பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் (Battle of Algiers) திரைப்படம் நான் அடிக்கடி திரும்பத் திரும்ப பார்க்கும் வேற்றுலக படங்களில் ஒன்று. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சற்றும் அலுப்புதட்டாத திரைப்படம். பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் படம் 1966ம் ஆண்டு வெளிவந்தது. 1962 ம் ஆண்டு அல்ஜீரியாவிற்கு ஃபிரெஞ்சுகளிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. 1957 லிருந்து ஃபிரஞ்சு ஆட்சிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை அல்ஜீரியர்கள் ஆயுதபோராட்டமாகவும், பின்னர் அரசியல் போராட்டமாகவும் முன்னெடுத்தனர். அவர்களது சுதந்திர போராட்டத்தின் முக்கிய எழுச்சியானது அல்ஜியர் யுத்தம் என்று அறியப்பட்ட மோசமான ஆயுதப்போரகும்.
FLN என்ற பேரில் ஒருங்கிணைந்திருந்த சுதந்திர போராட்ட வீரர்கள் தீவிரமான ஆயுதபோராட்டங்களை அரங்கேற்றினார்கள். அல்ஜீரிய ஃபிரெஞ்சு வசிப்பிடங்களில் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்தனர். அதிகாரிகள் பொதுமக்கள் என்று பாராமல் நிறைய உயிரிழப்புகளை அது ஏற்படுத்தியது. பியட்-நுவார் (pied noir) என்று அழைக்கப்பட்ட அல்ஜீரிய ஃபிரெஞ்சுக்காரர்களும் அவர்கள் பங்கிற்கு கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர். அர்பன் கொரில்லா யுத்தத்திற்கு இன்றும் ஒரு உதாரணமாக இருப்பது அல்ஜியர்ஸ் யுத்தம் தான். கட்டுக்கடங்காத சமூக சூழலைக்கட்டுப்படுத்த சிறப்பு ராணுவப்படைகளை இறக்க வேண்டியதாயிற்று. அந்த ராணுவத்தினர் செய்த அட்டூழியங்கள் பிற்பாடு பெரிய விவாதப் பொருளாக மாறிப்போனது. எப்படி இருப்பினும் FLN படையின் முக்கியத் தலைவர்கள் ஒடுக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்.
ஆனால் அதன்பின் தொடர்ந்த சுதந்திரப் போராட்ட எழுச்சிக்கும், பின் தொடர்ந்த அல்ஜீரிய சுதந்திரத்திற்கும் அல்ஜியர்ஸ் யுத்தமே மையப்புள்ளியாக அமைந்தது என்று சொல்லலாம். மிகப்பிரபலாமன ஒரு சொல்லாடல் ஒன்று உண்டு அந்த சமயத்தில் "ஃபிரெஞ்சு அல்ஜியர்ஸ் யுத்தத்தை வென்றிருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த அல்ஜீரியா போரை இழந்தது" என்று.
இந்த வரலாற்று நிகழ்வுகளை செய்திப்பட(news reel) பாணியில் தந்த படம் தான் Battle of Algiers. வரலாறு புனைவைக்காட்டிலும் சுவாரஸ்யமானது என்று சொல்லுவார்கள் அல்லவா, அதைப்போல தான் புனைவு சினிமாக்களை விட இந்த வரலாற்றுப் படம் வெகு சுவாரஸ்யமாகவும், ஒரு போரை நேரில் கண்டறிவதைப்போலவும் ஒரு அசலான வரலாற்று அனுபவத்தை தரும். Gillo Pontecorvo என்னும் இத்தாலிய இயக்குனாரால் இயக்கப்பட்டது இந்த திரைப்படம். அதற்கான முன்னெடுப்புகளை சுதந்திர அல்ஜீரியாவின் போராளிகள் செய்தார்கள்.
சுதந்திரப் போராட்ட படமான போதிலும் படத்தின் நரேட்டிவ் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இருந்தது. இரண்டு தரப்பிலும் செய்த வன்முறைகளை படமாக்கியது. அந்த நேர்மைதான் இப்படத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக ஆக்கியது. அவை FLN வீரர்களையோ சுதந்திரப்போராட்டத்தையோ எவ்விதத்த்திலும் Romanticise செய்யவில்லை. இன்றும் அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய ஆவணமாக இத்திரைப்படம் விளங்குகிறது. மட்டுமல்லாது இத்தாலிய நியோரியலிச சினிமாவின் ஒரு உச்சகட்ட முயற்சியாகவும் இத்திரைப்படத்தைக் கொள்ள முடியும்.
அல்ஜீரியா என்று ஒரு தேசம் சுதந்திரம் பெற்று 4 வருடங்களில் இனி எப்போதும் வாழக்கூடிய ஒரு திரைப்படத்தை 1966ல் அது வெளியிடுகிறது. அதற்காக அது செலவிடுகிறது. சினிமா என்பது அப்படி ஒரு முக்கியமான பண்பாட்டு செயல்பாடு என்று அந்த கலாச்சாரம் புரிந்துவைத்துள்ளது. தனது தேசத்தின் சுதந்திரப்போராட்டத்தை ஆவனப்படுத்துவதை அதன் முதன்முக்கியமான கடமைகளின் ஒன்றாக கருதியிருக்கிறது. இந்த விஷயம் என்னை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. 2016 இல் Battle of Algiers திரைப்படம் வெளியாகி 50ம் வருடம் நிறைவு பெறுகிறது. அதையொட்டி இன்னொருமுறை இப்படத்தைக் காண ஆவலாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக