” சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே…
பாடகமே என்றனைய பால்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடா நெய்பெய்து முழங்கை வழிவர
கூடியிருந்து குளிர்ந்தேளோர் ரெம்பாவாய் “
ஆண்டாள் பாசுரங்கள் ஒத்திசைவின்றி ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
மார்கழி ஏகதேசம் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை, ஆதலால் பள்ளி சிறார்கள் கோவிலில் சுற்றியமர்ந்து புத்தங்களையும் மைக்கையும் கிடைத்தவாறு பகிர்ந்து பாசுரங்களை உரத்துப் பாடினர். நீலகண்டன் உச்சரிப்பின் பொருள் ஒன்றும் விளங்காது காதில் விழும் சொல்லுக்கான இணையை புத்தக அச்சில் தேடிக்கொண்டிருந்தான். அவன் தோள்வளையே தொட்டுவிடுவதற்குள் மற்றவர்கள் ரெம்பாவாய் கடந்திருப்பார்கள்.
மார்கழி ஏகதேசம் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை, ஆதலால் பள்ளி சிறார்கள் கோவிலில் சுற்றியமர்ந்து புத்தங்களையும் மைக்கையும் கிடைத்தவாறு பகிர்ந்து பாசுரங்களை உரத்துப் பாடினர். நீலகண்டன் உச்சரிப்பின் பொருள் ஒன்றும் விளங்காது காதில் விழும் சொல்லுக்கான இணையை புத்தக அச்சில் தேடிக்கொண்டிருந்தான். அவன் தோள்வளையே தொட்டுவிடுவதற்குள் மற்றவர்கள் ரெம்பாவாய் கடந்திருப்பார்கள்.
என்றாலும் புதிதாய் தமிழ் படிக்கும் அவனுக்கு அது ஒரு நல்ல பயிற்சியாக்கும் என்று அம்மம்மா அவனுக்கு சொல்லியிருந்தாள். ஆனால் அதை விடவும் சுவாரஸ்யமான முகாந்திரம் நீலகண்டனுக்கு இருந்தது. அது பூஜையின் நிறைவில் தளிர்வாழை இலையில் வழங்கப்படும் பசுநெய்யும், தேங்காய்த் துறுவலும், வறுத்த முந்திரியும் திராட்சையும் கலந்த சூடான பொங்கலும் கரும்பு சர்க்கரையும். அதற்காகவே “சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவார் எப்பாவாய்” வரை வாய் பார்த்து பாடி முடிப்பர். வட்டமாய் கூடியமர்ந்து உண்டு பொங்கல் சூட்டால் ஆன இலைக்கருக்கலை ஒப்பிட்டு விளையாடினர்.. நீலகண்டன் இலையில் தங்கிய வெதுவெதுப்பு நீங்கும் வரை இலையை உள்ளங்கையில் வைத்திருந்து பின் எறிந்துவிட்டு வீடு திரும்புவான்.
ஒதுங்காத சுருட்டை முடியும், ஒத்த வயது சிறார்களைவிட சற்று உயரமும், திரண்ட தேகமும், சற்றே சட்டையிலிருந்து வேளியே துருத்திக் கொண்டுவரும் வெள்ளை தொப்பையும், சந்தனக்கீற்றும் கையில் இளஞ்சூடான பிராசாதமுமாக வரும் நீலகண்டனைக் கண்டால் யார்க்கும் கொஞ்சம் வம்பிழுக்கத் தோன்றும் தான்.
உப்புப்பள்ளம் சிவந்தமண்சாலை கடந்து பீக்காடு கடக்கையில் மூக்கைப்பிடித்து, சுப்பைய கவுண்டர் டீக்கடையைக் கடக்கும் போதுதான் அந்தக் குரல் கேட்டது, “டே! பன்னண்டே முக்கால் மவனே! வாடா இவிடே…! ” ஆணா பெண்ணா என்று வேறுபடுத்த முடியாத ஒரு குரலில் மீண்டும் ஒலித்தது.. “யடா! 12 ¾.. உன்னத்தாண்டா!”.அது தன்னை நோக்கி விளிக்கப்பட்ட குரல் என்று ஒருபோதும் கற்பணை செய்து பார்த்ததில்லை. இங்கு வந்த சிலவருஷத்தில் பல சத்தங்கள் என்ன பொருளென்று அறியாது நீலகண்டன் கடந்து போய் விடுவான். 10 வருடம் முன்பு நீலகண்டனின் அப்பா கிருஷ்ணன்பிள்ளை பட்டாளத்திலிருந்து ஓய்வு பெற்று ஒரு வங்கியில் காவலாளியாக..... (பாதுகாப்பு அதிகாரி என்றுசொல்லாவிட்டால் அவர் கோபித்துக்கொள்வார்) நியமனமாகியிருந்தார். அதுவரை பாலக்காட்டில் குடியிருந்த மொத்தக் குடும்பத்தையும் கோவைக்கு குடிமாற்றினார். கிருஷ்ணன்பிள்ளை – மனைவி, மக்கள், இரண்டு அக்காமார், இரண்டு தங்கைமார், நான்கு தம்பிமார், அப்பா, அம்மா என்று 15-20 உருப்படிகள். கிருஷ்ணன்பிள்ளையின் அப்பா பெரும்பாலும் வருடங்கள் வீடுதங்கியதில்லை. ஆறுமாதம் வீடு ஆறுமாதம் நாடு. அப்படியொரு சுபாவம்.
கிருஷ்ணன்பிள்ளை பட்டாளத்தில் இருந்த வருஷங்களில் ஊரில் தரவாடு வீடும் பரம்பும் விற்று தன்னதிஷ்டம்போல தின்றுதீர்த்து கடனேற்றி வைத்திருந்தார் அவரது அப்பா. அந்நிலையில் உள்ளதெல்லாம் விற்று பிழைப்புதேடி தமிழ்நாடு வந்தேறிய ஒரு குடும்பம். இருபது பேருக்கான வீடு வாடகைக்கு கிடைக்காமல் ஊர் மூலையில் ஒரு கைவிடப்பட்ட வீட்டோடு சேர்ந்த ஒரு பரம்பை வாங்கினார்.
வசதியான கவுண்டம்மார்களது தோட்டங்களும் அதைச்சுற்றி, அதில் தினக்கூலிக்கும், அடிமைக் கூலிக்கும் இருக்கும் தொழிலாளர் கூட்டங்களும் இருக்கும் இடம். கற்கள் நீக்கி, பரம்புகள் அடித்து, நிலத்தைப் பண்படுத்தி சுய தேவைக்கான தோட்டத்தை அமைத்துக் கொண்டார் கிருஷ்ணன் பிள்ளை. அங்கிருந்த இரு பிரிவுக்கு நடுவே புதிய ஒரு பிரிவாக காணப்பட்டது கிருஷ்ணன்பிள்ளை குடும்பம். மற்றபடி எண்ணிக்கையிலும் குறைந்தவர் ஒன்றும் இல்லை அல்லவா? வங்கிக்கு வேலைக்கு போகின்றார் என்ற அந்தசு இருப்பினும், காட்டில் இறங்கி வேலை பார்ப்பதிலும் சரி பழகுவதிலும் சரி தொழிலாளி முதலாளி வித்தியாசம் இல்லாமல் இணக்கமாக இருந்தார் கிருஷ்ணன்பிள்ளை. வெற்றிலை முறுக்கும் போது யார்கூட இருப்பினும் இரண்டு வெற்றிலை நீட்டுவார். கூலிகள் அவரை “கொணமுள்ளவனாக்கும் மலையாளத்தான்” என்று மெச்சினர். மேலும் இளம் தலைமுறைகளுக்கு ஆர்வமூட்டும் சில சங்கதிகளும் அவர் வீட்டில் இருந்தன. கடை இருபதுகளில் சிவந்த இரண்டு ஆண்பிள்ளைகளும், முன் இருபதுகளில் வடிவான இரண்டு பெண்பிள்ளைகளும் அப்பகுதி இளசுகளை கவரத் தவறவில்லை. கணவன் வீட்டில் இல்லாத நெடும்பகல்வாடை விரட்ட பொதுக்குழாய்களில் பொழுதுபோக்கும் குடும்பஸ்த்ரீகளுக்கும் ஆர்வமில்லாமல் இல்லை. இடை இருபது இருவர்கள் வழியில் எங்கு தென்பட்டாலும் கூட்டமாக சூழ்ந்து அவர்கள் முகம் சிவக்கும் அளவுக்கு ‘அன்புடை’ வார்த்தைகள் பேசுவர் பண்பிலா மகளிர். இவர்களுக்கு பயந்தே பலநாட்கள் தெருவழி தவிர்த்து தோட்ட வழியில் வீடு வந்தடைவார்கள். எல்லா கதைகளும் கேட்டறிந்த (கிருஷ்ணம்பிள்ளையின் மனைவி) ஏட்டத்தி “பொம்பளைக்களுக்க வொரு லெட்சணம்” என்று அலுத்துக் கொள்வாள்.
பொழுது சாய்ந்து இரவு தாழும் நேரத்தில் ஏட்டத்தி வாசலுக்கும் தெருவுக்கும் மத்தியில் சிறிய நிலவிளக்கை பற்றவைப்பாள். கடந்து போகும் சாதரணப்பட்டவர்கள் கோவிலைப்போல கை கூப்பிவிட்டுச் செல்வார்கள். கூடு வந்தடைவதைப்போல கிருஷ்ணம்பிள்ளை வீடு நிறைந்துவிடும். களியோ கருவாட்டுக் குழம்போ, சாதம் புளிக்கரைச்சலோ என்று எல்லா வயிற்றுக்கும் வார்த்துவிட்டு சுவர்கள் சூழ்ந்த வெட்ட வெளியில் இருபது உருப்படிகளும் வரிசையில் கிடந்து உறங்கும். இருந்தும் கேளிக்கைக்கு ஒன்றும் குறைவிருந்ததாகத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்திருந்த வருடம் ஏட்டத்தி நீலகண்டனை கையில் சுமந்து வந்தாள். அடுத்த வருடமே அடுத்தது வயிற்றில் சுமந்தாள். அதே வருடம் கிருஷ்ணம்பிள்ளையின் அம்மையும் கர்பமானாள். வீட்டில் தங்கிவது சிலநாளாக இருந்தாலும் வீட்டிற்கு ஒரு பாரத்தை ஏற்றிவிட்டு தான் இவ்வளவு உருப்படிகள். ஒன்றும் அறியாதது போல் தகப்பன்காரர் தோட்ட வேலையில் மும்முரமாய் இருந்தார். கிருஷ்ணம்பிள்ளைக்கு கோபமும் நாணக்கேடும்! ஒன்றும் சொல்லுவதற்கில்லை! பிரசவம் முடிந்த முதல் வேலையாக லோன் எடுத்து இரண்டு பெண்களுக்கும் கருத்தடை அறுவைசிச்சையும் கையோடு செய்தார். பெரியவரின் காதில் விழுமாறு சலிப்புடன் சொல்லுவார், நீலகண்டனைப் பார்த்து “கேட்டோடா மோனே…நின்னைவிட இளைய பிராயத்தில் ஒரு சித்தப்பன் – கொள்ளாம்!” என்று. தொடர்ந்த கேலிகளில் வெறுப்பாகி சில காலம் பாலக்காட்டிற்கே சென்று தலைமறைவானார் பெரியவர்.
அதன்பின் கடந்த பத்து வருடங்களில் பெரியவர் சன்னியாசியாக திரும்பியதும், இரண்டு பெண்களை கட்டிச்சு கொடுத்ததும், ஒருத்தி திரும்பி வந்ததும், காரணமே அறியாது ஒருத்தி ஜீவஹத்தி செய்ததும், கோவையில் கவுண்டர்கள் காடு கழனிகளைத் தவிர்த்து ஆலைகள் திறக்கவும், மேலும் பல மலையாளக் குடும்பங்கள் மில் வேலைகளுக்காக புலம் பெயர்ந்ததும் எல்லாம் நடந்தது. இதற்கிடையில் யாருடைய ப்ரத்யேக அக்கரையும் இன்றி நீலகண்டனும் சகோதரர்களும் வயதொத்த சித்தப்பனுமெல்லாம், யாரும் கவனிக்கும் முன்பே வளர்ந்தெழுந்தார்கள். தமிழும் திகழவில்லை, மலையாளமும் மறக்கவில்லை.
தமிழில் பேசும் பல வார்த்தைகளும் வெறும் சப்தங்கள் என கடந்து போய் விடுவான் நீலகண்டன். அது தான் அன்று “12 ¾” என்று கூப்பிட்ட போது அவன் எதுவும் நடக்காதது போல கடந்து போகப் பார்த்தான். ஆனால் மறுநிமிடம் நீலகண்டன் அவன் முன் எதிர்கொண்டது ஒரு விசித்திர ஜந்துவை.
ஆணா பெண்ணா என்று உறுதியாக சொல்ல முடியாத தோற்றம். கழுத்துவரை முடி வெட்டப்பட்டிருந்தது, பொட்டு வைத்திருந்தாள். காதிலும் மூக்கிலும் துளைகள் மூளியாக இருந்தன. காதின் துளையில் ஒரு கருவேப்பிலைக் காம்பை சொருகியிருந்தாள். உதடுகள் வெடித்து கருத்து இருந்தன, வாயின் இரு மூலைகளும் பிளந்து வெள்ளையாக இருந்தன. பற்கள் விலகத்தொடங்கி தெளிவான சந்துகள் உருவாகியிருந்தன. வாயில் பீடி புகைந்து கொண்டு இருந்தது. அஜாக்கிரைதையான ஜாக்கட்டும், சேலை போன்ற ஒன்றை அணிந்திருந்தது மட்டுமே அவள் ஒரு பெண் என்பதற்கான ஒரே அடையாளமாக இருந்தது. நீலகண்டன் கண்கள் சிவந்து உதடுகள் வியர்த்தது. தொண்டையில் வலி உருவாகிக் கொண்டிருந்தது. காரணம் அவனது அரைக்கால் சிராய் வழியாக விரல்களை விட்டு அவன் சாமாணத்தை சேர்த்து பிடித்திருந்தாள் ஆண்டாள். “கூப்பிட்டா வர மாட்ட 12 ¾. கேட்டும் கேக்காத மாதிரி ரெளசா போற? “
பொது இடத்தில் அவன் சாமாணத்தைப் பிடித்தது அவனுக்கு அவனமாக இருந்தது. ஆனால் அவளது பிடி விலக்க முடியாததாக இருந்தது. அவனுக்கு அழுகையாக வந்தது,. பெரியவனானதும் ஒரு நாள் இவளை கத்தியால் குத்திவிடவேண்டும் என்று தீர்மாணித்துக்கொண்டான். ஆவேசமாக “என் பெயர் 12 ¾ இல்லை!” என்றான்.
”வக்காளி பார்றா! ஆம்பள தான்!” – என்றாள். அந்த வயதில் ஆம்பிளை என்ற வார்த்தை, வலிக்கு மத்தியிலும் சற்று கெளரவமாகவே இருந்தது. தனது பிடியில் இருந்து விடுவித்து ‘உன் சித்தப்பனை வரச் சொல்லு…போ! இனி கூப்புட்டா ஒலுக்கமா வந்து குஞ்சபுடிச்சுட்டு சலூட் வெக்கனும்…இல்ல..” – என்று கண்டித்து அனுப்பினாள்.
ஆண்டாள் அவ்வூரில் யாராலும் அறியப்பட்ட பெரும் போக்கிரி. யாவருக்கும் பொதுவான தலைவலி என்று தான் சொல்ல வேண்டும். சுப்பையன் கவுண்டர் டீ ஸ்டால் முன் அமர்ந்து அக்கால இளசுகளிடம் பீடி வாங்கி புகைப்பது, போகும் வரும் பெண்களை கேலி செய்வது, டீக்கடைக்கு வருபவர்களிடம் வம்பு செய்வதும் தான் வாடிக்கை. மற்றபடி பிரதான தொழில் சீட்டாடுவது. உப்புப்பள்ளம் பாலத்திற்கடியில் மணல் பரப்பி நாள் முழுதும் சீட்டாட்டம். சிலசமையம் சாராயம் உண்டு. தோற்றால் ஒரு கட்டு பீடி கடன் வாங்கி சுப்பையன் கடை முன் வந்தமர்வாள். காரணமின்றி காதில் கேட்க ஒண்ணா வார்த்தைகளால் வசை பாடுவாள். பெரும்பாலும் பாடுபொருள் ஆண் மையப்படுத்தி தான் இருக்கும். ‘பாடாண்’ திணையில் சேர்த்துக் கொள்ளலாம். சுப்பையனிடம் கடன் கேட்டால், டீ மாஸ்டர் சுடு தண்ணியை ஊற்றுவதாக அச்சுறுத்துவான். உடனே சுப்பையன் பாடு பொருளாக மாறுவான். வியாபார தோஷம் கருதி சுப்பையன் ஒரு கட்டிங்கான காசை தந்து அனுப்புவார். அத்தோடு நிற்க மாட்டாள், மறுநாள் காலையில் “நீ தான கட்டிங் காசு கொடுத்த, தலை வலிக்குது டீ கொடு” என்று ரவுஸு செய்வாள்.
ஒரு வெள்ளிக் கிழமை சுப்பையன் கடைமுன் காலை முதல் வந்திறங்கி முகாமிட்டாள். பிரதி வெள்ளியன்று சுப்பையன் ஒரிக்கல். மெளன கடைப்பிடிப்பு. பொதுவாக கடைப்பக்கம் வரமாட்டார். ஆனால் ஆண்டாளின் சச்சரவு கட்டுக்கடங்காமல் போனது. காலையில் டீ வாங்க சொம்புடன் வரும் சிறுவர்கள், பெண்களையெல்லாம் துரத்திவிட்டுக் கொண்டிருந்தாள். அவளாது கூச்சல்களுக்கு அங்கிகாரம் கிடைக்காத அங்கலாய்ப்பில் சுப்பையனைத் தாறுமாறாக பேசத் தொடங்கினாள். கடையின் வெளியே ரகசியமாக எல்லோரும் சிரித்து கேலி செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாராத தருணத்தில் ‘வ்ரூம் வ்ரூம்’ என்ற சப்தம் காற்றில் கேட்டது. சுப்பையன் இரண்டு மூன்று பப்பாளிக் குச்சிகளை சேர்த்தவாறு பிடித்து ஆண்டாள் மீது விளாசினார். சுற்றியிருந்த கூட்டம் விலகி ஓடியது. முதுகில் விழுந்த முதல் அடியின் அதிர்ச்சியில் திரும்ப அடுத்த அடிகள் அவள் முகத்தில் விழுந்தன. விலக எத்தனித்து பெஞ்சுகளில் தடுக்கி விழ நல்ல சவுகரியமாக போய்விட்டது. பப்பாளிக் குச்சிகள் நாராக கிழிந்தன. பெஞ்சின் முலை மோதி ஆண்டாளுக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது. வெறுப்புற்ற சுப்பையன் “தேவிடியா முண்டை நல்ல விதமா நாலு ஊறுசனம் இருக்க விட மாட்டியா” என்று கொதித்தார். ஊரார் சுப்பையனின் கோபத்தைக் கண்டு மிரண்டு நின்றனர்.
”ங்கொம்மால.. கேக்க யாரும் இல்லன்னு போட்டு அடிக்கிறியாடா.. “ பற்களை கடித்தவாறே கலங்கிய தொனியில் கத்தினாள் ஆண்டாள். அவள் அழுகிறாளா என்று சரியாக எவருக்கும் தெரியவில்லை. அவிழுந்து கிடந்த சேலையை சுருட்டிப் பொதிந்து கட்டத் தொடங்கியவாறே அரற்றிக் கொண்டு தெருவில் நடந்து சென்றாள். “பொம்பள மேலையா கைய வெக்கற…உங்கள சும்மா விட மாட்டேண்டா.. உன் கடைய காலி பண்ணாட்டி கேளுடா..! “ என்று புலம்பியபடியே சென்றாள். அன்று முழுக்க சுப்பையன் கடை முற்றம் அமைதியாகவே இருந்தது. வியாபாரம் கூட மந்தம் போட்டதாய் தோன்றியது. ஆண்டாள் போலீசையோ அல்லது ரவுடிகளையோ கூட்டிக் கொண்டு வரக்கூடும் என்று எல்லோரும் நினைத்தனர். மாறாக இரண்டு மூன்று நாட்க அவள் தென்படவே இல்லை. அவளுக்கு என்ன ஆயிற்று என்று யாரும் தேடவும் இல்லை. ஆண்டாளை அதன்பிறகு பல மாதங்கள் யாரும் பார்க்கவில்லை. ஒரு பெண் யாருமே தேடப்படாதது எவ்வளவு துரதிஷ்டமானது?
உணர்ச்சிவசப்பட்டு அடித்து விட்டாலும் சுப்பையனுக்கு மனசு கேக்கவில்லை, பெண்ணை வேறு அடித்து விட்டோம். இனி கேசு எதாச்சும் கூட்டுவாளோ என்று உள்ளூற பயம் வேறு இருந்தது. இந்த நரைப் பருவத்தில் போலிஸ் டேசனுக்கெல்லாம் போவது உகந்த காரியமா என்று நினைத்த சுப்பையனும் பாலப்பட்டியில் உள்ள தங்கை வீட்டிற்கு ஒரு வாரம் ஒரம்பரை போனார்.
ஆண்டாள் சொன்னது போலவே அவளுக்கு யாரும் இல்லை தானோ என்னவோ. அவளது அண்ணன் அண்ணி எல்லாம் அதே ஊரில் தான் வசித்து வந்ததாக சொன்னார்கள். அவளுக்கு கல்யாணம் கூட ஆகியிருந்தது என்று சொன்னார்கள். அவள் ஊட்டுக்காரனை கத்தியால் குத்தி விட்டதாகவும், அதற்கு 2 வருடம் ஜெயிலில் இருந்து வந்ததாகவும் சொல்லுபவர்கள் உண்டு. அவன் இப்போதும் திருப்பூரில் வேறு ஊட்டுடன் வசிப்பதாகவும் கேள்வி. வேறு சிலரோ அவள் தோற்றத்தில் பெண்போல இருந்தாலும் அவள் ஆம்பளதான். கல்யாணத்துக்கு பிறகு விஷயம் தெரிந்து தான் மாப்பிள்ளை மறுநாளே ஓடிவிட்டான் என்றனர். எது எப்படியானாலும் யாரும் அவளை குடும்பத்தினராய் ஏற்றுக்கொள்வதில்லை, ஒன்று செத்துக்கிடைத்தால் போதும் என்று தான் நினைத்திருந்தனர் அவள் குடும்பத்தினர். கூட்டு நடப்பதெல்லாம் ஆண் பிள்ளைகளோடுதான். அதில் நீலகண்டனின் சித்தப்பனும் ஒருத்தன். சுத்த மலையாளியாக இங்கு மறைந்து நடப்பதை விட தமிழனாக பாவித்து நிமிர்ந்து நடப்பதே கொள்ளாம் என்பது ஹரி சித்தப்பாவின் வாதம். குடும்பங்கள் ஒன்று கூடும் நேரங்களில் சிலப்பொழுது சூடான விவாதங்கள் வரும். நீலகண்டனின் அப்பா ஊரில் தேர்ந்தெடுத்த மலையாளிகளுடன் மட்டுமே பழக