இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 ஜூன், 2007

HAPPY தமிழ் NEW YEAR ‍ திருவண்ணாமலை PART I

விடுமுறையின் காரணமாகத்தான், நாம் இன்னும் சில‌ நாட்களை, பண்டிகைகளையே நினைவு வைத்திருக்கிறோம். அக்டோபர் 2 டோ, ஆகஸ்ட் 15 தோ, சனவரி 26 ரோ, விடுமுறையாக இல்லாவிடில் பலரது நினைவுகளிலிருந்து அந்த நாட்களின் முக்கியத்துவம் அழிந்து போயிருக்கும். காந்தியை விட, நேரு வரும் தலைமுறையினரால் சீக்கிரம் மறக்கப்படுவார் என்பது உறுதி (இதில் Oblique Politics எதையும் நான் கலக்கவில்லை). அப்படித்தான் சமீபத்தில் முடிந்த தமிழ் புத்தாண்டும் சனிக்கிழமையில் வ‌ந்து தொலைத்ததால் சற்றே டல்லடித்தது போலவே இருந்தது. வாழ்த்து மின்னஞ்சல்கள் கூட மிகக் குறைவாகவே வந்தன.(சாதரண நாட்களிலேயே எனது மின்னஞ்சல் வருகைப்பெட்டி (Inbox) ஒரு நாளைக்கு 100 மெயில்களைக் கடக்கும், ஆனால் அன்று வெறும் 88 மட்டுமே). வழக்கம் போலவே மாலை மணி 6ஐக் கடந்திருந்த போது, எனது பாதி நாள் தான் கடந்திருந்தது. நான் என் கணிணியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தேன்.

வெகு நாளாகவே திருவண்ணாமலை என்னை உள்ளிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறது. அமரிக்க நேரத்திற்கு மாறிப் போயிருந்த நண்பர்கள், மற்றும் இது ஆன்மிகப் பயனமோ என்று பயந்த நண்பர்களெல்லாம் வரமுடியாத காரணத்தை முன்வைத்ததால், நானும் கோவிந்தும் மட்டுமே போவதாய் இருந்தது. எங்க போவது...? அலுவலகத்திலேயே மணி 11 ஐப் பார்த்துவிட்டேன். நான் 11.40துக்கெல்லாம் வீட்டுக்கு போன போது..." நாளை போக வேண்டாம்" என்று கூற முடியாத படிக்கு கோவிந்த் உறங்கிப் போயிருந்தான்.

புத்தாண்டை முன்னிட்டு தமிழ்க் 'குடி'மகன்கள் மணி 12 அடிக்கும் வரைக் காத்திருந்து, பின் ஆரம்பித்த கச்சேரி, வாக்குவாதம் வாந்திகளின்றி 'சுபம்'மாக முடியவே மணி 2.00 ஆகி விட்டது. கோடை வெப்பத்தைத் தாண்டி காலைப் பனி படியத் துவங்கியிருந்தது. திருவண்ணாமலை Plan 'கோவிந்தா'தான் என்று உறங்கச்சென்றேன்.அதற்குள் அலாரம் அலரத்தொடங்கியது. மணி 4.00 ஆகியிருந்தது. கோவிந்திடம் சொல்லி சமாளித்துப் பார்த்தேன். அவன் சமாதானங்களை ஏற்காதாவனாக, போயே தீரனும்னு சொல்லிவிட்டான். சிலரது பிடிவாதம் நம்மை எரிச்சலடையச் அமைதியடைய செய்கிறது, சிலரது பிடிவாதம் நம்மை மௌனமடைய செய்து விடுகிறது. அன்று நான் அமைதியாகி விட்டேன்.

சித்திரையின் முதல்நாள், அதிகாலை‍மழையில் நனைந்திருந்தது. குளித்து வரும் மகளிரைப் போல, நகரம் வசீகரமும் அழகும் கூடியிருந்தது கண்டேன். எல்லா மக்களின் முகத்திலும் முறுவல் இருந்தது. எல்லோரும் காரணமற்று புன்னகைத்த படி வந்தார்கள்.மழையின் குளிர்ச்சி அவர்கள் சுபாவங்கள் மீதும் படிந்துவிடக் கூடும் போலிருக்கிறது. கட்டிடங்கள், சாலைகள், வாகனங்கள் எல்லாமே புதிதாய் பார்ப்பது போன்று தோற்றமளித்தது.வெளிச்சத்தின் கீற்றுகள் முழுவதுமாக மண்ணில் விழுவதற்குள் நாங்கள் தி.மலைக்கு பயணிக்க துடங்கியிருந்தோம்.

உடன் சென்ற நண்பன் கோவிந்த், பிரயாணங்களின் போது எப்போதும் டிரைவர் சீட்டின் அருகாமை சீட்களில் மட்டுமே அமர்ந்து பிரயாணிக்கும் விசித்திரமான பழக்கமுடையவனாக இருந்தான். வண்டியில் எல்லா இருக்கைகளும் காலியாக இருந்தாலும், டிரைவர் சீட்டிற்கு இடதுபுறமுள்ள இருவர் அமரும் சீட்டே அவனது விருப்பமாக இருக்கும். நாங்கள் பல இடங்களுக்கு ஒன்றாக செல்வதால், எனக்கும் அது பழகிப்போயிருந்தது.எப்படிப்பட்ட நெடிய பயணமாக இருந்தாலும் சிறிதும் உறங்காமல், ஜன்னலோரமாக கடந்து செல்லும் சிற்றூர்களையும், வாகனரவமற்ற சாலைகளையும், பிரம்மாண்டமாய் விரியும் மௌனத்தில், தனியே ஓசை எழுப்பியபடி செல்லும் தன் வாகனததை கவனித்தபடியே வருவான். பின் இறங்குகையில் எந்தெந்த ஊர் எத்தனை மணிக்கு வந்ததென்றும், வழியில் வாகனங்கள் ஏதேனும் விபத்துக்குள்ளானதா...என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருபான்.வயதுகள் கடந்துவிட்ட போதும், பிரயாணம் மீதான அவனது வியப்பு குறையவே இல்லை. பின்னால் செல்லும் மரங்கள், கை அசைக்கும் சிறுவர்கள், வாட்டர் பாக்கட் விற்கும் பையஙள், கரகரத்த குரலில் முறுக்கு, மிச்சர் விற்கும் வியாபாரி என்று எல்லாரையும் இப்பவும் அவனால் ரசிக்க முடிகிறது. நான் சென்னையைக் கடப்பதற்குள் உறங்கிப்போயிருந்தேன்.

செல்பேசியில் புத்தாண்டு குறுஞ்செய்திகள் வரத்தொடங்கியிருந்த போது, நாங்கள் ஒரு மோட்டல் நிறுத்தம் கடந்து, மதுராந்தகத்தை வந்தடைந்திருந்தோம். கரிய நெடுஞ்சாலை ஏதோ விசித்திர விலங்கின் நாவைப் போலவும், நாங்கள் யாவரும் அந்நாவில் வெளிநோக்கி பயனிக்கிறோமா, அல்லது வ‌யிற்றினுள் செல்கிறோமா என்பது புலப்படாததுமாக இருந்தது.

செஞ்சி வந்தடைந்த போது, வெயில் கன்னங்களில் அறைந்தது. அந்நகரமே வெயிலுக்கு தன்னை தந்துவிட்டு மல்லார்ந்து படுத்திருப்பது போலிருந்தது. உருண்டுகிடந்த வட்ட வட்ட பாறைகளுக்கு மேல், செஞ்சி மோனமும், நிசப்த்தமுமாய் தங்கியிருந்தது. ரகசியங்களை விழுங்கிவிட்டு, அவை நாவினிருந்து புற‌ண்டுவிடாமலிருக்க கூழாங்கற்களை நாவினடியில் வைத்து கானகத்தில் ஒளிந்துகொண்ட மஹாபாரத விதுரனை ஏனோ நினைவுபடுத்தியது அம்மலையின் அமைதி. மறுபுறம் பாறைகளின் ஆக்கிரமிப்பும், கோட்டையின் பழமையும் இனம் புரியாத அச்சம் தருவதாக இருந்தது. ரதசாரிகளின் பேச்சொலியும், குதிரைகளின் குளம்படிச்சத்தமும் மிக அருகில் கேட்க்கதித் துடங்கியது. முகமூடியிட்ட இரண்டு குதிரை வீரர்கள் கடந்து சென்றார்கள். அவர்கள் நீண்ட வாள் வைத்திருந்தது தெரிந்தது.அதில் உயரமானவன் மற்றவனிடம் சொல்லி ஏதோ கேட்க்கச் சொன்னான். மற்றவன் "பயனியே...செஞ்சியின் மயக்கம் உனக்கு தீரவில்லையா... நீ செஞ்சியைக் காண வேண்டுமா..." என்றான். என் பதிலை எதிர்பாராதவனாய் அவனே பேசத் துடங்கினான் "செஞ்சி எல்லோர் கண்களிலும் புலப்படுவதில்லை. நீ காண்பது வெறும் செஞ்சியின் ஒப்பனையே. உண்மையில் செஞ்சி ரகசியங்களின் இருப்பிடம். நீ அப்படியே போய்விடு என்று கூறியவனாக, தன் உடைவாளை எடுத்து முகத்தின் முன் நீட்டினான்."நீங்கள் யார்?" எனக் கேட்க வேண்டும் போலிருந்தது. அவர்களாகவே "நாங்கள் மலைக்கள்ளர்கள்" என்று கூறிவிட்டு மெல்லிய புன்னகையுடன் மறைந்தார்கள்.

திடுக்கிட்டு நான் எழுந்தபோது நகர்வற்ற பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காய் நின்று கொண்டிருந்தது. பேருந்து இரு மலைகளுக்கு நடுவே ஒரு கட்டெரும்பைப் போல ஊர்ந்து சென்றது. செஞ்சியிலிருந்து தி.மலை வரை செல்லும் சாலை, மரங்களால் சூழப்பட்டு, வெயிலின் கால்கள் தரையில் இறஙகாத வண்ணமிருந்தது. நாங்கள் தி.மலையை அடைந்த போது உச்சிவெயில். உறக்கமற்ற கண்களுக்கு வெளிச்சம் மிக கூச்சம் தருவதாக இருந்தது.மக்கள் கூட்டம் அங்கிங்கு அலைவுகொண்டிருந்தது.

காற்றின் மணத்தில் கூட அவ்விடத்தின் ஏகாந்தத்தை உணர முடிந்தது. எதிரில் பிரம்மாண்டமான மலை, ஆச்சிர்யத்தையும், பூரிப்பையும் உண்டாக்க்கியது. ஏதோ நேற்றுதான் அந்த ம‌லை பொங்கியது போலத்தோன்றியது.ஆனால் அந்த பூரிப்பு, மகிழ்ச்சியெல்லாம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

ஒருவேளை நான் போகத் தேர்ந்தெடுத்த நாள் சரியில்லையோ என்னவோ தெரியவில்லை. மக்கள் கூட்டம் வீதிகளெங்கும் காண முடிந்தது. மற்றபடி கோவில்களுக்குள் செல்லத்துடங்கியதிலிருந்தே அதிருப்த்தியும், கோபமுமே மேலெழுந்தது ‍-

 • காவியுடை அணிந்து வாசலில் புகைபிடித்தபடி பிச்சையெடுக்கும் பிறவிகள் (துறவிகள் அல்ல)
 • அடுத்த தட்டில் காசு விழுந்ததற்காய் அசிங்கமான வார்த்தைகளில் வையும் பிக்ஷாதாரிகள்.
 • இலவச அன்னதானத்திற்காக பேதமின்றி அடித்துக் கொள்ளும் 'பக்த கோடிகள்'
 • 'பெரிய'மனிதர்களை பல்லிளித்து வரவேற்கும் அர்சகன்கள்.
 • குடும்பம் குட்டிகள் சகிதம் 10, 20 டிக்கட்டுடன் வழியடைத்து வரும் அன்பர்கள் (இவர்கள் பாண்டவர் பூமி ராஜ்கிரண் குடும்பத்தைப்போல எல்லோரும் லைன் கட்டிதான் நடப்பார்கள்) "சனியனே சீக்கிரம் வாடி..."; அல்லது "...ஒக்காளி...புளியோதொர சூப்பரு யா மாமு"... "அந்த மஞ்ச சுடிதாருடா...பாக்குறா பாரு..பாக்குறா பாரு.." என்று பேசிக்கொண்டு குடும்ப பஞ்சாயத்துக்களை உரக்க கத்தி செல்வது.
 • டோக்கன் முறையில் கடவுளை கூறு போட்டு விற்பது. அதாவது 'பொது'வழிஎன்று ஒன்று இருக்கும், 'பொதுவலாத' வழிகளும் பல இருக்கும். பைசா கொடுத்தால் 'அருள்' சீக்கிரமாகவும், 'அதிகமாகவும்?' வாங்கிக்கொள்ளலாமாம். அதுவும், எப்போதாவது, இல்லை அடிக்கடி 'நன்'கொடை (கணக்கில் வராதது) கொடுப்பவராக இருப்பின் கடவுளின் பெட்ரூம் வரை சென்று, தோள் மீது கைபோட்டு, காஃபி சாபிட்டு வரும் வரைக்கும் 'அனுமதி' அளிக்கப்படும். அடிப்படையில் இந்த பணக்காரபக்த'கோடி'களுக்கு அடிமைப்பட்டு கிடப்பது அர்ச்சகர்களா? ஆண்டவனா?.

நீங்க எல்லா பாவங்களையும் செய்துட்டு, உண்டியல்ல காசு போட்டுடுவீங்க, கடவுள் அதை வாங்கீட்டு உங்க பாவங்களை மன்னிச்சுடுவார். காசு வாங்கீட்டு வேல பாக்குறான்னா, கடவுளும் கூலி தானே?.

கால் கடுக்க தூங்கும் கைக்குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு நிற்கும் புதுத்தாய்கள்; வெயில் தாளாது " நீங்க போயிட்டு வாங்கோ.. நான் வரலை.." என்று வரிசையை விட்டு விலகி நிழல் தேடி போகும் வயோதியர்கள்;
வரும் மூத்திரத்தை அடக்க முடியாமல், கண்ணீர் முட்ட அம்மாவிடம் கெஞ்சும் சிறுமியிடம் "கொஞ்சம் பொறுத்துக்கடி...இதோ போயிடலாம்" என்று சமாதானம் கூறும் தாய்மார்கள்; இவர்கள் எல்லாம் காலகாலமாக இதே வரிசையில் தான் நின்று கொண்டிருப்பார்கள்.

வரிசை என்ற ஒழுக்கத்தை மீற நாமே வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இந்த ஒழுக்கக்கேட்டிற்கு இவர்கள் கொடுத்திருக்கும் பெயர்கள் ஒரு மிருகத்தனமான ஆதிக்கத்துவத்தைக் காட்டுகிறது. அதாவது Very Important Persons (VIP) என்று ஒரு 'Q'. அதற்கு பொருள் என்னவென்றால் மற்றவர்களெல்லாம் அறவே முக்கியத்துவமற்றவர்கள் Extremely Unimportant என்பதுதான். இப்படி நம் மீது செலுத்தப் படும் ஆதிக்கத்தை, புறக்கணிப்பை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பது தான் மிக வேதனையான விஷயம். 'தர்மதரிசனம்' என்று வேறு ஒரு பேர் உண்டு, அப்படியானால்...மற்றவை அதர்மமான தரிசனம் தானே?. இப்படி ஒரு 'Socalled' அருளை ஒரு பிரிவினையின் ஆதிக்கத்தால் பெறுவதை எந்த மதமும், கடவுளும் அனுமதிக்கும்??.

ஐஸ்வர்யா ராயோ, அமித்தாபோ, ரஜினிகாந்தோ...எதற்கு...ஒரு குத்தாட்டக்கார நடன மங்கைக்கோ தனிப்பட்ட Private தரிசனம் கிடைப்பது என்பது எதைக் காட்டுகிறது?. அவர்கள் கூத்தாடிகள் என்பதைத் தவிர வேறு என்ன சிறப்பிருக்கிறது இவர்களிடம். அப்படி கலைஞர்களை சிறப்பிக்கத் தெரிந்தவர்களோ என்னவோ என்று எடுத்துக் கொண்டால்... இதே 'மரியாதை' டெல்லி கனேஷிற்கோ, மீசை முருகேசனுக்கோ, க‌விஞ‌ர் முத்துலிங்க‌த்திற்கோ, தேனி குஞ்ச‌ரம்மாவிற்கோ கிடைக்குமா என்றால் இல்லை. அப்படியானால் இந்த மண்டியிடலுக்கு சரியான காரணம் என்னவென்று யோசிக்கும் போது மிகக்கேவலமாக தான் உள்ளது.

சமீபத்தில் 'பரவை' முனியம்மாவை நண்பர் 'மாப்பு' பிரபு CMBT பேருந்து நிலையத்தில் சந்தித்தார். ஆளரவம் நெருங்காமல் தன் பேரன் போல வயதுடைய ஒரு பையனுடன் காத்திருந்தார். நண்பர் சென்று சற்றுநேரம் உரையாடி, உங்களுடன் எனக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தன் விருப்பத்தை சொன்னதற்கு "என்ன தம்பி...எங்கூடையா?!" என்று வியந்திருக்கிறார். "ஏன் எடுத்துக்கக் கூடாதா? " என்று இவர் கேட்டதற்கு "இல்ல இதுவரைக்கும் யாரும் வந்து ஒருவார்த்த பேசல, ஏதோ ஒரு வெளாட்டுப் பொருள் மாதிரி பாத்துட்டு போறாங்க... நீங்க போட்டோ எடுக்கனும்னு சொல்றீங்களே..." என்று மிக வெட்கத்துடனும், பெருமிதத்துடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். So கலைஞர்களுடைய மதிப்பு இங்கு இப்படித்தான் உள்ளது.

கோவிலிலும் கூட சமத்துவத்தைக் கடைபிடிக்கத் தவறுகிற, சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாத இந்த தேசத்தில் நாம் இன்னும் வெட்கமின்றி Communism, Democracy என்று பிதற்றலாக பேசிக்கொண்டிருக்கிறோம். த்தூ...

இப்படியான கடுப்பில் எனக்கு வேறு எங்கும் போக மனமில்லாமல் சில சாமியார்கள் படுத்திருந்த ஒரு கல்மண்டபத்தில் தீர்த்தவாயில் தலைவைத்து சாய்ந்துகொண்டேன். சில நேரத்தில் கழுத்து வலித்தது போலிந்தபோது தான், நான் அப்படியே உறங்கிப் போயிருந்தது தெரியவந்தது. "சாமியாருக்கு ஜீன்ஸ் வேற" என்று யாரோ புலம்பிச்சென்றார்கள். நான் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. படுத்துக்கொண்டேன். உடன் வந்த நண்பன் சொன்னான், "ஒரு துண்ட விரிச்சிருந்தா நல்ல அமவுண்டு வசூலாயிருக்கும் போல" என்று.

உறக்கம் கலைந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினோம்.

தி.மலையில் என்னுடைய தேடல் அறுபட்டுவிட்டது. கண்டிப்பாக வேறு ஒரு தருணத்தில் வரவேண்டுமென்று எனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டேன். Prof. வேல்முருகன் அடுத்த முறை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அப்போதாவது அந்த கோவிலை Avoid செய்ய வேண்டும்.

அங்கு சில ஊர்வாசிகள் சொன்னார்கள்:

"ரமேஸ்வரம் என்று எழுதினால் புண்ணியம்,

கும்பகோணம் என்று சொன்னால் புண்ணியம்,

திருவ‌ண்ணாம‌லையை நினைத்தாலே புண்ணியம்" என்று.

அன்று ம‌திய‌ம் தீர்த்த‌வாயில் த‌லை வைத்து உற‌ங்கிய‌து, க‌ழுத்தில் ஏற்ப‌டித்திக் கொண்டிருக்கும் வ‌லி,
இப்ப்போதும் திருவ‌ண்ணாம‌லை-யை நினைவுப‌டுத்திக் கொண்டே இருக்கிற‌து.

ஓம் ந‌ம‌ச்சிவாய‌ !!!

எழுத்து - புகைப்ப‌ட‌ம் Praveen : புகைப்ப‌ட‌க்க‌ருவி - Sony Erricson K510i

11 கருத்துகள்:

 1. டே ப்ரவீன்!
  The single most reason, why people doesn't leave a comment is... You have not enabled Anonymous commenting.

  By default blogger is like this. But you can definitely change this. Ask Harish how he did it.
  Any way, நான் கமெண்ட் போட்டாலும் அது போலியாய், வார்த்தை விளையாட்டாய்த்தான் இருக்கும். எஸ்.ராவின் பாதிப்பு உன்னிடம் அதிகமாய் தெரியுது. மனிதர்களை, மனித உணர்ச்சிகளை அதிகமாய் வடிக்கும் அவரின் எழுத்து உன்னைக் கவர்வது எதிர்பார்க்கக்கூடியதே! ஆனாலும் உன் எளிய நடையும் பாசாங்கில்லாத, சற்றே நகையுடன் சொல்லும் எளிமைதான் un பலம். எனினும் இன்னும் அதிகமாய் உன் originalityஐ எதிர்பார்க்கிறேன்.

  தொடர்ந்து எழுதவும்!

  என்றும் அன்புடன்
  வெங்கட்ரமணன்.

  பதிலளிநீக்கு
 2. ரதசாரிகளின் பேச்சொலியும், குதிரைகளின் குளம்படிச்சத்தமும் மிக அருகில் கேட்க்கதித் துடங்கியது. முகமூடியிட்ட இரண்டு குதிரை வீரர்கள் கடந்து சென்றார்கள். அவர்கள் நீண்ட வாள் வைத்திருந்தது தெரிந்தது. ........"நாங்கள் மலைக்கள்ளர்கள்" என்று கூறிவிட்டு மெல்லிய புன்னகையுடன் மறைந்தார்கள்.

  Good one ... Me too beleive that you are influenced by S.R... But choosing a style is your prerogative... :-)...Will be good if you inject some homor - which comes easily to you in speech -into your writings as well... Expecting more from you [Don't blame me if phrase reminds you of your recent appraisal] :-)

  பதிலளிநீக்கு
 3. நான் சொல்ல வந்ததை உங்க நண்பர்கள் சொல்லி விட்டார்கள்.

  எஸ்.ரா போல இருக்கும் எழுத்துக்களை படிக்கும் போது சுகமாய் இருந்தாலும் படித்த பின்
  இந்த எழுத்துக்கள் அவருடையது இல்லை உங்களுடையது எனும் உண்மை உங்கள் ஒர்ஜினாலிட்டியை
  நீங்கள் இழக்க கூடாது என் தோன்ற வைக்கிறது.

  இலக்கற்ற, முன்னேற்பாடில்லா , எதிர்பார்ப்பு மிக்க பயணங்களை நம்முள் உங்களை போல ஒரு சிலரே மேற்கொள்கிறோம்..மற்றவர்கள் எல்லாரும்
  உங்களை போல பயணிகளின் எழுத்துக்களை படித்து தான் மனதை சமாதான படுத்தி கொள்கிறோம்

  எப்படி சொல்றதுன்னு தெரியல..இப்படி தான் இருக்குன்னு சொல்ல முடியாம நம் எண்ணங்களை போல உங்கள் எழுத்துக்கள்..மேன் மேலும் சிறக்க..

  பதிலளிநீக்கு
 4. ப்ரவீன்
  நீங்களே ஒரு கடவுள் தான். உஙக நண்பர் கோவிந்த் மனது வருத்தப்படக்கூடாது என்று, உடல் ஒத்துழைக்காவிட்டாலும் ,அவருடன் சென்ற,உங்கள் மனது தான் அந்த கடவுள்.ஆதலால் திருவண்ணாமலை கடவுள் மீது கோவம் வேண்டாம்.
  ஒரு நல்ல பயண கட்டுரை.உங்கள் கோபம் நியாயமானதே.ஆனால் ஒன்றும் செய்ய இயலாது. It happens only in Indya.and i have not read S.Ra's books,so i cannot compare this with it.
  over all
  எனக்கு வாழ்த்த அறிவு இல்லை,வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. Praveen,

  i know ur credibility and talents... From the comments posted here i can guess how good the article would have been (i have not read it though)

  A small suggestion to your writing: try writing one liners or small-para articles for the betterment of people like me!!! coz even i want to enjoy reading your writing!

  பதிலளிநீக்கு
 6. Hi Praveen,
  உங்கள் கட்டுரையிலிருந்து ஒரு விஷயம் புரிகிறது. நிங்கள் தவறான சமயத்தில் திருவண்ணாமலை சென்றுள்ளீர்கள். இருந்தாலும், உங்கள் கோபங்களில் பல‌ Misdirected எனக் கருதுகிறேன்.

  "# காவியுடை அணிந்து வாசலில் புகைபிடித்தபடி பிச்சையெடுக்கும் பிறவிகள் (துறவிகள் அல்ல)
  # அடுத்த தட்டில் காசு விழுந்ததற்காய் அசிங்கமான வார்த்தைகளில் வையும் பிக்ஷாதாரிகள்.
  # இலவச அன்னதானத்திற்காக பேதமின்றி அடித்துக் கொள்ளும் 'பக்த கோடிகள்'"

  இவற்றில் கோபப்பட என்ன இருக்கிற‌து?

  I dont see any difference between them and us. நாம் ஒன்றும் அவர்களை விட மிகச் சிறப்பனதொரு வாழ்க்கையை வாழுவதாகத் தெரியவில்லை.

  மேலும் அவர்கள் அப்படி இருப்ப‌தற்கு, அவர்கள் படுத்திருக்கும் கோவிலும் காரணமல்ல, undoubtedly தெய்வம் எந்தவிதத்திலும் காரணமல்ல. வேன்டுமென்றால் சமூகம் காரணமென்று குற்றம் சொல்லலாம். (Communists may say that).

  "# 'பெரிய'மனிதர்களை பல்லிளித்து வரவேற்கும் அர்சகன்கள்."

  I dont know in what way this is wrong. ஏன் 'அர்சகன்கள்' தங்
  கள் பிள்ளைகளை engineering college இல் படிக்க வைத்து உங்களைப் போல் Software Engineer ஆக்க வேண்டும் என்று ஆசைப் படக்கூடாதா? அதற்காக நீங்கள் மேற்கூறிய செயலைச் செய்வதில் என்ன தவறு? இந்த Materialistic உலகத்தில், அவர்கள் மட்டும் எப்படி saintly ஆக இருக்க முடியும்? அப்படி எதிர் பார்ப்பது கொஞ்சம் cruel ஆக இல்லை? அப்படி எதிர்பார்பதர்க்க நாம் யார்?

  "டோக்கன் முறையில் கடவுளை கூறு போட்டு விற்பது. அதாவது 'பொது'வழிஎன்று ஒன்று இருக்கும், 'பொதுவலாத' வழிகளும் பல இருக்கும். பைசா கொடுத்தால் 'அருள்' சீக்கிரமாகவும், 'அதிகமாகவும்?' வாங்கிக்கொள்ளலாமாம். அதுவும், எப்போதாவது, இல்லை அடிக்கடி 'நன்'கொடை (கணக்கில் வராதது) கொடுப்பவராக இருப்பின் கடவுளின் பெட்ரூம் வரை சென்று, தோள் மீது கைபோட்டு, காஃபி சாபிட்டு வரும் வரைக்கும் 'அனுமதி' அளிக்கப்படும். அடிப்படையில் இந்த பணக்காரபக்த'கோடி'களுக்கு அடிமைப்பட்டு கிடப்பது அர்ச்சகர்களா? ஆண்டவனா?."

  இதைப் படித்தவுடன், முன்பொருமுறை திருவல்லிக்கேணி பார்த்தஸாரதி கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அன்று அங்கும் நீங்க‌ள் சொன்னது போல் ordinary, special, very special என்றெல்லம் பணத்தை முன்னிட்டு தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நானும் என் தந்தையும் தர்ம வ‌ரிசையில் நின்றிருந்தொம். அங்கு எப்படி என்றல் மூன்று set special தரிசன மக்களை உள்ளே விட்ட பிறகு தான் ஒரு set எங்க‌ள் வரிசையிலிருந்து விடுவார்கள். அன்று கூட்டமும் ரொம்ப அதிகம், புழுக்கமும் ரொம்ப அதிகம். எனினும் பலர் பக்தியார்வத்தில், 'ராமா', 'க்ரிஷ்ணா', 'கோவிந்தா' என்று கடவுள் நாமங்களை சொல்லிக்கொன்டே வந்தனர். ஆனால் இந்தக் கூட்ட நெரிசலும், புழுக்கமும், பணம் படைத்தவர் மீதான வயிற்றெரிச்சலும் அவர்களின் பக்தியையும், பொருமையையும் சொதிக்க அரம்பித்துவிட்டன‌. வெகு நேரம் தர்ம வரிசையில் கால் கடுக்க நின்றிருந்த‌ ஒரு பக்தர், பொருமையிழந்து 'சாமி பேரால கொள்ளையடிக்கரானுங்க', 'சாமி என்னிக்கு டா காசு கேட்டுச்சி?' என்றெல்லம் கத்தத் துவஙினார். அருகில் நின்றிருந்த ஒரு மூதாட்டி அந்த பக்தரைப் பார்த்து 'ஏம்ப்பா இப்படி கத்தர? கொவிலுக்குள்ள கோபப்படக்கூடாது. அமைதியா பெருமாளப்பத்தி மட்டுமே நினைக்க வேண்டும். அவ்ங்களப் பார்த்து நீ ஏன் கோபப்படற? பணக்காரங்க காசு கொடுத்து பெருமாளுக்கு பூ மாலை சாத்தினா(சூட்டினால்) தான் நம்மள மாதிரி ஏழைங்க கண் குளிர ரஸிக்க முடியும்? பெருமாள எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு போயி கும்பிடுரோமோ அந்த அள‌வுக்கு புண்ணியமுண்டு. அதனால இந்த கஷ்டத்தை நினைக்கம பகவானப் பத்தி நினைங்க. அது தான் கொவில்ல இருக்க வேண்்டிய ஒழுக்கம்' என்றார். அது வரைக்கும் கோபம், அசதி, எரிச்சல் இவற்றால் அவதியுற்று வந்த சில பக்த்ர்கள் மூதாட்டியின் மொழியை கேட்ட பின் அவற்றை மற‌ந்து,பக்திப் புத்துனர்வு பெற்று, இடையில் நிறுத்தி வைத்திருந்த நாமாவெளி உச்சரிப்பை மீண்டும் தொடர்ந்தனர்.கடைசியில் நான் சன்னதியை அடைந்து, பெருமளின் திவ்வியத் திருமேனி அழகில் மெய் மற‌ந்து ரஸித்து சேவித்துவிட்டு வெளியெ வந்த பொழுது அந்த பட்டி சொன்னதின் முழு உண்மை புரிந்தது.


  நீங்கள் மேற்க்குறிப்பிட்ட கடவுளுடன் 'தோள் மீது கைபோட்டு, காஃபி சாபிட்டு வரும் ' பக்தர்கள் கூட நான் ரஸித்த அளவுக்கு பெருமளை ரஸித்திருப்பர்களா என்பது சந்தேகமே. ஏனென்ட்றால், அருள் என்பது காசு சார்ந்ததல்ல. அது மனசு சார்ந்தது.

  நிறைய எழுதுங்கள் ப்ரவீன்! உங்கள் எழுத்துக்கள் சிந்தனையை தூன்டுவதாக அமைகிறது.

  எழுத்துப்பிழை இருந்திருந்தால் மன்னியுஙள். தமிழ் typing எனக்குப் புதிது. அதிகப்பிரசஙித்தனமாக ஏதாவது எழுதியிருந்தாலும் இந்தச் சிறுபிள்ளயை மன்னியுஙள்.‌

  பதிலளிநீக்கு
 7. திருவண்ணாமலையில் கடவுளைத் தவிர மற்றதையெல்லாம் பார்த்து
  விட்டு பணத்தையும் நேரத்தையும் வீணாக்கிவிட்டாயே தம்பி...

  பதிலளிநீக்கு
 8. ராமகிருஷ்ணன் பாதிப்பு அப்படியே தெரியுதூ , மாத்த படி எனக்கும் காசு கொடுத்தூ கடவுள பாக்குற கேள்வி இருக்கு , anyway good narration.congrats. venkat.mru@gmail.com

  பதிலளிநீக்கு