இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 செப்டம்பர், 2013

சாதாரண கவிதை...ஒரு கவிதை எழுத
அதீதமான ஏதோ ஒன்று தேவைப்படுகிறது
ஒரு பிறழ்வோ
ஒரு அதிசயமோ
ஒரு முரணோ...
சாதாரணமான எதற்கும்
கவிதைக்குள் இடமில்லை

பிரம்மாண்டமோ
பெரும் இரைச்சலோ
பேரமைதியோ
சாதாரணமற்ற ஏதோ ஒன்று
கவிதைக்கான மூலப்பொருளாகத் தேவைப்படுகிறது

ஒரு காதலோ
ஒரு தற்கொலையோ
ஒரு துரோகமோ
ஒரு அவமானமோ
 சுயகழிவிரக்கமோ...எதுவேனும்...

எதுவுமே மறுக்கப்பட்டவனாக
'கையது கொண்டு மெய்யது பொத்தி'
கவிதையின் வாசலில் நுழைய முடியாதவனாய் நிற்கிறான்
சாகசமற்ற ஒரு மனிதன்

அவனைக் கவிதைக்குள் கொண்டு சேர்ப்பதன் என் வார்த்த்தைகளை நம்பி
சவரம் செய்த முகத்துடன், கையில் ஒரு பூங்கொத்துடன் காத்திருக்கிறான்
மீன் நோக்கி கால் மாற்றி நிற்கும் நாரையைப் போல்...

அவனை சமாதானப்படுத்த வழியின்றி உலரிப்போகின்றன
பேனாவின் உள்சுவர்களில் அறையப்பட்ட எனது மை !
எழுத்துக்களின் பரிட்சையத்தை மறக்கும் அபாயத்தில் பேனா
வேறு பயன்பாடுகளின் சாத்தியங்களுக்குப் பழகிக்கொண்டன...
தன்னை விஸ்கி கோப்பைகள் கலக்கவும்
காதுகுடையவும் பயன்படுத்துவது குறித்து
எந்த புகாரும் இல்லை அவைகளுக்கு!

சாதாரண மனிதன் மீதிந்த வன்முறையை தாளமுடியாது
அவனது மலர்க்கொத்தோடு சேர்ந்து சருகாகிறேன் நானும்
எந்த சிறப்புமற்ற ஒரு மனிதனை
கவிதைக்குள் செலுத்துவது குறித்து இந்த முயற்யில்,

ஒன்றாவது,
தனது காய்ந்த மலர்களின் சருகுகளுக்கு பதிலாக
ஒரு வாளால் என்னைக் கொன்று,
கவிதையின் வாயில்களை அவன் உடைக்கலாம்

அல்லது,
அவனது காத்திருப்பின் துக்கம் சகிக்காமல்
எனது உலர்ந்த பேனாவின் கூர்முனையால் அவனைக்கொய்து
ஒரு குருதியின் கவிதையை நான் எழுத்த் தொடங்கலாம்! 

                              ***

painting: Ruth Edward

சனி, 30 மார்ச், 2013

அமோர்ஸ் பெர்ரோஸ் – திரை வெளிப்பாட்டின் கலக்குரல்

நாய்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனமே
அது மனிதர்களை எளிதில் நம்பிவிடுவதுதான் !
                                  - எஸ். ராமகிருஷ்ணன்.   (மிருகத்தனம் சிறுகதையிலிருந்து)

எனக்கு தெரிந்து நாய்கள் பல நூற்றாண்டுகாலமாக வீடுகளில் வசித்தே பழகிவிட்டன. தெருக்களுக்கும், வாகன ஹாரன்களுக்கும், ட்ரேஃபிக் சிக்னல்களுக்கும், மனிதர்களின் சிமிஞ்ஞைகள், பழக்கவழக்கங்கள் - இதற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டுவிட்டன நாய்கள். பயன்பாடு குறித்தோ பாதுகாப்பு குறித்தோ மட்டுமன்றி நாய்களை துணையாகவும், நம்பகத்தன்மையின் பொருட்டாகவும் வீடுகளில் அனுமதித்திருக்கிறார்கள். காடுகளில் வசிக்கும் நாய்களை நான் அறிந்திருக்கவில்லை. மிருகக்காட்சி சாலைகளிலோ, டிஸ்கவரி சேனல்களிலோ பார்த்த வன நாய்கள் ஏற்கனவே நாய்கள் மீது கொண்டிருந்த பிம்பத்தை ஒத்து போகவில்லை. பெரும்பாலும் மிகப்பெரிய வீடுகளில் வசிக்கும் பெண்கள் நாய்களின் துணையுடன் தான் தனிமையை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை அவர்கள் அந்த நாயைப் போல மிகவும் பாதுகாக்கப்பட்ட நான்கு சுவர்களுக்குள் தன்னியல்பற்று ஒரு ஆடம்பர பொருளாக  ஒடுக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை மட்டும் உணர்த்துகின்றார்களா?

வீட்டில் குறிப்பிட்ட ஆட்கள் வைத்தால் மட்டுமே உணவை தின்னும் நாய்கள், மனிதர்களற்ற வீட்டில் குரைக்க கூட மறந்து கிடக்கும் நாய்கள், எவ்வளவு காலங்களுக்குப் பின்னும் நினைவிழக்காது அன்பை தரும் நாய்கள் என்று நாய்களின் சுபாவம் மனிதர்களின் சுபாவத்தை ஒத்தே இருக்கிறது. இல்லை...நாய்களின் சுபாவம் தான் மனிதர்களில் அப்பிக் கொண்டதா என்று தெரியவில்லை! மணி, ஜிம்மி, குமரன் என்று பெயர்களிட்டு திரிகையில் அவை தன் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டுவிட்டதா என்று(ம்) தோன்றுகிறது. பார்க்கப் போனால் நாய்கள் உண்மையில் நாய்களாக இருப்பது தெருவில் மட்டும் தானா?

இறந்துபோன வீட்டு நாயின் புகைப்படத்தில் சந்தனம் பூ எல்லாம் வைத்து அனுஷ்டிக்கிற மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். சகமனிதர்களைக்காட்டில், நாய்களின் மீது அதிக நம்பிக்கை வைக்கவும் அன்பு காட்டவும் மனிதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விட்டார்கள். (நாய்களின்) உரிமையாளர்களுக்கு நாய்கள் தேவைபடுவது மட்டுமல்ல, மாறாக அவையின் மீது சர்ந்து இருக்கவும் செய்கிறார்கள்.

இந்த மனிதனுக்கும் நாய்களுக்கும் மத்தியில் உள்ள உணர்ச்சி நிலையையும், பரஸ்பரம் அவைகள் பிரதிபலித்துக் கொள்ளும் பகடியையும் (நாய்கள் சில சமயம் மனிதர்களைப்போல நடப்பதும், மனிதர்கள் சில வேலைகளில் நாயைவிடக் கீழாக நடப்பதும்), நாய்களின் ஊடாக மனிதர்களின் வாழ்வையும், மனிதர்களினூடாக நாய்-வாழ்வின் அலைக்கழிப்பையும் - சர்ரியிலிச பாணியில் அனுகிய திரைப்படம்  மெக்சிகன் இயக்குனர் அலிஹேந்திரோ கோன்சாலஸ் (Alejandro González Iñárritu) இயக்கிய முதல் திரைப்படமான 'அமோர்ஸ் பெர்ரோஸ்' (Amores Perros).

இதுவரை உலக சினிமாக்களிலும், ஹாலிவுட் சினிமாக்களிலும் சித்தரிக்கப்பட்ட மெக்சிக்கோவின் சம்பிரதாயமான பதிவுகளையும், அடையாளங்களையும் களைந்து எரிந்து, பார்வையாளர்களின் மெக்சிகோ குறித்த புகைப்படத்தைப் புதிப்பித்திருந்தது கோன்சாலஸின் அமோர்ஸ் பெர்ரோஸ் - புதுமையும், இசையும், அத்துமீறிய வெளிப்பாடுகளும், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் உண்மைகளையும், புரட்சியின் தோல்விகளைப் பற்றியும், சமுதாயம், மற்றும் குடும்பங்களில் முன்னுதாரணக் குறைபாடுகளால் ஏற்படும் விளைவுகளையும் ஒருங்கே ஒரு சேர பற்பரிமானத்தில் அனுகி இருக்கிறது இந்த நவீன சினிமா.
(மறுபார்வை/விமர்சனம் என்ற பெயரில் வெறும் படத்தின் கதையையோ, அப்படியில்லாவிட்டால் வெறும் காட்சிகளை முழுவதும் சொல்லிச் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனினும் இங்கு கதைச்சுருக்கத்தைச் சொல்வது அவசியமாகிறது. இது எவ்விதத்திலும் திரையில் பார்ப்பதற்க்குமாற்று ஆக முடியது. மாறாக அதைத் தேடிப் பார்க்க வைக்கும் உந்துதலாக இருக்கும் என்பதே என் எண்ணம்)

                                                            ******
வெற்றுத் திரையில்…

"காதலாவது?" என்ற எழுத்துக்கள் தோன்றி மறைகின்றது - அதற்கு பதிலைப்போல் தோன்றுகிறது படத்தின் பெயர் "அமோர்ஸ் பெர்ரோஸ்". (Love is Bitch).
அதிவேகத்தில் செல்கிறது ஒரு கார். அது இலக்குகளற்று எல்லா திசைகளிலும் சீறிப்பாய்கிறது. ஆபத்தான வேகத்தில் அதை ஓட்டிச் செல்கிறான் ஒரு இளைஞன். காரின் பின் சீட்டில் அடிபட்ட ஒரு நாய். அதைக் கைத்தாங்கலாகப் பிடித்த வண்ணம் அவனது நண்பன். நாய் உயிரோடு உள்ளதா இல்லையா என்ற அறியாதபடிக்கு அதன் உடலில் இருந்து ரத்தம் வழிந்து ஓடுகிறது - நாயின் வயிற்றில் ஏற்ப்பட்ட துளையை கையைக் கொண்டு அடைக்கிறான் அவன். பின்னால் மற்றுமொரு காரில் இவர்களை துரத்தி வருகிறது ஒரு கூட்டம் - சரமாரியாக துப்பாக்கி குண்டுகளை துப்பியபடி.

அதே சமயம் மற்றுமொரு காரில் துள்ளலான இசையை ஒலி பரப்பியபடி வருகிறாள் ஒரு இளம் பெண். அவளது காரில் ஒரு அழகிய நாய்க்குட்டி தலையை வெளியே விட்டபடி உல்லாசமாக வருகிறது. அதன் தோற்றத்திலேயே அதன் முதலாளியின் பகட்டு புலப்படுவதாய் உள்ளது. துள்ளல் இசையும் பரவசமும் சேர்ந்து அவளை காரை வேகமாக செலுத்தச் செய்கிறது.

அதேநேரம் தெருவின் ஒரு மூலையில் குப்பைத் தொட்டி அருகே, ஒரு கூட்டமாக தெரு நாய்க்கள் காணப்படுகின்றன. அந்த நாய்களின் மத்தியில் நாய்களுக்கு நிகராக அழுக்கேறி, மிகுந்த தாடியுடனும் அச்சுறுத்தும் தோற்றத்துடனும் ஒரு வயதான மனிதன் இந்த தெரு நாய்களைக் கூட்டிக் கொண்டு நடந்து செல்கிறான். அவன் தெரு நடவடிக்கைகள் அனைத்தையும் துல்லியமாக கவனித்த வண்ணமே வருகிறான்.
தெரு நாய்களைப் பார்த்து கூச்சலிடுகிறது - காரில் செல்லும் பணக்கார நாய் - அதில் காரை ஓட்டும் பெண்மணி கவனம் இழக்கிறாள். துரத்திவரும் கும்பலிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் கட்டற்ற வேகத்தில் தரிக்கெட்டு ஓட்டிவரும் அந்த இளைஞனின் காரும் வந்து சேருகிறது.

பலத்த ஓசையுடன், கண நேரத்தில் இரண்டு கார்களும் மோதித் தெரிக்கின்றன. இதைக் கண்டு சலனமற்று நிற்கிறான் அந்த தெரு நாய்களின் காவலனான அந்த வயதான ஆள்!
இவ்வாறு படத்தின் மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களும் முதல் காட்சியிலேயே சந்தித்து விடுகிறார்கள். இங்கிருந்து மூவருடைய கதையும் சொல்லப் படுகிறது.
                                    ******
பகுதி 1: ஒக்தாவியோவும் சுசன்னாவும் (Octavio and Susanna):

அது ஒரு சூதாட்டக் கூட்டம். நாய்களை வைத்து சண்டை செய்து சூதாடுவது அங்கு பிரசத்தி. தொடர்ந்து ஜெயித்து வரும் ஜரோகோ ஜரோகோ-வின் நாய் மீண்டும் சூதாட்ட உரிமையாளன் பான்ச்சோ-வின் நாயை வெல்கிறது. அந்த நாய் சில நிமிடத்திலேயே துடிதுடித்து இறந்து போகிறது. பான்ச்சோ அதிருப்தியுடன் பந்தையப் பணத்தை கொடுக்கிறான். வென்ற நாய் வெறியடங்காது திமிறுகிறது. அதை ஏதேனும் தெரு நாய் மீது ஏவினால் வெறியடங்க அதை கொன்று தீர்த்துவிடும். தெருவில் ஒரு கூட்டம் நாயைப் பார்த்து ஜரோகோ தனது நாயை ஏவுகிறான். எதிர்பாராத விதமாக அங்கு ஒரு அழுக்கான முதியவன் பெரியதொரு கத்தியுடன் அந்த நாய்களைப் பாதுகாக்க நிற்கிறான். ஜரோகோ பின்வாங்க, அங்கு ஒரு சாதுவான வீட்டு நாய் சுற்றியலைகிறது. அதன் மேல் தன் நாயை ஏவுகிறான். அது ரமிரோ-வின் நாய் என்று எச்சரிக்கிறான் ஒருவன். இருந்தும் அதைப் பொருட்படுத்தாது அந்த நாயின் மீது ஏவுகிறான். அதிர்ச்சியளிக்கும் விதமாக ரமிரோ-வின்  வீட்டு நாய் ஜரோகோ-வின் நாயை சண்டையிட்டு கொல்கிறது!

ரமிரோவுடையது ஒரு எளிமையான குடும்பம். ரமிரோ ஒரு பல்பொருள் அங்காடியில் பகலில் வேலைப்பார்க்கிறான். இரவுகளில் சிறிய அளவிலான கொள்ளைகளில் ஈடுபடுபவன். மளிகைக் கடைகள், வயதானவர்கள் என்று கொள்ளையடித்து வரும் சொற்ப பணத்தால் விரக்தி அடைந்த ரமிரோவுக்கும் அவனது கூட்டாளிக்கும் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே தற்காலிக லட்சியமாக உள்ளது.

ஒக்தாவியோவிற்கு 19 வயது இருக்கும். ரமிரோவின் மனைவி சுசன்னா படித்து கொண்டே வேலைக்கும் செல்கிறாள். சிறுவயதிலியே திருமணம் உடனே குழந்தை, குறைந்த வருமானம், முரடனான கணவன் ரமிரோ என்று வேளியே சொல்ல முடியாத துயரங்களுடன் அந்த வீட்டில் கழிக்கிறாள். ஒக்தாவியோவின் அம்மா சிறு வயதிலியே கணவனை இழந்து மிகவும் சிரமப்பட்டு தனது இரண்டு மகன்களையும் வளர்த்திருக்கிறாள். ரமிரோ போதுமான காசு கொடுப்பதில்லை என்றும், சுசன்னா தனது குழந்தையை எப்போதும் தன்னிடம் விட்டுச் செல்வதாகவும், ஒக்தாவியோ சுசன்னாவை அவனது அறையில் அவ்வப்போது அனுமதிப்பது குறித்தும் அவளுக்கு புகார்கள் உண்டு. சுசன்னாவின் அம்மா, கணவன் மகன் இல்லாத வீட்டில் எப்போதும் மது அருந்தியபடி இருக்கிறாள். அவளிடம் குழந்தையை விட்டு செல்ல மனமின்றி ரமிரோவின் அம்மாவிடமே சங்கடத்திற்கு மத்தியிலும் குழந்தையை விட்டு செல்கிறாள். ரமிரோவின் நாய் கோஃபி, ஆனால் அதைப் பெரும்பாண்மையாக பராமரிப்பதும், அன்பு காட்டுவதும் ஒக்தாவியோ. அது அவனுடனே வளர்கிறது. ஒக்தாவியோவும், ரமிரோவும் போதை மருந்து பரிமாறிக் கொள்வதைத் தவிர ஆரோக்கியமான சம்மந்தம் எதுவும் இல்லை.

தனது நாயை கோஃபி கொன்றுவிட்டதாக ஜரோகோ ஒக்தாவியோவிடம் வீட்டில் வந்து கத்துகிறான். அதற்கான பணத்தை தராவிட்டால் கோஃபியை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான். விபரத்தை கேள்விப்பட்ட ஒக்தாவியோ அவன் ஏன் கோஃபியின் மேல் தனது நாயை ஏவிவிட்டான் என்று திரும்பக் கேட்கிறான். ஜரோகோ கோபத்துடன் எச்சரித்துவிட்டு செல்கிறான். ஜரோகோவின் நாயை கொன்று விட்டதால் கோஃபிக்கு அதிர்ஷ்டம் கொட்டுகிறது. சூதாட்டக்காரன் கோஃப்யின் மீது பணம் கட்டுகிறான். தொடர்ந்து ஜரோகோவின் நாய்கள் கோஃபியுடன் சண்டையிட்டு சாகின்றன. ரமிரோவிற்கு தெரியாமல் ஒக்தாவியோ கத்தை கத்தையாக பணம் பண்ணுகிறான்.

இதற்க்கிடையில் சுசன்னா ஒரு நாள் இரவு ஒக்தாவியோவின் கதவைத்தட்டி, அழுது வீங்கிய முகத்துடன், காது அறுந்து ரத்தத்துடன் நிற்கிறாள். ரமிரோ அடித்திருக்க வேண்டும். அவள் மீண்டும் கர்பமாக இருப்பதாக சொல்கிறாள். ரமிரோ கண்டிப்பாக இதை வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டான் என்று சொல்கிறாள். ஒக்தாவியோ அந்த சிசுவை அழிக்க வேண்டாம், தான் பார்த்துக்கொள்வதாகவும், அவளை தன்னோடு வந்து விடுமாறும், அவர்கள் அங்கிருந்து வெகு தூரத்தில் ஒரு நல்ல வாழ்வை அமைத்துக் கொள்ளலாம் என்றும் வற்புறுத்துகிறான். தன்னையும் தனது குழந்தைகளையும் அவன் நன்றாக கவனித்துக் கொள்வதாக ஒரு கனவை அவளுக்கு விற்பனை செய்கிறான். சிறிது தயக்த்திற்குப் பிறகு சுசன்னா குழப்பமான சூழலில் ஒக்தாவியோவின் விருப்பத்திற்கு இணங்குகிறாள். அவர்கள் கள்ளத் தனமாக உறவு கொண்டு மோகித்து களித்து மகிழ்கிறார்கள். இவர்களுக்கு கோஃபி என்ற இவர்களது நாய் மௌன சாட்சியாக இருக்கிறது.

ஒக்தாவியோ கோஃபியை வைத்து ஆடும் சூதாட்டத்தில் வரும் அனைத்து பணத்தையும் சுசன்னாவும் அவனும் மட்டுமே அறிந்த ஒரு ரகசிய இடத்தில் ஒரு பெட்டியில் சேமிக்கிறார்கள். சுசன்னா கோஃபியை தடவியபடி. இவன் பாவம் இவனை வைத்து பந்தையம் ஆடாதே என்று சொல்கிறாள். இந்த கடைசி ஒரு பந்தயம் தான் என்றும், தம்மிடம் போதுமான பணம் சேர்ந்துவிட்டதாகவும், பந்தைய முடிவில் நாம் இங்கிருந்து வெகு தூரத்தில் பயனித்துக் கொண்டிருப்போம் என்று சொல்கிறான். சூதாட்ட கூடத்தில் கடைசியாக ஒரு பெரிய தொகைக்கு ஜரோகோவின் நாயுடன் சண்டைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அதே சமையம் தனது அண்ணன், சுசன்னாவுடன் ஓடிப்போவதற்கு தடையாக இருக்கக் கூடாதென்று அடியாட்களை வைத்து குற்றுயிராக அடித்துப் போடுகிறான். கடைசி ஆட்டத்திற்கு முன்பு வீட்டிற்கு சுசன்னாவைத் தேடிவரும் ஒக்தாவியோவிற்கு அதிர்ச்சி காத்த்திருக்கிறது. சுசன்னா அங்கு இல்லை, அவர்களாது பணமும்! கோபமடையும் ஒக்தாவியோ வெறிகொள்கிறான். அவனது தாய் ரமிரோவை யாரோ அடித்து பயங்கரமாக காயப்படுத்தியிருப்பதாகவும், அவன் வந்து சுசன்னாவை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டதாகவும் சொல்கிறாள்.

திட்டமிட்டப்படி கடைசி நாய் சண்டை நடக்கிறது. வீட்டு நாயாக சாதுவாக இருந்த கோஃபி இப்போது வன்மமும் ரத்த வேட்கையும் கொண்ட ஒரு வேட்டை நாயைப்போல போட்டி நாயை கடித்துக் குதறுகிறது. பார்த்துக் கொண்டிருந்த ஜரோகோ அதை சகிக்காமல் தனது துப்பாக்கியை எடுத்து கோஃபியைச் சுட்டு விடுகிறான். இரண்டு நாய்களும் ரத்த வெள்ளத்தில் வீழ்கின்றன. ஒக்தாவியோவின் நண்பன் கோஃபியை காருக்கு எடுத்துச் செல்ல, ஒக்தாவியோ ஜரோகோவை ஒரு கத்தியால் குத்தி வீழ்த்திவிட்டு காரை வெறிகொண்டு ஆபத்தான வேகத்தில் ஓட்டிச் செல்கிறான். கோஃபி ரத்தம் வடிய பின் சீட்டில் தனக்கு நேர்ந்தது இன்னவென்று அறியாது வீழ்ந்து கிடக்கிறது. ஒக்தாவியோவின் காரைத் தொடர்ந்து ஜரோகோவின் ஆட்கள் துப்பாக்கியுடன் துரத்துகிறார்கள். ஒரு சாலையின் சந்திப்பில் குறுக்கே வந்த ஒரு காரின் மேல் கட்டற்ற வேகத்தில் பெரும் சப்தத்துடன் மோதுகிறான் ஒக்தாவியோ!

