கனவுகள் கலைந்து விடுகிற போது விருப்பங்கள் குலைந்து விடுகிறது.இன்று காலை வழக்கம் போலவே 8.30 மணிக்கேல்லாம் அலுவலகப் பணிகளைத் துடங்கிவிட்டு இருக்கையில் தான் அந்த செய்தி வந்தது. இந்த ப்ராஜக்ட்டில் உள்ள பணிகள் எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்ளுமாறு சொன்னார் ப்ராஜக்டின் மூத்த நபர் ஒருவர்.ப்ராஜக்ட் தள்ளிப் போடப்பட்டதாகவும், இனி இதில் நீங்க்கள் தொடரத் தேவை இல்லை என்றும் சொன்னர்கள். தர்க்காலிக சந்தோஷத்தை அளித்து வந்த வேலை அது. தினமும் சிலவற்றை கற்றுக் கொடுத்த பணி அது. அவரவருக்கு தனிப்பட்ட முறையில் அந்த பணியைச் சார்ந்து சில கனவுகள் இருந்தன... எல்லாம் BULLSHIT ஆகிவிட்டது.
என்னால் ஜீரநிக்க முடியவே இல்லை. இழவு விழுந்த வீடு போல இருந்தது. ஆனால் இப்போதெல்லம் விருப்பமற்ற செயல்கள் நடகும் போது சிரிக்கப் பழகியிருக்கிறோம். இதைப் பற்றி புலம்புவதற்காகவே நானும் அனுவும் ஒருமுறை காஃபிக்கு போனோம். இந்த அசைன்மன்ட்டில் நல்ல ரோல் இருந்தது எங்களுக்கு. என்னையும் மனுஷனா மதிச்சாங்க. பல சேலஞ்சஸை எதிர்பார்த்து இருந்தோம்.எப்படியும் வரப்போகும் மாதங்களை பிஸியாக வைத்திருக்கும் என்று நம்பி இருந்தோம். எல்லாம் WENT INTO ABYSS. சட்டென ஏற்றுக்கொள்ள முடியவில்லை.மனம் எதிலும் ஈடுபடவில்லை. சரியென்று வலையில் சாரு நிவேதித்தாவின் 'கோனல் பக்கங்கள்' படிக்க துடங்கினேன். நன்றாக போனது. மதியம் சாப்பிடக்கூட போகவில்லை. வழக்கமாக சப்பாட்டை ஒரு சடங்காக செய்வதில் சற்றும் எனக்கு உடன்பாடில்லை. கல்லூரி நாட்களில் பெரும்பான்மையான மதிய உணவு எனக்கு ஒரு டீ, அரைப் பேக்கட் டைகர் பிஸ்கட்டிலேயே முடிந்து விடும்.
வலையலைதலுக்கு நடுவே கௌதம் மின்னஞ்சல் அரட்டையில் இனைந்தான்.சற்றே நான் சுஜாதாவைத் திட்டவும், அவன் வக்காலத்து வாங்கவும் செய்தான். Butterfly Effect படம் பற்றி பேசத் துடங்கி பாதியில் இனைப்பு துண்டானது. வெகு நேரம் அலுவலகத்தில் இருக்க முடியவில்லை (விருப்பம் இல்லை). மாலை 5 மணிக்கெல்லாம் இருக்கையை காலி செய்து விட்டேன். நான் சென்னை வந்ததிலிருந்து 5 மணிக்கு கிளம்புவது இது தான் இரண்டாவது முறை.ஒரு முறை ஊருக்கு போவதற்காக). அதனால் 5 மணிக்கு போய் என்ன செய்வதென்று சரியான திட்டங்கள் ஏதும் கிடையாது. 5மணிக்கு வீட்டுக்கு போபவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்று கேட்டுக் கொள்ளவும் இல்லை.
ஆனந்தனுக்கு செல்பேசி விஷயத்தை சொன்னேன். கிரோம்பேட்டை ரயில் நிலையத்தில் காத்திருப்பதாக சொன்னான்.நான் எப்போது எங்கு கூப்பிட்டாலும் வந்து விடுவான்.நல்ல வேளை ('டீக்கடை' என்ற) ராஜா டில்லியில் இருக்கிறான், அவனாக இருந்திருந்தால் அதிகப்பிரசங்கித்தனமாக 'என்ன சரக்கு வாங்கட்டும்'னு கேட்டிருப்பான். பல வார இறுதிகளில் பேசுவதற்காகவே சந்தித்துக் கொள்வோம்.காலை விடியும் வரை பேசிக்கொண்டே இருப்போம். நாங்கள் பேசுவதர்க்கான கருக்கள் எப்போதும் குறைந்ததே இல்லை. நான் 6மணிக்கெல்லாம் தாம்பரம் வந்து, மின்ரயிலில் ஏறி இருந்தேன்.
'ரிச்சர்ட் பேச்'சின் 'ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' புத்தகம் எடுத்து மீண்டும் படிக்கத் துடங்கினேன்(இது 20 அல்லது 25வது தடவையாக இருக்கலாம். இந்த புத்தகம் பற்றியே ஒரு பதிவு எழுத வேண்டும் என இருக்கிறேன்.)
ஜோனின் தாய் அவனிடம் கேட்பாள்:
'ஏன் ஜோன் நீ மற்றவர்களைப் போல இருக்க மறுக்கிறாய் ?, அதில் என்ன கஷ்டம்... நீ வெறும் எலும்பும் தோலும் தான்.ஆம் வெறும் 'எலும்பும்...' 'தோலும்...!!' என்பாள்.
ஜோனின் தந்தை:
' டேய்...இதோ பார்.. பனிக்காலம் தொலைவில் இல்லை,கப்பல்கள் அருகில் இராது, மீன்கள் மேலே வராது, நீ ஏதாவது கற்க வேண்டுமாயின் உன் இரையை எப்படி தேடுவது என்று கற்றுக் கொள்.மறந்து விட்டாயா, நீ பறப்பதற்கு காரணமே நீ இரை தேட வேண்டும் என்பதால் தான்".
அதற்கு ஜோன் சொல்லுவான்:
" எனக்கு வெறும் எலும்பும் தோலுமாக இருப்பதில் எந்த அவமானமும் இல்லை...கஷ்டமும் இல்லை....எனக்கு விண்ணில் என்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று தெரிய வேண்டும்...
'ஆம் எனக்கு தெரிய வேண்டும்' அவ்வளவுதான்'
என்று சொல்லிவிட்டு மீண்டும் விண்ணில் பயிற்சிக்காக பறக்க தொடங்குவான் ஜோன்".அந்த வசனங்கள் சற்றே சமாதானமாக இருந்தது. அதற்குள் சனடோரியம் கடந்து வெகு தூரமாகி விட்டது. சனடோரியத்தில் ஏறியிருந்த ஒரு ரயில் பாடகர் நெற்றியில் விபூதி சகிதம், ஒரு சிறிய பெண் வழி நடத்த 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' பாடியபடி வந்துகொண்டிருந்தார்.ரயில் பாடகர்கள் எல்லோரும் ஒரே குரல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். என் முகத்திலிருந்த வெறுமை இன்னும் குறையவில்லை என்றே தோன்றியது. ஏதாவது தரவேண்டி பேன்ட் பாக்கெட்டைத் துழாவினேன், இடைஞ்சலாக இருந்தது. கிரோம்பேட்டை நெருங்கி விட்டது, அவசரத்தில் சட்டைப் பய்யிலிருந்த 10ரூபாயை அந்த சிறுமி கையில் திணித்துவிட்டு இறங்கினேன். அருகில் இருந்த பயணி காரணமின்றி என்னைப் பார்த்து முறைத்தார்
போய் ஒரு டீ, சமோசா சப்பிட்டோம். கிரோம்பேட்டை கடைகளில்கரம் கிடைப்பதில்லை.தாம்பரம் ஏரியாக்களில் எல்லா கடைகளிலும் கிடைக்கின்றன. சற்றே பேசிக்கொண்டே நடக்கலாம் என்று பார்த்தால் நகர நெரிசலில் உட்கார கூட இடமில்லாமல் போய்விட்டது நினைவுக்கு வந்தது. சரியென்று நண்பர்களின் வீடுகளை விசிட்டடிக்க எண்ணி கிளம்பினோம். ஸ்டேஷன் சாலையை ஒட்டி நடக்கும் போது, BLOOD DIAMOND கதையை சொல்லத்துடங்கியிருந்தேன்.