கூடியவர். பஸ்டேண்டு கீதா பேக்கரியில் விக்கும் மாத்ருபூமி பத்தண்ணத்தில் ஒன்று அவருடையதாய் இருக்கும். ஊரில்லாத நாளில் உள்ள பேப்பரையும் சேர்த்து வைத்து வாசித்தாலே அவருக்கு சமாதானம். ஆனால் ஹரி சித்தப்பாவோ ”பஞ்சம் பிழைக்க நாடு எறங்கி வந்தாலும் உங்களுடைய ஒரு பெகுமானம்.. “ என்று சொல்லுவார். அப்பாவோ “சோறு எவட வாங்கி கழிச்சாலும் சொகர மாறத்தில்லா..கேட்டோ!” என்பார். “என்ன தான் நீ தமிழம்மாரோட நடந்தாலும் கடைசியில் உனக்கு தங்கியிருக்கும் பேரு 12 ¾ தான். பின்னே.. ஆணும் பெண்ணும் இல்லாத ஆவலாதிகளோட நடக்குறத விட்டுட்டு வேற ஜோலி உண்டான்னு பாரு.... வளர்ந்த மக்களு வீட்டின் அகத்தோட்டு இருந்தால், ஐஸ்வர்யம் பொறத்தோட்டு போகும்” என்பார்.
இதெல்லாம் கேட்க சகிக்காது சித்தப்பா வீடு வருவதையே குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டார். படிப்பில்லா விட்டாலும் சூது கை கொடுத்தது. ஊர் பையன்கள் “ இந்த 12 ¾.. இவன் ஒரு மாதிரி சரக்கு டோய்” என்று பேசிக்கொண்டனர். விரைவிலேயே ஆண்டாளின் சினேகிதம் கிட்டியது. சீட்டாட்த்தில் எப்பவும் கூட்டாளிகள். ஆண்டாளுக்கு அவன் ராசியான கை. ஆனால் ஹரி நீண்டநாள் அங்கேயே தங்கவில்லை. அவன் ஊர் ஊராக போய் சீட்டாட தொடங்கினார். யாரும் அறியாது எதோவொரு லாட்ஜில் நடக்கும் ஆட்டம்..இடமும் காலமும் மாறி மாறி நடக்கும். ஜெயித்தாலும் தோற்றாலும் அளவில் பெரியது. ஒரு கருக்கல் விடியலக்கு உட்பட்ட நேரத்தில் மொத்தக் காட்டையும் விட்ட கவுண்டர்களும், அதே இரவில் கைவீசி வந்து லட்சாதிபதியாக போனவனும் உண்டு. ஆனால் சீட்டாடி ஜெயித்து விருத்தியானவன் எவனுமில்லை. ஒன்னா மீண்டும் சூதில் விடுவான், இல்லையென்னா தொற்றவன் தட்டிப் பறிப்பான்.
ஆண்டாள் சொல்லுவாள் “அவன் ரத்தத்திலே சூது உண்டுடா..அவன் இங்க இருக்க வேண்டிய ஆளில்ல. அவன், அவன் சீட்ட ஒழுங்கா பாத்து ஆடுனா ஜெயிக்கலாம், ஆனா தோக்காம இருக்கனும்னா அடுத்தவன் சீட்ட அறியனும்”.
ஹரி அப்படித்தான்!!
ஆனால் சூதின் வசீகரமே அது எப்போதும் ஒருவன் வசமே தங்காது என்பது தான். மூலத்துறை சந்தை மைதானம் கூடும் சமயத்தில் விளையாடுவார்கள். கிட்டத்தட்ட பெரியதொரு போட்டி போல நடக்கும். ஆயிரங்களும் லட்சங்களும் கைமாறும். ஹரிக்கு ஆரம்பத்திலிருந்தே இலக்கங்கள் கூடி வரவில்லை. உள்ளங்கை வியர்த்தது. சீட்டுகள் கையிலிருந்து நழுவின. தொடர்ந்து தோற்றது மட்டுமின்றி கடன் வாங்கி ஆடி மீண்டும் தோற்றான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவாகி விடவே ஊரிள் அவனைக் கண்ணோட்டமிட ஆள் இருந்தது.
தெரு நாய்கள் வீட்டின் நிழல் நகர்ந்துவிட்டது அறியாமல் வெயிலிலே தூங்கிக் கிடக்கும் ஒரு பின் மதியபொழுதில் ஆட்களின் கூச்சலில் உறக்கம் கலைந்தன. அப்போதுதான் கண் அயர்ந்த வீட்டு பெண்கள்ளுக்கு யார் யார் என்பது தெரியாமல் அனைத்தும் அண்ணிய முகமாக தெரிந்தது. ஒற்றை ஆளை மூன்று நான்கு பேர் சேர்ந்து அடிக்க அவன் பிடி விலக்கி வாயில் லுங்கியின் நுணியைக் கடித்தபடி ஓடினான். அது ஹரி என்பது பரிட்சயப்பட்டோர்க்கு அறிந்தது. விரட்டிப் பிடித்து வந்த போது விஷயம் அறிந்து ஊர் பையன்கள் சேர்ந்து கொண்டனர். ஒரு கோஷ்டி சண்டை போல தொணித்த சூழலில், எங்கிருந்து வந்தது என்பதறியாது அதே ஆணும் பெண்ணுமற்ற குரல்! ஆண்டாளுடையது. எவண்டா எங்க பையன அடிச்சது என்று இறங்க எதிரணிகள் எதிர்பாராத இந்த போட்டியை எதிர்கொள்ள அறியாது திணறி…பின் ” யக்கா பேசி தீத்துக்கலாம்.. “ என்று பணிந்தனர். போலீசிடம் போக முடியாத காரணத்தால் விஷயம் அங்கேயே பைசல் செய்யப்பட்டது. ஆண்டாள் சுற்றும் முற்றும் கொஞ்சம் பணம் வசூலித்து க் கொடுத்து ஊரைப்பார்த்து போகச் சொன்னாள். ஹரியிடம் கொஞ்சம் காசு கொடுத்து டாக்டரிடம் அனுப்பி வைத்தாள். மீண்டும் தனது ஆஸ்தான கடை மதில் சுவரில் வந்து அமர்ந்தாள்.
அவள் இவ்வளவு நாள் எங்கு இருந்தாள் என்ன செய்தாள் என்று யாரும் கேட்டுக்கொள்ளவில்லை. அவள் உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. அவள் முடியை கிராப் வெட்டியிருந்தாள் – ஜாக்கெட்டிற்கு பதிலாக ஏதோ பழைய டி-ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தாள். அதில் மைக்கல் ஜாக்சனின் படம் போட்டிருந்தது. சேலை முந்தானையை டி-ஷர்ட் மேல் சுற்றியிருந்தது விசித்திரமாக இருந்தது. அவள் அடிக்கடி ஆங்கிலத்தில் பேசினாள் – பெரும்பாசும் யாரையாவது ‘பேசு’வதற்கு குறிப்பாக அடிக்கடி ‘பாஸ்டர்ட்’ என்பதை ஒரு அடைமொழி போல எல்லோருக்கும் உபயோகித்தாள். அச்சமயயங்களில் சுப்பையன் கடையின் வெளி வராந்தாவில் சிறிய டிவி ஒன்றில் கிரிக்கெட் மேட்ச் ஒளிப்பரப்புவது வழக்கமாகி இருந்தது. மேட்சில் சரியாக பந்து வீசாதவன், டீயில் சர்க்கரை போடாதவன், மினி பஸ்ஸை நிறுத்தாத டிரைவர், ஹாரனை வலுத்து அடிக்கும் தண்ணி லாரிக்காரன், பட்டபகலில் கூடும் தெருநாய்கள் - எல்லாவற்றையும் அவள் திட்டினாள் “ங்கொம்மால பாஸ்டர்ட்” என்று. இவை இருக்க எல்லாரையும் தன்னை ‘டையானா’ என்று அழைக்குமாறு அன்பாக கட்டளை இட்டாள். பையன்கள் அவளை டையானா என்று கூப்பிட்டு கிண்டல் செய்தனர். ஆண்டாள் உள்ளூற சந்தோஷப் பட்டதாகத் தெரிந்தது. அதன் பிந்தைய அவளது பாவம் வெட்கத்தில் வகையைச் சேர்ந்த்ததா என்று அறுதியிட்டு கூற முடியாததாக இருந்தது,
அவள் குன்னூரில் ஏதோ ஒரு எஸ்டேட் பங்களாவில் வேலை பார்த்ததாகவும், துறைமார்கள் நிறைய வந்து போகும் எஸ்டேட் என்பதால் கொஞ்சம் ஆங்கிலத்தையும் ஒப்பேற்றிக் கொண்டாள். கையில் சிறிது பணமும் வைத்திருந்தாள். அவள் வந்திறங்கிய ஒன்றிரண்டு வாரங்கள் சுப்பையன் கடை முற்றம் கலகலத்தது இருந்தது. கோல்டுபில்டர், டீ என்று ஓடிக்கொண்டே இருந்தது - மாலையும் மதியமும் மது. அந்த நேரத்தில் தான் நீலகண்டன் கோவிலில் இருந்து பாசுரம் பாடி..பொங்கல் தின்று… திரும்பி வருகையில் அந்த ஆணும் பெண்ணுமில்லாத குரலைக் கேட்டான். “டே 12 ¾…!”. அவன் சித்தப்பாவை விசாரித்தாள். ஒரு 50 ரூபாயை அவனிடம் கொடுக்கும்படி சொன்னாள். நல்ல கருப்பு ஐம்பது ரூபாய். காந்தியருகில் இருக்கும் வெள்ளை இடத்தில் வழக்கம்போல கிருக்கல்கள். நீலகண்டன் அதையும் எழுத்துக்கூட்டி படிக்க முயன்றான். தோற்றுபோனான்.
யார் இந்த ஜென்மம். என்னோடு ஏன் பேசுகிறாள். ஐயோ! அவள் கொடுத்த அழுக்கான 50 ரூபாய் வேறு. அதை எறிந்து விடலாமா என்று தோன்றியது. நீலகண்டனுக்கு. ஆனால் வீட்டிற்கான சாலை திரும்பும் வரை ஆண்டாளின் கண்கள் அவனையே பார்ப்பதாக அவனுக்கு தோன்றியது. ஹரி சித்தப்பா பத்து நாட்களுக்கு மேலாக படுத்தபடுக்கை தான். எங்கு எல்லாம் அடிபட்டிருந்தது என்று சரியாக சொல்ல முடியவில்லை. வயிற்றிலும் கழுத்திலும் நல்ல வேதணை. இருமி இருமி துப்பிக்கொண்டிருந்தார். எச்சிலோடு லேசான இரத்தமும் கசிந்தது. கிருஷ்ணன்பிள்ளைக்கு ஆத்திரம் தாங்காது திட்டிக்கொண்டே இருந்தார். “உன் உங்க எல்லோருக்கும் வேண்டி உழச்சி உழச்சே சோர வற்றி போச்சு எனக்கு. அவனவன் வயசுல அவனுக்குன்னு ஒரு கவளம் சோறு சம்பாதிக்க ஏல…ஆயுசு முழுக்க ஏட்டன் சோரைய குடிச்சே ஜீவிக்க நினெப்போ…” என்றெல்லாம். ஹரிசித்தப்பாவிற்கு இதெல்லாம் கேட்க சகிக்கவில்லை தான் ஆனால் வெளியே போய் ஒரு பீடி வாங்க கூட எட்டணா இல்லை. அந்த நிலையில் தான் அந்த ஐம்பது ரூபாய் வந்து சேர்ந்தது. அதை படக்கென்று வாங்கி லுங்கியில் ஒளித்து வைத்துக்கொண்டார் சித்தப்பா.
யாரும் எதிர்பார்த்திருக்காவிடாலும் நீலகண்டனுக்கு தெரிந்திருந்தது. ஹரி சித்தப்பா அடுத்தநாள் வீடுவிட்டிருந்தார். எங்கு போனார் எப்போ வருவார் என்றெல்லாம் யாரும் அறியவில்லை. சரிதான் ஆண்கள் அந்த வீட்டில் அப்படி செய்வது ஒன்றும் புதிதல்லவே. “பின்ன…அப்பனுக்கு ஒரு வாரிசு வேணமல்லோ…” என்று வீட்டில் எல்லோரும் சலித்துக்கொண்டதோடு சரி. பலமாதங்கள் எந்த செய்தியும் இல்லை, இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும்போது தான் எல்லோருக்கும் அந்த சந்தேகம் வந்தது. ஆனால் யாரும் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை. அடுத்து வந்த வருடங்களில் என்னவெல்லாமோ மாறிப்போனது. ஹரி சித்தப்பா வீட்டைவிட்டு போன சில மாதங்களில் ஆண்டாளை போலீஸ் எதற்காகவோ அரெஸ்ட் செய்து கூட்டிப்போனார்கள். சுப்பையன் கடையில் டீ இரண்டு ரூபாய் ஆனது. முன்போல யாரும் வந்து டீ வாங்கி சொல்வதில்லை. வெளியூர் வேலையாட்கள் மட்டும் டிபன் சாப்பிட வந்தனர். ஆண்டாள் கும்பல் சிதறுண்டு போனது. அதன்பின் அவ்ளை பார்த்ததாக யாரும் சொல்லி கேள்விப்படவில்லை. நீலகண்டன் டவுனில் ஆங்கில பள்ளிக்கு மாறிபோனான். தமிழுக்கு பதிலாக ஹிந்தி படித்தான். கடைசிவரை அவனுக்கு தமிழ் கைகூடவில்லை. இப்போதும் அவன் நினைப்பதுண்டு, அந்த கறுத்த ஐம்பது ரூபாய் நோட்டில் என்ன எழுதியிருந்தது என்று படிக்க முடிந்திருந்தால் தன் ஹரி சித்தப்பாவைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று!
* * *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக