இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஜனவரி, 2016

அ. முத்துலிங்கம்

தமிழில் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களை கடந்த 2015ம் வருடம் தான் படிக்கத் துடங்கினேன். அதில் ஒன்று அ.முத்துலிங்கம். அவரது அமரிக்கக்காரி மற்றும் மஹாராஜாவின் இரயில் வண்டி தொகுப்புகளை படித்தேன். அதில் இரண்டாவது புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இவ்வாறு எழுதுயிருப்பார் அ.மு. 

“கடல் ஆமையின் வாழ்க்கை விசித்திரமானது. பெண் ஆமைகள் இரவில் நீந்திவந்து கடற்கரை மணலில் குழி பறித்து முட்டைகள் இட்டுவிட்டு போய்விடும், அதற்கு பிறகு அவை திரும்பிப்பார்ப்பதேயில்லை. 
சூரிய வெப்பத்தில் இந்த முட்டைகள் பொறிக்கும். வெளியே வந்த குஞ்சுகள் நாலாபக்கமும் சிதறியோடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து வழி தேடி கடலில் போய் சேர்ந்து கொள்ளும்.
நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர் என் எழுத்தை முற்றும் உணர்ந்த்தவர், காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழிதேடி அவரைப் போய்ச் சேர்ந்த்துவிடும். அப்படி நம்பிக்கை.
இந்த நூல் அந்த வாசகருக்கு; அந்த உலகத்துக்கு” 

அந்தவாசகன் நான் தான் என்று கூச்சலிடத்தோன்றுவதாய் இருந்தது அவரது படைப்புகளுக்கும் எனக்கும் ஏற்பட்ட நெருக்கம். விசித்திரம் என்னவென்றால் அவரை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் இப்படித்தான் எண்ணக்கூடும். அது தான் அ.முத்துலிங்கம். 

புதிய சொல் புதிய மொழி புதிய உலகம் என்று அ.மு நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். சற்றும் அலட்டிக்கொள்ளாமல் ஒரு பாதிரியின் பிராத்தணைக்குரல் போல சாதாரணமாக வேடிக்கைகளையும் சிரிப்பையும் அழுகையையும் கதைகளாக வடித்துக்கொண்டே போகிறார் முத்துலிங்கம். இதுநாள்வரை எனக்கு எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியதில்லை. ஆனால் முத்துலுங்கத்திற்கு எழுதலாம் என்ற நெருக்கம் தானாக அவர் சொற்களின் மூலம் ஏற்பட்டுவிடுகிறது. 

சமீபத்தில் இந்திய வந்திருக்கையில் விமானத்தில் அருகே அமர்ந்த பெண்மணி தான் கல்கத்தா சென்றுகொண்டிருப்பதாக சொன்னார். அவர் ஒரு தன்னார்வதொண்டு நிறுவனத்திற்காக வேலைபார்ப்பதாக சொன்னார். அவர் வேலை நிமித்தமாக தமிழ் மற்றும் பெங்காலி கற்றுக்கொண்டதாக சொல்லி சற்று உடந்த தமிழில் பேச முற்பட்டார். அவர் கனடாவில் இருந்து வருவதாக சொன்னவுடன் நான் "கனடாவில் எங்க இருக்கீங்க ?" என்று கேட்டேன். அவர் றோறண்டோ என்றார். உடனே நான் “அங்கு அ.முத்துலிங்கம் என்று ஒரு தமிழ் எழுத்தாளர் இருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டேன். அதன் பிறகு தான் அந்த கேள்வியின் அபத்தம் உறைத்தது. அவருக்கு அ.முத்துலிங்கத்தை தெரியவில்லை. போகட்டும். ஆனால் அந்த ஒரு நிமிடத்தில் அவர் கதையில் வரும் ஒரு அசட்டுக் கதாபத்திரமாக என்னை மாற்றிவிட்டதை நினைத்துதான் நான் வியப்ப்டைகிறேன்.

கதைகளின் கதைஇந்த வருடம் வெளிவந்து கான் விழாவில் Plame d’Or போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம் Tale of Tales. மிக அழகான போஸ்டர்கள் பாரிஸ் மெத்ரோ எங்கும் வைக்கப்பட்டிருந்தது. மிக எதர்சையாக சென்றவாரம் பார்க்க நேரிட்டது. மூன்று கிளைக்கதைகளை parallel-ஆக சொல்லியிருப்பார்கள். எல்லாம் fairy tales ரகம். பொதுவாக hobbit, narnia, harryporter போன்ற படங்கள் எனக்கு சுத்தமாக பிடிக்காது. பெரும்பாலும் பாதி படத்தில் தூங்கிவிடுவேன். ஆனால் இந்தத் திரைப்படம் ஒரு விதிவிலக்கு. 

முதல்கதை: ஒரு வாரிசுக்காக பலகாலமாக காத்திருந்த அரசனும் அரசியும் கடைசியில் அரசியின் வயிற்றில் ஒரு உயிர் உண்டாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கட்டத்துக்கு வருகிறார்கள். ஒரு மாயாவியின் யோசனைப்படி கடலடியில் இருக்கும் ஒரு அசுர விலங்கின் இதயத்தை அரசன் வேட்டையாடி வரவேண்டும், அதை ஒரு கன்னிப்பெண்ணால் சமைக்கச் செய்து அரசி உண்ணவேண்டும். அப்படி உண்டால் அடுத்த நாளே அவள் பிள்ளையைப் பெறுவாள். அந்த குழந்தை ஒரு நாள் மட்டுமே அரசியின் வயிற்றில் இருக்கும். இந்த பரிசோதனையில் ஏதோ ஒரு உயிர் போவது நிச்சயம் என்று எச்சரிக்கிறான் மாயாவி. எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத அரசன் கடல் வேட்டைக்கு சென்று அந்த அசுர மிருகத்தை வேட்டையாடுகிறான் ஆனால் பலமான காயத்துடன் கரை ஒதுங்கும் அவர் மரணத்தை எதிர்கொள்கிறான். செய்திகேட்ட அரசி துக்கம் அனுஷ்டிக்கவெல்லாம் நேரம் செலவழிக்காமல் அந்த மிருகத்தின் இதையத்தை வெட்டி எடுத்துச் செல்கிறாள். அரண்மனையில் உள்ள ஒரு இளம் வேலைக்காரப் பெண்ணிடம் அதை சமைத்துவர சொல்கிறாள். சமைக்கும் போது அதன் நெடி ஏறி அந்த இளம்பெண் உடனே கர்பமாகிறாள். சமைத்த இதயத்தை உண்ட அரசிக்கும் அந்த வேலைக்கார பெண்ணுக்கும் அடுத்த நாளே அழகான மகன்கள் பிறக்கின்றார்கள். ஆச்சர்யப்படும் விதமாக இரண்டு  சிறுவர்களும் அச்சுஅசலாக ஒன்று போலவே இருக்கிரார்கள். ஒன்றாகவே வளர்கிறார்கள். ஒரே பழத்திலிருந்து விழுந்த இரண்டு விதைகள் போல இயற்கையான தோழமையோடு இருவரும் வளர்ந்து வருகிறார்கள். சிலசமையம் இருவரும் தங்கள் இடங்களை மாற்றி அனைவரையும் குழம்பவைக்கிறனர். இந்த விளையாட்டெல்லாம் அரசியாருக்கு பிடிப்பதாய் இல்லை. கணவனை இழந்து தனக்கு கிடைத்த ஒரே மகன் தன்மீது அன்புசெலுத்தாமல் அந்த வேலைக்காரியின் மகனுடன் சுற்றிஅலைவது அவருக்கு வேதனையை கொடுக்கிறது. தன் மகனின் அன்பை முழுவதுமாக பெறுவதற்காக அந்த வேலைக்காரியின் மகனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறாள்...

இரண்டாம் கதை: ஒரு மலைவாழ் கிராமத்தில் வாழும் ஒரு சிற்றரசன். ஆசாமி பயங்கர பெண்பித்தர், போகப்ப்ராணி. தன் அந்தப்புறம் முழுவதும் பல்வேறு தேசங்களிருந்து வரவைக்கப்பட்ட அழகிய பெண்களும் அளவற்ற மதுவும் பெருக்கெடுத்து ஓடின. மன்னவன் ஆசைப்பட்டால் தேசத்தில் எந்தப்பெண்ணும் மறுநிமிடம் அவன் காலடியில். அப்படியிருக்க ஒரு நள்ளிரவில் நல்ல போகத்தில் இருந்த அவன் தூக்கம் வராமல் தன் அரண்மனையில் இருந்தவாறு தெருக்களைப் பார்த்துக்கொண்ண்டிருந்தான். அச்சமயம் அவன் அதுவரையிலும் கேட்டிறாத ஒரு இனிமையான குரல் தனிமையில் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தது. அந்த குரலின் பின்னாடியே தன்னிச்சையாக செல்லத்தொடங்கினான். அந்த பெண்ணின் குரலே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால் அவள் எப்பேற்பட்ட அழகியாக இருப்பாள் என்ற எண்ணத்தில் அவளைத்தொடர்கிறான். அந்த குரல் ஒரு சாதாரணப்பட்ட வீட்டினுள் செல்கிறது. அரசனும் பிந்தொடர்ந்து சென்று அந்த வீட்டின் கதவைத் தட்டி தன் இச்சையை வெளிப்படுத்துகிறான். உண்மையில் அந்த வீட்டில் வசிப்பவர்கள் சாய வேலை செய்யும் இரண்டு வயதான சகோதரிகள். உண்மையை சொல்லாமல் அதில் ஒரு சகோதரி அவள் அரசனின் இச்சைக்கு சம்மதிப்பதாகவும் ஆனால் தனக்கு கூச்சமாக இருப்பதால் தான் இருட்டில் மட்டுமே  அரசனைக்காண அரண்மனைக்கு வருவேன் என்று கூறுகிறாள். சம்மதித்த மண்ணன் அவளது வருகைக்காக அரண்மனை முழுவதும் இருட்டாக்குகிறான். உடலில் சிறு திருத்தங்கள் செய்து கிழவியும் அரண்மனை பிரவேவசம் செய்கிறாள். போகித்து முடித்து இருவரும் உறங்குகையில் மன்னன் மெல்ல எழுந்து அவளது அழகிய முகத்தைப் பார்க்க ஒரு விளக்கைப் பற்றவைத்து நெருங்குகிறான். மன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை …. கத்தி கூப்பாடு போட்டு… இந்த கிழவி என்னை ஏமாற்றி விட்டாள் அவளை ஜன்னல் வழியாக அந்த காட்டில் தூக்கி எறியுங்கள் என கத்துகிறான். தூக்கி எறியப்பட்ட கிழவி மரக்கிளைகளில் மாட்டி உயிருக்கு தவித்துக்கொண்டிருக்கையில் ஒரு தேவதை ஒன்று வந்து அவளைக்காப்பாற்றி அனைத்துகொள்கிறது. அசதியில் தூங்கிப்போன கிழவி கண்விழிக்கையில் தனது சருமம் எல்லாம் பொலிவு பெற்று ஒரு 18 வயது பெண்ணைப்போன்ற தோற்றத்தை பெற்றுவிடுகிறாள். காட்டுவழியே வேட்டைக்கு வரும் மன்னன் யாரிந்த நிகரற்ற அழகி என்று வியந்து அவளை அரண்மனிஅக்கு அழைத்துச் செல்கிறான். அவளையே திருமணம் செய்து ராணியாக்கவும் முடிவு செய்கிறான்…

கதை மூன்று: திருமண வயதில் உள்ள ஒற்றைமகளுடன் வசித்து வரும் அரசன் ஒருவன்மேல் ஒரு சிறிய பூச்சி வந்து அமரநேர்கிறது. அதனால் கவனம் சிதறும் அரசன் பிறகு வேறு எதிலும் கவனம் செலுத்தமுடியாதவண்ணம் அந்த பூச்சியால் ஈர்க்கப்படுகிறான். அதனை இரகசியமாக தன் அறையில் வளர்க்கவும் ஆரம்பிக்கிறான். அந்த பூச்சியின் மேல் முழு கவனத்தையும் செலுத்தி அன்பைக்கொட்டி மகளைப்போல வளர்க்கிறான். அந்த பூச்சியோ அசுரத்தனமாக வளர்கிறது. முதலில் அது ஒரு பூணைக்குட்டி அளவுக்கு பெரிதாக வளர்கிறது, நாட்போக்கில் அது ஒரு காண்டாமிருகம் அளவுக்கு பெரிதாகிறது. அரசனும் தனக்கு படைக்கப்பட்ட உணவையெல்லாம் கொண்டு வந்து அதற்க்குக் கொடுத்து வளர்க்கிறான். இறுதியில் அந்த ஜந்து அரசனது அறையையே நிரப்பும் அளவுக்கு அசுரத்தனமாக வளர்ந்து நிற்கிறது. அப்படி இருந்த ஒருநாளில் அந்த அசுரப் பூச்சிக்கு ஒரு நாள் உடம்பு சரியில்லையென அரண்மனை மருத்துவரை அழைக்கிறான் அரசன். அங்கு இருந்த பிராணியை கண்டு மிரண்டு போனார் மருத்துவர். இறுதியில் சிகிச்சையளிக்க முயற்சி செய்து பலனின்றி இறந்து போனது அந்த அசுர பூச்சி. அதன் நினைவாக அரசன் அதனுடைய தோலை உரிக்கச் செய்து பாதுகாத்தான். இடையில் இளவரசிக்கு திருமண ஆசை வரவே ஒரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான் அரசன். வில்லங்கத்தனமாக ஒரு போட்டியும் வைத்தான். இங்கு தொங்க விடப்பட்டிருக்கும் இந்த பொருள் என்னவென்று சரியாக சொல்பவனுக்கே தன் மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்று பூச்சியிலிருந்து உரித்த தோலை ஒரு திரை சீலை போல தொங்கவிட்டான். சுயம்வரத்திற்கு வந்த பல திறமைசாலி இளைஞர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இளவரசி தனக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் ஆகாது என்ற முடிவுக்கு வரவிருந்தாள். அப்போது அரண்மனைக்காவலர்களை எல்லாம் தள்ளிவிட்டு ஒரு ஏழு அடி உயரத்தில் கரடு முரடான ஒரு மலைவாசி அங்கு பிரவேசித்தான். இளவரசிக்கோ அரசனுக்கோ சிறிதுகூட அவனைப் பிடிக்காத போதும் சபை தர்மத்துக்காக அவனையும் போட்டியில் பங்கேற்க சம்மதிக்கிறார் அரசர், இவன் மட்டும் என்ன சரியான பதிலை சொல்லிவிடப்போகிறானா? என்ற எண்ணத்தில். ஆனால் நடந்ததோ வேறு. நேராக வந்தவன் அந்த திரைசீலையை மேலும் கீழும் பார்த்துவிட்டு பின் முகர்ந்து பார்த்தான். சற்றும் யோசிக்காமல் இது ஒரு பூச்சியின் தோல் என்று சொல்லிவிட்டான்!. இளவரசி அங்கிருந்து ஓடிச்சென்று தற்கொலைக்கு முயல, தனது தர்மசங்கடமான நிலையிலிருந்து காப்பாறுமாக மகளிடம் கெஞ்சி அந்த முரடனான மலைவாசிக்கே இளவரசியை திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறான்….

அதன் பிறகு என்ன ஆனது என்பதின் தொடர்ச்சியே திரைப்படம். மிகவும் சுவாரஸ்யமானதும் வேடிக்கையானதுமான கதைகள். அருமையான திரையாக்கம், காட்சிப்படுத்தல். 

இந்த மூன்று கதைகளையும் Pentamerone என்ற மிகப்பழமையான 17ம் நூறாண்டு fairy tales  தொகுப்பிலிருந்து எடுத்தாண்டுள்ளனர். இதைத் தொகுத்தவர் Giambattista. எனக்கு ஆச்சர்யமளித்த விஷயம், மிகப் பிரபலமான கதைகளான Sleeping Beauty, Cindrella போன்ற கதைகளின் பழமையான வடிவங்கள் இந்த புத்தகத்தில் தான் உள்ளன. (சின்றெல்லா  கதை மட்டும் உலகெங்கும் 600க்கும் மேற்பட்ட  வடிவங்களில் சொல்லப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்). Pentamerone ஆங்கில பதிப்பு kindle-லில் இலவசமாக கிடைக்கிறது. படங்களுடன் கூடிய அருமையான பதிப்பு நல்ல விலையில் உள்ளது. குழந்தைகளுக்கு கதைசொல்ல மிகவும் உகந்த கற்பணைவளம் மிக்க 30 கதைகள் இதில் உள்ளன. Fantasy கதை வாசிப்புக்கு நல்ல துவக்கமாகவும் அமையலாம். 

“மனித இன்பங்களின் உச்சகட்டம் கதைசொல்லி அதைக் கேட்பதில் தானே இருக்கிறது” என்று இந்த புத்தகத்தில் ஒரு வரி வருகிறது…அது உண்மைதானோ என்று தோன்றுகிறது.