இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 செப்டம்பர், 2016

ஓணம் நினைவுகள்...

#014 ஓணம் நினைவுகள்... 

நாம் மலையாள குடும்பத்தில் பிறந்ததனால் வருடா வருடம் ஓணம், விஷு பண்டிகைகள் எல்லாம் சம்பிரதாயமாக நடபெறுவது வழக்கம். பொதுவாக ஒரு கலாச்சாரத்திலிருந்து புலம்பெயர்ந்து வேறு இடத்தில் வாழும் மக்களே அவர்களது பண்டிகைகளையும் சம்பிரதாயங்களையும் பற்றியபடி இருப்பார்கள். அப்படித்தான் ஓணம் பண்டிகையும் எனக்கு. காரணமே தெரியாமல் பல வருடங்கள் கொண்டாடிவந்தபோதும், இப்படிப்பட்ட ஒத்திசைவில்லாத பண்டிகைகள் எந்த நினைவையும் ஏற்படுத்தியதில்லை. ஒன்று, அன்று விடுமுறையாக இருக்காது. இரண்டாவது, அந்த பண்டிகைக்கு புதுத்துணி கிடைக்காது. புதுத்துணி தீபாவளிக்குதான். 

விடுமுறைகள் மட்டும் இல்லை என்றால் நாம் பலரும் காந்தி ஜெயந்தியையும், குடியரசு தினத்தையுமெல்லாம் நினைவு வைத்திருக்கப்போவதில்லை என்பது நிஜம் தானே? 

கொஞ்சம் வளர்ந்து படிக்க, வேலைக்கு என்று வேறு ஊர்களில் தங்கிவிட்ட பிறகு ஓணம் எல்லாம் வாழ்வில் பிறகு குறுக்கிடவில்லை. பண்டிகையன்று மலையாள நண்பர்கள் ஒரு நல்ல ஓட்டலில் போய் ஓணசத்ய சாப்பிடுவார்கள். நான் பணிபுரிந்த பணியிடத்திலே ஒரு கேட்டரர் சாமர்த்தியமாக ஸ்பெஷல் ஓணம் சாப்பாடு என்று சிறப்பு கட்டணம் இட்டு வசூலித்தார். ஒரு 10 வகை பொறியல் இருக்கும். எப்படியோ போகட்டும்....

சுமார் 2010ம் வருடம் முதல்முதலாக ஒரு நண்பரின் அழைப்பை ஏற்று கேரளாவில் உள்ள கண்ணூரில் உள்ள அவரது வீட்டில் ஓணம் கொண்டாட சென்றிருந்தேன்.  அது ஓனத்திற்கு முந்தைய நாள். மழை பெய்தவாறு இருந்தது. வீட்டு முற்றங்களில் எளிமையான வீட்டிலே வளர்ந்த பூக்களாலான கோலங்கள் போடப்பட்டு அது மழையினால் துவண்டுபோய் கிடந்தது.  அது ஒரு குக்கிராமம். அவர்களுடையது எளிய ஒரு வீடும், சுற்றி சிரிய பரம்பும், 3 மாடுகளும், ஒரு கிணரும் - அவ்வளவுதான். 

வீட்டில் புகுந்த நேரம் பாக்கு கொட்டைகளையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டிருந்த அம்மா கையோடு...."வா மோனே...இது ஒந்நு கொண்டாக்கிட்டு வராம்.." என்று மூட்டைகளைப் பிடிக்கச் சொல்லி ஒரு வண்டியில் ஏற்றி கொண்டுசென்றோம். அது ஒரு முதலாளி வீட்டிற்குச்சென்றது. அங்கு மூட்டைகளைப்போட்டு விட்டு பணம் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடக்கத்துடங்கினோம். பண்டிகை குறித்த அந்த ஒச்சையும் இல்லாமல் இருந்தது தெருக்கள். எல்லா வீடுகளிலும் கலைந்த பூக்கோலம் மட்டும். வரும் வழியில் மத்தி வாங்கிக்கொண்டோம். அன்று, மத்தி வறுத்ததும், புளிஷேரியும். சுகம். 

மறுநாள் ஓணம். மறுபடியும் காலையில் ஒரு சத்தமும் இல்லை சாகசமும் இல்லை. அதே போன்ற பூக்கோலம். நேற்றையவிட ஒரு சுற்று பூக்கள் அதிகம். அவ்வளவே. அடுத்த வீட்டுக்காரர் கடந்து போகையில் ..."ஓணம் ஆயோ வத்சலம்மே..." என்று மட்டும் ஒரு வினவு. "...உவ்வு..." முடிந்தது. டிபனுக்கு தோசை. முன்பெல்லாம் (தமிழ்நாடு போலவே) இட்டிலி தோசைகள் எல்லாம் விழாக்காலத்தில் மட்டும் தான் இருந்தது. நான் சொல்வது அதிகமில்லை 1990கள் வரை அப்படித்தான். ஆனால் தற்சமையம் எந்த முக்கு கிரமத்திலும் தோசை இட்டிலிகள் கிடைக்கின்றன.  சாவுகாசமாக 10 மணிக்கு குளித்து சாப்பிட்டு தெருவெல்லாம் ஒரு சுற்று சுற்றி வந்தாயிற்று. கோவிலில் மட்டும் சற்று ஜனம் அதிகமாக இருந்தது. 

மதியம் உணவு, முந்தைய தினத்தைவிட 2 பொறியல் அதிகம். மற்றும் பாயசம். ஓணம் சிறப்புத்திரைப்படமாக கமலின் தசாவதாரம் போட்டிருந்தார்கள். குழந்தைகள் பெரியவர்களெல்லாம் பார்த்து ரசித்தனர். எனக்கு சலிப்பாக இருந்ததால், எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அரசுப்பள்ளி மைதானத்தில் போட்டிகள் நடக்கும் என்று சொல்லியிருந்தார்கள். நான் போய் சேருகையில் பூக்கோலம் போட்டி முடிந்து பரிசுகள் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். அந்தந்த குழுக்கள் தத்தம் கோலத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னாள் இளம்பெண்கள் சமையல் முடித்து ஒரு வலம் வந்து தங்கள் பிள்ளைகள் இட்ட கோலத்தை பார்வையிட்டு "...நல்ல பங்கி இண்டல்லே..." என்று சிலாகித்து சென்றனர். 

பின் பலூன் உடைக்கும் போட்டி, ச்பூன்லிங், சாக்கு ஓட்டம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. சிறுவர்கள் ஆர்வமாக பங்கேற்றார்கள். பரிசு வென்ற சிறுவர்கள் கூச்சத்துடன் கைதட்டலுக்கு மத்தியில் வந்து பரிசுகளை வாங்கிச்சென்றனர். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரியவர்கள் பரிசுகலைக்கொடுக்க அழைக்கப்பட்டனர். ஒரு 2 மணிநேரத்தில் எல்லா போட்டிகளும் முடிந்து மண்புழிதிகள் மட்டும் எழுந்தவண்ணம் மைதானம் காலியாகிப்போனது. 

வீடுநோக்கி திரும்பலானேன். ஓணம் சிறப்பாக கழிந்தது. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக