ஒரு விடைபெறுதலின் கடைசி தருணத்தில்
என் முதல் காதலை உனக்கு
தெரிவித்த போது...
காதல் தீதென்றாய் நீ!
பூவா தாவரத்தின்
பூக்கால கனவுகள் போல
அவை தொடங்கும் முன்னரே
முடிந்து போயிற்று!
சொல்லியழத் தெரியாத குழந்தைக்கு
ஆறுதல் சொல்ல
இயலாமை நிறம்பிய உன் மொழிகளில்
சரியான வார்த்தைகள் தேடுகிறாய் !
மிகச்சிரிய கையசைப்பில்
வெகு துரங்களைக் கடந்துவிட முடியுமென
அறியாதவனாய் நான் இருந்தேன்!
என் சிரிய நம்பிக்கைகள்
நீண்ட தார்சாலைகளில் அகப்பட்டு
குருதி உலர்ந்து போய்விட்டன!
ஒரு நனைந்த தீக்குச்சியால்
என் இருட்டை விலக்கி விட
தொடர்ந்து எத்தணிக்கிறேன்...
ஒரு குளிர்ச்சியற்ற பியரை
மிக வாஞ்சையுடன் குடிக்கிறேன்...
எச்சில் படாத ஒரு முத்தத்தை
கேட்டுவாங்கி பெற்றுக்கொள்கிறேன் ...
வாசனையற்ற ஒரு நந்தவனத்தில்
ஒரு காகித ரோஜாவை வாங்க
ஒரு பூக்காரியுடன் வெகுநேரமாக
பேரம் பேசிக்கொண்டிருக்கிறேன்...
அர்த்தமற்ற வேலைகளில்
நான் ஆழ்ந்து இருக்கிறேன்
யாருடைய விடைபெறுதல்களும்
என் காதுகளில் விழுவதில்லை!
ஆனால் விடைபெறுதல் குறித்து
ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும்
அவை காதலைத் தெரிவிக்க
நல்ல தருணங்கள் இல்லையென்று!
****