இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஜூலை, 2008

வெகு நாள்களுகுப் பிறகு சில கவிதைகள்...

(காணாமல் போய்விட்ட ஷானுவின் கடிதங்களுக்காக...)

உல‌கில் க‌டைசி ம‌னித‌ன்
உயிரோடு இருக்கும் வ‌ரையில்
க‌விதை வாழும் !‍
க‌விக்கோ ~ அப்துல் ர‌குமான்.



ஜ‌ன‌ நெரிச‌லும் விஞ்ஞான‌ க‌ருவிக‌ளும் அதிக‌ரித்து விட்ட‌ சூழ‌லில், அது ம‌னித‌ர்க‌ளுக்கிடையே ஆன‌ தூரங்க‌ளை குறைப்ப‌தை விட்டுவிட்டு அதை அதிக‌ரிக்க‌வே செய்திருக்கிற‌து. மகப்பெரிய தூரங்களை இணைக்க உதவிய தொழில்நுட்பம், மிகச்சிறிய இடைவெளிகளை நிலைநாட்டிக் கொள்ளும் சூட்சமத்தைக் கற்றுக்கொடுக்கவில்லை. அருகருகே நடந்தவாறு வரும் இரு நண்பர்கள் தத்தம் செல்பேசிகளில் வேறு எவருடனோ பேசிக்கொண்டு வரும் காட்சி, நம் மீது விழுந்த சாபக்கேட்டையே பரைசாற்றுகிறது. மிக அருகில் இருக்கும் மனிதனைப்பற்றிய எந்த அக்கரையும் இன்றி நம் சிந்தணைகள் அனைத்தும் எப்போதும் அகப்படாத ஏதோ ஒன்றில் தான் நிலைகுத்தி இருக்கிறது.

மறுதலிக்கப் பட்ட சம்பாக்ஷனைகளின் விளைவாக தனிமையில் பேசுதல் என்ற வசதி ஏற்படுகிறது. தனகுத்தானே பேசுதலின் ஒழுங்குபெற்ற வடிவமே கவிதை என்கிறார் மனுஷ்யபுத்திரன். தனித்து பேசும் கலாச்சாரம் அதிகரித்துவிட்ட ஒரு சமூகத்தில் கவிதையின் அத்யாவிசயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எவெனொருவனில் இருந்தும் ஒரு கவிஞன் பிரசவிக்க ஆயத்தமாகவே இருப்பதாகவே தெரிகிறது. வரும் காலங்களில் 'கவிஞன்' என்னும் பெயர்ச்சொல் மறைந்து போய் 'கவிதை' மட்டுமே நிலைபெற்றிருக்கும் என்றே தெரிகிறது. . .காற்றைப் போல!
************************************************
1.உடல் பெருத்தவர்கள்
==================



உடல் பெருத்தவர்கள்
பெரும்பாலும் பொதுவிருந்துக‌ளில்
குறைவாக‌வே சாப்பிடுகிறார்க‌ள்

வேறு யாரும் முந்திக்கொள்ளும்
முன்பே த‌ங்க‌ளைத் தானே
எள்ளிக்கொள்வ‌து சௌக‌ரிய‌மாக‌வும்
பாதுகாப்பான‌துமாக‌ இருக்கிற‌து

ப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ
தாங்க‌ள் ஒரு த‌ட‌க‌ள‌ வீர‌ராக‌ இருந்த‌தை
அடிக்க‌டி ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம்

நினைவுப‌டுத்துகிறார்க‌ள்.

அவ‌ர்க‌ள்
ஆய‌த்த‌ ஆடை க‌டைக‌ளுக்கு
செல்வ‌தை த‌விர்த்து விடுகிறார்க‌ள்.
"அந்த‌ லாஸ்ட்டு ரேக்ல‌ பாருங்க‌" என்ற‌
புற‌க்க‌ணிப்பை த‌விர்ப்ப‌து கூட‌

கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்

அதிக‌ம்
ஒரே மாதிரி
க‌ருத்த‌ ஆடைக‌ளையே அணிகிறார்க‌ள்.

தாங்க‌ள் துவ‌ங்க‌ப் போகும்
காலை‍ஓட்ட‌த்தைக் குறித்தோ,
சேர‌ப்போகும் முத‌ல் ஜிம் நாளையோ
எதிர் நோக்கி காத்திருக்கிறார்க‌ள்

ஷேர் ஆட்டோவில் 2 இருக்கை;
சொகுசு பேருந்தில் இரட்டைக் கட்டணம்
செலுத்தச் சொல்வதற்கான ஆபத்தை எதிர் நோக்கி
பதட்டத்துடன் காணப்படிகிறார்கள்

இந்தக் கவிதைக்குப் பின்
கண்ணாடி முன் செல்ல நேர்கையில்
"நம்ம அப்படியொன்றும் குண்டாக இல்ல"
என்று சொன்னாலும் சொல்லலாம்.


*************************************************
2. குறைந்தபட்சம்
================


ஒரு கவிதை எழுதுவதற்கு
குறைந்தபட்சம் ஒரு சிகரட் அவசியப்படும் என்றால்
இந்த பிரபஞ்ச கவிதையின் எண்ணிகையில் ஒன்று
குறைவாகவே இருக்கட்டும் !

ஒருமணி நேரம் நண்பனிடம் பேச‌
பாருக்கு தான் போகவேண்டுமென்றால்
அன்று மௌனவிரத நாளாகவே
இருந்துவிட்டுப் போகட்டும் !

என் பிற‌ந்த‌ நாளை நினைவுப‌டுத்த‌
கண்டிப்பாக ஒரு புது சட்டை வேண்டுமென்றால்
அந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ வ‌ய‌து அதிக‌ரிக்காம‌லே போக‌ட்டும் !

இர‌வு உறக்க‌ம் கொண்டுவ‌ர‌
தாயின் அர‌வ‌ணைப்போ
காத‌லியின் முத்த‌மோ தேவைப்ப‌டுமெனில்
அது ம‌ற்றும் ஒரு உர‌க்க‌ம‌ற்ற‌ இர‌வாக‌வே இருக்க‌ட்டும் !


ஒரு புன்னகைக்காக ஒரு வழியலும்
கொஞ்சம் அன்புக்காக அதிக கீழ்படிதலும்
ஒரு சிறு தலையசைப்புகாய் நீண்ட காத்திரிப்பும்
அவசியம் வேண்டுமென்றால்...
வேண்டவே வேண்டாம்...
யாரொருத்தியின் அன்பும்!
எவெனொருவனின் ஆதரவும்..!

*************************************************


3. ஒவ்வொருமுறையும்
====================
நீ சரிசெய்து விடும்வரை
நான் சத்தியமாய் அறிந்திருக்க வில்லை
உன் முந்தானை சரிந்திருந்ததை !

*************************************************

4.

நிச்சயிக்கப் பட்ட
உன் விடுமுறை நாட்களில்
என் நிலைக் கண்ணாடிகளுக்கு
வேலை இருப்பதில்லை

என் உடைகளும் கூட
என் நிர்வாணத்தின் பொருட்டல்ல‌
உன் கண்களை முன்வைத்தே
தேர்ந்தெடுக்கப் படுகிறது...

உன்னில் காணும் என்னைவிட‌
எப்போதும் அழகாய் காட்டிவிடாத‌
என் கண்ணாடியை வெறித்தபடி நான்




உனதாகிவிட்ட என்னுடைய தினங்களை
நெற்றி மேல் ஒரு கற்றை முடியைப் போல‌
அழகாய் ஒதுக்கிவிட்ட படி நீ !

*************************************************
5.

அனைவரையும் அனுப்பிவிட்டு
மூச்சுவிட்டபடி வகுப்பறை இருக்கைகள்

எதிர்எதிர் பெஞ்சில்
கண்களையும் கண்களையுமே பார்த்து விளையாடும்
வினோத பால்யம் வாய்க்கப்பட்டவர்களாய் நாம்

முதலில் கண்சிமிட்டுபவர்கள்
தோற்றுவிட்டதாய் நாமே வரையறுத்துக்கொண்ட
கண்துடைப்பு விதிகள்

முதலில் நீ தோற்றுவிட்டால்
வெட்கத்தில் நீயும், வெற்றியில் நானும்
நான் தோற்பின்
குற்றவுணர்ச்சியில் நானும், பொய்கோபத்தில் நீயும்

காக்கைக‌ளும் க‌ரைய‌ எத்த‌ணிக்காத‌
அந்த‌ ச‌ல‌ன‌ம‌ற்ற‌ ம‌திய‌ங்க‌ளில் நீயும் நானும்

இருவ‌ருக்கும் ந‌டுவில்
ப‌டிக்க‌க் கொண்டுவ‌ந்த‌ புத்த‌க‌மும்
காற்றில் ப‌ட‌பட‌த்த‌ப‌டி!


*************************************************
6. தனிமையில் பேசுபவர்கள்
=======================


உனக்குத் தெரிந்திருக்க ஞாயம் இல்லை
தனிமையில் பேசுபவர்கள்,
பேச ஆளற்றிருப்பவர்கள் வார்த்தைகள்
கவிஞனுடையதைவிட தேர்ந்த ஒன்றாக இருக்கிறது

வெறுமையின் நாவுகள் வழியாக
உமிழ்கிறது யாருக்கும் அற்ற கவிதைகள்

பேச ஆள்தேடி அலைவதைக் காட்டில்
இது அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது

அறைந்து சாத்தும் ஜன்னல்கள் கூட
புறக்கணிப்பையே நினைவுபடுத்துகின்றன

அந்தி இருளத்துடங்கும் வானில்
கூட்டம்விட்டுத் தொலைந்த
ஒற்றைக் காக்கையின் கரைதல் சத்தம்
அழுகையைக் கூட்டுகிறது

இதையத்தின் நீள்சுவர்களில்
எதிரொலிக்கும் அந்த‌ பெருத்தகுரல்
என்னை எவ்வளவு பலவீனப் படுத்துகிறது தெரியுமா

உனக்கு தெரிந்திருக்க ஞாயம் இல்லை!


************************************************
7.


என் கவன ஈர்ப்பு தீர்மாணங்கள்
தோல்வியைத் தழுவுகையில்
உன் விரல் ஸ்பரிஸங்களில்
முறியடிக்கிறாய்......
என் நம்பிக்கையில்லா தீர்மாணங்களை!


************************************************
8.


கவனித்திருக்கிறாயா...
நாம் எவ்வளவு நெருக்கத்தில்
நடக்கும் போதும்
தொட்டுக்கொள்வதே இல்லை!

உன் காரணமற்ற விலகுதலுக்கும்
கேள்விகளில்லா நெருக்கத்திற்கும்
நான் பழக்கப் பட்டவனாகவே இருக்கிறேன் !

எவ்வளவு பெரிய ஜன நெருக்கடியிலும்
சிரமம் இல்லாமல் உன்னைக்
கண்டுகொள்ள முடிகிறது
என்னால்..
என்னை உனக்கும்!

மற்ற அழகிய
பெண்களைப் பற்றிய பேச்சின்போது
உன்னுடைய முகச்சுழிப்பு
நான் எதிர்பாராரதாக இருக்கிறது!

நம் சந்திப்புகளின் நடுவேகடக்கும்
நண்பர்களைக் கண்டு நீ பதட்டப்படுவது
எனக்கு அவமான உணர்வை ஏற்படுத்துகிறது...

நம் உரையல்களின் நடுவே...
குறுக்கிடும் செல் அழைப்புகளை
நீ செல்லமாய்த் துண்டிப்பது
எனக்கு கர்வத்தை அளிக்கிற‌து !

அடுத்த முறையாவது
நீ நிராகரித்த,
காதல் கடிதங்களைப் பற்றி
பேசுகையில்
என் கண்களைப் பார்த்து பேசு !


நான் எப்போதாவது
வாங்கிக்கொடுக்கும் மிட்டாய் உறைகளை
சேகரிப்பதை இன்றோடு நிறுத்திக்கொள்!


நான் இன்னும் உனக்காய்
கரடி பொம்மைகளைத் தேடி சேக‌ரிக்கிறென்...
உன்னுடைய எதிர்பார்ப்பு
ஒரு பூங்கொத்தாக இருக்கிறது!

என்னை உன் கனவுகளில்
என்னைக் கண்டிருந்தாலும்
என்னிடம் சொல்லாதே...
என் இர‌வுகளின்
உன் வாயில்க‌ளை நான்
என்றோ அறைந்து சாத்திவிட்டேன்!

விரைவில் நாம்
ப‌ரிமாரிக்கொள்ளும் செய்திக‌ள்
முன்பெதையும் விட‌
துக்க‌க‌ர‌மான‌தாக‌ இருக்க‌க் கூடும்...

நான் க‌விதைக‌ளில் நாட்ட‌மில்லாத‌
ஒருத்தியுட‌ன் உட‌ன் போக்கு கொள்கிறென்!
நீ எனக்கு முக‌ம் தெரியாத‌ ஒருவ‌னுட‌ன்
திரும‌ண‌ம் செய்துகொள் !!

*************************************************