இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 செப்டம்பர், 2016

மாறும் காலம் : தேசத்தின் காலங்காட்டி நின்ற்போனது ஏன்?

HMT கைகடிகாரங்கள் இந்திய கலாச்சாரத்திலிருந்து பிரிக்க முடியாதவை. ஒரு காலத்தில் தேசத்தின் காலங்காட்டி என்று அது சொல்லப்பட்ட போது, அதை யாரும் மிகை என்று மறுக்கவில்லை. அப்போது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். Hindustan Machine Tools Limited  பொதுத்துறை நிறுவணம் ஏற்கனவே தொழில் துறை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை உருவாக்கி வந்தது. 1961ம் ஆண்டு கைகடிகாரங்கள் உருவாக்கவும் அனுமதி பெறப்பட்டு பெங்களுருவில் தனது முதல் உற்பத்தி ஆலையை ஏற்படுத்தியது. ஜப்பானிய நிறுவணமான சிடிசனுடன் உதவியுடன் துடங்கப்பட்ட அதன் முதல் கைகடிகாரத்திற்கு அப்போதைய பிரதமந்திரி ஜவஹர்லால் நேரு ஜனதா என்று பெயரிட்டார்.  HMT யுடைய முதல் manual கைகடிகாரம் நேருவால் திறந்துவைக்கப்பட்டது. 

மேனுவல் கைகடிகாரங்கள் கீ கொடுக்கும் முறையில் இயங்கின. அவை பெரும்பாலும் 24 மணி நேரங்களுக்காக அளவீடு செய்யப்பட்டிருக்கும். அடுத்த 24 மணிநேரத்திற்கு மீண்டும் கீ கொடுத்தாலே அது தொடர்ந்து இயங்கும். இது சலிக்கத்தக்க ஒரு நடைமுறையாக இருந்தாலும் அது தான் நிதர்சணம். பேட்டரி மூலம் இயங்கும் க்வார்ட்ஸ் கடிகாரங்கள் நடைமுறைக்கு வந்து மேனுவல் கைகடிகாரங்களை விழுங்கும் வரைக்கும் இதுதான் வாடிக்கையாக இருந்தது. 

HMT நிறுவணம் janata-வை தொடர்ந்து இந்திய வரலாற்றில் நிலைபெற்று விட்ட பல கடிகாரங்களை வெளியிட்டது Pilot, Kohinoor, Kanchan என்று நூற்றுக்கணக்கான மாடல்களை வெளியிட்டன. ஒவ்வொரு விழாக்காலங்களிலும் ஒரு புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தி ...அடுத்து என்ன என்ற ஆவலைத் தக்கவைத்துகொண்டிருந்தது. மேலும் பெரும்பாண்மையாண்மையான கடிகார மாடல்களுக்கும் அப்போது நிலுவையிலிருந்த பொதுவான பெயர்களைளே தாங்கியிருந்தன. Vijay, Mohit, Lalit. Sona, Keerthi, Aakash, Sundar.....என்று. ஒருவேளை இந்த பெர்யர் உடையவர்களெல்லாம் தங்கள் பெயருடைய மாடலை வாங்கி அணிய விருப்பப்பட்டிருப்பார்களோ என்னவோ? 

70-80 களில் மிகவும் பிரசத்திபெற்றிருந்த HMT கடிகாரங்கள் அந்தஸ்தின் அடையாளமாகவும் இருந்தது. பொதுவாக பெற்றோர்களோ பெரியவர்களோ குழதைகளுக்கு பரிசளிப்பதாக கூறுவது HMT கடிகாரங்களாக இருந்தன. அதே போல கல்யாணங்கள் HMT கடிகாரங்கள் இல்லாம நிறைவு பெறாது என்று சொல்லுவார்கள். HMT Kanchan என்ற தங்கமுலாம் பூசப்பட்ட கடிகாரத்திற்கு Dowry Watch என்றே பெயர் இருந்திருக்கிறது. சீதனத்தில் அந்த கடிகாரம் இல்லாமல் கல்யாணம் நிறைவேறாது. அசல் விலை 800 ரூபாய் இருக்க கள்ள மார்கெட்டில் அதைவிட அதிக விலைகளில் HMT கடிகாரங்கள் விற்கப்பட்டன. 

காலத்திற்கு மிக முன்னதாகவே 70களிலேயே பேட்டரிமூலம் இயங்கும் க்வார்ட்ஸ் கடிகாரங்களை வெளியிட்டது HMT நிறுவனம். ஆனால் க்வார்ட்ஸ் கடிகாரங்களுக்கு வரவிருக்கும் சந்தையை குறைந்து மதிப்பிட்டு HMT அதற்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறியது. மேலும் மேலும் mechanical கடிகாரங்களையே தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தது. HMT மெக்கானிக் கடிகாரங்கள் குறைந்த பராமரிப்பு செலவுக்காகவும், நம்பகத்தன்மைக்கும்  பெயர்போனது என்றபோதும் க்வார்ட்ஸ் கடிகார பிரிவில் 1987ல் தொடங்கப்பட்ட டைட்டன் நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் சுணங்கிப்போனது. 

HMT கடிகார நிறுவனம் சோபை இழந்து அதை தனது அஸ்தமனம் வரை இழுத்து வர முக்கிய காரணங்களாக இருந்தவை:

ஒரு காலகட்டத்துக்கு மேல் புதுமையான வடிவமைப்பில் கவனம் செலுத்தாமல் பழையவற்றையே பிடித்து தொங்கிக்கொண்டிர்ந்தது. மிக பலம் வாய்ந்த செய்திறன் மிகு வல்லுனர்கள், சிறந்த பயிற்சி முறைகள் எல்லாம் இருந்த போதும் புதுமையான வடிவமைப்புகள் , உயர்ந்த ரசனையான தயாரிப்புகளைத் தர மறுத்தது HMT

அடுத்து பொதுத்துறை நிறுவனங்களில் காணப்படும் தொழிலாளர்களிடத்து மெத்தனம், ஒழுங்கற்ற பணியிட வழக்கங்கள், தெளிவான இலக்கின்மை போன்ற காரணங்களால் நிறுவனத்தின் உள்செலவுகள் கூடின. HMT யின் தொழில்நுட்பம் காலமாற்றத்திற்கு வளைந்துகொடுக்க வல்லது ஆதலால் சற்று தாக்குபிடித்து நின்றது. ஆனால் அது வெகுநாள் நீடிக்கவில்லை. 

87ம் ஆண்டுக்கு பிறகு சந்தையில் வந்த டைட்டன்ம், ஆல்வின் நிறுவனங்கள் HMT யின் சந்தையை பங்கிட்டுக்கொண்டன. ஆல்வினும் தாக்குபிடிக்க முடியாமல் ஓட, டைட்டன் க்வார்ட்ஸ் கடிகார சந்தையில் ஒற்றை ஆளாய் கொடிகட்டிப்பறந்தது. டைட்டன் தொடங்கப்பட்ட போது HMT பெரிய ஜாம்பவான். அதற்கு இணையாக போட்டி போடவேண்டும் என்றெல்லாம் அது நினைக்கவில்லை. மெக்கானிக்கல் கடிகாரம் எல்லாம் நமக்கு வேண்டாம் என்று முழுமூச்சோடு க்வார்ட்ஸில் மட்டும் கவனம் செலுத்தியது. HMT அளவுக்கு தொழில் நேர்த்தியற்ற போதும் டைட்டன் நல்ல ரசனை மிக்க இளம் வடிவமைப்பாளர்களை வேலையில் வைத்தது. அப்போது உலக தரத்தில் வெளிவந்துகொண்டிருந்த கடிகாரங்களுக்கு இணையான வடிவமைப்புடன் குறைந்த விலையில் கடிகாரங்களை வெளியிட்டன. மேலும் டைட்டனுக்கென்று ஒரு மதிப்பை மக்களிடையே பலவந்தமாக ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுத்தது. தொலைக்காட்சி மற்றும் இதர விளம்பரங்கள் மக்களைக் கவரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டது. மேலும், டைட்டன் தொடங்கப்பட்ட போது    HMT நிறுவனத்திலிருந்து அப்போதுதான் ஓய்வு பெற்ற உயர்பதவி வகித்த ஒருவரை டைட்டன் தன்னுடன் இணைத்துக்கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக HMT யின் பலவீனங்கள் அனைத்தும் டைட்டனின் பலங்கள் ஆகின. 

மற்றுமொரு பிரச்சனை, கள்ளமார்க்கெட்! அப்போது தான் கள்ளமார்க்கெட் மிக அதிகமாக சூடு பிடிக்கத்தொடங்கி இருந்த காலம். வெளிநாட்டு திருட்டுப் பொருட்கள் அதிக அளவில் புழங்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட அதே அல்லது அதைக்காட்டில் குறந்த விலையில் கிடைக்கப்பட்ட வெளிநாட்டு ப்ராண்டுகளை மக்கள் நாட ஆரம்பித்தனர். HMT யும் இதை பெரிய ஆபத்தாக அருதியதாகத் தெரியவில்லை. 

நலிவடைந்த HMT நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்குமுகத்தை நோக்கி செல்லத்துடங்கியது. ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை இழுத்தடித்தது. பலரும் விலகிப்போக ஆரம்பித்தார்கள். நல்ல பல வல்லுனர்கள் டைட்டன் போன்ற நிறுவனங்களில் தங்களை இனைத்துக்கொண்டார்கள். மத்திய அரசு மெல்ல மெல்ல நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிதிகளை குறைக்கத்தொடங்கியது. அன்மையில் 2014காம் ஆண்டில் அந்த செய்தி வந்தடைந்தது. HMT நிறுவன செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும், படிப்படியாக மற்றும் 5 பொ.நி. களுடன் சேர்ந்து HMT கடிகார கம்பெனியும் மூடப்படும் என்பது தான் அந்த செய்தி! 

ஒரு அரைநூற்றாண்டு பாரம்பர்யம் கொண்ட இந்திய அரசின் நிறுவனம், தேசத்தின் காலங்காட்டி என்று செல்லமாக கொண்டாடப்பட்ட ஒரு கடிகாரம் தனது முட்களை அமைதியாக முடக்கிக்கொண்டது. அதை வெறும் ஒரு நிறுவனத்தின் தோல்வியாக மட்டும் பார்ப்பது சரியாக இருக்குமா தெரியவில்லை. சமீபத்தில் Jio விளம்பரத்தில் பிரதமரது படத்தைக் கண்டபோது எனக்கு இந்த கேள்விகளெல்லாம் எழுந்தது இயல்பே! (தார்மீகமாக நீர் BSNL விளம்பரத்தில் தான காட்சியளிக்க வேண்டும்? )

அங்கிங்குமாக இருந்த ஒன்றிரண்டு விற்பனை நிலையங்களை ஒவ்வொன்றாக மூடிவிட்டது. இந்த செய்தியைக்கேட்டு எஞ்சி இருக்கும் HMT கடிகாரங்களை வாங்க மக்கள் அலைமோதினார்கள். அதில் பெரும் பங்கு 80-90களில் சிறுவர்களாக இருந்த ஒரு தலைமுறையினர். HMT கடிகாரங்களை ஒரு கனவுபோல அபிலாஷையுடன் கண்டு வளர்ந்த ஒரு தலைமுறை. ஒவ்வொரு HMT யிலும் ஒரு கதை உண்டு என்று நம்பிய தலைமுறை அது. நானும் அந்த தலைமுறையை சேர்ந்தவன் என்ற முறையில் என்பங்கிற்கு ஒரு நான்கு கடிகாரங்களை வாங்கி வைத்தேன். 

எனக்குத் தோன்றியது ஒருவேளை சற்று மெத்தனமின்றி சரியாக கையாளப்பட்டிருந்தால் Royal Enfield எப்படி தனது பழமையின் பெயரால் தன்னை மீண்டும் ஒரு வெற்றிகரமான ஒரு ப்ராண்டாக கட்டமைத்துக்கொண்டதோ அப்படி HMT யும் தன்னை புத்துயிர்ப்பு செய்துகொண்டிருக்க முடியும் என்று. தவறுகள் எங்கே நடந்தன, பிழைகளை எங்கே திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் நாம் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வது மிக அவசியமாகிறது. இல்லாவிட்டால் காலத்தின் மாற்றத்திற்கு நாம் பெரிய விலைகளைக் கொடுக்கவேண்டி இருக்கும்! 












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக