இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 நவம்பர், 2009

ஒரு கனமழைக் காலத்துக்குப் பின் ...



***

1.

ஒரு கனமழைக் காலத்துக்குப் பின்

அறைந்து சாத்தப்பட்ட என் இதயத்தின் கதவுகள்

தொடர்ந்து வந்த கோடைகளால் இறுகிவிட்டன...


நீ உன் சிறிய குத்தூசிகளால்

அதன் வாயில்களைத் திறக்க எத்தனிக்கிறாய்

உன் முயற்ச்சிகள் தோல்வியடையாதிருப்பதில்

நான் மிக்க கவனத்தோடி இருக்கிறேன்


உன் இருப்பின் சாத்திய‌த்தை உறுதிப்ப‌டுத்திக்கொள்ள‌

பின்பொரு நாளில்

என் மூட‌ப்ப‌டாத‌ சாள‌ர‌ங்க‌ள் வ‌ழியாக‌

உள்ளே நுழைந்த்துவிட்டாய்

ஒரு பெட்டியைத் திற‌ப்ப‌து போல‌ திற‌ந்துகொண்டு


என் இத‌ய‌ங்க‌ள் வெறும் காலிப்பெட்டிக‌ளால் ஆன‌து...

தேடத் தேடக் கிடைப்பது மீண்டும் காலிப்பெட்டிகள் தான்


அங்க‌ங்கே சித‌றிய‌ சில‌ புத்த‌க‌ங்க‌ள்..

ஒரு குழ‌ந்தையின் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ விளைய‌ட்டு பொம்மை..

ச‌ருகாய்ப்போன் உதிர் பூக்க‌ள்..

வ‌ளைந்து போன‌ பிய‌ர்பாட்டில் மூடிக‌ள்..

முடிக்கப்படாமல் கிடக்கும் ஆயிரமாயிரம் ஓவியங்கள்..

ஆடைகளைத் தேடியபடி அரைநிர்வாணப் பெண்கள்..

நீரூற்றாமல் உலர்ந்துபோன ஒரு ரோஜாச் செடி


எல்லாம் கடந்து...


கவனிக்கப்படாத ஒரு மூலையில்

உனக்கே உனக்காக...


ஒரு சிறிய பூப்போட்ட கைக்குட்டையும்

கசங்கிய காகிதங்களில்

சில காதல் கவிதைகளும்!


***


2.


என் காப்பிக் கோப்பையின்
இறுதிக் கசப்பில்
ஒளிந்திருக்கிறாய்
நீ !


***


3.


குற்றங்கள்

குண்டுவெடிப்புகள்

சைக்கோ கொலைகாரர்கள்

பாலியல் வல்லுறவுகள்

மற்றும் கள்ளவுறவுகள்

அரசியல்வாதிகளின் பாசாங்குகள்

எதிரி நாட்டின் படையெடுப்புகள்

மனித உரிமை மீறல்

புதிதாக பரவும் உயிர்க்கொல்லி நோய்...

என்று எவ்வளவு கடந்தபின்னும்


கடைசி நம்பிக்கையாய்...

மிச்சமிருக்கிறது...


செய்தி வாசிக்கும் பெண்ணின்

கடைசி சிறு புன்னகை!


***


4.


ஒரு சிகரெட்...

பின் ஒரு சிகரெட் பாக்கெட்...

பின் அதுவே ஆஷ்ட்ரே


சாம்பல் நிரப்பி சாம்பல் நிரப்பி

தீர்ந்தது அந்த பாக்கெட்டும்

மீண்டும் அது ஆஷ்ட்ரே


மீண்டும்

சாம்பல் நிரப்பி சாம்பல் நிரப்பி

தீர்ந்தது அந்த பாக்கெட்டும்

மீண்டும் அது ஆஷ்ட்ரே


யோசித்துப் பார்த்தும்

புகை வளையங்கள் மத்தியில்

அகப்படவே இல்லை

முதன்முதலில் உபயோகித்த‌

ஆஷ்ட்ரே எதுவென.


***


5.


ப‌ச்சை

ம‌ஞ்ச‌ள்

சிவ‌ப்பு.


யாருக்கோ சாப்பிட‌க் கொண்டு சென்ற‌

பார்ச‌ல் சாப்பாடு

நெடிஞ்சாலையின் ம‌த்தியில்

சித‌றுண்டு கிட‌க்கிற‌து!


பிச்சைக்காரி கையில்

வாட‌கைக் குழ‌ந்தை

வ‌ர்த்த‌க‌த்தின் சூட்ச‌ம‌ம் அறியாது

மிட்டாய் தின்ற‌ப‌டி சிரித்துக்கொண்டிருக்கிற‌து!


சுகாதார‌ முன்னேற்ற‌த்திற்காய்

இய‌ர் ப‌ட்ஸ் விற்கும் சிறார்க‌ள்

ஏனோ குளித்திருக்க‌கூட‌ இருக்க‌வில்லை!


இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தின் மேல்

முக்காடிட்ட‌ப‌டி அழைத்துவரப்பட்ட‌ பெண்ம‌ணி

ம‌றைக்க‌ப்ப‌ட்ட முகத்தின் சுத‌ந்திர‌த்தில்

உட‌ல்மொழிக‌ள் அர‌ங்கேற்றுகிறாள்


காம‌ம், சைல‌ன்ச‌ரைக் காட்டில் சூடாய் ப‌ற்றி எரிகிற‌து!


தார்சாலையில் வ‌ண்டியிழுக்கும் ந‌க‌ர‌த்து மாடுக‌ள்

கொம்புகளும் வால்க‌ளும் அற்ற‌ ச‌க‌மாடுக‌ளுக்கு

வ‌ழிவிட்டுச் செல்ல‌வும், சாலை விதிக‌ளை ம‌திக்க‌வும்

ப‌ழ‌கிவிட்டிருக்கின்ற‌ன‌!


மீண்டும்

ம‌ஞ்ச‌ள்

ப‌ச்சை


நிக‌ழுல‌க‌த்திலிருந்து மீள்வ‌த‌ற்குள்

"..த்தா" என்ற‌ பொருள்ப‌டும்ப‌டி ஒலிக்கிறது

பின்புறம் நிற்கும் லாரி ஹார‌ன் ஒச்சை!


***


6.


ஆளில்லா தெருவில்

என் கனவுகளின் மூடப்பட்ட அறைகளை

சரிபார்த்தவண்ணம் வருகிறேன்.


ஒவ்வொரு க‌த‌விலும் உண‌ர‌ முடிகிற‌து

கடந்தமுறை பலமாக அறைந்துசாத்திய கைகளின் உறுதி!


நான் ப்ரத்யேக பிடித்தமில்லாத

பாடலொன்றை சத்தமாக கத்தியவண்ணம் இருக்கிறேன்;


அப்படியும்

தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னாலிருந்து

கேட்கத்தான் செய்கிறது -


நிக்கோடின் தின்றது போக

பாக்கியிருக்கும் நுரையீரலில் இருந்து

ஒரு இருமல் சத்தம்


சுரண்டியெடுக்கப்பட்ட கர்பவாசல்களில் இருந்து

இதுவரை வெளிவர முடியாத ஒரு முதல் அழுகுரல்


வெடித்து விடும் படியாக துடிக்கும் இதயத்திலிருந்து

அச்சுறுத்தும் விதமாக ஒரு நீண்ட மௌனம்


விடைபெறும் இரு ம‌ன‌ங்க‌ளின்

மிக‌ நீண்ட‌ கைய‌சைப்பு


விர‌ல்க‌ளின் இடைவெளிக‌ளில் வ‌ழிந்தோடும்

ம‌ற்றுமொரு ஜோடி விர‌ல்க‌ள்


ஓசைக‌ளில் எழும் கேள்விக‌ளை

எதிர்கொள்ள‌ ம‌ன‌ம‌ற்று

வில‌கிச் செல்கிறேன்


ஆளில்லா தெருவில்

என் கனவுகளின் மூடப்பட்ட அறைகளை

சரிபார்த்தவண்ணம்...


***


7.


நெடுஞ்சாலை நெரிசல்கள் மீதும்

மார்க்கெட் இரைச்சல்கள் மத்தியிலும்

சவ ஊர்வலங்கள் மீதும்

பிராத்தணைக் கூட்டங்கள் மீதும்

விமான நிலையங்கள் மீதும்


சலனமற்று

மோனத்துடன் அலையும்


யாராலும் கவனிக்கப்படாமல்,

குப்பைக் காகிதம்.


****


4 கருத்துகள்:

  1. // ஒரு சிகரெட்...

    பின் ஒரு சிகரெட் பாக்கெட்...

    பின் அதுவே ஆஷ்ட்ரே


    அகப்படவே இல்லை

    முதன்முதலில் உபயோகித்த‌

    ஆஷ்ட்ரே எதுவென.//

    எனக்கும் தான் :-))

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. //தேடத் தேடக் கிடைப்பது மீண்டும் காலிப்பெட்டிகள் தான்//

    மிக‌ க‌வ‌ர்ந்த‌து

    க‌விதைக‌ள் எல்லாம் ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து.

    முத‌ல் க‌விதை அருமை

    பதிலளிநீக்கு