இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 டிசம்பர், 2010

ரயிலேறும் கனவு...


உறுதியளிக்கப்படாத ஒரு பயணத்திற்கு

பெயரில்லாத ஒரு ஊருக்கு

நிர்ணையமற்ற ஒரு பாதையில் போகின்றோம்

தீவண்டியும் நானும்.


படிகளில் அமர்ந்து பயணிக்கவும்

யவருக்கும் தெரியாமல் புகைக்கவும்

எதிரே அமர்ந்திருக்கும் பெண்ணை , அவள்

கூச்சமுற முறைத்துப் பார்க்கவும்

கக்கூசில் சென்று மது அருந்தவும்

அனுமதிக்கிறது இரயில்


பேருந்தைப் போலல்ல

தாராளம் உண்டு!

எண்ணிக்கையற்ற கதவுகளும்

எண்ணி மடுத்த ஜன்னல்களும் - பின்

அதில் ஆளுக்கு ஒரு துண்டு அம்புலியும்


பிரியப்பட்ட சங்கீதமாய் நள்ளிரவுகளில்

யாவரும் உறங்கிய ஊரில்

சப்தமிட்டு போகிறன‌ அவை

கேட்பாரற்று

ஒரு கலகக் காரனைப்போல்!


எதிர்படும் மற்றுமொரு ரயிலின் ஓசையில்,

அறுந்து பின் தொடரும் சில உரையாடல்கள்

ப‌ரிமாரப்படும் சில அவ‌ச‌ர‌ முத்த‌ங்க‌ள்

ந‌ல்ல‌தொரு புள்ளியில் க‌லையும்

சில‌ர‌து துர்ச்ச க‌ன‌வுக‌ளும்


போட்டிக‌ளின்றி புழ‌ங்கும் பாதையில்

அடுத்த‌வ‌ருக்கு வ‌ழிவிட்டு போகும்

சூட்ச‌ம‌ம் சொல்லுகிற‌து...

அடுத்த‌ வ‌ண்டிக்கு காத்திருக்கும் ர‌யில்


அவ்வ‌ப்போது வ‌ரும் ர‌யிலுக்காக

ப‌ல‌ இர‌வும் ப‌ல‌ பக‌லுமாய்

கால் விரித்துக் காத்திருக்கும்

த‌ரைமேல் த‌ண்ட‌வாள‌ங்க‌ள்


எத்தனையோ முறை ஏறி இறங்கியும்

ரயில்-சினேகம் போல - தானும்

இறங்கிப் போய்விடுவதில்லை

ரயிலின் மீதான சினேகம்


நீல‌மும் இள‌ம‌ஞ்ச‌ளுமாய்

பச்சையும் ப‌ழுப்பு நிற‌முமாய்

இரும்புத் துக‌ளின் ருசியுமாய்

ர‌யில் பெட்டியின் வாச‌னையுமாய்

என் க‌ன‌வுக‌ள் நிற‌ம்புகிற‌து


யாரிமும் சொல்ல‌ வேண்டாம்

என் ர‌க‌சிய‌ வாஞ்சை இது...


குளிர்ந்த இரவொன்றில்

ஒரு தண்டவாளத்தில் தலைவைத்து

காலதாமதமின்றி வருமொரு,

ரயிலுக்காக காத்திருந்து

வானம்பார்த்துக் கிடந்து

ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் எண்ணும் த‌ருவாயில்

ஏகாந்த‌மாய் ஏறிப் போக‌ வேண்டும்

விரைவு ர‌யில் ஒன்று!”



1 கருத்து:

  1. கவிதை நன்று. கடைசி பத்தி செண்டிமெண்ட்காக காதலர்களை கொல்லும் படமாக போல இருக்கு

    பதிலளிநீக்கு