடப்பதைக் கவனித்திருக்கிறேன். அதைப் பின் தொடரவே மேலும் நிறைய ஊக்குகள். கையால் அவற்றை பொறுக்கியெடுத்துக்கொள்வேன். ஒரு சாயிங்காலத்தில் ஒரு பென்சில் பாக்ஸ் நிறைய சிறிய ஊக்குகள் நிரம்பிவிடும். மீண்டும் அடுத்த நாள் அதே அளவு ஊக்குகள். நான் ஊக்குகளை எடுப்பது அறிந்து யாரோ கவனித்து மீண்டும் கொண்டுவந்து போடுகிறார்க்ளோ என எனக்கு சந்தேகம்.

ஒருவேளை ஊக்குகள் பூமியிலிருந்து தான் முளைக்கின்றன. அதிலிருந்து தான் பென்சில் செய்யப்படுகிறதோ என்று நம்பிக்கொண்டிருந்தேன்.சில சகமாண‌ வர்கள் அங்கிருந்த ஒரு பந்தல் மரத்தை அது பென்சில்மரம்' என்றும்.அதிலிருந்து தான் பென்சில் ஊக்குகள் முளைக்கின்றன என்றார்கள். ஒரு மாலைப்பொழுதில் ஒரு சிறுமியை டீச்சர் வெளியே போய் பென்சில் சீவச்சொல்லி எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் என்று சொன்ன போது அந்த மாணவி அந்த மரத்தடியில் வந்து பென்சில் சீவி விட்டு சென்றாள்... மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். அன்றிலிருந்து தான் 'பென்சில்மரங்களின்' ரகசியம் எனக்கு தெரியவந்தது. அதன் பிறகு பெசில் ஊக்கு பொறுக்குவதில் மனம் ஈடுபடவில்லை.

இப்படியாக பள்ளி நாட்களும், பள்ளிகால மனப்பாண்மைகளும் தங்களுக்கே உண்டான வாசனையும், அழகையும் உடையவை. இவையனைத்தையும் அசைபோட வைத்தது சமீபத்தில் கண்ட ஒரு சிறந்த திரைப்படம். திரையில் பெயரிடுகையில் ஏற்கனவே முழுவதும் பிய்ந்துபோன ஒரு ஜோடி ரோஸ் நிற ஷூக்களை ஒரு ஜோடி கைகள் தைத்துக்கொண்டிருக்கின்றன. தனது தங்கையின் ஷீ தைக்கப்படுவதை நிதானமாக பார்த்துக்கொண்டிருகும் அலி என்னும் சிறுவன், அதை ஒரு கருப்புக் கவரில் இட்டு எடுத்துச் செல்கிறான். வீட்டிற்கு ரொட்டி வாங்கிவிட்டு, காய்கறிகடைக்கு செல்கிறான். செருப்புக்கவரை வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்று உருளைக்கிழங்குகளைப் பொருக்குகிறான். கடைக்காரர் மேலே உள்ள கிழங்குககை விட்டுவிட்டு ஒதுக்கிவைத்துள்ள கிழங்குகளைப் பொருக்கச் சொல்கிறார். பதிலேதும்

பேசாமல் அவனும் பொருக்கியெடுக்கிறான். வெளியே குப்பைக்கவர்கள் அள்ளியெடுக்க வரும் பார்வையற்ற ஆள் அலி வைத்த செருப்புக்கவரையும் எடுதுச் சென்றுவிடுகிறார்.

உருளைக்கிழங்குக்கான காசை கடனாகத்தருமாறு கேட்கிறான் அலி. பழைய பாக்கியை பாதியாவது தரச்சொல்லி அம்மாவிடம் சொல்ல சொல்கிறார் கடைக்காரர். வெளியே வந்து பார்க்கும் அலிக்கு அதிர்ச்சி!. தனது தங்கையின் செருப்புக் கவரைக் காணவில்லை!. தேடிப்பார்க்கும் முயற்சியில் காய்கறிகள் அனைத்தும் சரிந்துவிழ கடைக்காரர் அவனை அங்கிருந்து விரட்டிவிடுகிறார்.
***
அலியின் வீடு:

அலி வீட்டினுள் நுழையும் போது வீட்டுவாடகை பாக்கி கேட்டு வீட்டுக்காரர் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார். அலியின் தாய் வீட்டில் ஆம்பிளைகள் இருக்கும்போது வருமாறு வலியுறுத்துகிறாள்.அழும் குழந்தையை பார்க்கச்சொல்லி ஜாராவை சத்தமிடுகிறாள் அலியின் அம்மா.

வீட்டிற்குள் செல்லும் அலியை சிரித்தமுகத்துடன் வரவேற்கிறாள் சிறுமி ஜாரா. "என் ஷூவை அழகாக தைத்திருக்கிறாரா?" என்று வினவுகிறாள். அலி ஷீ தொலைந்துபோன விஷயத்தைக் கேட்டு அழ ஆரம்பிக்கிறாள் ஜாரா. அதைக்கண்டு கலவரமடைகிறான் அலி. "நான் எப்படி நாளை ஸ்கூலுக்குப் போவது" என்று அழுதபடி கேட்கிறாள்.

அம்மாவிடம் சொல்லப் போகிறேன் என்கிறாள் ஜாரா.வேண்டாம் என்று கெஞ்சுகிறான் அலி. "எப்படியும் தேடி எடுத்துவந்து விடுகிறேன் " என்கிறான் அலி. வீட்டை விட்டு தனது அழுக்கேறிய கேன்வாஸ் ஷூவை அணிந்துவிட்டு ஓடுகிறான் அலி!!

"எங்கே டா போற!" என்று உரக்க கத்துகிறாள் அம்மா... துணிகளைத் துவைத்தபடி..

நாள் முழுக்கத் தேடியும் ஷூ கவர் கிடைத்தபாடில்லை. அலியின் தந்தையிடம் உடைத்துக் கொடுக்கச்சொல்லி மூட்டை சர்க்கரைக் கட்டியை அலியிடம் கொடுத்துவிடுகிறார் மசூதியின் ஒரு மூத்தவர்.
*-*-*-*-*
இரவு::

அலியின் தந்தை சர்கரைக்கட்டியை உடைத்துக்கொண்டே பினாத்திக்கொண்டிருந்தார். "பச்ச ஒடம்புக்காரி...நீ இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா...பாரு எவ்வளவு துணி தொவச்சிருக்க. இந்தப் பையன் நாள்முழுக்க ஊர்சுத்திட்டு இருந்தானா?. ஏன்டா...அம்மாவுக்கு நீ உதவி செய்யக் கூடாதா? நீ இன்னும் சின்னப் பையன் இல்ல... 9 வயசாகுது உனக்கு. எனக்கு 9 வயசிருக்கும் போது வீட்டுவேலையெல்லாம் நான் தான் செஞ்சேன் தெரியுமா?" என்று திட்டிக்கொண்டிருக்கிறார்.

"நீங்க ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க...மொதல்ல வீட்டுவாடகைக்கு ஏற்பாடு பன்னுங்க. "ஜாரா...அபாவுக்கு கொஞ்சம் டீ ஊத்திக்கொடும்மா" என்றாள் அம்மா .

ஜாரா ஒரு கோப்பையில் டீ ஊற்றி கொண்டுவருகிறாள். "வழக்கம் போல சர்க்கரை எடுக்காம வந்திருக்கையே கண்ணு" என்கிறார் அப்பா.

"இங்க தான் இவ்வளவு சர்க்கரை உடைக்கறீங்களே" என்றாள் ஜாரா.

"இல்லமா...அது கூடாது... பாரு இதெல்லாம் நம்மள நம்பி மசூதில இருந்து கொடுத்துவிட்டிருக்காங்க" என்றபடி வீட்டு சர்க்கரை எடுத்து டீயில் இடுகிறார். "நான் நாள் முழுக்க ஆபீஸ்ல எல்லாருக்கும் டீ கொடுக்குறேன்..ஆனால் என் ஜாரா கொடுக்குற டீயோட சுவையே தனி" என்கிறார் அப்பா. வெட்கப்பட்டபடி ஜாரா அலியின் பக்கத்தில் வந்து உட்காருகிறாள்.

"ஷூ இல்லாம நாளைக்கு நான் எப்படி ஸ்கூலுக்கு போறது " ‍என்று நோட்டில் பென்சிலால் எழுதி காட்டுகிறாள் ஜாரா.

"செருப்பு போடுட்டு போ" என்று அலி பேனாவால் எழுதி காட்டுகிறான்.

ஜாரா: "உனக்கு இப்படி சொல்ல வெட்கமா இல்ல? உன்னால தான் இப்படி...அப்பாகிட்ட நான் சொல்லப் போறேன்" .

