27, செப், 2016.
அன்மையில் கோவையில் இந்துமுன்னனி கட்சியைச்
சேர்ந்த ஒரு பிரமுகர் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டார். அதற்கும் அவர் இந்துமுன்னனியைச்
சேர்ந்தவர் என்பதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் அதன்
பெயரால் அங்கு அவிழ்த்துவிடப்பட்ட வன்முறை ஊடகங்களில் அதிக கவனம் பெற்றது. நான் வீட்டிற்கு
தொலைப்பேசியிருந்த போது "ஒரு இந்துமுன்னனி ஆள வெட்டிட்டாங்க, பஸ் எல்லாம் ஓடல...எல்லாரையும்
வீட்டுக்குள்ளயே இருக்க சொல்லியிருக்காங்க..." என்பது போல சொன்னார்கள். அப்போது
தான் சம்பவத்தின் தீவிரத்தன்மை புரிந்தது. ஏனென்றால் என் பெற்றோர் இருப்பது கொலை நடந்த
துடியலூருக்கு 25 கிலோமீட்டர் தள்ளி.
ஒரு சிறு சாத்தியத்தைக் கூட ஒரு இந்து-முஸ்லீம்
சமூகக் கலவரமாக கொண்டுசெல்ல எத்தனிக்கும் ஒரு விருப்பமும், முயற்சியும் நடந்த விஷயங்களில்
புலப்பட்டது. முஸ்லிம் நிறுவனங்கள், கடைகள் அடித்து உடைப்பு. செல்போன் கடைகள் சூரையாடல்.
பஸ் எரிப்பு...எல்லாம். சொல்லப்போனால்....கோவையில் இஸ்லாமியர்களிக்கு எதிரான ஒரு மனோநிலை
ஒரு டைம்-பாம் போல எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறது. அது சரியான நேரத்தை எதிர்
நோக்கி காத்த்டிருக்கிறது. இது தான் சரியான நேரம் என்று அறிவிக்க ஒரு கும்பல் எப்போதும்
தயார் நிலையில் இருக்கிறது. கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்காமல் அப்படியே எல்லா குற்றப்பார்வைகளையும்
இஸ்லாமியர்கள் பக்கம் திருப்ப அனைத்து பொதுஜீவிகளும் தயார் நிலையிலே இருக்கிறார்கள்.
இது என் தியரி இல்லை. நானும் கோவையைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நான் கண்டு உணர்ந்தது.
இப்படி ஒரு அவசர முன்னெடுப்பின் விளைவாக
தான் 1997-1998 களில் மிக மோசமான ஒரு மதக்கலவரத்தை தமிழகமே காணாத அளவில் கோவையில் ஒரு
மதக்கலவரம் நடந்தேரியது. அந்த இருட்டான நாட்கள் ஒரு கொடுங்கனவைப்போல இப்போது நினைவில்
தங்கியிருக்கிறது. சமீபத்திய இந்த கொலையும், அதைத்தொடர்ந்த வன்முறை சம்பவங்களும்
1997-1998 நாட்களின் காட்சிகளை நினைவு அடுக்குகளில் இருந்து அனிச்சையாகத் தட்டி எழுப்புகின்றன.
நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த
சமயம். திடீரென்று ஒரு நாள் பள்ளியில் ஒரு பரபரப்பு. டீச்சர்கள் அவரவர் வகுப்புக்கு
வெளியில் நின்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தனர். ஏதோ போலீஸ், குத்திடாங்க...என்பது
மட்டும் தான் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட்டது. யார் யாரைக் குத்தியது என்றெல்லாம்
தெரியவில்லை. பள்ளி சீக்கிரமாகவே விட்டுவிட்டார்கள் . வீடு செல்லும் வழியில் தான் விஷயம்
தெரிந்தது. கோவை உக்கடத்தில் செல்வராஜ் என்னும் ட்ராஃபிக் போலீசை மூன்று முஸ்லிம் இளைஞ்சர்கள்
சரமாரியாக குத்திக் கொன்றுவிட்டார்கள் என்று. அவர்கள் மூவரும் ட்ரிபிள்ஸ் போனதாகவும்,
தடுத்து நிறுத்திய போலீசை குத்திக்கொன்றுவிட்டதகவும் சொன்னார்கள்.
ஒரு கொலைசம்பவம் மக்களின் வன்மத்துக்குள்
ஊடுருவி கலவரமாகவும், மொத்த சமூகத்தின் மீதான தாக்குதலாகவும் மாறியது. ஏற்கனவே மானசீக
மதரீதியான ஆதரவின் பெயரில் பிளவுபட்டுக்கிடந்த போலீஸில் ஒரு பகுதியினருக்கு இந்த சம்பவம்
உணர்ச்சிவசப்படுத்தியது. இந்து-முஸ்லிம் எதிரிமனோபாவத்தை வெடிக்கவைக்கும் டைம் பாம்
தயாரானது. இந்துமுன்னனி ஒரு போலீசின் கொலையை ஒரு இந்துவின் கொலையாக சித்தரித்து, கலவரங்களை
முன்னெடுத்தது. எப்போதுமே இந்து-முஸ்லிம் போட்டிகள் நடைபாதை கடைகள் வரை வியாபித்து
இருக்கும். இந்த தருணம் பார்த்து பல வியாபரிகள் இந்துஅபிமானி போர்வையில் முஸ்லிம் சிறு,
பெறு நிறுவனங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டன. மறுமருங்கில் பதிலுக்காக இந்து நிறுவனங்கள்
மீதும் தாக்குதல்கள் நடைபெற்றன. போலீஸின் பலத்த பாதுகாப்புடன் இந்து பிரிவினைவாதிகள் இந்த அட்டகாசங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.
அதன் உச்சகட்டமாக ஆயுதமேந்திய முஸ்லிம் கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி,
அதில் 18 முஸ்லிம்கள் வரை கொல்லப்பட்டனர்.
ஒரு தொடரியக்கம் போல எல்லாம் நடந்தேரிக்கொண்டிருந்தது.
அதன் மோசமான விளைவுகள் எங்களுடையதைப் போல சிறிய டவுன்களிலும் பரவியது. பிரிவினைவாத
சக்திகளால் வழினடத்தப்பட்ட இளைஞர்கள் பலரும் கையில் ஆயுதம் ஏந்தினார்கள். எங்கள் ஊரில்
எனக்கு மிக நெருக்கமான அண்ணன்களில் சிலரே கலவரக்காரர்களாக மாறியிருந்தார்கள். போய்வரும்
இளைஞர்களை பெயர்கேட்டு முஸ்லிம் பெயராக இருந்தால் அவர் மீது தாக்குதல் நடைபெறும். கால்
உடைக்கப்படும், கை உடைக்கப்படும், கத்திக்குத்துகள் நடக்கும். தினமும் இப்படிப்பட்ட
சாகச கதைகளை வந்து சொல்லுவார்கள். அவர்களும் தனியே கிடைத்தால் உயிருக்கு உத்திரவாதம்
இல்லை. விளைவாக, முஸ்லிம்கள் எங்கும் தனியே போகாமல் குழுவாகவே இருந்தார்கள். இந்து
இளைஞர்களும் அப்படியே.
ஒரு வழியாக உள்ளூர் போலீசுகளுடைய கைகட்டித்தனத்தை
புரிந்துகொண்டு வெளியூரிலிருந்து போலீசார் குவிக்கப்பட்டனர். தெருவெங்கும் போலீஸ் கண்கானிப்பில்
இருந்தனர். விஷயம் ஒருவழியாக கட்டுக்குள் வந்தது. இருந்து இருந்து பார்த்துவிட்டு,
கொஞ்சம் கொஞ்சமாக போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படது. எல்லாம் முடிந்துவிட்டது
என்று நினைத்திருந்தோம். ஆனால் இதைவிட மோசமான நாட்கள் இனிதான் வரப்போகிறது என்று நாங்கள்
அறிந்திருக்கவில்லை...
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக