"என்னோடு
தேநீர் அருந்த
ஒப்புக்கொண்டதற்கு
மிகவும் நன்றி
நீங்கள் என்னைக்
காண வந்திருப்பதை அறியும்போது
கூடுதலாக மகிழ்ச்சியடைகிறேன்
உண்மையில்
நாம் சந்தித்து
நீண்ட நாட்கள் ஆகிவிட்டண
ஆரம்பத்திலிருந்த இறுக்கமோ நெருக்கமோ
இப்போது நம்மிடமில்லை
வந்து சேர்ந்த கடிதத்தின் வெறுமையையும்
அழைக்கப்பட்ட தொலைப் பேசியின் மௌனத்தையும்
என்னைப் போலவே நீங்களும் அறியக் கூடும்.
வழக்கத்தைவிட கூடுதலாக நலம் பாராட்டுகிறீர்கள்
இது எனக்கு அச்சத்தைக் கொடுக்கிறது
மேலும் உங்கள் முகத்தில் அதிகமான
குதூகலத்தையும் காண்கிறேன்
எனக்குத் தெரியும்
இந்தச் செய்தி
இதுவரை நீங்கள் கொண்டுவந்ததிலேயே
துயரமானதாக இருக்கக்கூடுமென்பது !".
ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை மொத்தமாக புத்தகம் வாங்குவதில் எனக்கு தொடர்ந்து தொந்திரவு இருந்து வருகிறது. ஒன்று தோள் வலிக்க சுமந்துவரக் கூடிய துரம். மற்றொன்று, ஒவ்வொருமுறையும் நான் விருப்பப்படாமல் வந்து ஒட்டிக்கொள்ளும் சிறு புத்தகங்கள். ஆள் மாறி கொடுக்கப் பட்ட முத்தத்தைப் போல, இவை அன்பற்றும், சுவையின்றியும் வாசிக்கப் படுகிறது. அப்படி இம்முறை மாட்டிக்கொண்ட புத்தகத்திலிருந்து சிலவற்றை...
"என் எளிய பரிசுகளை
நீ மறுக்கும் பொழுது
அதனைத் திருடி வந்தவன் போல
அவமானமடைகிறேன்
என் நீண்ட காத்திருப்பை
நீ புறக்கணிக்கும் சமயம்
புதிதாக கால்களை இழந்தவனாய்
திரும்பப் போகிறேன்
என் ப்ரிய விசாரிப்புகளை
நீ நிராகரிக்கும் கணம்
தீராத வியாதிக்காரணாய்
மாறிப் போகிறேன்"
எந்தக் கவிதையையும் இப்படி இருக்கிறது என்று நிலை தூக்கிப் பார்க்க நான் விரும்பவில்லை...
கவிதை...
வெறும் கவிதை தான்
வேறொன்றுமில்லை...
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
சமாதானம் நிரம்பியும்
கண்ணீரற்றும்
ஒரு பெண் கூட
இன்னும் படைக்கப்ப்டவில்லை !
சமாதானம் நிரம்பியும்
கண்ணீரற்றும்
ஒரு பெண் கூட
இன்னும் படைக்கப்ப்டவில்லை !
யாராலும் காதலிக்கப் படாதவர்கள்
மிகுந்த குற்றவுணர்வோடு நடமாடுகிறார்கள்
பெண்களைப் பார்க்கும் பார்வையில்
பேராசையும் அவநம்பிக்கையும் கலந்திருக்கின்றன
உறுத்தும் தனிமையால்
பூங்காக்களையும் கடற்கரையையும்
தவிர்த்துவிடுகிறார்கள்
ஜோடியாக கடப்பவர்களைக் காண நேர்கையில்
கடவுளைப் பற்றிய வசையைக் கூட்டுகிறார்கள்
காதல் கவிதைகளைப் படிக்க நேர்கையில்
கூடுதலாக பதட்டமடைகிறார்கள்
யாராலும் காதலிக்கப்படாதவர்களை
எளிதில் கண்டுகொள்கிறேன்
அவர்களும் என்னைப் போலவே இருக்கிறார்கள் !
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
கடற்கரையில் காதலிப்பவர்கள்
பிரியும் வேளையில்
உள்ளாடைகள் நனைன்திருக்கின்றன
தியேட்டரில் நீலப்படம் பார்ப்பவர்கள்
எல்லோருமே அதிருப்த்தியுடனே
வெளியேறுகிறார்கள்
தாழ்ப்பாள் பழுதுபட்டிருக்கும்
குளியலறைகளில் கூட
நிர்வானக் குளியலே நடக்கிறது
தனிமையில்
மஞ்சள் புத்தகம் படிப்பவர்கள்
யாரோ வரலாமென்ற
பதற்றத்தோடு காணப் படுகிறார்கள் !
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
சமயங்களில்
நீதிபதிகளின் முகங்கள்
குற்றவாளிகளோடு
பொருந்திப் போகின்றன
வேசைகளின் கற்பு
குடும்பஸ்திரியை விடவும்
ஒழுக்கமானதாக இருக்கிறது
ரோகியின் விரல்கள்
பெரும் செல்வந்தனை விடவும்
சுத்தமாக இருக்கின்றன
ஞானிகளைக் காட்டிலும்
பைத்தியக்காரன்
அழகாய் சிரிக்கிறான்.
உண்மையில் நான் யாருடைய புத்தகமென்று நினைத்து வாங்கினேனோ, அந்த எழுத்தாளனைக் காட்டிலும் சிறப்பாகவே இருந்தது. இவர் கண்டிப்பாக கவனிக்கப் படவேண்டிய எழுத்தாளராகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட அழையா விருந்தாளி புத்தகங்களே இன்னும் என்னை சிறு புத்தகங்களை வாங்க ஊக்கமளிக்கின்றது.
கவிஞர் - க. ஜானகிராமன், இயற்கை பதிப்பகம், விலை ரூ.50
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக