இந்த வலைப்பதிவில் தேடு

சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மார்ச், 2017

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே...

” சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே…
பாடகமே என்றனைய பால்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடா நெய்பெய்து முழங்கை வழிவர
கூடியிருந்து குளிர்ந்தேளோர் ரெம்பாவாய் “
ஆண்டாள் பாசுரங்கள் ஒத்திசைவின்றி ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டிருந்தது. 

மார்கழி ஏகதேசம் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை, ஆதலால் பள்ளி சிறார்கள் கோவிலில் சுற்றியமர்ந்து புத்தங்களையும் மைக்கையும் கிடைத்தவாறு பகிர்ந்து பாசுரங்களை உரத்துப் பாடினர். நீலகண்டன் உச்சரிப்பின் பொருள் ஒன்றும் விளங்காது காதில் விழும் சொல்லுக்கான இணையை புத்தக அச்சில் தேடிக்கொண்டிருந்தான். அவன் தோள்வளையே தொட்டுவிடுவதற்குள் மற்றவர்கள் ரெம்பாவாய் கடந்திருப்பார்கள்.
என்றாலும் புதிதாய் தமிழ் படிக்கும் அவனுக்கு அது ஒரு நல்ல பயிற்சியாக்கும் என்று அம்மம்மா அவனுக்கு சொல்லியிருந்தாள். ஆனால் அதை விடவும் சுவாரஸ்யமான முகாந்திரம் நீலகண்டனுக்கு இருந்தது. அது பூஜையின் நிறைவில் தளிர்வாழை இலையில் வழங்கப்படும் பசுநெய்யும், தேங்காய்த் துறுவலும், வறுத்த முந்திரியும் திராட்சையும் கலந்த சூடான பொங்கலும் கரும்பு சர்க்கரையும். அதற்காகவே “சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவார் எப்பாவாய்” வரை வாய் பார்த்து பாடி முடிப்பர். வட்டமாய் கூடியமர்ந்து உண்டு பொங்கல் சூட்டால் ஆன இலைக்கருக்கலை ஒப்பிட்டு விளையாடினர்.. நீலகண்டன் இலையில் தங்கிய வெதுவெதுப்பு நீங்கும் வரை இலையை உள்ளங்கையில் வைத்திருந்து பின் எறிந்துவிட்டு வீடு திரும்புவான்.
ஒதுங்காத சுருட்டை முடியும், ஒத்த வயது சிறார்களைவிட சற்று உயரமும், திரண்ட தேகமும், சற்றே சட்டையிலிருந்து வேளியே துருத்திக் கொண்டுவரும் வெள்ளை தொப்பையும், சந்தனக்கீற்றும் கையில் இளஞ்சூடான பிராசாதமுமாக வரும் நீலகண்டனைக் கண்டால் யார்க்கும் கொஞ்சம் வம்பிழுக்கத் தோன்றும் தான்.
உப்புப்பள்ளம் சிவந்தமண்சாலை கடந்து பீக்காடு கடக்கையில் மூக்கைப்பிடித்து, சுப்பைய கவுண்டர் டீக்கடையைக் கடக்கும் போதுதான் அந்தக் குரல் கேட்டது, “டே! பன்னண்டே முக்கால் மவனே! வாடா இவிடே…! ” ஆணா பெண்ணா என்று வேறுபடுத்த முடியாத ஒரு குரலில் மீண்டும் ஒலித்தது.. “யடா! 12 ¾.. உன்னத்தாண்டா!”.அது தன்னை நோக்கி விளிக்கப்பட்ட குரல் என்று ஒருபோதும் கற்பணை செய்து பார்த்ததில்லை. இங்கு வந்த சிலவருஷத்தில் பல சத்தங்கள் என்ன பொருளென்று அறியாது நீலகண்டன் கடந்து போய் விடுவான். 10 வருடம் முன்பு நீலகண்டனின் அப்பா கிருஷ்ணன்பிள்ளை பட்டாளத்திலிருந்து ஓய்வு பெற்று ஒரு வங்கியில் காவலாளியாக..... (பாதுகாப்பு அதிகாரி என்றுசொல்லாவிட்டால் அவர் கோபித்துக்கொள்வார்) நியமனமாகியிருந்தார். அதுவரை பாலக்காட்டில் குடியிருந்த மொத்தக் குடும்பத்தையும் கோவைக்கு குடிமாற்றினார்.  கிருஷ்ணன்பிள்ளை – மனைவி, மக்கள், இரண்டு அக்காமார், இரண்டு தங்கைமார், நான்கு தம்பிமார், அப்பா, அம்மா என்று 15-20 உருப்படிகள். கிருஷ்ணன்பிள்ளையின் அப்பா பெரும்பாலும் வருடங்கள் வீடுதங்கியதில்லை.  ஆறுமாதம் வீடு ஆறுமாதம் நாடு. அப்படியொரு சுபாவம்.  
கிருஷ்ணன்பிள்ளை பட்டாளத்தில் இருந்த வருஷங்களில் ஊரில் தரவாடு வீடும் பரம்பும் விற்று தன்னதிஷ்டம்போல தின்றுதீர்த்து கடனேற்றி வைத்திருந்தார் அவரது அப்பா. அந்நிலையில் உள்ளதெல்லாம் விற்று பிழைப்புதேடி தமிழ்நாடு வந்தேறிய ஒரு குடும்பம். இருபது பேருக்கான வீடு வாடகைக்கு கிடைக்காமல் ஊர் மூலையில் ஒரு கைவிடப்பட்ட வீட்டோடு சேர்ந்த ஒரு பரம்பை வாங்கினார்.
வசதியான கவுண்டம்மார்களது தோட்டங்களும் அதைச்சுற்றி, அதில் தினக்கூலிக்கும், அடிமைக் கூலிக்கும் இருக்கும் தொழிலாளர் கூட்டங்களும் இருக்கும் இடம். கற்கள் நீக்கி, பரம்புகள் அடித்து, நிலத்தைப் பண்படுத்தி சுய தேவைக்கான தோட்டத்தை அமைத்துக் கொண்டார் கிருஷ்ணன் பிள்ளை. அங்கிருந்த இரு பிரிவுக்கு நடுவே புதிய ஒரு பிரிவாக காணப்பட்டது கிருஷ்ணன்பிள்ளை குடும்பம். மற்றபடி எண்ணிக்கையிலும் குறைந்தவர் ஒன்றும் இல்லை அல்லவா? வங்கிக்கு வேலைக்கு போகின்றார் என்ற அந்தசு இருப்பினும், காட்டில் இறங்கி வேலை பார்ப்பதிலும் சரி பழகுவதிலும் சரி தொழிலாளி முதலாளி வித்தியாசம் இல்லாமல் இணக்கமாக இருந்தார் கிருஷ்ணன்பிள்ளை. வெற்றிலை முறுக்கும் போது யார்கூட இருப்பினும் இரண்டு வெற்றிலை நீட்டுவார். கூலிகள் அவரை “கொணமுள்ளவனாக்கும் மலையாளத்தான்” என்று மெச்சினர். மேலும் இளம் தலைமுறைகளுக்கு ஆர்வமூட்டும் சில சங்கதிகளும் அவர் வீட்டில் இருந்தன. கடை இருபதுகளில் சிவந்த இரண்டு ஆண்பிள்ளைகளும், முன் இருபதுகளில் வடிவான இரண்டு பெண்பிள்ளைகளும் அப்பகுதி இளசுகளை கவரத் தவறவில்லை. கணவன் வீட்டில் இல்லாத நெடும்பகல்வாடை விரட்ட பொதுக்குழாய்களில் பொழுதுபோக்கும் குடும்பஸ்த்ரீகளுக்கும் ஆர்வமில்லாமல் இல்லை. இடை இருபது இருவர்கள் வழியில் எங்கு தென்பட்டாலும் கூட்டமாக சூழ்ந்து அவர்கள் முகம் சிவக்கும் அளவுக்கு ‘அன்புடை’ வார்த்தைகள் பேசுவர் பண்பிலா மகளிர். இவர்களுக்கு பயந்தே பலநாட்கள் தெருவழி தவிர்த்து தோட்ட வழியில் வீடு வந்தடைவார்கள். எல்லா கதைகளும் கேட்டறிந்த (கிருஷ்ணம்பிள்ளையின் மனைவி) ஏட்டத்தி “பொம்பளைக்களுக்க வொரு லெட்சணம்” என்று அலுத்துக் கொள்வாள்.
பொழுது சாய்ந்து இரவு தாழும் நேரத்தில் ஏட்டத்தி வாசலுக்கும் தெருவுக்கும் மத்தியில் சிறிய நிலவிளக்கை பற்றவைப்பாள். கடந்து போகும் சாதரணப்பட்டவர்கள் கோவிலைப்போல கை கூப்பிவிட்டுச் செல்வார்கள். கூடு வந்தடைவதைப்போல கிருஷ்ணம்பிள்ளை வீடு நிறைந்துவிடும். களியோ கருவாட்டுக் குழம்போ, சாதம் புளிக்கரைச்சலோ என்று எல்லா வயிற்றுக்கும் வார்த்துவிட்டு சுவர்கள் சூழ்ந்த வெட்ட வெளியில் இருபது உருப்படிகளும் வரிசையில் கிடந்து உறங்கும். இருந்தும் கேளிக்கைக்கு ஒன்றும் குறைவிருந்ததாகத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்திருந்த வருடம் ஏட்டத்தி நீலகண்டனை கையில் சுமந்து வந்தாள். அடுத்த வருடமே அடுத்தது வயிற்றில் சுமந்தாள். அதே வருடம் கிருஷ்ணம்பிள்ளையின் அம்மையும் கர்பமானாள். வீட்டில் தங்கிவது சிலநாளாக இருந்தாலும் வீட்டிற்கு ஒரு பாரத்தை ஏற்றிவிட்டு தான் இவ்வளவு உருப்படிகள். ஒன்றும் அறியாதது போல் தகப்பன்காரர் தோட்ட வேலையில் மும்முரமாய் இருந்தார். கிருஷ்ணம்பிள்ளைக்கு கோபமும் நாணக்கேடும்! ஒன்றும் சொல்லுவதற்கில்லை! பிரசவம் முடிந்த முதல் வேலையாக லோன் எடுத்து இரண்டு பெண்களுக்கும் கருத்தடை அறுவைசிச்சையும் கையோடு செய்தார். பெரியவரின் காதில் விழுமாறு சலிப்புடன் சொல்லுவார், நீலகண்டனைப் பார்த்து “கேட்டோடா மோனே…நின்னைவிட இளைய பிராயத்தில் ஒரு சித்தப்பன் – கொள்ளாம்!” என்று. தொடர்ந்த கேலிகளில் வெறுப்பாகி சில காலம் பாலக்காட்டிற்கே சென்று தலைமறைவானார் பெரியவர்.
அதன்பின் கடந்த பத்து வருடங்களில் பெரியவர் சன்னியாசியாக திரும்பியதும், இரண்டு பெண்களை கட்டிச்சு கொடுத்ததும், ஒருத்தி திரும்பி வந்ததும், காரணமே அறியாது ஒருத்தி ஜீவஹத்தி செய்ததும், கோவையில் கவுண்டர்கள் காடு கழனிகளைத் தவிர்த்து ஆலைகள் திறக்கவும், மேலும் பல மலையாளக் குடும்பங்கள் மில் வேலைகளுக்காக புலம் பெயர்ந்ததும் எல்லாம் நடந்தது. இதற்கிடையில்   யாருடைய ப்ரத்யேக அக்கரையும் இன்றி நீலகண்டனும் சகோதரர்களும் வயதொத்த சித்தப்பனுமெல்லாம், யாரும் கவனிக்கும் முன்பே வளர்ந்தெழுந்தார்கள். தமிழும் திகழவில்லை, மலையாளமும் மறக்கவில்லை.
தமிழில் பேசும் பல வார்த்தைகளும் வெறும் சப்தங்கள் என கடந்து போய் விடுவான் நீலகண்டன். அது தான் அன்று “12 ¾” என்று கூப்பிட்ட போது அவன் எதுவும் நடக்காதது போல கடந்து போகப் பார்த்தான். ஆனால் மறுநிமிடம் நீலகண்டன் அவன் முன் எதிர்கொண்டது ஒரு விசித்திர ஜந்துவை.
ஆணா பெண்ணா என்று உறுதியாக சொல்ல முடியாத தோற்றம். கழுத்துவரை முடி வெட்டப்பட்டிருந்தது, பொட்டு வைத்திருந்தாள். காதிலும் மூக்கிலும் துளைகள் மூளியாக இருந்தன. காதின் துளையில் ஒரு கருவேப்பிலைக் காம்பை சொருகியிருந்தாள். உதடுகள் வெடித்து கருத்து இருந்தன, வாயின் இரு மூலைகளும் பிளந்து வெள்ளையாக இருந்தன. பற்கள் விலகத்தொடங்கி தெளிவான சந்துகள் உருவாகியிருந்தன. வாயில் பீடி புகைந்து கொண்டு இருந்தது. அஜாக்கிரைதையான ஜாக்கட்டும், சேலை போன்ற ஒன்றை அணிந்திருந்தது மட்டுமே அவள் ஒரு பெண் என்பதற்கான ஒரே அடையாளமாக இருந்தது. நீலகண்டன் கண்கள் சிவந்து உதடுகள் வியர்த்தது. தொண்டையில் வலி உருவாகிக் கொண்டிருந்தது. காரணம் அவனது அரைக்கால் சிராய் வழியாக விரல்களை விட்டு அவன் சாமாணத்தை சேர்த்து பிடித்திருந்தாள் ஆண்டாள். “கூப்பிட்டா வர மாட்ட 12 ¾. கேட்டும் கேக்காத மாதிரி ரெளசா போற? “
பொது இடத்தில் அவன் சாமாணத்தைப் பிடித்தது அவனுக்கு அவனமாக இருந்தது. ஆனால் அவளது பிடி விலக்க முடியாததாக இருந்தது. அவனுக்கு அழுகையாக வந்தது,. பெரியவனானதும் ஒரு நாள் இவளை கத்தியால் குத்திவிடவேண்டும் என்று தீர்மாணித்துக்கொண்டான். ஆவேசமாக “என் பெயர் 12 ¾ இல்லை!” என்றான்.
”வக்காளி பார்றா! ஆம்பள தான்!” – என்றாள். அந்த வயதில் ஆம்பிளை என்ற வார்த்தை, வலிக்கு மத்தியிலும் சற்று கெளரவமாகவே இருந்தது. தனது பிடியில் இருந்து விடுவித்து ‘உன் சித்தப்பனை வரச் சொல்லு…போ! இனி கூப்புட்டா ஒலுக்கமா வந்து குஞ்சபுடிச்சுட்டு சலூட் வெக்கனும்…இல்ல..” – என்று கண்டித்து அனுப்பினாள்.
ஆண்டாள் அவ்வூரில் யாராலும் அறியப்பட்ட பெரும் போக்கிரி. யாவருக்கும் பொதுவான தலைவலி என்று தான் சொல்ல வேண்டும். சுப்பையன் கவுண்டர் டீ ஸ்டால் முன் அமர்ந்து அக்கால இளசுகளிடம் பீடி வாங்கி புகைப்பது, போகும் வரும் பெண்களை கேலி செய்வது, டீக்கடைக்கு வருபவர்களிடம் வம்பு செய்வதும் தான் வாடிக்கை. மற்றபடி பிரதான தொழில் சீட்டாடுவது. உப்புப்பள்ளம் பாலத்திற்கடியில் மணல் பரப்பி நாள் முழுதும் சீட்டாட்டம். சிலசமையம் சாராயம் உண்டு. தோற்றால் ஒரு கட்டு பீடி கடன் வாங்கி சுப்பையன் கடை முன் வந்தமர்வாள். காரணமின்றி காதில் கேட்க ஒண்ணா வார்த்தைகளால் வசை பாடுவாள். பெரும்பாலும் பாடுபொருள் ஆண் மையப்படுத்தி தான் இருக்கும். ‘பாடாண்’ திணையில் சேர்த்துக் கொள்ளலாம். சுப்பையனிடம் கடன் கேட்டால்,  டீ மாஸ்டர் சுடு தண்ணியை ஊற்றுவதாக அச்சுறுத்துவான். உடனே சுப்பையன் பாடு பொருளாக மாறுவான். வியாபார தோஷம் கருதி சுப்பையன் ஒரு கட்டிங்கான காசை தந்து அனுப்புவார். அத்தோடு நிற்க மாட்டாள், மறுநாள் காலையில் “நீ தான கட்டிங் காசு கொடுத்த, தலை வலிக்குது டீ கொடு” என்று ரவுஸு செய்வாள். 
ஒரு வெள்ளிக் கிழமை சுப்பையன் கடைமுன் காலை முதல் வந்திறங்கி முகாமிட்டாள். பிரதி வெள்ளியன்று சுப்பையன் ஒரிக்கல்.  மெளன கடைப்பிடிப்பு. பொதுவாக கடைப்பக்கம் வரமாட்டார்.  ஆனால் ஆண்டாளின் சச்சரவு கட்டுக்கடங்காமல் போனது. காலையில் டீ வாங்க சொம்புடன் வரும் சிறுவர்கள், பெண்களையெல்லாம் துரத்திவிட்டுக் கொண்டிருந்தாள். அவளாது கூச்சல்களுக்கு அங்கிகாரம் கிடைக்காத அங்கலாய்ப்பில் சுப்பையனைத் தாறுமாறாக பேசத் தொடங்கினாள். கடையின் வெளியே ரகசியமாக எல்லோரும் சிரித்து கேலி செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத தருணத்தில் ‘வ்ரூம் வ்ரூம்’ என்ற சப்தம் காற்றில் கேட்டது. சுப்பையன் இரண்டு மூன்று பப்பாளிக் குச்சிகளை சேர்த்தவாறு பிடித்து ஆண்டாள் மீது விளாசினார். சுற்றியிருந்த கூட்டம் விலகி ஓடியது. முதுகில் விழுந்த முதல் அடியின் அதிர்ச்சியில் திரும்ப அடுத்த அடிகள் அவள் முகத்தில் விழுந்தன. விலக எத்தனித்து பெஞ்சுகளில் தடுக்கி விழ நல்ல சவுகரியமாக போய்விட்டது. பப்பாளிக் குச்சிகள் நாராக கிழிந்தன. பெஞ்சின் முலை மோதி ஆண்டாளுக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது. வெறுப்புற்ற சுப்பையன் “தேவிடியா முண்டை நல்ல விதமா நாலு ஊறுசனம் இருக்க விட மாட்டியா” என்று கொதித்தார். ஊரார் சுப்பையனின் கோபத்தைக் கண்டு மிரண்டு நின்றனர்.
”ங்கொம்மால.. கேக்க யாரும் இல்லன்னு போட்டு அடிக்கிறியாடா.. “ பற்களை கடித்தவாறே கலங்கிய தொனியில் கத்தினாள் ஆண்டாள். அவள் அழுகிறாளா என்று சரியாக எவருக்கும் தெரியவில்லை. அவிழுந்து கிடந்த சேலையை சுருட்டிப் பொதிந்து கட்டத் தொடங்கியவாறே அரற்றிக் கொண்டு தெருவில் நடந்து சென்றாள். “பொம்பள மேலையா கைய வெக்கற…உங்கள சும்மா விட மாட்டேண்டா.. உன் கடைய காலி பண்ணாட்டி கேளுடா..! “ என்று புலம்பியபடியே சென்றாள். அன்று முழுக்க சுப்பையன் கடை முற்றம் அமைதியாகவே இருந்தது. வியாபாரம் கூட மந்தம் போட்டதாய் தோன்றியது. ஆண்டாள் போலீசையோ அல்லது ரவுடிகளையோ கூட்டிக் கொண்டு வரக்கூடும் என்று எல்லோரும் நினைத்தனர். மாறாக இரண்டு மூன்று நாட்க அவள் தென்படவே இல்லை. அவளுக்கு என்ன ஆயிற்று என்று யாரும் தேடவும் இல்லை.  ஆண்டாளை அதன்பிறகு பல மாதங்கள் யாரும் பார்க்கவில்லை. ஒரு பெண் யாருமே தேடப்படாதது எவ்வளவு துரதிஷ்டமானது?
உணர்ச்சிவசப்பட்டு அடித்து விட்டாலும் சுப்பையனுக்கு மனசு கேக்கவில்லை, பெண்ணை வேறு அடித்து விட்டோம். இனி கேசு எதாச்சும் கூட்டுவாளோ என்று உள்ளூற பயம் வேறு இருந்தது. இந்த நரைப் பருவத்தில் போலிஸ் டேசனுக்கெல்லாம் போவது உகந்த காரியமா என்று நினைத்த சுப்பையனும் பாலப்பட்டியில் உள்ள தங்கை வீட்டிற்கு ஒரு வாரம் ஒரம்பரை போனார்.
ஆண்டாள் சொன்னது போலவே அவளுக்கு யாரும் இல்லை தானோ என்னவோ. அவளது அண்ணன் அண்ணி எல்லாம் அதே ஊரில் தான் வசித்து வந்ததாக சொன்னார்கள். அவளுக்கு கல்யாணம் கூட ஆகியிருந்தது என்று சொன்னார்கள். அவள் ஊட்டுக்காரனை கத்தியால் குத்தி விட்டதாகவும், அதற்கு 2 வருடம் ஜெயிலில் இருந்து வந்ததாகவும் சொல்லுபவர்கள் உண்டு. அவன் இப்போதும் திருப்பூரில்  வேறு ஊட்டுடன் வசிப்பதாகவும் கேள்வி. வேறு சிலரோ அவள் தோற்றத்தில் பெண்போல இருந்தாலும் அவள் ஆம்பளதான். கல்யாணத்துக்கு பிறகு விஷயம் தெரிந்து தான் மாப்பிள்ளை மறுநாளே ஓடிவிட்டான் என்றனர். எது எப்படியானாலும் யாரும் அவளை குடும்பத்தினராய் ஏற்றுக்கொள்வதில்லை, ஒன்று செத்துக்கிடைத்தால் போதும் என்று தான் நினைத்திருந்தனர் அவள் குடும்பத்தினர். கூட்டு நடப்பதெல்லாம் ஆண் பிள்ளைகளோடுதான். அதில் நீலகண்டனின் சித்தப்பனும் ஒருத்தன்.  சுத்த மலையாளியாக இங்கு மறைந்து நடப்பதை விட தமிழனாக பாவித்து நிமிர்ந்து நடப்பதே கொள்ளாம் என்பது ஹரி சித்தப்பாவின் வாதம். குடும்பங்கள் ஒன்று கூடும் நேரங்களில் சிலப்பொழுது சூடான விவாதங்கள் வரும். நீலகண்டனின்   அப்பா ஊரில் தேர்ந்தெடுத்த மலையாளிகளுடன் மட்டுமே பழக கூடியவர். பஸ்டேண்டு கீதா பேக்கரியில் விக்கும் மாத்ருபூமி பத்தண்ணத்தில் ஒன்று அவருடையதாய் இருக்கும். ஊரில்லாத நாளில் உள்ள பேப்பரையும் சேர்த்து வைத்து வாசித்தாலே அவருக்கு சமாதானம். ஆனால் ஹரி சித்தப்பாவோ ”பஞ்சம் பிழைக்க நாடு எறங்கி வந்தாலும் உங்களுடைய ஒரு பெகுமானம்.. “ என்று சொல்லுவார். அப்பாவோ “சோறு எவட வாங்கி கழிச்சாலும் சொகர மாறத்தில்லா..கேட்டோ!” என்பார். “என்ன தான் நீ தமிழம்மாரோட நடந்தாலும் கடைசியில் உனக்கு தங்கியிருக்கும் பேரு 12 ¾ தான். பின்னே.. ஆணும் பெண்ணும் இல்லாத ஆவலாதிகளோட நடக்குறத விட்டுட்டு வேற ஜோலி உண்டான்னு பாரு.... வளர்ந்த மக்களு வீட்டின் அகத்தோட்டு இருந்தால், ஐஸ்வர்யம் பொறத்தோட்டு போகும்” என்பார்.
இதெல்லாம் கேட்க சகிக்காது சித்தப்பா வீடு வருவதையே குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டார். படிப்பில்லா விட்டாலும் சூது கை கொடுத்தது. ஊர் பையன்கள் “ இந்த 12 ¾.. இவன் ஒரு மாதிரி சரக்கு டோய்” என்று பேசிக்கொண்டனர். விரைவிலேயே ஆண்டாளின் சினேகிதம் கிட்டியது. சீட்டாட்த்தில் எப்பவும் கூட்டாளிகள். ஆண்டாளுக்கு அவன் ராசியான கை. ஆனால் ஹரி நீண்டநாள் அங்கேயே தங்கவில்லை. அவன் ஊர் ஊராக போய் சீட்டாட தொடங்கினார். யாரும் அறியாது எதோவொரு லாட்ஜில் நடக்கும் ஆட்டம்..இடமும் காலமும் மாறி மாறி நடக்கும். ஜெயித்தாலும் தோற்றாலும் அளவில் பெரியது. ஒரு கருக்கல் விடியலக்கு உட்பட்ட நேரத்தில் மொத்தக் காட்டையும் விட்ட கவுண்டர்களும், அதே இரவில் கைவீசி வந்து லட்சாதிபதியாக போனவனும் உண்டு. ஆனால் சீட்டாடி ஜெயித்து விருத்தியானவன் எவனுமில்லை. ஒன்னா மீண்டும் சூதில் விடுவான், இல்லையென்னா தொற்றவன் தட்டிப் பறிப்பான்.
ஆண்டாள் சொல்லுவாள் “அவன் ரத்தத்திலே சூது உண்டுடா..அவன் இங்க இருக்க வேண்டிய ஆளில்ல. அவன், அவன் சீட்ட ஒழுங்கா பாத்து ஆடுனா ஜெயிக்கலாம், ஆனா தோக்காம இருக்கனும்னா அடுத்தவன் சீட்ட அறியனும்”.
ஹரி அப்படித்தான்!!
ஆனால் சூதின் வசீகரமே அது எப்போதும் ஒருவன் வசமே தங்காது என்பது தான். மூலத்துறை சந்தை மைதானம் கூடும் சமயத்தில் விளையாடுவார்கள். கிட்டத்தட்ட பெரியதொரு போட்டி போல நடக்கும். ஆயிரங்களும் லட்சங்களும் கைமாறும். ஹரிக்கு ஆரம்பத்திலிருந்தே இலக்கங்கள் கூடி வரவில்லை. உள்ளங்கை வியர்த்தது. சீட்டுகள் கையிலிருந்து நழுவின. தொடர்ந்து தோற்றது மட்டுமின்றி கடன் வாங்கி ஆடி மீண்டும் தோற்றான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவாகி விடவே ஊரிள் அவனைக் கண்ணோட்டமிட ஆள் இருந்தது. 
தெரு நாய்கள் வீட்டின் நிழல் நகர்ந்துவிட்டது அறியாமல் வெயிலிலே தூங்கிக் கிடக்கும் ஒரு பின் மதியபொழுதில் ஆட்களின் கூச்சலில் உறக்கம் கலைந்தன. அப்போதுதான் கண் அயர்ந்த வீட்டு பெண்கள்ளுக்கு யார் யார் என்பது தெரியாமல் அனைத்தும் அண்ணிய முகமாக தெரிந்தது. ஒற்றை ஆளை மூன்று நான்கு பேர் சேர்ந்து அடிக்க அவன் பிடி விலக்கி வாயில் லுங்கியின் நுணியைக் கடித்தபடி ஓடினான். அது ஹரி என்பது பரிட்சயப்பட்டோர்க்கு அறிந்தது. விரட்டிப் பிடித்து வந்த போது விஷயம் அறிந்து ஊர் பையன்கள் சேர்ந்து கொண்டனர். ஒரு கோஷ்டி சண்டை போல தொணித்த சூழலில், எங்கிருந்து வந்தது என்பதறியாது அதே ஆணும் பெண்ணுமற்ற குரல்! ஆண்டாளுடையது. எவண்டா எங்க பையன அடிச்சது என்று இறங்க எதிரணிகள் எதிர்பாராத இந்த போட்டியை எதிர்கொள்ள அறியாது திணறி…பின் ” யக்கா பேசி தீத்துக்கலாம்.. “ என்று பணிந்தனர். போலீசிடம் போக முடியாத காரணத்தால் விஷயம் அங்கேயே பைசல் செய்யப்பட்டது. ஆண்டாள் சுற்றும் முற்றும் கொஞ்சம் பணம் வசூலித்து க் கொடுத்து ஊரைப்பார்த்து போகச் சொன்னாள். ஹரியிடம் கொஞ்சம் காசு கொடுத்து டாக்டரிடம் அனுப்பி வைத்தாள். மீண்டும் தனது ஆஸ்தான கடை மதில் சுவரில் வந்து அமர்ந்தாள்.
அவள் இவ்வளவு நாள் எங்கு இருந்தாள் என்ன செய்தாள் என்று யாரும் கேட்டுக்கொள்ளவில்லை. அவள் உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. அவள் முடியை கிராப் வெட்டியிருந்தாள் – ஜாக்கெட்டிற்கு பதிலாக ஏதோ பழைய டி-ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தாள்.  அதில் மைக்கல் ஜாக்சனின் படம் போட்டிருந்தது. சேலை முந்தானையை டி-ஷர்ட் மேல் சுற்றியிருந்தது  விசித்திரமாக இருந்தது. அவள் அடிக்கடி ஆங்கிலத்தில் பேசினாள் – பெரும்பாசும் யாரையாவது ‘பேசு’வதற்கு குறிப்பாக அடிக்கடி ‘பாஸ்டர்ட்’ என்பதை ஒரு அடைமொழி போல எல்லோருக்கும் உபயோகித்தாள். அச்சமயயங்களில் சுப்பையன் கடையின் வெளி வராந்தாவில் சிறிய டிவி ஒன்றில் கிரிக்கெட் மேட்ச் ஒளிப்பரப்புவது வழக்கமாகி இருந்தது. மேட்சில் சரியாக பந்து வீசாதவன், டீயில் சர்க்கரை போடாதவன், மினி பஸ்ஸை நிறுத்தாத டிரைவர், ஹாரனை வலுத்து அடிக்கும் தண்ணி லாரிக்காரன், பட்டபகலில் கூடும் தெருநாய்கள் - எல்லாவற்றையும் அவள் திட்டினாள் “ங்கொம்மால பாஸ்டர்ட்” என்று. இவை இருக்க எல்லாரையும் தன்னை ‘டையானா’ என்று அழைக்குமாறு அன்பாக கட்டளை இட்டாள். பையன்கள் அவளை டையானா என்று கூப்பிட்டு கிண்டல் செய்தனர். ஆண்டாள் உள்ளூற சந்தோஷப் பட்டதாகத் தெரிந்தது. அதன் பிந்தைய அவளது பாவம் வெட்கத்தில் வகையைச் சேர்ந்த்ததா என்று அறுதியிட்டு கூற முடியாததாக இருந்தது,
அவள் குன்னூரில் ஏதோ ஒரு எஸ்டேட் பங்களாவில் வேலை பார்த்ததாகவும், துறைமார்கள் நிறைய வந்து போகும் எஸ்டேட் என்பதால் கொஞ்சம் ஆங்கிலத்தையும் ஒப்பேற்றிக் கொண்டாள். கையில் சிறிது பணமும் வைத்திருந்தாள். அவள் வந்திறங்கிய ஒன்றிரண்டு வாரங்கள் சுப்பையன் கடை முற்றம் கலகலத்தது இருந்தது. கோல்டுபில்டர், டீ என்று ஓடிக்கொண்டே இருந்தது - மாலையும் மதியமும் மது. அந்த நேரத்தில் தான் நீலகண்டன் கோவிலில் இருந்து  பாசுரம் பாடி..பொங்கல் தின்று… திரும்பி வருகையில் அந்த ஆணும் பெண்ணுமில்லாத குரலைக் கேட்டான். “டே 12 ¾…!”. அவன் சித்தப்பாவை விசாரித்தாள். ஒரு 50 ரூபாயை அவனிடம் கொடுக்கும்படி சொன்னாள். நல்ல கருப்பு ஐம்பது ரூபாய். காந்தியருகில் இருக்கும் வெள்ளை இடத்தில் வழக்கம்போல கிருக்கல்கள். நீலகண்டன் அதையும் எழுத்துக்கூட்டி படிக்க முயன்றான்.  தோற்றுபோனான்.  
யார் இந்த ஜென்மம். என்னோடு ஏன் பேசுகிறாள். ஐயோ! அவள் கொடுத்த அழுக்கான 50 ரூபாய் வேறு. அதை எறிந்து விடலாமா என்று தோன்றியது. நீலகண்டனுக்கு. ஆனால் வீட்டிற்கான சாலை திரும்பும் வரை ஆண்டாளின் கண்கள் அவனையே பார்ப்பதாக அவனுக்கு தோன்றியது. ஹரி சித்தப்பா பத்து நாட்களுக்கு மேலாக படுத்தபடுக்கை தான். எங்கு எல்லாம் அடிபட்டிருந்தது என்று சரியாக சொல்ல முடியவில்லை. வயிற்றிலும் கழுத்திலும் நல்ல வேதணை. இருமி இருமி துப்பிக்கொண்டிருந்தார். எச்சிலோடு லேசான இரத்தமும் கசிந்தது. கிருஷ்ணன்பிள்ளைக்கு ஆத்திரம் தாங்காது திட்டிக்கொண்டே இருந்தார்.  “உன் உங்க எல்லோருக்கும் வேண்டி உழச்சி உழச்சே சோர வற்றி போச்சு எனக்கு. அவனவன் வயசுல அவனுக்குன்னு ஒரு கவளம் சோறு சம்பாதிக்க ஏல…ஆயுசு முழுக்க ஏட்டன் சோரைய குடிச்சே ஜீவிக்க நினெப்போ…” என்றெல்லாம். ஹரிசித்தப்பாவிற்கு இதெல்லாம் கேட்க சகிக்கவில்லை தான் ஆனால் வெளியே போய் ஒரு பீடி வாங்க கூட எட்டணா இல்லை. அந்த நிலையில் தான் அந்த ஐம்பது ரூபாய் வந்து சேர்ந்தது. அதை படக்கென்று வாங்கி லுங்கியில் ஒளித்து வைத்துக்கொண்டார் சித்தப்பா. 
யாரும் எதிர்பார்த்திருக்காவிடாலும் நீலகண்டனுக்கு தெரிந்திருந்தது. ஹரி சித்தப்பா அடுத்தநாள் வீடுவிட்டிருந்தார். எங்கு போனார் எப்போ வருவார் என்றெல்லாம் யாரும் அறியவில்லை. சரிதான் ஆண்கள் அந்த வீட்டில் அப்படி செய்வது ஒன்றும் புதிதல்லவே.  “பின்ன…அப்பனுக்கு ஒரு வாரிசு வேணமல்லோ…” என்று வீட்டில் எல்லோரும் சலித்துக்கொண்டதோடு சரி. பலமாதங்கள் எந்த செய்தியும் இல்லை, இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும்போது தான் எல்லோருக்கும் அந்த சந்தேகம் வந்தது. ஆனால் யாரும் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை. அடுத்து வந்த வருடங்களில் என்னவெல்லாமோ மாறிப்போனது. ஹரி சித்தப்பா வீட்டைவிட்டு போன சில மாதங்களில் ஆண்டாளை போலீஸ் எதற்காகவோ அரெஸ்ட் செய்து கூட்டிப்போனார்கள். சுப்பையன் கடையில் டீ இரண்டு ரூபாய் ஆனது. முன்போல யாரும் வந்து டீ வாங்கி சொல்வதில்லை. வெளியூர் வேலையாட்கள் மட்டும் டிபன் சாப்பிட வந்தனர். ஆண்டாள் கும்பல் சிதறுண்டு போனது. அதன்பின் அவ்ளை பார்த்ததாக யாரும் சொல்லி கேள்விப்படவில்லை. நீலகண்டன் டவுனில் ஆங்கில பள்ளிக்கு மாறிபோனான். தமிழுக்கு பதிலாக ஹிந்தி படித்தான். கடைசிவரை அவனுக்கு தமிழ் கைகூடவில்லை. இப்போதும் அவன் நினைப்பதுண்டு, அந்த கறுத்த ஐம்பது ரூபாய் நோட்டில் என்ன எழுதியிருந்தது என்று படிக்க முடிந்திருந்தால் தன் ஹரி சித்தப்பாவைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று! 

* * *

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தூதுவன் (அ) கடைசி கடிதம்



ஒரு உரையாடலைப் போல மாறி மாறி கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி சத்தத்திற்கு நடுவில் ஒரு

சிப்பாய் ஊழியன் மிக்கையேலிடம் ஏதோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான்.

"நான் தலைமையகத்திலிருந்து வருகிறேன்"

"அதற்கு? இந்த துப்பாகியை கீழே வைத்துவிட்டு உனக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா?"

ஊழியன் நிலைகுத்தி அவனையே பார்த்து புன்னகைத்தான்.

"நீ ஜெனரலை பார்ப்பதற்கு கேட்டிருந்த அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது"

ஒரு நொடி அவனை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு "எப்போது" என்று அவனைப் பார்க்காதவாறு கேட்டான்.

"ஞாயிற்றுக்கிழமை"

"சரி ஆகட்டும்"

§§§

தைரியமாக காட்டிக்கொண்ட போதிலும் உள்ளுக்குள் பதட்டமாகவே உணர்ந்தான் மிக்கையேல். ஏனெனில் தெற்கு, வடக்கு என்று இரு பிரிவுகளாக பிரிந்திருந்த ராணுவப் படையில், தெற்குப் பகுதி முகாம்களில் நடக்கும் மோசடிகளையும், ஊழல்களையும், மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்து தலைமையகத்திற்கு தெரிவித்தவண்ணம் இருந்தான் அவன். ஆனால் இப்படிப்பட்ட ராணுவ சூழலில் சந்தேகத்திற்குரியது போல் சின்னதாக கம்யூனிச சிந்தனைகள் வேர்விடுவது தெரிந்தால் கூட அது உயிருக்கே ஆபத்தாக வந்து சேரும் என்பதை அறிந்தே இருந்தான். இதற்கு முன் அவனைப்போல் அதிகப்பிரசங்கித்தனமாக செயல்பட்ட சில அதிகாரிக ளையும் தண்டிக்கத் தவறியதில்லை அந்த சர்வாதிகார அயோக்கியப் பயல்கள். எனினும் நிலைமை இப்போது கட்டுக்கடங்காமல் போய்விட்டது. ராணுவத்திற்குள்ளாகவே கொள்கை முரண்பாடுகள், பிரிவினைவாதமும் எதற்காக சண்டையிடுகிறோம் என்ற நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கியது. நாளுக்கு நாள் அதிகமாகும் அதிகார மோதல்கள் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்து வந்தது. அதனால் தான் மிக்கையேல் இந்த முடிவுக்கு வந்திருந்தான். அப்போது அமைந்திருந்த நம்பத்தகுந்த தலைமைக்கு தொடர்ந்து கடிதங்களும் எழுதி வந்தான். ஆனால் இப்போது அதிகார விஸ்தரிப்புக்குப் பிறகு நடந்த இடமாற்றங்கள், பதவி மாற்றங்களுக்குப் பிறகு இந்த கடிதங்கள் தூசு தட்டி எடுக்கப்படுவது தான் மிக்கையேலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கிழக்கு முகாமில் பலத்த போர் நடக்கிறது. படைகள் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள். வடக்கு எல்லையில் மறைமுகமாக தாக்குதல்கள் நடக்கும் போதிலும் எந்த நிமிடமும் பகிரங்கமாக‌ போர் தொடங்கும் அபாயம் இருக்கிறது. இந்த நிலைமையில் தலைமையகத்திலிருந்து வந்த இச்செய்தி ஒரு கெட்ட சகுனத்தைப் போலவே இருந்தது!

§§§


ஞாயிற்றுக்கிழமை.

அன்று எந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை போலவே மிக சாதாரணமாகவே விடிந்தது. காலை உடற்பயிற்சி, பரேட், காலை உணவு முடிந்து அனுமதிசீட்டுபெற்று தலைமையகம் நோக்கி புறப்பட்டான். தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்பை எண்ணி திருப்தி ஏற்பட்டாலும் தனக்கே அது எதிராகவும் அமைந்துவிடும் வாய்ப்பிருப்பதை எண்ணும் போது அது திகிலளிப்பதாகவே இருந்தது. எப்படி இருப்பினும் ஜெனரலைப் பார்ப்பதே பெரிய விஷயம் தான். இங்கு எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்?. இங்கு யாருக்காக, எதற்காக சண்டையிடுகிறோம் என்பது கூட தெரியாமல் இருப்பவர்கள் எத்தனைபேர்? என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கையில் வெயில் மேலேறத் துவங்கியிருந்தது.

தலைமையகத்தை அடைந்தபோது சூரியன் உச்சியில் இருந்தது. அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருப்பதாகத் தோன்றியது. ஒருவேளை தெற்கு மூலையில் உள்ள சிறிய முகாம்கள் பற்றிய முன்னுதாரண‌ம் காரண‌மாக இப்படி தோன்றியும் இருக்கலாம்.

காத்திருப்பு அறையில் சில நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அங்கு நிலவிய அசாத்திய அமைதியும், எல்லா இடங்களிலும் வெளிப்பட்ட நேர்த்தியும், அப்பழுகில்லாத சுத்தமும் அதிகார குணாம்சம் கொண்டதாகவும் மிக‌வும் அசௌக‌ரிய‌மான‌தாகவும் இருந்தது. மாலை ப‌ணி நேர‌ங்க‌ளுக்குப் பிற‌கு பெரிய‌ க‌த‌வுக‌ளின் பின்னால் சாத்தப்படும் இந்த அறைக‌ளின் த‌னிமையை நினைத்து வருத்தப்பட்டான் மிக்கையேல்.

தனக்கு முன்னதாக‌ ஜெனரலை சந்திக்க நம்பர் வரிசையில் ஆட்கள் காத்திருந்தனர். ஜெனரலின் அறைக்குச்செல்லும் வழி சிவப்பு கம்பள‌ங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரு புறமும் தங்க முலாம் பூசிய ஜாடிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. ஜெனரலின் அறை திறந்து திறந்து மூடியவண்ண‌ம் இருந்தது. அதனுள்ளே அங்கிகள் அணிந்த சில உடல்கள் நகர்வதும் கையசைத்துக் கொள்வதுமாக தெரிந்தது. சுமார் ஒருமணி நேரம் வரை காத்திருந்தாயிற்று. ஜெனரல் மாளிகை எவ்வளவு அலுப்பூட்டுவதாக இருக்கிறது என்று நொந்துகொண்டான் மிக்கையேல். வேலையாட்கள் வெண்ணிற கோப்பைகளில் தேநீர் கொண்டு தந்தனர். அதிலுள்ள‌ அழகிய பூ வேலைப்பாடுகளை ரசித்தவண்ணம் டீ அருந்தினான். பீங்கான் கப்பும் சாசரும் முட்டிக்கொள்ளும் போது எழுப்பும் சப்தம் அந்த அமைதியில் பேரோசையாக ஒலித்தது சங்கடத்தை ஏற்படுத்தியது. சாசரையும் கப்பையும் விலக்கி வைத்தே குடித்தான். இப்படிப்பட்ட பீங்கான் கோப்பைகளையும் சாசர்களையும் தெற்கு முகாம்களில் கண்டதே இல்லை. தினமும் கேண்டீனில் காலி ரம் பாட்டில்களில் டீ குடித்து பழகிவிட்டது. இதையும் பழகிக்கொள்ள வேண்டும். நாளையே எல்லா சச்சரவுகளும் முடிந்துவிட்டு அரசியல் தீர்வு ஏற்பட்டு விட்டால், பின் ஏதோ ஒரு சிறிய வணிகம் செய்து ஒரு பணிப்பையனையும் வேலைக்கு வைத்து, வருகிறவர்களுக்கு பீங்கான் கப்‍களில் டீ கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இதற்கிடையில் மிக்கையேலின் நம்பர் விளிக்கப்பட, அவசரமாக தேநீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, சற்று சத்தம் எழும்புமாறே சாசரை வைத்துவிட்டு விரைந்தான்.

அச்சமயம் பெரும் சப்தத்தோடு வந்து இறங்கிய காராவேன் அங்கிருந்த‌ பேரமைதியை உடைத்தது. ஒரு ஆஃபீசர் குழு உரத்த பூட் ஓசைகளை எழுப்பியபடி வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து சில ஸ்டேம்பிங் ஓசையும் கேட்கவே தானும் எழுந்து அனிச்சையாக காலை உயர்த்தி அடித்து சல்யூட் வைத்தான். தொடர்ந்து ஒரு அறைகளில் இருந்து மறு அறைக்கு மாறி மாறி சிலர் நடந்தது, எதிர்கொள்ளும் தினவேலைகாரர்கள் மீது காரமின்றி வசை கூட்டியது, தொடர்ந்து ஒலிக்கப்பட்ட தந்தியின் சப்தம் எல்லாமே ஏதோ ஒரு அதிமுக்கியமான அவசரகதியை உணர்த்தியது. இதற்கிடையில் தான் அழைக்கப்பட்ட காரணம் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று யோசித்துக்கொண்டே ஜெனரல் அறையினுள் நுழைந்தான்.


அவ்வளவு ஆபீசர்களின் மத்தியிலும் ஜெனரல் துல்லியமாக அவர்களிலிருந்து தனித்துக் காண‌ப்பட்டார். புகைப்படங்களில் கண்டதைக் காட்டிலும் பொலிவுடனும், சற்று தடிமனாகவும் தான் தெரிந்தார். அவரது கண்பார்வை அவன் மீது படுவதற்காய் சற்று இடம் மாறி இடம் மாறி நின்று பார்த்தான். முடிவாக அவனைப் பார்த்துவிட்டார்!. பெருமிதத்துடன் ஒரு சல்யூட் வைத்தான். அவரும் அதை ஏற்றுக்கொள்ளுவதாக பாவனை செய்தார். தான் கிழக்கு முகாமிலிருந்து வருவதாக சொல்லவந்தான். 'எல்லாம் தெரியும்' என்பதாக தலையசைத்தார். ’உங்களைப் போன்ற உண்மையான வீரர்கள் தான் நமது பலம். உங்கள் கடிதங்களை பரிசீலணை செய்ய தான் உங்களை வரச்செய்தேன்.." என்று சொல்லும் போது அவரது காரியதரிசி அவரது காதை கடன்வாங்கி ஏதொ சொன்னான். மீண்டும் அவர் "...ஆனால் அதற்கு முன்பு நீங்கள் ஆற்ற வேண்டிய இன்னும் ஒரு பணி பாக்கி உள்ளது' என்று ஒருவாறு பார்த்தார். ராணுவத்தில் பெரும் அதிகாரிகளுடன் உரையாடும் போது சொல்ல வேண்டிய ஒரே வார்த்தை 'சரி' என்பது மட்டும் தான். வேறு எதையும் சொல்லவோ அதை அவர்கள் கேட்கவோ யவரும் விரும்புவது இல்லை.

"உத்தரவு" என்று பதில் அளித்தான்.

காரியதரிசி அளித்த ஒரு சீல் செய்யப்பட்ட சிவப்பு நிற தபால் உரையை மிக்கையேலிடம் கைமாற்றினார். ஜெனரல் “இந்த கடிதத்தை வடக்கு முகாமில் உடனடியாக சேர்பிக்க வேண்டும். உடனே கிளம்புங்கள். மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி நகரத் தொடங்கினார். ஜெனரலற்ற அறையில் நானும் காரியதரிசியும் மட்டும் நின்றிருந்தோம். அவர் என்னுடன் மற்றுமொரு சிப்பாய் வருவதாகவும். அவன் வடக்குநோக்கு பாதைகளை நன்கு அறிந்தவன் என்றும் சொன்னார். "அப்படியானால் அதை அவனை வைத்தே சேர்பித்திருக்கலாமே?' என்று அவனுக்கு கேட்கத் தோன்றியது தான். ஆனால் மிக்கையேல் எதையும் கேட்கவில்லை.


அந்த கடிதத்தை வடக்கு போர் மையத்தில் சேர்க்கச் சொல்லியிருந்தார்கள். ஒருவனை வடக்கு நோக்கி பயனிக்கச் சொல்லும் முன்பு தனது வீட்டினருக்கு தொலைபேசுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். இந்த முட்டாள்தனமாக பழமையான வழக்கங்கள் மிக்கையேலுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. வடக்கு மையத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலும் அதுவே தமது வீட்டாருடன் பேசுவது கடைசிமுறையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. இந்த கட்டாயகரமான அன்புகாட்டுதல் எரிச்சலூட்டுவதாக இருந்தது. அவன் யாருக்கும் தொலைபேசவில்லை. அப்படி பேச யாரும் இல்லை என்பது தான் உண்மை. ஒருவேளை ரோசம்மா திருமணம் செய்ய ஒப்புக்கொண்டிருந்தால் அவளுடன் பேச விருப்பப்பட்டிருக்கலாம். இப்போது அவள் அவளுடைய கடைமுதலாளி கணவனுடன் உல்லாசமாக இருக்கக்கூடும். அவன் திருமணமாகி முதல் ஒரு வருட காலமெல்லாம் மதிய உணவு இடைவேளைகளில் கூட இடைவிடாது புணர்வதாக கடந்தமுறை சொன்னாள். இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிரு ந்தவன் சட்டென ஒரு கனவிலிருந்து எழுபவன் போல‌ “நானொன்றும் சிவிலியன் கிடையாதே? இவ்வாறு கனவு கண்டுகொண்டிருந்தால் எவனாவது புட்டத்தில் குண்டு பாய்ச்சிவிட்டுப் போய்விடுவான்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.


வடக்கு மையத்திற்குப் போகும் பாதை செங்குத்தானது. எதிரிகள் எப்படியோ பனிக்காலங்களில் ஊடுறுவி அதன் உச்சியிலுள்ள நமது எல்லையை ஆக்கிரமித்துவிட்டார்கள். கடந்த 2 ஆண்டுகளில் ராணுவம் சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று 75 சதமான நிலங்களை மீட்டெடுத்துவிட்டது. மிக சமீபத்தில் நம் படை முன்னேறிய இடத்திற்குதான் இதைக் கொண்டு சேர்பிக்க வேண்டும். எதிரிகளின் ஊடுறுவல் முழுதாக அடங்கிவிட்டதாக சொல்ல இயலாது. போர் முற்றிய சம‌யத்தில் பல எதிரிப் போராளிகள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டனர். மறைந்திருந்து அவ்வப்போது தாக்குதல் நடந்தவண்ணமே இருக்கிறது. ஆதலால் கிரேனைட் தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடுகளும் இருந்தவண்ணமே தான் இருக்கிறது. முறைப்படி போர்செய்ய‌ அனுமதி இல்லாததால் ராணுவர்களும் மறைந்திருந்த தாக்குதல்கலையே மேற்கொள்கிறார்கள். இவ்வாறு நேரும் மரண‌ங்கள் கணக்கில் வருவதில்லை. இதர உயிரிழபுக்கள், விபத்துகள், உடல்நல கோளாறு, எதிரிகளால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் என்று வருடந்தோறும் கண‌க்கு காட்டப்பட்டனர். மேலே முன்னேறிய படைகள் சும்மா இருக்க மாட்டாமல் போராளிகள் என்று சந்தேகித்து அங்கு வாழும் குடியானவர்கள் வீடுகளில் பல அட்டூழியங்கள் நிகழ்த்தியிருந்ததால் அப்பகுதியின் பழங்குடியினரும் ஆபத்து தோற்றுவிப்பவர்களாகவே இருந்தார்கள். ஆடு மேய்க்கும் ஒரு சிற்வன் மூலமாகவோ, அல்லது தண்ணீர் எடுத்துச் செல்லும் ஒரு மெலிந்த பெண்மணி மூலமாகவோ ஒரு சாதாரண குடியானவன் போல காட்சியளிப்பவன் மூலம் கூட எதிர்பாராத ஆபத்து ஏற்படும் என்பதால் வடக்கு முகாம் நோக்கி பயனப்படுதல் சிரமமானதாக கருதப்பட்டது. மொத்தத்தில் வடக்கு நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக்க ஆபத்தும் அதிர்ச்சியும் நிறைந்ததாகவே இருக்கும் என்று தெரியவந்தது.


மிக்கையேலுடன் அனுப்பப்பட்டவன் பல நேரம் யார்யாருடனோ தொலைப் பேசிவிட்டு வந்து சேர்ந்தான். அவன் மிகவும் மெலிந்தவனாக இருந்தான். பார்த்த மத்திரத்திலேயே அவன் அதிகம் பேசுபவனாகத் தெரிந்தான். "நீ யாருடனும் பேசவில்லை?" என்ற அவனது கேள்வி மிகவும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. மிக்கயேலிடமிருந்து "இல்லை" என்று மட்டும் பதில் வந்தது.

அவர்கள் சென்ற‌ வாகனம் மிக குறைந்த சத்தத்தில் மிக வேகமாகவும் சென்றுகொண்டிருந்தது. வழியெங்கும் ராணுவப் படையின் கொட்டாரங்களே காணப்பட்டன. சுமார் ஒருமணிநேரம் கடந்திருக்கும். மிக்கையேல் மற்றவனுடன் எதையும் பேசிக்கொள்ளவில்லை. எதற்காக தன்னை இவனுடன் அனுப்ப வேண்டும். அதுவும் வெறும் ஏதோ ஒரு கடிதத்தை யாருக்கோ கொடுப்பதற்காக, அதுவும் பாதுகாப்பற்ற இந்த வழியில். ராணுவத்தில் மரணமடைவது பெருமைக்குரிய விஷ‌யம் தான். ஆனால் அதற்காக ஒரு அலுவலக பணியின் பொருட்டாக மரண‌மடைவது எப்படி மரியாதைக்குரிய செயலாகும். களத்தில் மரிப்பதைத் தானே ஒவ்வொறு பட்டாளத்தானும் விரும்புவான்? இவ்வாறு தனியே மாட்டிக்கொள்பவர்களை பெரும்பாலும் கொல்வதைவிட வளைத்துப் பிடித்து கைது செய்வதற்கே வாய்ப்பு அதிகம் உள்ள‌து. கிடைக்கும் எதிரிகளின் பிணத்தைக்கூட அவர்கள் சும்மா விடுவதிலை...உயிருடன் கிடைத்தால் சொல்லவா வேண்டும்?. அவ்வாறு மாட்டிகொள்வதைக்காட்டில் மரித்து விடுவதே நல்லது என்று எண்ணிக்கொண்டே வந்தான் மிக்கையேல். அப்படி யாரேனும் ஒருவர் மாட்டிக்கொள்ளும் சூழலில் தாமே மற்றொருவரை சுட்டுக்கொன்றுவிடும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். தன் கையால் மற்றவனோ, அல்லது அவன் கையால் தானோ சாவதற்கான சாத்தியம் இருப்பதை எண்ணுவது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.


சீரான தார்சாலைகள் கடந்து, மண்சாலைகளும் கடந்து ஆங்காங்கே மரங்கள் தென்பட ஆரம்பித்திருந்தன. அவற்றில் சில தற்போது தான் வெட்டியது போன்று பச்சைதேகத்தைக் காட்டியபடி நின்றுகொண்டிருந்தன. எதிரிகள் ஒருவேளை கொட்டகைகள் அமைப்பதற்காக வெட்டிச் சென்றிருக்கலாம். மற்றவன், அவ்வாறு இருக்காது என்று மறுத்தான். ஏதேனும் காட்டு யானைகளின் வேலையாக இருக்கலாம் என்றான். மிக்கையேல் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தியபடியே வந்துகொண்டிருந்தான். மற்றவன் கிழக்கு மையத்தில் நிலவி வரும் அரசியல்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். தொடர்ந்து அதைப்பற்றி பேச எனக்கு விருப்பமில்லை என்ற போதிலும், மேலும் அதைப் பற்றி பேசுமாறு வலியுறுத்தினான். தலைமைக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் தலைமையகத்திற்கு விசாரனைக்கு கூப்பிட்ட பிறகு அவர்கள் மையத்திற்கு திரும்பவே இல்லை. சிலர் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுவிட்டதாக சொன்னாலும், அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று யாருக்கும் சரியாக தெரியவில்லை. மற்றவன் 'அவர்களுக்கெல்லாம் என்னவாகி இருக்கும் என்று எண்ணுகிறாய்?' என்று ஒரு கள்ளத்தனமான சிரிப்புடன் கேட்டான். அதன் அர்த்தங்களை யூகிப்பது பெரும் பயங்கரமாக இருந்தது. இவனும் புல்லுறுவி கும்பலைச் சேர்ந்தவனாக இருப்பான் என்பது போல இருந்தது அவனது பேச்சுக்களும் நடத்தைகளும்.


ம‌ண்சாலையோரங்களில் மரங்களின் நெருக்கம் கூடிக்கொண்டே வந்தது. வெயிலின் வெப்பத்தினால் பச்சிலைகள் ஆவியாகி புழுக்கத்தை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட இடைவெளியே இல்லாத அளவுக்கு மரங்களின் அடர்த்தி கூடிவிட்டிருந்தது. வண்டியின் ஹெட்லைட்டின் அவசியம் இருந்த போதும், அவன் போடவேண்டாமென மறுத்துவிட்டான். தூரத்தில் ஒளிந்திருபவர்கள் கூட நமது ஹெட்லைட் ஒளியை வைத்து நம்மை துல்லியமாக தாக்கிவிடக் கூடும் என்று எண்ணினான். ஒளியற்ற பாதையிலேயே வண்டி தடுமாறி போய்க் கொண்டிருந்தது. இந்த பாதையைத் தான் வேகமாக கடக்க முடியும், ஏனெனில் சுற்றிலும் உள்ள மரங்களின் மறைவில் மற்றவர்கள் கண்ணில் படாமல் போய்விடலாம். மரங்கள் விலகிப் போகத் தொடங்கினால் எதிரிகள் பார்க்க நேரிடலாம். அவர்கள் குறி சரியாக இருப்பின் கண்டிப்பாக தாக்கப்படுவது உறுதி. கரடுமுரடான பாதையில் ஒரு குடிகாரனைப் போன்ற அசைவில் சென்றுகொண்டிருந்தது வாகனம். சுமார் ஒரு 40 நிமிடம் இருக்கும், கிட்டத்தட்ட முன்னைவிட இரண்டு மடங்கு தூரத்தைக் கடந்திருந்தார்கள். சற்றுநேரம் ஓய்விற்காக வண்டியை நிறுத்தினான். அடுத்து இனி மையத்தில் தான் நின்றாக வேண்டும். இனி வருவது இடைவெளி மிகுந்த பாதை, புதர்களின் மறைவில் நின்று கவனித்து தான் செல்ல வேண்டும். வடக்கு பிரந்தியங்களில் தாக்குதல் இல்லை என்று அரசியல் ரீதியாக தெரிவித்தாலும் கொரில்லாத்தனமாக அவர்கள் தாக்கிக்கொண்டே தான் இருக்கிறார்கள், இந்த மடையன்மார்க ள் ஜனரஞ்சகமாக போர் அறிவிப்பு செய்தால்தான் என்ன‌, என்று தன் வெறுப்பைத் தெரிவித்தான் மிக்கையேல். “அப்போது காட்டுவோம் இவர்களுக்கு நாம் யாரென்று, இந்த பிராந்திய பெண்களும் அறியவேண்டும் தங்கள் சூரப்புலிகள் அவர்களை எப்போதும் காப்பாற்றிவைக்க முடியாது என்று”, என்றான் மற்றவன். “அதற்கு அவசியமிருக்காது” என்று சொல்லிவைத்தான் மிக்கையேல். அவன் சொன்னதன் பொருள் இன்னதென்று புரியாமல் மிக்கையேலை முறைக்கலானான் மற்றவன்.


ஒரு குவளைத் தண்ணீரை இருவரும் பகிர்ந்து கொண்டனர். கடிதம் மிக்கையேலின் சட்டையின் உள்பாக்கெட்டில் இருந்தது. கடிதம் தண்ணீரில் நனையாது இருப்பதற்காக அதை கால்சராய்க்கு மாற்றினான். அந்த கடிதம் தாங்கியுள்ள மர்மத்தை அவிழ்த்துவிட வேண்டுமென்று தீராத வேட்கை உண்டாகிக்கொண்டே இருந்தது. அது முற்றிலும் தவறான செயல்தான் என்றபோதும் இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற அரசியல் சூழலில் அதைத் தெரிந்துகொள்வது மிக்கையேலுக்கு ஞாயமாகவே பட்டது. கிழக்கு முகாம்களில் இப்படி நிலவும் முக்கிய கடிதங்கள் எப்படியும் வாசிக்கப்பட்டுவிடும். மீண்டும் அதை பிரித்துப் படித்ததற்கான சுவடே இல்லாமல் மடித்து வைக்கவும், அழிந்துசென்ற முத்திரை தெரியாமல் வரைந்துவிடவும் கற்றுத்தேர்ந்திருந்தார்கள். ஏதேனும் சிறிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்கூட போதும் அந்தக் கடிதத்தை எப்படியாவது படித்து விடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் மற்றவனோ எந்த நேரமும் தன் அருகாமையிலே நிழலைப்போல ஒட்டிக்கொண்டிருந்ததால் அதற்கு வாய்ப்பு ஏற்படாமலே இருந்தது. ஓரிரு முறை புதர்களிடையே நின்று சென்றபோதும் போதுமான சந்தர்ப்பம் அமையாமல் போனது. ஒரு வேளை இத்தகைய நெருக்கடியை ஏற்படுத்த வேண்டிதான் இரண்டுபேராக‌ அனுப்பி இருக்கிறார்களோ என்னவோ? என்று மிக்கையேலுக்குத் தோன்றியது. அக்கடிததை பிரித்துப் படிக்க தன்க்கு இருக்கும் தவிப்பைப் போலன்றி மற்றவன் சிரிதும் சலனமற்று காணப்பட்டான். ஒருவேளை கடிதத்தில் என்ன இருக்கின்றது என்ற தகவல் அவனுக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டது!.


இன்னும் 15 மைல்களே கடக்க வேண்டியிருந்தது. ஆனால் இதுவரைக் கடந்த தூரத்தைக்காட்டில் இது அபாயகரமாக இருக்கும் என்பதற்கான அறிகிறிகள் காணப்பட்டது. முற்றிலும் மரங்களே இல்லாத வெட்டவெளிகளாகவும், மனித மற்றும் ராணுவ வாகணங்களின் நடமாட்டம் அதிககமாக இருப்பதும் கண்ணுக்கு புலனானது. இந்த் அசொற்ப தூரத்தைக் கடப்பது வாழ்வா சாவா பிரச்சனையாக இருக்கும் என்றே தோன்றியது. மிக்கையேலுக்கு சுபமான முடிவு எதுவும் கண்களுக்கு தெரியவில்லை. அதுவரை இயல்பாக இருந்து வந்த கூட்டுகாரனும் சற்று கலவரமடந்து தான் போனான். மிக வெகு தூரங்களில் துப்பாக்கிகளின் எதிரொலிகளைப் போல சத்தங்கள் கேட்க்கத் துவங்கின. மிக்கையேலும் அவனது கூட்டாளியும் தங்களது வ்யூகத்தை தீர்மாணித்து விட்டவர்களைப் போல கிளம்பினார்கள். கையிலிருந்த வழிகாட்டி பயனளிப்பதாக இல்லை. அதில் குறித்துள்ளதைக் காட்டில் அந்த வழிகள் மிக வித்தியாசமானதாக இருந்தன. இருந்தும் போக வேண்டிய இடம் இதுவென்பது தெளிவாக தெரிந்திருந்தது. அவர்களது வண்டி தறிகெட்டு வளைந்தோடி அடுத்தடுத்து இருந்த மறைவான புதர்களில் நின்று நின்று சென்றது. வண்டி நிற்கும் நேரத்தில் அவர்களை நோக்கி தாக்குதல்கள் நடக்கத் துவங்கின.


முதல் குண்டு அவர்கள் கடந்துவந்த திசையிலிருந்து வந்தது. மிக்கையேல் துப்பாக்கியை சரியாக பொருத்திக்கொண்டான். மற்றவன் சற்றே அதிர்ச்சி அடைந்தது போல் வண்டியின் போக்கை தவறவிட்டான். அவனை அமைதியாக ஓட்டச்சொல்லி எதிர் தாக்குதலை மேற்கொண்டான். மூன்றுபேர் தாக்குவதாக தெரிந்தது. வண்டி நிலைகொள்ளாமல் சென்றது அவர்கள் குறியை தப்பச்செய்தது, ஆனால் அது மிக்கையேலின் குறியை எவ்வாறும் பாதிக்கவில்லை. மூன்றில் ஒரு பக்கத்திலிருந்து குண்டுவருவது நின்று போனது. அவன் செத்திருக்கக்கூடும், அல்லது காயம் பட்டிருக்கலாம். தூரத்தில் ஒரு புதர் தென்பட்டதைப் போலிருந்தது. அங்கு விரைந்து சென்றுவிட்டால் இம்மூவரிலிருந்து வெகுதூரம் சென்றுவிடலாம், என்று மற்றவனை விரட்டினான். ஆனால் எதிரிகளின் வ்யூகம் வேறுவிதமாக செயல்பட்டது. ஆவர்கள் மிக்கையேலைத் தாக்குவதை நிறுத்தி வண்டி ஓட்டுபவன் மீது கவனம் கொண்டார்கள். மிக்கையேல் மற்றவனை எச்சரிப்பதற்குள் பாய்ந்து வந்த ஒரு தோட்டா அவனது விலாவை பதம் பார்த்தது. அந்த நிமிடமே வாகனம் அவன் கட்டுப்பாடிலிருந்து விலகிப் போனது. வேறு வழியின்றி அவனைத் தள்ளிவிட்டு, ஒருவாறு வாகனத்தை தனது பிடியில் கொண்டுவந்தான் மிக்கையேல். விரைந்து வெகுதூரம் கடந்து அடுத்த புதரை நோக்கி பயனித்தபோது, தோட்டா தெரிக்கும் சத்தங்கள் முதுகுக்கு பின்னால் ஒலித்தன.


புதரை வந்தடைந்தார்கள்!. மற்றவன் எந்த முனங்கலுமற்றுக் கிடந்தான். மிக்கையேல் சட்டையை விலக்கி பார்த்தபோது எக்கச்சக்கமாக இரத்தம் வழிந்திருந்தது. அவனது நினைவு தப்பிக்கொண்டிருந்தது. இவன் விளிப்பதை அவன் உண்ர்ந்ததாகத் தெரியவில்லை. கண்கள் சொருகிக்கொண்டு சென்றன. தோட்டா நுரையீரலை சென்றடைந்திருந்தால் அவன் இன்னும் முப்பது நிமிடம் தாங்குவதே சிரமம். உடனே கிளம்பி அதிவிரைவாக வண்டியை செலுத்தனால் கூட முப்பது நிமிடத்தில் சென்றடைவது கஷ்டம் தான். யோசித்து நேரத்தை வீணடிக்காமல் வண்டியைக் கிளப்பலாம் என்று நினைத்த அந்நேரம், அந்த எண்ணம் மீண்டும் உதையமானது!

.


“இந்த இரகசிய கடிதத்தினுள் என்ன இருக்கிறது? படித்துப் பார்த்துவிடலாமா? நான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இது தானே? இதை தவற விடலாமா?” என்பது தான் அந்த எண்ணம். மற்றவனோ உயிருக்குத் துடித்துக்கொண்டிருக்கிறான், இப்போது களையும் ஒவ்வொரு நேரமும் அவது உயிருக்கு ஆபத்தானது. இருப்பினும்...

இருப்பினும்…அக்கடிதத்தை ஏற்கனவே பிரிக்கத்துவங்கியிருந்தான். பிர‌த்யேகமான மையினால் அந்த தபால் சீல் செய்யப்பட்டிருந்தது அந்த கடிதம். அடுத்த தாக்குதல்கள் வருவதற்கு முன் புறப்பட வேண்டும் என்ற அவசரத்துடனும், கிழிந்துவிடாமலிருக்க வேண்டி லாவகமாகவும் பிரிக்கப்பட்ட உறையிலிருந்து மடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காகிதத்தை பிரித்த போது, அதில் ஒற்றை வரியில் அழகாக நேர்த்தியான முறையில் அந்த வாசகம் அச்சடிக்கப் பட்டிருந்தது "இந்த கடிதம் எடுத்து வரும் துரோகியை கொன்றுவிடுங்கள்" என்று!!!.


மிக்கையேலுக்கு மொத்த உலகமும் சற்று நேரம் இருண்டு போனது. சுற்றி நடப்பது எதுவும் புரியாத பிரம்மை ஏற்பட்டது. தூரத்தில் மீண்டும் ஒலித்த துப்பாக்கியின் சத்தத்தில் சுயநினைவிற்குத் திரும்பினான். தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சூட்சமங்கள் மெல்ல தெளியத் தொடங்கின. காலையிலிருந்து நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் அர்த்தமுள்ளதாகத் தோன்றியது. தன்னை மிக அருகாமையில் தொடர்ந்து வந்த சூழ்ச்சிகள் விளங்கத் தொடங்கியது. தற்போது திரும்பிச்செல்ல முடியாத பேராபத்தில் வந்து சிக்கியாயிற்று என்று உணர்ந்தான். ஒன்றாவது எதிரிகள் கையில் மடிய நேரிடும், இல்லையேல் நமது இன துரோகிகளிடமே! எப்படியும் மடிவதென்பது உறுதியாகி விட்டது. இரத்தம் வேகமாக பாய்ந்தது. மூளை வேகமாக சிந்திக்கத் தொடங்கியது. இனி இந்த துரோகக் கும்பலுக்கு ஞாயமாக இருப்பதில் பலனில்லை. அர்த்தமற்று தன் வாழ்வை முடித்துக்கொள்ள விருப்பமும் இல்லை. எனது உயிரைக் காப்பாற்றுவது மிக முக்கியம் என்று பட்டது. “இந்த உலகத்தில் எனக்கு மிக முக்கியமான ஒருவன் உண்டென்றால், அது தான் தான். என்னை நான் காப்பாற்றியாக வேண்டும்!” என்ற தீர்மாணம் அவனை ஆட்கொண்டது. அடுத்தடித்த செயல்கள் அனிச்சையாக நிகழ்ந்தேறியது.


முதலில் அந்தக் கடிதத்தை பிரித்த அடையாளமின்றி மடித்துவிட்டு, நினைவின்றி கிடந்த மற்றவனின் சட்டைப் பைக்குள் வைத்தான். எப்படியும் இவன் வடக்கு மையம் வரை உயிரோடு இருப்பது கடினம் தான், குற்றுயிராக கிடப்பினும், அவன் கையிலிருக்கும் கடிதத்தின் பயனாக அவன் எப்படியும் சுட்டுக் கொல்லப்படுவான். நான் வாகனம் ஓட்டிவந்தவனாக காட்டிக்கொள்ளலாம் என சிந்தித்தது மனம். அவ்வாறே சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வாகனத்தை ஓட்டத்துவங்கினான் மிக்கையேல். மற்றவன் இன்னும் சுயநினைவின்றியே கிடந்தான். உயிரோடு இருக்கிறானா என்று அறிவதற்காக அவனது காயத்தில் குத்திப் பார்த்தான் , அவன் ஒரு மாற்றமும் இல்லாமல் கிடந்தான். இரத்த ஓட்டம் நின்றுவிட்டிருந்தது. ஏறத்தாழ அவன் சாவது உறுதியாகி இருந்தது.


மீண்டும் வெட்டவெளியான பாதை, சற்றுநேரத்திற்கு ஒன்றும் தடங்கல் இல்லை. மற்றவனுடைய இரத்ததால் மேப் நனைந்து உபயோகமற்றதாகி இருந்தது. மிக்கையேல், கண்பார்த்த திசையில் சென்று கொண்டிருக்கையில், மீண்டும் துடங்கியது துப்பாக்கி ஓசைகள். வண்டியின் பல பாகங்களிலும் தோட்டாக்கள் பட்டுத் தெரித்தன. முடிந்தவரையில் தறிகெட்டு வண்டியை செலுத்தினான் .முன்பு எப்போதையும்விட உயிரின் மீதான பயம் இப்போது அதிகப்பட்டிருந்தது. இங்கு இறப்பதென்பது அநியாய‌த்திற்கு எதிரான தோல்வியாக இருக்கும். தன் உயிரைக் காப்பாற்றுவதன் அவசியம் அவனை முழுவதும் ஆட்கொண்டு ராட்சதத்தனமாக வெறிகொண்டு வண்டியைச் செலுத்தினான், எதிர் தாக்குதல்கள் செய்தபடியே. இப்படியாக ஒருசில மைல்கள் கடந்துவிட்டிருந்தான். பாதைகள் முடிவற்று போய்க்கொண்டிருந்தது. அப்போது தான் சற்றும் எதிர்பாராமல் எதிரியின் ஒரு தோட்டா அவனது கைகளிலும் பாய்ந்தது. அதிர்ச்சியில் உண்மையிலேயே தறிகெட்டு ஓடியது வாகனம். நிறுத்தாமல் வண்டியை முடிந்தவரை செலுத்தினான். வழிந்தோடும் இரத்ததை உணர முடிந்தது. எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் ஓட்டினான் என்பது தெரியவில்லை. மெல்ல மெல்ல துப்பாக்கியின் ஓசைகள் சன்னமாக ஒலிக்கத் தொடங்கின. முன்னால் இருக்கும் பாதை கூட‌ மங்கலாகத் தெரியத் தொடங்கியது. தூரத்தில் சில உருவங்கள் அவனை நோக்கி வருவதைப் போல இருந்தது. அனைத்தும் இருட்டாகிவிட்டது.

§§§

மிக்கையேல் கண்விழித்த போது ஒரு கூடாரத்தினுள் இருந்தான். கூடாரத்தினுள் வெயில் புகுந்து வழிந்துகொண்டிருந்தது. அவ்வப்போது பலத்த குண்டுகளில் அதிர்வு கேட்டபடி இருந்தது. அதிர்வினால் மருந்து புட்டிகள் ஒன்றோடு ஒன்று முட்டி ஓசை எழுப்பிக்கொண்டிருந்தன‌. கைகளில் பெருத்த வலி இருந்தது. பாய்ந்த தோட்டா எடுக்கப் பட்டிருக்க வேண்டும். புதிதாக டிரெஸிங் செய்யப்பட்டிருந்தது. அவனைச் சுற்றி செவிலியர்களும், காயம்பட்ட மற்ற வீரர்களும் இருந்தனர். அனைவரும் அவனைப் போலவே சீருடைய் அணிந்திருந்தார்கள். அப்போது தான் குருதி வெள்ளத்தில் ஒரு சிப்பாயை உள்ளே கொண்டுவந்து சேர்த்தார்கள். மிக்கையேல் விழித்துக் கொண்டதை ஒரு செவிலியச்சி ஒரு சிப்பாயிடம் அறிவிக்க சென்றாள். மிக்கையேல் மெல்ல மெல்ல தான் தான் வந்து சேரவேண்டிய‌ வடக்கு மையத்தின் மருத்துவ பிரிவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதை உணரத் துவங்கினான். செவிலி அறிவித்த சிப்பாய் மற்றுமொரு உயரதிகாரியுடன் அக்கூடாரத்திற்குள் நுழைந்தான். உயரதிகாரி மிகுந்த உற்சாகத்துடன் அவனை நோக்கி வந்தார். கை குலுக்கினார். "நலமா இருக்கீங்களா? மிக்க நன்றி! நல்ல வேளையாக குறித்த நேரத்தில் நீங்க செய்தியை கொண்டு வந்து சேத்தீங்க...அதனால் தான் உடனடியாக நாம் தாக்குதலில் ஈடுபட முடிந்தது, நல்ல முன்னேற்றம். 18 மணி நேரமா தாக்குதல் நடக்குது. இரவுக்குள் வடக்குப் பகுதியை மீட்டெடுத்துடுவோம்...எல்லாம் உங்களால் தான்!" என்று சொல்லி சென்றார். நடப்பது அறியாது மிக்கையேல் தயக்கத்துடன் "என்னுடன் வந்தவர்?" என்று வினவினான். அவர் திரும்பிப் பார்த்தவாரே "அவர் உடல் நலம் தேறி வருகிறார்" என்று சொல்லி வெளியேறினார். தூரத்தில் துப்பாக்கிகளின் ஒலி கேட்டவண்ணம் இருந்தது.


*** முற்றும்***


பின்குறிப்பு:


1920 களில் ஜெர்மானிய படைகளில் போர் மையங்களுக்கு மத்தியில் செய்திப் மாற்றத்திற்காக‌ குறியீடுகள் பயன்படுத்தப் பட்டன. தூதுவர்கள் எதிரிகளிடம் மாட்டிக் கொண்ட போதும், அவர்கள் கொண்டுசெல்லும் செய்தியை கண்டறியாத வண்ணம் அக்குறியீடுகள் அமைக்கப் பட்டன. உதாரணத்திற்கு "இந்த கடிதத்தை எடுத்து வருபவனைக் கொன்றுவிடுங்கள்" என்பது "போர் தாக்குதல் தொடங்கலாம்" என்ற செய்தியின் குறியீடாக பயண்படுத்தப்பட்டன‌.



வியாழன், 19 நவம்பர், 2009

சச்சின் விளையாடுகிறாரா இல்லையா?

சச்சின் விளையாடுகிறாரா இல்லையா?

ஆண்டு 1998, காலை 6 மணி:

ஆட்டத்தின் கடைசி ஓவர்...மூன்றாம் பந்து... சற்றே பொந்திவர மட்டையாளர் அதை எதிர்கொள்ளும் போது வெளிப்புற விளிம்பு வாங்கி களப்பணியாளர்களின் கைகளில் இருந்து சற்றே விலகிச்செல்ல ஒற்றை ஓட்டம் எடுக்கப்பட்டு, சச்சின் பந்தை எதிர்கொள்கிறார். இரண்டு பந்தே பாக்கியுள்ளது. ஐந்து ஓட்டங்கள் எடுக்க வேண்டும். சச்சினின் இரும்புக் கரங்களை உலகமே கவனித்தவண்ணம் இருக்கிறது. வந்து சேர்ந்தது ஐந்தாம் பந்து..."அடங்ங்...!" . அது சச்சினுக்கே ப்ரத்யேகமான ஏழரையான ஒரு இடத்தில் அமைந்து தொலைந்தது. பந்து மட்டையை சந்திக்காமல் கடந்து போய்விட்டது...அனைவரும் "உஊ...!!!" என்று ஒன்று போல சப்தமிட்டனர். சச்சின் பதட்டத்துடன் காணப்படுகிறார். இதோ அடுத்து....கடைசிப் பந்து...சச்சின் கையில் தான் கோப்பை. பார்வையாளர்களின் ரத்த அழுத்தம் அபரிதமாக பெருகியோடியது. சிலர் நகங்களைக் கடிக்கின்றனர், சிலர் கைகளைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டனர், சிலரோ மேலே பார்த்து பிராத்தனை செய்தனர். கடைசிப்பந்து....கள்ளப்பயல்! ஒரு மெதுவேக பந்து வீசினால் கூட ஆட்டம் அம்பேல் தான். வீசிவிட்டான் கடைசிப் பந்தை!...ஃபுல்டாஸ்....மறுயோசனையின்றி விளாசிவிட்டார் சச்சின்!. பந்து உயரே உயரே சென்றது....அது குறைந்த உயரத்துடன் சென்றிருந்தால் பௌன்றியை எளிதாக கடந்திருக்கும். ஆனால் அது பறப்பதோ செங்குத்தாக. அது செல்லும் உயரத்தைப் பார்க்கையில், திரும்ப வருகையில் ஏதாவது தேவதூதரையும் உடன் அழைத்து வந்துவிடுமோ என்று தோன்றியது. அதனடியில் ஒரு களப்பணியாளன் கையை அகல விரித்தபடி அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தான். அரங்கமே "நோ..நோ...." என்று ஓலமிட்டுக்கொண்டிருந்தது”.

விசித்திரமான சத்தமொன்றைக் கேட்டு பதட்டமடைந்த சாமுவேலின் மனைவி படுக்கையை எட்டிப்பார்க்க..போர்வைக்குள்ளிருந்து "நோ..நோ..." என்றபடி சாமுவேல்!. அவள் போர்வையைச் கலைத்தபின் தான் தன் கடைசி ஓவர் கனவிலிருந்து விழித்தார் சாமுவேல்.

இன்று டைட்டன் கோப்பை இறுதிப் போட்டி. நேற்று இரவு செய்தியில் சச்சினுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமே என்று கேள்விப்பட்டு, ஒரு 10 நண்பர்களுடன் விசாரித்து, புலம்பி, நிம்மதியற்று தூங்கப் போனார் சாமுவேல். என்ன செய்வது...சச்சின் விளையாடுக்றாரா இல்லையா என்பது, இந்தியா வெல்லுமா இல்லையா என்பதைத் தீர்மாணிப்பதாக அல்லவா இருக்கிறது!.

வானொலியைத் திருபினார். சரோஜ்நாராயன்சாமி செய்திகளை சங்கீதமாய் படித்துக்கொண்டிருந்தார். இரண்டு கவள காப்பிக்கு ஒரு இழுப்பு சிகரெட் என்ற சீரான இடைவெளியில் செய்திகளை கவனித்துக்கொண்டிருந்தார். விளையாட்டு செய்திகள் என்று அறிவித்தவுடன், படித்துக்கொண்டிருந்த பிள்ளையை ."யெய்...செத்த மொள்ளமா படி டே!"என்று அதட்டினார். நாற்காலியை வானொலியின் பக்கம் சற்றி இழுத்துப் போட்டுக்கொண்டார். "நேற்று டைட்டன் கோப்பை இறுதிப்போட்டிக்கான இந்திய கிரிக்கட் அணியின் குழு அறிவிக்கப்பட்டது. பயிற்சியின்போது நடந்த ஆட்டத்தில் காயம் ஏற்பட்டதால் சச்சின் விளையாடுவது இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது, என்று அணியில் கேப்டன் தெரிவித்தார்....ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில்...." அதற்குப் பின் சொன்ன எதுவும் அவர் காதில் விழவில்லை. காப்பியும் சிகரெட்டும் தத்தம் சேவையை செவ்வனே செய்ய, மனைவியை நோக்கி "கக்கூசுல தண்ணி எடுத்து வைய்யி டீ.." என்று கத்தினார்.

கழிப்பறையில் அமர்ந்தவாரே விடுபட்ட அந்த கடைசி ஓவரை மீண்டும் கனவு காணத் தொடங்கினார்.

காலை மணி 8:30

துரிதமாக சில சூடான இட்டிலிகளை விழுங்கினார். ஸூட்டில் ருசியேதும் அறியவில்லை. காலுறையை மாட்டும் போதே கம்பேனி பேருந்து வந்துவிட்டது. அன்றைய செய்தித்தாளை அக்குளில் வைத்தபடி வீட்டை விட்டுக் கிளம்பினார். அன்றைய நாளின் முக்கயத்துவம் ஏதும் அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

"அமரிக்கவுடன் முக்கிய ஆவணங்கள் கையெழுத்தாயின" "எதிர்க் கட்சியினரின் போராட்டம்" "கள்ளக் காதலனைக் கொன்ற கணவன்" "ஊதிய உயர்வு கேட்டு செவிலியர் தர்னா" போன்ற அன்றாட செய்திகளுக்கு நடுவே "மீண்டும் சுரங்க சரிவு. பலவீனமான தளங்களை மூடிவிட கோரிக்கை!" என்ற செய்தியும் இருந்தது. சுரங்க சரிவு மற்றெல்லோருக்கும் வேண்டுமானால் சாதரண செய்தியாக இருக்கலாம். ஆனால் ஒரு சுரங்க அதிகாரியாக சாமுவேலுக்கு அது முக்கியமான செய்திதான். இருப்பினும் கிரிக்கட்டை விட முக்கியமான செய்தியொன்றும் இல்லை!.

“நேற்று நடந்த சுரங்க சரிவில் நான்காம் தளத்தில் நடந்த விபத்தில் பல ஊழியர்கள் அகப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப் படுகிறது. இது ஏற்கனவே விபத்துக்குள்ளான தளம் என்று அறிந்தும் நிர்வாகம் இந்த தளத்தை இன்னும் மூடாதிருப்பது குறித்து தொழில் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன" என்று சுருக்கமாக முடிக்கப்பட்டிருந்தது. அப்போதே ஆரம்பமாகிவிட்டது பி.பி. ஒரு மோசமான நாளுக்கான அறிகுறியாக இருந்தது அது. அவசர அவசரமாக விளையட்டு செய்திகளைத் திருப்பினால் "சச்சின் விளையாடிகிறாரா?" என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தது. அதற்குமேல் படிக்க மனமில்லாமல் பேப்பரை மூடிவிட்டு கழுத்து கச்சத்தை பின்னிக் கட்டிக்கொண்டார். "அவ்வளது தான் இன்னைக்கு...நல்ல காலத்துலயே நெனச்சப்போ கிளம்ப முடியாது. இதுல விபத்து வேறு. இனி விசாரணை, ரிப்போர்ட், மாற்று ஏற்பாடு என்று எல்லா எழவும் அழனும். இன்று சீக்கிரமாக கிளம்பி இறுதியாட்டத்தின் இரண்டாம் பகுதியாவது பார்த்துவிடலாமென்று பார்த்தால்....ப்ச்ப்...ஷிட். ..சச்சின் வேறு விளையாடுகிறாரோ இல்லையோ?".

மணி 10.

அலுவலகத்திலிருந்து தன் இருக்கைக்கு வரும்போதே விபத்து பற்றி விபரங்களை சேகரித்துக்கொண்டார்.

"எப்போ நடந்தது?"

"ஈவினிங்...மணி பத்து, பத்தேகால் இருக்கும் "

"எந்த சிஃப்ட்"

"ஃபர்ஸ்ட் ஷிஃப்ட் முடிஞ்சு டின்னருக்கு அப்புறம் சார்"

"எந்த ஃப்ளோர்"

"நாலாவது"

"ஷிஃப்ட் இன்சார்ஜ் யாரு"

"மல்லிகார்ஜுன்"

"எப்படி நடந்தது?"

"ஒரு சிஃப்ட் முடிஞ்சு அடுத்த சிஃப்டோட 1 மணிநேரத்திலேயே நடந்திருக்கு சார். ரொம்பவும் வீக்கான ராக்ஸ். ஏற்கனவே இதுமாதிரி நிறையா நடந்திருக்கு இங்க. ஸ்கப்ஃபோல்டிங் ஸ்ட்ரெந்த் என்ட்யூர் பண்ணாம கொலேப்ஸ் ஆயிடிச்சு. சாரம் சரிஞ்சு விழிழுந்திருக்கு. தன்ன காப்பாதிக்க எல்லாரும் ஓடியிருக்காங்க. அதுல ஃபர்தரா வீக்காகி என்டயர் தளமுமே டேமேஜ். 11 மணிக்கு முக்கிய‌ ஆலோசனைக் கூட்டமிருப்பதாக மெயின் ஆபீஸ் ப்யூன் அறிவித்து சென்றிருக்கிறான்.”

மணி 10.45

தொலைக்காட்சியில் செய்திகள்: ‍வக்கீல்கள் மறியல், எதோ நகரத்தில், யவனோ வீட்டில் நகைகள் கொள்ளை...(சரியாக பாதுகாக்கத் தெரியாவிட்டால் எதுக்கு இவனெல்லாம் நகை வாங்கனும்...என்னைக்கும் ஒரு நாள் தொலைத்திருக்கத் தான் செய்வான் என்று நினைத்துக்கொண்டார் சாமுவேல்), ஏதோ சின்ன ’C’ நடிகர் பிறந்தநாள் கொண்டாடுவது என்று எல்லாம் கவனித்தார், ஏதாவது செய்தி வருகிறதா என்று. ஒன்னும் பிரியோஜனம் இல்லை. சச்சின் விளையாடுகிறாரா இல்லையா என்று ஒரு மண்ணும் தெரியவிலை. ச்செ...விளையாடவில்லை என்று சொல்லிவிட்டால் கூட நிம்மதியாக இருந்து விடலாம்... என்று தனக்குள்ளாக புலம்பிக்கொண்டிருந்தார் சாமு.

மணி 11.00

சற்றே மழைவருவது போல இருந்தது. எல்லாம் இரண்டு மூன்று பேராக கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ ஒருசிலரின் வருகையில் அந்த கருத்தரங்க அறையே அமைதியானது. அவர் அந்த ஆலோசனை அறையின் பிராதன இருக்கையில் அயர்ந்தார்.

"எல்லோருக்கும் தெரியும் இன்றைய முக்கிய சம்பவம், மிக துரதிஷ்டவசமாக நமது 4ம் தள விபத்து அமைந்தது பற்றிய விவரங்கள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேச தான் இந்த கூட்டம்"

சாமுவேல் "ஆமா இது யாருக்கும் தெரியாதா..பெரிய புத்திஜீவி...அப்படி இருந்தால், எங்கே சச்சின் இன்று விளையாடுகிறாரா இல்லையா என்று சொல்லிவிடுங்கள் பார்க்கலாம்" என்று தனகுள்ளாகவே நினைத்துக்கொண்டார்.

பிரதான அலுவலர் தொடர்ந்தார் "அறிக்கையை நான் வேகமாக பார்த்தேன். இதுவரை மிக மோசமான விபத்துக்களை சந்தித்த அதே 4ம் தளத்தில்தான் இந்த விபத்தும் நடந்திருக்கிறது. கடந்த 7 வருடத்தில் 12 விபத்துக்கள். ஒவ்வொறு முறையும் நாம் ஒரு சில தொழிலாள‌ர்களை இழக்கிறோம். பின் சீரமைப்புப் பணிகள்...மறு உருவாக்கம் என்று தொல்லை தரும் விதமாக தான் இருக்கிறது. அந்த 'நிலை'யையே மூடிவிடுவதே நல்லது என்று நான்...இல்லை..சில குழுக்கள் பரிந்துரைக்கின்றன"

அதற்குள் இடைமறித்தான் ஒருவன். "மண்ணிக்கவும்...ஆனால் மிக அரிதான கச்சாவை குறைந்த செலவில் அளித்துவந்தது இது...நமது வருவாயில் 12% இந்த நிலையிலிருந்து மட்டுமே வந்த காலங்கள் உண்டு" என்பதை நான் உங்களுகுக்கு சொல்ல வேண்டியதில்லை”.

“ஆமாம்...இந்த பல கோடி பெருமானம் கச்சாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த சொற்ப தொழிலாளிப் பயல்கள் உயிரொன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல!” என்று முணுமுணுத்தார் சாமு.

“மேலும் கடந்த முறை நடந்த மறு சீரமைப்புப் பணியைவிட இம்முறை நல்ல முன்னேற்றம் உள்ளது. சாரங்கள் சரிந்தது தெரிந்தவுடனே சென்ற முறை விபத்துக்குப் பிறகு நிறுவப்பட்ட தானியங்கி சயரன்கள் முழங்க, ஆம்புலன்ஸ்கள் தயாராக்கப்பட்டது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் சூதானமடைந்து விபத்திலிருந்து தப்பினார்கள். காயமடைந்தவர்கள் 48 பேர் தான். சென்ற முறை விபத்தை விட அளவில் இது பெரியாதாக இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை வெறும் 3 தான்!. இது விபத்துத்தடுப்பில் சென்ற முறையை விட 35% முன்னேற்றத்தைக் காட்டுகிறது" என்று புள்ளி விபரங்களைக் கொடுத்தான் அந்த‌ ஆபீசர்.

உயர் அதிகாரி அதில் சற்றே மகிழ்ந்திருக்க வேண்டும்..."வெரி குட்..கொய்ட் இம்ப்ரெஸ்ஸிவ்" என்றார். இது குறித்த அறிக்கைகளுடன் என்னை நீங்கள் பின்னர் சந்தியுங்கள்" என்றார் அதிகாரி.

"அடிசச்து டா! லக்கி பிரைஸ்!"...அதிகாரியை நேரில் சந்தித்தால் எப்படியும் அவரை மேலும் சில புள்ளி விவரங்களைச் சொல்லி நெகிழச்செய்துவிடுவான். இனி அப்படியே பதவி உயர்வு..சம்பள உயர்வுனு போய்டுவான். ஒவ்வொரு முறை விபத்து நடக்கும் போதும் ஒருத்தன் அல்லது இரண்டு பேர் அதை உபயோகப் படுத்தி சம்பள உயர்வு வாங்கிடறான். ஆனால் நமக்கு தான் அப்படி எதுவும் செய்ய வக்கில்லையே..." என்று தனக்குத் தானே குறைபட்டுக்கொண்டார் சாமு.

"இப்படியே எவ்வளவு நேரம் நீட்டிப்பார்கள் என்று தெரியவில்லை. 12.00 மணிக்கு செய்திகள் வேறு இருக்கின்றது. சச்சின் வேறு விளையாடுகிறாரோ இல்லையோ?. சச்சின் விளையாண்டால் அரை நாள் விடுப்பு எடுத்துவிட்டு வீட்டுக்கு போய் ஆட்டத்தைப் பார்க்கலாம் என்றால்..இப்படியாகிவிட்டதே..."

அதற்குள் உயரதிகாரி குரலெடுத்து: "அடுத்து மிக முக்கியமான ஒரு பணி பாக்கி இருக்கிறது. நாம் எவ்வளவு தான் விபத்து தடுப்பு, கட்டுமானம், மறு சீரமைபு என்று முன்னேற்றம் காட்டினாலும் நாம் இழந்த தொழிலாலர்கள் நமக்கு திரும்ப கிடைக்கப்போவதில்லை...அவர்கள் குடும்பத்திற்கும். அவர்களுக்கு நாம் செலுத்தும் கடைசி மரியாதை...நாம் அவர்கள் வீட்டிலேயே சென்று இந்த துக்க செய்தியை நம் அனைவரது சார்பாக தெரிவிப்பது தான். நாம் அனைவரும் அவரது இழப்பை குறித்து மிகவும் வருந்துகிறோம் என்ற செய்தியை அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். துரதிஷ்டவசமாக 3 தொழிலாலர்களை இழந்திருக்கிறோம். உங்களில் யாராவது மூன்றுபேர் முன்வந்து இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் அதிகாரி.

பெருத்த மௌனம் நிலவியது. ஒருவனும் வாய்திறக்கக் கானோம். புள்ளிவிவரம்,நம்பர்கள்,செயல் திட்டம் என்றால் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு குரலெழுப்பும் இவர்கள் இப்போது ஒடுங்கிப் போய் எங்கே ஒளிந்துகொண்டார்கள்?. பேடிப் பயல்கள்" என்று திட்டித் தீர்த்துக்கொண்டார் சாமு. ஒரு வழியாக இரண்டு தொழிலாலர்கள் வீட்டிற்கு செல்ல ஆட்கள் முன்வந்து விட்டார்கள். ஆனால் மீதம் இருந்த அந்த ஒரு தொழிலாளியின் வீட்டில் மரணச்செய்தியை அறிவிக்கச் செல்ல யாரும் முன்வரவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது!.

அந்த மூன்றாம் ஆள் திரு.ஆரோக்கியசாமி குடும்பத்தைச் சேர்ந்தவர். 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஓய்வு பெற ஒரு வருடத்திற்கும் குறைவாக இருக்கும் தருவாயில் ஒரு சுரங்க விபத்தில் அகப்பட்டுக்கொண்டார். மிகவும் பரிதாபமான சாவு. குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்ட மூத்தமகன் சில வருடங்களிலேயே அப்போது தான் டிப்ளமோ முடித்திருந்த தன் இளைய சகோதரனையும் அழைத்துக்கொண்டார். சிலவருடங்கள் அப்படியே நல்லபடியாக சென்றது. முந்திய வருடம் நடந்த ஒரு தனி விபத்தில் சில அகப்பட்ட தொழிலாலர்களை மீட்க அவன் முற்பட்டிருந்த போது, தொடர்சரிவால் உடலின் கீழ்ப்பகுதி வெகுவாக நசுங்கிப் போனது.

சில மாதங்கள் மருத்துவமணைக் கிடப்பிலிருந்து, பிறகு பல்லுறுப்புகள் செயலிழந்து மரணமடைய நேரிட்டது. மிகவும் நாடகத்தனமாக இப்போது அந்த குடும்பத்தின் கடைசி மகனான சார்லஸ் இறந்து விட்டான். முத்தவனைப் போல அல்லாது நொடிப்பொழுது மரணம் இவனுக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். அடுத்த நாள் விடுப்பு கேட்டிருக்கிறான். அதை நிகர் செய்வதற்காக 2 ஷிப்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறான். அந்த பாவப்பட்ட குடும்பத்திற்கு இந்த விஷயத்தை அறிவிக்கப் போகும் துரதிஷ்டசாலி யவனும் முன்வரவில்லை. இவர்கள் இப்படியே யோசித்துக்கொண்டிருந்தால் நான் 12 மணி செய்திகளைத் தவறவிட வேண்டியதுதான்...ச்சை! சச்சின் வேறு விளையாடுகிறாரோ என்னவோ?

நீண்ட மௌனம் மிகுந்த அசௌகரியத்தையும், ஒரு அவசியமற்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது. சாமுவேல் என்னதான் அதர கோழையாக இருந்தாலும், தனக்கே உரித்தான அசட்டு தைரியத்தை சில நேரம் வரவழைத்துக்கொள்வார். சில அசட்டுத்தனமான…ஏன் சில சமயம் அதிகப்பிரசங்கித்தனமான வெளிப்பாடுகள் கூட...இவர் ஒரு கலகக்காரர்...புரட்சிக்காரர் என்ற தவறுதலாக புரிந்துகொள்ளப் படுவதும், அதனால் ஏற்படும் கௌரவ உணர்ச்சியை பாதுகாப்பதும் சாமு போன்ற நடுத்தர மனப்போக்கு உடையவர்கள் தவறாமல் செய்யும் ஒன்று. அப்படிதான் இன்றும் செய்தார்.

"ஜென்டில்மென்...நான் போகிறேன்" என்று மௌனம் உடைத்தார். அப்படியொன்றும் அது அசட்டுத்தனமான முடிவு என்று சொல்லிவிட முடியாது. அதில் இரண்டு ஆதாயங்கள் சாமுவிற்கு இருந்தது. ஒன்று: மேலதிகாரிகள் முன் "யார் இவர்!" என்ற அறிமுகம் கிடத்தது. ஒரு வெளிச்சம் தன் மீது படர உதவியாக இருந்தது. இரண்டு: எப்படியும் மற்ற நாட்களைப் போல் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்குள் இறுதியாட்டம் மதியம் 2.30 க்குத் துடங்கி ஒரு இன்னிங்க்ஸ் முடிந்துவிடும். இந்த காரியத்திற்கு சென்றால் அப்படியே விடுப்பெடுத்துவிடலாம். அலுவலக காரிலேயே சென்று வீட்டிலும் இறங்கிவிடலாம். ஆட்டத்தை முதல் பந்திலிருந்தே பார்க்க முடியும்!.

அந்த முதல் ஆதாயத்தின் பலன் உடனடியாகவே கிடைத்தது. முதன்மை அதிகாரி சாமுவின் கண்களை நேரடியாக பார்த்து.."வெரி குட் சேம்..தட்ஸ் கிரேட்!" என்றார். சாமு ஒரு போர்ப்படைத் தளபதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டவரைப் போன்ற இறுமாப்புடன் கலந்தாய்வு அறையைவிட்டு வெளியேறினார், எதிகொண்ட மற்ற அலுவலர்கள் எல்லாருமே மிக ஏளனமாகப் தென்பட்டார்கள்.

காரியத்தை எடுத்துக்கொண்டாரே அன்றி அது குறித்த வருத்தமும் சாமுவைத் தொற்றிக்கொண்டது. சகல விதமான தகவல்களுடன் சாமு கம்பெனி காரில் கிளம்பிச் சென்றார். கிளம்பும் முன் சமீப செய்திகளைக் கொஞ்சம் சரிபார்த்துக் கொண்டார். டேம் இட்!!! இன்னும் சச்சின் விளையாடுகிறாரா இல்லையா என்று தெரியவில்லை!.

குறிப்பிட்ட வசிப்பிடத்திற்கு 30 நிமிடங்களில் எல்லாம் சேர்ந்தாகிவிட்டது. சாமுவுக்கு பரிட்சைக்குச் செல்லும் ஒரு பள்ளி மாணவனின் மனநிலை உருவாகத் தொடங்கியிருந்தது. உள்ளங்கை வியர்க்கத்தொடங்கி வயிறு காலியானதைப் போன்ற உணர்வு. நெஞ்சிலிருந்து தொண்டைவரை புகை அடைத்தது போலிருந்தது. டிரைவரிடம் ஏதோ சொல்ல நினைத்து கூட வார்த்தை வெளியே வரவில்லை. தன்னிலையை எண்ணி தனக்கே வருத்தமாக இருந்தது. ச்சே!!! என்ன இது...உங்கொப்பனா செத்துப்போனான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் சாமு. இப்படி நின்று கொண்டே இருந்தால் இன்று ஆட்டத்தை முழுவதும் காண்பது சந்தேகம் தான்.

எந்த விதமான பிரத்யேக திட்டமும் இன்றி காரை இரண்டு தெருக்கள் முன்னே நிறுத்தடச் சொல்லிவிட்டார் சாமு. தான் போய் வருவதாகவும், அதுவரை அங்கேயே இருக்கும்படியாகவும் டிரைவரிடம் கூறிவிட்டு மெதுவாக நடக்கத்தொடங்கினர். வழியில் சில ஜவுளிக் கடைகளும், பலசரக்குக் கடைகளும், எலெக்ட்ரானிக் சாதனங்கள் சரிசெய்யும் கடைகளும் இருந்தன. பூதக் கண்ணாடியை ஒத்த ஒரு மூக்குக்கண்ணாடி அணிந்த ஒரு மெக்கானிக் அதை சிரமத்துடன் சரிசெய்துகொண்டிருந்தான். அவன் இந்தப் பார்வையுடன் அதை சரிசெய்வதற்கு ஒரு மாதம் எடுக்குமோ என்று நினைத்துக்கொண்டார் சாமு. வழியில் ஒரு சேட்டுக்கடையில் ஜிலேபி சூடாகப் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் சமீப காலத்தில் சூடாக ஜிலேபி போடுவதை பார்த்ததே இல்லை. வரும்போது கண்டிப்பாக இரண்டு ஜிலேபி வாங்கித்தின்று விட்டு வீட்டிற்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். “இப்படி கேனத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு போனால் வந்த் வேலை முடிந்து ஆட்டத்தைப் பார்த்த மாதிரி தான்" என்று ஒரு குரல் எச்சரித்தது.

மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடக்கத் தொடங்கி, குறிப்பிட்ட வீட்டின் சுவர் அருகே வந்துவிட்டார். கேட்வரை சென்று கதவைத் திறக்கவோ, இல்லை காலிங்பெல்லை அமுக்கவோ தைரியமோ, மனமோ இன்றி நின்றவண்னமே இருந்தார் சாமு. தூரத்தில் இறந்துபோன சார்லஸின் தாத்தா தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவரது மகனை சாமுவிற்கு நன்றாக நன்றாகத் தெரிந்திருந்தது. தான் புதியவனாக கம்பெனியில் சேர்ந்த பொழுது, அவர் மிக முக்கியமான ஃபோர்மேனாக இருந்தார். அவரது மூத்த மகனைக் கூட நன்றாக தெரிந்திருந்தது. பாவம் அவன் அப்பாவின் மறைவுக்குப் பின் மொத்த குடும்ப பாரமும் அவன் மீது விழுந்திருக்க வேண்டும். தனியாகவே அதிக நாள் கஷ்டப்பட்டான். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் முன்பணமோ கடனோ வாங்க கையெழுத்து கேட்டு வந்து நிற்கும்போது பார்த்திருக்கிறேன். நடப்பில் இருந்த எல்லா கடன்வாங்கும் வழிகளிலும் அவனுக்கு கடன்கள் இருந்தது. இருக்காதா...தம்பிகளின் படிப்பு, குடும்பத்தாரின் மருத்துவ செலவு என்று எவ்வளவோ இருக்கும். ஏதோ அவன் தம்பியும் சற்று தலையெடுத்த பின்பு தான் அவனுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டிருக்கக்கூடும். அவன் உடனடியாக ஒரு கல்யானம் செய்துகொண்டதில் ஒன்றும் வியப்பு இல்லை. ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் இறந்து போனது தான் எல்லோருக்கும் அதிர்ச்சியாகிப் போனது. கம்பெனிக்கு வருங்காலத்து ஒரு நம்பிக்கையாக இருந்தானவன், என்பது மட்டுமல்லாது தற்போது தான் திருமணமாயிருந்த இளைஞனின் இறப்பு எல்லோரையும் துக்கமுறச் செய்தது. இப்போது அந்த குடும்பத்தின் கடைசி மகனும் இறந்துவிட்ட செய்தியை தெரிவிப்பதற்காக அந்த துரதிஷ்டமான வீட்டிற்கு தான் புறப்பட்டு வந்திருக்கும் முட்டாள்தனத்தை எண்ணி சாமு வருத்தப்பட ஆரம்பித்திருந்தார்!. அதுவும் தானாகவே முன்வந்து இதை ஒப்புக்கொண்டதை எண்ணி சாமுவிற்கு தன்மேலேயே கோவம் கோவமாக வந்தது. இப்படியே திரும்பிப்போய்விடலாமா என்று கூட எண்ணினார். ஆம் அது தான் சரியானதாக இருக்கும். எப்படியும் யாராவது சொல்லிக்கொள்வார்கள். காலை அலுவலகம் செல்வதற்குள் எப்படியும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். செய்தி தன் மூலமாகத்தான் தெரிந்திருக்கும் என்று எல்லோரும் நம்பியும் விடுவார்கள். என்றெல்லாம் நினைப்பத‌ற்குள் ஒர நடுக்கமுற்ற குரல் கேட்டுத் திரும்பினார் சாமு. "யாரு இது... சாமுவா?" என்றது தாத்தாவின் குரல். அதிர்ந்து வியர்த்துப் போனது சாமுவிற்கு. ஒன்று: தாத்தா தன்னை கவனிது விட்டது, மற்றொன்று: அவர் தன்னை அவர் அறிந்துவைத்திருந்தது. "என்ன இங்கே?" என்ற கேள்விக்கு பதில் சொல்ல வார்தை எதுவும் வரவில்லை. "இல்ல இங்க கார் நிக்குது??”

"எங்கே?"

"இல்ல ஒரு கார் விற்பணைக்கு இருப்பதாக சொன்னார்கள், அதுதான் பார்த்துவிட்டுப் போகலாமென்று"

"யாரோட வீட்ல?" என்றெல்லாம் அவர் கேட்க எத்தணிக்கும் முன்பு, அடுத்தடுத்த பொய்கள் சொல்ல தனக்கு சாதூர்யக் குறைவு இருப்பதை உணர்ந்து, கேள்விகளைத் தவிற்க "எப்படி போகிறது ஓய்வு வாழ்கை?" என்ற மிக சராசரியான ஒரு கேள்வியைக் கேட்டார் சாமு. தாத்தா அதை ஒரு நீண்ட கதை போல சொல்லத் தொடங்கினார்.”

"எனக்கு என்ன...என் நாளுக்காக காத்துட்டு இருக்கேன். கர்த்தன் என்னைக்கு கண்ணைத் திறக்கிறான்னு தெரியல. ஆனா நாம விருப்பப்ட்ட உடன சாவு வந்திடுதா என்ன. அப்படி இருந்திருந்தா என்னைக்கோ நான் விடுதலை வாங்கியிருப்பேன். பாரு...இந்த தோட்டத்துல இருக்குற செடிங்க கூட தான் என் நாளெல்லாம் போகுது. அதுங்க கூட பேசிகிட்டு, விளையாண்டுட்டு...ஒரு நாள் நான் இல்லாட்டிகூட போதும் அப்புறம் பேசாதுங்க..அவ்ளோ ரோஷம்.வெயில் அதிகமா இருக்குறதால வாடிடுதுங்க. அதான் அடிக்கடி தண்ணி ஊத்திகிட்டு, காஞ்ச இலைங்கள வெட்டிகிட்டு அப்படியே தினமும் ஓடிடுது.." என்று பெரியவர் இழுத்துக்கொண்டிருக்க வந்த வேலையை மறந்து பதிலேதும் பேசாமல் அவரையே கவனித்துக்கொண்டிருந்தார்.

பெரியவரின் நிலை தொந்தரவாய் இருந்ததைக் கடந்து,, பரிதாபத்தை ஏற்படுத்தத் துவங்கியது. சாமுவிற்கும் பதபதைப்பு அதிகமாகத் தொடங்கியது. தான் அலுவலகத்த்லிருந்து கிளம்பிவந்து பலமணி நேரங்கள் ஆகிவிட்டது. வந்த வேலையும் முடிந்தபாடில்லை. கண்டிபாக இறுதியாட்டத்தை தவறவிடுவது நிச்சயமாகிவிட்டது, என்று எண்ணிக்கொண்டார். அதற்குள் தனது கலவரத்தை ஒருவாராக படித்துவிட்டவரைப் போல முதியவர், "ஏதொ சொல்ல வந்தீங்க போல இருக்கு" என்றார். சாமு முதல்முறையாக அவருக்கு பதிலாக தனது தலையைக் கவிழ்த்திக் கொண்டார். அது மிகவும் வெட்கமான செயலெனினும் அதைத்தவிர‌ அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. முதியவராக காலையில் யாரோ பேசிக்கொண்ட சுரங்கவிபத்தையும், பேரன் இன்னும் வீட்டிற்கு வராததையும், சம்மந்தமின்றி ஒரு முட்டாள் சுரங்க ஆபீசர் தன் கேட்டின் முன் நிற்பதையும் இணைத்து விஷயத்தை ஒருவாராக ஊகித்துக்கொண்டார். சாமு கிளம்பி வெகுநேரமானதை கணக்கிட்டு செய்தி இந்நேரம் வீட்டில் எட்டி இருக்குமென்று தொழில்சங்க சகாக்களும் தெருமுனையிலிருந்து கூட்டமாக தோன்ற ஆரம்பித்திருந்தனர். சம்பவத்தை உறுதிசெய்துகொண்ட முதியவர் பிடிவாதமாக, "அய்யா...இதை உள்ளே போய் நீங்களே சொல்லிவிடுங்கள்...என்னால முடியாது... உள்ளிருக்கும் மூன்று பெண்களோட முகத்தைப் பார்க்க என்னால் ஆகாது..போங்கள்.." என்றார். 'இது என்னடா வம்பாகிவிட்டது...' என்று எண்ணிய சாமு குற்றவுணர்ச்சியால் உந்தப்பட்டு கேட்டை விலக்கி வீட்டினுள் சென்றான். கதவைத்தட்டியதும் அந்த தொழிலாளியின் அம்மா என்று மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவைத்திறந்து உள்ளேவரும்படி சொன்னார். சாமு ஒரு சர்க்குலரை வாசிப்பதைப் போல மரணச்செய்தியை சொல்லி முடித்தான். அதில் எந்த பரிவையோ ஆதங்கத்தையோ எவ்வளவு முயன்றும் அவனால் வெளிப்படுத்த முடியவே இல்லை. தன்னிடம் உணர்ச்சிகள் எல்லாம் எங்கு சென்று ஒளிந்துகொண்டன என்று நினைத்துக்கொண்டான். கடைசியாக அவன் அப்பா செத்ததற்கு கூட தான் அழுகாதது அவனுக்கு நினைவுக்கு வந்தது. மரண செய்தியைக் கேட்கும் போதே அந்த பெண்மணி மயங்கி விழுந்தார். உள்ளிருந்து கைகுழந்தையுடன் ஓடி வந்த மற்றுமொரு பெண் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து அழுதுகொண்டே ஓடி வந்தாள். காரணமின்றி குழந்தையும் வீறிட்டு அழத்துடங்கியது. இதற்கு மேலும் அங்கு நிற்க திராணியற்று தலைகுனிந்தவாறு நடக்கத்துவங்கினார்.

கேட்டுக்கு வெளியேவும் கேட்டுக்கொண்டிருந்த குழந்தையின் கதறல் அவனை எதுவோ செய்தது. நடந்தவை எதுவும் அறியாதவளாக ஒரு இளம்பென்னொருத்தி கேட்டைக் கடந்து சென்றாள். உச்சி வெயில் கருணையின்றி சுட்டெரித்துக்கொண்டிருந்தது. பிராதான சாலைக்கு வரும் வரை உள்ளேகேட்ட அலரல் சப்தம் மட்டுமே கேட்டுகொண்டிருந்தது. கடைகள், வீடுகள் யாவும் ஆளற்றுக் காணப்பட்டது. தார் சாலை உருகி வழிவது போலிருந்தது. எப்போதோ இறந்து போய்விட்ட நெருங்கிய நண்பர்கள் எல்லாம் காரண‌மின்றி நினைவிற்கு வந்தார்கள். கார் நிறுத்தப்பட்ட தெருவிற்கு நடந்துகொண்டிருக்கையில் அந்த பெருந்திரளான கூட்டத்தைப் பார்த்தார். அந்த உச்சி வெயிலிலும் டி.வி ரிப்பேர் கடையில் இருந்த‌ ஒரு ஒற்றை டி.வி-யைச்சுற்றி நின்றுகொண்டிருந்தது கூட்டம். ஒரே கூச்சலும், கரைச்சலுமாக இருந்தது அந்த இடம். கூட்டத்திற்குப் பின்னால் கிரிக்கட் இறுதியாட்டம் துடங்கியிருந்தது. இங்கிருந்து டி.வி தெரிவதாக இல்லை. கூட்டத்தில் ஒருவன் ஆர்வமிகுதியில் சாமுவின் மீது மோதிவிட்டு .."சாரி சார்..." என்று முகம் கூட பார்க்காமல் மீண்டும் கூட்டத்துள் புகுந்தான். சாமுவிற்கு கோபம் கோபமாக வந்தது. இவர்களெல்லாம் எப்போது திருந்துவார்கள்…எப்படி மிருகங்கள் போல இருக்கிறார்கள்…இப்படியா...முட்டாள்கள்... அடுத்தவர்களைப் பற்றி இவர்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா... ச்சை!..பாஸ்டர்ட்ஸ்!!!

கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் என்ன...?


சச்சின் வேறு விளையாடுகிறாரா இல்லையோ?!...


*** முற்றும் ***