இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 நவம்பர், 2007

ரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை


ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்த சமையத்திலேயே தமிழில் தணிக்கைக் குழுவால் A சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படம் அது. நான் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு புரிதல்கலையும் படிப்பினைகளையும் வழங்கிவந்து கொண்டேதான் இருக்கிறது.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி உலகத்துகான தமிழ்த்திரைப்படம். எந்த வகையிலும் உலகத் திரைப்படங்களுக்கு ஒப்பாக சொல்ல்க்கூடியது. அப்படியொரு துல்லியமான திரைக்கதையை கண்டு நான் பிரம்மித்தது கிடையாது. அதுவரை...இல்லை இன்னும் இதுவரை செய்யப்படாத சோதனைகளை இயக்கத்திலும், திரைக்கதையிலும் பிரையோகிக்கப் பட்டிருக்கும். என்னைக் கேட்டால் திரைப்பட பிரியர்களால் மறுபார்வைக்கும் விவாதத்துக்கும் உரிய சினிமா என்று சொல்லவேண்டும்.

கதை, இந்தியா சுதந்திரம் பெறுவத்ற்கு முந்திய காலகட்டங்களில் நடக்கிறது. அடிமைத்தனமும், வேலையின்மையும், அறியாமையும் ஓங்கியிருந்த காலம். நாகரீகம் எட்டிப்பார்க்காத சிறு கிராமங்களில் ஒன்றாக இருக்கிறது வண்டிச்சோலை கிராமம். படிப்பறிவும், நாகரீகமும் குன்றியிருந்த போதும் பண்பாடும், உயரிய நல்லறமும் நடத்திவந்த எளிய மக்கள். ஆண்கள் என்றால்
கோவணம் அல்லது டவுசர். பெண்கள் என்றால் ஒரு ஒற்றைச் சீலை அவ்வளவே அவர்கள் அறிந்திருந்த உடை நாகரிகம். மற்றபடி ரவிக்கை, பாடி என்ற சொல்லையெல்லாம் யாரவது டவுண்வாசிகள் மூலமாக கேட்டுள்ளார்களே ஒழிய யவரும் கண்டதுகூட இல்லை.


திரிசடை, டவுசர், தலையில் ஒருகூடை என்று தனித்துவம் ஏதும் இல்லாத சாதரண வண்டிச்சோலை வாசி செம்பட்டை. தொழில்முறை காரண‌மாக கிராமத்தைவிட்டு வெளியே வர தேவையும் அவசியமுமின்றி இருந்த மக்களிடையே செம்பட்டை(சிவக்குமார்) உள்ளூர் மக்களுக்கு தேவையானவற்றை டவுனில்(சேலம்) இருந்து வாங்கிவந்து அவர் தரும் சொர்ப்ப காசில் வயிற்றைக் கழுவும் பிழைப்பு நடத்திவருகிறான். அவனது தயவில் வாழும் அண்ணன் சடையன், அண்ணி, அண்ணன் மகள் கருப்பாயி மற்றும் அவனது விதவை தாய்.

இதற்கிடையே செம்பட்டைக்கு நந்தினி என்னும் ஒரு டவுண் பெண்ணுடன் (தீபா) திருமணம் நிச்சயமாகிறது. ந‌ந்தினி சுகபோகமான டவுண் வாழ்கைக்கு பழக்கப்பட்டவள். "செம்பட்டையான் பொண்டாட்டி 8ம் கிளாசு பெரிய படிப்பு படிச்சிருக்காம்ல.." "பொண்ணு டவுண்ல ஒரு மாதிரியாம்ல...அதுதான் இவன் தலையில கட்டிபுட்டானுக" என்றெல்லாம் பரவலாக பேச்சு இருந்தது.
ஆனால் கல்யாணமாகி ஊர் வந்த போது பேசிய வாயெல்லாம் திறந்தவண்ணம் அவளையே பார்த்தபடி இருந்தன, வயது பேதமின்றி. காரணம் தீயைப் போல யாரையும் பற்றிக்கொள்ளும் அவளது அழகு மட்டுமல்ல. அவள் அணிந்திருந்த நாகரிகத்தின் அடையாளமான உடைகள் குறிப்பாக ரவிக்கை, அணிந்திருப்பது தெரியும்படியான பாடி,பாவடை வகையரா. ஒரு கிராமத்துக்குள் செம்பட்டையான் பொண்டாட்டியாக நாகரிகம் தன் முதல் காலடியை பதிக்கிறது.


முதலிரவன்று "இதென்ன சேலைக்குள் சேலை...", "அதென்ன லவுக்கைகுள்ள ஒரு துணி, வெள்ளையா.." என்று பாவாடையையும் பாடியும் குறித்து கேட்கிறான். அவள் "டவுண்லயெல்லாம் இப்பிடி தான் போட்டுக்குவாங்க" என்கிறாள். "இதற்கு முன் இதையெல்லாம் நான் பாத்ததே இல்ல...இந்த உப்புசத்துல எப்பிடித்தான் இத்தனையும் போட்டுகிறையோ...சுத்த பைத்தியக்காரப் பொண்ணா இருக்க" என்று சலித்துக்கொள்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் வாசனை திரவியங்களைத் தடவிக்கொள்கிறார்கள். காமம் தீ போல பற்றிஎறிகிறது. இருவரும் கட்டியனைக்கையில் "டே...மாணிக்கம் !!!" என்று ஒரு பலத்த குரல் கேட்டு அதிர்ந்து போய், அது என்ன சத்தம் என்று விசாரிக்கிறாள். அது தனது பக்கத்துவீட்டு பெண் என்றும் தினமும் தன்
பையனை அடிப்பதால் அவன் வீட்டைவிட்டு பகலில் ஓடிவிடுவதாகவும், இரவானால் அவள் ஒரு கம்பையும் விளைக்கையும் எடுத்துக்கொண்டு அவனை இப்படி அழைத்தவாறே தேடுவாள் என்றும்,இது இங்கு வழக்கமான செயல் என்றும் கூறுகிறான் செம்பட்டை. இருவரும் மீண்டும் தத்தம் உடலில் புதைகிறார்கள்.

செம்பட்டையன் பொண்டாட்டியைக் காணவரும் கிழவிகள் அவளது உடை, கால் மீது காலிட்டு அமர்ந்திருக்கும் தோரனை எல்லம் கண்டு அவளது மாமியாளை நகைக்கிறார்கள். மாமியாள் "இந்தக் கருமத்தையெல்லாம் அவுத்துப் போட்டுட்டு இதக் கட்டிக்க " என்று ஒரு நாட்டுப் புடவையைக் கொடுக்கிறாள். அதை தூக்கி எறிந்துவிடுகிறாள் நந்தினி. தலைமுறை
முரண்பாட்டுக்கான பிரச்சனைகள் அப்போதே துடங்கிவிடுகின்றன.

செம்பட்டை பொண்டாட்டி என்பவள் அந்த கிராமத்துகுள் ஒரு காட்சிப்

பொருளாகவும், புதியதை வரவேற்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கிறாள். பக்கத்து வீட்டுப் பெண்கள் வந்து "இது என்னக்கா? என்று அவளது ஒப்பனைப் பொருட்களைப் பார்த்து கேட்க..." இது வாசன எண்ணை...இது பவுடர், முகத்துல பூசிக்க..." என்று எடுத்து கொடுக்கிறாள். "டவுண்லயெல்லாம் இப்பிடிதான் போட்டுக்குவாங்க" என்று அடிக்கடி சொன்னாள். எல்லோர் பேச்சிலும் செம்பட்டை பொண்டாட்டி ஒரு அங்கமாக ஆகிவிடுகிறாள். அபோதும் திருச்சங்கோட்டான் "என்னங்கடா...
ரொம்ப பண்றீங்க...நானுந்தான் பாத்தேன். எல்லா பொம்பளகிட்ட இருக்கறுதுதான் அவகிட்டயும் இருக்கு" என்பான்.


அந்த‌ ஊர் ப‌ண்ணையார், ப‌யில்வான் எல்லாம் செம்ப‌ட்டையின் மீது மிக‌வும் பாச‌ம் கொண்ட‌வ‌ர்க‌லாக‌ இருக்கிறார்க‌ள். ப‌ண்ணையார் ம‌க‌ளுக்கு ட‌வுண் மாப்பிள்ளைக்கு பேசி முடிக்கிறார்க‌ள். மாப்பிள்ளைக்கு ஏற்றவாறு ட‌வுண் நாக‌ரீக‌த்துக்கு ப‌ழ‌க்ககிக்கச் சொல்லுகிறார்க‌ள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் . ப‌ண்ணையார் வீட்டில் செம்பட்டையிடம் 'இந்த‌ எழ‌வெல்லாம் எங்க‌ளுக்கும்
பிடிக்காது தான்...என்ன‌ செய்ய... நீ உம்பொண்டாட்டிய‌க் கூடிட்டுபோய் ட‌வுண்ல‌ இந்த‌ என்ன‌மோ பாடி, பாவட, பகுடருன்னு எல்லாம் சொல்றாங்கில்ல‌..அத்த‌ வாங்கியா..." என‌ சொல்கிறாள்.
செம்ப‌ட்டையும் ஒரு த‌டைப‌ட்ட‌ பொருளை வாங்கிவ‌ருவ‌தைப் போல் வாங்கி வ‌ந்து கொடுக்கிறான்.

பண்னையார்மகளைப் பெண்பார்க்க வரும் போது அவள் "அம்மா இதை எப்படி போட்டுக் கொள்வது" என்று அவளது புதிய பாடியை அம்மாவிடம் வருகிறாள். "அவளும் அதைக் கைகளில் வாங்கி, முன்னும் பின்னுமாக பார்த்துவிட்டு...எனக்கென்னடி தெரியும். முன்னப்பின்ன போட்டிருந்தா தானே தெரியும். எப்படியோ போட்டுக்க" என்கிறாள்.பெண்ணைப் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்க..."பெண்ணைப் பிடித்திருக்கிறது..ஆனால் அவ பாடி போட்டிருக்கறது தான் பிடிக்கல" என்கிறான். காரணம் அவள் அதுவரை பாடியை ரவிக்கைக்கு மேல் அணிந்திருப்பாள். மாப்பிள்ளை போகும்போது "அதை உள்ளே போடச் சொல்லுங்க" என்று கூறிச்செல்கிறார்.
செம்பட்டை கிராமத்துப் பெண்களுக்கு ரகசியமாக ரவிக்கை, ப்ரா, மை டப்பா போன்ற நாகரிக சுட்டிகளை வாங்கிவருவது வாடிக்கை ஆகிறது. செம்பட்டை‍ - அவன் மனைவி என்ற இருவர் மூலமாக அந்த கிராமத்தில் நாகரிகம் தன் கால்களை பதிக்க விரும்பியது.

இதற்கிடையே ஒருதினம் தன் ஊரிலிருந்து கிராமஃபோனை எடுத்துவருகிறாள் நந்தினி. ஒரு பெட்டி அதையொட்டி அண்டா-வாய் போல ஒரு கருவி. இதிலிருந்து பாட்டு வரும் என்று யாராலும் நம்ப முடியவில்லை. ஆளே இல்லாம எப்பிடி பாட்டுவரும் என்றுகேட்கிறாள் ஒரு மனைவி "ஏ...புள்ள அந்த பெட்டிக்குள்ள ஒருத்தன் படுத்திருக்காம்புள்ள...அவன் தான் பாடுறான்"

"ஏன் மச்சான்...பெட்டிகுள்ள இருக்குறவனுக்கு சோறு தண்ணி யெல்லாம் வேணாமா " இது ஒரு சமர்த்தியமான மனைவி.

அதற்கு புத்திசாலி கனவன் "யாருல இவ...அந்தா குண்டாமாதிரி இருக்குள்ள...அதுல தான் சோறு, கொழம்பு எல்லாம் போடுவாங்க புள்ள".

ஊரே செம்பட்டையான் வீட்டின் முன் கூடுகிரது,கூத்தும் கூச்சலுமாக. கோபமடையும் செம்பட்டையின் தாய் "இதென்னடி குடியிருக்கிற வீடா...இல்ல தேவிடியா வீடா" என கேட்கிறாள். பதிலுக்கு அவள் "எனக்கு தெரியாது...இது உன் வீடு தானே நீயே சொல்லு" என்கிறாள். கோபமடையும் மாமியாள் எரியும் கொள்ளிக்கட்டையால் அவளது தொடையில் சூடு வைத்துவிடுகிறாள்.இரவு வீட்டிற்க்கு வரும் செம்பட்டை நந்தினியை காணவில்லை என்று பதறுகிறான். நந்தினி மாமியாளுக்கு பயந்து எங்கோ ஒளிந்துகொண்டுவிடுகிறாள். இந்த காட்சியில் எப்போதும் காணாமல் போகும் மாணிக்கத்தை அவனது தாய் கண்டுபிடித்து கூட்டிவருகிறாள்.தொடர்ந்து வரும் உளைச்சளால் செம்பட்டை தனியாக குடிசெல்ல தீர்மாணிக்கிறான். ஊர் பெரியவர்கள் பேசி பிரித்துவைக்கிறார்கள். செம்பட்டையின் தாய் "இந்த கெழவியோட அருமை ஒனக்கு ஒருநாள் ஒரைக்கும்ல" என்று கண்கலங்குகிறாள்.


புதிதாக குடிசை அமைத்து தனிக்குடித்தனம் துடங்குகிறான். ஊர் பெரியவர்களை எல்லாம் அழைத்து விருந்தளிக்கிறான். நந்தினியின் அப்பாவிற்கு பழக்கமான ஒரு இளைஞன் ஜீப் வண்டியில் வந்திறங்குகிறான். நந்தினியின் தந்தை அவரை 'மாணிக்கம்' என்றும், (ஆங்கிலேய) துரையிடம் உயர்பதவியில் இருப்பதாகவும் அறிமுகப் படுத்துகிறார். ஒழுங்காக வெட்டப்பட்ட தலைமுடி, செறிவாக மழிக்கப்பட்ட தாடி, சின்னதாக ஒதுக்கப்பட்ட மீசை, குழாய் பேண்ட், சுத்தமாக அயன் செய்யப்பட்ட சட்டை என்று வந்து நின்ற மாணிக்கத்தை வைத்த கண்வாங்காமல் பார்க்கிறாள்
நந்தினி. அவன் அவள் கண்களில் கண்ட இச்சையை அறிந்துகொள்கிறான். அவனது ஒவ்வொறு செய்கைகளையும் நடவடிக்கைகளையும் ரசிக்கலானாள். எதற்கும் ஏற்புடைமையில்லாத நகர மனம் தானாக கனவனோடு ஒத்து மதிப்பிட ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கனவனின் ஒவ்வொரு செயலும் அவளுக்கு அருவருப்பையும் திருப்தியின்மையையும் தருகிறது.

இதற்கிடையில் ஆங்கிலத்துரை துடங்கும் தொழிற்சாலைக்கு வேலைஎடுக்கும் மாணிக்கம் செம்பட்டைக்கு ஊரில் எல்லோரையும் தெரியும் என்பதால் அவனையே ஏஜன்டாக நிர்னையிகலாம் என்று பரிந்துரைக்கிறான். அவன் மூலம் சேரும் ஒவ்வொருவருக்கும் செம்பட்டைக்கு பணம் கிடைக்கிறது.

சில சாக்குபோக்குகலை வைத்து மாணிக்கம் நந்தினியை சந்திக்க செம்பட்டை வீட்டிற்க்கு அவனில்லதபோது வருகிறான். அவளது தந்தை அவளையும் செம்பட்டையையும் கோவில்
திருவிழாவிற்கு வரசொன்னதாக சொல்லுகிறான். அவள் உள்ளே அழைத்து காப்பி கொடுக்கிறாள். அவன் வீட்டை மிக அழகாக வைத்திருப்பதாக சொல்கிறான். அவள் அவன் இடையிடையே ஆங்கிலம் பேசுவது மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறாள். அவன் விடை பெறுகிறான் (டே மாணிக்கம்!!! என்ற பெண்ணின் குரல் அவளுள் உரத்து ஒலிக்கிறது).

பண்ணையார் மகளின் திருமண ஏற்பாடு வேளைகளில் மும்மரமாக இருப்பதால் கோவில் திருவிழாவிற்கு வரமுடியாதெனவும், யாரவது ஒருவராவது போக வேண்டும் என்பதால், நீ வேண்டுமானால் மாணிக்கம் சாரின் ஜீப்‍காரில் போய்வரும்படியும் சொல்லுகிறான் செம்பட்டை.

அந்த மாலைப்பொழுது வருகிறது. எதிர்பார்த்த ஜீப்பில் வராமல் மாணிக்கம் மோட்டார் சைக்கிளில் வருகிறான். மோட்டார் சைக்கிள் பயணத்தில் இருவரது உடலும் அவற்றுக்கே உண்டான இச்சா மொழியில் பேசத்துடங்கிவிடுகின்றன. மலைக்காற்றும் தொலைதுரப் பயனமும் மறைந்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்த செய்தன‌. உணர்ச்சிமிகுதியில் இருவரும் வழியிலேயே கலவியில் ஈடுபடுகிறார்கள் (டே! மாணிக்கம் என்ற பெண்ணின் குரல் அவளுள் உரத்து ஒலிக்கிறது).

"செம்பட்டையான் பொண்டாட்டி முந்தானைல மண்ணு" (அதாவது அவளது முந்தி சுத்தமில்லை, கணவனல்லாது வேறு யாருக்கும் விரிக்கப்பட்டதாக பொருள்படும் சொல்லாடல்) என்று திருச்சங்கோட்டான் சொன்னதாக கேள்விப்பட்டு அவனுடன் சண்டையிடுகிறான் செம்பட்டை. பயில்வான் வந்து தடுத்து விடுகிறார். மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வரும் செம்பட்டைக்கு
அதிர்ச்சி காத்திருக்கிறது. மாணிக்கத்துடன் அவனது மனைவி பகல் கலவியில் ஈடுபட்டிருக்கிறாள். செம்பட்டையைக் கண்ட மாணிகம் தப்பி விடுகிறான். நந்தினி வெறும் மேனியாக இருக்கிறாள். நாகரிகத்தின் அடையாளமாக அவள் சொன்ன அவளது ரவிக்கை,பாடி,பாவாடை எல்லம் தரையில் கிடப்பதை காட்டுகிறார்கள். செம்பட்டை எதுவும் பேசாதவனாக‌வீட்டை விட்டு விலகி நடக்கத்துடங்குகிறான். நந்தினிக்கு அவளது சீலைத்துணி மட்டும் தூக்குக் கயிராகத் தெரிகிறது. ஊர்க்காரர்கள் ஆற்றை நோக்ககி விரைகிறார்கள். அங்கு செம்பட்டை தண்ணீரில் முழ்கி
தற்கொலை செய்துகொண்டிருந்தான்.


ஊரார் எதுவும் பேசாமல் பார்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் செங்கோட்டையான் அடித்து கொன்று விட்டானென்றும், சிலர் வீட்டு விவகாரத்தால் மனமுடைந்து இறந்துவிட்டானென்றும், சிலர் துரை விவகாரதுல ஏதாவது நடந்திருக்குமோ என்றும் பேசிக்கொண்டனர்...யவருக்கும் உண்மையான காரணம் தெரியாமலேயே...

ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் Symbolism த்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு. படம் வந்த காலகட்டத்தில் இப்படியொரு கதைக்கருவைச் சொல்ல வந்ததே மிகப்பெரிய சோதனைமுயற்சி. மக்கள் குறிப்பாக பெண்கள் தங்களது அந்தரங்கத்தை மையமாகக்கொண்ட படம் என்று தவிர்த்துவிட்டிருக்கலாம். ஆனால் படம் முழுக்க சொல்லப்பட்டது
உலகப்பொதுமறையான ஒரு விஷயத்தை. ஒரு கலாச்சார மாற்றத்தை ஒரு சமூகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதை ஒரு சர்ரியலிஸ்ட் போல சொல்ல வந்திருப்பார்கள்.

இங்கு பாடி,பாவாடை என்று சொல்வது வெறும் உள்ளாடைகள் என்ற பொருளில் அல்ல, அது ஒர் குறியீடு. அது ஒரு நாகரிகத்தின் குறியீடு. நந்தினி என்பது புதுமையின் வெளிப்பாடு.

செம்பட்டை என்பவன் ஒரு ஊடகம், அவ்வளவு தான். அவனே மக்களுக்கும் வெளியுலகுக்குமான இணைப்புக்கயிறு. அதனால் தான் புதுமை முதலில் அவனை வந்தடைகிறது (நந்தினியுடனான திருமணம்) .

செம்பட்டையின் தாய் எனப்படுவது ஞாயப்படுத்தப்பட்ட பழமைவாதத்தின் குறியீடு. பழமைவாதத்திலிருந்து திரும்பிச்செல்லுதலுக்கான வழியின்மையின் நம்பிக்கையின் காரணமாகவே செம்படையின் தாய் "அப்புறமும் உசுரோட இருக்கப் போறான்ல‌...இந்தக் கெழவியோட அரும உனக்கு ஒரு நாள் தெரியும்" என்கிறாள்.

"மாணிக்கம்" என்னும் கதாபத்திரம் சமூகத்தால் அடக்கி வைக்கப்பட்ட கருத்தியல் சுதந்திரம். சுதந்திரத்தைத் தேடி தினமும் வெளியே ஓடிச்சென்றுவிடும் 'மாணிக்கம்' என்னும் பக்கத்து வீட்டுப் பையன். கையில் கம்போடு அவன் தாய் அவனைத்தேடுகிறாள். கம்பு என்பது அதிகாரத்தின் வெளிப்பாடு. லாந்தர் விளக்கு என்பது முன்மொழியப்பட்ட வழிநடத்துதல். இதை வியப்புறும் படியாக கையாண்டு இருப்பது திரைக்கதையில் குறிப்பிடத்தக்க அம்சம். நந்தினி மாமியாரால் காலில் சூடுவைக்கப்பட்டு வீட்டைவிட்டு ஓடி ஒளிந்துகொள்கிறாள். அப்போது சிறுவன் மாணிக்கம்
தாயால் பிடிபட்டுவிடுவதப்போல காட்டியிருப்பார்கள். இது சூடுவைக்கப்பட்ட சம்பவத்தை புதுமையின் மீது அதிகாரத்தின் வெற்றியை குறிப்பிடுவ‌தாகும். பின்னால் ஆங்கிலத்துரையின் அதிகாரியாக வரும் கதாபாத்திரத்திற்கும் 'மாணிக்கம்' என்ற பெயர் சூட்டியதும். நந்தினியின் இச்சை வெளிப்பாட்டின் போது 'டே! மாணிக்கம்' என்ற பெண்குரல் ஒலிப்பதும் இயக்குனரின் மேதமையை விளக்கும் உத்திகள்.

திருச்சங்கோட்டான் (திருச்சங்கோடை சேர்ந்தவன்). இது சேலத்தின் அருகில் அமந்த மற்றோரு பெரிய டவுண். அதனால் அவனுக்கு இந்த புதுமை பழக்கப்படிருந்தது. திருசங்கோட்டான் என்பது இங்கு தயார் செய்யப்பட்ட நடுத்தர மணத்தின் குறியீடு. அவன் எல்லாவற்றிற்கும் ஏற்புடைமை உடையவனாகவும், பாதுகாப்பின்மை உணர்வினால் நடுத்தரமணமுடையவனாகவும் இருக்கிறான்.

திருச்சங்கோட்டான் மனைவி பனைமரத்தில் இருக்கும் தன் கணவனிடம் "இந்தா...எனக்கும் அந்த செம்பட்டையான் பொண்டாட்டி மாதிரி பாடி, பாவாடையெல்லாம் வாங்கித்தருவியா..?" என்று கேட்க கோபமடையும் அவன் இரக்கிக்கொண்டிருந்த கள்ளை அப்படியே அவளது தலையில் போட்டு உடைத்து விடுகிறான்.

நாகரிக உடை சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து முன்னிருத்தப்பட்டாலும் அவை வீண் செலவாக கருதப்பட்டது. இது சமுதாயத்தின் அக்கரையின்மையும், தன்னிலையிலிருந்து மாற விரும்பாத Xenophobia வை காட்டுகிறது. ஒரு வீட்டில் தரையை உரசுமாறு சேலை அணிந்து வாசல் பெருக்குகிறாள் ஒரு பெண். இதைக்காணும் மாமியாள் "தொடப்பம் எதுக்குடீ முண்ட‌...அதான் சீலைலையே கூட்டுறியே" என திட்ட அவள் சீலையை தூக்கி சொருகுகிறாள். அவள் அணிந்திருக்கும் பாவாடை தெரிகிறது. அதிர்ச்சி அடையும் மாமியாள் "இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்வேன்...சீலைக்குள்ள இன்னொரு சீல கட்டியிருக்கா..." என்று கூச்சலிடுகிறாள். அதை வாங்க பணம் கொடுத்த மகனையும் "இது வீண் செலவு" என்று கடிந்துகொள்கிறாள்.

படத்தில் வரும் வசனங்கள் மிக நுணுக்கமானதாகவும்,அதீத ஆளுமையுடனும் கையாளப்பட்டிருக்கும். முதல் பாதியில் பண்ணையாரின் சிறிய மகன் விளக்கு எரிந்து சுவற்றில் படிந்த கரியில் செம்பட்டை, நந்தினி என்று எழுதிக்காட்டி சந்தோஷிக்கிறான். நந்தினி மாணிக்கத்திற்கான கள்ள உறவு நடைபெற்று தொடர்ந்து வரும் காட்சியில் முன்பு காட்டப்பட்ட "செம்பட்டை, நந்தினி" என்று விளக்கு எரிந்து படிந்த கரியில் எழுதப்பட்ட 'நந்தினி' என்பது அழிந்து இருக்கிறது. செம்பட்டை 'அது எங்கடா காணோம் என்று கேட்க பண்ணயார் மகன் "அதுல கரி புடிச்சுருச்சு செம்பட்ட...வெளிச்சம் பட பட கரி புடிக்கதானே செய்யும் " என்று சொல்லுகிறான். வெளியுலகிற்கு பிரயத்தனப்படுத்தும் போது அதன் எச்சப்பொருளும் கிட்டதான் செய்யும். புதிய நாகரிகம் வரும் போது அதனூடே நல்லவை கெட்டவையும் வருதல் இயற்கை என்பதை அடுத்த தலைமுறைக்காரன் சொல்வதாக படத்தில் அமைத்திருப்பது படைப்பாளியின் மேதமையைக் காட்டுகிறது.


ஒரு காட்சியில் டவுணிலிருந்து பெட்ரமோஸ் லைட்டை வாங்கி வீட்டில் வைத்திருக்கும் நந்தினியிடம் 'இது என்ன...இப்பிடி கண்ணபரிக்குது' என்பான் செம்பட்டை. அதுக்கு அவள் 'இது கேஸ் லைட்டுங்க...சேலத்துல இருந்து வாங்கியாந்தன்... பாருங்க நம்ம லாந்தர் லைட்டவிட எவ்வளவு பிரகாசமா இருகுன்னு'. அதற்கு செம்பட்டை 'ஆமாமா...அது என்னமோ அப்பிடிதான். லாந்தர் லைடுல இவ்வளவு வெளிச்சமும் வராது..அது கண்ணையும் பரிக்காது' என்பான். இதுவும் கதைக்கருவை Suble ஆக‌ சொல்லும் ஒரு வசனமே.

தமிழ் திரைப்படத்தில் இப்படியொரு சோதனை முயற்சி நடந்ததாகவோ, இப்படிப்பட்ட படங்கள் வந்ததற்கான சுவடோ இப்போதிய படங்களிலோ இயக்குனர்களிடமோ காணப்படுவதில்லை. முன்பு சொன்னதைப் போலவே எந்த காலத்திற்கும் பொருத்தி பார்க்கக்கூடிய திரைப்படமாக உள்ளது. கலாச்சாரத்தின் பேரில் ஞாயப்படுத்தப்பட்ட தவறான வழிகாட்டுதலுக்கு உட்படிருக்கும் தமிழ் சமூகத்தின் பார்வைக்கு வைக்க வேண்டிய திரைப்படம். கடுமையான ஃபாஸிச குண்டாந்தடி கலாச்சாரத்தை கடைபிடிக்கும் தமிழ் கலாச்சாரமும், அதன் விளைவாய் அதிகரித்து வரும் சமூக, பாலின அச்சுரத்தல்களுக்கு தளமக மாறிவரும் தமிழகத்திற்கு மீண்டும் மறுபார்வைக்கு உட்படுத்தவும், விவாத மேடைகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டியதுமான திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.

ஒரு இனத்தின் சமூகப்பார்வை அதன் அரசியல்,கலை,ஆட்சி,பொருளாதாரம் எல்லாத்தோடும் சம்மந்தப்பட்டதே. தமிழக மக்களின்பாலியல் வறட்சியின் காரணமாகவே பல மட்டமான படங்கள் வெற்றிபெற காரணமாக இருக்கிறது. பைசாவுக்கு பிரியோஜனமில்லாத ஒரு மூனாந்தர நடிகர்கூட்டம் ஒரு நன்கு கற்ற தொழில்நுட்பவாதி நினைத்துகூட பார்க்க முடியாத சம்பளங்களை
சாதாரணமாக குவிக்கிறது. பண்பாடு கலச்சாரம் என்று கூவுகிறவர்கள் தங்கள் ஆணாதிக்கத்திற்கு சவுகரியமாக இருக்கும் இந்த நிலைப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளவே அந்த வேஷமிடுகிறார்கள். மேற்கத்திய நாகரிகத்திலிருந்து பிரதியெடுக்கக்கூடாது என்றுவேறு சிலர்.

என்னை சிலர் "மேற்கத்திய மோகம்" என்றார்கள். இருக்கட்டும். தவறில்லை.
லன்டனில் இரண்டாம் காட்சி சினிமா முடிந்து ஒரு பெண் தணியாக வீடு செல்ல முடிகிறது. அவள் மூடியிருக்கும் பார் கதவைத்தட்டி பானம் ஏதாவது கிடைக்குமா என கேட்கிறாள். இரவு 11 மணிக்கும் பேருந்தில் ஒரு பெண் பாதுகப்பாக வரமுடிகிறது. இங்கு போல 20 வயது பெண்ணிற்கு Body guard டாக 11 வயது 'ஆம்பிளை'யை யாரும் துணைக்கு அனுப்புவதில்லை. 20
ஆண்கள் பணிபுரியும் ஒரு கூலித்தொழிலில் இரண்டே பெண்கள் சங்கோஜமின்றி பணிபுரிகிறார்கள்.

அங்கு பெண்விடுதலை பரிபூர்ணமாக சாத்தியப்பட்டிருக்கிறது.

கலாச்சார பாதுகாவலர்களாய் நிற்கும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதற்கான‌ சாத்தியக்கூறுகளே இல்லை. நாட்டின் 40 சதவிகிதம் பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் நடக்கின்றது. துரிக்கியில் ஒரு அழகிய பெண்ணை 1000 அமரிக்க டாலர்களுக்கு வாங்கிவிடலாம். அவளை வைத்து ஒரே இரவில் லட்சங்களை சம்பாதிக்கிறாகள் அந்த pimps. பெண்ணைப் பொத்திபொத்தி வைக்கும் அரபு நாடுகளில் இன்னும் பெண்களை ஒரு commodity யாக விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேலை நிமித்தமாக ஐரோப்பிய நாடுகளுகுச் செல்லும் இந்தியர்கள்
திரும்பிவருவதேயில்லை என்று நாம் லபோ திபோ என்று அடித்துக்கொள்கிறோம்.அவர்கள் தாயகம் திரும்ப எத்தணிக்காததற்கு அந்நாடுகளில் அவர்களுக்கு சாத்தியமகும் சமுதாய சௌகரியங்கள், பாதுகாப்பு உணர்ச்சி, சிறந்தகல்வி, குறிப்பாக சுதந்திரம்... இவையே காரணம்.

ஒவ்வொரு சமுதாய கலாச்சார மாற்றங்கள் நிகழும் போதும் அதை மக்களுக்கு எடுத்துச்செல்கிற சில செம்பட்டைகளும், நந்தினிகளும் பலியாகத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட இழப்புகளற்ற ஒரு மாற்றத்தை கடந்துவர சாத்தியமாகும் சூழலில் தான் நாம் எதிர்பார்க்கும் நன்மக்களும் நற்சுற்றமும் உருவாக முடியும்.

செவ்வாய், 30 அக்டோபர், 2007

கடை அடைக்கும் நேரம் வரை - Merle Haggard

"Here's a man who writes about his own life and has had a life to write about."
~ Johnny Cash (a rival and inspiration for Merle Haggard )

"I'll tell you what the public likes more than anything...
it's the most rare commodity in the world - honesty."
~ Merle Haggard




"LEGEND என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் மெர்ல் ஹகர்டை பற்றி பேசும்போது தான் பொருள்படும்படியாக இருக்கிறது" என்று இவருடைய புகழைக் குறிப்பிடுகிறார்கள். சாமான்யர்களின் நாயகன் என்று வர்ணிக்கப்பட்ட, கன்ட்ரி இசையின் தன்னிகரற்ற இசைக்கலைஞர் ஹகர்ட்.
தான் பார்ப்பது,கேட்பது உணர்வது அனைத்தையும் இசையாய் மாற்றக்கூடிய மாயக்கரம் படைத்தவராக இருந்தார் ஹகர்ட். அவர் இசைத்தது வாழ்க்கையைத்தவிர ஒன்றும் இல்லை. அவரது பாடல்கள் மக்களிடம் ஒரு தேசியகீதத்தைப் போல புகழ்பெற்றிருந்ததற்கு காரணம், அவற்றில் இருந்த உண்மையும் நேர்மையும். அதன் காரணமாக தொடர்ந்து இசைப்பட்டியல்களில் ஆதிக்கம் செலுத்த அவரால் முடிந்தது. ஒரு ஊரே வெறுக்கும் போக்கிரியாக தனது கால்த்தைத் துடங்கி, யாராலும் மறுக்க முடியாத காலத்தின் நாயகனாக, ஒரு சரித்திரவாழ்வை வாழ்ந்தவர் ஹகர்ட்.
அமரிக்காவின் பெரும் பொருளாதாரப் பின்னடைவின் போது ஹகார்ட் குடும்பம் கலிஃபொர்னியாவில் புலம்பெயர்ந்தது. மேர்ல் ஹகர்ட் 9 வயது இருந்தபோது தன் தந்தையைப் பறிகொடுத்தார். மிகவும் அடங்காப்பிடாரியாக இருந்த சிறுவன் ஹகர்டை சமாளிக்க முடியாமல் சிறுவர் காப்பகதிற்கு அனுப்பிவிட்டார் அவரது தாய். அப்போது அவரது சகோதரர் கொடுத்த சிறிய கித்தாரை வைத்து அவரே வாசிக்கக் கற்றுக்கொண்டார். அங்கிருந்து தனது நண்பனுடன் டெக்சாசுக்கு தப்பியோடி, அதே வருடம் போலீசாரால் திருட்டு குற்றச்சாட்டுக்கு கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்தும் தப்பியோடி உள்ளூர் மதுவிடுதிகளில் பாடல்கள் இசைக்கத் துடங்கினார். அதைத் தொடர்ந்து லெப்டி பிரசல் என்னும் உள்ளூர் கன்ட்ரி பாடகர் அவரது கச்சேரியில் பாட ஹகர்டுக்கு வாய்பளித்தார். கம்பீரமான குரல்வளமும் குதூகலமும் நிறைந்து பாடும் அந்த இளைஞனின் பாடலை ரசிகர்கள் வரவேற்றார்கள். உள்ளூரில் சற்று புகழ் கிடைத்த போதும் அவரது பணப் பிரச்சனை அவரைத் துரத்தியவண்ணம் இருந்தது. 1957ல்
கொள்ளைக்குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஹகர்ட் சிறையிலும் சூதாட்டம், கேளிக்கை என்று தான் இருந்தார். அப்போது சிறைகளில் சென்று நிகழ்ச்சிகள் நடத்திவந்த பிரபல கன்ட்ரி பாடகர் ஜானி கேஷ் ஒருமுறை சான் குவன்டின் சிறையில் நடத்திய 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் ஹகர்டு. ஒருமுறை அவருடைய சகசிறைவாசியும் நண்பனுமான ராப்பிட் சிறையிலிருந்து தப்பியோட திட்டமிட்ட போது, ஹகர்டை " நீ என்னுடன் வரவேண்டாம்...உணக்கு இசையில் பெரிய எதிர்காலம் இருக்கிறது,நீ உலகுக்கு தெரிய வேண்டியவன்.என்னுடன் வந்தால் நீ ஓடி ஓடி ஒளியவேண்டியிருக்கும் " என்று மறுத்துவிட்டான். தன்னுடன் இருந்த சிறைவாசி செஸ்மேனின்
மரணமும், ராப்பிட்டின் வாக்கும் அவருள் பாதிப்பை ஏற்படுத்தியது. சிறையிலேயே டிப்ளமோ படிக்கத்துடங்கினார், சிறை மில்லில் கடுமையாக உழைத்தார், கேஷால் கவரப்பட்டு தொடர்ந்து இசைப்பயிற்ச்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் சிறையின் இசைக்குழுவிலும் பாடத்துவங்கியிருந்தார்.

அவரது உழைப்பு வீண்போகவில்லை. 1960ல் அவர் விடுதலை செய்யப்பட்டு அவரது குற்றங்களுக்கு மண்ணிப்பு வழங்கப்பட்டது. விடுதலையானபின் தான் இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு 4 மாதங்கள் ஆனது என்றும். சில சமையம் ஏதாவது செய்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று விடலாம் என்று தோன்றும் என்றும், அதைப்போல தனிமையான காலத்தை தான் கண்டதே இல்லை என்றும் தனது அனுபவதைக் கூறுகிறார். 1960ல் எதேச்சையாக பதிவு செய்யப்பட்ட அவர் பாடிய‌ 'Sing a sad song' என்ற பாடல் அவ்வருடம் National Hit ஆனது.

1966ல் Swinging Doors வெளியாகியிருந்த போது கன்ட்ரி இசையின் நாயகனாக மாறியிருந்தார் ஹகர்ட். சில வருடங்களுக்குப் பிறகு ஒரு முறை கேஷை சந்தித்த ஹகர்டு "சான் குவன்டின் சிறையில் உங்கள் நிகழ்ச்சியை நான் வெகுவாக ரசித்தேன்" என்றார். கேஷ் "உங்களை அபோது என் குழுவில் நான் பார்த்ததில்லையே" என்றார். ஹகர்டு அதற்கு "நான் அப்போது பார்வையாளனாக இருந்தேன்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். இந்த சம்பவம் நடக்கும் போது மெர்ல் ஹகர்ட் என்னும் பாடகர் அதிகமாக விற்றுக்கொண்டிருந்த ஆல்பங்களுக்கும், மக்களின் அன்பிற்குரிய இசைஞனாக மாறியிருந்தார். ஒரு காலகட்டத்தில் கேஷின் பாடல்களை விட இவரது இசை ஆல்பங்கள் பிரபலமாக விற்கத்துடங்கின. ஒரு முறை கேஷின் நண்பரான ஜனாதிபதி நிக்ஸனின் மாளிகையில் ஹகர்டின் ஒரு பாடலை விரும்பி இசைக்கச் சொல்லி கேட்ட போது அதை மறுத்துவிட்டார் கேஷ்.

கலிஃபொர்னியாவின் கவர்னராக இருந்த Ronald Regan, 1972 ன் சிறந்த மனிதராக அறிவிக்கப்பட்டார் ஹகர்ட். இதைக்குறித்து குறிப்பிடும் போது 'மிக சிலரே ஒரு 10 வருட இடைவெளியில் ஒன்னாந்தர காளிப்பயல் என்றும் மிகச்சிறந்த‌ கனவான் என்றும் அங்கீகாரம் பெறமுடியும் என்றும் கேலியாக சொன்னார். அவருடைய பல பாடல்கள் மக்களிடையே தேசியப்பண் போல புழக்கத்தில் இருந்தது. பெரும்பாலும் ஹகர்டின் பாடல்கள் சிறை, துரோகம்,
குடியும், கூத்தும், சுற்றியலைதலும் பற்றியதாகவே இருக்கும். அவரது 'If we make it through December' என்ற பாடல் இன்றளவும் உழைப்பாளி வர்கத்தின் நிலைப்பாட்டை விவரிக்கும் பாடலாக கொண்டாடுகிறார்கள். அதனாலேயே எளிய மக்களின் இஷ்ட நாயகனாக கருதப்பட்டார் ஹகர்ட்.

அதுவே அவருக்கு கடைசி குறிப்பிடத்தக்க வெற்றிப்பாடலாகவும் அமைந்தது. பின்னால் வந்த இசைக்கலைஞர்களுக்கு வழிவிட்டு இந்த ஜாம்பவான் சுவடுகள் இல்லாமல் பறக்கும் ஒரு பறவையைப்போல விலகிச்சென்றார். இன்னும் சிறு இசைக்கச்சேரிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கல்ந்துகொள்கிறார். ஜானி கேஷ் நடத்திவந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
கேஷே ஹகர்டை பேட்டிகண்டு, இருவரும் சேர்ந்து அந்நிகழ்ச்சியின் இறுதிப்பாடலைப் பாடியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி.
அவரது Swinging Doors எனும் இந்தபாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதையே எனது செல்பேசி அழைப்பு மணியாகவும் வைத்துள்ளேன். சிறுபிள்ளைத்தனமான ஒரு குடிகாரனின் காதலை வெளிப்படுத்தும் பாடல் இது. தனது மனைவியை கோபித்துக்கொண்டு, இனி வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அவன், வழிப்போக்கர்களை தன்னைப் பார்த்து செல்லும்படி பாடுகிறான். அவர்கள் தனது மனைவியிடம் தான் இருக்கும் இடத்தை சொல்வார்கள் என்றும், அவள் வந்து தன்னை அழைத்து செல்வாள் என்ற நம்பிக்கையுடனும் அவன் பாடும் பாடல் இதோ.

கடை அடைக்கும் நேரம் வரை

இப்ப‌டிப்ப‌ட்ட‌ புகை படிந்த பழைய மதுவிடுதி என‌க்கு ப‌ழ‌க்க‌மில்லை
நான் வீட்டை விட்டு வந்துவிட்டேன்... க‌ண்ணே
உன்னை ச‌ந்தோஷ‌மாய் பார்ப‌த‌ற்கே

நான் எங்கு இருக்கிறேன் என்று
நீ அறிய‌வே உன்னை அழைத்தேன் அன்பே
பாவ‌ம் நீ என்னைத் தேட‌ப்போகிறாய்
பெரிதாக‌ ஒன்றும் இல்லை கண்மணி...
ஆனாலும் என்னை இவ்விட‌ம் வ‌ரவேற்ப‌தாக‌வே உண‌ர்கிறேன்

இங்கு என‌க்கொரு விசைக்க‌த‌வும்,இசைப்பெட்டியும் ம‌துமேசையும் உள்ளது
என் இந்த புதிய வீட்டில்
மின்னும் நியான் விளக்குகளும் உள்ளது என் அன்பே
பாதசாரிகளே...சற்று நின்று என்னை கவனித்து செல்லுங்கள்
நான் கடை அடைக்கும் வரை இங்குதான் இருக்கிறேன்

எனக்கு கேளிக்கையான எல்ல‌மும் இங்கு உள்ள‌து
என்னை ம‌தியிழ‌க்க‌ செய்யும் எல்லாம்
இதோ இங்கு தான் உள்ள‌து
ம‌ற்றும் இந்த‌ சூழ‌ல் என‌க்கு மார‌டைப்பு வ‌ருவ‌த‌ற்கு
ஏற்றார்போல‌ தான் இருக்கிற‌து
உன‌க்கு தான் ந‌ன்றி சொல்ல‌ வேண்டும் அன்பே

இறுதியில் உன‌க்கு ஒன்று சொல்கிறேன்
நான் க‌டைய‌டைகும் வ‌ரை இங்கு தான் இருப்பேன்
இங்கு என‌க்கொரு விசைக்க‌த‌வும், இசைப்பெட்டியும் ம‌துமேசையும் உள்ளது
என் இந்த புதிய வீட்டில்
மின்னும் நியான் விளக்குகளும் உள்ளது என் அன்பே
பாதசாரிகளே சற்று நின்று என்னை கவனித்து செல்லுங்கள்
நான் கடை அடைக்கும் வரை இங்குதான் இருக்கிறேன்

[ஹகர்டும்கூட‌ ஆரம்பகாலங்களில் பாரில் பாடுகையில் தனக்கு குடிக்க தேவையான அளவு காசு சேர்ந்தவுடன் பாடலை நிறுத்திவிட்டு அங்கேயே உட்கார்ந்து குடிக்கத்துடங்கிவிடுவார்.]



பின்னாளில் டிக்ஸி சிக்ஸ் கன்ட்ரி குழுவின் 'Long time gone' என்னும் பாடலில்
"We listen to the radio to hear whats cookin
But the music aint got no soul
Now they sound tired but they dont sound haggard
Theyve got money but they dont have cash
They got junior but they dont have hank"

என்று இந்த இருவரின் புகழைப் பாடுகிறார்கள்.
கன்ட்ரி பாடல்களின் எளிமையே அதன் பலம். எளிதாக மக்களை சென்றடைவதற்கு அவர்களது மொழியில் தான் பேச வேண்டும். "அற்றைத்திங்கள் அந்நிலவில் நெற்றிக்கறழ நீர் வடிய ஒற்றைப் பார்வை பார்த்ததும் நீயா" யாருக்கு வேண்டும். கன்ரிப் பாடல்களில் அவர்களது பாடு பொருள் மிக எளிமையானதாக இருக்கிறது. மிகச்சிறிய சந்தோஷங்கள், சின்ன முட்டாள்த்தனங்கள் அவர்கள் பாடல் பாட போதுமானதாக இருக்கிறது. நம் கவிஞர்கள் கேட்பது போல ஜன்னல் நிலவு தேவையில்லை, ஒருதுண்டு வானம் தேவையில்லை, வானவில்லின் கீற்று தேவையில்லை, கவிதைமகளின் கடைக்கண் பார்வை தேவையில்லை.

புத்தகங்களில் படிக்கும் சில கதைகளை விட சிலரது வாழ்கை சாகசமும், கற்பதற்கு நிறைய பாடங்களையும் கொண்டு அமைந்திருக்கிறது.
வாழ்வின் ஒழுங்கற்ற தன்மையையும், மனிதர்களை அது தன் விருபத்திற்கு ஏற்றார்போல வளைத்துக்கொள்கிற விசித்திரத்தையும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் இந்த இருவர். இவர்கள்
மறைந்தாலும் இவர்களது பாடல்கள் அவர்களது வாழ்கையை பறைசாற்றிக்கொண்டு தானிருக்கும்.
உண்மையில் இசை என்பது இவர்கள் பாடியதா இல்லை வாழ்ந்ததா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.
ஆமாம்...இசை என்பது வெறும் ஒலி மட்டும் தானா என்ன‌?

புதன், 26 செப்டம்பர், 2007

சித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்


இயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை.

~ நகிசா ஒஷிமோ

நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால்
அது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது !.
இப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்!!

~ இந்த கட்டுரையை எழுதச்சொல்லிக் கேட்ட கௌதமன்


மீண்டும் கர்னாடகாவின் வட பகுதிதிகளை காணப்புறப்பட்ட ஒரு வார இறுதியில் வெளிநாட்டு சரக்கின் வருகைகளின் காரணமாக திட்டம் கைவிடப்படவே எனக்கு சற்றும் பிடிக்காத பெங்களூர் நகரில் சுற்றிவர நேர்ந்தது. ISKON போன்றவற்றை என்னால் ஆன்மிக ஸ்தலங்களாகப் பார்க்க முடியவில்லை.மாறாக அவை வர்த்தக நிறுவனங்கள் போலவே செயல்பட்டு வருகின்றன என்று கூறுவதே ஏற்புடையதாய் தோன்றுகிறது. ஆதனால் கடைசியில் வேறுவழியின்றி பூங்காக்களுக்கு வந்து சேர்ந்தோம்.

ஆண்கள் இங்கு செல்லக்கூடாது, பெண்கள் இங்கு செல்லக்கூடாது, என்று சில இடங்கள் இருப்பது போல...'ஆண்கள் மட்டும் செல்லக் கூடாது'...'பெண்கள் மட்டும் செல்லக் கூடாது' என்று சொல்வதற்கும் சில இடங்கள் உண்டு. ஊட்டி, திருச்சி மலைக்கோட்டை, பெங்களூர் லால்பாக் அவற்றில் அடங்கும். ஆமாம் இங்கு வருபவர்கள் எல்லாம் ஜோடிகளாகவோ, 'ஜோடிக்கப்பட்டோ' தான் வருகிறார்கள். கிடைத்த மர நிழலில், புதர் இடையில் புகுந்து கொள்கிறார்கள். நாளடைவில் இந்த புதர்கள், நிழல்கள் எல்லாம் நிறைந்துவிட்டதால் இந்த So Called காதலர்கள் அங்கிங்கெனாத படி எங்கும் நிச்சலன சுருதியில் சல்லாபித்து மூழ்கிக்கிடக்கிறார்கள். நகரத்துக்குள் இத்தனைக் காதல் ஒளிந்துகொண்டிருப்பதை அப்போது தான் கவனிக்க முடிகிறது. அவை நல்ல காதலா கள்ள காதலா என்பதெல்லாம் வேறு விஷயம். காதலையே கள்ளத்தனமாக பார்க்கும் இந்த சமூகத்தில் அப்படி பேதம் பார்ப்பது சாத்தியமற்ற ஒன்று என்றே தோன்றுகிறது. அங்கு இரண்டு ஆண்கள் தனியாக செல்ல நேர்ந்தால் அருவருப்புடன் பார்க்கிறார்கள் (இல்லை நாம் அப்படி உணர்கிறோமா தெரியவில்லை). எங்களுக்கே ஒரு வித கூச்சவுணர்வு தோன்றிட தனித்தனியே உலாவச் சென்றோம்.

இந்தியாவின் Smooch, Forepalys எல்லாம் எவ்வாறு உள்ளது என்பதற்கு சில சாம்பிள்கள் இங்கு கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருந்தன. தாங்கள் பார்க்கப் படுகிறோம் என்பது குறித்து அவர்களுக்கு எவ்வித நாண உணர்வும் ஏற்படவில்லை.., எங்களுக்கும் தான். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.

நிறுவப்பட்ட கலாச்சார கற்பிதங்கள் புரையோடிக் கிடக்கும் சமுதாயத்தில் நடுத்தர மனமானது இவர்களைக் குற்றவுணர்வுடனோ, பாவஉணர்வுடனோ பார்த்து சுயகழிவிரக்கத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி, அதை ஒப்புக்கொள்வது தான். அவர்களின் குற்றவுணர்வுப் பார்வையை நிராகரிப்பது தான். காமத்தை மிருகப் பண்பாக உருவகப் படுத்தி, அதிலிருந்து மனிதனை விடுவிப்பதாய் அவதானிப்பது என்பது சமுதாயத்தின் நீண்டகால முயற்சியாகவே இருந்து வருகிறது. அதில் தொடர்ந்து தோற்றும் வருகிறது.

நகரம் இத்தனைக் காதலால் நிரம்பியிருக்கிறதா என பிரம்மிக்க வேண்டியதாய் இருக்கிறது. இன்னமும் எத்தனையோ காதல்கள் ஏதேதோ நூலகங்களிலோ, பேருந்துகளிலோ, மூத்திரச்சந்துகளிலோ ஒளிந்துகொண்டிருக்கிறது. அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவர் சொல்லக்கேட்டது இங்கு 'கூட்டிக்கொண்டு' வருபவர்கள் அதிகமாகிவிடுவதால் இது வரவர விபச்சாரத்திற்கான இடம் போல ஆகிவிட்டது என்று சலித்துக்கொண்டார். அதனால் அவ்வப்போது போலீஸ் ரோந்துகள் கூட நடப்பதாக கூறினார்.

அந்த வெளி சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பாலியல் சுதந்திரத்தின் குறியீடாகவே பட்டது. வயதின் உடல்த்தேவையை எப்படி எடுத்துக்கொள்வது என்ற அறியாமை அனைவரது செயல்களிலும் வெளிப்படுகிறது. 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிலிருந்து, இந்த மாதமோ அடுத்தமாதமோ மாதவிடாய் நின்றிவிடக்கூடிய அபாயமுள்ள பெண்கள் வரை இங்கு இதே கதிதான். இந்த லால்பாக் கூட்டத்தில் பல்தரப்பட்ட வயதுகளில் கணவன் மனைவியாக இருப்பவர்களும் உண்டு. கட்டுக்கோப்பான குடும்பக் கட்ட‌மைப்பு அவர்களை நான்கு சுவ‌ருக்குள் நடப்பதை நாலுபேர் முன் நிகழ்த்த சபித்திருக்கிறது.

பொதுவாகவே நாட்டில் இந்தமாதிரி கலாச்சார பிரச்சனை என்றாலோ, பொருளாதார பிரச்சனை என்றாலோ உடனே ஐ.டி மக்களை நோக்கி ஒரு கும்பல் பாயும். ஞாயம் தான்! நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது. இப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்!! . ஐ.டி மலர்ச்சி ஏற்பட்ட 90களில் பெங்களூர் நகரத்தின் இலக்கணம் இது தான். ஒவ்வொரு தெருவிலும் கண்டிப்பாக இருக்கக்கூடியது: ஒரு விநாயகர் கோவில், ஒரு டீக்கடை மற்றும் ஒரு Software Company என்று சொல்லுவார்கள். அப்படியிருக்கும் மக்கள் விகிதாசாரத்தில் அவர்களின் சந்தேகம் ஞாயமானதே. அப்படிப்பட்டவர்கள் கவனத்திற்கு: இந்த மாதிரி இடங்களில் காணப்படுபவர்கள் ஐ.டி/BPO க்காரர்கள் அல்ல. ஐ.டி/BPO பேச்சுலர்கள் எல்லாம் ரூம் போட்டு விடுகிறார்கள். பெண்கள் கூத்து அதைவிட. நான் பெங்களூரில் வசித்து வந்த போது நண்பர்களாக இருந்த Call Taxi டிரைவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வார இறுதிகளில் 4 அல்லது 5 பெண்கள் ஒரு Call Taxi யை வாடகைக்கு எடுத்துக்கொண்டு எங்காவது 3 அல்லது 4 மணி நேரம் போகும் தூரமுள்ள இடத்திற்கு போகச்சொல்கிறார்கள். போகும் வழியில் வண்டியிலேயே மது, சிகரெட், கூச்சல், கொச்சையாடல்கள் என அரங்கேறும். ஒடுக்கப்பட்ட சுதந்திரத்தின் வெளிப்பாடே அவை. பின் திரும்பி வருவத்ற்குள் எல்லம் அடங்கிவிடும். மீண்டும் அடுத்த வாரங்களில் க்கு ஃபோன் செய்து அதே டிரைவர்தான் வேண்டும் என்று கேட்பார்கள். சிலர் ஏதாவது புறநகர் பகுதிக்கு சென்றுவிட்டு அரை நளுக்கும் மேலாக காணாமல் போய் விடுவார்கள். "நீங்கள் வேணும்னா ஏதாவது சவாரிக்கு போரதுன்னா போயிட்டு வாங்க.." என்று நல்லெண்ண யோசனைகள் வேறு தருவார்கள். மட்டுமல்லாது இந்த டிரைவர்களுக்கு டிப்ஸ் மட்டுமே சிலசமையம் 500 ஐத் தாண்டிவிடுமாம். எல்லாம் நாம் யூகிப்பது போல ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதரணமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தான். நான் அங்கலாய்பு தாங்காமல் "தமிழ்ப் பொண்ணுகளுமா.." ன்னு கேட்டேன். Localite களாக இருப்பதால் கன்னடப் பெண்கள் மட்டும் தான் கொஞ்சம் குறைச்சல் என்கிறார்கள்.



So லால்பாக் போன்ற இடத்திலிருப்பவர்களுக்கும் IT/BPO வளர்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமானால் ஐ.டி வளர்ச்சிக்கும் டிரைவர்களின் குழந்தைகள் CONVENT டில் படிப்பதற்கும் மறைமுகமான சம்மந்தம் இருக்கலாம். இப்படிப்பட்ட வரையறுக்க முடியாத உறவுகொண்ட நிகழ்வுகளின் Phenomena வைத்தான் Butterfly Effect, Chaos Theory என்றெல்லாம் சொல்கிறார்கள்.

Back to லால்பாக்:

மாலை 4 மணியிருக்கும் நாங்கள் முழுதாக ஒரு சுற்றினை முடித்து ஒரு மரத்த‌டடியில் வந்தமர்ந்தோம். அருகிலிருந்த பெஞ்சில் நீண்ட நேரமாக அந்த இளைஞன் அந்த பெண்ணை தூண்டுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருந்தான். அவளும் மறுதலித்துக் கொண்டிருந்தாள். இது வெகு நேரமாகவே நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவள் தன்னை ஒப்புக் கொடுத்தவள் போல தன் மடியில் அவனைக் கிடத்திவிட்டாள். அங்கிருந்து நகரமுடியாத படிக்கு, என் நண்பனோ அப்போது பார்த்து அலுவலக அழைப்பை செல்பேசியில் Attend செய்துகொண்டிருந்தவன், அப்படியே மடிக்கணிணியை எடுத்து மறுமுனையில் இருப்பவருக்கு விளக்கம் சொல்லத் துடங்கிவிட்டான்.

இதற்கிடையில் அந்த ஜோடி நல்லதொரு மோனத்தில் கலந்துவிட்டிருந்தனர். அப்போது அங்கு விசில் கொடுத்தபடி போலீஸார் கொச்சையாக சத்தமிட்டபடி வந்தனர். உட்கார்ந்திருந்த எல்லா ஜோடிகளையும் விலகிப்போகச் செய்தார்கள்.

போலீஸ் அருகில் வந்துவிட்டபோதிலும் எங்கள் அருகில் இருந்த ஜோடிகள் சுதாரித்துக் கொண்டு எழமுடியாத சங்கமத்தில் இருந்தார்கள். போலீஸ் அவர்களை நோக்கி லத்தியை விட்டெறிந்தான். அந்த இளைஞன் சட்டென விலகி நடக்கத்துவங்கினான். அந்தப் பெண் இன்னும் அதே இடத்தில் தான் இருந்தாள். அருகில் வந்த போலீஸ் 'வேசி' என்னும் பொருள் படும் வார்த்தையில் திட்டினான். அந்தப்பெண் எழுந்து வேறு திசையில் சாவுகாசமாக நடக்கத்துவங்கினாள், புன்னகைத்த படியே... 'இது எப்பவும் நடப்பது தானே' என்ற நீதியில் இருந்தது அவளின் தோரனை.

போலீஸ் என்ற அதிகாரத்தின் கட்டமைப்பு நிகழ்த்திய ஃபாசிசத்தின் கட்டவிழ்ப்பு அங்கு நடந்தேறியது. இது நாம் சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகிக்க வைகிறது. நாய்கள் புணர்கையில் கல்லைவிட்டு எறியும் இழிசெயல் போன்றது இது (இத்தனைக்கும் அவர்கள் முத்தமிட்டுக்கொண்டு தானிருந்தார்கள்). நமது சமுதாயத்தின் அழுகிப்போன இந்த சித்தரிக்கப்பட்ட சித்தாந்தத்தின் நாற்றமெடுப்பு சகித்துக் கொள்ள முடியாத ரீதிக்கு ரூபமெடுத்துவிட்டது.

இந்த சமுதாய...கலாச்சார மாற்றத்தை ஜீரணித்துக் கொள்ள உதவ வேண்டிய ஊடகங்களோ அதை மறைபொருளாக வியாபார ரீதியில் பணமக்கவோ... அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தவோ உபயோகப் படுத்திக்கொண்டிருக்கிறது. நகிசா ஒஷிமோ என்ற ஜப்பனிய இயக்குனர் சொல்வதைப்போல "வெளிப்படுத்தப் படும் எதுவும் அசிங்கமல்ல...மாறாக மறைக்கப் படுவதே அசிங்கம்". இதை என்று நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்??

எழுத்து - ஓவியம்

ப்ரவீன்

வியாழன், 23 ஆகஸ்ட், 2007

பத்துப்பாட்டு2 - Johnny Cash - என் காதலைத் தந்துவிடு


பத்துப்பாட்டு - இந்த வரிசையில் இரண்டாவதாக யாரை எழுதலாம் என்று நினைத்தவுடனேயே வேறு Dilemma இல்லாமல் நினைவுக்கு வந்தது ஜானி கேஷ் தான்.1960 களில் துடங்கி ஒரு அரையாண்டுக்கும் மேலாக Country Songs மற்றும் Rock இசையில் புகழ்பெற்றவர் ஜானி கேஷ். Country Songs எனப்படும் வகை நமது ஊர் கிராமத்து இசையுடன் சற்று சம்மந்தப்படுத்தி சொல்லலாம் (முழுமையாக அல்ல). அதிகம் சப்தமில்லாத எளிய இசையில், சாதாரண சொற்களைக்கொண்டு அமைக்கப் படும் Country Songs இசைக்கு Rock, Hip-Hop,Jazz எல்லாம் கடந்து இன்றும் ஒரு பெரிய ரசிகர் வட்டம் இருந்து வருகிறது.

கேஷ் அமரிக்காவைச் சேர்ந்தவர். தனது 50 வயது இசை வாழ்கையில் 50 மில்லியன் ஆல்பங்களுக்கும் மேலாக விற்றுத்தீர்த்த இந்த இசையுலக ஜாம்பவான், இசை வரலாற்றில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். பெரும்பான்மையான கேஷின் பாடல்கள் அடிப்படை மக்களுடைய சோகம், தீர்க்க முடியாத துக்கம், ஆற்ற முடியாத கவலையை உட்பெற்றதாகவே இருக்கும். ஒரு மிகசாதாரணமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கேஷ், அவரது இளமைப் பருவங்களில் அனுபவித்த போராட்டங்களும் துக்கங்களுமே தனது பெரும்பான்மையான பாடல்களுக்கு ஊக்குவிப்பாய் இருந்ததாய் தெரிவித்திருக்கிறார்."Hey Porter" "Cry Cry Cry" என்ற பாடல்களுடன் துடங்கிய இவரது இசையுலக பிரவேசம் "Dont Take your guns to Town" என்ற ஒற்றைப் பாடல் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றார்.

போதைப்பழக்கத்தின் காரணமாக முறிந்த விவியன் லிபர்தோ-வுடனான‌ இவரது முதல் திருமண வாழ்கையை இரண்டு வருடங்கள் கழித்து அப்போது பிரபலாமாக அறியப் பட்டு வந்த பாடகியும், பாடலாசிரியருமான ஜூன் கார்ட்டருடன் துடங்கினார்.

தன் பாடல்கள் பிரபலாகத் துடங்கியிருக்கையில் போதையின் பிடியிலானார் ஜானி கேஷ். ஒளித்து வைக்கப் பட்ட போதை மாத்திரைகளை, வைத்த் இடம் மறந்தவராக தனது அறை நண்பர்களே திருடிவிட்டதாக கூறித்திரிந்தார். இதனாலே தன் நண்பர்கள் மத்தியில் கேலிக்குள்ளானார். 1970 களில் போதைப் பழக்கத்திலிருந்து விடுபெற்று கிறித்துவத்தில் நாட்டம் காட்டத்துடங்கினார் கேஷ். பின்னாளில் Ring Of Fire என்ற பாடலில் தனது போதைப் பழக்கத்தைக் குறித்து தான் ஒரு தீ வளையத்தினுள் மாட்டிக்கொண்டதாகப் பாடுகிறார்.

மிதமிஞ்சிய போதையில் அவரது நடவடிக்கைகள் மிக வேடிக்கை நிறைந்ததாக இருந்தது. 1965தில் அதிக போதையில் ஒரு முறை ஒரு சரணாலயம் வழியாக தனது ட்ரக்கை ஓட்டிச்சென்று காரின் ஒரு பகுதி பற்றிக்கொள்ள, காட்டினுள் விட்டுவிடுகிறார். அதில் பற்றத் துடங்கிய தீயில் சுமார் 100 ஏக்கர்கள் நாசமாயின. "ஏன் இப்படிச் செய்தீர்கள்" என்ற நீதிபதியின் கேள்விக்கு. "இதை நான் செய்யவில்லை...மாறாக எனது ட்ரக்கே செய்தது. அதுவும் அங்கேயே எரிந்து செத்துவிட்டது, அதனால் அதனிடம் நீங்கள் கேட்க முடியாது" என்று தெனாவெட்டாக பதில் சொன்னார். இவ்வாறு பலமுறை அவர் சிறைக்கு சென்றிருக்கிறார், ஆனால் அச்சிறைவாசம் அவருக்கு ஒரு நாளுக்கு மேல் நிலைத்ததில்லை. காரணமற்று அவருக்கு சிறைக்கைதிகள் மீது ஒரு மெல்லிய அன்பு இருந்து வந்தது. அப்போதைய அமரிக்காவின் ஜனாதிபதி நிக்ஸனின் நண்பராக அறியப்பட்ட கேஷ், சிறைக் கைதிகளின் மறுவாழ்வை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

பாடலெழுதுவது, பாடுவது, இசைஅமைப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துவது, சினிமாப்படம் எடுப்பது என்று தன் கலை வெளிப்பாட்டில் Ironicalலாக இருந்தவர் கேஷ். தான் எப்படி வாழவேண்டுமென்று நினைத்தாரோ அப்படியே வாழ்ந்தார் கேஷ். எப்படி வாழவேண்டுமென்று நினைத்தாரோ அப்படி மட்டுமே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மனிதனின் வாழ்வு இவ்வளவு கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்ததாக இருக்க முடியுமா என்று கேட்டால்...சாருநிவேதிதா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது."பொய்யாக வாழாத எல்லா வாழ்விலும் கேளிக்கைக்கும் இன்பத்திற்கும் குறைவே இருக்காது" என்பார்.

ஜூன் கார்ட்டருடனான வாழ்வு அவருக்கு சற்றே சமாதானத்தை அளித்திருக்க வேண்டும். இல்லையேல் 30 வருடங்களுக்கு மேலாக அத்தம்பதி வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. 1997-98 ஆண்டுகளில் நரம்பு சம்மந்தப்பட்ட நோய்களுக்காகவும், சர்க்கரை நோயாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் உடல்நிலை வெகுவாக பாதிக்கப் பட்டது. ஜூன் கார்ட்டர் 2003ம் ஆண்டு இறுதைய நோயால் இறந்துபோனார். அவள் "தொடர்ந்து இசைக்க வேண்டும் என்று" கேட்டுக்கொண்டபடியே தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார் கேஷ்.
ஜூன் கார்ட்டர் மறைந்து 4 மாதங்களுக்குள்ளாக சுவாச சம்மந்தப்பட்ட பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது 71வது வயதில் அந்த இசைஞன் பிரபஞ்சப் பாடலில் தன்னை கலந்து விட்டுச்சென்றான்.

இதோ நான் மிகவும் விரும்பும் ஜான் கேஷின் இந்தப்பாடலும் கூட ஒரு சிறைக்கைதியின் காதலைப் பாடுகிறது:



என் காத‌லைத் தந்துவிடு
-----------------------------------------‌
இந்தக் காலைப் பொழுதில் ர‌யில்பாதையின் ஓர‌ம் அவனைக்க‌ண்டேன்
அவன் ஏதோ முணுமுணுத்தபடியிருந்தான்
செத்துக்கொண்டிருக்கும் அவ‌னின் க‌டைசி வார்த்தைகளுக்காக செவி சாய்த்தேன்
அவ‌ன் சொல்ல‌த்துட‌ங்கினான்:

"என்னை ஃபிரிஸ்கோ சிறையிலிருந்து விடிவித்தார்கள்
பத்துவருடம் என் கருமங்களுக்கு பலன் கிடைத்துவிட்டது
நான் லூசியானோவிற்க்கு சென்றுகொண்டிருந்தேன்
என் ரோசைப் பார்ப்பதற்கும் என் மகனை தெரிந்துகொள்ளவும்

"என் காத‌லை என் ரோசிட‌ம் நீ சேர்த்துவிட‌ மாட்டாயா? பாத‌சாரியே...
என் பணம் முழுவதையும் அவளுக்காக எடுத்து செல்வாயா?
அதைக்கொண்டு அவளை சில நல்ல துணிகளை வாங்கிக்கொள்ளச் சொல்
என் மகனிடம் சொல்வாயா...
உன் தந்தை உன்னை எண்ணிப் பெருமைப் படுகிறான் என்று..

க‌டைசியாக‌ ரோசிட‌ம் என் காத‌லையும் தந்துவிடு பாத‌சாரியே..."

எனக்காக காத்திருந்தமைகாக அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லிவிடு
என் மகனை அம்மாவிற்கு உதவியாய் இருக்கச் சொல்
எனது ரோசை வேறொறு வாழ்வைத் தேடிக்கொள்ளச் சொல் பயனியே...
என்ன நான் சொல்வது சரி தானே...
இல்லையேல் அவள் தன்னந்தனியாய் தன் காலத்தை கழிக்க வேண்டியிருக்குமே...

இதோ என் காசுப்பை முழுக்க இதோ...
இருந்தும் அவர்களுக்கு இது வெகுநாள் நீடிக்காது
இந்த காலையில் என்னை நீ கண்டதற்காக நீ ஆசீர்வதிக்கப்படுவாய் தோழனே

க‌டைசியாக‌ ரோசிட‌ம் என் காத‌லையும் தந்துவிடு பாத‌சாரியே...
என் காத‌லைத் தந்துவிடு "


மெல்லிய ஒற்றை கிட்டார் இசையுடன் ஒலிக்கும் இந்தப் பாடல், சொல்லாத சோகங்களை ஏந்திச் செல்கிறது. ஏனோ பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்த பாதசாரி ரோசை சந்தித்திருக்க வேண்டும் என மனம் தன்னையறியாமல் பிராத்திக்கிறது. இதுவரைக் கண்டிராத ரோசின் மீது மனம் இரங்குகிறது. காதலைக் காட்டிலும் சிரமமானது காதலை வெளிப்படுத்துதலும், அதை சரியாக புரிந்துகொள்ளுதலுமே ஆகும். வெளிப்படுத்த முடியாத காதலின் சோகப் படிமனாக அமைந்துள்ளது இப்பாடல்.

பல பல தேசங்களில் வ‌ருட‌ங்க‌ளைக் க‌ழிக்கும் சிறைக்கைதிக‌ளின் குடும்ப‌ங்க‌ள் கார‌ண‌ம‌ற்று துன்பப் ப‌ட்ட‌வ‌ராக‌த்தான் இருக்கிறார்க‌ள். ஒவ்வொரு போரிலும் பெண்க‌ளும் குழந்தைக‌ளுமே மீண்டும் மீண்டும் நிர‌ந்த‌ர‌மாக‌ தோற்க‌டிக்க‌ப் ப‌டுகிறார்க‌ள் . போருக்கு பிந்திய வ‌ன்முறைக‌ள் ஆனாலும் ச‌ரி, ச‌க‌துணைவ‌னை இழ‌ந்த‌ குடும்ப‌வாழ்வானாலும் ச‌ரி. இதை பிரதிபலிக்கும் விதமாக, பற்பரிநாமத்தில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜானி கேஷ்.


புதன், 8 ஆகஸ்ட், 2007

பத்துப்பாட்டு1 - த‌னிமையாள‌ன் by AKON

AKON (Mr.Lonely) - த‌னிமையாள‌ன்

'பத்துப்பாட்டு'ன்னு சொன்ன உடனே பதறியடிச்சுறாதீங்க...

எனக்கு அந்த அளவுக்கெல்லாம் தமிழ் தெரியாது. இது நான் அடிக்கடி கேட்கும் பத்து இசைக்கலைஞர்கள் பற்றிய குறிப்பும், அவர்களது மிகப்பிடித்த பாடலின் அலசலும்...அவ்வளவே. மற்றபடி இவர்களை நமது இசைக் Copier களுடன் (Composer-கள் அல்ல‌) நிலைதூக்கிப் பார்க்கவோ, அல்லது அவர்களது அப்பட்டமான ஈ அடிச்சான் காப்பிகளை தோலுரிப்பதோ என‌து நோக்கம் அல்ல‌.

Frankly Speaking எனக்கு நல்ல ஆங்கிலப் பாடல்கள், இசைஞர்கள் Mc. Rajan மூலமாகவும், Mary Pearl மூலமாகவும் தான் அறிமுகம். Mc. Rajan அறைக்கு செல்லும் போதெல்லாம் 'உனக்குப் பிடிக்கும் பாரேன்'ன்னு பல‌ பாடல்களைப் போட்டுக் காட்டுவான்.Mary திடீரென்று குறுஞ்செய்தி அனுப்பி இந்த பாட்டு அந்த டி.வி-ல ஓடுது பாத்தியா என்பாள். சில நேரம் பாடலை ஒலிபரப்பவிட்டு செல்பேசியில் கவனிக்கசெய்வாள். இசை ரசனையில் பால்பேதம் இருக்க வாய்ப்பில்லை என்று நான் realize செய்தது அவர்களிடம் தான். கொச்சையாக பெண்களை மையப்படுத்தி வையும் சில‌ Rap பாடல்கள் கூட அவளுக்கு பிடித்திருக்கிறது, என்பது அதிர்ச்சியடயவைக்கும் அவளது முதிர்ச்சியயைக் காட்டுகிறது. அவர்கள் பரிந்துரைத்ததில் பல காட்டுக்கத்தல்கள், கடுமையான கெட்டவார்த்தைப் பாடல்கள், உருக்கும் மெலடிகள் எனப் பலதும் இருக்கும். அதில் எனக்கு மிக நெருக்கமான பாடல்களையே கேட்கிறேன்.

முதலில் Akon. இவரது முழுப் பெயரை எழுதவேண்டுமானால் கண்டிப்பாக நமது school register -களிளோ அல்லது அலுவலக படிவத்திலோ இடம் பத்தாது. முழுப்பேர் "Aliaune Damala Bouga Time Puru Nacka Lu Lu Lu Badara Akon Thiam". அதாவது ஒரு நெரிசலான செனகல் தெருவில் இவரை அப்படியே பேர் சொல்லி அழைத்தால், "என்ன சார்... கூப்பிட்டீங்களா ன்னு" ஒரு பத்துபேராவது திரும்பிப்பார்க்கக் கூடும். எதற்கு வம்பு... நாம் Akon என்றே அழைப்போம்.




செனகல் நாட்டில் 1973ல் பிறந்த இவர், 2004ம் ஆண்டு வெளிவந்த Locked Up இசைக் கோர்வையால் (Album) உலகுக்கு அறியப்பட்டார். பின் வெளிவந்த Konvicted இசைக்கோர்வைக்காக உலகில் இசைக் கலைஞர்களால் சிம்மசொப்பணமாகக் கருதப்படும் Grammy விருதைப் பெற்றார். அமரிக்காவின் Billboard Hot 100 வரிசையில் இவரது 18 ஹிட்டுகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் Billboard Hot 100 வரிசையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் ஒருங்கே 2 முறை பிடித்த பெருமை இவரை மட்டுமே சாரும்.

எனக்கு Akon-னில் மிகவும் பிடித்தமானது அவரது முதல் இசைக்கோர்வை Trouble லில் வந்த Lonely பாடல்.

பொதுவாகவே Akonனின் பாடல்கள் ஒரு மெல்லிய சோகத்தையும், ஆற்றவியலா துயரத்தையும் கொண்டே இருக்கும். தனது பிரிந்து போன காதலியின் துயரம் தாளாது அரற்றும் இந்த Lonely பாடல், காதலர்கள் உலகில் காலங்கள் கடந்து நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும், நம்ம ஊர் "காத்திருந்து...காத்திருந்து..." போலவோ அல்லது "ராசாத்தி உன்ன..." போலவோ.

(இது அந்தப் பாடலின் தமிழ் Version
நல்லா இருந்தா தமிழாளுமை... Not upto the Mark ன்னா சோதனை முயற்சி)

த‌னிமையாள‌ன்
------------------------

நடு நிசியில் விழித்துப் பார்த்தேன்
என்னருகில் நீயில்லை
கனவில்லை என்று நம்ப முடியாமல்
நடக்கத் துடங்கினேன்

புலம்பக்கூட யாருமின்றி என்னுள் நானே கதைக்கிறேன்
உனைச் சரணடைய என்ன புரியலாமென்று நினைக்கிறேன்

எல்லாம் சரிசெய்யவே நினைக்கிறேன்
ஏனெனில்...நீ சென்ற பின்னே வாழ்கை
நின்றே விட்டதடி பெண்ணே !

நானொரு த‌னிமையாள‌ன்.
என்னவளென்று எண்ணிக்கொள்ள
யாரிருக்கிறார் சொல்
நீ விலகிய‌ என் வானில் ஏதடி அழகு
நீ இன்றி அமையாது என் உலகு !

என் கனவில் பெட்டகமாய் ஒரு பெண்ணிருந்தாள்
நான் க‌டிந்த‌ போதும், ஒடிந்து விடாத‌ ம‌ல‌ர‌வ‌ள்
அவ‌ள் என்னை வில‌கி ஒளிந்து விடுவாள்
அவ‌ளைத்தேடி நான் தெருவோர‌மாக‌ அலைவேன்
என்ப‌தை என்னால் க‌ற்ப‌னை கூட‌ செய்ய‌ முடிய‌வில்லையே !

என்னை மகிழ்ச்சியில் திணற வைத்தவளே
இன்று அரற்ற வைத்துவிட்டாயே...
இனி உன்னை ஒரு நோடி நேர‌ம் பிரிந்தாலும்
என் உயிர் க‌டிகார‌ம் ஓடாது!

உன் விளையாட்டு போதும் பெண்ணே - வந்து
வீடு சேர‌டி க‌ண்ணே!!!

நானொரு த‌னிமையாள‌ன்.
என்னவளென்று எண்ணிக்கொள்ள
யாரிருக்கிறார் சொல்

நீ விலகிய‌ என் வானில் ஏதடி அழகு
நீ இன்றி அமையாது என் உலகு !

- என்று புலம்பித்தள்ளுகிறார்.

என்ன காட்டுக்கத்தல்களுக்கு நடுவேயும் ஏகோனின் பாடல்கள் மெல்லிய மெலடியை தன்னகத்தே கொண்டிருக்கும். அனைவரும் சென்று விட்ட அலுவலக பொழுதுகளில் முழுஓசையுடன் lonely இசையையே கேட்க விரும்புகிறேன். அது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

Mc.Rajan "இந்தப் பாடல் அப்படி ஒன்னும் Special கிடையாது... ஒருவேளை இந்தப் பாடுக்கும் உனக்கும் நிறைய ஒத்துப் போதல் இருகிறதால உனக்கு Specialla பிடிக்குதோ என்னவோன்னு" கலாய்க்கிறான். ஆனால் அப்படியொன்றும் இல்லை

நீங்க வேனும்னா கீழே கொடுத்துள்ள Link கில் போய் Lonely கேட்டுப்பாருங்க.

http://www.youtube.com/watch?v=wWMWRWYJqfg

ஒரு வேளை நீங்களும் அப்படிச் சொன்னால்...
வேற வழியில்லை...
ஒத்துக்கத் தான் வேனும்.

புதன், 18 ஜூலை, 2007

மதிலுகள் - வைக்கம் முகமது பஷீர்

Why Should I be free?
Who wants freedom??
- Vaikom Mohammed Basheer

"ஒரு இனம், பஷீர் மூலம் புதையுண்டு கிடந்த தங்கள் மன முகங்களை வெளிப்படுதிக்கொண்டுவிட்டது. பஷீர் நேர்மாற்றி, அவருடன் ஒப்பிட்டு பேச நம் மொழியில் யாரும் இல்லை. மேலும் அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். தமிழின் இன்றைய தேவை அது. "
(மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி)

மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமானவரும் தலைச்சனுமான பஷீர், இந்திய இலக்கியத்தை உலக மேடைக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான பிரதிநிதி. தன்னுடைய இயல்பான இலக்கிய நடையும், வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. தமிழிலில் அவைரை ஒத்துக்கூற எழுத்தாளர்கள் இல்லை.தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தில் காணப்படும் ஒரு வித இறுக்கம் (அவர்கள் எழுத்தை பொறுத்தமட்டில்), பஷீருக்கு நேர்மாறான ஒன்று। மலையாளத்தில் அவருடன் ஒத்து போகும் எழுத்தாளர் என்றால் கவிஞர் குஞ்ஞுன்னியைச் சொல்லலாம்.

பஷீரின் மிகைப்படுத்தல் இல்லாத வழக்கு, இயல்பு வாழ்க்கையிலிருந்து வெளியே வரமறுக்கும் அவரது கதாபாத்திரங்கள் - இவைகளினால்தான் மலையாளிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பஷீரின் பாத்திரங்கள் மெல்லிய இதையம் படைத்தவர்கள். பஷீரின் பெரும்பாண்மையான கதைகளில் அவரேதான் நாயகன்.வாசனையையும் சப்த்தத்தையும் நேசித்த பஷீர், வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அதனதன் ருசியோடு பருகியவர். வாழ்க்கைதான் பஷீரின் தத்துவம்.

தோற்றம் மறைவு இடையிலான வாழ்வைத்தவிற பிறிதொன்றுமில்லை என்று நம்புகிறவர் பஷீர். அதனால் தான் அவர் காலத்தால் அழியாமல் வாழ்கிறார்.

ஒவ்வொரு மலையாளிகளாலும் கட்டாயம் படிக்கப் பட்டதும், இன்னும் ஒவ்வொருவரின் மனதிலும் புது மெருகு குறையாமல் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் கதை 'மதிலுகள்'.


"கற்களால் ஆன அந்த உயர்ந்த மதில்கள் வானத்தை முட்டிக் கொண்டிருந்தன. அவை என்னையும் சென்ட்ரல் ஜெயிலையும் வளைத்துக் கொண்டிருந்தன" என்று துடங்குகிறது அந்த நாவல். பஷீர் என்கிற இளைஞன் பிடிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக இலக்கியப்பணியில் ஈடுபட்டதற்காக சிறைக்கு கொண்டுவரப் படுகிறான். சிறை ஒன்றும் அவனுக்கு புதிதல்ல, இருந்த போதும் இம்முறை அவனைக் கொண்டு வந்ததற்கான காரணம் அவனுக்கு பெருமையளிப்பதாய் இருந்தது. இந்த தண்டனை ஒன்றும் அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை. அதற்க்கும் போராட வேண்டியிருந்தது. தனது கேசை கோர்டுக்கே எடுக்காமல், உள்ளூர் ஜெயிலிலேயே ஒரு வருடகாலத்திற்கு மேல் கழித்தார்கள்। பின் உண்ணாவிரதமெல்லாம் இருந்துதான் இந்த தண்டனை கிட்டியது.

அந்த உள்ளூர் ஜெயிலை விட்டு வருகையில் கான்ஸ்டபிள் ஐயா 2 கட்டு பீடிகள், ஒரு பெட்டி தீக்குச்சி மற்றும் ஒரு பிலேடை கொடுத்து விட்டார்। பிலேடு எதற்கு என்கிறீர்களா?. சிறைச்சாலையில் பீடி கிடைப்பதை விட தீப்பெட்டி கிடைப்பது பெரிய கஷ்டம். ஒரு தீக்குச்சியை 2 அல்லது மூன்றாக பிளந்து தான் உபயோகப்படுத்த வேண்டும். அப்படியும் பீடி, சிகரட் எல்லாம் ஜெயில் போலீஸ் மூலமாக கிடைக்கும் தான். ஏன் அரசியல் காரணமாக அடிக்கடி வெளியே சென்று வரும் ட் ஆனால த‌லைவர்கள் கூட இருந்தார்கள். ஆனால் என்ன, அதற்கெல்லாம் கொஞ்சம் செலவாகும்.... என்று புலம்பியபடி ஜெயிலர் அறையை அடைகிறான் பஷீர். அவனது பீடி, தீக்குச்சி, பிளேடும் பரிமுதல் செய்யப் படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது என்கிறார் ஜெயிலர். பின் அவற்றை எடுத்து தன் தொப்பிக்குள் இட்டுக்கொள்கிறார். அமைதியாக பஷீர் ஜெயிலரைத் தொடர்ந்து நடக்கத் துவங்குகிறான். "ஜெயிலர் ஐயா... உங்களுக்கு எத்தனை குழந்தைக" என்கிறான் பஷீர். அதற்கு ஜெயிலர், "ஏன்... நாலு"...சற்று அமைதிக்குப் பின் நீங்க திடீர்னு செத்துப் போயிட்டா உங்க குழந்தைகளை யாரு பாதுப்பாங்க"॥ இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெயிலர், சற்றே யோசித்து..."ஆண்டவன் பாதுப்பான்" என்று சொல்லி மீண்டும் நடக்கத் துடங்குகிறார். "எனக்கென்னவோ அப்படித்தோனல... ஆண்டவன் கண்டிப்பா உங்கள நிக்க வச்சு கேள்வி கேப்பான்... பாவம் அந்த பஷீரின் பீடியையும் பிளெடையும் பிடிங்கிகிட்டையே... நீ விளங்குவையா?..ன்னு கேப்பான்" சட்டென முறைப்புடன் திரும்பிய ஜெயிலர், பஷீரைக் கண்டதும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் துடங்கினார். பீடி,தீப்பெட்டி, பிலேடையும் பஷீரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இரும்புக்கம்பிகள் நிறைந்த வரந்தாவை கடந்து சென்றார்கள். எல்லா கைதிகளும் உள்ளே அடைக்கப் பட்டிருந்ததாலோ என்னவோ, பெரும் நிசப்த்தம் நிலவியது. நாளை காலையே தூக்குக் கயிற்றை முத்தமிடுபவன், சுதந்திரமாய் வெளியே போவதன் கனவினில் வாழ்பவன், இங்கேயே செத்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் அன்பிற்குறியவர்களை நினைத்து உத்திரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவன் என பல விதமானவர்களைக் கடந்து பஷீரின் அறையை வந்தடைந்தார்கள். அவர் ஜெயிலுக்குள் நுழைந்தவுடனேயே ஒரு மகரந்தமான பெண் வாடை வீசுவதை உணர்ந்தான். ஜெயிலர்... "யோவ் நீ அதிஷ்டக்காரன் தான்" என்று சொன்னான். அதன் காரணம் புரியவில்லை. பிறகு தான் தெரியவந்தது. அவன் அறையை ஒட்டிய இரண்டு மதில்சுவர்கள் இருந்தன. வலது பக்கத்தில் இருந்தது சுதந்திரமான வெளி, நகரம். மற்றொரு மதிலின் மறுபுறம் இருந்தது கனவின் வாசனை, பெண்கள் ஜெயில்.

சாயிங்காலம் அழைத்து வ‌ரப்பட்ட கைதிகள் அன்றைய கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்। அதனால் பஷீருக்கு இரவு உணவு மறுக்கப்படுகிறது. கத்திக் கூச்சலிடவேண்டும் போலிருந்தது. பிறகு "ச்சீ...சோத்துக்குப் போய் இப்படி நடந்துகொள்வதா?...நாட்டுக்காக ஒரு நேரம் பட்டினி கிடந்தால் என்ன!" என்று நினைத்தவாரே அமைதியாகி, ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். அப்போதுதான் புரிந்தது அவசரத்தில் ஒரு முழு தீக்குச்சியையும் பற்றவைத்தது. சிறையில் முழு தீக்குச்சியை பற்றவைபது என்பது ஆடம்பரம். நாலு இழுப்புகளை இழுத்துவிட்டு, பீடியை அனைத்துவிட்டு பத்திரப்படுத்திக்கொண்டான்... நாளைய தேவைக்கு. அப்படியே உறங்கிப்போனான். இருள் பரவி அவன் அறை எங்கும் பரவியது. இப்படித்தான் துடங்கியது அவனது முதல் நாள் சென்ட்ரல் ஜெயில் வாழ்க்கை.

மறு நாள் காலையில் சென்று ஒவ்வொரு அரசியல் தலைவராகப் பார்த்துவந்தான். தலைவர்மார்களுக்கு தேவையான எல்லாமே கிடைத்துக்கொண்டிருந்தது. நள்ளிரவில் மதிலுக்கு அப்பாலிருந்து "பொத்...பொத்..."தென்று சப்த்தம் கேட்கும். தலைவர்மார்களுக்கு தேவையானவற்றை பொட்டலங்களாக வந்து விழும். கடிதப் போக்குவரத்தும் இப்படித்தான். அதிகாலையில் எல்லோரும் போய் பொறுக்கிக்கொள்வார்கள். ஒரு தலைவர் எப்போதும் ஒரு டின்னில் சீனிமிட்டாய் வைத்திருப்பார், ஒருவரோ ஊறுகாய், மற்றொருவர் ஃப்ரூட் சால்ட். ஒருவர் ஒரு தலையனை அளவுள்ள கார்ல் மார்க்ஸின் புத்தகம். ஒருவர் இரண்டு சீட்டுக்கட்டு வைத்திருந்தார்.ஆனால் யாரிடமும் டீத்தூள் இல்லை. என்ன தான் ஜெயிலாக இருந்தாலும் அவனால் டீ இல்லாமல் மட்டும் இருக்க முடியவில்லை. அதிஷ்டவசமாக ஜெயில் வார்டர்கள் அவன் நண்பனாகிவிடதால் தினந்தோறும் டீ, கோழி, முட்டை என்று எதற்கும் குறைவில்லை. அருகே ஒரு பலமரத்தடியில் சிறிய உடற்பயிற்சிகள், ஒரு டீ, மனம்போனபடி பீடி இழுவை என்று சுகமாக போனது வாழ்க்கை. பதிலுக்கு இவனும் பன்னீர்த்தோட்டம் அமைப்பது, தோட்ட வேலைகள் செய்வது என்று ஜெயிலுக்குள் சற்றே பிரபலமாகத்தான் செய்தான் பஷீர். தோட்ட வேலைகளுக்காக ஒருகத்தியும் கூட அவனுக்கு கொடுக்கப் பட்டிருந்தது. தன் கைப்பட பன்னீர்த்தோட்டங்கள் ஜெயிலுக்குள் வளர்வதைக் கண்டு சந்தோஷமடைந்தான். ஆனால் இந்த சுகங்கள் எல்லாம் நீண்ட நாள் நீடிக்க வில்லை.

எல்லோரும் உறங்கிப்போயிருக்கும் மதிய நேரங்களில் பஷீர் உறங்கப்போவதில்லை। சில சமயம் ஜெயில் மத்தியில் உயர்ந்திருந்த உயரிய பலா மரத்தின் உச்சி வரை எறிப் பார்ப்பான். தூரத்தில் சுதந்திரமான நகரம் தெரியும். அங்கிருப்பவர்கள், இங்கு நடப்பதேதும் தெரியாமல் கும்மாளமிட்டுக்கொண்டிருப்பதாக தெரியும். ஒரு மெல்லிய கவலை மேலெழத்துடங்கும். பொதுவாகவே பஷீர் அறையிலிருந்து வெளிவருவதை நிறுத்திக் கொண்டான். அப்படியே வந்தாலும் தன் செடிகளுடனும், அணில்களுடனும் தான் பேசிக்கொண்டிருப்பான். அப்படியொரு மதியப் பொழுதில்தான் அந்த அதிர்ச்சியான செய்தியை வார்டர் தெரிவித்தார்.


"அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுதலை செய்யப் போகிறார்கள்" என்றார்। எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்। எங்கு பார்த்தாலும் ஒரே ஆனந்த கோலாகலம் தான். எல்லோருடைய ஆடைகளையும் கொஞ்ச நேரத்தில் சின்ன ஜெயிலர் வந்து கொடுத்தார். பஷீர் தனது ஆடையை துவைத்து தேய்த்து ஒரு பேப்பருக்குள் மடித்து வைத்துக் கொண்டான். எல்லோரும் முடிவெட்டிக் கொண்டார்கள். பஷீரும் அங்கங்கு வளர்ந்திருந்த முடிகளை வெட்டிக்கொண்டான்.

விடுதலை ஆர்டர் வந்தது.அதில் எல்லோருடைய பேரும் வாசிக்கப் பட்டது। ஒருவனுடைய பெயரைத்தவிற। அது வேறு யாருமில்லை, பஷீரின் பெயர் தான். ஆர்டர் அனுப்பி வைக்கும் இடத்தில் தவறேதும் நடந்திருக்குமா என்று ஜெயில் சூப்பெரெண்டு மெனக்கெட்டு ஃபோன் போட்டு பார்த்தார்। பின்னர் உறுதி செய்யப்பட்டது.

பஷீருக்கு விடுதலை இல்லை !!!

எல்லா தலைவர்மாரும் புறப்பட்டார்கள்। பஷீர் நினைத்துக் கொண்டான்,ஃப்ரூட் சால்ட், கார்ல் மர்க்ஸின் 'தாஸ் கேப்பிடல்', இரண்டு சீட்டுக்கட்டு, ஒரு புட்டி நிறைய நார்த்தங்காய் ஊறுகாய், பெரிய மிட்டாய் டின் ஒன்றில் வற்றல், சர்க்கரை, புகையிலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாமே இனி எனக்குத் தான்.
எல்லோரும் போய்விட்டார்கள்। ஒரு சப்த்தம் இல்லை। எங்கு பார்த்தாலும் ஆளில்லாத ஊரில் நிலவுவது போல மயான அமைதி. அழிந்துபோன ஒரு நகரத்தின் சந்தடியற்ற தெருவழியே நடந்து செல்வதைப் போலிருந்தது .பஷீரைத்தவிற ஒரு ஈ, எறும்பு இல்லை. ஒரு ஆபத்து வருவதைப் போல ஒரு உணர்வு. மகிழ்ச்சி இல்லை, சிரிப்பு இல்லை. இரவும் பகலும் மனதில் ஒரே போராட்டம்.

எதோ ஒரு தீர்மாண‌ம் எடுத்துவிட்டவன் போல, கார்ல் மர்க்ஸின் 'தாஸ் கேப்பிடல்'லை சின்ன ஜெயிலருக்கு கொடுத்து விட்டான். சர்க்கரையை ஆஸ்பத்திரியில் கொடுத்து எல்லோருக்கும் விநியோகிக்கச் சொன்னான். சீட்டுக்கட்டை ஜெயில் வார்டனுக்கும், புகையிலையை தினமும் கஞ்சி கொண்டுவரும் பையனுக்கும் கொடுத்துவிட்டான்.ஃப்ரூட்சால்டை கீழே கொட்டிவிட்டான். ஊறுகாயை மட்டும் தானே வைத்துக் கொண்டான். மனதில் சற்றும் அமைதியே இல்லை. "ஆண்டவா இவன் ஒரு அப்பாவி, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ தான் சொல்ல வேண்டும். ஐயோ... என்னால் சிரிக்கக் கூட முடியவில்லையே..." என்று இறைவனிடம் மனமுரிகி பிராத்தனை செய்கிறான்.

ஜெயிலிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்ற எண்ணம் மேலெழுகிறது. தன்னை அனைத்து நிற்கும் ஒரு மதில் சுவறைக்கடந்தால் மற்றொரு மதில் சுவர். அதன் மேல் நடந்து சென்று குதித்தால் தப்பித்து விடலாம். இரவானால், வார்டர் எப்படியும் தூங்கிவிடுவார். ஆனால் அதுவொன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. காவலர்கள் இரவு முழுவதுமாக கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ஒரே வழி இருக்கிறது. நல்ல மழைப்பொழுதாய் இருப்பின் யாரும் இருக்க மாட்டார்கள். அதுவே தப்பிக்க சரியான வழி என்று யோசித்துக் கொண்டான். தப்பிக்க தேவையான பொருட்கள்,தன் தோட்டக் கத்தி, சேகரித்தக் கயிறுகள் என தயாராக‌ நல்லதொரு மழைஇரவுக்காய் காத்திருக்கத் துடங்கினான்.

இதற்கிடையே ஆண்கள் ஜெயிலுக்கும், பெண்கள் ஜெயிலுக்குமிடையே ஒரு துளை இருந்ததைக் கண்டான்.அது சிமென்ட் போட்டு அடைக்கப் பட்டிருந்தது. ஒரு காலத்தில் இந்த துளை வழியாக ஆண்கள் பெண்களது முகத்தையும், பெண்கள் ஆண்கள் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். இப்போதும் கூட இந்தத் துளை வழியாகத் தான் பெண் வாடை ஆண்கள் ஜெயிலுக்குள் வீசுகிறது போலும். அப்போது இருந்த வார்டன் துளைவழியாக அந்தப் பெண்களைப்பார்க்க காசு வசூலித்ததாகவும், அதைத் தொடர்ந்துவந்த பிரச்சனைகளினால் தான் அந்தத் துளை அடைக்கப் பட்டதாகவும் பேசிக்கொண்டனர்.

திடீரென்று ஒரு நாள் அங்கு விளையாடும் அணில்களில் ஒன்றைப் பிடித்து வளர்க்க வேண்டுமென்று தோன்றியது. அதனால் அணில்கள் நிறைய இருக்கும் பெண்கள் ஜெயிலின் மதிலோரம் நடந்து கொண்டிருந்தான், தன்னை மறந்து விசிலடித்தபடியே. .அப்போது தான் அவன் காதில் தேவகீதம் ஒன்று ஒலித்தது. அது ஒரு பெண்ணின் குரல்.

"யார் அங்கே விசிலடிப்பது?"
பஷீரின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. பெண்கள் ஜெயிலிலிருந்து வரும் குரலல்லவா??.
" நான் தான்.."
"கொஞ்ச‌ம் ச‌த்தமாக‌ ...இர‌ண்டுபேருக்கும் ந‌டுவில் சுவ‌ர் இருக்கிற‌த‌ல்ல‌வா... நான் என்றால்..." என்று குர‌ல் திரும்ப‌வும் வ‌ந்த‌து.

பின் பெய‌ர், த‌ண்ட‌னைக்கால‌ம், செய்த‌ குற்ற‌ம் என்று எல்லாம் பேசிக்கொண்டார்க‌ள். அவ‌ள் பெய‌ர் நாராயணி. வ‌ய‌து இருப‌த்தியிர‌ண்டு. பதினேழு வருடம் தண்டனைக்காலம். படித்திருக்கிறாளாம். சிறைக்கு வந்து ஒருவருடம் ஆகிறது... என்று எல்லாம் அறிந்து கொண்டான்.
சற்று நேரம் பேச்சி எதுவும் இல்லை. பிறகு கேட்டாள்:

"ஒரு ரோஜா செடி தருவீர்களா??"
"உனக்கெப்படி தெரியும் இங்கு ரோஜா செடி இருப்பது" எனறான்
"இது ஜெயில்தானே... இங்கு எல்லோருக்கும் எல்லாமே தெரியும்.இங்கு இரகசியம் என்று எதுவும் கிடையாது. ஒரே ஒரு ரோஜாச் செடி...தருவீர்களா??" என்றாள் சற்றே அவசரமான தோணியில்.

பஷீர் சற்று உரக்கவே " நாராயணீ...இந்த உலகில் உள்ள பூச்செடிகள் எல்லாம் உனக்கு தான் சொந்தம்... இது போதுமா..?" என்றான். அவனுள் மகிழ்ச்சி பொங்க.

நாராயணி குலுங்கிக்குலுங்கிச் சிரித்தாள். பின் "ஊஹூம்...எனக்கு ஒரு செடி போதும்" என்றாள்.

பஷீர் என்ன இந்தப் பெண் ஒரு செடி கேட்க்கிறாள். நான் என் உயிரையே இவளுக்காக தர தயாராக இருக்கிறேன், என்று நினைத்துக் கொண்டான். பெண்களின் தேவைகள் எப்போதும் மிகச்சிறியதானவையும், அடிப்படையானதவுமாக‌வே இருக்கிறது.
"அப்படியே நில்...கொண்டு வர்ரேன்॥" என்று ஓடினான்। அவன் ஓட்டத்தில் அதுவரையில் விளையாடிக் கொண்டிருந்த அணில்கள் பயந்து மரத்தில் ஏறிக்கொண்டன.

அவன் தோட்டத்திலேயே மிக அழகான ரோஜாச் செடியொன்றை வேரோடு எடுத்து அதனடியில் சாக்கொன்றைக் கட்டி மதிலருகே எடுத்துச் சென்றான்.

"நாராயணீ..." என்றழைத்தான்.
பதிலேதும் இல்லை.
மீண்டும் அவன் "..ஓ.." என்று சப்த்தமெழுப்பினான்.
பதிலுக்கு அவள் சிரித்தாள். "நான் முதலில் கூப்பிட்டபோது எங்கு போயிருந்தாய்?""இங்கு தான் இருந்தேன்... நான் இல்லாத மாதிரி நடித்தேன்.."" நீ கள்ளிதான்.."
அவள் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். "ரோஜாச்செடி கொண்டுவந்தீர்களா...." என்றாள்.

இவன் பதில் ஒன்றும் பேசவில்லை, ஏனென்றால் அப்போது பேசமுடியாதபடிக்கு ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவள், அவன் பெயரைச்சொல்லி அழைத்தாள். இவனுக்கு நன்றாகக் கேட்டது. அவள் மீண்டும் பேசினாள்

" தெய்வத்தை மட்டும் நான் இத்தனை அன்போடு கூப்பிட்டிருந்தால்..."
" கூப்பிட்டிருந்தால்..."
"அன்போடு கூப்பிட்டிருந்தால்...என்றல்லவா சொன்னேன்" என திருத்தினாள்
"தெய்வமே என் முன் வந்திருக்கும்...என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்".
அதற்கு "இல்லை நான்...அப்போது ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன்...ஒவ்வொரு மலரிலும்....ஒவ்வொரு இலையிலும்... மொக்கிலும்".
அவள் எதுவும் பேசவில்லை.
"நாராயணீ..." என்றழைத்தான்.
நாராயணி தனக்கு அழுகை வருகிறது என்றாள்.
அவன் அமைதியாய் இருந்துவிட்டு, பின் பேசத்துடங்கினான்...
ரோஜாச்செடியை வீணாக்கக் கூடாதென்றும்...ஒரு குழியைத்தோண்டி, கடவுளின் பெயரைச் சொல்லி நடவேண்டும் என்றும், தினமும் பிரியப்பட்டவரை எண்ணி தண்ணீர் ஊற்றினால் நன்கு வளரும் என்று சொன்னான். ஒரு உயர்ந்த கம்பை அவள் நீட்ட ரோஜாச்செடியை அதன் வழியே கடத்திவிட்டான்.

ஒரு சாம்ராஜ்யத்தையே கையில் பிடித்துவிட்டதைப் போல அவள் குதூகலித்தாள்.
"சரி நான் மலர்களைப் பரிக்கப் போகிறேன்" என்றான்.
"என் தலையில் வைக்கவா..."
"இல்லை...இதையத்தில் வைக்க...".

அந்த செடியின் மலர்கள் ஒவ்வொன்றிலும் அவன் இதழ்கள் பதிந்திருக்கின்றன. மதிலுடன் சேர்ந்து நின்று அந்த கற்சுவரை வருடினான். அவள் தான் செடியை நட்டு தங்களை நினைத்து தண்ணீர் ஊற்றுவதாகவும். எப்போதும் மதிலின் மேல் பகுதியை பார்க்குமாறும், அதில் இந்த கம்பு தெரியும் போதெல்லாம் தான் அங்கு இருப்பதாகவும் சொன்னாள். "கம்பைக் கண்டவுடன் தாங்கள் வருவீர்கள் தானே..." என்று கேட்டாள்" நிச்சையமாய்..."
ஒரு விம்மல் சத்தம். "என்ன நாராயணீ...""தெய்வமே...எனக்கு அழுகை வருகிறது...""ஏன்...""தெரியவில்லை..."

பஷீரின் மனது கஷ்டமாகவே " நாராயணீ... நீ முதலில் போய் செடியை நட்டுவிட்டு வா..." என்றான்.
அறைக்குத் திரும்பினான். அன்றுதான் அறை மிகவும் குப்பையாக இருப்பதை உணர்ந்தான். எல்லாம் சரிசெய்து வைத்தான்.உலகம் திடீரென்று அழகாக மாறிவிட்டதைப் போல இருந்தது. தொடர்ந்துவந்த பகல் பொழுதுகள் அவன் மதிலைப் பார்த்தவண்ணமே அமர்ந்திருந்தான்.ஒரு நாள் அந்த திவ்யக்காட்சி அவனுக்குத் தெரிந்தது. மதில்மேல் ஒரு கம்பு தலையைச் சிலுப்பிக் கொண்டு நின்றது. பஷீர் பாய்ந்து சென்றான்.

"என்ன பஷீர்... எங்கே போகிறீர்கள்..." என்று கேட்டவண்ணமே சின்ன வார்டன் தோன்றினார். இந்த ஆள் அந்தக் கம்பைக்காணாத வண்ணம் வார்டருக்குபேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். எங்கே போய் விடுவாளோ என்ற பயம் வேறு. நல்ல வேளையாக சீக்கிரம் அவரை அனுப்பிவைத்துவிட்டு மதிலுக்கு ஓடினான். மதிலருகே ஒரே அமைதி. இவன் மட்டும் அவளின் பெயர் கூறி அழைத்தான்.

"..ம்..என்ன வேண்டும் உங்களுக்கு...""ஏன்..""பிறகென்ன..எத்தெனை நேரம் உங்களுக்காக காத்திருப்பது, இந்தக் கம்பைக் கையில் பிடித்டுக்கொண்டு...கைகளே கடுப்பெடுக்கத் துடங்கிவிட்டன!!"
" நான் வேண்டுமானால் கையைத் தடவிக்கொடுக்கட்டுமா??"" எங்கே தடவிக்கொடுங்கள் பார்ப்போம்" என்று தன் கையை மதில்சுவரின் மீது வைக்கிறாள். பஷீர் மதிலின் மறுபுறம் சுவரைத் தடவிக்கொடுக்க கண்களில் நீர் பெருகுகிறது.

இப்படியே பல பகல்ப்பொழுதுகள் மதில்ப்புற சம்பாக்ஷண்ங்களில் போகிறது. திண்பண்டங்கள் - கேள்விறகு, மீன், முட்டை என்று எல்லாமே கம்பின் வழியாக நாராயணி கொடுத்துவிடுகிறாள். பஷீரும் தன்னிடமுள்ள ஊறுகாயை கொடுத்து, எல்லோருக்கும் கொடுக்கும்படியாகச் சொல்கிறாள். "எல்லோருக்கும் கொடுக்கிறேன்...ஆனால் நீங்கள் காதலிப்பது என்னை மட்டும் தானே என எள்ளுகிறாள். ரோஜாச்செடி நன்றாக வளர்கிறது.

மாதங்கள் கரைகிறது. பகல் பொழுதுகள் மதிலைப்பார்த்தவண்ணமும், இரவுகள் ஒருவரைஒருவர் நினைத்தவண்ணமும் கடக்கிறது. அப்படியொரு இரவில் பஷீர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கனமழை இரவொன்று வருகிறது. இரு மதில்கள், ஒரு புறம் சுதந்திரவெளி, மறுபுறம், முகம் கூடப் பார்த்திராத தன் காதல். யோசித்தவண்ணமே உறங்கச்சென்றுவிடுகிறான். ஏனோ அவனுக்கு இப்போது தப்பித்து போகவேண்டுமென்று தோன்றவில்லை.

ஒரு நாள், 'எததனை நாள் நாம் இப்படியே பேசிக்கொண்டிருப்பது... எத்தனை இரவுகள் தான் நான் அழுது தீர்ப்பது... உங்களை எப்படிக் காண்பது' என்று கேட்க்கிறாள். அப்போது தான் பஷீர் தன்னை ஆஸ்பத்திரியில் பார்க்கலாம் என்று சொன்னான். இன்று திங்கட்கிழமை, வரும் வியாழக்கிழமை பதினோரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவேன் என்று சொன்னாள் நாராயணி. 'எப்படி'...என்றதற்கு 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டாள். மீண்டும் புற‌ப்ப‌டும் போது சொல்லிச்சென்றாள், "ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்...வியாழ‌க்கிழ‌மை...ப‌தினோரு ம‌ணீ..". அவ‌ள் சென்ற‌ பின்னும் கூட‌ வெகுநேர‌ம் ம‌திலோர‌மாக‌வே நின்றிந்துவிட்டுப் போனான் ப‌ஷீர்.

செவ்வாய்க்கிழமையிலிருந்தே தயாராகிவிட்டான். முடிவெட்டிக்கொண்டு, அன்றைக்கு அணியவேண்டிய துணியை துவைத்து, மடித்து வைத்துக் கொண்டான். புதன் கிழமையும் இருவரும் பேசிக்கொண்டார்க்ள். ஒருவருக்கொருவர் தான் எப்படியிருப்போம் என்று சொல்லிக்கொண்டார்கள். தனது வலது கன்னத்தில் ஒரு மச்சம் இருக்கும் என்று அவள் சொல்லிவைத்திருந்தாள். நீண்ட நாள் காத்திக்கொண்டிருந்த அந்த தினம் வந்தது.

வியாழன் காலை ஒரு விழாப்பொழுதைப் போல விடிந்தது. பஷீர் காலையிலிருந்தே ஒரே பாட்டும் கூத்தாகவும், அணில்களோடும், மலர்களோடும் பேசியபடி மகிழ்ச்சியாக இருந்தான். மணி பத்திருக்கும் போதே சென்று ஆஸ்பத்திரியருகே நின்று விட்டான். ஒரு ரோஜாப் பூவைப் பறித்து கையில் வைத்துக் கொண்டான்.

அப்போது தான் சின்ன ஜெயிலர் வந்தான், சிரித்துக்கொண்டே!. அவன் கையில் ஒரு பொட்டலம் வைத்திருந்தான். அது அவன் சிறைக்கு வந்தபோது போட்டிருந்த ஆடை. "பஷீர் நீங்கள் சாதரண உடையணிந்து நான் பார்த்ததே இல்லை...இந்தாங்க இதப் போட்டுட்டு வாங்க" என்றான். இதைச்சொல்லும் போதே மதிலுக்குப் பின்னால் ஒரு கம்பு உயர்ந்தது. நடுங்கிய குரலில் பஷீர் " இல்லை கசங்கிவிடுமே..." என்றான்.

"பரவாயில்லை போட்டுட்டு வாங்க பாப்போம்" என்றான்.
வேஷ்டியையும் ஜிப்பாவையும் அணிந்துவிட்டு வந்து "எப்படி இருக்கு சார்" என்று கேட்டான் பஷீர்.
"பிரமாதம் பஷீர்..."
" நௌ...யூ கேன் கோ...யூ ஆர் ஃப்ரீ..." என்றான் " நீங்க இனி சுதந்திரப் புருஷர்...நீண்ட நாளாக நிலுவையில் இருந்த உங்களது விடுதலை ஆர்டர் வந்துவிட்டது".

இதைக்கேட்டு நடுங்கிவிட்டான். கண்கள் இருண்டுவிட்டன. காது குப்பென்று அடைத்துவிட்டது. பைத்தியம் பிடிப்பது போலாகிவிட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
"வை ஷூட் ஐ பி ஃப்ரீ...ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம்?"(ஏன் என்னை விடுதலை செய்கிறீர்கள்...யாருக்கு வேண்டும் விடுதலை).

உங்களை விடுதலை செய்ய ஆர்டர் வந்திருகிறது. இனி நீங்கள் இருக்க அனுமதியோ, அவசியமோ இல்லை என்று தெரிவித்தான் வார்டர். படுக்கையை அவனே சுருட்டினான். எழுதிய சில கதைகளை ஜேபியில் திணித்தான். ஊருக்கு போகும் பைசாவையும் கொடுத்தான்.

தன் அறை இழுத்துப் பூட்டப்பட்டது. மதிலுக்குப் பின் கம்பு உயர்ந்தவண்ணமே இருந்தது. கனத்த இதயத்துடன் தனது பன்னீர்த்தோட்டத்தின் மத்தியில் நின்றான். அதில் ஒரு ரோஜாவைக் கிள்ளி கையில் வைத்துக் கொண்டான். கண்களில் நீர் மல்கியது...
சிறையின் பெரிய இரும்புக் கதவுகள் பயங்கரமான சப்த்தத்துடன் பஷீரின் முதுகுக்குப் பின்னால் சாத்தியது...

என்று நிறைவடைகிறது கதை.

பிரியப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை விட வேறு என்ன வேண்டியிருக்கிறது. வேறு எதை சுதந்திரம் என்று சொல்கிறீர்கள். ஹூ வான்ட்ஸ் ஃப்ரீடம் என்று வினவுகிறார் பஷீர். மதிலருகே நின்ற நாராயணி என்ன ஆனாள், ரோஜாவுடன் சென்ற பஷீர் என்ற இளைஞன் என்ன ஆனான் என்ற முடிவில்லா கேள்விகளை காலங்கள் கடந்து கேட்டுக் கொண்டிருக்கிறது 'மதிலுகள்' நாவல்.
பின்னாளில் அடூர் கோபாலகிருஷ்ணனால் படமாக எடுக்கப் பட்ட 'மதிலுகள்' உலக அரங்கில் வெகுவாகப் பேசப்பட்டது. பஷீர் கதாபத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தமிழர்களால் வாசிக்கப் படவும், சுவாசிக்கப் படவும் வேண்டிய மிக முக்கியமான‌ எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர். இந்த பதிவை பஷீரின் 13வது நினைவு தினத்தில் அமர்ந்து எழுதி முடிக்கிறேன் என்பது மிகுந்த சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.


5, ஜூலை, 2007
சென்னை.

திங்கள், 4 ஜூன், 2007

HAPPY தமிழ் NEW YEAR ‍ திருவண்ணாமலை PART I

விடுமுறையின் காரணமாகத்தான், நாம் இன்னும் சில‌ நாட்களை, பண்டிகைகளையே நினைவு வைத்திருக்கிறோம். அக்டோபர் 2 டோ, ஆகஸ்ட் 15 தோ, சனவரி 26 ரோ, விடுமுறையாக இல்லாவிடில் பலரது நினைவுகளிலிருந்து அந்த நாட்களின் முக்கியத்துவம் அழிந்து போயிருக்கும். காந்தியை விட, நேரு வரும் தலைமுறையினரால் சீக்கிரம் மறக்கப்படுவார் என்பது உறுதி (இதில் Oblique Politics எதையும் நான் கலக்கவில்லை). அப்படித்தான் சமீபத்தில் முடிந்த தமிழ் புத்தாண்டும் சனிக்கிழமையில் வ‌ந்து தொலைத்ததால் சற்றே டல்லடித்தது போலவே இருந்தது. வாழ்த்து மின்னஞ்சல்கள் கூட மிகக் குறைவாகவே வந்தன.(சாதரண நாட்களிலேயே எனது மின்னஞ்சல் வருகைப்பெட்டி (Inbox) ஒரு நாளைக்கு 100 மெயில்களைக் கடக்கும், ஆனால் அன்று வெறும் 88 மட்டுமே). வழக்கம் போலவே மாலை மணி 6ஐக் கடந்திருந்த போது, எனது பாதி நாள் தான் கடந்திருந்தது. நான் என் கணிணியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தேன்.

வெகு நாளாகவே திருவண்ணாமலை என்னை உள்ளிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறது. அமரிக்க நேரத்திற்கு மாறிப் போயிருந்த நண்பர்கள், மற்றும் இது ஆன்மிகப் பயனமோ என்று பயந்த நண்பர்களெல்லாம் வரமுடியாத காரணத்தை முன்வைத்ததால், நானும் கோவிந்தும் மட்டுமே போவதாய் இருந்தது. எங்க போவது...? அலுவலகத்திலேயே மணி 11 ஐப் பார்த்துவிட்டேன். நான் 11.40துக்கெல்லாம் வீட்டுக்கு போன போது..." நாளை போக வேண்டாம்" என்று கூற முடியாத படிக்கு கோவிந்த் உறங்கிப் போயிருந்தான்.

புத்தாண்டை முன்னிட்டு தமிழ்க் 'குடி'மகன்கள் மணி 12 அடிக்கும் வரைக் காத்திருந்து, பின் ஆரம்பித்த கச்சேரி, வாக்குவாதம் வாந்திகளின்றி 'சுபம்'மாக முடியவே மணி 2.00 ஆகி விட்டது. கோடை வெப்பத்தைத் தாண்டி காலைப் பனி படியத் துவங்கியிருந்தது. திருவண்ணாமலை Plan 'கோவிந்தா'தான் என்று உறங்கச்சென்றேன்.அதற்குள் அலாரம் அலரத்தொடங்கியது. மணி 4.00 ஆகியிருந்தது. கோவிந்திடம் சொல்லி சமாளித்துப் பார்த்தேன். அவன் சமாதானங்களை ஏற்காதாவனாக, போயே தீரனும்னு சொல்லிவிட்டான். சிலரது பிடிவாதம் நம்மை எரிச்சலடையச் அமைதியடைய செய்கிறது, சிலரது பிடிவாதம் நம்மை மௌனமடைய செய்து விடுகிறது. அன்று நான் அமைதியாகி விட்டேன்.

சித்திரையின் முதல்நாள், அதிகாலை‍மழையில் நனைந்திருந்தது. குளித்து வரும் மகளிரைப் போல, நகரம் வசீகரமும் அழகும் கூடியிருந்தது கண்டேன். எல்லா மக்களின் முகத்திலும் முறுவல் இருந்தது. எல்லோரும் காரணமற்று புன்னகைத்த படி வந்தார்கள்.மழையின் குளிர்ச்சி அவர்கள் சுபாவங்கள் மீதும் படிந்துவிடக் கூடும் போலிருக்கிறது. கட்டிடங்கள், சாலைகள், வாகனங்கள் எல்லாமே புதிதாய் பார்ப்பது போன்று தோற்றமளித்தது.வெளிச்சத்தின் கீற்றுகள் முழுவதுமாக மண்ணில் விழுவதற்குள் நாங்கள் தி.மலைக்கு பயணிக்க துடங்கியிருந்தோம்.

உடன் சென்ற நண்பன் கோவிந்த், பிரயாணங்களின் போது எப்போதும் டிரைவர் சீட்டின் அருகாமை சீட்களில் மட்டுமே அமர்ந்து பிரயாணிக்கும் விசித்திரமான பழக்கமுடையவனாக இருந்தான். வண்டியில் எல்லா இருக்கைகளும் காலியாக இருந்தாலும், டிரைவர் சீட்டிற்கு இடதுபுறமுள்ள இருவர் அமரும் சீட்டே அவனது விருப்பமாக இருக்கும். நாங்கள் பல இடங்களுக்கு ஒன்றாக செல்வதால், எனக்கும் அது பழகிப்போயிருந்தது.எப்படிப்பட்ட நெடிய பயணமாக இருந்தாலும் சிறிதும் உறங்காமல், ஜன்னலோரமாக கடந்து செல்லும் சிற்றூர்களையும், வாகனரவமற்ற சாலைகளையும், பிரம்மாண்டமாய் விரியும் மௌனத்தில், தனியே ஓசை எழுப்பியபடி செல்லும் தன் வாகனததை கவனித்தபடியே வருவான். பின் இறங்குகையில் எந்தெந்த ஊர் எத்தனை மணிக்கு வந்ததென்றும், வழியில் வாகனங்கள் ஏதேனும் விபத்துக்குள்ளானதா...என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருபான்.வயதுகள் கடந்துவிட்ட போதும், பிரயாணம் மீதான அவனது வியப்பு குறையவே இல்லை. பின்னால் செல்லும் மரங்கள், கை அசைக்கும் சிறுவர்கள், வாட்டர் பாக்கட் விற்கும் பையஙள், கரகரத்த குரலில் முறுக்கு, மிச்சர் விற்கும் வியாபாரி என்று எல்லாரையும் இப்பவும் அவனால் ரசிக்க முடிகிறது. நான் சென்னையைக் கடப்பதற்குள் உறங்கிப்போயிருந்தேன்.

செல்பேசியில் புத்தாண்டு குறுஞ்செய்திகள் வரத்தொடங்கியிருந்த போது, நாங்கள் ஒரு மோட்டல் நிறுத்தம் கடந்து, மதுராந்தகத்தை வந்தடைந்திருந்தோம். கரிய நெடுஞ்சாலை ஏதோ விசித்திர விலங்கின் நாவைப் போலவும், நாங்கள் யாவரும் அந்நாவில் வெளிநோக்கி பயனிக்கிறோமா, அல்லது வ‌யிற்றினுள் செல்கிறோமா என்பது புலப்படாததுமாக இருந்தது.

செஞ்சி வந்தடைந்த போது, வெயில் கன்னங்களில் அறைந்தது. அந்நகரமே வெயிலுக்கு தன்னை தந்துவிட்டு மல்லார்ந்து படுத்திருப்பது போலிருந்தது. உருண்டுகிடந்த வட்ட வட்ட பாறைகளுக்கு மேல், செஞ்சி மோனமும், நிசப்த்தமுமாய் தங்கியிருந்தது. ரகசியங்களை விழுங்கிவிட்டு, அவை நாவினிருந்து புற‌ண்டுவிடாமலிருக்க கூழாங்கற்களை நாவினடியில் வைத்து கானகத்தில் ஒளிந்துகொண்ட மஹாபாரத விதுரனை ஏனோ நினைவுபடுத்தியது அம்மலையின் அமைதி. மறுபுறம் பாறைகளின் ஆக்கிரமிப்பும், கோட்டையின் பழமையும் இனம் புரியாத அச்சம் தருவதாக இருந்தது. ரதசாரிகளின் பேச்சொலியும், குதிரைகளின் குளம்படிச்சத்தமும் மிக அருகில் கேட்க்கதித் துடங்கியது. முகமூடியிட்ட இரண்டு குதிரை வீரர்கள் கடந்து சென்றார்கள். அவர்கள் நீண்ட வாள் வைத்திருந்தது தெரிந்தது.அதில் உயரமானவன் மற்றவனிடம் சொல்லி ஏதோ கேட்க்கச் சொன்னான். மற்றவன் "பயனியே...செஞ்சியின் மயக்கம் உனக்கு தீரவில்லையா... நீ செஞ்சியைக் காண வேண்டுமா..." என்றான். என் பதிலை எதிர்பாராதவனாய் அவனே பேசத் துடங்கினான் "செஞ்சி எல்லோர் கண்களிலும் புலப்படுவதில்லை. நீ காண்பது வெறும் செஞ்சியின் ஒப்பனையே. உண்மையில் செஞ்சி ரகசியங்களின் இருப்பிடம். நீ அப்படியே போய்விடு என்று கூறியவனாக, தன் உடைவாளை எடுத்து முகத்தின் முன் நீட்டினான்."நீங்கள் யார்?" எனக் கேட்க வேண்டும் போலிருந்தது. அவர்களாகவே "நாங்கள் மலைக்கள்ளர்கள்" என்று கூறிவிட்டு மெல்லிய புன்னகையுடன் மறைந்தார்கள்.

திடுக்கிட்டு நான் எழுந்தபோது நகர்வற்ற பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காய் நின்று கொண்டிருந்தது. பேருந்து இரு மலைகளுக்கு நடுவே ஒரு கட்டெரும்பைப் போல ஊர்ந்து சென்றது. செஞ்சியிலிருந்து தி.மலை வரை செல்லும் சாலை, மரங்களால் சூழப்பட்டு, வெயிலின் கால்கள் தரையில் இறஙகாத வண்ணமிருந்தது. நாங்கள் தி.மலையை அடைந்த போது உச்சிவெயில். உறக்கமற்ற கண்களுக்கு வெளிச்சம் மிக கூச்சம் தருவதாக இருந்தது.மக்கள் கூட்டம் அங்கிங்கு அலைவுகொண்டிருந்தது.

காற்றின் மணத்தில் கூட அவ்விடத்தின் ஏகாந்தத்தை உணர முடிந்தது. எதிரில் பிரம்மாண்டமான மலை, ஆச்சிர்யத்தையும், பூரிப்பையும் உண்டாக்க்கியது. ஏதோ நேற்றுதான் அந்த ம‌லை பொங்கியது போலத்தோன்றியது.ஆனால் அந்த பூரிப்பு, மகிழ்ச்சியெல்லாம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

ஒருவேளை நான் போகத் தேர்ந்தெடுத்த நாள் சரியில்லையோ என்னவோ தெரியவில்லை. மக்கள் கூட்டம் வீதிகளெங்கும் காண முடிந்தது. மற்றபடி கோவில்களுக்குள் செல்லத்துடங்கியதிலிருந்தே அதிருப்த்தியும், கோபமுமே மேலெழுந்தது ‍-

  • காவியுடை அணிந்து வாசலில் புகைபிடித்தபடி பிச்சையெடுக்கும் பிறவிகள் (துறவிகள் அல்ல)
  • அடுத்த தட்டில் காசு விழுந்ததற்காய் அசிங்கமான வார்த்தைகளில் வையும் பிக்ஷாதாரிகள்.
  • இலவச அன்னதானத்திற்காக பேதமின்றி அடித்துக் கொள்ளும் 'பக்த கோடிகள்'
  • 'பெரிய'மனிதர்களை பல்லிளித்து வரவேற்கும் அர்சகன்கள்.
  • குடும்பம் குட்டிகள் சகிதம் 10, 20 டிக்கட்டுடன் வழியடைத்து வரும் அன்பர்கள் (இவர்கள் பாண்டவர் பூமி ராஜ்கிரண் குடும்பத்தைப்போல எல்லோரும் லைன் கட்டிதான் நடப்பார்கள்) "சனியனே சீக்கிரம் வாடி..."; அல்லது "...ஒக்காளி...புளியோதொர சூப்பரு யா மாமு"... "அந்த மஞ்ச சுடிதாருடா...பாக்குறா பாரு..பாக்குறா பாரு.." என்று பேசிக்கொண்டு குடும்ப பஞ்சாயத்துக்களை உரக்க கத்தி செல்வது.
  • டோக்கன் முறையில் கடவுளை கூறு போட்டு விற்பது. அதாவது 'பொது'வழிஎன்று ஒன்று இருக்கும், 'பொதுவலாத' வழிகளும் பல இருக்கும். பைசா கொடுத்தால் 'அருள்' சீக்கிரமாகவும், 'அதிகமாகவும்?' வாங்கிக்கொள்ளலாமாம். அதுவும், எப்போதாவது, இல்லை அடிக்கடி 'நன்'கொடை (கணக்கில் வராதது) கொடுப்பவராக இருப்பின் கடவுளின் பெட்ரூம் வரை சென்று, தோள் மீது கைபோட்டு, காஃபி சாபிட்டு வரும் வரைக்கும் 'அனுமதி' அளிக்கப்படும். அடிப்படையில் இந்த பணக்காரபக்த'கோடி'களுக்கு அடிமைப்பட்டு கிடப்பது அர்ச்சகர்களா? ஆண்டவனா?.

நீங்க எல்லா பாவங்களையும் செய்துட்டு, உண்டியல்ல காசு போட்டுடுவீங்க, கடவுள் அதை வாங்கீட்டு உங்க பாவங்களை மன்னிச்சுடுவார். காசு வாங்கீட்டு வேல பாக்குறான்னா, கடவுளும் கூலி தானே?.

கால் கடுக்க தூங்கும் கைக்குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு நிற்கும் புதுத்தாய்கள்; வெயில் தாளாது " நீங்க போயிட்டு வாங்கோ.. நான் வரலை.." என்று வரிசையை விட்டு விலகி நிழல் தேடி போகும் வயோதியர்கள்;
வரும் மூத்திரத்தை அடக்க முடியாமல், கண்ணீர் முட்ட அம்மாவிடம் கெஞ்சும் சிறுமியிடம் "கொஞ்சம் பொறுத்துக்கடி...இதோ போயிடலாம்" என்று சமாதானம் கூறும் தாய்மார்கள்; இவர்கள் எல்லாம் காலகாலமாக இதே வரிசையில் தான் நின்று கொண்டிருப்பார்கள்.

வரிசை என்ற ஒழுக்கத்தை மீற நாமே வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இந்த ஒழுக்கக்கேட்டிற்கு இவர்கள் கொடுத்திருக்கும் பெயர்கள் ஒரு மிருகத்தனமான ஆதிக்கத்துவத்தைக் காட்டுகிறது. அதாவது Very Important Persons (VIP) என்று ஒரு 'Q'. அதற்கு பொருள் என்னவென்றால் மற்றவர்களெல்லாம் அறவே முக்கியத்துவமற்றவர்கள் Extremely Unimportant என்பதுதான். இப்படி நம் மீது செலுத்தப் படும் ஆதிக்கத்தை, புறக்கணிப்பை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது தான் மிக வேதனையான விஷயம். 'தர்மதரிசனம்' என்று வேறு ஒரு பேர் உண்டு, அப்படியானால்...மற்றவை அதர்மமான தரிசனம் தானே?. இப்படி ஒரு 'Socalled' அருளை ஒரு பிரிவினையின் ஆதிக்கத்தால் பெறுவதை எந்த மதமும், கடவுளும் அனுமதிக்கும்??.

ஐஸ்வர்யா ராயோ, அமித்தாபோ, ரஜினிகாந்தோ...எதற்கு...ஒரு குத்தாட்டக்கார நடன மங்கைக்கோ தனிப்பட்ட Private தரிசனம் கிடைப்பது என்பது எதைக் காட்டுகிறது?. அவர்கள் கூத்தாடிகள் என்பதைத் தவிர வேறு என்ன சிறப்பிருக்கிறது இவர்களிடம். அப்படி கலைஞர்களை சிறப்பிக்கத் தெரிந்தவர்களோ என்னவோ என்று எடுத்துக் கொண்டால்... இதே 'மரியாதை' டெல்லி கனேஷிற்கோ, மீசை முருகேசனுக்கோ, க‌விஞ‌ர் முத்துலிங்க‌த்திற்கோ, தேனி குஞ்ச‌ரம்மாவிற்கோ கிடைக்குமா என்றால் இல்லை. அப்படியானால் இந்த மண்டியிடலுக்கு சரியான காரணம் என்னவென்று யோசிக்கும் போது மிகக்கேவலமாக தான் உள்ளது.

சமீபத்தில் 'பரவை' முனியம்மாவை நண்பர் 'மாப்பு' பிரபு CMBT பேருந்து நிலையத்தில் சந்தித்தார். ஆளரவம் நெருங்காமல் தன் பேரன் போல வயதுடைய ஒரு பையனுடன் காத்திருந்தார். நண்பர் சென்று சற்றுநேரம் உரையாடி, உங்களுடன் எனக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தன் விருப்பத்தை சொன்னதற்கு "என்ன தம்பி...எங்கூடையா?!" என்று வியந்திருக்கிறார். "ஏன் எடுத்துக்கக் கூடாதா? " என்று இவர் கேட்டதற்கு "இல்ல இதுவரைக்கும் யாரும் வந்து ஒருவார்த்த பேசல, ஏதோ ஒரு வெளாட்டுப் பொருள் மாதிரி பாத்துட்டு போறாங்க... நீங்க போட்டோ எடுக்கனும்னு சொல்றீங்களே..." என்று மிக வெட்கத்துடனும், பெருமிதத்துடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். So கலைஞர்களுடைய மதிப்பு இங்கு இப்படித்தான் உள்ளது.

கோவிலிலும் கூட சமத்துவத்தைக் கடைபிடிக்கத் தவறுகிற, சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாத இந்த தேசத்தில் நாம் இன்னும் வெட்கமின்றி Communism, Democracy என்று பிதற்றலாக பேசிக்கொண்டிருக்கிறோம். த்தூ...

இப்படியான கடுப்பில் எனக்கு வேறு எங்கும் போக மனமில்லாமல் சில சாமியார்கள் படுத்திருந்த ஒரு கல்மண்டபத்தில் தீர்த்தவாயில் தலைவைத்து சாய்ந்துகொண்டேன். சில நேரத்தில் கழுத்து வலித்தது போலிந்தபோது தான், நான் அப்படியே உறங்கிப் போயிருந்தது தெரியவந்தது. "சாமியாருக்கு ஜீன்ஸ் வேற" என்று யாரோ புலம்பிச்சென்றார்கள். நான் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. படுத்துக்கொண்டேன். உடன் வந்த நண்பன் சொன்னான், "ஒரு துண்ட விரிச்சிருந்தா நல்ல அமவுண்டு வசூலாயிருக்கும் போல" என்று.

உறக்கம் கலைந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினோம்.

தி.மலையில் என்னுடைய தேடல் அறுபட்டுவிட்டது. கண்டிப்பாக வேறு ஒரு தருணத்தில் வரவேண்டுமென்று எனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டேன். Prof. வேல்முருகன் அடுத்த முறை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அப்போதாவது அந்த கோவிலை Avoid செய்ய வேண்டும்.

அங்கு சில ஊர்வாசிகள் சொன்னார்கள்:

"ரமேஸ்வரம் என்று எழுதினால் புண்ணியம்,

கும்பகோணம் என்று சொன்னால் புண்ணியம்,

திருவ‌ண்ணாம‌லையை நினைத்தாலே புண்ணியம்" என்று.

அன்று ம‌திய‌ம் தீர்த்த‌வாயில் த‌லை வைத்து உற‌ங்கிய‌து, க‌ழுத்தில் ஏற்ப‌டித்திக் கொண்டிருக்கும் வ‌லி,
இப்ப்போதும் திருவ‌ண்ணாம‌லை-யை நினைவுப‌டுத்திக் கொண்டே இருக்கிற‌து.

ஓம் ந‌ம‌ச்சிவாய‌ !!!

எழுத்து - புகைப்ப‌ட‌ம் Praveen : புகைப்ப‌ட‌க்க‌ருவி - Sony Erricson K510i

செவ்வாய், 10 ஏப்ரல், 2007

ஒரு காலைப்பொழுதும், சில பேச்சுலர் ரூம்களும்

கனவுகள் கலைந்து விடுகிற போது விருப்பங்கள் குலைந்து விடுகிறது.இன்று காலை வழக்கம் போலவே 8.30 மணிக்கேல்லாம் அலுவலகப் பணிகளைத் துடங்கிவிட்டு இருக்கையில் தான் அந்த செய்தி வந்தது. இந்த ப்ராஜக்ட்டில் உள்ள பணிகள் எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்ளுமாறு சொன்னார் ப்ராஜக்டின் மூத்த நபர் ஒருவர்.ப்ராஜக்ட் தள்ளிப் போடப்பட்டதாகவும், இனி இதில் நீங்க்கள் தொடரத் தேவை இல்லை என்றும் சொன்னர்கள். தர்க்காலிக சந்தோஷத்தை அளித்து வந்த வேலை அது. தினமும் சிலவற்றை கற்றுக் கொடுத்த பணி அது. அவரவருக்கு தனிப்பட்ட முறையில் அந்த பணியைச் சார்ந்து சில கனவுகள் இருந்தன... எல்லாம் BULLSHIT ஆகிவிட்டது.

என்னால் ஜீரநிக்க முடியவே இல்லை. இழவு விழுந்த வீடு போல இருந்தது. ஆனால் இப்போதெல்லம் விருப்பமற்ற செயல்கள் நடகும் போது சிரிக்கப் பழகியிருக்கிறோம். இதைப் பற்றி புலம்புவதற்காகவே நானும் அனுவும் ஒருமுறை காஃபிக்கு போனோம். இந்த அசைன்மன்ட்டில் நல்ல ரோல் இருந்தது எங்களுக்கு. என்னையும் மனுஷனா மதிச்சாங்க. பல சேலஞ்சஸை எதிர்பார்த்து இருந்தோம்.எப்ப‌டியும் வ‌ர‌ப்போகும் மாத‌ங்க‌ளை பிஸியாக‌ வைத்திருக்கும் என்று ந‌ம்பி இருந்தோம். எல்லாம் WENT INTO ABYSS. ச‌ட்டென‌ ஏற்றுக்கொள்ள முடிய‌வில்லை.ம‌ன‌ம் எதிலும் ஈடுப‌ட‌வில்லை. சரியென்று வலையில் சாரு நிவேதித்தாவின் 'கோனல் பக்கங்கள்' படிக்க துடங்கினேன். நன்றாக போனது. மதியம் சாப்பிடக்கூட போகவில்லை. வழக்கமாக சப்பாட்டை ஒரு சடங்காக செய்வதில் சற்றும் எனக்கு உடன்பாடில்லை. கல்லூரி நாட்களில் பெரும்பான்மையான மதிய உணவு எனக்கு ஒரு டீ, அரைப் பேக்கட் டைகர் பிஸ்கட்டிலேயே முடிந்து விடும்.

வலையலைதலுக்கு நடுவே கௌதம் மின்னஞ்சல் அரட்டையில் இனைந்தான்.சற்றே நான் சுஜாதாவைத் திட்டவும், அவன் வக்காலத்து வாங்கவும் செய்தான். Butterfly Effect படம் பற்றி பேசத் துடங்கி பாதியில் இனைப்பு துண்டானது. வெகு நேர‌ம் அலுவ‌ல‌கத்தில் இருக்க முடிய‌வில்லை (விருப்ப‌ம் இல்லை). மாலை 5 ம‌ணிக்கெல்லாம் இருக்கையை காலி செய்து விட்டேன். நான் சென்னை வந்ததிலிருந்து 5 மணிக்கு கிள‌ம்புவது இது தான் இரண்டாவது முறை.ஒரு முறை ஊருக்கு போவதற்காக). அத‌னால் 5 ம‌ணிக்கு போய் என்ன‌ செய்வ‌தென்று சரியான‌ திட்ட‌ங்க‌ள் ஏதும் கிடையாது. 5ம‌ணிக்கு வீட்டுக்கு போப‌வ‌ர்க‌ள் எல்லாம் என்ன‌ செய்வார்க‌ள் என்று கேட்டுக் கொள்ள‌வும் இல்லை.

ஆனந்தனுக்கு செல்பேசி விஷயத்தை சொன்னேன். கிரோம்பேட்டை ரயில் நிலையத்தில் காத்திருப்பதாக சொன்னான்.நான் எப்போது எங்கு கூப்பிட்டாலும் வந்து விடுவான்.நல்ல வேளை ('டீக்கடை' என்ற‌) ராஜா டில்லியில் இருக்கிறான், அவ‌னாக‌ இருந்திருந்தால் அதிக‌ப்பிர‌ச‌ங்கித்த‌ன‌மாக‌ 'என்ன‌ ச‌ர‌க்கு வாங்க‌ட்டும்'னு கேட்டிருப்பான். ப‌ல‌ வார இறுதிகளில் பேசுவதற்காகவே சந்தித்துக் கொள்வோம்.காலை விடியும் வரை பேசிக்கொண்டே இருப்போம். நாங்கள் பேசுவதர்க்கான கருக்கள் எப்போதும் குறைந்ததே இல்லை. நான் 6மணிக்கெல்லாம் தாம்பரம் வந்து, மின்ரயிலில் ஏறி இருந்தேன்.

'ரிச்சர்ட் பேச்'சின் 'ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' புத்தகம் எடுத்து மீண்டும் படிக்கத் துடங்கினேன்(இது 20 அல்லது 25வது தடவையாக இருக்கலாம். இந்த புத்தகம் பற்றியே ஒரு பதிவு எழுத வேண்டும் என இருக்கிறேன்.)

ஜோனின் தாய் அவனிடம் கேட்பாள்:

'ஏன் ஜோன் நீ மற்றவர்களைப் போல இருக்க மறுக்கிறாய் ?, அதில் என்ன கஷ்டம்... நீ வெறும் எலும்பும் தோலும் தான்.ஆம் வெறும் 'எலும்பும்...' 'தோலும்...!!' என்பாள்.

ஜோனின் தந்தை:

' டேய்...இதோ பார்.. பனிக்காலம் தொலைவில் இல்லை,க‌ப்ப‌ல்க‌ள் அருகில் இராது, மீன்கள் மேலே வராது, நீ ஏதாவது க‌ற்க வேண்டுமாயின் உன் இரையை எப்ப‌டி தேடுவது என்று க‌ற்றுக் கொள்.ம‌றந்து விட்டாயா, நீ ப‌ற‌ப்பதற்கு கார‌ண‌மே நீ இரை தேட‌ வேண்டும் என்பதால் தான்".

அத‌ற்கு ஜோன் சொல்லுவான்:

" என‌க்கு வெறும் எலும்பும் தோலுமாக‌ இருப்பதில் எந்த அவ‌மான‌மும் இல்லை...கஷ்டமும் இல்லை....என‌க்கு விண்ணில் என்னால் என்ன‌ செய்ய‌ முடியும், என்ன‌ செய்ய‌ முடியாது என்று தெரிய வேண்டும்...

'ஆம் என‌க்கு தெரிய‌ வேண்டும்' அவ்வ‌ளவுதான்'

என்று சொல்லிவிட்டு மீண்டும் விண்ணில் ப‌யிற்சிக்காக‌ ப‌ற‌க்க‌ தொட‌ங்குவான் ஜோன்".அந்த வசனங்கள் சற்றே சமாதான‌மாக‌ இருந்தது. அத‌‌ற்குள் ச‌ன‌டோரிய‌ம் க‌டந்து வெகு தூர‌மாகி விட்டது. ச‌ன‌டோரிய‌த்தில் ஏறியிருந்த‌‌ ஒரு ர‌யில் பாட‌க‌ர் நெற்றியில் விபூதி சகித‌ம், ஒரு சிறிய‌ பெண் வழி ந‌ட‌த்த‌ 'புல்லாங்குழ‌ல் கொடுத்த‌ மூங்கில்க‌ளே' பாடிய‌ப‌டி வந்துகொண்டிருந்தார்.ரயில் பாடகர்கள் எல்லோரும் ஒரே குரல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். என் முக‌த்திலிருந்த‌‌ வெறுமை இன்னும் குறைய‌வில்லை என்றே தோன்றியது. ஏதாவது த‌ர‌வேண்டி பேன்ட் பாக்கெட்டைத் துழாவினேன், இடைஞ்சலாக இருந்தது. கிரோம்பேட்டை நெருங்கி விட்டது, அவ‌ச‌ர‌த்தில் ச‌ட்டைப் ப‌ய்யிலிருந்த‌ 10ரூபாயை அந்த‌‌ சிறுமி கையில் திணித்துவிட்டு இற‌ங்கினேன். அருகில் இருந்த‌ ப‌ய‌ணி கார‌ண‌மின்றி என்னைப் பார்த்து முறைத்தார்

போய் ஒரு டீ, ச‌மோசா ச‌ப்பிட்டோம். கிரோம்பேட்டை க‌டைகளில்க‌ர‌ம் கிடைப்ப‌தில்லை.தாம்ப‌ர‌ம் ஏரியாக்க‌ளில் எல்லா க‌டைக‌ளிலும் கிடைக்கின்ற‌ன‌. ச‌ற்றே பேசிக்கொண்டே ந‌ட‌க்க‌லாம் என்று பார்த்தால் ந‌க‌ர‌ நெரிச‌லில் உட்கார‌ கூட‌ இட‌மில்லாம‌ல் போய்விட்டது நினைவுக்கு வந்தது. ச‌ரியென்று நண்பர்களின் வீடுகளை விசிட்டடிக்க எண்ணி கிளம்பினோம். ஸ்டேஷன் சாலையை ஒட்டி நடக்கும் போது, BLOOD DIAMOND கதையை சொல்லத்துடங்கியிருந்தேன்.

எல்லாமே typical பேச்சுலர் ரூம். பூட்டப்படாத வீடு, கூட்டப்படாத தரை, மடிக்கப்படாத படுக்கை, தலையனையாய் மாறிவிட்டுருந்த Complete Reference புத்தகங்கள். கண்டிப்பாக ஒரு கணிணி பிரித்துப் போட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். வேலை தேடும், அல்லது வேறு வேலை தேடும் பேச்சுலர் ரூம்களெல்லாம் ஒவ்வொறு போதி மரங்கள். வாழ்வின் சாரம் அங்கு சிதறி இருக்கிறது. ஏமற்றத்தின் சோகம், எதிர்பார்ப்பின் வேதனை, தோல்வியின் வலி, உழைப்பின் மகிழ்ச்சி, புறக்கணிப்பின் நிழல் எல்லாம் கவிந்து நிற்கிறது இவ்வீடுகளில். அவ்ர்களது கனவுகள்,கோபங்கள், தீர்மானங்களெல்லாம் அவர்களது சுவர்களில் வெவ்வேறு வாசகங்களாக தீட்டப்பட்டிருக்கிறது. யாருமற்ற நேரங்களிலும், நள்ளிரவு கடந்த நிசப்ததிலும் சுவர்களின் வழியே காமத்தின் ஊற்று வடியத் துவங்கி, இரவை விழுங்கி விடும்.நாங்கள் எல்லொரும் ஒன்றாக வாழ்வை துடங்கியவர்கள் தான். ஒரே தட்டில் உண்டவர்கள் தான். ஆனால் பல்வேறு காரங்களினால் சற்று தாமதமாக்கப் பட்டிருக்கிறது அவர்களது சாமான்ய வாழ்கை. ஆனாலும் சந்தோஷத்திற்கும் குதூகலத்திற்கும் என்றும் அங்கு குறைவே இருந்ததில்லை.

நான் சைதாப்பேட்டையில் 8க்கு8 ரூமில் தங்கியிருந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்ததாக குறைபட்டுச் சொன்னான், அந்த ரூமின் one of the four ரூம்மேட். எங்கள் வீடு சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் ஒரு 13 வீடு குடியிருப்பின் மாடியில் அமைந்திருந்தது. வாட்டர் டேங்கின் அடியில் மோட்டர் ரூமாக இருந்த அந்த அறையை, பின்னாளில் அதற்கான தேவை இல்லாததால், பேச்சுலர் ரூமாக மற்றியிருந்தார்கள்.

சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு, சென்னையில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் சலைகளில் ஒன்று. எப்போதும் ஏதாவது கோவில் விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். School பிள்ளைகள், கோயிலுக்கு போகிறவர்கள், குடிகாரர்கள், போலீஸ்காரர்கள், பாசுரம் படிப்பவர்கள், தண்ணிலாரிக்கு ஓடுபவர்கள் என்று எப்போதும் தெருவில் ஆளிருந்துகொண்டே இருக்கும்.

எங்கள் ஒற்றை ரூம் மாடியிலிருந்து தெருவைப் பார்த்தே பல மாலைகள் கழிந்திருக்கும். மெகாசீரியல்கள் துடங்கியவுடன் பெண்கள் எல்லாம், வீட்டினுள் சென்று விடுவார்கள். நாங்கள் கீழே இறங்கி டீக்கடைக்கு சென்றுவிடுவோம் (டீ குடிக்க தான்!).

வேலு மிலிட்டரியில்(ஹோட்டல்) யாருடைய TREAT- டையாவது முடித்துவிட்டு, வீடு திரும்புகையில் தெரு நிசப்த்தமாகி இருக்கும். எங்கள் அபார்ட்மெண்ட் குழந்ததைகள் HOMEWORK முடிந்து படுக்கச் சென்றிருப்பார்கள். இந்த நேரங்களில் எங்களுக்கு சத்தமாய் சிரிக்கவோ, அடுத்த கம்பவுண்டு தாண்டி போகிற அளவுக்கு டெஸிபெல் சத்ததில் பேசவோ அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. நாளைய கனவுகள், இன்றைய பிரச்சனைகள், அரசியல், இலக்கியம், சினிமா, பிஸினஸ் என்று எல்லா பஞ்சாயத்துகளும் (குறைந்த சத்ததில்) முடிந்து பெண்ட்ஹௌசின் ஒன்றிரண்டு எபிசோடுகளோடு தூங்கச் சென்று விடுவோம். அப்போதெல்லாம் நன்றாக தூங்கியதாக சொன்னான், சமீபத்தில் சந்தித்த, மாதம் அரை லகரம் கிட்ட சம்பாதிக்கும் ஒரு நண்பன்.

பேச்சுலர் அறை என்பது பெண்மை நிறம்பாத வெளி. பெண்களுக்கு ப்ரத்யேக வாசனை உண்டென்றும், பெண்களின் பேச்சொலி சுவர்களில் பட்டு எதிரோலிக்கும் சப்த்தம் எப்படிப்பட்டதென்றும் அவை அறிந்ததில்லை. ஆயினும் கவிதைகள், ஓவியம், புத்தகம், சம்பாக்ஷனைகள் என்று எப்படியெப்படியோ பெண் நுழைந்து விடுகிறாள். பேச்சுலர் வீடுகள் பொறுத்த மட்டில் பெண் என்பது புறக்கணிக்கப் பட்ட கனி. ரூம்களுக்கு பெண்களை அழைத்துகு வருபவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுகிறார்கள். அது மற்ற அறைவாசிகளின் அந்தரங்கத்தில் தலையிடுதலாக கருதப்பட்டது . மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்த ஒரு நண்பனது வீட்டில் தன் தோழியை அழைத்து வந்ததற்காக யாரும் அவனுடன் முகம் கொடுத்து பேசப்போவதில்லை என்று தீர்மாணித்து இருந்தார்கள். மறுநாள் காலை அங்கு நான் சென்ற போது தான், வீட்டின் சீரமைப்பு புலப்பட்டது. புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. பாய்கள் மடிக்கப்பட்டிருந்தன, அறைகள் கூட்டப் பட்டிருந்தது.அதன் பிறகு அந்த நடவடிக்கை வாடிக்கை ஆயிருக்கலாம், எனக்கு தெரியவில்லை. நான் அவ்விடத்திலிருந்து இடம் பெயர்ந்து விட்டேன். அப்போது, ஓரிரு பெண்களின் வருகை வரவேற்க தக்கதென்றே நினைத்தேன்.ஆனால் சென்னை‍-குடிவைப்போர் சட்ட திட்டங்களுக்கு அவை உட்பட்டதல்ல. பின்னாளில் அப்பெண்ணின் வருகை மீண்டும் அமையாலாமென குறைந்த பட்ச அடிப்படை ஒழுங்குகள் ( பீர் பாட்டில்களை அகற்றுவது, உள்ளாடைகளை கண்களுக்கு புலப்படாத தூரத்தில் வைப்பது, சுவரில் நடனமாடும் 'படு வறுமையில்' வாழ்ந்த அழ‌கிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கியது ) எல்லாம் அவ்வீட்டில் நடந்தேறியது.

பின்னாளில் வெவ்வேறு மாநிலங்களில், ஊர்களில் தனியறைகளில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தனிமை சில நேரங்களில் தான் சௌகரியம், மற்ற நேரங்களில், அவஸ்த்தை. பெங்களூரில் ஞாயிற்றுக் கிழமைகள் போல வேதனை தருவது ஏதும் இருக்க முடியாது. வெயில் முதுகில் ஏறி வரும் வரை தூங்கிக் கிடக்கவேண்டியிருக்கும். கொஞ்சம் படிக்கலாம், துணிதுவைக்காலாம், வாங்கி வைத்த பேக்கிரி பண்டம் ஏதாவது சாபிடலாம், வருங்காலம் பற்றி கொஞ்சம் வருந்தலாம், மறுபடியும் CYCLE தொடரும். விடுமுறை நாள் பகல்களில் அறையில் நானும் நானும் மட்டுமே இருப்போம். அப்போது ப‌ல‌தும் பேச‌ ஆர‌ம்பிக்கும் அறை. "கையில் பிர‌ம்பின்றி, புத்த‌க‌ங்க‌ளின்றி, ப‌ரீட்சையின்றி ப‌ல‌ பாட‌ங்க‌ளை சொல்லித்த‌ரும் அறை" என்று பிர‌ப‌ஞ்ச‌ன் சொன்னது நினைவிருக்கிற‌து.

அலுவல் காரணமாக மீண்டும் சென்னை வந்தபின் சக‌அலுவலகர்களுடன் நாட்கள் போனது. சகஅலுவலகர்களுடன் வசிக்கும் வீடுகள், அலுவலகத்தின் மற்றும் ஒரு அறையாகவே கருதப்படுகிறது. ஐ.டி தொழில்நுட்ப‌ அலுவலகங்களில், அசலான அன்பு சாத்தியமாக முடியாத மூர்க்கமான சூழ்நிலையே நிலவுவதாக நான் உணர்கிறேன்.ஒத்த நோக்குள்ள மனிதர்கள் இல்லாவிடில் வீடு என்பது வெறும் தூங்கும் அறையாகவே இருக்கிறது. அதனால்தான் நண்பர்களை வீட்டிற்கு வரவைத்து (அல்லது சென்று) பேசிக்கொண்டிருக்கும் நிலை. இசை பற்றியோ, சினிமா ப‌ற்றியோ, chaos பற்றியோ, quantum physics பற்றியோ, butterfly effect குறித்தோ, நிலையாமை குறித்தோ, வள்ளலாரின் Alchemy பற்றியோ, ஆண்‍‍பெண் Bogus behaviorism பற்றியோ, எமோஷனல் ஃப்ரீடமின் தேவை குறித்தோ, இந்தியாவில் சிவில் வாரின் சாத்தியங்கள் பற்றியோ யாரிடமாவது பேசப்போனால் கூட வலிய தேவையற்று அன்பு செலுத்தவேண்டியுள்ளது. அல்லது பைத்தியக்காரன் என்ற வசவோ, பாவம் என்ற பட்சாதாபத்தையோ சம்பாதிக்க வேண்டியுள்ளது. சற்றே உணர்ச்சிவசப் பட்டு பேசிவிட்டால் கூட சரக்கடித்துவிட்டு பேசுகிறானோ என்ற சந்தேகத்திற்க்கு ஆளாகவேண்டியுள்ளது. அதனால் அந்த பலப்பரீட்ஷைக்கெல்லாம் போவதில்லை என முடிவுசெய்துள்ளேன். யாராவது சென்னையில் எங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டா கூட... "8 ரூம்மேட்ஸ்ஸோட தனியாதான் இருக்கேன்" என்று தான் சொல்லிக்கொள்கிறேன்.

எந்த அறையும் என்னை 1 வருடம் கூட முழுதாக வைத்துக் கொண்டதில்லை. கனவுகளால், நிராசைகளால், கோபங்களால், காமத்தால், விசும்பலால் ஒவ்வொறு அறையும் நிரப்பப்பட்ட பிறகு வேறு அறைகளை நிரப்புவதற்காக கிளம்பிவிடுகிறேன். இப்போதய அறையில் கழிப்பறை நிரம்புவது போல மேற்சொன்னவையெல்லாம் நிறம்பிவிட்டன. ஏதேனும் மாடிவீடு, ஒற்றை அறை, எதிர்வீட்டுப் பெண், ரிட்டயர்ட் ஆன- English பேசும் கிழம், அம்மாவை நினைவூட்டும் பூக்காரி சகிதம் புறநகர் சென்னையில் ஏதேனும் வீடு இருந்தால் நீங்களும் சொல்லுங்களேன் !!!

அறையும் நானுமாய்
இரவைக் கழிக்கிறோம்
தூங்காத அறையுடன் சேர்ந்து
நானும் தூக்கத்தை துரத்திவிடுகிறேன்

எங்களுக்குள் பல இரகசியங்கள் உண்டு
யாரிடமும் எதுவும் கூறாத இந்த அறை
என் நண்பனை விட உசத்தி

செருப்பும் அறைக்குள்தான்
குடிதண்ணீரும் குளிக்கும் தண்ணீரும் இதற்குள்தான்
புத்தகங்கள் துணிகள்
ஷேவிங் செட் கண்ணாடி
இன்னபிற என எல்லாம்
இந்த அறைக்குள்தான்

அறை என் வீடு
ஆனால்‍ -‍
வீடு என்பது அறையா? ‍

(அய்யப்ப மாதவன்)