அலி: "வேண்டாம். அப்பா ரெண்டுப்பேரையும் தான் போட்டு அடிப்பார்.அதுவுமில்லாம‌ல் உன‌க்கு புது ஷூ வாங்க‌ அப்பாகிட்ட‌ காசில்ல‌...திரும்ப‌வும் க‌ட‌ன் தான் வாங்க‌ணும்"

ஜாரா: "நான் என்ன‌ தான் செய்யட்டும்?"

அலி: "என்னோட‌ கேன்வாஸ் ஷூ போடுட்டு போ"
ஜாரா: "அப்போ உன‌க்கு"

அலி: "உன் ஸ்கூல் முடிஞ்ச‌தும் நான் போறேன்."

ஒப்புக்கொள்கிறாள் ஜாரா. அவ‌ளுக்கு ப‌ரிசாக‌ ஒரு ர‌ப்ப‌ர்வைத்த‌ பென்சிலைக் கொடுக்கிறான் அலி.
*-*-*-*-*
மறு நாள் காலை:

மிகவும் வெட்கத்துடனும் கூச்சத்துடனும் அந்த அழுக்குப் படிந்த கிழிந்த நிலையில் உள்ள கேன்வாஸ் ஷூவை அணிந்து செல்கிறாள். அவளுடைய அவமாண உணர்ச்சியால் கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது. மற்றவர்கள் முன்னால் அதைக்காட்ட மனமின்றி மிகுந்த லஜ்ஜையுடன் தன் பாவடையால் ஷூவை மறைக்கிறாள். விளையட்டு வகுப்பு வருகிறது. அதில் ஒரு சிறுமி நல்லதொரு தோல் ஷூவைப்போட்டு நீலந்தாண்டும் போது விழுந்துவிடுகிறாள். ஜாரா பின் வரிசையில் இப்பொதும் சுருங்கிய முகத்துடன் நிற்கிறாள். "எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? கேன்வாஸ் போடுட்டு வாங்கன்னு...ஸ்போர்ட் ஷூ போடுட்டு வந்தா இந்த மாதிரி ஆயிருக்குமா?" என்கிறார். ஜாரா சந்தோஷம் தாளாமல் சிரிக்கிறாள். இப்போது அவளுடைய ஷூக்கள் பாவாடையிலிருந்து வெளியே இருந்தன.
அலி பள்ளிக்கு போகாமல் ஜாரா வருவதற்காக தெருவோரமாக உள்ள ஒரு சந்தில் யாருக்கும் தெரியாமல் காத்திருக்கிறான். பள்ளி முடிந்து ஜாரா ஓட்டமெடுத்து வருகிறாள். அலி பொறுமையிழந்து பதட்டத்துடன் நிற்கிறான். ஜாரா வருவதைக் கண்டு சற்றே சமாதானம் அடைகிறான் அலி. "இவ்வளவு நேரமா வரதுக்கு? என‌க்கு ஸ்கூலுக்கு போக‌ வேண்டாம்?"

"நான் என்ன செய்வேன்.. என்னால முடிஞ்ச வரைக்கும் ஓடி தான் வந்தேன். உன்னால தான எல்லாம். நான் இனிமேல் இந்த ஷூவை போடுட்டு போகமாட்டேன் போ! இது ரொம்ப‌ அசிங்க‌மா இருக்கு... ஒரே அழுக்கு!"

இதை எதிர்பார்க்காத அலி "அட‌...அதுனால‌ என்ன‌... க‌ழுவிக்க‌லாம்...ச‌ரியா?" என்று ஒருவ‌ழியாக‌ அவ‌ளை ச‌மாதான‌ம் செய்துவிட்டு அவசரமாக புறப்பட்டான்.

பரிதாபமாக புத்தகமூட்டையை ஒரு கையில் சுமந்துகொண்டு பள்ளிக்கு ஓடுகிறான். தாமதமாக வருவதைப் பள்ளி முதல்வர் கண்டுகொள்கிறார். பள்ளிக் கூட்டாளிகள் "இன்று சாயிங்காலம் கால்பந்து ஆட வா..." என்று வகுப்பில் சீட்டு எழுதி அனுப்புகிறார்கள். "அம்மாவுக் உடம்பு சரியில்லை...வர முடியாது" மறுபடி எழுதி அனுப்புகிறான் அலி."நம் பரமஎதிரியின் அணியுடனாக்கும் நாம் ஆடப் போகிறோம்" என்று சொல்லியும், தன் பரிதாபமான கேன்வாஸ் ஷூவின் நிலை கருதி போக மறுத்துவிடுகிறான். கணக்கு பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண்கள் வாங்கியதற்காக ஒரு பேனாவைப் பரிசளிக்கிறார் கணக்கு வாத்தியார்.