எல்லாமே typical பேச்சுலர் ரூம். பூட்டப்படாத வீடு, கூட்டப்படாத தரை, மடிக்கப்படாத படுக்கை, தலையனையாய் மாறிவிட்டுருந்த Complete Reference புத்தகங்கள். கண்டிப்பாக ஒரு கணிணி பிரித்துப் போட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். வேலை தேடும், அல்லது வேறு வேலை தேடும் பேச்சுலர் ரூம்களெல்லாம் ஒவ்வொறு போதி மரங்கள். வாழ்வின் சாரம் அங்கு சிதறி இருக்கிறது. ஏமற்றத்தின் சோகம், எதிர்பார்ப்பின் வேதனை, தோல்வியின் வலி, உழைப்பின் மகிழ்ச்சி, புறக்கணிப்பின் நிழல் எல்லாம் கவிந்து நிற்கிறது இவ்வீடுகளில். அவ்ர்களது கனவுகள்,கோபங்கள், தீர்மானங்களெல்லாம் அவர்களது சுவர்களில் வெவ்வேறு வாசகங்களாக தீட்டப்பட்டிருக்கிறது. யாருமற்ற நேரங்களிலும், நள்ளிரவு கடந்த நிசப்ததிலும் சுவர்களின் வழியே காமத்தின் ஊற்று வடியத் துவங்கி, இரவை விழுங்கி விடும்.நாங்கள் எல்லொரும் ஒன்றாக வாழ்வை துடங்கியவர்கள் தான். ஒரே தட்டில் உண்டவர்கள் தான். ஆனால் பல்வேறு காரங்களினால் சற்று தாமதமாக்கப் பட்டிருக்கிறது அவர்களது சாமான்ய வாழ்கை. ஆனாலும் சந்தோஷத்திற்கும் குதூகலத்திற்கும் என்றும் அங்கு குறைவே இருந்ததில்லை.
நான் சைதாப்பேட்டையில் 8க்கு8 ரூமில் தங்கியிருந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்ததாக குறைபட்டுச் சொன்னான், அந்த ரூமின் one of the four ரூம்மேட். எங்கள் வீடு சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் ஒரு 13 வீடு குடியிருப்பின் மாடியில் அமைந்திருந்தது. வாட்டர் டேங்கின் அடியில் மோட்டர் ரூமாக இருந்த அந்த அறையை, பின்னாளில் அதற்கான தேவை இல்லாததால், பேச்சுலர் ரூமாக மற்றியிருந்தார்கள்.
சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு, சென்னையில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் சலைகளில் ஒன்று. எப்போதும் ஏதாவது கோவில் விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். School பிள்ளைகள், கோயிலுக்கு போகிறவர்கள், குடிகாரர்கள், போலீஸ்காரர்கள், பாசுரம் படிப்பவர்கள், தண்ணிலாரிக்கு ஓடுபவர்கள் என்று எப்போதும் தெருவில் ஆளிருந்துகொண்டே இருக்கும்.
எங்கள் ஒற்றை ரூம் மாடியிலிருந்து தெருவைப் பார்த்தே பல மாலைகள் கழிந்திருக்கும். மெகாசீரியல்கள் துடங்கியவுடன் பெண்கள் எல்லாம், வீட்டினுள் சென்று விடுவார்கள். நாங்கள் கீழே இறங்கி டீக்கடைக்கு சென்றுவிடுவோம் (டீ குடிக்க தான்!).
வேலு மிலிட்டரியில்(ஹோட்டல்) யாருடைய TREAT- டையாவது முடித்துவிட்டு, வீடு திரும்புகையில் தெரு நிசப்த்தமாகி இருக்கும். எங்கள் அபார்ட்மெண்ட் குழந்ததைகள் HOMEWORK முடிந்து படுக்கச் சென்றிருப்பார்கள். இந்த நேரங்களில் எங்களுக்கு சத்தமாய் சிரிக்கவோ, அடுத்த கம்பவுண்டு தாண்டி போகிற அளவுக்கு டெஸிபெல் சத்ததில் பேசவோ அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. நாளைய கனவுகள், இன்றைய பிரச்சனைகள், அரசியல், இலக்கியம், சினிமா, பிஸினஸ் என்று எல்லா பஞ்சாயத்துகளும் (குறைந்த சத்ததில்) முடிந்து பெண்ட்ஹௌசின் ஒன்றிரண்டு எபிசோடுகளோடு தூங்கச் சென்று விடுவோம். அப்போதெல்லாம் நன்றாக தூங்கியதாக சொன்னான், சமீபத்தில் சந்தித்த, மாதம் அரை லகரம் கிட்ட சம்பாதிக்கும் ஒரு நண்பன்.
பேச்சுலர் அறை என்பது பெண்மை நிறம்பாத வெளி. பெண்களுக்கு ப்ரத்யேக வாசனை உண்டென்றும், பெண்களின் பேச்சொலி சுவர்களில் பட்டு எதிரோலிக்கும் சப்த்தம் எப்படிப்பட்டதென்றும் அவை அறிந்ததில்லை. ஆயினும் கவிதைகள், ஓவியம், புத்தகம், சம்பாக்ஷனைகள் என்று எப்படியெப்படியோ பெண் நுழைந்து விடுகிறாள். பேச்சுலர் வீடுகள் பொறுத்த மட்டில் பெண் என்பது புறக்கணிக்கப் பட்ட கனி. ரூம்களுக்கு பெண்களை அழைத்துகு வருபவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுகிறார்கள். அது மற்ற அறைவாசிகளின் அந்தரங்கத்தில் தலையிடுதலாக கருதப்பட்டது . மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்த ஒரு நண்பனது வீட்டில் தன் தோழியை அழைத்து வந்ததற்காக யாரும் அவனுடன் முகம் கொடுத்து பேசப்போவதில்லை என்று தீர்மாணித்து இருந்தார்கள். மறுநாள் காலை அங்கு நான் சென்ற போது தான், வீட்டின் சீரமைப்பு புலப்பட்டது. புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. பாய்கள் மடிக்கப்பட்டிருந்தன, அறைகள் கூட்டப் பட்டிருந்தது.அதன் பிறகு அந்த நடவடிக்கை வாடிக்கை ஆயிருக்கலாம், எனக்கு தெரியவில்லை. நான் அவ்விடத்திலிருந்து இடம் பெயர்ந்து விட்டேன். அப்போது, ஓரிரு பெண்களின் வருகை வரவேற்க தக்கதென்றே நினைத்தேன்.ஆனால் சென்னை-குடிவைப்போர் சட்ட திட்டங்களுக்கு அவை உட்பட்டதல்ல. பின்னாளில் அப்பெண்ணின் வருகை மீண்டும் அமையாலாமென குறைந்த பட்ச அடிப்படை ஒழுங்குகள் ( பீர் பாட்டில்களை அகற்றுவது, உள்ளாடைகளை கண்களுக்கு புலப்படாத தூரத்தில் வைப்பது, சுவரில் நடனமாடும் 'படு வறுமையில்' வாழ்ந்த அழகிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கியது ) எல்லாம் அவ்வீட்டில் நடந்தேறியது.
பின்னாளில் வெவ்வேறு மாநிலங்களில், ஊர்களில் தனியறைகளில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தனிமை சில நேரங்களில் தான் சௌகரியம், மற்ற நேரங்களில், அவஸ்த்தை. பெங்களூரில் ஞாயிற்றுக் கிழமைகள் போல வேதனை தருவது ஏதும் இருக்க முடியாது. வெயில் முதுகில் ஏறி வரும் வரை தூங்கிக் கிடக்கவேண்டியிருக்கும். கொஞ்சம் படிக்கலாம், துணிதுவைக்காலாம், வாங்கி வைத்த பேக்கிரி பண்டம் ஏதாவது சாபிடலாம், வருங்காலம் பற்றி கொஞ்சம் வருந்தலாம், மறுபடியும் CYCLE தொடரும். விடுமுறை நாள் பகல்களில் அறையில் நானும் நானும் மட்டுமே இருப்போம். அப்போது பலதும் பேச ஆரம்பிக்கும் அறை. "கையில் பிரம்பின்றி, புத்தகங்களின்றி, பரீட்சையின்றி பல பாடங்களை சொல்லித்தரும் அறை" என்று பிரபஞ்சன் சொன்னது நினைவிருக்கிறது.
அலுவல் காரணமாக மீண்டும் சென்னை வந்தபின் சகஅலுவலகர்களுடன் நாட்கள் போனது. சகஅலுவலகர்களுடன் வசிக்கும் வீடுகள், அலுவலகத்தின் மற்றும் ஒரு அறையாகவே கருதப்படுகிறது. ஐ.டி தொழில்நுட்ப அலுவலகங்களில், அசலான அன்பு சாத்தியமாக முடியாத மூர்க்கமான சூழ்நிலையே நிலவுவதாக நான் உணர்கிறேன்.ஒத்த நோக்குள்ள மனிதர்கள் இல்லாவிடில் வீடு என்பது வெறும் தூங்கும் அறையாகவே இருக்கிறது. அதனால்தான் நண்பர்களை வீட்டிற்கு வரவைத்து (அல்லது சென்று) பேசிக்கொண்டிருக்கும் நிலை. இசை பற்றியோ, சினிமா பற்றியோ, chaos பற்றியோ, quantum physics பற்றியோ, butterfly effect குறித்தோ, நிலையாமை குறித்தோ, வள்ளலாரின் Alchemy பற்றியோ, ஆண்பெண் Bogus behaviorism பற்றியோ, எமோஷனல் ஃப்ரீடமின் தேவை குறித்தோ, இந்தியாவில் சிவில் வாரின் சாத்தியங்கள் பற்றியோ யாரிடமாவது பேசப்போனால் கூட வலிய தேவையற்று அன்பு செலுத்தவேண்டியுள்ளது. அல்லது பைத்தியக்காரன் என்ற வசவோ, பாவம் என்ற பட்சாதாபத்தையோ சம்பாதிக்க வேண்டியுள்ளது. சற்றே உணர்ச்சிவசப் பட்டு பேசிவிட்டால் கூட சரக்கடித்துவிட்டு பேசுகிறானோ என்ற சந்தேகத்திற்க்கு ஆளாகவேண்டியுள்ளது. அதனால் அந்த பலப்பரீட்ஷைக்கெல்லாம் போவதில்லை என முடிவுசெய்துள்ளேன். யாராவது சென்னையில் எங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டா கூட... "8 ரூம்மேட்ஸ்ஸோட தனியாதான் இருக்கேன்" என்று தான் சொல்லிக்கொள்கிறேன்.
எந்த அறையும் என்னை 1 வருடம் கூட முழுதாக வைத்துக் கொண்டதில்லை. கனவுகளால், நிராசைகளால், கோபங்களால், காமத்தால், விசும்பலால் ஒவ்வொறு அறையும் நிரப்பப்பட்ட பிறகு வேறு அறைகளை நிரப்புவதற்காக கிளம்பிவிடுகிறேன். இப்போதய அறையில் கழிப்பறை நிரம்புவது போல மேற்சொன்னவையெல்லாம் நிறம்பிவிட்டன. ஏதேனும் மாடிவீடு, ஒற்றை அறை, எதிர்வீட்டுப் பெண், ரிட்டயர்ட் ஆன- English பேசும் கிழம், அம்மாவை நினைவூட்டும் பூக்காரி சகிதம் புறநகர் சென்னையில் ஏதேனும் வீடு இருந்தால் நீங்களும் சொல்லுங்களேன் !!!
அறையும் நானுமாய்
இரவைக் கழிக்கிறோம்
தூங்காத அறையுடன் சேர்ந்து
நானும் தூக்கத்தை துரத்திவிடுகிறேன்
எங்களுக்குள் பல இரகசியங்கள் உண்டு
யாரிடமும் எதுவும் கூறாத இந்த அறை
என் நண்பனை விட உசத்தி
செருப்பும் அறைக்குள்தான்
குடிதண்ணீரும் குளிக்கும் தண்ணீரும் இதற்குள்தான்
புத்தகங்கள் துணிகள்
ஷேவிங் செட் கண்ணாடி
இன்னபிற என எல்லாம்
இந்த அறைக்குள்தான்
அறை என் வீடு
ஆனால் -
வீடு என்பது அறையா?
(அய்யப்ப மாதவன்)
செவ்வாய், 10 ஏப்ரல், 2007
ஒரு காலைப்பொழுதும், சில பேச்சுலர் ரூம்களும்
எழுத்து: Prawintulsi 12 பின்னூட்டங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)