ஓரிரண்டு மாதங்கள். இயல்பு நிலை திரும்பி விட்டது என்று சொல்ல முடியாது. ஆங்காங்கே ஒரு
500 மீட்டர் தூரத்தில் ஒரு போலீஸ் வீதம் ஒரு நாற்காலி போட்டு உக்கார்ந்து கொள்வது வாடிக்கையாக இருந்தது. எல்லாம் பெரும்பாலும் வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார்கள். அவர்கள் இருக்கைக்கு அருகிலே இருந்த வீடுகளில் கடைகளில் அமர்ந்தும், பேசியும் மிகவும் அன்ன்யோன்யம் ஆகிவிட்டிருந்தார்கள். அவர்கள் குடும்பக் கதைகளெல்லாம் பேசும் அளவுக்கு நேரம் இருந்தது. சிலர் பிள்ளை குட்டிகளைப் பிரிந்து வந்து அவதிப்படுவதாக சலித்துக்கொண்டனர். இந்த நிலையில் தான் படிப்படியாக போலீஸ் பாதுகாப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தன.
1998 இல் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் அறிவித்திருந்தார்கள். அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி. கோவை பா.ஜ.க விற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த நேரம். ஃபெப்ருவரி 18ம் தேதி எல்.கே.அத்வானி கோவை வருவதாக ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சுற்றும் உள்ள சிறிய ஊர்களிலெல்லாம் ஆட்களை சேர்க்க பிரயத்தனம் இருந்தது. எங்களூரில் முன் பின் பெரிய பா.ஜ.க அபிமானிகளாக இருந்திராதவர்கள் கூட அத்வானி கூட்டத்தில் பங்கேற்க ஆவலாக இருந்தார்கள்.
ஃபெப்-18 5 மணியளவிலெல்லாம் அச்செய்தி முழுவதுமாக பரவியிருந்தது. அத்வானி பேசுவதாக இருந்த இடத்தில் இருந்து 500மீ தொலைவில் குண்டு வெடித்தது. அதே சமயத்தில் நகரின் பல்வேறு இடங்களில் ரயில் நிலையம், வெரைடிஹால், ராஜராஜேஸ்வரி டவர் என்று பல இடங்களில் குண்டுகள் வெடித்தது. உயிசேதங்கள் பற்றி தெரியவில்லை ஆனால் சாலை எங்கும் காயம் பட்டவர்கள் கிடந்ததாக பார்த்தவர்கள் சொன்னார்கள். சிற்றூர்களிலிருந்து கோவைக்கு வேலைக்கு சென்றவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று அனைவரும் கலவரமடைந்து போனார்கள். என் அப்பா கோவை வெரைட்டி ஹால் சாலையில் இந்தியன் வங்கியில் பணியில் இருந்தார். மாலை டீ அடிப்பதற்காக வெளியே வந்தார். அந்த சமையம் தான் வெரைட்டி ஹால் ரோட்டில் குண்டு வெடித்து எல்லோரும் சாலையில் குவிந்துவிட்டிருந்தனர். எல்லோரும் திரும்பி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு ரயில்னிலையம் நோக்கி மக்கள் ஓடினர். அந்த சமையத்தில் ரயில்நிலையத்திலும் குண்டு வெடித்தது. செய்வதறியாது மக்கள் சிதறியோடினார்கள். அவரவர் கிடைத்த ரயிலைப் பிடித்து கொஞ்சதூரம் சென்றால் போதும் என்று போகாலானர்கள். அன்று இரவு 8 மணிக்குள்ளாக 10க்கும் மேற்பட்ட குண்டுகள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் வெடித்திருந்தன.
பணியிடத்திற்கு சென்ற பலரும் வரும் நேரம் ஆகியிம் வீடு திரும்பவில்லை. அனைவரது முகத்திலும் ஒரு பாதுகாப்பின்மை அப்பிக்கிடந்தது. வழமையாக 7 மணிக்கெல்லாம் வீடு திரும்பும் என் அப்பா தினமும் வரும் பேசஞ்சர் ரயிலி வரவில்லை. ரயில் நிலையத்தில் குண்டுவெடித்திருந்தது என்ற செய்தியை அறிந்திருந்தோம். சரி பேருந்தில் வருவார் என்று நம்பி காத்திருந்தோம். ஒரு சித்தப்பா அத்வானியின் கூட்டத்தில் கலந்துகொள்ள போயிருந்தார். அவருக்கும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆளாளுக்கு ஒரு திசையில் எங்கெங்கோ யாரிடமோ கேட்கச் சென்றார்கள். வீட்டுப்பெண்கள் தெரு முனைகளில் கூடிக் கூடி முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். அது செல்ஃபோன்களின் காலம் இல்லை. யாரவது ஊர்க்காரர்களைப் பார்த்தால், 'வீட்டில் ஒரு தகவல் சொல்லீருங்க' என்று யாரவது மூலம் சொல்லிவிட்டிருந்தால் தான் உண்டு.
இரவு 8:45 மணிக்கெல்லாம் கூட்டத்துக்கு போன சித்தப்பா திரும்பி வந்தார். அவர்கள் கூட்டம் நடக்கும் இடத்தை நெருங்கவே முடியவில்லை என்றும், அதற்கு முன்னே குண்டு வெடித்துவிட்டதால் எல்லோரும் கலைந்து வந்துவிட்டதகவும் சொன்னார். இரவு 10 மணியாகியும் அப்பா வீடு வரவில்லை. சொல்லத்தெரியாத ஒரு மனநிலையில் அனைவரும் காத்திருந்தோம். யாரும் சாப்பிடிருக்கவில்லை. பசியில்லை. கடைசியாக, 10:30 மணியளவில் அப்பா தினமும் வீடு சேருவதுபோலவே இயல்பாக வந்துகொண்டிருந்தார். வீட்டு முனையில் அவர் தலை தென்பட்டதும் பெரிய ஆசுவாசம் ஏற்பட்டது. சற்று நேரத்திற்குமுன் நிலவிய பதற்றம் எதுவும் இல்லாதது போல கண நேரத்தில் எல்லாரும் இயல்புக்கு திரும்பினோம்.
அப்பா டீ குடிக்க வெளியே வந்தபோது குண்டுவெடிப்பு செய்திகேட்டு ரயில்நிலையம் சென்றிருக்கிறார். அங்கும் அப்போது குண்டுவெடித்திருக்கிறது. ரயில் நிலையம் கலவரமடைந்தது. அப்போது கோவை வந்திறங்கிய வண்டிகள் நகரத்துக்குள் போக பயந்து அடுத்தடுத்து இருந்த வேறு ஊர் ரயில்களில் ஏறி வெளியானார்கள். அப்படி ஒரு குடும்பம் எங்கள் அப்பா ஏறிய ரயில் பெட்டியில் அகப்பட்டுக்கொள்ள, அவர்களது உறவினர் யாரோ எங்கள் ஊரில் இருப்பதாக அவர்கள் சொல்லியுள்ளனர். ஆனால் சரியாக இடம் தெரியாது என்று சொல்லவே, அப்பா அவர்களை வீடு விசாரித்து கொண்டுபோய் விட்டுவிட்டு வர இவ்வளது தாமதமாகிப்போனது.
மறுநாள் செய்தித்தாளில் 12 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்ததாகவும், 60 பேருக்கு மேல் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓரிரு இடங்களில் குண்டு வெடிக்கத்தொடங்கிய உடனே, முஸ்லிம்கள் தான் இதை செய்தார்கள் என்ற பரப்புரையை மதவாத சக்திகள் முடுக்கிவிட்டார்கள். குண்டுகளை விட அதிதீவிரமாக இந்த தீ பரவ ஆரம்பித்து, சாயிங்காலத்திலிருந்தே முஸ்லிம் நிறுவனங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. பல அடுக்கு மாடிகொண்ட ஷோபா துணிக்கடை முற்றுமாக தீக்கிரையக்கப்பட்டது. இன்னும் பல சிறு மற்றும் பெறும் வணிகங்கள் அடித்துடைக்கப்பட்டன. தற்காத்துக்கொள்ளும் விதமாகவும், எதிர்தாக்குதலாகவும் முஸ்லிம் தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடந்தன. ஒட்டுமொத்தமாக ஒரு இந்து-முஸ்லிம் துவேஷம் கோவைத் தெருவெங்கும் கைவீசி உல்லாசமாக நடந்தது.
எப்போதும் தயார் நிலையில் இருந்த முஸ்லிம் எதிர்ப்பு மனோபாவம் முன்னெப்போதும் இல்லாதபடிக்கு அதிகமாக இருந்தது. அதை உபயோகப்படுத்த மதவாதிகள் கொஞ்சமும் தவறவில்லை.
எங்கள் எதிரிலேயே அப்போதுதான் விடலைப்பருவம் கடந்துவந்த பையன்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டு சங்க் நடவடிக்கைகளில் ஈடுபடச்செய்தனர். தற்காப்பு என்ற பெயரில் வன்முறைகளை கஒயில் எடுக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. போலீசார் நம் பக்கம் என்பதைப்போல எடுத்துக்கொள்ளப்பட்டது. மீண்டும் இஸ்லாமியர்கள் , இந்துக்கள் என்று பிரிந்துபோன சமூகமாக இருந்தது. முஸ்லிம் என்பது ஒரு அந்நியரைக் குறிக்கும் சொல்லாகவே பார்க்கப்பட்டது. இதில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால், பள்ளிகளில் நாங்கள் தினமும் எதிர்கொள்ளும் முஸ்லிம் மாணவர்கள் கூட மிகவும் அமைதியானவர்களாக, அனைவருடனும் பேச மறுத்தவர்களாகவும், ஆனால் ஆயிரம் கேள்விகளை கண்களின் தாங்கியவர்களாகவும் இருந்தனர். அவர்களை பரஸ்பரம் எதிர்கொள்வதென்பது சாதாரணமாக இருக்கவில்லை.
எனக்கு மிகவும் பரிட்சையமான நெருக்கமான இரண்டு அண்ணன்கள் சிவாவும், பாலனும் சங்க் மூளைச்சலவைக்கு ஆளானார்கள். அவர்கள் ஆற்றிய உரைகளையெல்லாம் அப்படியே வீட்டில் வந்து ஒப்பிப்பார்கள். இப்படியாக ஒரு கருத்தாக்கம் எல்லர் வீட்டளவிலும் நடைபெற்றிருக்கக் கூடும். இந்துக்கள் சொந்த நாட்டிலே பாதுகாபற்று இருக்கிறார்கள் என்று பொய்யான ஒரு தோற்றத்தை அவர்களிடம் நம்பவைத்தார்கள். நமது வியாபரங்களை, வேலைவாய்ப்புகளை அவர்கள் தட்டிப்பறித்து விட்டனர் என்று சொல்லப்பட்டது. அவர்கள் பாகிஸ்தானுக்கே செல்லவேண்டும் என்று கூறப்பட்டது. அரும்பு மீசை மட்டுமே முளைத்த இளம்தலைமுறையினரிடம் ஆய்தங்கள் கொடுத்தது, இன்னொருவரை அடிக்க அதிகாரம் கொடுத்தது, ஜி...ஜி...என்று ஒருவரை ஒருவர் அழைக்கச்சொல்லி அவர்களை சுயமரியாதைதை போலியாக பெரிதுபடுத்திக் காட்டியது. அவர்கள் எப்போதும் (பாதுகாப்புக்காக) கையில் கத்தியோடு இருந்தார்கள், அரிவாள்கள் ப்ரயோகிக்கக் கற்றுக்கொண்டார்கள், நெற்றியில் எப்போதும் சிவப்பு அணிந்திருந்தார்கள். இரவுகளில் கோவில்களை பாதுகாத்தனர், தெருமுனைகலில் ஆட்கள் மாறிமாறி ரோந்து செய்தனர். இஸ்லாமியர்கள் கிடைத்தால் பேர் கேட்டு அடித்து உதைத்தனர்.
மீண்டும் போலீஸ் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. மீண்டும் தெருமுனை எங்கும் போலீஸார். சற்று நேர்மையான போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கலவரம் செய்வதாக அறியப்படும் இளைஞர்கள் சிறையில் வைக்கப்பட்டார்கள். ஆனால் பெரும்பாலும் பிடிக்க வரும் முன்னே செய்தி தெரிந்துவிடும். சிவாவும், பாலனும் பெரும்பாலும் ஒதுக்குப்புறமாக இருந்த எங்கள் வீட்டில் வந்துதான் தஞ்சம் இருந்தனர். மொட்டையடித்தும், மீசையை வழித்தும் அடையாளங்களை மாற்றிக்கொண்டு வலம் வந்தனர். அவர்களுக்கு கட்டளைகள் வழக்கிக்கொண்டிருந்த மேல் மட்ட கட்சிக்காரர்கள் போலீசாரல் கைது செய்யப்படவே இந்த சிறுபையன்கள் செய்வதறியாது மாத கணக்கில் முடங்கிக்கிடந்தனர்.
ஒன்றிரண்டு மாதங்களாக வேலைகளுக்குப் போகாததால் பார்த்துவந்த வேலையும் பரிபோனது. பிரிவினை வாசனைகள் மெல்ல மெல்ல அகன்றுபோக சில மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட ஆனது. புதிய வேலையில் சென்று சிவா அண்ணன் சேர்ந்தான். பாலன் அவரது பனியன் கடையை மீண்டும் தொடங்கினார். ஒரு நாள் நைட்ஷிஃப்ட் முடித்து வீடு திரும்புகையில், சிவா மர்ம நபர்களால் தாக்கி வீழ்த்தப்பட்டான். உருட்டுக்கட்டையால் தலையில் அடிக்கப்பட்டு, அதன்பின் கத்தியால் 14 முறை குத்தப்பட்டான். யாரோ அங்கு வந்துவிடவே அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். குற்றுயிராக வீட்டிற்கு எடுத்துவரப்பட்டான் சிவா அண்ணன். 3 மாதம் வைத்தியம் பார்க்கப்பட்டது. எச்சில் துப்பும் போதுகூட எங்கிருந்தோ உள்ளில் ரத்தம் கசிந்துகொண்டே இருந்தது. அதிஷ்டவசமாக உயிருக்கு ஆபத்தில்லை. அவன் அதிலிருந்து குணமடைய இரண்டு வருடங்கள் ஆனது.
கோவைக் கலவரங்களைத் தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. பா.ஜ.க விற்கு கோவை ஒரு இன்றியமையாத ஒரு இடத்தைப் பெற்றுக்கொடுத்தது. ஷோபா நிறுவனம் மட்டுமல்லாது கோவையில் அப்போது விழுந்த பல தொழில்கள் பின் எழுந்திரிக்கவே இல்லை. இப்போது அந்த இடத்தில் போத்தீஸ் நிற்கிறது. இன்று சிவா அண்ணன் ஒரு மதுவிடுதியில் உபசரிப்பாளராக இருக்கிறார். பாலன் பனியன் கடை, இளனிக்கடை என்று ஏதெல்லாமோ வைத்துப்பார்த்தார். திடீரென்று நோய்வாய்ப்பட்டு உடல் பலகீனமாகி இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போனார். இதுவெல்லாம் வெறும் தற்செயலாக நடந்தது என்று நம்பினால் நமது அரசியல் அறிவை மறுபரிசீலனை செய்வதென்பது அவசியம்.
சென்றமுறை நடந்த நகரமன்றத் தேர்தலில் எங்கள் நகரமன்றத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் இன்ன பிற கட்சிகள் நின்றன. அப்போது தான் சில மாதங்களுக்கு முன் அ.தி.மு.க பலத்த வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஞாயப்படி நகரமன்றத் தலைவர் பதவி அ.தி.மு.க விற்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கு ஒரு தவறு நடந்தது, அ.தி.மு.க சார்பில் நின்றது ஒரு இஸ்லாமியர். வென்றது அத்தனையொன்றும் பிரபலம் இல்லாத ப.ஜ.க வேட்பாளர். அ.தி.மு.க வாக்குகள் உட்பட பா.ஜ.க அணிக்கே விழுந்தது. இது தான் கோவையின் மனசாட்சி. அதனால் தான் தற்போது இந்துமுன்னனி கட்சிக்காரர் கொல்லப்பட்ட போது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கவில்லை. ஆனால் முன்னைப் போல அல்லாது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மதவாதிகளால் ஓட்டுக்கட்சிகளால் எழுதப்பட்ட துல்லியமான திரைக்கதையை அரங்கேற்றும் தோல்பாவைகளாய் பொதுமக்கள் இருந்துவிடக் கூடாது!
* * * * *