வீடு திரும்புகையில் ஜாரா மிகவும் கோபமாக இருப்பதைக் காண்கிறான். அவள் மீண்டும் காணாமல் போன ஷூவைக்குறித்து புகார் சொல்கிறாள். அவளுக்கு அவனுடைய பரிசுப் பேனாவைக் கொடுத்து சமாதானம் செய்கிறான். இருவரும் சேர்ந்து தங்கள் இருவருக்குமேயான ஒற்றைஜோடி ஷூவை சோப்பால் கழுவுகிறார்கள். பொங்கி எழும் சோப்பு நுரை ஜாராவுக்கு தாங்காத சிரிப்பை ஏற்படுத்துகிறது. ஜாரா சிரிப்பதைப் பார்த்து அலியும் சந்தோஷித்து சிரிக்கிறான். மழை வருவதைப் போல இருந்தது மேகம்.



இடிசப்தத்தால் உறக்கத்திலிருந்து திடிக்கிட்டு எழும் ஜாரா சன்னலையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். பின் அலியை எழுப்ப நினைத்து "ஆலீ... அலீ..." என இரகசியமாக கூப்பிடுகிறாள். 'வெளியில மழை பெய்யுது...ஜன்னல் கிட்ட போக பயமா இருக்கு' என்கிறாள். வெளியே துவைத்து காய வைத்த ஷூ நனைந்து கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி ஓடிச்சென்று அதை பத்திரமாக எடுத்துவைக்கிறான் அலி.

மறுநாள் சந்தோஷமாக பள்ளிக்கு செல்கிறாள் ஜாரா. போகும் இடமெல்லாம் எல்லா பெண்கள் காலையும் கவனித்தபடியே போகிறாள். கடையோரம் நின்று காட்சிக்காக வைக்கப் பட்டிருக்கும் வண்ணமிகு ஷூக்களை பரிதாபமாக பார்த்து நகர்கிறாள். பி.டிவகுப்பில் விளையாடுவதை விட்டு எல்லார் கால்களையும் பார்த்தே நடக்கிறாள் ஜாரா. அவளுக்கு எல்லா கால்களும் பரிட்சயமாகி விட்ட நிலையில் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவளது காணாமல் போன செருப்பைப்போலவே ஒரு ஜோடி செருப்பணிந்து செல்கிறாள் ஒருத்தி. ஆனாலும் கேட்பத்ற்கு பயமாக இருக்கிறது... செய்வது அறியாது அவள் பின்னாடியே அவள் வீடு வரைக்கும் செல்கிறாள்... அது அந்த பார்வையற்ற காகிதம் பொறுக்கும் தொழிலாளியின் வீடு. அலியையும் கொண்டு வந்து காண்பிக்கிறாள்.

மறுநாள் தனது கீழே விழுந்த பேனாவை எடுத்துக் கொடுத்து உதவிசெய்கிறாள் அந்த பெண். நாளடைவில் இருவரும் நண்பர்களாகிவிடுகிறார்கள். மறுநாள் எப்படியும் அந்த ஷூவைப் பற்றி விசரித்து விட வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறாள் ஜாரா. அதே நேரம் பார்வையற்ற அந்த பேப்பர் வியாபாரி ஒரு ஷூக்கடையில் விலைகளை விசாரித்துக் கொண்டிருந்தார். கடைக்காரர் 'இதுல வைலட் கலர்ல பூபோட்டிருக்குங்க... நல்லா இருக்கும் எடுத்துக்கங்க' என ஒவ்வொன்றாக விவரிக்கிறார்.



அடுத்தநாள் காலையில் அந்த சிறுமிக்காக வெகுநேரமாக காத்திருக்கிறாள் ஜாரா..மனதைத் தயார் படுத்திக்கொண்டு. ஆனால் மீண்டும் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!. அவள் ஒரு ஜோடி புதிய செருப்புகளை அணிந்துகொண்டு வந்தாள்.
"என் ஷூ எப்படி இருக்கு" என்றாள்.
"ம்...நல்லா இருக்கு"

"எங்கப்பா வாங்கிக் குடுத்தார்.நான் நல்ல மார்க் வாங்கும் போதெல்லாம் எதாவது பரிசு வாங்கிக் குடுப்பார்...நான் எல்லா பரிச்சைலயும் நல்ல மார்க் தான் வாங்குவேன்... ம்ஹூம்ம்.." என சிரிக்கிறாள்.

"அது இருக்கட்டும்...உன்னோட பழைய ஷூ என்னாச்சு?"

"அதுவா? பழசாயிடிசுன்னு அம்மா தூக்கி எறிஞ்சுட்டாங்க..."

ஜாராவுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது...

"அது அவ்வளவு பழயது ஒன்னும் இல்ல" என்று கோபமாக‌ சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஜாரா.

*-*-*-*-*
இதற்கிடையே அனைத்து பள்ளிகளுக்குமான மாராத்தன் ஓட்டப்பந்தையம் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. அலியில் பி.டி மாஸ்டர் அதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார். பரிசுக்கான விபரம் மறுநாள் தெரிவிக்கப்படும் என்றும், ஆர்வமிருப்பவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றும் அறிவிக்கிறார். தன்னுடைய அதிபயங்கரமான நிலையில் இருக்கும் இந்த ஷூவை வைத்துக்கொண்டு எப்படி போட்டியில் கலந்துகொள்வது? இருவருக்கும் சேர்த்து இருப்பது இந்த ஒரே ஷூ தான். ஜாரா வேறு ஏற்கனவே கஷ்டப்படுகிறாள்... என்று என்னென்னவோ யோசித்துப் பார்த்துவிட்டு போட்டிக்கு பெயர் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிடுகிறான். வெளியே போட்டிக்கான தேர்ந்தெடுப்பு நடப்பதை மனம் பொருக்காமல் வகுப்பறையில் இருந்தபடி கவனிக்கிறான். சாயிங்காலம் போட்டியில் பங்கு பெறுபவர் பட்டியலுடன் இறுதிப்போட்டி பரிசுகளுக்கான அறிவிப்பும் ஒட்டப்படுகிறது.

அது அலியை இரண்டாக கிழித்தது போல அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. முதல் பரிசு விளையாட்டு உடைகள் மற்றும் விளையாட்டு முகாமில் பங்குகொள்ள முடியும், இரண்டாம் பரிசு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு முகாமில் பங்குகொள்ள முடியும், மூன்றாவது பரிசு புத்தம் புதிய ஸ்போர்ட் ஷூ. அலி தான் பெயர் கொடுக்காமல் விட்ட முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினான். அந்த ஷூ மட்டும் கிடைத்துவிட்டால் தனது எல்லா துன்பமும் தீர்ந்து விடும் என்று தோன்றியது.

பி.டி மாஸ்டரின் அறைக்கு சென்று தான் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவதாக கூறுகிறான் அலி. திரும்பியும் கூட பார்க்காமல் "ஆள் எல்லாம் செலக்ட் பண்ணியாச்சு...அடுத்த வருஷம் பாதுக்கலாம் போ" என்கிறார்.

"இல்ல சார் நான் கண்டிப்பா இதுல கலந்துக்கனும்...நான் நல்லா ஓடுவேன் சார்" என்கிறான்.

"அது தான் சொல்றேன்ல...இவ்ளோ நேரம் என்ன பண்ணீட்டு இருந்தே... "

என்று சொல்லி திரும்பிய அவர் முன் கண்ணீருடன் தேம்பித் தேம்பி அழுதபடி அலி "நான் நல்லா ஓடுவேன் சார்...நான் கண்டிப்பா முதல் பரிசு வாங்கிடுவேன் சார்" என்று அடம்பிடித்து நின்றுகொண்டிருந்தான். பொறுமை இழந்த மாஸ்டர் அவனை மைதானத்தில் ஓடவிட்டு டைம் செய்தார். அவனுடய வேகம் அதியசமாகவும்... ஆச்சர்யமளிப்பதாகவும் இருக்கவே அவனைத் தேர்வு செய்துவிடுகிறார் மாஸ்டர். .

அலி சந்தோஷமாக வீடு திரும்பினான்.காரணம் புரியாமல் ஜாரா சிரித்தாள். விஷயத்தைச் சொல்லி பரிசு விபரங்களையும் சொன்னான். "மாஸ்டரிடம் நான் முதல் பரிசு வாங்குவேன்னு சொல்லியிருக்கேன். ஆனா எப்படியும் மூனாவது பரிசை வாங்கிடுவேன்" என்கிறான் அலி.

"ஏன்" என்று கேட்கும் ஜாராவிடம் "மூன்றாம் இடத்துக்கு தானே ஷூ கிடைக்கிரது" என்று வேடிக்கையாக சிரித்தான். ஜாராவும் ரகசியமாக சிரிக்கத்துடங்கினாள். மீன்கள் நிறந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து வரும் நீரை மிகவும் ஆசையுடன் குடிக்கத் துடங்கினான் அலி.

பல்வேறு நகரங்களிலும், பணக்கார பள்ளிகளிளும் இருந்து மாணவர்கள் போட்டிக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ஒரு பழைய ட்ரக்கில் வந்து சேர்ந்தார்கள் அலியின் பள்ளியினர். அலி சுற்றிலும் பார்த்தபடி இருந்தான். அனைவரது பெற்றோர்களும் உடன் வந்து உற்சாகமளித்துக் கொண்டிருந்தனர். சிலர் போட்டி உடையில் நிற்க வைத்து தத்தம் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அலி தூரத்தில் வைத்திருக்கும் பரிசு ஷூவையும் பார்த்தான்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வந்திருந்த அனைவருகும் நன்றி சொல்லிவிட்டு, போட்டியில் கலந்துகொள்வது தான் முக்கியம், வெல்லுவது அல்ல... அந்த முகடு கடந்து உள்ள Lake கை யார் முதலில் அடைகிறார்களே அவரே வெற்றியாளர். யாரும் யாரையும் தள்ளி விடாமல் செல்லவேண்டும்...இலக்கை அடைவது மட்டுமே நமது நோக்கம் என்றும் அறிவுறுத்தினார்.

துப்பாக்கி மேல்நோக்கி சுடப்படுகிறது. பிள்ளைகள் ஓடத்துவங்கினர். ஒன்றிரண்டு கிலோ மீட்டர்களிலேயே சிலர் நின்றுவிட்டிருந்தனர். முகடின் மேல் செல்லச் செல்ல போட்டியாளர்களின் கூட்டம் குறைந்துகொண்டே வருகின்றது. அலி அவ‌னுடைய பரிதாபமான ஷூவுடன் முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தான். சட்டென்று தான் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற ப்ரக்ஞை ஏற்பட்டு அவன் முன் காட்சிகள் ஓடியது. ஜாராவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது... "உன்னால தான் எல்லாமே" "இந்த ஷூவை போட்டுட்டு போக வெக்கமா இருக்கு.." அவன் கொடுத்த உறுதியும் நினைவு இருக்கிறது "...நான் எப்படியும் மூன்றாம் பரிசு வாங்கிடுவேன்..." "அது பசங்க ஷூவாச்சே?" "அதுனால என்ன. அதுக்கு பதிலா...பொண்ணுக ஷூவ மாத்திக்கலாம்..." இப்படியே ஓடினால் முதல் பரிசு முதல் பரிசு தான் கிடைக்கும் என்று எண்ணி, தன் வேகத்தைக் குறைத்து மற்ற 2 பேருக்கு வழி விடுகிறான். மூன்றாவது ஆள் தன்னைக் கடக்க நினைக்கயில் பெரும் முயற்சி எடுத்து அவனை முந்துகிறான். கால்களில் வலி எடுத்தது. தினமும் ஜாரா ப ள்ளி முடிந்து தனக்காக புத்தகப்பையுடன் ஓடி வருவது எண்ணிப்பார்க்கிறான். "நான் என்ன செய்வது...என்னால் முடிஞ்ச வரைக்கும் வேகமா தான ஓடி வர்ரேன்" என்ற அவள் குரல் கேட்கிறது ...அவனது வேகம் அதிகமாகிறது.

இலக்கு பக்கத்தில் வரும் போது மொத்தமாக ஐந்து அல்லது ஆறு பேரே இருக்கிறார்கள். எல்லோருமே மிகவும் சோர்வுடனும், சக்தியற்றும் காணப்பட்டார்கள். அலி மயக்கமடையும் நிலையிலிருந்தான். அப்போது தான் அந்த துயரம் நடந்த்தது. அலியை முந்தும் முயற்சியில் ஒரு மாணவன் அலியைக் கீழே தள்ளி விட்டுவிடுகிறான். இலக்கு மிக அருகில் வந்துவிட்டிருந்தது... தன் கண்முன்னே இரண்டு மூன்று பேர் கடந்து போவதைப் பார்க்கிறான் அலி. ஜாராவின் முகம் மீண்டும் அவன் முன் வந்து போகிறது... எழுந்து ஓடத்துவங்குகிறான். எல்லா மாணவர்களும் தான் எத்தனையாவதாக வருகிறோம் என்ற நினைவே இல்லாமல் சோர்வுடன் கிட்டத்தட்ட இணையாகவே ஓடிக்கொண்டிருந்தனர்.

முன்னேறி வந்து கொண்டிருந்த அலியை உற்சாகப்படுத்தி பி.டி மாஸ்டரும் ஓரத்தில் ஆர்வமாக "வாடா..வாடா.." என்று ஓடிவந்துகொண்டிருந்தார்... உடன் பள்ளி முதல்வரும் இணைந்த்துகொண்டார். இலக்கை அடையும் போது யவரும்

சுயநினைவற்றவர்களாக திபு திபு வென்று இலக்கில் வந்து விழுந்தனர்... யார் வென்றது என்று தெரியவில்லை... கூட வந்த மாணவன் ஒருவன் மிகுந்த கோபத்துடன் அழ ஆரம்பித்திருந்தான். அவன் தாய் வந்து அவன் கால்களைப் பிடித்து விட்டாள்.

பி.டி மாஸ்டர் ஓடி வந்து அலியைக் கட்டிக்கொண்டார்... இன்னும் முழுசுயநினைவில்லாமல் அலி..."நான் மூன்றாவது பரிசு வாங்கிட்டேனா சார்..?" என்றான்...

"மூன்றாவது பரிசா...அடப்ப்போடா... முதல் பரிசே நீதான்!!" என்று ஆரவாரித்தார் மாஸ்டர். அலியைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டார். பத்திரிக்கைக் காரர்கள் வந்து புகைப்படங்கள் எடுத்தனர். ஒருங்கிணைப்பாளர் ஒரு கோப்பையும் பரிசும் வழங்கினார். புகைப்படம் எடுக்கப்படுகிறது. பின்னர் பள்ளி முதல்வர் அலியுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். அலி மிகவும் கூச்சத்துடன் தலையைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டிருந்தான்.

"பையனை பட்டும் தனியா ஒரு போட்டோ எடுக்கானும்..எல்லாம் கொஞ்சம் விலகிப் போங்க என்றார். "எங்கே சாம்பியன்.... தலையை மேலே தூக்கு பாப்போம்.." என்றார்.

அலி மெதுவாக தலையைத் தூக்கியபோது கண்கள் முழுக்க நீருடன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தான். ஏமாற்றத்தையும் இயலாமையும் வெளிப்படுத்த கண்ணீரைவிட வேறு கருவி என்ன இருக்கிறது...?

வீட்டில் ஜாரா...தண்ணீர்த் தொட்டியில் குழந்தையின் புட்டியைக் கழுகிக்கொண்டிருந்தாள். வாசலில் வந்து நின்ற அலியை கண்கள் விரிய பார்த்தாள் ஜாரா. அலி தலையைக் கீழே குனிந்தபடி நின்றிருந்தான். ஜாரா அவனது கால்கலைப் பார்த்தாள். அதே பழைய ஷூ... இன்னும் மோசமான நிலமையில்... உள்ளே குழந்தை அழும் குரல் கேட்கிறது... அவள் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறாள்.

அலி மிகவும் வேதனை மிகுந்தவனாக மீன் உள்ள தொட்டியின் அருகே வந்து உட்காருகிறான். தண்ணீரை அள்ளிக் குடித்தான். மேலும் பிய்ந்து பய்ந்து பயனற்று போய்விட்ட கேன்வாஸ் ஷூவை கழற்றி எறிகிறான். உள்ளே கால்கள் எல்லாம் பழுக்க காச்சியிருந்தது. சாக்ஸுடன்.. தோல் ஒட்டிக்கொண்டு வந்தது வலியைக் கொடுத்தது... ஜாராவின் புறக்கணிப்பும்...அவளுக்கு ஷூவைப் பெற்றுத் தர முடியாத தோல்வியும், அதையும் விட வேதனையை ஏற்படுத்தியது...

கால்களை தண்ணீர்த் தொட்டிக்குள் விட்டு அமர்ந்திருந்தான் அலி.... மீன்கள் கூட்டமாக அவனது காயத்தை நெருங்கி கொத்த ஆரம்பித்தன..... அது அவனுக்கு சற்றே சமாதானமாக இருந்தது.... மேலே சூரியன் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது....

திரை இருண்டு... மெல்லிய இசையுடன் பெயர்வரிசை இடப்படுகிறது....

*-*-*-*-*
சர்வ தேச திரைப்பட விழாக்கள் எங்கும் திரையிடப்பட்டு பெரும் அங்கிகாரம் பெற்ற இந்த இரானிய படம் Majid Majidi யின் Bacheha-Ye aseman (Children of Heaven) ஆகும்.

