இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 அக்டோபர், 2016

தீபன் - புலம்பெயர் சினிமா

வெளிநாடுகளுக்கு பயனம் செல்லும் போது நமது நாட்டவர்களைக் காண நேரிடும். அதுவும் சில பகுதிகள் முழுக்கவே தமிழர்களாக காட்சியளிப்பார்கள். லண்டனில் ஈஸ்ட்-ஹேம், க்ராய்டன், பரீசில் லா ஷாப்பெல். பரீஸின் பிரத்யேகதை என்னவென்றால் அங்கு இந்திய தமிழர்களான பாண்டிச்சேரிக்காரர்களும் அதிகம் வசிக்கிறார்கள். அதனால் ஆழமானதொரு தமிழ் கலாச்சார சூழல் லா ஷாப்பெல் அமைந்திருப்பதைக் காணலாம். கோயில் திருவிழாக்கள், வியாபார கூட்டமைப்புகள், தொழில்முறைப் போட்டிகள் கொடுகல் வாங்கல், சாயங்காலம் பல கடைகளில் பணிபுரிவோர் சேரும் டீக்கடைகள் எல்லாம், தாயகத்திலிருந்து வெகுதூரம் விலகிச்செல்லா தன்மையுடன் இருக்கும்
கார்-த்யு-நோர் தொடங்கி ஏரோபோர்டைச் சுற்றி பல சிறு சிறு கிராமங்களில், சிரிய, பெரிய வீடுகளை வாங்கி தமிழாக்கள் வசிக்கிறார்கள். அதுக்குள்ளாகவே சிரிய தொழில்கள் செய்து, அந்த தமிழ் குழுக்களுக்குள்ளாகவே பிழைப்புகள் நடத்தி வாழ்கிறார்கள். இதில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு உதவிப்பணம் வாங்கி ஜீவிக்கும் பெரியவர்கள், கள்ள விசாவில் திரிபவர்கள், நிரந்திர தொழிலென்று ஏதும் இல்லாமல் சின்னச் சின்ன வேலைகளையே பல வருடங்களாக செய்பவர்கள். இவர்களது சடங்குகள், பெண்பார்த்தல், பெண்கொடுத்தல் எடுத்தல்...என்று அந்நிய தேசமொன்றில் ஒரு இனம் தனது வேர்களை முழுமையாக பற்றவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் வாழ்வதை ஒரு அந்நியனாக நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்
அப்போது எனக்குள் எழும் கேள்வி இதுதான்...இவ்வளவு உயிர்ப்புடனான ஒரு புலம்பெயர் கலாச்சாரத்திலிருந்து அதன் வெளிப்பாடாக இலக்கியத்தளத்திலும், கலைத்தளத்திலும் எவ்வகையான பங்களிப்புகள் நடந்திருக்கின்றன? (அப்படி நான் தேடியபோது கண்டெடுத்தது தான் ஷோபாசக்தியின் சிறுகதை உலகம். தேசத்துரோகி சிறுகதைத் தொகுப்பை நான் வாசிக்கத் தொடங்கி இருந்தேன்). நான் மிகவும் மதிக்கிற மற்றுமொரு கலைவடிவம் சினிமா. திரைத்துறையில் ஏதாவது முன்னெடுப்புகள் புலம்பெயர்த் தமிழர்களை வைத்து முன்னெடுக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினேன். இலங்கையில் தமிழ்சினிமா என்ற ஒன்று இருந்திருக்கிறதா? என்றெல்லாம் தேடிப்பார்க்கத் தோன்றியது
நான் சில இலங்கைத்தமிழ் இளைஞ்சர்களுடன் பேசும்போதும் சரி, வெறுமனே அவர்கள் பேசுவதை அவதானிக்கும் போதும் கவனித்த ஒரு விஷயம் அவர்கள் இந்தியதமிழர்களாகிய நம்மைவிட இந்தியதமிழ் சினிமாவை நேசிக்கிறார்கள். திரும்பத் திரும்ப பிடித்த படங்களைப் பார்க்கிரார்கள். சினிமா பற்றி நம்மைப்போலவே கதைக்கிறார்கள், அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களுக்கு எல்லா நடிகைகளையும் தெரிந்திருக்கிறது. முடிதிருத்தகங்களில் அஜித் படங்கள் காட்சியளிக்கின்றனநாம் 'மொக்கை' என்று ஒதுக்கிய படங்களைக் கூட அவர்கள் விட்டுவைக்காமல் கண்டு களிக்கிறார்கள். சினிமா வசனங்களை அடிக்கடி உபயோகிக்கிறார்கள்.... "அந்த கவுண்டமணி சொல்லுவான்ல..." "வடிவேலு சொல்லுற மாதிரி..." என்று
லா ஷாப்பெலில் உள்ள ஒரு புத்தகக் கடையில் சில பழைய புத்தகங்களை மேலாக‌ அலசிக்கொண்டிருந்த போது, ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அது "இலங்கைத் தமிழ் சினிமா" குறித்த புத்தகம். இலங்கைத் தமிழ் சினிமா கடந்து வந்த பாதை, முக்கிய நடிகர்கள், குறிப்பிடும்படியான திரைப்படங்கள் என, ஒரு சில புகைப்படங்களுடன் இருந்தது. மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட இந்திய தமிழ்சினிமா நீரோட்டத்தின் கூடவே இணைகோடாக இலங்கைத் தமிழ்சினிமா பயணிக்கத் தொடங்கி இடையே வற்றி உலர்ந்து காணாமல் போன நதி அது. மொத்தமாகவே 50 படங்களுக்கும் குறைவான படங்களே அங்கு தயாரிக்கப்பட்டதாக இணையத் தகவல்கள் சொல்லுகின்றன. தொடர்ந்த போராட்டமும் அலைக்கழிப்பும் நாட்டிலிருந்து தொடர்ந்து வெளியேறும் சூழலும் அரசியல் நிலையற்றத்தன்மையும் அங்கு சினிமாவைக் கைவிடச் செய்ததோ என்னவோ? 
ஆனால் இக்கட்டான அழுத்தங்களில் தான் படைப்பூக்க எழுச்சியும் அதிகமாக இருக்கும். உன்னதமான கலைப்படைப்புகள் பெரும்பாலும் உள்ளார்ந்த மனஎழுச்சியின் காரணமாக விளைந்தவையாகவே இருக்கும். அப்படியிருக்க இலங்கையில் சினிமா முன்னெடுப்பு தோய்வடைந்ததைக் குறித்து எனக்கு மிகவும் வருத்தம் உண்டு. அதுவும், சிங்கள சினிமா என்ற ஒன்று நடைமுறையில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளும் போது நமக்கான பதில் எளிதாக கிடைத்துவிடும். இருந்தபோதும் கிட்டத்தட்ட 2 தலைமுறைக்கும் மேலாக இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்துவருகிறார்கள். பல்வேறு துறைகளில் அவர்கள் ஈடுபட்டும் வருகிறார்கள். சில நகரங்களில் தொழில்ரீதியாக மிகுந்த செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அப்படிப்படியிருந்தும் பெரியளவிலான கலாரீதியான முன்னெடுப்புகள் எதுவும் நிகழப்பெறவில்லை என்றே தோன்றுகிறது. 
தாய்நாட்டில் தினந்தோறும் நிகழும், நிகழ்ந்த விடயங்கள் ஒருபுறம் என்றால், புலம்பெயர் சமூகத்தில் அவர்கள் தினசரி எதிர்கொள்ளும் சமுதாய சிக்கல்கள், கலாச்சார அபத்தங்கள், அவர்கள் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பிழைபில்லாவிட்டாலும் சுமந்துகொண்டு திரியும் பழமைவாதங்கள், புலம்பெயர் நாட்டின் சட்டதிட்டங்களை தனக்கு சாதகமாக தனக்கு இயங்க வைக்கும் ஆட்கள், அதன்பொருட்டு அவர்கள் செலுத்தும் ஆதிக்கம், இரண்டாம் தலைமுறைகள் படித்து வேலை என்று ஏற்பட்ட பிறகு உள்ளூர் கலாச்சாரத்துடன் தங்களை சங்கமித்துக்கொள்வது, பின் ஒருங்கிணைந்த இந்த கூட்டு வாழ்வை விட்டு தூர நகரங்களுக்கு பிரக்ஞைப் பூர்வமாக இடம்பெயர்ந்டு போதல்....இப்படி எவ்வளவோ விஷயங்கள் எழுதப்படவும், பேசப்படவும், திரைப்படங்களாக எடுக்கப்படவும் சாத்தியம் இருக்கும் பட்சத்தில் ஏன் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று நான் நினைப்பதுண்டு.
ஒரு முறை லாஷப்பலில் ஒருமுறை சுற்றிக்கொண்டிருந்தபோது தான் அந்த போஸ்டரைக் கண்டேன். யாருடைய முகமும் இல்லை. இரண்டு கைகளை பாதுகக்கும் இன்னொரு கை. ஒரு கசங்கிய பழைய ஓவர்கோட்டின் பின்னனியில். படத்தின் பெயர்  'தீபன்' என்று பார்த்ததுமே...ஆஹா..! என்று ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. இயக்கம் ஜாக் ஒடியார் (jaques audiard). படம் திரைக்கு வரும்போது பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

(...தொடரும்)செவ்வாய், 4 அக்டோபர், 2016

நல்ல துவக்கம் - ஒரு நூற்றாண்டுகாலத் தனிமை ...


Many years later, as he faced the firing squad, Colonel Aureliano Buendía was to remember that distant afternoon when his father took him to discover ice.

"பல ஆண்டுகள் ழித்து, துப்பாக்கிப் படையை எதிர்கொண்ட போது, கொலோனல் ஆர்லியானோ புயந்தியா, அவனது தந்தை முதன்முதலில் பனிக்கட்டிகளைப் பார்க்க அவனை அழைத்து சென்ற நெடுந்தூரத்து  பிற்பகலை நினைவுகொள்வான்..." இது துல்லியமான மொழிப்பெயர்ப்பா என்பது தெரியாது. ஆனால் இது மிகவும் பிரசத்தி பெற்ற கெப்ரியல் கார்சியா மார்க்வெஸ் -சின் ஒரு நூற்றாண்டுகாலத் தனிமை நாவலின் துவக்க வரிகளாகும். உலகில் சிறந்த 100 புத்தகங்களுக்கான பல பட்டியல்கள் உள்ளது. அதில் அநேகமாக எல்லாவற்றிலும் இடம்பெறக் கூடிய புத்தகம் ஒரு நூற்றாண்டுகாலத் தனிமை. நாவல் மட்டுமல்ல, மேலே கொடுத்துள்ள நாவலின் துவக்க வரிகளும் மிகப் பிரபலம். உலகில் எழுதப்பட்ட நாவல்களிலேயே சிறந்த துவக்க வரிகளைக் கொண்ட நாவல்களின் பட்டியல்களிலும் இது இடம்பெறுகிறது. ஒரு நாவல் அல்லது ஒரு கதைக்கு துவக்க வாசகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு பாடமாக இதைக் குறிப்பிடுகிறார்கள்.

நாவலை முழுவதுமாக படித்து முடித்தவர்கள் மீண்டும் இந்த முதல் அத்யாயத்தைப் படிக்கும் போது இந்த முதல்வரியானது எவ்வளவு திறப்பைக் கொடுக்கும் என்பது ஆச்சர்யமாக இருக்கும். நாவலை கடைசி அத்யாயத்தை முடித்துவிட்டு, அதன் மயக்கத்திலிருந்து வெளிவர விருப்பமின்றி மீண்டும் முதல் பக்கத்திலிருந்து வாசிக்கத் துவங்கிய வெகு சில புத்தகங்களில் நூற்றாண்டுகாலத் தனிமையும் ஒன்று.

இப்போது அந்த முதல் வரி நமக்கு சொல்லும் சங்கதிகளை பார்ப்போம்.

 - இப்போது பேசப்படும் காட்சி தாண்டி பல வருடங்கள் கதை நீளப்போகிறது  - கதையின் ஒரு மைய பாத்திரம் ஆர்லியானோ புயந்தியா  - அவன் ஒரு கொலோனல்  - ஒரு கட்டத்தில் அவன் எதிரியின் துப்பாக்கி கொலையாளிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது...தோல்வியின் காரணமாக இருக்கலாம்  - அவரது தந்தையைப்பற்றி தெரியவருகிறது, அவர் புதியவைகளைத் தேடிச்செல்லக்கூடிய ஆளாக இருந்திருக்கலாம்  - ஒரு நாஸ்டால்ஜியா வின் கூறு முதல்வரியிலேயே இருக்கிறது

இப்படி ஒரு வரியே நாவலுக்குள் எட்டிப்பார்க்க ஒரு சாளரமாக அமைந்திருக்கிறது. இந்தவரி பற்றி ஒரு கதை சொல்வார்கள்.

அப்போது மார்க்வெஸ் ஒரு நாவல் எழுதுவதற்கான கருவோடு அலைந்துகொண்டிருந்தார். ஆனால் அதை எழுதுவதற்கான மொழியும், நடையும் அமையப்பெறாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு நாள் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செல்லும்போது சட்டென்று இந்த வரி அவர் மனதில் தோன்றியது "Many years later, as he faced the firing squad, Colonel Aureliano Buendía was to remember that distant afternoon when his father took him to discover ice." கொன்சமும் தாமதிக்காமல் வண்டியை அபடியே வீட்டிற்கு திருப்பினார். சில சிகரெட் பாக்கட்டுகளை மட்டும் வாங்கிக்கொண்டு, ஒரு அறையில் தன்னைப் பூட்டிக்கொண்டு தொடர்ந்து 18 மாதங்கள் தினமும் எழுதி அந்த நாவலை முடித்திருக்கிறார்.

அதற்கு நடுவில் அவரது காரை விற்று குடும்ப செலவுக்கு அதை பயன்படுத்தினார். அத்யாவிசிய பொருட்களெல்லாம் கடனில் வாங்கப்பட்டது. வீட்டு உரிமையாலருக்கு கூட 9 மாத பாக்கி. தினமும் ஒரு சில நண்பர்கள் மட்டும் அவரை வீட்டில் சந்திப்பார்கள். அவர்களிடம் நாவலின் முன்னேற்றம் பற்றி விவாதிப்பார். இப்படியாக நாவலை முடித்தபின் அதற்கு ஒரு பதிப்பாசிரியரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதியாக ஒரு பதிப்பாளர், அதை வாங்கி படித்துப்பார்க்க சம்மதித்தார். அத‌னால் அவர் வைத்திருந்த கையெழுத்துப் பிரதியை அவருக்கு அனுப்பச்சொன்னார். பிரச்சனை என்னவென்றால் மார்க்வெஸ் எழுதிமுடித்திருந்த கையெழுத்துப் பிரதி அதிக எடை இருந்தது. அவ்வளவு எடையை தபாலில் அனுப்ப அவரிடம் பணம் இருக்கவில்லை. ஒரு யோசனை தோன்றியது. கையெழுத்துப் பிரதியில் ஒரு பாதியை மட்டும் அனுப்பும் அளவு காசு இருன்ந்ததால், முதலில் ஒரு பகுதியை அனுப்பலாம். பதிப்பாளருக்கு பிடித்திருந்தால் அவரிடமே பணம் வாங்கி மறுபாதியை அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

பகுதி பிரதியையும் அனுப்பிவிட்டார். அதன்பிறகு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தான் தெரிந்தது. அவர் அனுப்ப நினைத்த முதல்பாதிக்கு பதிலாக, இரண்டாம் பாதியை தான் தபாலில் அனுப்பிவிட்டு வந்திருப்பதாக. நூற்றாண்டுகாலத் தனிமை நாவலில் வரும் சம்பவங்கள் போலவே அவரது வாழ்கை சம்பவங்களும் அமைந்திருப்பதொன்றும் தற்செயல் இல்லை அல்லவா?

சனி, 1 அக்டோபர், 2016

பேலியோ உணவுமுறை

அக்டோபர் 1. சென்ற வருடம் இதே நாள் தான் பேலியோ உணவுமுறையை கடைபிடிக்கத் துடங்கினேன். அப்போது எனது எடை 84. எனது அதிகப்படியான எடை எனக்குத் தெரிந்து 86.5 வரை இருந்திருக்கிறது. அதாவது குனிந்து ஷூ லேஸ் கட்டுவது சிரமமாக இருப்பதால் தொடர்ந்து கட்ஷூக்களை மட்டுமே சில வருடங்களாக பயன்படுத்தி வந்திருந்தேன். 

நண்பர் உமாநாத் பாரிஸ் வந்திருந்த போது 2 நாட்கள் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது பேலியோ பற்றி சொன்னார். அவர் நயந்தாரா ரசிகராக இருக்கக்கூடும். அதை நயந்தாரா டயட் என்று தான் அறிமுகப்படுத்தினார். அதே வாரத்தில் நண்பட் பாலகணேஷ் பேலியோவில் தனது 6 மாத பயணத்தை முடித்து (சிகிச்சைக்கு)முன் - பின் பாணியில் ஆரோக்கியம் & நலவாழ்வும் முகநூல் குழுவில் தனது புகைப்படத்தை போட்டிருந்தார். உடனே ஆவல் பற்றிக்கொண்டது. 

சரி, கேட்டுத் தெரிந்துகொள்ள மிக அருகிலேயே source இருக்கிறதே என்ற நம்பிக்கையில், உடனடியாக பேலியோவில் குதித்தாகிவிட்டது.  அப்போது எடைகாட்டும் இயந்திரத்தைக் கூட வாங்கியிருக்கவில்லை. அக்டோபர் 1 முதலே உணவுமுறையை மாத்தியாகிவிட்டது. தொடர்ந்து பேலியோ குறித்து முகநூல் குழுவிலும் வேறு இடங்களிலும் படித்தவண்ணம் டயட்டைத் தொடர்ந்தாகிவிட்டது. 

முதல் மாதம் பாலகனேஷ் கொடுத்த டயட் சார்ட் தான். 
காலை - 3 முட்டை, ஒரு டம்ளர் பால் சர்க்கரை இல்லாமல். 
மதியம் - 300 கி காய்கறி (பொறியலாகவோ, அல்லது வெறுமனே காய்கறியோ)
மாலை - ஒரு 5 மணிக்கு, ஒரு 50 பாதாம் 
இரவு - கோழி, ஆடு, மாடு அல்லது பன்றி ஏதோ ஒன்று கிரில்லோ, அல்லது ட்ரையாக செய்தது 
பசி இருந்தால் மீண்டும் ஒரு பால், சர்கரை இல்லாமல். 

எடைகாட்டும் இயந்திரத்தை வாங்கிவைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு இரண்டுமுறையேனும் ஏறி நின்று எடைகுறைந்ததா என்று தேவுடு காத்துக்கொண்டிருந்தேன். ம்ஹூம்...3 வாரங்கள் வரை ஒரு மாற்றமும் இல்லை. அதன்பிறகு தான் ஒரு 1.5 கிலோ குறைந்தாற்போல் இருந்தது. 4 வாரங்கள் வரை cheat செய்யாமல் 4ம் வார இறுதியில் சிரப்பாக ஒரு சிக்கன் பிரியாணி செய்து ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டேன். திவ்யம். 

ஒரு மாதம் கூட டயட்டைத் தாங்க மாட்டேன் என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்கே ஆச்சர்யமாக இரண்டம் மாதமும் மூன்றாம் மாதமும் டயட்டைத் தொடர்ந்தேன். 80களில் இருந்து எடை 70களில் பயனத்தைத் தொடங்கியது. 3 மாத அளவில் எடையானது 78.5 இல் வந்து அப்படியே  நின்று போனது. எந்த ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை. இந்த நேரத்தில் குழுவில் என் சந்தேகங்களைக் கேட்கவும், பால், வெண்ணை வகையரக்களை கைவிட சொன்னார்கள். காலை சர்கரை இல்லாத காபி மட்டும் எடுக்கலாம் என்று சொன்னார்கள். அதன்படி டயட்டை மாற்றி அமைத்தேன். 

காலை: ஒரு 250 மி.லி. சர்கரை இல்லாத பால் இல்லாத காபி. இது கிட்டத்தட்ட 0 கார்ப் ஆகும். 
மதியம்: 300 கிராம் கேரட் + 3 முட்டை 
இரவு : அரை அவகெடோ பழம் + கோழி, ஆடு, மாடு அல்லது பன்றி ஏதோ ஒன்று கிரில்லோ, அல்லது ட்ரையாக செய்தது 

மற்றுமில்லாமல் நாளின் கடைசி உணவிற்கும், அடுத்த நாளின் முதல் உணவிற்கும் இடையே எவ்வளவு இடைவெளி விடுகிறோமோ அந்த அளவுக்கு கொழுப்பை கரைக்கும் வேலை நன்றாக நடைபெறும் என்பதை தெரிந்துகொண்டேன்.  அதனால் அதிகபட்சம் 10 மணிகுள்ளாக இரவு உணவை முடித்துக்கொள்வது. 

இவ்வாறு கடைபிடித்துவர, எடைக்குறைப்பு மீண்டும் ஏற்பட்டது. 78இல் இருந்து மெல்ல 76, 75 என்று, குறைந்த பட்ச எடையாக 72.6 வரை 6 மாதத்தில் அடைய முடிந்தது. கிட்டத்தட்ட 12 கிலோ எடை இழந்து,  சுற்றி இருப்பவர்கள் ஆச்சர்யமாக கேட்கத்தொடங்கினர். சிலர் உடம்புக்கு ஏதாவதா என்றும் கூட கேட்டார்கள். ஃப்ரான்ஸில் கண்ணையும் வாயையும் கவரும் பல பத்தீசரி உணவுகள் உண்டு. அவைகளைக் கடந்து கார்ப் அற்ற டயட்டைக் கடைபிடித்தது ஒரு ஆண்மிக செயல் போலவே இருந்தது. 

அதன்பிறகு எனது 36 அளவிலான புதிய ஃபேண்ட்டுகளைக் கூட சந்தோஷமாக சேரிட்டிக்கு எடுத்து கொடுத்தேன். மற்ற சில விருப்பமான ஃபேண்டுகளையும், கோட்டுகளையும் ஆல்டர் செய்தேன். பழைய கல்லூரி கால லுக்கிற்கு திரும்ப நேர்ந்தது. எனது ஷூக்கள் கூட ஒரு சைஸ் குறந்தது போலவே இருந்தது. இந்தமுறை நான் லேஸ் வைத்த ஷூக்களை வாங்கினேன். லேஸ்கள் கழறும் போது அது சிரமமாக தோன்றவில்லை. சிலிம் ஃபிட் துணிகளைப் போட தன்னம்பிக்கை வந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படப்போகும் பெருந்தை ஓடிச்சென்று நிறுத்தச்சொல்ல முடிந்தது. 

ப்ரிடயபெடிக்கிலிருந்து, வழக்கமான டயபெடிக், உயர் ரத்தழுத்தம் என்று வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கான பாதையில் பயனித்துக்கொண்டிருந்த நான் சட்டென்று ஒரு சில மாதங்களில் மிகவும் ஆரோக்கிய பிரக்ஞையுள்ள பேர்விழியாக ஆனதன் க்ரெடிட் அளிக்கப்பட வேண்டியது ஆரோக்கியம் & நலவாழ்வு குழுவிகிற்கே. முகநூல் மூலமாக எனக்கு என்ன கெட்டதெல்லாம் நடந்ததோ தெரியாது, நேரவிரையம் உட்பட...ஆனால் அதில் நடந்த ஒரு மிகப்பெரிய விஷயமாக நான் இதைத் தான் சொல்லுவேன். 

இன்றோடு பேலியோவில் ஒராண்டு முழுமைபெறுகிறது. இது நான் சற்றும் எதிர்பாராதது. இதில் அதிக சந்தோஷம் கொடுப்பது எதுவென்றால்...நான் எப்படி பாலகணேஷைப் பார்த்து ஊக்கம் பெற்றேனோ, எப்படி என்னைப் பார்த்து இப்போது ஒரு 5 பேராவது என்வட்டத்தில் பேலியோவை என்னைவிட தீவிரமாக கடைபிடிக்கிறார்கள். ஆமாம் பின்ன, சமூகத்திடமிருந்து நாம் எடுத்துக்கொள்வதை திரும்ப கொடுத்தால் தானே அது முழுமை அடைவதாக அர்த்தம். 


                                                                            ****

எடைக் கண்கானிப்புப் பலகைகுறந்தபட்ச எடை 72.0

புதன், 28 செப்டம்பர், 2016

கோவை கலவரங்கள் (2)

ஓரிரண்டு மாதங்கள். இயல்பு நிலை திரும்பி விட்டது என்று சொல்ல முடியாது. ஆங்காங்கே ஒரு 500 மீட்டர்  தூரத்தில் ஒரு போலீஸ் வீதம் ஒரு நாற்காலி போட்டு உக்கார்ந்து கொள்வது வாடிக்கையாக இருந்தது. எல்லாம் பெரும்பாலும் வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார்கள். அவர்கள் இருக்கைக்கு அருகிலே இருந்த வீடுகளில் கடைகளில் அமர்ந்தும், பேசியும் மிகவும் அன்ன்யோன்யம் ஆகிவிட்டிருந்தார்கள். அவர்கள் குடும்பக் கதைகளெல்லாம் பேசும் அளவுக்கு நேரம் இருந்தது. சிலர் பிள்ளை குட்டிகளைப் பிரிந்து வந்து அவதிப்படுவதாக சலித்துக்கொண்டனர். இந்த நிலையில் தான் படிப்படியாக போலீஸ் பாதுகாப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தன.

1998 இல் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் அறிவித்திருந்தார்கள். அதிமுக மற்றும் பா.. கூட்டணி. கோவை பா.. விற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த நேரம். ஃபெப்ருவரி 18ம் தேதி எல்.கே.அத்வானி கோவை வருவதாக ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சுற்றும் உள்ள சிறிய ஊர்களிலெல்லாம் ஆட்களை சேர்க்க பிரயத்தனம் இருந்தது. எங்களூரில் முன் பின் பெரிய பா.. அபிமானிகளாக இருந்திராதவர்கள் கூட அத்வானி கூட்டத்தில் பங்கேற்க ஆவலாக இருந்தார்கள்.

ஃபெப்-18 5 மணியளவிலெல்லாம் அச்செய்தி முழுவதுமாக பரவியிருந்தது. அத்வானி பேசுவதாக இருந்த இடத்தில் இருந்து 500மீ தொலைவில் குண்டு வெடித்தது. அதே சமயத்தில் நகரின் பல்வேறு இடங்களில் ரயில் நிலையம், வெரைடிஹால், ராஜராஜேஸ்வரி டவர் என்று பல இடங்களில் குண்டுகள் வெடித்தது. உயிசேதங்கள் பற்றி தெரியவில்லை ஆனால் சாலை எங்கும் காயம் பட்டவர்கள் கிடந்ததாக பார்த்தவர்கள் சொன்னார்கள். சிற்றூர்களிலிருந்து கோவைக்கு வேலைக்கு சென்றவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று அனைவரும் கலவரமடைந்து போனார்கள். என் அப்பா கோவை வெரைட்டி ஹால் சாலையில் இந்தியன் வங்கியில் பணியில் இருந்தார். மாலை டீ அடிப்பதற்காக  வெளியே வந்தார். அந்த சமையம் தான் வெரைட்டி ஹால் ரோட்டில் குண்டு வெடித்து எல்லோரும் சாலையில் குவிந்துவிட்டிருந்தனர். எல்லோரும் திரும்பி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு ரயில்னிலையம் நோக்கி மக்கள் ஓடினர். அந்த சமையத்தில் ரயில்நிலையத்திலும் குண்டு வெடித்தது. செய்வதறியாது மக்கள் சிதறியோடினார்கள். அவரவர் கிடைத்த ரயிலைப் பிடித்து கொஞ்சதூரம் சென்றால் போதும் என்று போகாலானர்கள். அன்று இரவு 8 மணிக்குள்ளாக 10க்கும் மேற்பட்ட குண்டுகள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் வெடித்திருந்தன.

பணியிடத்திற்கு சென்ற பலரும் வரும் நேரம் ஆகியிம் வீடு திரும்பவில்லை. அனைவரது முகத்திலும் ஒரு பாதுகாப்பின்மை அப்பிக்கிடந்தது. வழமையாக 7 மணிக்கெல்லாம் வீடு திரும்பும் என் அப்பா தினமும் வரும் பேசஞ்சர் ரயிலி வரவில்லை. ரயில் நிலையத்தில் குண்டுவெடித்திருந்தது என்ற செய்தியை அறிந்திருந்தோம். சரி பேருந்தில் வருவார் என்று நம்பி காத்திருந்தோம். ஒரு சித்தப்பா அத்வானியின் கூட்டத்தில் கலந்துகொள்ள போயிருந்தார். அவருக்கும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆளாளுக்கு ஒரு திசையில் எங்கெங்கோ யாரிடமோ கேட்கச் சென்றார்கள். வீட்டுப்பெண்கள் தெரு முனைகளில் கூடிக் கூடி முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். அது செல்ஃபோன்களின் காலம் இல்லை. யாரவது ஊர்க்காரர்களைப் பார்த்தால், 'வீட்டில் ஒரு தகவல் சொல்லீருங்க' என்று யாரவது மூலம் சொல்லிவிட்டிருந்தால் தான் உண்டு

இரவு 8:45 மணிக்கெல்லாம் கூட்டத்துக்கு போன சித்தப்பா திரும்பி வந்தார். அவர்கள் கூட்டம் நடக்கும் இடத்தை நெருங்கவே முடியவில்லை என்றும், அதற்கு முன்னே குண்டு வெடித்துவிட்டதால் எல்லோரும் கலைந்து வந்துவிட்டதகவும் சொன்னார். இரவு 10 மணியாகியும் அப்பா வீடு வரவில்லை. சொல்லத்தெரியாத ஒரு மனநிலையில் அனைவரும் காத்திருந்தோம். யாரும் சாப்பிடிருக்கவில்லை. பசியில்லை. கடைசியாக, 10:30 மணியளவில் அப்பா தினமும் வீடு சேருவதுபோலவே இயல்பாக வந்துகொண்டிருந்தார். வீட்டு முனையில் அவர் தலை தென்பட்டதும் பெரிய ஆசுவாசம் ஏற்பட்டது. சற்று நேரத்திற்குமுன் நிலவிய பதற்றம் எதுவும் இல்லாதது போல கண நேரத்தில் எல்லாரும் இயல்புக்கு திரும்பினோம்

அப்பா டீ குடிக்க வெளியே வந்தபோது குண்டுவெடிப்பு செய்திகேட்டு ரயில்நிலையம் சென்றிருக்கிறார். அங்கும் அப்போது குண்டுவெடித்திருக்கிறது. ரயில் நிலையம் கலவரமடைந்தது. அப்போது கோவை வந்திறங்கிய வண்டிகள் நகரத்துக்குள் போக பயந்து அடுத்தடுத்து இருந்த வேறு ஊர் ரயில்களில் ஏறி வெளியானார்கள். அப்படி ஒரு குடும்பம் எங்கள் அப்பா ஏறிய ரயில் பெட்டியில் அகப்பட்டுக்கொள்ள, அவர்களது உறவினர் யாரோ எங்கள் ஊரில் இருப்பதாக அவர்கள் சொல்லியுள்ளனர். ஆனால் சரியாக இடம் தெரியாது என்று சொல்லவே, அப்பா அவர்களை வீடு விசாரித்து கொண்டுபோய் விட்டுவிட்டு வர இவ்வளது தாமதமாகிப்போனது.

மறுநாள் செய்தித்தாளில் 12 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்ததாகவும், 60 பேருக்கு மேல் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓரிரு இடங்களில் குண்டு வெடிக்கத்தொடங்கிய உடனே, முஸ்லிம்கள் தான் இதை செய்தார்கள் என்ற பரப்புரையை மதவாத சக்திகள்  முடுக்கிவிட்டார்கள். குண்டுகளை விட அதிதீவிரமாக இந்த தீ பரவ ஆரம்பித்து, சாயிங்காலத்திலிருந்தே முஸ்லிம் நிறுவனங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. பல அடுக்கு மாடிகொண்ட ஷோபா துணிக்கடை முற்றுமாக தீக்கிரையக்கப்பட்டது. இன்னும் பல சிறு மற்றும் பெறும் வணிகங்கள் அடித்துடைக்கப்பட்டன. தற்காத்துக்கொள்ளும் விதமாகவும், எதிர்தாக்குதலாகவும் முஸ்லிம் தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடந்தன. ஒட்டுமொத்தமாக ஒரு இந்து-முஸ்லிம் துவேஷம் கோவைத் தெருவெங்கும் கைவீசி உல்லாசமாக நடந்தது.

எப்போதும் தயார் நிலையில் இருந்த முஸ்லிம் எதிர்ப்பு மனோபாவம் முன்னெப்போதும் இல்லாதபடிக்கு அதிகமாக இருந்தது. அதை உபயோகப்படுத்த மதவாதிகள் கொஞ்சமும் தவறவில்லை

எங்கள் எதிரிலேயே அப்போதுதான் விடலைப்பருவம் கடந்துவந்த பையன்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டு சங்க் நடவடிக்கைகளில் ஈடுபடச்செய்தனர். தற்காப்பு என்ற பெயரில் வன்முறைகளை கஒயில் எடுக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. போலீசார் நம் பக்கம் என்பதைப்போல எடுத்துக்கொள்ளப்பட்டது. மீண்டும் இஸ்லாமியர்கள் , இந்துக்கள் என்று பிரிந்துபோன சமூகமாக இருந்தது. முஸ்லிம் என்பது ஒரு அந்நியரைக் குறிக்கும் சொல்லாகவே பார்க்கப்பட்டது. இதில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால், பள்ளிகளில் நாங்கள் தினமும் எதிர்கொள்ளும் முஸ்லிம் மாணவர்கள் கூட மிகவும் அமைதியானவர்களாக, அனைவருடனும் பேச மறுத்தவர்களாகவும், ஆனால் ஆயிரம் கேள்விகளை கண்களின் தாங்கியவர்களாகவும் இருந்தனர். அவர்களை பரஸ்பரம் எதிர்கொள்வதென்பது சாதாரணமாக இருக்கவில்லை

எனக்கு மிகவும் பரிட்சையமான நெருக்கமான இரண்டு அண்ணன்கள் சிவாவும், பாலனும் சங்க் மூளைச்சலவைக்கு ஆளானார்கள். அவர்கள் ஆற்றிய உரைகளையெல்லாம் அப்படியே வீட்டில் வந்து ஒப்பிப்பார்கள். இப்படியாக ஒரு கருத்தாக்கம் எல்லர் வீட்டளவிலும் நடைபெற்றிருக்கக் கூடும். இந்துக்கள் சொந்த நாட்டிலே பாதுகாபற்று இருக்கிறார்கள் என்று பொய்யான ஒரு தோற்றத்தை அவர்களிடம் நம்பவைத்தார்கள். நமது வியாபரங்களை, வேலைவாய்ப்புகளை அவர்கள் தட்டிப்பறித்து விட்டனர் என்று சொல்லப்பட்டது. அவர்கள் பாகிஸ்தானுக்கே செல்லவேண்டும் என்று கூறப்பட்டது. அரும்பு மீசை மட்டுமே முளைத்த இளம்தலைமுறையினரிடம் ஆய்தங்கள் கொடுத்தது, இன்னொருவரை அடிக்க அதிகாரம் கொடுத்தது, ஜி...ஜி...என்று ஒருவரை ஒருவர் அழைக்கச்சொல்லி அவர்களை சுயமரியாதைதை போலியாக பெரிதுபடுத்திக் காட்டியது. அவர்கள் எப்போதும் (பாதுகாப்புக்காக) கையில் கத்தியோடு இருந்தார்கள், அரிவாள்கள் ப்ரயோகிக்கக் கற்றுக்கொண்டார்கள், நெற்றியில் எப்போதும் சிவப்பு அணிந்திருந்தார்கள். இரவுகளில் கோவில்களை பாதுகாத்தனர், தெருமுனைகலில் ஆட்கள் மாறிமாறி ரோந்து செய்தனர். இஸ்லாமியர்கள் கிடைத்தால் பேர் கேட்டு அடித்து உதைத்தனர்

மீண்டும் போலீஸ் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. மீண்டும் தெருமுனை எங்கும் போலீஸார். சற்று நேர்மையான போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கலவரம் செய்வதாக அறியப்படும் இளைஞர்கள் சிறையில் வைக்கப்பட்டார்கள். ஆனால் பெரும்பாலும் பிடிக்க வரும் முன்னே செய்தி தெரிந்துவிடும். சிவாவும், பாலனும் பெரும்பாலும் ஒதுக்குப்புறமாக இருந்த எங்கள் வீட்டில் வந்துதான் தஞ்சம் இருந்தனர். மொட்டையடித்தும், மீசையை வழித்தும் அடையாளங்களை மாற்றிக்கொண்டு வலம் வந்தனர். அவர்களுக்கு கட்டளைகள் வழக்கிக்கொண்டிருந்த மேல் மட்ட கட்சிக்காரர்கள் போலீசாரல் கைது செய்யப்படவே இந்த சிறுபையன்கள் செய்வதறியாது மாத கணக்கில் முடங்கிக்கிடந்தனர்

ஒன்றிரண்டு மாதங்களாக வேலைகளுக்குப் போகாததால் பார்த்துவந்த வேலையும் பரிபோனது. பிரிவினை வாசனைகள் மெல்ல மெல்ல அகன்றுபோக சில மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட ஆனது. புதிய வேலையில் சென்று சிவா அண்ணன் சேர்ந்தான். பாலன் அவரது பனியன் கடையை மீண்டும் தொடங்கினார். ஒரு நாள் நைட்ஷிஃப்ட் முடித்து வீடு திரும்புகையில், சிவா மர்ம நபர்களால் தாக்கி வீழ்த்தப்பட்டான். உருட்டுக்கட்டையால் தலையில் அடிக்கப்பட்டு, அதன்பின் கத்தியால் 14 முறை குத்தப்பட்டான். யாரோ அங்கு வந்துவிடவே அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். குற்றுயிராக வீட்டிற்கு எடுத்துவரப்பட்டான் சிவா அண்ணன். 3 மாதம் வைத்தியம் பார்க்கப்பட்டது. எச்சில் துப்பும் போதுகூட எங்கிருந்தோ உள்ளில் ரத்தம் கசிந்துகொண்டே இருந்தது. அதிஷ்டவசமாக உயிருக்கு ஆபத்தில்லை. அவன் அதிலிருந்து குணமடைய இரண்டு வருடங்கள் ஆனது

கோவைக் கலவரங்களைத் தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.. வெற்றி பெற்றது. பா.. விற்கு கோவை ஒரு இன்றியமையாத ஒரு இடத்தைப் பெற்றுக்கொடுத்தது. ஷோபா நிறுவனம் மட்டுமல்லாது கோவையில் அப்போது விழுந்த பல தொழில்கள் பின் எழுந்திரிக்கவே இல்லை. இப்போது அந்த இடத்தில் போத்தீஸ் நிற்கிறது. இன்று சிவா அண்ணன் ஒரு மதுவிடுதியில் உபசரிப்பாளராக இருக்கிறார். பாலன் பனியன் கடை, இளனிக்கடை என்று ஏதெல்லாமோ வைத்துப்பார்த்தார். திடீரென்று நோய்வாய்ப்பட்டு உடல் பலகீனமாகி இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போனார். இதுவெல்லாம் வெறும் தற்செயலாக நடந்தது என்று நம்பினால் நமது அரசியல் அறிவை மறுபரிசீலனை செய்வதென்பது அவசியம்

சென்றமுறை நடந்த நகரமன்றத் தேர்தலில் எங்கள் நகரமன்றத்தில் .தி.மு., பா.. மற்றும் இன்ன பிற கட்சிகள் நின்றன. அப்போது தான் சில மாதங்களுக்கு முன் .தி.மு. பலத்த வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஞாயப்படி நகரமன்றத் தலைவர் பதவி .தி.மு. விற்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கு ஒரு தவறு நடந்தது, .தி.மு. சார்பில் நின்றது ஒரு இஸ்லாமியர். வென்றது அத்தனையொன்றும் பிரபலம் இல்லாத .. வேட்பாளர். .தி.மு. வாக்குகள் உட்பட பா.. அணிக்கே விழுந்தது. இது தான் கோவையின் மனசாட்சி. அதனால் தான் தற்போது இந்துமுன்னனி கட்சிக்காரர் கொல்லப்பட்ட போது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கவில்லை. ஆனால் முன்னைப் போல அல்லாது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மதவாதிகளால் ஓட்டுக்கட்சிகளால் எழுதப்பட்ட துல்லியமான திரைக்கதையை அரங்கேற்றும் தோல்பாவைகளாய் பொதுமக்கள் இருந்துவிடக் கூடாது!

                                                     * * * * *