இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 செப்டம்பர், 2007

சித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்


இயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை.

~ நகிசா ஒஷிமோ

நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால்
அது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது !.
இப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்!!

~ இந்த கட்டுரையை எழுதச்சொல்லிக் கேட்ட கௌதமன்


மீண்டும் கர்னாடகாவின் வட பகுதிதிகளை காணப்புறப்பட்ட ஒரு வார இறுதியில் வெளிநாட்டு சரக்கின் வருகைகளின் காரணமாக திட்டம் கைவிடப்படவே எனக்கு சற்றும் பிடிக்காத பெங்களூர் நகரில் சுற்றிவர நேர்ந்தது. ISKON போன்றவற்றை என்னால் ஆன்மிக ஸ்தலங்களாகப் பார்க்க முடியவில்லை.மாறாக அவை வர்த்தக நிறுவனங்கள் போலவே செயல்பட்டு வருகின்றன என்று கூறுவதே ஏற்புடையதாய் தோன்றுகிறது. ஆதனால் கடைசியில் வேறுவழியின்றி பூங்காக்களுக்கு வந்து சேர்ந்தோம்.

ஆண்கள் இங்கு செல்லக்கூடாது, பெண்கள் இங்கு செல்லக்கூடாது, என்று சில இடங்கள் இருப்பது போல...'ஆண்கள் மட்டும் செல்லக் கூடாது'...'பெண்கள் மட்டும் செல்லக் கூடாது' என்று சொல்வதற்கும் சில இடங்கள் உண்டு. ஊட்டி, திருச்சி மலைக்கோட்டை, பெங்களூர் லால்பாக் அவற்றில் அடங்கும். ஆமாம் இங்கு வருபவர்கள் எல்லாம் ஜோடிகளாகவோ, 'ஜோடிக்கப்பட்டோ' தான் வருகிறார்கள். கிடைத்த மர நிழலில், புதர் இடையில் புகுந்து கொள்கிறார்கள். நாளடைவில் இந்த புதர்கள், நிழல்கள் எல்லாம் நிறைந்துவிட்டதால் இந்த So Called காதலர்கள் அங்கிங்கெனாத படி எங்கும் நிச்சலன சுருதியில் சல்லாபித்து மூழ்கிக்கிடக்கிறார்கள். நகரத்துக்குள் இத்தனைக் காதல் ஒளிந்துகொண்டிருப்பதை அப்போது தான் கவனிக்க முடிகிறது. அவை நல்ல காதலா கள்ள காதலா என்பதெல்லாம் வேறு விஷயம். காதலையே கள்ளத்தனமாக பார்க்கும் இந்த சமூகத்தில் அப்படி பேதம் பார்ப்பது சாத்தியமற்ற ஒன்று என்றே தோன்றுகிறது. அங்கு இரண்டு ஆண்கள் தனியாக செல்ல நேர்ந்தால் அருவருப்புடன் பார்க்கிறார்கள் (இல்லை நாம் அப்படி உணர்கிறோமா தெரியவில்லை). எங்களுக்கே ஒரு வித கூச்சவுணர்வு தோன்றிட தனித்தனியே உலாவச் சென்றோம்.

இந்தியாவின் Smooch, Forepalys எல்லாம் எவ்வாறு உள்ளது என்பதற்கு சில சாம்பிள்கள் இங்கு கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருந்தன. தாங்கள் பார்க்கப் படுகிறோம் என்பது குறித்து அவர்களுக்கு எவ்வித நாண உணர்வும் ஏற்படவில்லை.., எங்களுக்கும் தான். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.

நிறுவப்பட்ட கலாச்சார கற்பிதங்கள் புரையோடிக் கிடக்கும் சமுதாயத்தில் நடுத்தர மனமானது இவர்களைக் குற்றவுணர்வுடனோ, பாவஉணர்வுடனோ பார்த்து சுயகழிவிரக்கத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி, அதை ஒப்புக்கொள்வது தான். அவர்களின் குற்றவுணர்வுப் பார்வையை நிராகரிப்பது தான். காமத்தை மிருகப் பண்பாக உருவகப் படுத்தி, அதிலிருந்து மனிதனை விடுவிப்பதாய் அவதானிப்பது என்பது சமுதாயத்தின் நீண்டகால முயற்சியாகவே இருந்து வருகிறது. அதில் தொடர்ந்து தோற்றும் வருகிறது.

நகரம் இத்தனைக் காதலால் நிரம்பியிருக்கிறதா என பிரம்மிக்க வேண்டியதாய் இருக்கிறது. இன்னமும் எத்தனையோ காதல்கள் ஏதேதோ நூலகங்களிலோ, பேருந்துகளிலோ, மூத்திரச்சந்துகளிலோ ஒளிந்துகொண்டிருக்கிறது. அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவர் சொல்லக்கேட்டது இங்கு 'கூட்டிக்கொண்டு' வருபவர்கள் அதிகமாகிவிடுவதால் இது வரவர விபச்சாரத்திற்கான இடம் போல ஆகிவிட்டது என்று சலித்துக்கொண்டார். அதனால் அவ்வப்போது போலீஸ் ரோந்துகள் கூட நடப்பதாக கூறினார்.

அந்த வெளி சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பாலியல் சுதந்திரத்தின் குறியீடாகவே பட்டது. வயதின் உடல்த்தேவையை எப்படி எடுத்துக்கொள்வது என்ற அறியாமை அனைவரது செயல்களிலும் வெளிப்படுகிறது. 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிலிருந்து, இந்த மாதமோ அடுத்தமாதமோ மாதவிடாய் நின்றிவிடக்கூடிய அபாயமுள்ள பெண்கள் வரை இங்கு இதே கதிதான். இந்த லால்பாக் கூட்டத்தில் பல்தரப்பட்ட வயதுகளில் கணவன் மனைவியாக இருப்பவர்களும் உண்டு. கட்டுக்கோப்பான குடும்பக் கட்ட‌மைப்பு அவர்களை நான்கு சுவ‌ருக்குள் நடப்பதை நாலுபேர் முன் நிகழ்த்த சபித்திருக்கிறது.

பொதுவாகவே நாட்டில் இந்தமாதிரி கலாச்சார பிரச்சனை என்றாலோ, பொருளாதார பிரச்சனை என்றாலோ உடனே ஐ.டி மக்களை நோக்கி ஒரு கும்பல் பாயும். ஞாயம் தான்! நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது. இப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்!! . ஐ.டி மலர்ச்சி ஏற்பட்ட 90களில் பெங்களூர் நகரத்தின் இலக்கணம் இது தான். ஒவ்வொரு தெருவிலும் கண்டிப்பாக இருக்கக்கூடியது: ஒரு விநாயகர் கோவில், ஒரு டீக்கடை மற்றும் ஒரு Software Company என்று சொல்லுவார்கள். அப்படியிருக்கும் மக்கள் விகிதாசாரத்தில் அவர்களின் சந்தேகம் ஞாயமானதே. அப்படிப்பட்டவர்கள் கவனத்திற்கு: இந்த மாதிரி இடங்களில் காணப்படுபவர்கள் ஐ.டி/BPO க்காரர்கள் அல்ல. ஐ.டி/BPO பேச்சுலர்கள் எல்லாம் ரூம் போட்டு விடுகிறார்கள். பெண்கள் கூத்து அதைவிட. நான் பெங்களூரில் வசித்து வந்த போது நண்பர்களாக இருந்த Call Taxi டிரைவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வார இறுதிகளில் 4 அல்லது 5 பெண்கள் ஒரு Call Taxi யை வாடகைக்கு எடுத்துக்கொண்டு எங்காவது 3 அல்லது 4 மணி நேரம் போகும் தூரமுள்ள இடத்திற்கு போகச்சொல்கிறார்கள். போகும் வழியில் வண்டியிலேயே மது, சிகரெட், கூச்சல், கொச்சையாடல்கள் என அரங்கேறும். ஒடுக்கப்பட்ட சுதந்திரத்தின் வெளிப்பாடே அவை. பின் திரும்பி வருவத்ற்குள் எல்லம் அடங்கிவிடும். மீண்டும் அடுத்த வாரங்களில் க்கு ஃபோன் செய்து அதே டிரைவர்தான் வேண்டும் என்று கேட்பார்கள். சிலர் ஏதாவது புறநகர் பகுதிக்கு சென்றுவிட்டு அரை நளுக்கும் மேலாக காணாமல் போய் விடுவார்கள். "நீங்கள் வேணும்னா ஏதாவது சவாரிக்கு போரதுன்னா போயிட்டு வாங்க.." என்று நல்லெண்ண யோசனைகள் வேறு தருவார்கள். மட்டுமல்லாது இந்த டிரைவர்களுக்கு டிப்ஸ் மட்டுமே சிலசமையம் 500 ஐத் தாண்டிவிடுமாம். எல்லாம் நாம் யூகிப்பது போல ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதரணமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தான். நான் அங்கலாய்பு தாங்காமல் "தமிழ்ப் பொண்ணுகளுமா.." ன்னு கேட்டேன். Localite களாக இருப்பதால் கன்னடப் பெண்கள் மட்டும் தான் கொஞ்சம் குறைச்சல் என்கிறார்கள்.So லால்பாக் போன்ற இடத்திலிருப்பவர்களுக்கும் IT/BPO வளர்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமானால் ஐ.டி வளர்ச்சிக்கும் டிரைவர்களின் குழந்தைகள் CONVENT டில் படிப்பதற்கும் மறைமுகமான சம்மந்தம் இருக்கலாம். இப்படிப்பட்ட வரையறுக்க முடியாத உறவுகொண்ட நிகழ்வுகளின் Phenomena வைத்தான் Butterfly Effect, Chaos Theory என்றெல்லாம் சொல்கிறார்கள்.

Back to லால்பாக்:

மாலை 4 மணியிருக்கும் நாங்கள் முழுதாக ஒரு சுற்றினை முடித்து ஒரு மரத்த‌டடியில் வந்தமர்ந்தோம். அருகிலிருந்த பெஞ்சில் நீண்ட நேரமாக அந்த இளைஞன் அந்த பெண்ணை தூண்டுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருந்தான். அவளும் மறுதலித்துக் கொண்டிருந்தாள். இது வெகு நேரமாகவே நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவள் தன்னை ஒப்புக் கொடுத்தவள் போல தன் மடியில் அவனைக் கிடத்திவிட்டாள். அங்கிருந்து நகரமுடியாத படிக்கு, என் நண்பனோ அப்போது பார்த்து அலுவலக அழைப்பை செல்பேசியில் Attend செய்துகொண்டிருந்தவன், அப்படியே மடிக்கணிணியை எடுத்து மறுமுனையில் இருப்பவருக்கு விளக்கம் சொல்லத் துடங்கிவிட்டான்.

இதற்கிடையில் அந்த ஜோடி நல்லதொரு மோனத்தில் கலந்துவிட்டிருந்தனர். அப்போது அங்கு விசில் கொடுத்தபடி போலீஸார் கொச்சையாக சத்தமிட்டபடி வந்தனர். உட்கார்ந்திருந்த எல்லா ஜோடிகளையும் விலகிப்போகச் செய்தார்கள்.

போலீஸ் அருகில் வந்துவிட்டபோதிலும் எங்கள் அருகில் இருந்த ஜோடிகள் சுதாரித்துக் கொண்டு எழமுடியாத சங்கமத்தில் இருந்தார்கள். போலீஸ் அவர்களை நோக்கி லத்தியை விட்டெறிந்தான். அந்த இளைஞன் சட்டென விலகி நடக்கத்துவங்கினான். அந்தப் பெண் இன்னும் அதே இடத்தில் தான் இருந்தாள். அருகில் வந்த போலீஸ் 'வேசி' என்னும் பொருள் படும் வார்த்தையில் திட்டினான். அந்தப்பெண் எழுந்து வேறு திசையில் சாவுகாசமாக நடக்கத்துவங்கினாள், புன்னகைத்த படியே... 'இது எப்பவும் நடப்பது தானே' என்ற நீதியில் இருந்தது அவளின் தோரனை.

போலீஸ் என்ற அதிகாரத்தின் கட்டமைப்பு நிகழ்த்திய ஃபாசிசத்தின் கட்டவிழ்ப்பு அங்கு நடந்தேறியது. இது நாம் சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகிக்க வைகிறது. நாய்கள் புணர்கையில் கல்லைவிட்டு எறியும் இழிசெயல் போன்றது இது (இத்தனைக்கும் அவர்கள் முத்தமிட்டுக்கொண்டு தானிருந்தார்கள்). நமது சமுதாயத்தின் அழுகிப்போன இந்த சித்தரிக்கப்பட்ட சித்தாந்தத்தின் நாற்றமெடுப்பு சகித்துக் கொள்ள முடியாத ரீதிக்கு ரூபமெடுத்துவிட்டது.

இந்த சமுதாய...கலாச்சார மாற்றத்தை ஜீரணித்துக் கொள்ள உதவ வேண்டிய ஊடகங்களோ அதை மறைபொருளாக வியாபார ரீதியில் பணமக்கவோ... அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தவோ உபயோகப் படுத்திக்கொண்டிருக்கிறது. நகிசா ஒஷிமோ என்ற ஜப்பனிய இயக்குனர் சொல்வதைப்போல "வெளிப்படுத்தப் படும் எதுவும் அசிங்கமல்ல...மாறாக மறைக்கப் படுவதே அசிங்கம்". இதை என்று நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்??

எழுத்து - ஓவியம்

ப்ரவீன்