இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 நவம்பர், 2009

சச்சின் விளையாடுகிறாரா இல்லையா?

சச்சின் விளையாடுகிறாரா இல்லையா?

ஆண்டு 1998, காலை 6 மணி:

ஆட்டத்தின் கடைசி ஓவர்...மூன்றாம் பந்து... சற்றே பொந்திவர மட்டையாளர் அதை எதிர்கொள்ளும் போது வெளிப்புற விளிம்பு வாங்கி களப்பணியாளர்களின் கைகளில் இருந்து சற்றே விலகிச்செல்ல ஒற்றை ஓட்டம் எடுக்கப்பட்டு, சச்சின் பந்தை எதிர்கொள்கிறார். இரண்டு பந்தே பாக்கியுள்ளது. ஐந்து ஓட்டங்கள் எடுக்க வேண்டும். சச்சினின் இரும்புக் கரங்களை உலகமே கவனித்தவண்ணம் இருக்கிறது. வந்து சேர்ந்தது ஐந்தாம் பந்து..."அடங்ங்...!" . அது சச்சினுக்கே ப்ரத்யேகமான ஏழரையான ஒரு இடத்தில் அமைந்து தொலைந்தது. பந்து மட்டையை சந்திக்காமல் கடந்து போய்விட்டது...அனைவரும் "உஊ...!!!" என்று ஒன்று போல சப்தமிட்டனர். சச்சின் பதட்டத்துடன் காணப்படுகிறார். இதோ அடுத்து....கடைசிப் பந்து...சச்சின் கையில் தான் கோப்பை. பார்வையாளர்களின் ரத்த அழுத்தம் அபரிதமாக பெருகியோடியது. சிலர் நகங்களைக் கடிக்கின்றனர், சிலர் கைகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டனர், சிலரோ மேலே பார்த்து பிராத்தனை செய்தனர். கடைசிப்பந்து....கள்ளப்பயல்! ஒரு மெதுவேக பந்து வீசினால் கூட ஆட்டம் அம்பேல் தான். வீசிவிட்டான் கடைசிப் பந்தை!...ஃபுல்டாஸ்....மறுயோசனையின்றி விளாசிவிட்டார் சச்சின்!. பந்து உயரே உயரே சென்றது....அது குறைந்த உயரத்துடன் சென்றிருந்தால் பௌன்றியை எளிதாக கடந்திருக்கும். ஆனால் அது பறப்பதோ செங்குத்தாக. அது செல்லும் உயரத்தைப் பார்க்கையில், திரும்ப வருகையில் ஏதாவது தேவதூதரையும் உடன் அழைத்து வந்துவிடுமோ என்று தோன்றியது. அதனடியில் ஒரு களப்பணியாளன் கையை அகல விரித்தபடி அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தான். அரங்கமே "நோ..நோ...." என்று ஓலமிட்டுக்கொண்டிருந்தது.

விசித்திரமான சத்தமொன்றைக் கேட்டு பதட்டமடைந்த சாமுவேலின் மனைவி படுக்கையை எட்டிப்பார்க்க..போர்வைக்குள்ளிருந்து "நோ..நோ..." என்றபடி சாமுவேல்!. அவள் போர்வையைச் கலைத்தபின் தான் தன் கடைசி ஓவர் கனவிலிருந்து விழித்தார் சாமுவேல்.

இன்று டைட்டன் கோப்பை இறுதிப் போட்டி. நேற்று இரவு செய்தியில் சச்சினுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமே என்று கேள்விப்பட்டு, ஒரு 10 நண்பர்களுடன் விசாரித்து, புலம்பி, நிம்மதியற்று தூங்கப் போனார் சாமுவேல். என்ன செய்வது...சச்சின் விளையாடுக்றாரா இல்லையா என்பது, இந்தியா வெல்லுமா இல்லையா என்பதைத் தீர்மாணிப்பதாக அல்லவா இருக்கிறது!.

வானொலியைத் திருபினார். சரோஜ்நாராயன்சாமி செய்திகளை சங்கீதமாய் படித்துக்கொண்டிருந்தார். இரண்டு கவள காப்பிக்கு ஒரு இழுப்பு சிகரெட் என்ற சீரான இடைவெளியில் செய்திகளை கவனித்துக்கொண்டிருந்தார். விளையாட்டு செய்திகள் என்று அறிவித்தவுடன், படித்துக்கொண்டிருந்த பிள்ளையை ."யெய்...செத்த மொள்ளமா படி டே!"என்று அதட்டினார். நாற்காலியை வானொலியின் பக்கம் சற்றி இழுத்துப் போட்டுக்கொண்டார். "நேற்று டைட்டன் கோப்பை இறுதிப்போட்டிக்கான இந்திய கிரிக்கட் அணியின் குழு அறிவிக்கப்பட்டது. பயிற்சியின்போது நடந்த ஆட்டத்தில் காயம் ஏற்பட்டதால் சச்சின் விளையாடுவது இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது, என்று அணியில் கேப்டன் தெரிவித்தார்....ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில்...." அதற்குப் பின் சொன்ன எதுவும் அவர் காதில் விழவில்லை. காப்பியும் சிகரெட்டும் தத்தம் சேவையை செவ்வனே செய்ய, மனைவியை நோக்கி "கக்கூசுல தண்ணி எடுத்து வைய்யி டீ.." என்று கத்தினார்.

கழிப்பறையில் அமர்ந்தவாரே விடுபட்ட அந்த கடைசி ஓவரை மீண்டும் கனவு காணத் தொடங்கினார்.

காலை மணி 8:30

துரிதமாக சில சூடான இட்டிலிகளை விழுங்கினார். ஸூட்டில் ருசியேதும் அறியவில்லை. காலுறையை மாட்டும் போதே கம்பேனி பேருந்து வந்துவிட்டது. அன்றைய செய்தித்தாளை அக்குளில் வைத்தபடி வீட்டை விட்டுக் கிளம்பினார். அன்றைய நாளின் முக்கயத்துவம் ஏதும் அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

"அமரிக்கவுடன் முக்கிய ஆவணங்கள் கையெழுத்தாயின" "எதிர்க் கட்சியினரின் போராட்டம்" "கள்ளக் காதலனைக் கொன்ற கணவன்" "ஊதிய உயர்வு கேட்டு செவிலியர் தர்னா" போன்ற அன்றாட செய்திகளுக்கு நடுவே "மீண்டும் சுரங்க சரிவு. பலவீனமான தளங்களை மூடிவிட கோரிக்கை!" என்ற செய்தியும் இருந்தது. சுரங்க சரிவு மற்றெல்லோருக்கும் வேண்டுமானால் சாதரண செய்தியாக இருக்கலாம். ஆனால் ஒரு சுரங்க அதிகாரியாக சாமுவேலுக்கு அது முக்கியமான செய்திதான். இருப்பினும் கிரிக்கட்டை விட முக்கியமான செய்தியொன்றும் இல்லை!.

“நேற்று நடந்த சுரங்க சரிவில் நான்காம் தளத்தில் நடந்த விபத்தில் பல ஊழியர்கள் அகப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப் படுகிறது. இது ஏற்கனவே விபத்துக்குள்ளான தளம் என்று அறிந்தும் நிர்வாகம் இந்த தளத்தை இன்னும் மூடாதிருப்பது குறித்து தொழில் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன" என்று சுருக்கமாக முடிக்கப்பட்டிருந்தது. அப்போதே ஆரம்பமாகிவிட்டது பி.பி. ஒரு மோசமான நாளுக்கான அறிகுறியாக இருந்தது அது. அவசர அவசரமாக விளையட்டு செய்திகளைத் திருப்பினால் "சச்சின் விளையாடிகிறாரா?" என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தது. அதற்குமேல் படிக்க மனமில்லாமல் பேப்பரை மூடிவிட்டு கழுத்து கச்சத்தை பின்னிக் கட்டிக்கொண்டார். "அவ்வளது தான் இன்னைக்கு...நல்ல காலத்துலயே நெனச்சப்போ கிளம்ப முடியாது. இதுல விபத்து வேறு. இனி விசாரணை, ரிப்போர்ட், மாற்று ஏற்பாடு என்று எல்லா எழவும் அழனும். இன்று சீக்கிரமாக கிளம்பி இறுதியாட்டத்தின் இரண்டாம் பகுதியாவது பார்த்துவிடலாமென்று பார்த்தால்....ப்ச்ப்...ஷிட். ..சச்சின் வேறு விளையாடுகிறாரோ இல்லையோ?".

மணி 10.

அலுவலகத்திலிருந்து தன் இருக்கைக்கு வரும்போதே விபத்து பற்றி விபரங்களை சேகரித்துக்கொண்டார்.

"எப்போ நடந்தது?"

"ஈவினிங்...மணி பத்து, பத்தேகால் இருக்கும் "

"எந்த சிஃப்ட்"

"ஃபர்ஸ்ட் ஷிஃப்ட் முடிஞ்சு டின்னருக்கு அப்புறம் சார்"

"எந்த ஃப்ளோர்"

"நாலாவது"

"ஷிஃப்ட் இன்சார்ஜ் யாரு"

"மல்லிகார்ஜுன்"

"எப்படி நடந்தது?"

"ஒரு சிஃப்ட் முடிஞ்சு அடுத்த சிஃப்டோட 1 மணிநேரத்திலேயே நடந்திருக்கு சார். ரொம்பவும் வீக்கான ராக்ஸ். ஏற்கனவே இதுமாதிரி நிறையா நடந்திருக்கு இங்க. ஸ்கப்ஃபோல்டிங் ஸ்ட்ரெந்த் என்ட்யூர் பண்ணாம கொலேப்ஸ் ஆயிடிச்சு. சாரம் சரிஞ்சு விழிழுந்திருக்கு. தன்ன காப்பாதிக்க எல்லாரும் ஓடியிருக்காங்க. அதுல ஃபர்தரா வீக்காகி என்டயர் தளமுமே டேமேஜ். 11 மணிக்கு முக்கிய‌ ஆலோசனைக் கூட்டமிருப்பதாக மெயின் ஆபீஸ் ப்யூன் அறிவித்து சென்றிருக்கிறான்.

மணி 10.45

தொலைக்காட்சியில் செய்திகள்: ‍வக்கீல்கள் மறியல், எதோ நகரத்தில், யவனோ வீட்டில் நகைகள் கொள்ளை...(சரியாக பாதுகாக்கத் தெரியாவிட்டால் எதுக்கு இவனெல்லாம் நகை வாங்கனும்...என்னைக்கும் ஒரு நாள் தொலைத்திருக்கத் தான் செய்வான் என்று நினைத்துக்கொண்டார் சாமுவேல்), ஏதோ சின்ன ’C’ நடிகர் பிறந்தநாள் கொண்டாடுவது என்று எல்லாம் கவனித்தார், ஏதாவது செய்தி வருகிறதா என்று. ஒன்னும் பிரியோஜனம் இல்லை. சச்சின் விளையாடுகிறாரா இல்லையா என்று ஒரு மண்ணும் தெரியவிலை. ச்செ...விளையாடவில்லை என்று சொல்லிவிட்டால் கூட நிம்மதியாக இருந்து விடலாம்... என்று தனக்குள்ளாக புலம்பிக்கொண்டிருந்தார் சாமு.

மணி 11.00

சற்றே மழைவருவது போல இருந்தது. எல்லாம் இரண்டு மூன்று பேராக கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ ஒருசிலரின் வருகையில் அந்த கருத்தரங்க அறையே அமைதியானது. அவர் அந்த ஆலோசனை அறையின் பிராதன இருக்கையில் அயர்ந்தார்.

"எல்லோருக்கும் தெரியும் இன்றைய முக்கிய சம்பவம், மிக துரதிஷ்டவசமாக நமது 4ம் தள விபத்து அமைந்தது பற்றிய விவரங்கள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேச தான் இந்த கூட்டம்"

சாமுவேல் "ஆமா இது யாருக்கும் தெரியாதா..பெரிய புத்திஜீவி...அப்படி இருந்தால், எங்கே சச்சின் இன்று விளையாடுகிறாரா இல்லையா என்று சொல்லிவிடுங்கள் பார்க்கலாம்" என்று தனகுள்ளாகவே நினைத்துக்கொண்டார்.

பிரதான அலுவலர் தொடர்ந்தார் "அறிக்கையை நான் வேகமாக பார்த்தேன். இதுவரை மிக மோசமான விபத்துக்களை சந்தித்த அதே 4ம் தளத்தில்தான் இந்த விபத்தும் நடந்திருக்கிறது. கடந்த 7 வருடத்தில் 12 விபத்துக்கள். ஒவ்வொறு முறையும் நாம் ஒரு சில தொழிலாள‌ர்களை இழக்கிறோம். பின் சீரமைப்புப் பணிகள்...மறு உருவாக்கம் என்று தொல்லை தரும் விதமாக தான் இருக்கிறது. அந்த 'நிலை'யையே மூடிவிடுவதே நல்லது என்று நான்...இல்லை..சில குழுக்கள் பரிந்துரைக்கின்றன"

அதற்குள் இடைமறித்தான் ஒருவன். "மண்ணிக்கவும்...ஆனால் மிக அரிதான கச்சாவை குறைந்த செலவில் அளித்துவந்தது இது...நமது வருவாயில் 12% இந்த நிலையிலிருந்து மட்டுமே வந்த காலங்கள் உண்டு" என்பதை நான் உங்களுகுக்கு சொல்ல வேண்டியதில்லை”.

“ஆமாம்...இந்த பல கோடி பெருமானம் கச்சாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த சொற்ப தொழிலாளிப் பயல்கள் உயிரொன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல!” என்று முணுமுணுத்தார் சாமு.

“மேலும் கடந்த முறை நடந்த மறு சீரமைப்புப் பணியைவிட இம்முறை நல்ல முன்னேற்றம் உள்ளது. சாரங்கள் சரிந்தது தெரிந்தவுடனே சென்ற முறை விபத்துக்குப் பிறகு நிறுவப்பட்ட தானியங்கி சயரன்கள் முழங்க, ஆம்புலன்ஸ்கள் தயாராக்கப்பட்டது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் சூதானமடைந்து விபத்திலிருந்து தப்பினார்கள். காயமடைந்தவர்கள் 48 பேர் தான். சென்ற முறை விபத்தை விட அளவில் இது பெரியாதாக இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை வெறும் 3 தான்!. இது விபத்துத்தடுப்பில் சென்ற முறையை விட 35% முன்னேற்றத்தைக் காட்டுகிறது" என்று புள்ளி விபரங்களைக் கொடுத்தான் அந்த‌ ஆபீசர்.

உயர் அதிகாரி அதில் சற்றே மகிழ்ந்திருக்க வேண்டும்..."வெரி குட்..கொய்ட் இம்ப்ரெஸ்ஸிவ்" என்றார். இது குறித்த அறிக்கைகளுடன் என்னை நீங்கள் பின்னர் சந்தியுங்கள்" என்றார் அதிகாரி.

"அடிசச்து டா! லக்கி பிரைஸ்!"...அதிகாரியை நேரில் சந்தித்தால் எப்படியும் அவரை மேலும் சில புள்ளி விவரங்களைச் சொல்லி நெகிழச்செய்துவிடுவான். இனி அப்படியே பதவி உயர்வு..சம்பள உயர்வுனு போய்டுவான். ஒவ்வொரு முறை விபத்து நடக்கும் போதும் ஒருத்தன் அல்லது இரண்டு பேர் அதை உபயோகப் படுத்தி சம்பள உயர்வு வாங்கிடறான். ஆனால் நமக்கு தான் அப்படி எதுவும் செய்ய வக்கில்லையே..." என்று தனக்குத் தானே குறைபட்டுக்கொண்டார் சாமு.

"இப்படியே எவ்வளவு நேரம் நீட்டிப்பார்கள் என்று தெரியவில்லை. 12.00 மணிக்கு செய்திகள் வேறு இருக்கின்றது. சச்சின் வேறு விளையாடுகிறாரோ இல்லையோ?. சச்சின் விளையாண்டால் அரை நாள் விடுப்பு எடுத்துவிட்டு வீட்டுக்கு போய் ஆட்டத்தைப் பார்க்கலாம் என்றால்..இப்படியாகிவிட்டதே..."

அதற்குள் உயரதிகாரி குரலெடுத்து: "அடுத்து மிக முக்கியமான ஒரு பணி பாக்கி இருக்கிறது. நாம் எவ்வளவு தான் விபத்து தடுப்பு, கட்டுமானம், மறு சீரமைபு என்று முன்னேற்றம் காட்டினாலும் நாம் இழந்த தொழிலாலர்கள் நமக்கு திரும்ப கிடைக்கப்போவதில்லை...அவர்கள் குடும்பத்திற்கும். அவர்களுக்கு நாம் செலுத்தும் கடைசி மரியாதை...நாம் அவர்கள் வீட்டிலேயே சென்று இந்த துக்க செய்தியை நம் அனைவரது சார்பாக தெரிவிப்பது தான். நாம் அனைவரும் அவரது இழப்பை குறித்து மிகவும் வருந்துகிறோம் என்ற செய்தியை அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். துரதிஷ்டவசமாக 3 தொழிலாலர்களை இழந்திருக்கிறோம். உங்களில் யாராவது மூன்றுபேர் முன்வந்து இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் அதிகாரி.

பெருத்த மௌனம் நிலவியது. ஒருவனும் வாய்திறக்கக் கானோம். புள்ளிவிவரம்,நம்பர்கள்,செயல் திட்டம் என்றால் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு குரலெழுப்பும் இவர்கள் இப்போது ஒடுங்கிப் போய் எங்கே ஒளிந்துகொண்டார்கள்?. பேடிப் பயல்கள்" என்று திட்டித் தீர்த்துக்கொண்டார் சாமு. ஒரு வழியாக இரண்டு தொழிலாலர்கள் வீட்டிற்கு செல்ல ஆட்கள் முன்வந்து விட்டார்கள். ஆனால் மீதம் இருந்த அந்த ஒரு தொழிலாளியின் வீட்டில் மரணச்செய்தியை அறிவிக்கச் செல்ல யாரும் முன்வரவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது!.

அந்த மூன்றாம் ஆள் திரு.ஆரோக்கியசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர். 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஓய்வு பெற ஒரு வருடத்திற்கும் குறைவாக இருக்கும் தருவாயில் ஒரு சுரங்க விபத்தில் அகப்பட்டுக்கொண்டார். மிகவும் பரிதாபமான சாவு. குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்ட மூத்தமகன் சில வருடங்களிலேயே அப்போது தான் டிப்ளமோ முடித்திருந்த தன் இளைய சகோதரனையும் அழைத்துக்கொண்டார். சிலவருடங்கள் அப்படியே நல்லபடியாக சென்றது. முந்திய வருடம் நடந்த ஒரு தனி விபத்தில் சில அகப்பட்ட தொழிலாலர்களை மீட்க அவன் முற்பட்டிருந்த போது, தொடர்சரிவால் உடலின் கீழ்ப்பகுதி வெகுவாக நசுங்கிப் போனது.

சில மாதங்கள் மருத்துவமணைக் கிடப்பிலிருந்து, பிறகு பல்லுறுப்புகள் செயலிழந்து மரணமடைய நேரிட்டது. மிகவும் நாடகத்தனமாக இப்போது அந்த குடும்பத்தின் கடைசி மகனான சார்லஸ் இறந்து விட்டான். முத்தவனைப் போல அல்லாது நொடிப்பொழுது மரணம் இவனுக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். அடுத்த நாள் விடுப்பு கேட்டிருக்கிறான். அதை நிகர் செய்வதற்காக 2 ஷிப்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறான். அந்த பாவப்பட்ட குடும்பத்திற்கு இந்த விஷயத்தை அறிவிக்கப் போகும் துரதிஷ்டசாலி யவனும் முன்வரவில்லை. இவர்கள் இப்படியே யோசித்துக்கொண்டிருந்தால் நான் 12 மணி செய்திகளைத் தவறவிட வேண்டியதுதான்...ச்சை! சச்சின் வேறு விளையாடுகிறாரோ என்னவோ?

நீண்ட மௌனம் மிகுந்த அசௌகரியத்தையும், ஒரு அவசியமற்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது. சாமுவேல் என்னதான் அதர கோழையாக இருந்தாலும், தனக்கே உரித்தான அசட்டு தைரியத்தை சில நேரம் வரவழைத்துக்கொள்வார். சில அசட்டுத்தனமானஏன் சில சமயம் அதிகப்பிரசங்கித்தனமான வெளிப்பாடுகள் கூட...இவர் ஒரு கலகக்காரர்...புரட்சிக்காரர் என்ற தவறுதலாக புரிந்துகொள்ளப் படுவதும், அதனால் ஏற்படும் கௌரவ உணர்ச்சியை பாதுகாப்பதும் சாமு போன்ற நடுத்தர மனப்போக்கு உடையவர்கள் தவறாமல் செய்யும் ஒன்று. அப்படிதான் இன்றும் செய்தார்.

"ஜென்டில்மென்...நான் போகிறேன்" என்று மௌனம் உடைத்தார். அப்படியொன்றும் அது அசட்டுத்தனமான முடிவு என்று சொல்லிவிட முடியாது. அதில் இரண்டு ஆதாயங்கள் சாமுவிற்கு இருந்தது. ஒன்று: மேலதிகாரிகள் முன் "யார் இவர்!" என்ற அறிமுகம் கிடத்தது. ஒரு வெளிச்சம் தன் மீது படர உதவியாக இருந்தது. இரண்டு: எப்படியும் மற்ற நாட்களைப் போல் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்குள் இறுதியாட்டம் மதியம் 2.30 க்குத் துடங்கி ஒரு இன்னிங்க்ஸ் முடிந்துவிடும். இந்த காரியத்திற்கு சென்றால் அப்படியே விடுப்பெடுத்துவிடலாம். அலுவலக காரிலேயே சென்று வீட்டிலும் இறங்கிவிடலாம். ஆட்டத்தை முதல் பந்திலிருந்தே பார்க்க முடியும்!.

அந்த முதல் ஆதாயத்தின் பலன் உடனடியாகவே கிடைத்தது. முதன்மை அதிகாரி சாமுவின் கண்களை நேரடியாக பார்த்து.."வெரி குட் சேம்..தட்ஸ் கிரேட்!" என்றார். சாமு ஒரு போர்ப்படைத் தளபதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டவரைப் போன்ற இறுமாப்புடன் கலந்தாய்வு அறையைவிட்டு வெளியேறினார், எதிகொண்ட மற்ற அலுவலர்கள் எல்லாருமே மிக ஏளனமாகப் தென்பட்டார்கள்.

காரியத்தை எடுத்துக்கொண்டாரே அன்றி அது குறித்த வருத்தமும் சாமுவைத் தொற்றிக்கொண்டது. சகல விதமான தகவல்களுடன் சாமு கம்பெனி காரில் கிளம்பிச் சென்றார். கிளம்பும் முன் சமீப செய்திகளைக் கொஞ்சம் சரிபார்த்துக் கொண்டார். டேம் இட்!!! இன்னும் சச்சின் விளையாடுகிறாரா இல்லையா என்று தெரியவில்லை!.

குறிப்பிட்ட வசிப்பிடத்திற்கு 30 நிமிடங்களில் எல்லாம் சேர்ந்தாகிவிட்டது. சாமுவுக்கு பரிட்சைக்குச் செல்லும் ஒரு பள்ளி மாணவனின் மனநிலை உருவாகத் தொடங்கியிருந்தது. உள்ளங்கை வியர்க்கத்தொடங்கி வயிறு காலியானதைப் போன்ற உணர்வு. நெஞ்சிலிருந்து தொண்டைவரை புகை அடைத்தது போலிருந்தது. டிரைவரிடம் ஏதோ சொல்ல நினைத்து கூட வார்த்தை வெளியே வரவில்லை. தன்னிலையை எண்ணி தனக்கே வருத்தமாக இருந்தது. ச்சே!!! என்ன இது...உங்கொப்பனா செத்துப்போனான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் சாமு. இப்படி நின்று கொண்டே இருந்தால் இன்று ஆட்டத்தை முழுவதும் காண்பது சந்தேகம் தான்.

எந்த விதமான பிரத்யேக திட்டமும் இன்றி காரை இரண்டு தெருக்கள் முன்னே நிறுத்தடச் சொல்லிவிட்டார் சாமு. தான் போய் வருவதாகவும், அதுவரை அங்கேயே இருக்கும்படியாகவும் டிரைவரிடம் கூறிவிட்டு மெதுவாக நடக்கத்தொடங்கினர். வழியில் சில ஜவுளிக் கடைகளும், பலசரக்குக் கடைகளும், எலெக்ட்ரானிக் சாதனங்கள் சரிசெய்யும் கடைகளும் இருந்தன. பூதக் கண்ணாடியை ஒத்த ஒரு மூக்குக்கண்ணாடி அணிந்த ஒரு மெக்கானிக் அதை சிரமத்துடன் சரிசெய்துகொண்டிருந்தான். அவன் இந்தப் பார்வையுடன் அதை சரிசெய்வதற்கு ஒரு மாதம் எடுக்குமோ என்று நினைத்துக்கொண்டார் சாமு. வழியில் ஒரு சேட்டுக்கடையில் ஜிலேபி சூடாகப் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் சமீப காலத்தில் சூடாக ஜிலேபி போடுவதை பார்த்ததே இல்லை. வரும்போது கண்டிப்பாக இரண்டு ஜிலேபி வாங்கித்தின்று விட்டு வீட்டிற்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். இப்படி கேனத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு போனால் வந்த் வேலை முடிந்து ஆட்டத்தைப் பார்த்த மாதிரி தான்" என்று ஒரு குரல் எச்சரித்தது.

மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடக்கத் தொடங்கி, குறிப்பிட்ட வீட்டின் சுவர் அருகே வந்துவிட்டார். கேட்வரை சென்று கதவைத் திறக்கவோ, இல்லை காலிங்பெல்லை அமுக்கவோ தைரியமோ, மனமோ இன்றி நின்றவண்னமே இருந்தார் சாமு. தூரத்தில் இறந்துபோன சார்லஸின் தாத்தா தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவரது மகனை சாமுவிற்கு நன்றாக நன்றாகத் தெரிந்திருந்தது. தான் புதியவனாக கம்பெனியில் சேர்ந்த பொழுது, அவர் மிக முக்கியமான ஃபோர்மேனாக இருந்தார். அவரது மூத்த மகனைக் கூட நன்றாக தெரிந்திருந்தது. பாவம் அவன் அப்பாவின் மறைவுக்குப் பின் மொத்த குடும்ப பாரமும் அவன் மீது விழுந்திருக்க வேண்டும். தனியாகவே அதிக நாள் கஷ்டப்பட்டான். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் முன்பணமோ கடனோ வாங்க கையெழுத்து கேட்டு வந்து நிற்கும்போது பார்த்திருக்கிறேன். நடப்பில் இருந்த எல்லா கடன்வாங்கும் வழிகளிலும் அவனுக்கு கடன்கள் இருந்தது. இருக்காதா...தம்பிகளின் படிப்பு, குடும்பத்தாரின் மருத்துவ செலவு என்று எவ்வளவோ இருக்கும். ஏதோ அவன் தம்பியும் சற்று தலையெடுத்த பின்பு தான் அவனுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டிருக்கக்கூடும். அவன் உடனடியாக ஒரு கல்யானம் செய்துகொண்டதில் ஒன்றும் வியப்பு இல்லை. ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் இறந்து போனது தான் எல்லோருக்கும் அதிர்ச்சியாகிப் போனது. கம்பெனிக்கு வருங்காலத்து ஒரு நம்பிக்கையாக இருந்தானவன், என்பது மட்டுமல்லாது தற்போது தான் திருமணமாயிருந்த இளைஞனின் இறப்பு எல்லோரையும் துக்கமுறச் செய்தது. இப்போது அந்த குடும்பத்தின் கடைசி மகனும் இறந்துவிட்ட செய்தியை தெரிவிப்பதற்காக அந்த துரதிஷ்டமான வீட்டிற்கு தான் புறப்பட்டு வந்திருக்கும் முட்டாள்தனத்தை எண்ணி சாமு வருத்தப்பட ஆரம்பித்திருந்தார்!. அதுவும் தானாகவே முன்வந்து இதை ஒப்புக்கொண்டதை எண்ணி சாமுவிற்கு தன்மேலேயே கோவம் கோவமாக வந்தது. இப்படியே திரும்பிப்போய்விடலாமா என்று கூட எண்ணினார். ஆம் அது தான் சரியானதாக இருக்கும். எப்படியும் யாராவது சொல்லிக்கொள்வார்கள். காலை அலுவலகம் செல்வதற்குள் எப்படியும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். செய்தி தன் மூலமாகத்தான் தெரிந்திருக்கும் என்று எல்லோரும் நம்பியும் விடுவார்கள். என்றெல்லாம் நினைப்பத‌ற்குள் ஒர நடுக்கமுற்ற குரல் கேட்டுத் திரும்பினார் சாமு. "யாரு இது... சாமுவா?" என்றது தாத்தாவின் குரல். அதிர்ந்து வியர்த்துப் போனது சாமுவிற்கு. ஒன்று: தாத்தா தன்னை கவனிது விட்டது, மற்றொன்று: அவர் தன்னை அவர் அறிந்துவைத்திருந்தது. "என்ன இங்கே?" என்ற கேள்விக்கு பதில் சொல்ல வார்தை எதுவும் வரவில்லை. "இல்ல இங்க கார் நிக்குது??”

"எங்கே?"

"இல்ல ஒரு கார் விற்பணைக்கு இருப்பதாக சொன்னார்கள், அதுதான் பார்த்துவிட்டுப் போகலாமென்று"

"யாரோட வீட்ல?" என்றெல்லாம் அவர் கேட்க எத்தணிக்கும் முன்பு, அடுத்தடுத்த பொய்கள் சொல்ல தனக்கு சாதூர்யக் குறைவு இருப்பதை உணர்ந்து, கேள்விகளைத் தவிற்க "எப்படி போகிறது ஓய்வு வாழ்கை?" என்ற மிக சராசரியான ஒரு கேள்வியைக் கேட்டார் சாமு. தாத்தா அதை ஒரு நீண்ட கதை போல சொல்லத் தொடங்கினார்.

"எனக்கு என்ன...என் நாளுக்காக காத்துட்டு இருக்கேன். கர்த்தன் என்னைக்கு கண்ணைத் திறக்கிறான்னு தெரியல. ஆனா நாம விருப்பப்ட்ட உடன சாவு வந்திடுதா என்ன. அப்படி இருந்திருந்தா என்னைக்கோ நான் விடுதலை வாங்கியிருப்பேன். பாரு...இந்த தோட்டத்துல இருக்குற செடிங்க கூட தான் என் நாளெல்லாம் போகுது. அதுங்க கூட பேசிகிட்டு, விளையாண்டுட்டு...ஒரு நாள் நான் இல்லாட்டிகூட போதும் அப்புறம் பேசாதுங்க..அவ்ளோ ரோஷம்.வெயில் அதிகமா இருக்குறதால வாடிடுதுங்க. அதான் அடிக்கடி தண்ணி ஊத்திகிட்டு, காஞ்ச இலைங்கள வெட்டிகிட்டு அப்படியே தினமும் ஓடிடுது.." என்று பெரியவர் இழுத்துக்கொண்டிருக்க வந்த வேலையை மறந்து பதிலேதும் பேசாமல் அவரையே கவனித்துக்கொண்டிருந்தார்.

பெரியவரின் நிலை தொந்தரவாய் இருந்ததைக் கடந்து,, பரிதாபத்தை ஏற்படுத்தத் துவங்கியது. சாமுவிற்கும் பதபதைப்பு அதிகமாகத் தொடங்கியது. தான் அலுவலகத்த்லிருந்து கிளம்பிவந்து பலமணி நேரங்கள் ஆகிவிட்டது. வந்த வேலையும் முடிந்தபாடில்லை. கண்டிபாக இறுதியாட்டத்தை தவறவிடுவது நிச்சயமாகிவிட்டது, என்று எண்ணிக்கொண்டார். அதற்குள் தனது கலவரத்தை ஒருவாராக படித்துவிட்டவரைப் போல முதியவர், "ஏதொ சொல்ல வந்தீங்க போல இருக்கு" என்றார். சாமு முதல்முறையாக அவருக்கு பதிலாக தனது தலையைக் கவிழ்த்திக் கொண்டார். அது மிகவும் வெட்கமான செயலெனினும் அதைத்தவிர‌ அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. முதியவராக காலையில் யாரோ பேசிக்கொண்ட சுரங்கவிபத்தையும், பேரன் இன்னும் வீட்டிற்கு வராததையும், சம்மந்தமின்றி ஒரு முட்டாள் சுரங்க ஆபீசர் தன் கேட்டின் முன் நிற்பதையும் இணைத்து விஷயத்தை ஒருவாராக ஊகித்துக்கொண்டார். சாமு கிளம்பி வெகுநேரமானதை கணக்கிட்டு செய்தி இந்நேரம் வீட்டில் எட்டி இருக்குமென்று தொழில்சங்க சகாக்களும் தெருமுனையிலிருந்து கூட்டமாக தோன்ற ஆரம்பித்திருந்தனர். சம்பவத்தை உறுதிசெய்துகொண்ட முதியவர் பிடிவாதமாக, "அய்யா...இதை உள்ளே போய் நீங்களே சொல்லிவிடுங்கள்...என்னால முடியாது... உள்ளிருக்கும் மூன்று பெண்களோட முகத்தைப் பார்க்க என்னால் ஆகாது..போங்கள்.." என்றார். 'இது என்னடா வம்பாகிவிட்டது...' என்று எண்ணிய சாமு குற்றவுணர்ச்சியால் உந்தப்பட்டு கேட்டை விலக்கி வீட்டினுள் சென்றான். கதவைத்தட்டியதும் அந்த தொழிலாளியின் அம்மா என்று மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவைத்திறந்து உள்ளேவரும்படி சொன்னார். சாமு ஒரு சர்க்குலரை வாசிப்பதைப் போல மரணச்செய்தியை சொல்லி முடித்தான். அதில் எந்த பரிவையோ ஆதங்கத்தையோ எவ்வளவு முயன்றும் அவனால் வெளிப்படுத்த முடியவே இல்லை. தன்னிடம் உணர்ச்சிகள் எல்லாம் எங்கு சென்று ஒளிந்துகொண்டன என்று நினைத்துக்கொண்டான். கடைசியாக அவன் அப்பா செத்ததற்கு கூட தான் அழுகாதது அவனுக்கு நினைவுக்கு வந்தது. மரண செய்தியைக் கேட்கும் போதே அந்த பெண்மணி மயங்கி விழுந்தார். உள்ளிருந்து கைகுழந்தையுடன் ஓடி வந்த மற்றுமொரு பெண் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து அழுதுகொண்டே ஓடி வந்தாள். காரணமின்றி குழந்தையும் வீறிட்டு அழத்துடங்கியது. இதற்கு மேலும் அங்கு நிற்க திராணியற்று தலைகுனிந்தவாறு நடக்கத்துவங்கினார்.

கேட்டுக்கு வெளியேவும் கேட்டுக்கொண்டிருந்த குழந்தையின் கதறல் அவனை எதுவோ செய்தது. நடந்தவை எதுவும் அறியாதவளாக ஒரு இளம்பென்னொருத்தி கேட்டைக் கடந்து சென்றாள். உச்சி வெயில் கருணையின்றி சுட்டெரித்துக்கொண்டிருந்தது. பிராதான சாலைக்கு வரும் வரை உள்ளேகேட்ட அலரல் சப்தம் மட்டுமே கேட்டுகொண்டிருந்தது. கடைகள், வீடுகள் யாவும் ஆளற்றுக் காணப்பட்டது. தார் சாலை உருகி வழிவது போலிருந்தது. எப்போதோ இறந்து போய்விட்ட நெருங்கிய நண்பர்கள் எல்லாம் காரண‌மின்றி நினைவிற்கு வந்தார்கள். கார் நிறுத்தப்பட்ட தெருவிற்கு நடந்துகொண்டிருக்கையில் அந்த பெருந்திரளான கூட்டத்தைப் பார்த்தார். அந்த உச்சி வெயிலிலும் டி.வி ரிப்பேர் கடையில் இருந்த‌ ஒரு ஒற்றை டி.வி-யைச்சுற்றி நின்றுகொண்டிருந்தது கூட்டம். ஒரே கூச்சலும், கரைச்சலுமாக இருந்தது அந்த இடம். கூட்டத்திற்குப் பின்னால் கிரிக்கட் இறுதியாட்டம் துடங்கியிருந்தது. இங்கிருந்து டி.வி தெரிவதாக இல்லை. கூட்டத்தில் ஒருவன் ஆர்வமிகுதியில் சாமுவின் மீது மோதிவிட்டு .."சாரி சார்..." என்று முகம் கூட பார்க்காமல் மீண்டும் கூட்டத்துள் புகுந்தான். சாமுவிற்கு கோபம் கோபமாக வந்தது. இவர்களெல்லாம் எப்போது திருந்துவார்கள்எப்படி மிருகங்கள் போல இருக்கிறார்கள்…இப்படியா...முட்டாள்கள்... அடுத்தவர்களைப் பற்றி இவர்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா... ச்சை!..பாஸ்டர்ட்ஸ்!!!

கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் என்ன...?


சச்சின் வேறு விளையாடுகிறாரா இல்லையோ?!...


*** முற்றும் ***

வியாழன், 5 நவம்பர், 2009

ஒரு கனமழைக் காலத்துக்குப் பின் ...



***

1.

ஒரு கனமழைக் காலத்துக்குப் பின்

அறைந்து சாத்தப்பட்ட என் இதயத்தின் கதவுகள்

தொடர்ந்து வந்த கோடைகளால் இறுகிவிட்டன...


நீ உன் சிறிய குத்தூசிகளால்

அதன் வாயில்களைத் திறக்க எத்தனிக்கிறாய்

உன் முயற்ச்சிகள் தோல்வியடையாதிருப்பதில்

நான் மிக்க கவனத்தோடி இருக்கிறேன்


உன் இருப்பின் சாத்திய‌த்தை உறுதிப்ப‌டுத்திக்கொள்ள‌

பின்பொரு நாளில்

என் மூட‌ப்ப‌டாத‌ சாள‌ர‌ங்க‌ள் வ‌ழியாக‌

உள்ளே நுழைந்த்துவிட்டாய்

ஒரு பெட்டியைத் திற‌ப்ப‌து போல‌ திற‌ந்துகொண்டு


என் இத‌ய‌ங்க‌ள் வெறும் காலிப்பெட்டிக‌ளால் ஆன‌து...

தேடத் தேடக் கிடைப்பது மீண்டும் காலிப்பெட்டிகள் தான்


அங்க‌ங்கே சித‌றிய‌ சில‌ புத்த‌க‌ங்க‌ள்..

ஒரு குழ‌ந்தையின் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ விளைய‌ட்டு பொம்மை..

ச‌ருகாய்ப்போன் உதிர் பூக்க‌ள்..

வ‌ளைந்து போன‌ பிய‌ர்பாட்டில் மூடிக‌ள்..

முடிக்கப்படாமல் கிடக்கும் ஆயிரமாயிரம் ஓவியங்கள்..

ஆடைகளைத் தேடியபடி அரைநிர்வாணப் பெண்கள்..

நீரூற்றாமல் உலர்ந்துபோன ஒரு ரோஜாச் செடி


எல்லாம் கடந்து...


கவனிக்கப்படாத ஒரு மூலையில்

உனக்கே உனக்காக...


ஒரு சிறிய பூப்போட்ட கைக்குட்டையும்

கசங்கிய காகிதங்களில்

சில காதல் கவிதைகளும்!


***


2.


என் காப்பிக் கோப்பையின்
இறுதிக் கசப்பில்
ஒளிந்திருக்கிறாய்
நீ !


***


3.


குற்றங்கள்

குண்டுவெடிப்புகள்

சைக்கோ கொலைகாரர்கள்

பாலியல் வல்லுறவுகள்

மற்றும் கள்ளவுறவுகள்

அரசியல்வாதிகளின் பாசாங்குகள்

எதிரி நாட்டின் படையெடுப்புகள்

மனித உரிமை மீறல்

புதிதாக பரவும் உயிர்க்கொல்லி நோய்...

என்று எவ்வளவு கடந்தபின்னும்


கடைசி நம்பிக்கையாய்...

மிச்சமிருக்கிறது...


செய்தி வாசிக்கும் பெண்ணின்

கடைசி சிறு புன்னகை!


***


4.


ஒரு சிகரெட்...

பின் ஒரு சிகரெட் பாக்கெட்...

பின் அதுவே ஆஷ்ட்ரே


சாம்பல் நிரப்பி சாம்பல் நிரப்பி

தீர்ந்தது அந்த பாக்கெட்டும்

மீண்டும் அது ஆஷ்ட்ரே


மீண்டும்

சாம்பல் நிரப்பி சாம்பல் நிரப்பி

தீர்ந்தது அந்த பாக்கெட்டும்

மீண்டும் அது ஆஷ்ட்ரே


யோசித்துப் பார்த்தும்

புகை வளையங்கள் மத்தியில்

அகப்படவே இல்லை

முதன்முதலில் உபயோகித்த‌

ஆஷ்ட்ரே எதுவென.


***


5.


ப‌ச்சை

ம‌ஞ்ச‌ள்

சிவ‌ப்பு.


யாருக்கோ சாப்பிட‌க் கொண்டு சென்ற‌

பார்ச‌ல் சாப்பாடு

நெடிஞ்சாலையின் ம‌த்தியில்

சித‌றுண்டு கிட‌க்கிற‌து!


பிச்சைக்காரி கையில்

வாட‌கைக் குழ‌ந்தை

வ‌ர்த்த‌க‌த்தின் சூட்ச‌ம‌ம் அறியாது

மிட்டாய் தின்ற‌ப‌டி சிரித்துக்கொண்டிருக்கிற‌து!


சுகாதார‌ முன்னேற்ற‌த்திற்காய்

இய‌ர் ப‌ட்ஸ் விற்கும் சிறார்க‌ள்

ஏனோ குளித்திருக்க‌கூட‌ இருக்க‌வில்லை!


இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தின் மேல்

முக்காடிட்ட‌ப‌டி அழைத்துவரப்பட்ட‌ பெண்ம‌ணி

ம‌றைக்க‌ப்ப‌ட்ட முகத்தின் சுத‌ந்திர‌த்தில்

உட‌ல்மொழிக‌ள் அர‌ங்கேற்றுகிறாள்


காம‌ம், சைல‌ன்ச‌ரைக் காட்டில் சூடாய் ப‌ற்றி எரிகிற‌து!


தார்சாலையில் வ‌ண்டியிழுக்கும் ந‌க‌ர‌த்து மாடுக‌ள்

கொம்புகளும் வால்க‌ளும் அற்ற‌ ச‌க‌மாடுக‌ளுக்கு

வ‌ழிவிட்டுச் செல்ல‌வும், சாலை விதிக‌ளை ம‌திக்க‌வும்

ப‌ழ‌கிவிட்டிருக்கின்ற‌ன‌!


மீண்டும்

ம‌ஞ்ச‌ள்

ப‌ச்சை


நிக‌ழுல‌க‌த்திலிருந்து மீள்வ‌த‌ற்குள்

"..த்தா" என்ற‌ பொருள்ப‌டும்ப‌டி ஒலிக்கிறது

பின்புறம் நிற்கும் லாரி ஹார‌ன் ஒச்சை!


***


6.


ஆளில்லா தெருவில்

என் கனவுகளின் மூடப்பட்ட அறைகளை

சரிபார்த்தவண்ணம் வருகிறேன்.


ஒவ்வொரு க‌த‌விலும் உண‌ர‌ முடிகிற‌து

கடந்தமுறை பலமாக அறைந்துசாத்திய கைகளின் உறுதி!


நான் ப்ரத்யேக பிடித்தமில்லாத

பாடலொன்றை சத்தமாக கத்தியவண்ணம் இருக்கிறேன்;


அப்படியும்

தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னாலிருந்து

கேட்கத்தான் செய்கிறது -


நிக்கோடின் தின்றது போக

பாக்கியிருக்கும் நுரையீரலில் இருந்து

ஒரு இருமல் சத்தம்


சுரண்டியெடுக்கப்பட்ட கர்பவாசல்களில் இருந்து

இதுவரை வெளிவர முடியாத ஒரு முதல் அழுகுரல்


வெடித்து விடும் படியாக துடிக்கும் இதயத்திலிருந்து

அச்சுறுத்தும் விதமாக ஒரு நீண்ட மௌனம்


விடைபெறும் இரு ம‌ன‌ங்க‌ளின்

மிக‌ நீண்ட‌ கைய‌சைப்பு


விர‌ல்க‌ளின் இடைவெளிக‌ளில் வ‌ழிந்தோடும்

ம‌ற்றுமொரு ஜோடி விர‌ல்க‌ள்


ஓசைக‌ளில் எழும் கேள்விக‌ளை

எதிர்கொள்ள‌ ம‌ன‌ம‌ற்று

வில‌கிச் செல்கிறேன்


ஆளில்லா தெருவில்

என் கனவுகளின் மூடப்பட்ட அறைகளை

சரிபார்த்தவண்ணம்...


***


7.


நெடுஞ்சாலை நெரிசல்கள் மீதும்

மார்க்கெட் இரைச்சல்கள் மத்தியிலும்

சவ ஊர்வலங்கள் மீதும்

பிராத்தணைக் கூட்டங்கள் மீதும்

விமான நிலையங்கள் மீதும்


சலனமற்று

மோனத்துடன் அலையும்


யாராலும் கவனிக்கப்படாமல்,

குப்பைக் காகிதம்.


****