#002.
சொலவடைகள் (les expressions) ஒரு மொழிக்கு அழகு சேர்ப்பவை. பொதுவாக எல்லா மொழிகளிலும் சொலவடைகள் இருக்குமென்று நம்புகிறேன். ஆனால் யாமறிந்த மொழிகளிலே சொலவடைகளை அதிகமாக பயன்படுத்துகிற மொழி ஃபிரெஞ்சு. தமிழில் சொலவடைகளை சிறப்பு இடங்களில் மட்டுமே பயன்படுத்துவதாக தோன்றுகிறது. அதாவது ஒரு செய்தித்தாளிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ நாம் தினம் தினம் பேசும் சந்தர்ப்பங்களிலோ சொலவடைகளை அதிகமாக பயன்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு "நாய்க்கு பேரு முத்துமாலை" "செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி" "மொளச்சு மூணு எலை உடுல" போன்ற சொலவடைகளை நாம் தினசரி பயன்படுத்துவது இல்லை. அது சற்று செயற்கைத்தனமாகவும் தோன்றிட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லாமல் மிகவும் கிளிஷே தனமாக இருக்கும். அதற்கு முக்கியமான ஒரு காரணம் நமது பெரும்பாலான சொலவடைகள் பழமொழிகள் என்றளவிலேயே நின்றுவிட்டதுதான்.
சொலவடைகள் வேறு . பழமொழிகள் வேறு என்று நம்புகிறேன் நான். பழமொழிகள் நிலையானது. பெரும் மாற்றங்கள் இல்லாமல் அப்படியே உபயோகித்து வருபவை. அதற்குப்பின்னால் தீர்க்கமான ஒரு நிகழ்வோ அல்லது ஒரு கதையோ புராணமோ இடம்பெறும். ஆனால் சொலவடைகள் அப்படியல்ல. அது மொழியுடன் சேர்ந்து வளர வேண்டும். பரந்துபட்ட துறைசார் சொலவடைகள் தோன்ற வேண்டும். பகிரப்பட்ட வேண்டும். சொலவடைகளுக்கு ஒரு எளிமையான பின்புலம் போதுமானது. அது ஒரு தொலைக்காட்சி விளம்பரமாகவோ, ஒரு சினிமா வசனத்திலிருந்து உருவானதோவாகக்கூட இருக்கலாம். அப்படிப்பட்ட சொலவடைகள் ஒட்டுமொத்தமாக அந்த மொழியை செழுமையாகவும் உயிர்ப்புடனும் வைத்திருக்கும். அதற்கு ஃபிரெஞ்சு மொழியில் நல்ல உதாரணங்கள் உண்டு.
"trois metro retard " என்று ஒரு வழக்கு எனக்கு மிகவும் பிடித்தமானது . metro என்பது நகர தொடர்வண்டி நிறுத்தங்கள் என்று கொள்க . ஒருவர் je suis trois metro en retard (ஜஸ்வி த்ருவா மெத்ரோ அன் ரிதார்) என்று சொன்னால் அவர் மூன்று ஸ்டேஷன் தள்ளி இருப்பதாக அல்ல அர்த்தம். மாறாக அவர் செய்யும் ஒரு பணியையோ அல்லாது காரியத்தையோ - அதை கிட்டத்தட்ட முடிக்கப்போகிறேன் என்று சொல்லுவதாகப் பொருள். அதாவது ஒரு நண்பரைப் பார்க்க போகும்போது "இப்போ எங்கு இருக்கிறாய் " என்று அவர் போன்செய்தோ குறுஞ்செய்தியிலோ கேடடால் சொல்வோம் அல்லவா...2 ஸ்டாப் முன்னாடி இருக்கிறேன் என்று, அதுபோல தான். ஆனால் அந்த "அருகில் நெருங்கிவிட்டமையை" ஒரு காரியத்தின் மேல் பயன்படுத்துவது தான் இங்கு வித்தியாசம்.
மேலும் அந்த சொலவடை அந்த கலாச்சாரத்தைப் பற்றியும் கொஞ்சம் வெளிப்படுத்துகிறது. மெட்ரோ அவர்கள் வாழ்வில், மொழியில் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பது தெரிகிறது. அப்படியென்றால் மெட்ரோக்கள் எத்தனை நூற்றாண்டுகளாக அங்கு புழக்கத்தில் உள்ளன என்று தெரியவருகிறது. இப்படி இரு சிறிய சொலவடை ஒரு மொழிக்குள்ளும் கலாசாரத்துக்குள்ளும் எட்டிப் பார்ப்பதற்கு ஒரு ஜன்னலாக அமைந்துவிட முடியும். அப்படிப்பட்ட இன்னும் சில சொலவடைகளை பிறகு பார்க்கலாம்.
(தமிழில் அப்படி நீங்கள் உபயோகிக்கும் விருப்பமான சொலவடைகளிருந்தால் பகிரலாம்).
வெள்ளி, 2 செப்டம்பர், 2016
மூன்று ஸ்டாப் தொலைவு என்பது எவ்வளவு?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக