குளிர்ச்சியூட்டப்பட்ட நேற்றைய உணவை
சூடுசெய்து கொள்ளலாம்
ஏற்கனவே கட்டி வைத்த பூமாலையின்
விளிம்புகளை கத்தரித்துக்கொள்ளலாம்
முந்தைய இரவு எதுவுமே நடக்காததுபோல
கலையில் வழக்கம்போல புன்னகைத்துக் கொள்ளலாம்
மிச்சமாகிவிட்ட மதுவை எடுத்து வைத்துவிடலாம்
அது மற்றுமொரு நாள் அவசியப்படலாம்
குவியமற்ற உனது புகைப்படங்களை
சற்றே திருத்திக்கொள்ளலாம்
ஒரு ப்ளேடு ஏற்படுத்திய சிறு காயத்தை
தற்சமயம் நாவால் ஈரப்படுத்துவோம்
இந்த ஒருமுறை மதுரமின்றியே
இந்த தேநீரை அருந்துவோம்
சின்னச் சின்ன பிழைகளுடனே அந்த
மன்னிப்புக்கடிதம் எழுதப்படட்டும்
இன்று அனைத்துக்கொள்ளாமலே உறங்கச்செல்வோம்
துவைத்த போர்வைகள் நாளை உலர்ந்துவிடும்
அனைத்தும் சரியாகிவிடும்...
தெரியும் உள்ளாடையை மறைப்பதைப்போல
கலந்த முடியை கோதிக்கொள்வதைப்போல
ஒரு ரத்தத்துளியை...
ஒரு தடையத்தை...
மறைப்பதைப்போல...சர்வசாதரணமாக
எல்லாவற்றையும் கொஞ்சம் சரிசெய்து கொள்ளலாம்!