பகுதி 2: டேனியலும் வலேரியாவும் (Daniel and Valeria):


நாற்பதின் தொடக்கத்திலிருக்கும் டேனியல் ஒரு பிரபல பேஃஷன் பத்திரிகையின் ஆசிரியர். அந்த சமயத்தில் மிகப் பிரபலமான மாடல் அழகி வலேரியாவுடன் அவனுக்குள்ள தொடர்பு ஏகதேசம் எல்லோரும் அறிந்திருந்ததே. அவன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வலேரியாவுடன் வாழப் போவதாக வதந்திகள் பரவியிருந்த சூழலில் அவனது சொந்த வீட்டில் இருக்கமான நிலை உருவாகிறது. அவனது இரண்டு பெண் குழந்தைகள் மேல் உண்மையுள்ளத்துடன் அவன் வைத்திருந்த நேசம் வலேரியாவின் அழகுடன் சாமர்த்தியமாக போட்டியிட முடியவில்லை. வீட்டில் அடிக்கடி வரும் அடையாளமறியா தொலைப்பேசி அழைப்புகள், டேனியலை தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகின்றன. அவனது மனைவி "அந்த நாயாக தான் இருப்பாள்" என நினைக்கிறாள். குழந்தைகள் உறங்கிவிட்ட இரவில் அழைக்கும் வலேரியா, அவனது மனைவியுடன் எப்போது விவாகரத்து பற்றி பேசப்போகிறாய் என்று வற்புறுத்துகிறாள். விரைவில் பேசுவதாக சம்மதிக்கிறான் டேனியல். ஒரு பெரிய ஜீவனாம்ஸ தொகையை பைசல் செய்து விவாகரத்து வாங்கி, ஒரு புதிய குடியிருப்பில் வலேரியாவுடன் குடி போகிறான் டேனியல். அந்த வீட்டை அவளுக்கான பரிசா கொடுக்கிறான். அந்த வீட்டிலிருந்தபடி பெரிய ஒரு ஆளுயர ஜன்னல் வழியாக பார்த்தால் சாலையில் உள்ள மிக பிரம்மாண்டமானதும் வசீகரமானதுமான வலேரியாவைக் கொண்ட அழகுசாதன விளம்பரப்பலகை ராட்சத வடிவில் காணக்கிடைக்கும். வலேரியா தனது வனப்பும் கவர்ச்சியானதுமான நீண்ட கால்களைத் தடவிய வண்ணம் அந்த விளம்பர பேனரில் காட்சியளிக்கிறாள். வலேரியா மிகவும் மனம் நெகிழ்ந்து போகிறாள். புதிய வீடு என்பதால் நிலத்தளம், மரவேலைகள் பூர்த்தியாகமல் அப்படியே இருக்கிறது. வலேரியாவுடைய செல்ல நாயான ரிட்ச்சி, வலேரியாவுக்கே ஆன அழகும் பகட்டுடனும் இருக்கிறது. அவள் அதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட எடுத்துக் கொண்டுபோக தவறுவதில்லை. அவள் ஒரு நிகழ்ச்சியில் அதை தனது குழந்தை என்றே உருவகிக்கிறாள். தொழில் சார்ந்த வெற்றியும், தனிப்பட்ட வாழ்வை தனக்கேற்றவாறு வளைத்தெடுக்கும் அறிவும், தனக்கு வேண்டியவற்றை கொணர்ந்து கொண்டு தரும் தனது அழகும் வலேரியாவின் ஒவ்வொரு அசைவிலும் மிளிருகிறது. அகமகிழ்ச்சியாலும், வெற்றிக் களிப்பாலும், கர்வத்தாலும், செறுக்காலும் ஒளிவீசுகிறாள் வலேரியா. தனது வெற்றியின் அடையாளமானதாக அந்த நாய் மிகவும் அலங்காரமானதாக எப்போதும் காட்சியளிக்கிறது. தனது நாயை காரில் ஏற்றிய வண்ணம் துள்ளலுடன் கூடிய மகிழ்வின் பாடலை இசைத்தபடி பெரும் வேகத்தில் காரில் செல்கிறாள் வலேரியா. ஒரு சிக்னலைக் கடக்கையில் தெருவில் கூட்டமாக செல்லும் ஒரு தெருநாய் கும்பலைக் கண்டு ஆத்திரமடைந்ததாக கத்துகிறது அவளது பகட்டான நாய். கவனம் சிதறிய வலேரியா, தன்நிலையற்று வந்த அந்த மற்றொரு காரின் மீது பெரும் சத்ததுடன் மோதுகிறாள்.

பகுதி 3: எல்கிவோ (El Chivo and Maru):

எல்கிவோ ஒரு vagabond. உண்மையில் தனது இளம் வயதில் ஒரு பேராசிரியராக இருந்து, மனைவி, சிறு பெண் குழந்தையென வாழ்ந்தவன் பிற்காலத்தில் புரட்சி என்ற பேரில் போராளியாக மாறி, ஜனநாயக அரசால் பின்நாளில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். இருபது வருட இருட்டடிந்த வாழ்க்கைக்குப் பிறகு மிகவும் புதிதானதும், தன்னால் சகித்துக் கொள்ள முடியாததுமான ஒரு நவீன உலகில் பிரவேசிக்கிறான் எல்கிவோ. நகரத்தின் கீழான அடையாளமற்ற பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் அலைந்து தெரு நாய்களின் கூட்டத்தோடு எப்போதும் காட்சியளிப்பான். சுமார் ஒரு டஜன் தெரு நாய்கள் அவனது வீட்டில் சர்வ வசதியுடன், போஷாக்கான உணவுடன் வாழ்ந்து வந்தன. இல்லாவிட்டால், எல்கிவோ அந்த நாய்களுடன் வாழ்ந்து வந்தான் என்பதே சரியானது!. தோற்றத்தில் பழைய கிழிந்த கோட்டுடனும், கோரமேரிய நரைத்த நீண்ட தாடியுடனும், அழுக்கேரிய மஞ்சள் படிந்த கூர்மையான கண்களுடனும் ஒரு மனநலம் தவறிய ஆளைப் போல காட்சியளிக்கும் ஒரு தோல்வியுற்ற முன்னாள் புரட்சியாளனான எல்கிவோவை இன்றைய பரபரப்பான நகரம் கண்டுகொள்வதாகவோ, அடையாளம் கொள்வதாகவோ இல்லை. அவன் நாய்களுடன் நாயாக எவர் கவனத்தையும் ஈர்க்காது தெருவில் சுற்றியலைகிறான். இருந்தபோதும் சிறையில் தனக்கு பரிட்சையமான சில போலீஸ் அதிகாரிகள் சந்தேகமின்றி யாரையாவது கொல்வதற்கு எல்கிவோவின் உதவியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தனக்கு எந்தவித தொடர்புமற்ற இந்த நகரத்தில் கைகாட்டியவனை ஒரு பலூனை சுடுவதைப்போல சுட்டு வீழ்த்துகிறான் எல்கிவோ. அவனது ஜெயில் வாசத்தின் போது தனது சிறு மகளுடன் அவன் மனைவி வேறு ஒருவனை மணந்து கொண்டதை அறிகிறான். அவளது மனைவியின் மரணத்தை நாளிதழில் காணும் அவன், அந்த இறுதிச்சடங்கை மறைந்திருந்து காண்கிறான். அழுதபடியிருக்கும் ஒரு இளம் பெண்மணி அவனது மகளாக இருக்கும் என்று ஊகிக்கிறான். சற்று கண்ணீர் சிந்துகிறான். வீட்டில் அவன் வைத்திருந்த ஒரு பழைய குடும்ப புகைப்படத்தை தேடி எடுத்து அதை தடவி பார்க்கிறான்.
ஒரு நாள் எப்போதும் போல அவன் தெருவில் கூட்டமான நாய்களுடன் உலவி வந்தபோது, ஒரு விலை உயர்ந்த காரில் வந்த ஒரு பகட்டான நாய் இந்த தெருநாய் கூட்டத்தைப் பார்த்து ஆத்திரமடைய, தெரு நாய்களும் கூச்சலிடுகின்றன. கவனமிழந்த அந்த கார் (வலேரியா) கட்டுபாடின்றி வந்த வேறோரு காரின்(ஓக்தாவியோ) மீது பலத்த சத்தத்துடன் மோதுகிறது!