குழந்தைகளின் உலகை உன்னதமாக கண்முன் சில மணிநேரம் ஓடவிட்டு...பல ஆண்டுகளுக்கு முன்பு நம்மை பயணிக்க செய்தது இப்படம். இப்படத்தைப் பார்த்த ஒரு தோழி ...பரிசுகள் ... விருதுகள் எல்லாம் அவற்றின் மதிப்பைப் பொறுத்து அல்ல... நமது தேவையைக் குறித்தே நிர்ணையிக்கப் படுகிறது... என்றார... எவ்வளவு உண்மை.!
பல்வேறு தளங்களிலும் பொதுவான திரையிடலுக்கு மிகவும் ஏற்புடைய படமாகவும், டிவைன் என்ற சொல்லை சினிமாவுடன் பொருத்திப் பார்க்க உதவுவது இதுபோல சில படங்கள் மட்டும் தான். ஒரு கிறித்துவ மிஷ‌னரி ஆதரவற்றவர்களுக்கும், குளிர் காலத்தில் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட வழியில்லாத மக்களுக்காக ஒரு சேரிட்டி ஷோ நடத்தியது. ஷோவில் "Children of Heaven" திரையிடப்பட்டது. சேரிட்டி ஷோவுக்கு Entry Fee யாக‌ வசூல் செய்யப்பட்டது, ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஜோடி உபயோகித்த அல்லது பழைய ஷூ... சினிமா என்பதைக் கடந்து இவை வாழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது...

பல மாதங்கள் கழித்து என் பழைய மேலாலரை மின்சார இரயிலில் சந்திக்க நேர்ந்தபோது, பேசிக்கொண்டிருந்தவர் சட்டென்று தன் மொபைல் எடுத்து கையில் கொடுத்தார். அதில் அவரது பிறந்த 7,8 மாதமான குழந்தையின் படம் இர்ந்தது. அப்போது தான் அவர் சமீபத்தில் தந்தையாகியிருந்தது நினைவுக்கு வந்தது. "எப்படி இருக்கிறாள்" என்று விசாரித்தேன். வழி முழுக்க குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார்... ஒவ்வொரு மாசமும் அவளுக்குன்னு ஏதாவது புதுசா வாங்கிடுவேன். சின்ன பொம்மையே, புது தொட்டிலோ எதுவானாலும் சரி... அவளுக்கு நான் 8ம் மாசத்துல இது வாங்கிக் கொடுதேன்னு அவளுக்கு தெரியாது தான்... ஆனா நானே எனக்கு அப்படி ஒரு Commitment பண்ணிகிட்டேன். எனக்கு சிரிப்பதைத் தவிர எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை... "இந்த தலைமுறைக் குழந்தைகள் நம்மை விட அதிர்ஷ்டசாலிகள்" என்றேன். அவரும் ஆமோதிப்பவரைப்போல..."ஆமா...உண்மைதான்...நான் வளர்ர வரைக்குமே என் அப்பா வீட்டு பொருளாதாரத்த ஈடுகட்டவே அலஞ்சுட்டு இருந்தார்... என்னை அவர் தூக்குனதே இலன்னு என் அம்மா சொல்லுவாங்க... ஃபுல்லா...பொம்பளைங்ககூடையே தான் வளந்தேன்... " என்று குறிப்பிடார். எனக்கு அவர் இத்திரைப் படத்தில் வரும் காகிதம் பொறுக்கும் குறுட்டு வியாபாரியை நினைவு படுத்தினார். தனது ஏழ்மையைப் பொருட்படுத்தாது தன் குழந்தைக்காக அளிக்கப்படும் சமர்ப்பணத் தன்மை அந்த பார்வையற்றவரின் மீது பரிதாபத்தைக் கடந்து மிகுந்த மரியாதையை வரவழைத்தது.

உலகில் எல்லா தந்தைகளுக்கும், தங்கள் பிள்ளைகள் என்பது...தாங்கள் கண்ட கனவின் தொடர்ச்சி. தாங்கள் கைவிட்ட கனவை தொடர வந்த இந்திர தூதுவர்கள்.தங்களுக்கும் தங்கள் கனவுலகத்திற்குமான பாலம். எல்லா அப்பாக்களுமே தாங்கள் கற்பனை செய்துவைத்திருந்த பால்யத்தை அவரவர் பிள்ளைகளுக்கு கொடுக்கவே முனைகிறார்கள். அப்பாக்களின் கனவுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணமும் சுபாவமும் கொண்டிருந்தாலும், எலாருடைய பொதுவான கனவு "என் பிள்ளை, என்னைப் போல வரக்கூடாது!" என்பதாகத்தான் இருக்கிறது!.