இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 நவம்பர், 2007

ரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை


ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்த சமையத்திலேயே தமிழில் தணிக்கைக் குழுவால் A சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படம் அது. நான் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு புரிதல்கலையும் படிப்பினைகளையும் வழங்கிவந்து கொண்டேதான் இருக்கிறது.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி உலகத்துகான தமிழ்த்திரைப்படம். எந்த வகையிலும் உலகத் திரைப்படங்களுக்கு ஒப்பாக சொல்ல்க்கூடியது. அப்படியொரு துல்லியமான திரைக்கதையை கண்டு நான் பிரம்மித்தது கிடையாது. அதுவரை...இல்லை இன்னும் இதுவரை செய்யப்படாத சோதனைகளை இயக்கத்திலும், திரைக்கதையிலும் பிரையோகிக்கப் பட்டிருக்கும். என்னைக் கேட்டால் திரைப்பட பிரியர்களால் மறுபார்வைக்கும் விவாதத்துக்கும் உரிய சினிமா என்று சொல்லவேண்டும்.

கதை, இந்தியா சுதந்திரம் பெறுவத்ற்கு முந்திய காலகட்டங்களில் நடக்கிறது. அடிமைத்தனமும், வேலையின்மையும், அறியாமையும் ஓங்கியிருந்த காலம். நாகரீகம் எட்டிப்பார்க்காத சிறு கிராமங்களில் ஒன்றாக இருக்கிறது வண்டிச்சோலை கிராமம். படிப்பறிவும், நாகரீகமும் குன்றியிருந்த போதும் பண்பாடும், உயரிய நல்லறமும் நடத்திவந்த எளிய மக்கள். ஆண்கள் என்றால்
கோவணம் அல்லது டவுசர். பெண்கள் என்றால் ஒரு ஒற்றைச் சீலை அவ்வளவே அவர்கள் அறிந்திருந்த உடை நாகரிகம். மற்றபடி ரவிக்கை, பாடி என்ற சொல்லையெல்லாம் யாரவது டவுண்வாசிகள் மூலமாக கேட்டுள்ளார்களே ஒழிய யவரும் கண்டதுகூட இல்லை.


திரிசடை, டவுசர், தலையில் ஒருகூடை என்று தனித்துவம் ஏதும் இல்லாத சாதரண வண்டிச்சோலை வாசி செம்பட்டை. தொழில்முறை காரண‌மாக கிராமத்தைவிட்டு வெளியே வர தேவையும் அவசியமுமின்றி இருந்த மக்களிடையே செம்பட்டை(சிவக்குமார்) உள்ளூர் மக்களுக்கு தேவையானவற்றை டவுனில்(சேலம்) இருந்து வாங்கிவந்து அவர் தரும் சொர்ப்ப காசில் வயிற்றைக் கழுவும் பிழைப்பு நடத்திவருகிறான். அவனது தயவில் வாழும் அண்ணன் சடையன், அண்ணி, அண்ணன் மகள் கருப்பாயி மற்றும் அவனது விதவை தாய்.

இதற்கிடையே செம்பட்டைக்கு நந்தினி என்னும் ஒரு டவுண் பெண்ணுடன் (தீபா) திருமணம் நிச்சயமாகிறது. ந‌ந்தினி சுகபோகமான டவுண் வாழ்கைக்கு பழக்கப்பட்டவள். "செம்பட்டையான் பொண்டாட்டி 8ம் கிளாசு பெரிய படிப்பு படிச்சிருக்காம்ல.." "பொண்ணு டவுண்ல ஒரு மாதிரியாம்ல...அதுதான் இவன் தலையில கட்டிபுட்டானுக" என்றெல்லாம் பரவலாக பேச்சு இருந்தது.
ஆனால் கல்யாணமாகி ஊர் வந்த போது பேசிய வாயெல்லாம் திறந்தவண்ணம் அவளையே பார்த்தபடி இருந்தன, வயது பேதமின்றி. காரணம் தீயைப் போல யாரையும் பற்றிக்கொள்ளும் அவளது அழகு மட்டுமல்ல. அவள் அணிந்திருந்த நாகரிகத்தின் அடையாளமான உடைகள் குறிப்பாக ரவிக்கை, அணிந்திருப்பது தெரியும்படியான பாடி,பாவடை வகையரா. ஒரு கிராமத்துக்குள் செம்பட்டையான் பொண்டாட்டியாக நாகரிகம் தன் முதல் காலடியை பதிக்கிறது.


முதலிரவன்று "இதென்ன சேலைக்குள் சேலை...", "அதென்ன லவுக்கைகுள்ள ஒரு துணி, வெள்ளையா.." என்று பாவாடையையும் பாடியும் குறித்து கேட்கிறான். அவள் "டவுண்லயெல்லாம் இப்பிடி தான் போட்டுக்குவாங்க" என்கிறாள். "இதற்கு முன் இதையெல்லாம் நான் பாத்ததே இல்ல...இந்த உப்புசத்துல எப்பிடித்தான் இத்தனையும் போட்டுகிறையோ...சுத்த பைத்தியக்காரப் பொண்ணா இருக்க" என்று சலித்துக்கொள்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் வாசனை திரவியங்களைத் தடவிக்கொள்கிறார்கள். காமம் தீ போல பற்றிஎறிகிறது. இருவரும் கட்டியனைக்கையில் "டே...மாணிக்கம் !!!" என்று ஒரு பலத்த குரல் கேட்டு அதிர்ந்து போய், அது என்ன சத்தம் என்று விசாரிக்கிறாள். அது தனது பக்கத்துவீட்டு பெண் என்றும் தினமும் தன்
பையனை அடிப்பதால் அவன் வீட்டைவிட்டு பகலில் ஓடிவிடுவதாகவும், இரவானால் அவள் ஒரு கம்பையும் விளைக்கையும் எடுத்துக்கொண்டு அவனை இப்படி அழைத்தவாறே தேடுவாள் என்றும்,இது இங்கு வழக்கமான செயல் என்றும் கூறுகிறான் செம்பட்டை. இருவரும் மீண்டும் தத்தம் உடலில் புதைகிறார்கள்.

செம்பட்டையன் பொண்டாட்டியைக் காணவரும் கிழவிகள் அவளது உடை, கால் மீது காலிட்டு அமர்ந்திருக்கும் தோரனை எல்லம் கண்டு அவளது மாமியாளை நகைக்கிறார்கள். மாமியாள் "இந்தக் கருமத்தையெல்லாம் அவுத்துப் போட்டுட்டு இதக் கட்டிக்க " என்று ஒரு நாட்டுப் புடவையைக் கொடுக்கிறாள். அதை தூக்கி எறிந்துவிடுகிறாள் நந்தினி. தலைமுறை
முரண்பாட்டுக்கான பிரச்சனைகள் அப்போதே துடங்கிவிடுகின்றன.

செம்பட்டை பொண்டாட்டி என்பவள் அந்த கிராமத்துகுள் ஒரு காட்சிப்

பொருளாகவும், புதியதை வரவேற்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கிறாள். பக்கத்து வீட்டுப் பெண்கள் வந்து "இது என்னக்கா? என்று அவளது ஒப்பனைப் பொருட்களைப் பார்த்து கேட்க..." இது வாசன எண்ணை...இது பவுடர், முகத்துல பூசிக்க..." என்று எடுத்து கொடுக்கிறாள். "டவுண்லயெல்லாம் இப்பிடிதான் போட்டுக்குவாங்க" என்று அடிக்கடி சொன்னாள். எல்லோர் பேச்சிலும் செம்பட்டை பொண்டாட்டி ஒரு அங்கமாக ஆகிவிடுகிறாள். அபோதும் திருச்சங்கோட்டான் "என்னங்கடா...
ரொம்ப பண்றீங்க...நானுந்தான் பாத்தேன். எல்லா பொம்பளகிட்ட இருக்கறுதுதான் அவகிட்டயும் இருக்கு" என்பான்.


அந்த‌ ஊர் ப‌ண்ணையார், ப‌யில்வான் எல்லாம் செம்ப‌ட்டையின் மீது மிக‌வும் பாச‌ம் கொண்ட‌வ‌ர்க‌லாக‌ இருக்கிறார்க‌ள். ப‌ண்ணையார் ம‌க‌ளுக்கு ட‌வுண் மாப்பிள்ளைக்கு பேசி முடிக்கிறார்க‌ள். மாப்பிள்ளைக்கு ஏற்றவாறு ட‌வுண் நாக‌ரீக‌த்துக்கு ப‌ழ‌க்ககிக்கச் சொல்லுகிறார்க‌ள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் . ப‌ண்ணையார் வீட்டில் செம்பட்டையிடம் 'இந்த‌ எழ‌வெல்லாம் எங்க‌ளுக்கும்
பிடிக்காது தான்...என்ன‌ செய்ய... நீ உம்பொண்டாட்டிய‌க் கூடிட்டுபோய் ட‌வுண்ல‌ இந்த‌ என்ன‌மோ பாடி, பாவட, பகுடருன்னு எல்லாம் சொல்றாங்கில்ல‌..அத்த‌ வாங்கியா..." என‌ சொல்கிறாள்.
செம்ப‌ட்டையும் ஒரு த‌டைப‌ட்ட‌ பொருளை வாங்கிவ‌ருவ‌தைப் போல் வாங்கி வ‌ந்து கொடுக்கிறான்.

பண்னையார்மகளைப் பெண்பார்க்க வரும் போது அவள் "அம்மா இதை எப்படி போட்டுக் கொள்வது" என்று அவளது புதிய பாடியை அம்மாவிடம் வருகிறாள். "அவளும் அதைக் கைகளில் வாங்கி, முன்னும் பின்னுமாக பார்த்துவிட்டு...எனக்கென்னடி தெரியும். முன்னப்பின்ன போட்டிருந்தா தானே தெரியும். எப்படியோ போட்டுக்க" என்கிறாள்.பெண்ணைப் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்க..."பெண்ணைப் பிடித்திருக்கிறது..ஆனால் அவ பாடி போட்டிருக்கறது தான் பிடிக்கல" என்கிறான். காரணம் அவள் அதுவரை பாடியை ரவிக்கைக்கு மேல் அணிந்திருப்பாள். மாப்பிள்ளை போகும்போது "அதை உள்ளே போடச் சொல்லுங்க" என்று கூறிச்செல்கிறார்.
செம்பட்டை கிராமத்துப் பெண்களுக்கு ரகசியமாக ரவிக்கை, ப்ரா, மை டப்பா போன்ற நாகரிக சுட்டிகளை வாங்கிவருவது வாடிக்கை ஆகிறது. செம்பட்டை‍ - அவன் மனைவி என்ற இருவர் மூலமாக அந்த கிராமத்தில் நாகரிகம் தன் கால்களை பதிக்க விரும்பியது.

இதற்கிடையே ஒருதினம் தன் ஊரிலிருந்து கிராமஃபோனை எடுத்துவருகிறாள் நந்தினி. ஒரு பெட்டி அதையொட்டி அண்டா-வாய் போல ஒரு கருவி. இதிலிருந்து பாட்டு வரும் என்று யாராலும் நம்ப முடியவில்லை. ஆளே இல்லாம எப்பிடி பாட்டுவரும் என்றுகேட்கிறாள் ஒரு மனைவி "ஏ...புள்ள அந்த பெட்டிக்குள்ள ஒருத்தன் படுத்திருக்காம்புள்ள...அவன் தான் பாடுறான்"

"ஏன் மச்சான்...பெட்டிகுள்ள இருக்குறவனுக்கு சோறு தண்ணி யெல்லாம் வேணாமா " இது ஒரு சமர்த்தியமான மனைவி.

அதற்கு புத்திசாலி கனவன் "யாருல இவ...அந்தா குண்டாமாதிரி இருக்குள்ள...அதுல தான் சோறு, கொழம்பு எல்லாம் போடுவாங்க புள்ள".

ஊரே செம்பட்டையான் வீட்டின் முன் கூடுகிரது,கூத்தும் கூச்சலுமாக. கோபமடையும் செம்பட்டையின் தாய் "இதென்னடி குடியிருக்கிற வீடா...இல்ல தேவிடியா வீடா" என கேட்கிறாள். பதிலுக்கு அவள் "எனக்கு தெரியாது...இது உன் வீடு தானே நீயே சொல்லு" என்கிறாள். கோபமடையும் மாமியாள் எரியும் கொள்ளிக்கட்டையால் அவளது தொடையில் சூடு வைத்துவிடுகிறாள்.இரவு வீட்டிற்க்கு வரும் செம்பட்டை நந்தினியை காணவில்லை என்று பதறுகிறான். நந்தினி மாமியாளுக்கு பயந்து எங்கோ ஒளிந்துகொண்டுவிடுகிறாள். இந்த காட்சியில் எப்போதும் காணாமல் போகும் மாணிக்கத்தை அவனது தாய் கண்டுபிடித்து கூட்டிவருகிறாள்.தொடர்ந்து வரும் உளைச்சளால் செம்பட்டை தனியாக குடிசெல்ல தீர்மாணிக்கிறான். ஊர் பெரியவர்கள் பேசி பிரித்துவைக்கிறார்கள். செம்பட்டையின் தாய் "இந்த கெழவியோட அருமை ஒனக்கு ஒருநாள் ஒரைக்கும்ல" என்று கண்கலங்குகிறாள்.


புதிதாக குடிசை அமைத்து தனிக்குடித்தனம் துடங்குகிறான். ஊர் பெரியவர்களை எல்லாம் அழைத்து விருந்தளிக்கிறான். நந்தினியின் அப்பாவிற்கு பழக்கமான ஒரு இளைஞன் ஜீப் வண்டியில் வந்திறங்குகிறான். நந்தினியின் தந்தை அவரை 'மாணிக்கம்' என்றும், (ஆங்கிலேய) துரையிடம் உயர்பதவியில் இருப்பதாகவும் அறிமுகப் படுத்துகிறார். ஒழுங்காக வெட்டப்பட்ட தலைமுடி, செறிவாக மழிக்கப்பட்ட தாடி, சின்னதாக ஒதுக்கப்பட்ட மீசை, குழாய் பேண்ட், சுத்தமாக அயன் செய்யப்பட்ட சட்டை என்று வந்து நின்ற மாணிக்கத்தை வைத்த கண்வாங்காமல் பார்க்கிறாள்
நந்தினி. அவன் அவள் கண்களில் கண்ட இச்சையை அறிந்துகொள்கிறான். அவனது ஒவ்வொறு செய்கைகளையும் நடவடிக்கைகளையும் ரசிக்கலானாள். எதற்கும் ஏற்புடைமையில்லாத நகர மனம் தானாக கனவனோடு ஒத்து மதிப்பிட ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கனவனின் ஒவ்வொரு செயலும் அவளுக்கு அருவருப்பையும் திருப்தியின்மையையும் தருகிறது.

இதற்கிடையில் ஆங்கிலத்துரை துடங்கும் தொழிற்சாலைக்கு வேலைஎடுக்கும் மாணிக்கம் செம்பட்டைக்கு ஊரில் எல்லோரையும் தெரியும் என்பதால் அவனையே ஏஜன்டாக நிர்னையிகலாம் என்று பரிந்துரைக்கிறான். அவன் மூலம் சேரும் ஒவ்வொருவருக்கும் செம்பட்டைக்கு பணம் கிடைக்கிறது.

சில சாக்குபோக்குகலை வைத்து மாணிக்கம் நந்தினியை சந்திக்க செம்பட்டை வீட்டிற்க்கு அவனில்லதபோது வருகிறான். அவளது தந்தை அவளையும் செம்பட்டையையும் கோவில்
திருவிழாவிற்கு வரசொன்னதாக சொல்லுகிறான். அவள் உள்ளே அழைத்து காப்பி கொடுக்கிறாள். அவன் வீட்டை மிக அழகாக வைத்திருப்பதாக சொல்கிறான். அவள் அவன் இடையிடையே ஆங்கிலம் பேசுவது மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறாள். அவன் விடை பெறுகிறான் (டே மாணிக்கம்!!! என்ற பெண்ணின் குரல் அவளுள் உரத்து ஒலிக்கிறது).

பண்ணையார் மகளின் திருமண ஏற்பாடு வேளைகளில் மும்மரமாக இருப்பதால் கோவில் திருவிழாவிற்கு வரமுடியாதெனவும், யாரவது ஒருவராவது போக வேண்டும் என்பதால், நீ வேண்டுமானால் மாணிக்கம் சாரின் ஜீப்‍காரில் போய்வரும்படியும் சொல்லுகிறான் செம்பட்டை.

அந்த மாலைப்பொழுது வருகிறது. எதிர்பார்த்த ஜீப்பில் வராமல் மாணிக்கம் மோட்டார் சைக்கிளில் வருகிறான். மோட்டார் சைக்கிள் பயணத்தில் இருவரது உடலும் அவற்றுக்கே உண்டான இச்சா மொழியில் பேசத்துடங்கிவிடுகின்றன. மலைக்காற்றும் தொலைதுரப் பயனமும் மறைந்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்த செய்தன‌. உணர்ச்சிமிகுதியில் இருவரும் வழியிலேயே கலவியில் ஈடுபடுகிறார்கள் (டே! மாணிக்கம் என்ற பெண்ணின் குரல் அவளுள் உரத்து ஒலிக்கிறது).

"செம்பட்டையான் பொண்டாட்டி முந்தானைல மண்ணு" (அதாவது அவளது முந்தி சுத்தமில்லை, கணவனல்லாது வேறு யாருக்கும் விரிக்கப்பட்டதாக பொருள்படும் சொல்லாடல்) என்று திருச்சங்கோட்டான் சொன்னதாக கேள்விப்பட்டு அவனுடன் சண்டையிடுகிறான் செம்பட்டை. பயில்வான் வந்து தடுத்து விடுகிறார். மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வரும் செம்பட்டைக்கு
அதிர்ச்சி காத்திருக்கிறது. மாணிக்கத்துடன் அவனது மனைவி பகல் கலவியில் ஈடுபட்டிருக்கிறாள். செம்பட்டையைக் கண்ட மாணிகம் தப்பி விடுகிறான். நந்தினி வெறும் மேனியாக இருக்கிறாள். நாகரிகத்தின் அடையாளமாக அவள் சொன்ன அவளது ரவிக்கை,பாடி,பாவாடை எல்லம் தரையில் கிடப்பதை காட்டுகிறார்கள். செம்பட்டை எதுவும் பேசாதவனாக‌வீட்டை விட்டு விலகி நடக்கத்துடங்குகிறான். நந்தினிக்கு அவளது சீலைத்துணி மட்டும் தூக்குக் கயிராகத் தெரிகிறது. ஊர்க்காரர்கள் ஆற்றை நோக்ககி விரைகிறார்கள். அங்கு செம்பட்டை தண்ணீரில் முழ்கி
தற்கொலை செய்துகொண்டிருந்தான்.


ஊரார் எதுவும் பேசாமல் பார்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் செங்கோட்டையான் அடித்து கொன்று விட்டானென்றும், சிலர் வீட்டு விவகாரத்தால் மனமுடைந்து இறந்துவிட்டானென்றும், சிலர் துரை விவகாரதுல ஏதாவது நடந்திருக்குமோ என்றும் பேசிக்கொண்டனர்...யவருக்கும் உண்மையான காரணம் தெரியாமலேயே...

ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் Symbolism த்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு. படம் வந்த காலகட்டத்தில் இப்படியொரு கதைக்கருவைச் சொல்ல வந்ததே மிகப்பெரிய சோதனைமுயற்சி. மக்கள் குறிப்பாக பெண்கள் தங்களது அந்தரங்கத்தை மையமாகக்கொண்ட படம் என்று தவிர்த்துவிட்டிருக்கலாம். ஆனால் படம் முழுக்க சொல்லப்பட்டது
உலகப்பொதுமறையான ஒரு விஷயத்தை. ஒரு கலாச்சார மாற்றத்தை ஒரு சமூகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதை ஒரு சர்ரியலிஸ்ட் போல சொல்ல வந்திருப்பார்கள்.

இங்கு பாடி,பாவாடை என்று சொல்வது வெறும் உள்ளாடைகள் என்ற பொருளில் அல்ல, அது ஒர் குறியீடு. அது ஒரு நாகரிகத்தின் குறியீடு. நந்தினி என்பது புதுமையின் வெளிப்பாடு.

செம்பட்டை என்பவன் ஒரு ஊடகம், அவ்வளவு தான். அவனே மக்களுக்கும் வெளியுலகுக்குமான இணைப்புக்கயிறு. அதனால் தான் புதுமை முதலில் அவனை வந்தடைகிறது (நந்தினியுடனான திருமணம்) .

செம்பட்டையின் தாய் எனப்படுவது ஞாயப்படுத்தப்பட்ட பழமைவாதத்தின் குறியீடு. பழமைவாதத்திலிருந்து திரும்பிச்செல்லுதலுக்கான வழியின்மையின் நம்பிக்கையின் காரணமாகவே செம்படையின் தாய் "அப்புறமும் உசுரோட இருக்கப் போறான்ல‌...இந்தக் கெழவியோட அரும உனக்கு ஒரு நாள் தெரியும்" என்கிறாள்.

"மாணிக்கம்" என்னும் கதாபத்திரம் சமூகத்தால் அடக்கி வைக்கப்பட்ட கருத்தியல் சுதந்திரம். சுதந்திரத்தைத் தேடி தினமும் வெளியே ஓடிச்சென்றுவிடும் 'மாணிக்கம்' என்னும் பக்கத்து வீட்டுப் பையன். கையில் கம்போடு அவன் தாய் அவனைத்தேடுகிறாள். கம்பு என்பது அதிகாரத்தின் வெளிப்பாடு. லாந்தர் விளக்கு என்பது முன்மொழியப்பட்ட வழிநடத்துதல். இதை வியப்புறும் படியாக கையாண்டு இருப்பது திரைக்கதையில் குறிப்பிடத்தக்க அம்சம். நந்தினி மாமியாரால் காலில் சூடுவைக்கப்பட்டு வீட்டைவிட்டு ஓடி ஒளிந்துகொள்கிறாள். அப்போது சிறுவன் மாணிக்கம்
தாயால் பிடிபட்டுவிடுவதப்போல காட்டியிருப்பார்கள். இது சூடுவைக்கப்பட்ட சம்பவத்தை புதுமையின் மீது அதிகாரத்தின் வெற்றியை குறிப்பிடுவ‌தாகும். பின்னால் ஆங்கிலத்துரையின் அதிகாரியாக வரும் கதாபாத்திரத்திற்கும் 'மாணிக்கம்' என்ற பெயர் சூட்டியதும். நந்தினியின் இச்சை வெளிப்பாட்டின் போது 'டே! மாணிக்கம்' என்ற பெண்குரல் ஒலிப்பதும் இயக்குனரின் மேதமையை விளக்கும் உத்திகள்.

திருச்சங்கோட்டான் (திருச்சங்கோடை சேர்ந்தவன்). இது சேலத்தின் அருகில் அமந்த மற்றோரு பெரிய டவுண். அதனால் அவனுக்கு இந்த புதுமை பழக்கப்படிருந்தது. திருசங்கோட்டான் என்பது இங்கு தயார் செய்யப்பட்ட நடுத்தர மணத்தின் குறியீடு. அவன் எல்லாவற்றிற்கும் ஏற்புடைமை உடையவனாகவும், பாதுகாப்பின்மை உணர்வினால் நடுத்தரமணமுடையவனாகவும் இருக்கிறான்.

திருச்சங்கோட்டான் மனைவி பனைமரத்தில் இருக்கும் தன் கணவனிடம் "இந்தா...எனக்கும் அந்த செம்பட்டையான் பொண்டாட்டி மாதிரி பாடி, பாவாடையெல்லாம் வாங்கித்தருவியா..?" என்று கேட்க கோபமடையும் அவன் இரக்கிக்கொண்டிருந்த கள்ளை அப்படியே அவளது தலையில் போட்டு உடைத்து விடுகிறான்.

நாகரிக உடை சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து முன்னிருத்தப்பட்டாலும் அவை வீண் செலவாக கருதப்பட்டது. இது சமுதாயத்தின் அக்கரையின்மையும், தன்னிலையிலிருந்து மாற விரும்பாத Xenophobia வை காட்டுகிறது. ஒரு வீட்டில் தரையை உரசுமாறு சேலை அணிந்து வாசல் பெருக்குகிறாள் ஒரு பெண். இதைக்காணும் மாமியாள் "தொடப்பம் எதுக்குடீ முண்ட‌...அதான் சீலைலையே கூட்டுறியே" என திட்ட அவள் சீலையை தூக்கி சொருகுகிறாள். அவள் அணிந்திருக்கும் பாவாடை தெரிகிறது. அதிர்ச்சி அடையும் மாமியாள் "இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வேன்...சீலைக்குள்ள இன்னொரு சீல கட்டியிருக்கா..." என்று கூச்சலிடுகிறாள். அதை வாங்க பணம் கொடுத்த மகனையும் "இது வீண் செலவு" என்று கடிந்துகொள்கிறாள்.

படத்தில் வரும் வசனங்கள் மிக நுணுக்கமானதாகவும்,அதீத ஆளுமையுடனும் கையாளப்பட்டிருக்கும். முதல் பாதியில் பண்ணையாரின் சிறிய மகன் விளக்கு எரிந்து சுவற்றில் படிந்த கரியில் செம்பட்டை, நந்தினி என்று எழுதிக்காட்டி சந்தோஷிக்கிறான். நந்தினி மாணிக்கத்திற்கான கள்ள உறவு நடைபெற்று தொடர்ந்து வரும் காட்சியில் முன்பு காட்டப்பட்ட "செம்பட்டை, நந்தினி" என்று விளக்கு எரிந்து படிந்த கரியில் எழுதப்பட்ட 'நந்தினி' என்பது அழிந்து இருக்கிறது. செம்பட்டை 'அது எங்கடா காணோம் என்று கேட்க பண்ணயார் மகன் "அதுல கரி புடிச்சுருச்சு செம்பட்ட...வெளிச்சம் பட பட கரி புடிக்கதானே செய்யும் " என்று சொல்லுகிறான். வெளியுலகிற்கு பிரயத்தனப்படுத்தும் போது அதன் எச்சப்பொருளும் கிட்டதான் செய்யும். புதிய நாகரிகம் வரும் போது அதனூடே நல்லவை கெட்டவையும் வருதல் இயற்கை என்பதை அடுத்த தலைமுறைக்காரன் சொல்வதாக படத்தில் அமைத்திருப்பது படைப்பாளியின் மேதமையைக் காட்டுகிறது.


ஒரு காட்சியில் டவுணிலிருந்து பெட்ரமோஸ் லைட்டை வாங்கி வீட்டில் வைத்திருக்கும் நந்தினியிடம் 'இது என்ன...இப்பிடி கண்ணபரிக்குது' என்பான் செம்பட்டை. அதுக்கு அவள் 'இது கேஸ் லைட்டுங்க...சேலத்துல இருந்து வாங்கியாந்தன்... பாருங்க நம்ம லாந்தர் லைட்டவிட எவ்வளவு பிரகாசமா இருகுன்னு'. அதற்கு செம்பட்டை 'ஆமாமா...அது என்னமோ அப்பிடிதான். லாந்தர் லைடுல இவ்வளவு வெளிச்சமும் வராது..அது கண்ணையும் பரிக்காது' என்பான். இதுவும் கதைக்கருவை Suble ஆக‌ சொல்லும் ஒரு வசனமே.

தமிழ் திரைப்படத்தில் இப்படியொரு சோதனை முயற்சி நடந்ததாகவோ, இப்படிப்பட்ட படங்கள் வந்ததற்கான சுவடோ இப்போதிய படங்களிலோ இயக்குனர்களிடமோ காணப்படுவதில்லை. முன்பு சொன்னதைப் போலவே எந்த காலத்திற்கும் பொருத்தி பார்க்கக்கூடிய திரைப்படமாக உள்ளது. கலாச்சாரத்தின் பேரில் ஞாயப்படுத்தப்பட்ட தவறான வழிகாட்டுதலுக்கு உட்படிருக்கும் தமிழ் சமூகத்தின் பார்வைக்கு வைக்க வேண்டிய திரைப்படம். கடுமையான ஃபாஸிச குண்டாந்தடி கலாச்சாரத்தை கடைபிடிக்கும் தமிழ் கலாச்சாரமும், அதன் விளைவாய் அதிகரித்து வரும் சமூக, பாலின அச்சுரத்தல்களுக்கு தளமக மாறிவரும் தமிழகத்திற்கு மீண்டும் மறுபார்வைக்கு உட்படுத்தவும், விவாத மேடைகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டியதுமான திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.

ஒரு இனத்தின் சமூகப்பார்வை அதன் அரசியல்,கலை,ஆட்சி,பொருளாதாரம் எல்லாத்தோடும் சம்மந்தப்பட்டதே. தமிழக மக்களின்பாலியல் வறட்சியின் காரணமாகவே பல மட்டமான படங்கள் வெற்றிபெற காரணமாக இருக்கிறது. பைசாவுக்கு பிரியோஜனமில்லாத ஒரு மூனாந்தர நடிகர்கூட்டம் ஒரு நன்கு கற்ற தொழில்நுட்பவாதி நினைத்துகூட பார்க்க முடியாத சம்பளங்களை
சாதாரணமாக குவிக்கிறது. பண்பாடு கலச்சாரம் என்று கூவுகிறவர்கள் தங்கள் ஆணாதிக்கத்திற்கு சவுகரியமாக இருக்கும் இந்த நிலைப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளவே அந்த வேஷமிடுகிறார்கள். மேற்கத்திய நாகரிகத்திலிருந்து பிரதியெடுக்கக்கூடாது என்றுவேறு சிலர்.

என்னை சிலர் "மேற்கத்திய மோகம்" என்றார்கள். இருக்கட்டும். தவறில்லை.
லன்டனில் இரண்டாம் காட்சி சினிமா முடிந்து ஒரு பெண் தணியாக வீடு செல்ல முடிகிறது. அவள் மூடியிருக்கும் பார் கதவைத்தட்டி பானம் ஏதாவது கிடைக்குமா என கேட்கிறாள். இரவு 11 மணிக்கும் பேருந்தில் ஒரு பெண் பாதுகப்பாக வரமுடிகிறது. இங்கு போல 20 வயது பெண்ணிற்கு Body guard டாக 11 வயது 'ஆம்பிளை'யை யாரும் துணைக்கு அனுப்புவதில்லை. 20
ஆண்கள் பணிபுரியும் ஒரு கூலித்தொழிலில் இரண்டே பெண்கள் சங்கோஜமின்றி பணிபுரிகிறார்கள்.

அங்கு பெண்விடுதலை பரிபூர்ணமாக சாத்தியப்பட்டிருக்கிறது.

கலாச்சார பாதுகாவலர்களாய் நிற்கும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதற்கான‌ சாத்தியக்கூறுகளே இல்லை. நாட்டின் 40 சதவிகிதம் பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் நடக்கின்றது. துரிக்கியில் ஒரு அழகிய பெண்ணை 1000 அமரிக்க டாலர்களுக்கு வாங்கிவிடலாம். அவளை வைத்து ஒரே இரவில் லட்சங்களை சம்பாதிக்கிறாகள் அந்த pimps. பெண்ணைப் பொத்திபொத்தி வைக்கும் அரபு நாடுகளில் இன்னும் பெண்களை ஒரு commodity யாக விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேலை நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுகுச் செல்லும் இந்தியர்கள்
திரும்பிவருவதேயில்லை என்று நாம் லபோ திபோ என்று அடித்துக்கொள்கிறோம்.அவர்கள் தாயகம் திரும்ப எத்தணிக்காததற்கு அந்நாடுகளில் அவர்களுக்கு சாத்தியமகும் சமுதாய சௌகரியங்கள், பாதுகாப்பு உணர்ச்சி, சிறந்தகல்வி, குறிப்பாக சுதந்திரம்... இவையே காரணம்.

ஒவ்வொரு சமுதாய கலாச்சார மாற்றங்கள் நிகழும் போதும் அதை மக்களுக்கு எடுத்துச்செல்கிற சில செம்பட்டைகளும், நந்தினிகளும் பலியாகத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட இழப்புகளற்ற ஒரு மாற்றத்தை கடந்துவர சாத்தியமாகும் சூழலில் தான் நாம் எதிர்பார்க்கும் நன்மக்களும் நற்சுற்றமும் உருவாக முடியும்.

9 கருத்துகள்:

  1. பிரவீன்
    நல்ல அலசல்!
    வெளிச்சம் - நாகரிகம் Symbolism லாம் நல்ல கவனிப்பு!
    லண்டன்ல இருக்கேனு நினைக்கிறேன்.
    எப்படியிருக்கு லண்டன் மாநகரம்?
    இதே போல "அவள் அப்படித்தான்" விமர்சனமும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு
  2. Praveen,

    i read your blogs.. really amazing... a stuctured, sequal-linked style writting... Worth reading...
    Aanaal antha ezhuthin nadai oru well-known illakiyavaadhiyen saayallil iruppadhaga oru ennam... aanal vaasikka thaguthiyaana ezhuthukkal... Vazhthukkal...hope to see more zeal from u...

    Jana:

    பதிலளிநீக்கு
  3. Excellent Praveen.

    I have not watched this movie. It's very amazing to learn about this movie. Excellent analysis. A very nice post.

    பதிலளிநீக்கு
  4. நன்றி சீனி,

    இந்த கட்டுரை கீற்று இணைய தளத்திலும் வெளியாகியிருக்கிறது...

    சொல்லப்போனால் இது என்னுடைய சிறந்த படைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் நாம் அறிந்த சில விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லியாக வேண்டிய உந்துதல் நம்மை சும்மா இருக்க விடுவதில்லை. என் "மதிலுகள்" பதிவும் இப்படிப்பட்ட உந்துதலால் ஏற்பட்டதே... அதையும் முயற்சி செய்துபாருங்கள். உங்களுக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  5. iyyaaaaa....enakkaga konjam chinna chinna articles eludha koodadha....idha naan padichu mudikardhukulla vidinjidum.....irundhaalum i will complete it and comment again....

    பதிலளிநீக்கு
  6. வெகு அழகான நடை மற்றும் படத்தை அலசியிருக்கும் விதம் அற்புதமாயிருக்கிறது பிரவீண்.இப்பதிவை நண்பர் கார்த்திக் மிகவும் சிலாகித்தார்...இனி நானும்...

    பதிலளிநீக்கு
  7. நன்றி ரௌத்திரன்....

    பரிந்துரைத்த கார்திக்கிற்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  8. திருத்தமான எழுத்து.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. Just happened to come across this review. Very in-depth! Felt happy that I could read something like this.

    பதிலளிநீக்கு