அதன் பிறகு:
விபத்தான காரை யாரும் நெருங்க பயப்படுகிறார்கள். எல்கிவோ அந்த கார்களை நோட்டமிடுகிறான். ரத்த வெள்ளத்தில் ஒரு பெண்மணி ஒரு காரில் கிடக்கிறாள். அவளது கால் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அவளது கைகள் காரின் ஜன்னலை மாறிமாறி அறைந்த வண்ணமிருந்தது. மற்றுமொரு காரில் அடிபட்ட இரு இளைஞர்கள் மற்றும் குண்டடி பட்ட ஒரு நாய் (கோஃபி). எல்கிவோ சிதறியிருந்த பண வேலட்களை சேகரித்துக் கொண்டு அடிபட்ட நாயையும் எடுத்து செல்கிறான். அடிபட்ட கோஃபி எல்கிவோவிடம் மருத்துவம் பார்க்கப்பட்டு குணமடைகிறது. அந்த நாய்க்கூட்டத்தில் கோஃபி மீது தனிப்பிரியம் கொள்கிறான் எல்கிவோ. அதே சமயம் ஒக்தாவியோ பலமான அடிகளுடன் உயிர் தப்புகிறான். சுசன்னாவும் ரமிரோவும் ஒக்தாவியோ சூதாடிய பணத்தையும் கொண்டு வேறு ஒரு பெரிய நகரத்திற்கு செல்கிறார்கள். மீண்டும் அங்கு முழுநேர திருட்டில் ஈடுபடுகிறான் ரமிரோ. அப்படியான ஒரு அஜாக்கிரதையான வங்கிக் கொள்ளை முயற்சியில் சுடப்பட்டு இறந்து போகிறான் ரமிரோ. சின்ன டவுனில் இருந்து பெரும் நகரத்திற்கு வரும் அவனது தயாரின்மையின் பரிசாக அவனது மரணம் அவனுக்கு அளிக்கப்படுகிறது, மீண்டும் சுசன்னா ஆதரவற்றவளாகிறாள்.

மற்றொரு புறம் வலேரியாவுடைய சிறப்பம்சமாக அறியப்பட்ட அவளது கால்கள் பெரும் சேதத்திற்குள்ளாகி சக்கர நாற்காலியில் நடமாடும் நிலை உருவாகிறது. அவள் மீண்டும் எழுந்து நடமாடுவது சாத்தியமற்றது என நம்புகிறார்கள். அவளது தந்தைக்கு தகவல் அளிக்க வேண்டாம் என மறுக்கிறாள் வலேரியா. அவர் எந்த அக்கரையும் காட்டாது "அவளுக்கெல்லாம் அப்படித்தான் வேண்டும்" என்று சொல்லக்க்கூடும் என்று அஞ்சுகிறாள். மிகவும் உடைந்து போன நிலையில் அவள் மீண்டும் தனது புதிய குடியிருப்பிற்கு கொண்டு வரப்படுகிறாள். உடைந்த நிலத்தளம் அடங்கிய பெரியதொரு குடியிருப்பில் ரிட்ச்சியும் அவளும் தனித்து விடப்பட்ட வீட்டில் நீண்ட பகலைக் கழிக்கிறார்கள். இடையில் ஒருமுறை தனித்து எழ முயற்சித்து, டேனியல் வீடு திரும்பும் வரை உதவியற்று தரையில் விழுந்து கிடக்கிறாள். அது அவளது தன்னம்பிக்கையை வெகுவாக பாதிக்கிறது. வலேரியாமுதல் முறையாக தன் நிலையை எண்ணி அழுகிறாள்.

மறுநாள் புதிதாக ஒரு பிரச்சனை முளைக்கிறது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிட்ச்சி திடீரென மரத்தாலான தள இடிபாடுகளில் சென்று மறைந்து விடுகிறது. பதட்டமுற்ற வலேரியா அதன் பெயரைச் சொல்லித் தேடுகிறாள், கத்துகிறாள். ஆனால் நாயின் சுவடே இல்லை. சக்கர நாற்காலியில் இருந்து இறங்கி தழ்ந்துவந்து அந்த பொந்தினுள் தேடுகிறாள். ராட்சத பெருச்சாளிகள் கூட்டம் கூட்டமாக அதனுள் ஓடுவதைக் கண்டு திடுக்கிடுகிறாள். ஏற்கனவே பொருளாதார சிக்கல் மற்றும் வேலைப் பலுவின் இம்சைகளுடன் வரும் டேனியலிடம் அவள் நடந்ததைக் கூறுகிறாள். அவன் ஆசாரியை வரவழைத்துப் பார்க்கலாம் என்று கூறுகிறான். அதற்குள் அந்த பெருச்சாளிகள் ரிட்ச்சியை கடித்துத் தின்று விடும் என பயப்படுகிறாள் வலேரியா. நள்ளிரவில் எழுந்து ரிட்ச்சியின் ஒலி கேட்பதாக இம்சிக்கிறாள். கைவிளக்குடன் டேனியல் அர்தராத்திரியில் அவளது இழந்த நாயை வீடு முழுக்கத் தேடுகிறான். ஒரு கட்டத்தில் இதுவே அவளுக்கு ஒரு obsession-ஆக மாறிவிட டேனியலை தொந்திரவு செய்கிறாள். ஆத்திரமடையும் டேனியல் வலேரியாவைக் கடிந்து கொள்கிறான். உறவு கசப்படைகிறது.

வலேரியாவுடைய நிர்ணையிக்கப் பட்டிருந்த விளம்பர ஒப்பந்தங்கள் ரத்தாகின்றன. தனது வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும் அவளது பிரம்மாண்டமான விளம்பர போஸ்டர் அகற்றபடுகிறது.ஆதரவுக்கு யாருமற்ற வலேரியா தனது அடையாளம், கர்வம், செறுக்கு எல்லாம் அழிக்கப்பட்டவளாக (காணாமல் போன அவளது நாய்), கடைசியில் ஒரு பெண்ணாக மட்டும் மிச்சம் இருக்கிறாள். தன்பின் இருந்த ஒரு அழகிய குடும்பத்தை வலேரியாவின் பொருட்டு உதரிவிட்டு வந்த டேனியல் வலேரியாவின் உடலைத் தவிர்த்து உண்மையான பாசத்துடன் ஒரு மகளைப் போல அவளை அணுகத் தொடங்குகிறான். டேனியலும் வலேரியாவும் முதல் முறையாக அவர்களுள்ளான உண்மையான காதலை கண்டறிகிறார்கள். அச்சமயம் காணாமல் போன அவளது நாய் வீட்டிற்குள்ளிருந்தே அதிர்ஷ்டவசமாக தானாகவே கண்டறியப் படுகிறது!    
                                                                           
மறுபுறம் எல்கிவோ குணமடையும் கோஃபியை கவனித்துக் கொள்கிறான். கோஃபியை மட்டும் வீட்டில் தனியே விட்டுவிட்டு மற்ற தெரு நாய்களுடன் வழக்கமான தனது வாழ்க்கைக்குத் திரும்புகிறான். காலம் கடந்து பார்த்த அவனுடைய மகளின் பிம்பம் சிறு ஒரு சலனத்தை அவனுள் ஏற்படுத்துகிறது. தன் குடும்பம் பற்றி அதிகமாக யோசிக்கிறான். முதல் முறையாக தனது மகளின் அறையிலிருந்து ஒரு புகைப்படத்தை திருடி வருகிறான். இறந்து போன அவளது வளர்ப்பு தந்தையின் இடத்தில் தனது கத்தரித்த புகைப்படைத்தைப் பொருத்திப் பார்க்கிறான். தான் மீண்டும் ஒரு சமூகத்திற்கு திரும்பும் மனிதனாக தன்னை ஒப்பனை செய்துகொள்ள பார்க்கிறான்.   
                          
குணமடைந்து வரும் கோஃபி அவனது விருப்பத்திற்குரிய நாயாகிறது. ஒரு நாள் தனது வழக்கமான ஊர் சுற்றலுக்குப் பிறகு வீடு வந்து சேரும் போது ஒரு பேரதிர்ச்சி அங்கு காத்திருந்தது. கோஃபி அங்கு நடந்திருப்பதாக காணப்படும் சண்டையில் அங்கிருந்த அனைத்து பிற நாய்களையும் கொன்று விட்டிருந்தது. அவனது வீடே ஒரு நாய்களின் பிணவறை போல காட்சியளித்தது. முதல் முறையாக ஒரு வன்முறை எல்கிவோவை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவனை நடுங்க செய்கின்றது - அவன் அகத்துள் பாதுகாத்து வைத்திருந்த மனிதன் வெளிப்பட்டு உடைந்து அழுகிறான். ஒன்றும் அறியாது போல கோஃபி சலனமற்று இருக்கிறது. இந்நிகழ்ச்சி எல்கிவோவைப் புரட்டிப் போடுகிறது. அடுத்து வரும் காட்சியில் கொல்வதாக ஒப்புக்கொண்ட ஒரு சகோதரனையும், கொல்ல சொன்னவனையும் ஒரே இடத்தில் கடத்திக்கொண்டு சென்று யாரையும் கொல்லாமல் விட்டு வருகிறான். தனது கோரை தாடியையும் மீசையையும் சவரம் செய்து கொள்கிறான் (எல்கோவின் மீட்சி) கண்ணாடி அணிந்து கொள்கிறான். புதிய வாழ்க்கை என்று பொருள்படுமாறு ஒரு பாதையில் பயணிக்கத் துடங்குகிறான் எல்கிவோ.   
    
            இறுதிக்காட்சியில் ரமிரோவின் இறுதி சடங்கில் காயங்களில் இருந்து குணமடைந்து கொண்டிருக்கும் ஒக்தாவியோ சுசன்னாவை சந்திக்கிறான். அவனை அசௌகரியமாக அனுகுகிறாள் சுசன்னா. அவளுக்கு புதிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதன் பெயரைக் கேட்டு தெரிந்து கொள்கிறான்.. அவள் "ரமிரோ" என்று அதன் பெயரை உச்சரிக்கிறாள். தந்தையின் ஆதரவற்ற மேலும் இரண்டு பிள்ளைகளுடன், ஒற்றைத் தாயுமான சுசன்னாவுடைய பயணம் தொடங்குகிறது, என்பது போல படம் நிரைவுறுகிறது. 

                                                                                     ******                                                                             பல்வேறு விதத்தில் இத்திரைப்படம் மிகத் தனித்துவம் வாய்ந்தது. ஒரு காலகட்டத்தின், ஒரு தலைமுறையின் கட்டுடைப்பு என்று சொல்லலாம். இந்தப் 'படிப்படியாக' சங்கதிகள் அற்று ஒரு டைம் மஷினைப்போல வேறு ஒரு தளத்திற்கு தாவியது மெக்சிகன் சினிமா. அந்த ஒரு take-off-point "அமோர்ஸ் பெர்ரொஸ்" என்று சொல்லலாம். கோன்சாலஸ் சொல்கிறார் "நான் பெரிய மீசையுடைய மெக்சிகன் கிடையாது, கையில் ஒரு பாட்டில் டக்கிலாவுடன் இல்லை, நான் ஒரு போதைக் கடத்தல் பேர்வழியோ, போக்கிரியோவும் இல்லை. என்னைப் போல இங்கு ஆயிரக்கணக்கான பேர் வசிக்கிறார்கள். இது தான் என் உலகம். நான் அதைத் தான் காட்ட விரும்பினேன்”. அதுவரை ஹாலிவுட்டிலும் மற்ற அரசு சார்ந்த தயாரிப்பு படங்களில் நிறுவப்பட்ட ஒரு stereotypical (ஒரே மாதியான) மெக்சிகன் பிம்பத்தை உடைத்திருக்கிறார் கோன்சாலஸ். அது இசையிலும், காட்சி அமைப்பிலும் அசலான ஒரு சமகால மெக்சிகன் பிரதியை எடுக்க முயன்றது. மேலும் மெக்சிகன் சமுதாயத்தின் குறுக்குவெட்டு பார்வையையும், பொருளாதார வர்கப் பிரச்சினைகளையும் புரட்சியின் வேற்று முகங்களையும் தோல்வியையும், சமுதாய மதிப்பீடுகளையும் ஆழமாக பதிவு செய்கிறது. இருப்பினும் அது அடிப்படையாக கையாளும் கருவானது காதல், ஆசை, அதிகாரம், தனிமை என்ற அடிப்படை உணர்வுகளைத் தான்.
ஒக்தாவியோ, சுசன்னாவுடையது ஒரு கீழ்நிலை உழைக்கும் வர்கம். கனிசமான அளவிளான பணசேகரிப்பு என்றால் அது திருடுவதன் மூலமோ அல்லது சூதாட்டத்தின் மூலமோ தான் சாத்தியப் படுகிறது. எல்கிவோ - ஒரு பேராசிரியாக இருந்து வேலையையும் குடும்பத்தையும் துறந்து ஒரு போராளியானவன். புரட்சியின் தோல்வியும், அது சாமான்ய மக்களின் மீது விட்டுச் செல்லும் துயரத்தையும் புரட்சி கற்பிக்கும் போலியான கனவுகளையும் எல்கிவோ மூலம் பதிவு செய்கிறார் கோன்சாலஸ். வெவ்வேறு சமூக பொருளாதார பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையிலும், மனிதனின் வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதன் விசித்திரத்தை, திரைக்கதையும் அதன் கட்டமைப்பும் காலத்தினை கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது.

மூன்று கதைகளை இதில் கையாண்டு இருக்கிறார் என்பதை விட, ஒரு கதையே மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கார் விபத்து மையப்புள்ளி என்று வைத்துக் கொண்டால், ஒக்தாவியோ - சுசன்னாவின் கதை இறந்தகாலத்திலும், டேனியல்-வலேரியாவின் கதை நிகழ்காலத்திலும், எல்கிவோவின் கதை வருங்காலத்திலும் எனக் கொள்ளலாம். மற்றும் ஒரு பார்வையில் இது வேறுபட்ட மூன்று மனிதர்களின் கதை என்றாலும், வெவ்வேறு வயதில் நடக்கும் ஒரே மனிதனினுடைய கதை என்றும் பார்க்க சாத்தியம் இருக்கிறது. இத்தகைய பார்வைக்கான இடமளிப்பதே கதாபாத்திர வடிவமைப்பின் சிறப்பம்சம்.  

ஒரே விபத்துக்காட்சி எனினும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலும் அதன் தனித்தன்மையுடனும், கோணத்திலும், வேகத்திலும் நிகழ்கிறது. விபத்திற்குப் பிந்தைய வாழ்க்கை மாற்றத்தைப் பிரதிபலிக்கும் விதமாக ஒரு குறுக்கு சாலையில் விபத்து நிகழ்த்தப் படுகிறது. விபத்தை ஒரு சலனமும் இல்லாமல் பார்கிற எல்கிவோவை அது எவ்வித பாதிப்பை ஏற்படுத்தாது போல் தோன்றினாலும் (காரில் அடிபட்ட இரண்டுபேரது பர்ஸைதான் முதலில் எல்கிவோ கவனித்து கைபற்றுகிறான்) அவன் அங்கு கோஃபியை கண்டெடுக்க நேர்கிறது. கோஃபியின் செயலால் தான் அவன் மீட்சியடைந்து தன்னிலைக்கு வர நேர்கிறது. டேனியல் - வலேரியாவுடைய வாழ்வில் அவர்களது காதலையும் வாழ்க்கையையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவும், அவர்கள் வாழ்க்கையை உள்நோக்கி அனுகவும் சந்தர்ப்பமாய் அமைகிறது. அரசியலும் சமூகப் பிரிவினைகளும் கதையில் பேசப்பட்டாலும், அவை கதாபாத்திரங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டில் தான் அனுகப் பட்டுள்ளது. காதல், வலி, பகை, மரணம் போன்ற பொதுவான விஷயங்களை அடிப்படையாக கொண்ட போதிலும், சமூக பொருளாதார சூழலின் பால் ஒருவர் தள்ளப்படும் நிர்பந்தம் மறைமுகமாக ஆனால் அழுத்தமாக சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு சுசன்னா பொருளாதார சுதந்திரம் உள்ள ஒரு பெண்ணாக இருப்பின் (வலேரியாவை போல), அவள் மிருகத்தனமான ஒரு கணவுடனோ, காமவேட்கையுடைய ஒரு கொழுந்தனுக்கு மத்தியில் வாழ்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் இராது. கனிசமான பணம் ஈட்ட கொள்ளையடிப்பது ஒன்றே வழியென்பது இல்லாவிடில் ரமிரோ சுட்டுக் கொல்லப்பட நேர்ந்திருக்காது. டேனியலிடம் அபரிதமான பணம் சேர்ந்திடாவிடில் அவனால் வலேரியாவிற்கு புதிய இருப்பிடம் ஒன்றை பரிசளிக்க முடிந்திருக்காது. ஒரு விவாகரத்தின் விலையில் ஒரு பகட்டு வாழ்வை நடத்தியிருக்க இயலாது. இப்படியாக மேலோட்டமான பார்வையைத் தாண்டி இப்படம் தீவிர அரசியல் பொருளாதார சமூக கேள்விகளை தான் முன்வைக்கிறது. படத்தில் மீண்டும் மீண்டும் சில கருப்பொருட்கள் தொடர்ச்சியாக பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது அவைகளில் குறிப்பிட்த்தக்கவைகள் - நேர்மையின்மை:  சுசன்னாவும் ஒக்தாவியோ; ரமிரோவும் கடையில் பணிசெய்யும் பெண்ணும் கள்ள உறவு கொள்வது போல காட்டப்படுகிறது; அதுவே வலேரியா - டேனியல் என்று தொடர்கின்றது. மற்றும் ஒரு கருத்தியல் - தொடர்ச்சியாக குடும்பங்களில் காணப்படும் குடும்பத்தலைவனின் வெற்றிடம், அல்லது தகப்பனற்ற சூழலில் குழந்தைகள் வளருதல், மற்றும் சகோதரர்கள் மத்தியில் சண்டைகள். ஒக்தாவியோ மற்றும் ரமிரோவின் தந்தை யாரென காட்டப்படுவதில்லை. அவரது இல்லாமையில் தான் இந்த சகோதரர்கள் வளர்க்கப்படுவதாக அறிகிறோம். டேனியலின் இரண்டு பெண் குழந்தைகள் விவாகரத்திற்குப் பிறகு தகப்பனற்றவர்களாக கைவிடப்படுகிறார்கள். அவர்கள் டேனியலோடு நெருங்கிய பாசம் கொண்டவர்களாக உள்ளனர். வலேரியா தந்தையைப் பிரிந்து இருப்பதையும் அவர்களுக்கு மத்தியில் இணக்கமான உறவு இல்லை என்பதையும் அறிகிறோம். அவள் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு "அவளுக்கு இது தேவைதான்" என்று அவள் தந்தை கூறுவார் என வ்லேரிய அஞ்சுகிறாள். புரட்சியை நோக்கி ஓடிப்போய்விட்ட எல்கிவோவின் பெண் குழந்தை தகப்பனற்ற சூழலில் வளர்ந்துள்ளதை காண்கிறோம். சுசன்னா தந்தையற்ற சூழலில் வளர்ந்ததாகவும், அவளது தாய் போதைக்கு அடிமையானவளாகவும் அறிகிறோம். இறுதியில் ரமிரோவின் மரணத்தின் வழியே சுசன்னாவும் தகப்பனற்ற இரண்டு ஆண் குழந்தைகளுடன் ஒரு வாழ்வைத் தொடங்குகிறாள். அந்த இரண்டு குழந்தைகள் ஒக்தாவியோ மற்றும் ரமிரோவையுமே குறிப்பதாகவும்; அல்லது ஒக்தாவியோ, ரமிரோ, அவர்களது தாயின் ஒரு பிரதி அடுத்த தலைமுறைக்கும் கடத்தப் படுவதாகவும் இதை அர்த்தப்படுத்திக்கொள்ள முடிகிறது. அப்பா என்ற பிம்பக் குறைப்பாட்டின்னை மிகச் செறிவா எல்லா கதாபாத்திரங்களினூடே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிம்பக் குறைபாடு ஒரு நல்ல தந்தையாக நடந்து கொள்வது எப்படி என்ற உதாரணக் குறைபாடாகவும், வழிநடத்துதலின்மையுமாக வெளிப்படுகிறது. ரமிரோ எப்படி ஒரு கணவனாக, ஒரு அப்பாவாக நடந்து கொள்ளத் தெரியாமல் இருக்கிறான்; வீட்டில் உள்ள இரண்டு ஆண்மகன்கள் முதன்மை அதிகாரத்திற்காக மூர்க்கமாக சண்டையிடுகிறார்கள்.  ரமிரோவின் இயலாமைக்கு எதிரான ஒக்தாவியோவின் சூதாட்டக் கலக்கத்திற்கு பரிசு சுசன்னாவின் அன்பும் உடலும். சுசன்னா என்ற பெண்ணின், தன் குழ்ந்தைகளைக் காப்பாற்ற எத்தனிக்கும் உடலானது பொருளாதார நெருக்கடியால் கட்டமைக்கப் படுகிறது. அதனால் தான் அவள் முரடனும் முட்டாளுமான ரமிரோவை விடுத்து, சூதும், துடிப்பும், காமவேட்கையும் கொண்ட ஒக்தாவியோவைப் பின்பற்ற நேர்கிறாள். டேனியலோ, நல்ல பொருளாதார ஸ்திரத்தன்மையும் அந்தஸ்தும் உடையவனாக இருக்கும் போதிலும் வெளித்தோற்ற மயக்கத்திற்கு ஆளாகி நல்ல தகப்பனாக இருப்பதற்கான சந்தர்பத்தை தவரவிடுகிறான். எல்கிவோ அரசியல் மயக்கங்களால் கவரப்பட்டு பொது வாழ்விலும், குடும்ப வாழ்விலும் பெருந்தோல்வியை சந்திக்க நேரிடுகிறது. தன்னைத் தோற்கடித்த சமூகத்தின் மீது ஒரு பழி வாங்கும் செயலாகவே அவனது கொலைகளும் வன்முறைகளும் இலக்கின்றி அமைகிறது. வெவ்வேறு சமூக பிரிவுகளிலும் நேர்மையின்மை, நம்பிக்கையின்மை, துரோகம், சீர்கேடுகள் இருப்பதை இப்படம் பதிவு செய்கிறது. சட்டவிரோதமாக நடக்கும் நாய் சண்டை சூதுகள், ஒரு வீட்டிற்குள் நடக்கும் கள்ளவுறவுகள், காவல் துறையே முன்னின்று நடத்தும் கொலைகள் என அரசியல் சமூக சித்தரிப்பின் உரத்த குரல் படமெங்கும் ஒலிக்கிறது.  இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் படமாக இல்லாத போதும், அரசியல் மற்றும் சமூகத்தின் எதிர்வினையை பெரிதும் தனது கதாபாத்திரங்கள் வழியாக பேசுகிறது.

மற்றும் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு இத்திரைப்படத்தில் கதாபாத்திரங்களுடன் இடம்பெறும் நாய்கள். அவை மனிதர்களின் சுபாவங்களையே கொண்டுள்ளது. படத்தில் மிக முக்கிய குறியீடாகவும், உணர்ச்சிகளைக் கடத்தும் கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரைக்கதை எங்கும் வியாபித்திற்கும் நாய்கள் அவர்களது எஜமானரின் உணர்ச்சி நிலையையே வெளிபடுத்துகின்றன. கைவிடப்படுதல், நிராகரிக்கப்படுதல், துர்பிரயோகித்தல், மண்டியிடுதல், வன்முறைக்கு ஆளாகுதல் என்று ஒரு நாய்க்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் சந்திக்கின்றன படத்தில் வரும் நாய்கள். அவ்வாறே எஜமானர்களும்.

ஒக்தாவியோ வீட்டில் வளாரும் கோஃபி ரமிரோவுடையதாக இருந்தாலும் அதை ஒக்தாவியோ தான் பராமரிக்கிறான் (ஒக்தாவியோ நாயைக் குளிப்பாட்டும் காட்சி). ரமிரோ அதை ஒரு பொருட்டாக கூட கண்டுகொள்வதில்லை. ஒக்தாவியோ அதை கவனித்துக் கொள்கிறான், அன்பு செலுத்துகிறான். அதனால் அதையே அவன் பந்தைய பொருளாக்குகிறான்... பணையம் வைக்கிறான்; அதன் பயணை அடைகிறான். நாய் சண்டையின் வருமானத்தில் வருவதில் பாதி தனக்கு வேண்டுமென்று கேட்கும் ரமிரோவிடம் எதுவும் தர மறுக்கிறான். கோஃபி என்ற நாயின் மேல் செலுத்தும் அதிகாரச்சண்டை இது. இங்கு கோஃபி சுசன்னாவையன்றி வேறு யாரையும் நினைவுபடுத்துவதில்லை. கோஃபி என்பது சுசன்னவின் ஒப்பீட்டுப் பிரதி. எதுவும் செய்ய இயலாமல் நிர்கதியாய், அடிமையாய் வாலாட்டிய வண்ணம் எல்லா ஆபத்துகளினூடே எல்லாவற்றிற்கும் சம்மதித்து செல்லும் சுசன்னாவையும் கோஃபியையும் பிரித்து பார்க்க இயலாது.

அதை போலவே வலேரியாவின் வாழ்க்கையும். ஆரம்ப காட்சிகளில் அறிமுகமாகும் வலேரியா பெரும் அழகியாகவும், பகட்டானவளாகவும் காட்டப்படுகிறாள். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தன்னுடைய குழந்தையாக அவளுடைய நாயை அறிமுகப் படுத்துகிறாள். அது அவளைப் போலவே பகட்டாக அலங்கரித்த வண்ணம் நிகழ்ச்சியில் அறிமுகமாகிறது. அதுவே, கார் விபத்திற்குப் பின் அவளது வீட்டிலே காணாமல் போகிறது. அது அவளை உறக்கமின்றி அலைக்கழிக்கிறது. காணாது போன நாய் என்பது ஆடம்பரமான பகட்டான பழைய வலேரியா தான். பின்னர் டேனியலும் அவளும் தங்களது உண்மையான அன்பை மீட்டெடுக்கும் தருணத்தில் வலேரியாவின் நாய் கண்டறியப் படுகிறது. அது வலேரியா மற்றும் டேனியல் உறவில் மலர்ந்துள்ள புதிய பரிநாமத்தை குறிக்கிறது.

எல்கிவோவைச் சுற்றியுள்ள கைவிடப்பட்ட தெரு நாய்கள் அவனும் அவற்றில் ஒருவன் என்பதையே சித்தரிக்கிறது. அவைகளை யாரும் கவனிப்பதில்லை. ஒரு தெரு நாயின் கூச்சலோ, கலகமோ எவராலும் கூர்ந்து கவனிக்கப்படுவதில்லை. இந்த சவுகர்யமான போர்வைக்குள் எல்கிவோ பாதுகாப்பாக ஒதுங்கி கொள்கிறான். அவனது கொலைகளும் வன்முறைகளும் வெளியே தெரிவதில்லை. ஒரு பெயரும், முகவரியும் அற்ற ஒருவன் செய்யும் கொலையை யார் கண்டு கொள்ள போகிறார்கள். அவனுக்கு நண்பனுமில்லை; பகைவனுமில்லை.

எல்கிவோ, வலேரியா, ஒக்தாவியோ மூவரும் ஆரம்பத்தில் அனுக முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார்கள். வலேரியா ஆரம்பக்காட்சியில் அசுரத்தனமான ஒரு சுவர் விளம்பரத்தில் தன் அழகிய கால்களுடன் காட்சித் தருகிறாள், பின் தொலைகாட்சியில். எல்கிவோ குப்பைத் தொட்டிகளிலும், தெரு நாய்கள் சூழ்ந்த வண்ணமும். ஒக்தாவியோ இளமையின் துடிப்பிலும் வேகத்திலும். அடுத்த நொடி என்ன செய்யப் போகிறான் என்ற பதட்டம் அவனிடமிருந்து பற்றிக்கொள்கிறது. விபத்துக் காட்சி தான் இவர்களை ஒன்றினைக்கிறது. தங்கள் இயல்பு நிலைகளுக்கு திருப்பி விடுகிறது. சமுதாய பொருளாதார அந்தஸ்தின் பொருட்டின்றி அனைவரும் அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கித் தவிக்கிறார்கள். உறவுகளின் பிரிவு அவர்களை நிம்மதிழக்கச் செய்கிறது. எந்தப் பிரிவைச் சார்ந்த போதிலும் நகரத்தின் மூர்க்கமான கைகள் யாவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறது. இங்கு தனித்த வாழ்வென்று எதுவும் இல்லை. சமூகத்தின் நூறாயிரம் சுவர்கள் நமது குறுக்கே நின்றாலும் நமது வாழ்வுகள் அடிப்படையில் ஒரு மெல்லிய கண்களுக்கு அகப்படாத நூலால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அரிதாரங்களின் படலங்களுக்குக் கீழே எஞ்சி இருப்பது இரத்தமும் சதையும் எலும்பும் கொண்ட, அன்பு-அக்கரை-காதல் இவற்றிற்கு ஏங்கித் தவிக்கும் சாதாரன ஒரு உயிரினம். ஒரு சிறிய வலியோ, காயமோ கூட நம்மை ப்படி மாற்றிவிடக் கூடியது என்பது விசித்திரமானது. ஒன்று இழுபட மற்றவைகள் ஒரு சீட்டுக்கட்டுகளால் ஆன கட்டிடம் போல குலைந்து விடுகின்றன. வாழ்வில் ஒரு சிரு தருணம் நமது திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்க வல்லது. இந்த இணைப்பு எவ்வாறு நிகழ்கிறது... ஒரு நாளில் எவ்வளவோ வாகனங்கள் சாலையில் போகின்றன, இவை ஒன்றுக்கொன்று மோதாமல் பிரித்து வைத்திருப்பது என்ன?? அப்படி இவ்வாகங்கள் அத்துமீறி சந்திக்க நேர்கையில் அவை அவிழ்கும் நாடகங்கள் எத்தகையவை? உற்றுப் பார்த்தால் இந்த வாழ்வு முழுவதுமே ஒன்றுசேர்வது மற்றும் கலைந்து-பிரிந்து செல்வது என்ற தொடர் நிகழ்வின் இசைவான நடனம் என்றே தோன்றுகிறது. அதுவே இத்திரைப்படத்தின் அடிநாதமாகவும் இருக்கிறது.


******* முற்றும் ******