இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஜனவரி, 2007

என் ஜன்னலின் வழியே : ' வெயில்'


"என்பிலதனை காயும் வெயில் போல

அன்பிலதனை காயும் அறம் !! "


பால்யம் என்பது கனவுகள் பூக்கும் தொழிற்சாலை.முடிவற்ற கனவுகளின் நீள்பாதயில், கடந்து வருவதே அறியாமல் பால்யதை கடந்து விடுகின்றோம். தொலைந்துவிட்ட கைக்குட்டையைப் போல, மனம் ஏனோ அதைத் தேடிப் பார்க்க விரும்புவதே இல்லை !. பால்யதின் அவமானங்களும், புறக்கணிப்புகளும் உடம்பில் உள்ள மச்சத்தைப் போல ஒட்டிக்கொண்டே வருகின்றன,வடுக்களின் கயப்பு அவ்வப்போது நம்மையறியாமல் நாவில் ஊறிவிடுகின்றன.அப்படிப்பட்ட ஒரு தருணத்தின் பதிவு தான் 'வெயில்'.

வெயில் கருணையற்றது.அது மனிதர்களின் சுபாவங்களை மாற்றி, மூர்க்கமேற செய்துவிடுகிறது.பின்னிரவுகளில் கூட, கண்களுக்குப் புலப்படாத தன் ஆயிரம் கைகளால் அரவணைக்கத் துடிக்கிறது வெப்பம். வெயிலேறிப்போன ஊர்களின் மக்கள், வெயிலின் சுபாவம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் - அவர்கள் சூரியனைப் போலவே அலைக்கழிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.

ஒவ்வொரு வீடும் வீட்டைவிட்டு ஓடிப்போனவர்கள் பற்றிய ஒரு கதையை வைத்திருக்கிறது. 'வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள்' என்று உலகில் ஒரு பிரிவினர் தனித்தே இருக்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கென ரகசிய ஆசைகளையும், தங்கள் ஊர் பற்றிய நினைவுமாய் நம்மைச் சுற்றி வந்து கொண்டு தான் இருகிறார்கள். அவர்களில் எத்தணை பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருப்பார்களோ ?? தெரியாது.

வயதும் ஆசையும் வளர வளர கால்கள் வீடு என்ற சுவர்களுக்குள் இருப்பு கொள்ள மறுக்கிறது.நானும் என் பதின் வயதுகளில் வீட்டை விட்டு ஓடுவதர்க்கான சரியான நாளைத் தேடி தேடி அலுத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், அருகில் வரும் பண்டிகையோ, பிறந்த நாளோ அந்த மகத்தான நாளை ஒத்திப்போட்டுவிடும். திரும்பவும் வீட்டை விட்டு ஓடும் வாஞ்சை கவ்விக்கொள்ள துடங்கி விடும்.

அப்படியொரு பருவத்திலிருக்கும் முருகேசன், வழக்கம் போல பள்ளியை முடக்கி விட்டு, உள்ளூர் டாக்கீசில் ஓடும் MGRபடத்துக்கு செல்கிறான்.தம்பி கதிரை அழைத்து செல்ல மறுக்கும் முருகேசன், நண்பர்களுடன் விசில், கைதட்டல், பீடிப்புகை சகிதம் படத்தில் மூழ்கியிருந்த நேரம், தியேட்டர் முதலாளி மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்கிறார் கசாப்புக் கடை வியாபாரியான முருகேசனின் அப்பா.

'நமது அவமானங்களும் வேதனைகளும் தான் நம் பிள்ளைகளின் முதுகில் அடிகளாக விழுகின்றன' என்பார்கள். உக்கிரமேறீப்போனவரான அப்பா, முருகேசனை சுடும் மண்ணில் நிர்வாணியாக, எல்லோரும் பார்க்க வீதியில் இழுத்து வந்து கட்டிப் போடுகிறார்.அவமானத்தின் வாய் கவ்விக் கொள்ள, அப்பவிடம் கெஞ்சுகிறான் முருகேசன். சலனமற்று பீடியை இழுத்தபடி அமர்ந்திருக்கிறார் அப்பா !.

அவமானப் படுவதை விட வேதனையானது, நம் அன்பிற்குறியவர்கள் முன் அவமானப் படுவது. சோட்டுப் பையன்களின் கேலிக்கு மத்தியிலும் அன்பிற்குரிய பாண்டியம்மவின் பரிதாவமான பார்வை வேதனையை அதிகப்ப் படுத்துகிறது.தம்பிதான் தன்னை மாட்டி விட்டிருப்பனோ என்று கோபித்துக் கொள்கிறான்.அம்மா தரும் உணவையும் புறக்கணிக்கிரான். ஊரே அடங்கிவிட்ட, உறக்கமற்ற அந்த இரவில் சலமின்றி ஊர்ந்து செல்கிறது நிலவு. சட்டென எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு, கையில் சிக்கும் பணத்தயும், நகையையும் எடுத்துக்க் கொண்டு ஊரை விலக்கிய பாதையில் நடக்க துவங்குகிறான் முருகேசன்.ஊரின் வெயில் அவனைப் பதுங்கியபடி பார்த்துக் கொண்டே இருக்கிறது.

கவர்ந்த பொருட்க்களை வெகு சீக்கிரத்திலேயே தொலைத்துவிட்டு, ஒரு தியேட்டரில் தஞ்சம் போகிறான்.கை தட்டல், விசில் சத்தம், சினிமாச் சுருள், ப்ரொஜ்க்டர் வெளிச்சம் என்று நீள்கிரது வருடங்கள். திரைகள் MGR, ரஜினி என்று மாறுகிறதே தவிற ரசிகர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். திரைகளின் ஓட்டத்திலேயே காலமாற்றத்தை பிரதிபலிப்பது நல்ல டச்.

வளர்ந்து ஆளான பின்னும் நிரய காசு சம்பாதிக்க வேண்டும் என்றும் , எடுத்து வந்த நகை, பணத்துடன் தான் சொந்த ஊர்பக்கம் போக வேண்டும் என்றும் தீராத ஆசை கொன்டவனாக இருந்தான் முருகேசன்.

எந்த ஒரு இளைஞனின் வாழ்வையும் காதல் வெகு சீக்கிரமாக ஆக்கிரமித்து விடுகிறது. வாழ்வின் பெரும்பகுதியை தியேட்டர் சீட்களுடன் கழித்த அவனுக்கு காதல் புதிய ஜன்னல்களை திறந்து வைக்கிறது.காலபேதமின்றி காதலி தங்கத்துடன் மோகித்துச் சுற்றுகிறான். காதல் ஒரு மணல் கடிகாரம்...அதில் மனம் நிறய நிறய மூளை காலியகிறது.அப்படியொரு 'பகல் காட்சியில்' காதலியுடன் அகப்படுகிறான். அதுவரை இனித்திருந்த காதல் அறுந்து போன பாசி மாலையைப் போல கண்முன்னே உருண்டோடுவதைப் பார்க்கிறான். தங்கத்தின் தந்தை "சினிமா காட்டி எம்பொண்ண மோசம் பன்னிட்டியேடா " என்று கதறுகிறார்.

தங்கத்துக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது இரவோடு இரவாக முருகேசனின் கொட்டகையில் வந்து நிற்கிறாள் தங்கம். விஷயமறிந்து வரும் உறவினர்கள் முருகேசனைத் தாக்குகிறார்கள். தொடர்ந்து நடக்கும் கலவரத்தில், தங்கம் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை விடுகிறாள். விருப்பத்துக்குறியவர்கள் கண் முன்னே சிதைந்து போவதைக் காட்டில் சொகத்தை உமிழ்வது வேறெதுவும் இருக்க முடியாது. காதலை இழந்தவனின் வாழ்வு வேறெதிலும் இருப்பு கொள்வது இல்லை. இதற்கிடையில் தன்னை மடியில் வாங்கி வளர்த்த தியேட்டரும் மூடப்படுவதால் வேலையும் பறிபோகிறது. "எங்களுக்கு இத விட்டா என்ன தெரியும் மொதலாளி " என்று கேட்க்கும் முருகேசனின் குழகுழத்த குரலின் அடியில் அவனின் அறியாமை நிழல் படிகிறது. தியேட்டர் முதலாளி எல்லோருக்கும் கொஞ்சம் காசு கொடுத்து விடை சொல்கிறார். பணத்தைப் பெற மணமற்றவனாக முருகேசன் திரும்பிப் பார்க்காமல் செல்கிறான். காலியான தியேட்டரிலிருந்து வெளியேறும் ப்ரொஜெக்டரை எல்லோரும் ஒரு சவ நிகழ்ச்சியைப் போல பார்க்கிறார்கள். தங்களை இத்தனை நாளும் மகிழ்வித்த விசித்திர ஜீவன் போவதை, சர்க்கசில் பஃப்பூன் விடைபெறும் காட்சி போன்றதொரு குழந்தையின் துக்கத்துடன் பார்க்கிறார்கள்.தான் தொழில் செய்த இடம் உருக்குலைவதைப் பார்க்க மனமின்றி ஏதோ ஒரு மூலையில் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறான் முருகேசன். வாழ்வில் முதல் முறை தான் தணித்து விடப்பட்டதாகவும், யாருமற்றவனாகவும் உணர்ந்து உடைகிறான்.

எல்லொருடைய கால்களிலும் கட்டப் பட்டிருக்கும் கண்களுக்கு புலப்படாத மாயக் கயிற்றின் மறுமுணை அவரவர் சொந்த ஊரில் தான் இருக்கிறது.அது தனக்கு தேவைப் படும் போது நம்மை இழுத்துக் கொள்வதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது.

தயக்கத்துடனும் கூச்சத்துடனும் சொந்த ஊரில் வந்திறங்குகையில் , சொந்த மண்பட்டு உடல் சிலிர்க்கிறது. பெரிதாக ஒன்றும் மாறியிராத ஊரில் தன் வீட்டைக் கண்டு கொள்வது கடினமாக இல்லை. அழுக்கு வேட்டி, ஒற்றைப் பை, துக்கத்தில் இடுங்கிய கண்கள், புழுதி படிந்த கால்கள் என தன் முன் நிற்கும் அவனை, எளிதில் அடையாளம் காண முடியவில்லை தந்தைக்கு.காலம் நம்மில் சில மாற்றங்களையும், அனுபவங்களையும் கொண்டுவந்தாலும், பால்யத்தின் சுபாவங்களும்சிறு வயதில் கொண்ட அச்சங்களும் நம்மை விட்டு அகலுவதே இல்லை !. அதனால் தானோ என்னவோ, இன்றளவும் நாம் படித்த பள்ளிகளையோ ஆசிரியர்களையோ கடக்கையில் ஒரு வித அச்சமும் பதற்றமும் வந்து தொற்றிக் கொண்டு, வருடங்கள் கழிந்த பால்யம் வந்து ஒட்டிக்கொள்கிறது.

அப்பா முன் சட்டையின் ஒரு மூலையைக் கசக்கிக் கொண்டு நிற்கும் முருகேசன் மீண்டும் ஒரு கரிசல் காட்டு சிறுவனாக மாறிவிடுகிறான். ஆத்திரம் கொள்ளும் அப்பா, அவனை அப்படியே போய்விடும்படி சொல்கிறார். சத்தம் கேட்டு வரும் அம்மா "யாரு தம்பி வேனும்?" என்று கேட்க, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத தவிப்பும், காலம் தன் அடையாளங்களை அழித்து விட்ட மாயமும், அவமானமுமாக வந்த வழியே திரும்புகிறான். போக்கிடம் தெரியாமல் நிற்க்கும் கால்களை
உற்று கவனித்திருக்கிறீர்களா?. அவை இரத்தம் உரைந்து நடுங்கிக் கொண்டிருப்பவை !. பசியும் வேதனையும் அலைக்கழிக்க ஒரு டீக்கடையில் ஒதுங்குகிறான் முருகேசன்.

(இது வரைக் கதை ! இதர்க்கு மேல் சினிமா !! )



எதர்ச்சியாக அங்கு வரும் தம்பியை எளிதில் அடயாளம் கண்டுகொள்கிறான். வருடங்கள் கடந்தும் தன் நினைவுகளின் சாலையில் கைகோர்த்து விளையாடிய அண்ணனின் நினைவு மேலெழுகிறது. மனது கணக்கிறது.குரல் உடைந்து போய் தம்பி "அண்ணே ! உன்ன நான்ஞ் சொல்லிக் குடுக்கலண்ணே" என்கிறான். கண்ணீர் தழும்ப இருவரும் கட்டியனைத்துக் கொள்கிறார்கள். உணர்ச்சி பொங்கும் காட்ச்சியில் திரையரங்கத்தையே நிசப்தமாக்கி அனைவரின் மனதயும் அள்ளிச் செல்கிறார்கள்...

அழயா விருந்தாளியாக தன் வீட்டிற்குள் மறு பிரவேசம் செய்யும் முருகேசனை சொந்த வீட்டிலேயே விருந்தாளி போல நடத்துவதும், வெயில் காயும் பகல் பொழுதுகளில் யாருமற்ற தனிமையும் உழற்றுகிறது. யாருமே அமராத ஒரு பூங்கா பெஞ்சைப் போல, பாதசாரிகள் இல்லாத ஒரு ஒற்றையடிப் பாதையைப் போல, நீள்கிறது முருகேசனின் நாட்கள்.

சொந்தக் கடையில் வேலை செய்யக் கூடாது என்று மறுக்கிறான் தம்பி.வேலையற்றவனின் பகல் பொழுது மிக நீண்டதாக இருக்கிறது. காலப் போக்கில் விருப்பங்கள் குலைந்து போய்விடுகையில் உறவுகள் ஒரு காய்ச்சல் மாத்திரையைப் போல அடிநாவில் கயப்பை ஏற்படுத்தத் துவங்குகின்றன.இவை அனைத்திலிருந்தும் அவனுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் தன் பதின்வயது தோழியான பாண்டியம்மாவும், அவளது குழ்ந்தயும்.நாம் விருப்பமுற்றவர்களின் மீது கொள்ளும் அன்பு, அவர்களின் குழ்ந்தைகளின் மீதும் தொற்றிக் கொள்கிறது. எப்போதும் பாண்டியம்மவின் குழ்ந்தயுடன் சுற்றுவதும், சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடி வெட்குவதும், சுற்றும் பம்பரத்தை பாண்டியம்மாவின் பெண்ணின் கையில் தருவதும், அவ்வாறு பாண்டியம்மாவிடம் கொடுத்ததை நினைவு கூறுவதுமான காட்சிகள் நெகிழ்ச்சி.

தங்கை திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் காணாமல் போகவே, முருகேசனின் அப்பா போடும் கூச்சலில் ஊரே திரண்டுவிடுகிறது. விஷயம் அறியாது வீட்டிற்க்கு வரும் முருகேசனிடம் "எடுத்திருந்தா குடுத்துருயா ! " என்று அம்மா கதற, "நா எடுக்கலம்மா..?" என்று சிறு பிள்ளைப் போல கூனி நிற்கிறான் முருகேசன். வெகுநெரம் கழிந்து வரும் தங்கை தோழிகளிடம் காட்ட எடுத்துச் சென்றதாக வந்து சொல்ல.."ஓ...என்று உடைந்து அழுகிறான் முருகேசன்...அவனது ஓலச்சத்தம் தெருவெங்கும் நீண்டு மறைகிறது".

நம்மை நெசிப்பவர்களே நம்மைச் சந்தேகப் படுவதைப் போல துர்பக்கியம் வேறென்ன இருக்க முடியும் ?. ஒரு கிழிந்த காகிதத்திற்கு இருக்கும் மதிப்பு கூட அற்றவனாக, காற்றில் அலைக்கழிக்கப் படுகிறது அவனது வாழ்வு.யாருமற்ற அந்தப் பகலில் போகும் இடம் அறியாமல் அவன் கால்கள் நடுக்கத்துடன் நகர்கிறது. வீட்டிற்க்கு திரும்பும் தம்பி கதிர் நடந்தவை அறிந்து ஆதிரமடைகிறான்.ஆண்ணனைத் தேடி அலைகயில், வியாபார எதிரிகளால்தாக்கப் பட்டு மருத்துவமணையில் உயிர் போகும் நிலையில் இருக்கிறான்.தனக்கு அனைத்துமான தம்பியைக் காப்பாற்ற எதிரிகளைத் தீர்த்துக்கட்ட புறப்படுகிறான் முருகேசன்.


தம்பி கதிரேசன் மருத்துவமணையில் உயிர் பிழைத்து கண்திறக்கையில், முருகேசன் சலனமற்று கண்கள் நிலைகுத்தி உயிர் பிரிகிறான்.கடைசி வரை தன்னால் யவரக்கும் பயனற்றுப் போன வெறுமை அவன் உறைந்த கண்களில் தென்படுகிறது...துக்கம் பீறிட எல்லோரும் பெருங்குரலெடுத்து அழுகிறார்கள். "எங்குலத்த காத்த தெய்வம்டா அவன் " என்று முதல் முறையாக முருகேசனுக்காக கண்ணீர் சிந்துகிறார் அப்பா. என்ன உறவு சொல்லி அழுவதென்று அறியாமல் பாண்டியம்மாவும் அவள் பெண்ணும் அழுகிறார்கள். அனைவரின் துக்கத்தயும் வாங்கி குடித்துக் கொண்டு சலனமற்ற ஒரு குளத்தைப் போல முருகேசன் படுத்திருக்க திரை சுருள்கிறது.

புல்லைக் காட்டிலும் வேகமாக வளர்வது எது என்று கேட்க்கும் யட்சதனிடம் - ' கவலை' என்கிறார் தருமன். தீராத கவலை பீடித்த மனிதனாக திரையெங்கும் வியாபித்து இருக்கிறார் பசுபதி. எல்லாக் குடும்பங்களிலும் யாரோ ஒருவருக்கு மட்டும் எதுவுமே சரியாக அமையாமல் கவலையின் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.அவர்களின் துக்கங்கள், பேச்சுக்கள், இரகசிய கண்ணீர் ஆகியவற்றின் பதிவாக இருக்கிறது 'முருகேசன்' கதாபாத்திரம்.

தாயால் பதுக்கி வைக்கப்பட்ட, பகிர்ந்தது போக மிஞ்சிய முறுக்கோ, அதிரசமோ எல்லோருக்கும் வாய்க்கப் படுவதில்லை. ஒரு தொப்பூழ்கொடி வரும் இருவரின் மாறுபட்ட இரு வாழ்வின் விசித்திரமான பாடலை ஒலித்துச் செல்கிறது 'வெயில்'. திரையரங்கு விட்டு வெளி வரும் எல்லோரும் தமக்கு வேண்டிய யவரோ ஒருவரின் நினைவு மேலெழுந்த படி வருகிறார்கள்.

நள்ளிரவுக் காட்சி முடிந்து, ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் நடந்து வருகிறேன். யவனோ ஒரு சிகரட்டை புகைத்து எறிந்த படி ஒரு கைப்பையுடனும், அழுக்கு வேட்டியுமாக வருபவரிடம் அடுத்த வண்டிக்கான நேரம் கேட்டு நிற்கிறான்.அனைக்கப் படாத சிகரட் காற்றில் கரைகிறது..

வர்த்தைகள் தானாக வந்து விழுகிறது...


"தூக்கி எறியப்ப் படும் சிகரட்டுகள் கூட

யாரோ ஒருவனால் பொறுக்கப் படுகிறது

அதைப் பற்ற வைத்த தீக்குச்சிகள் தான்

யாருக்குமே பயனற்றுப் போய் விடுகிறது"


*** முற்றும் ***