இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஜனவரி, 2016

அ. முத்துலிங்கம்

தமிழில் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களை கடந்த 2015ம் வருடம் தான் படிக்கத் துடங்கினேன். அதில் ஒன்று அ.முத்துலிங்கம். அவரது அமரிக்கக்காரி மற்றும் மஹாராஜாவின் இரயில் வண்டி தொகுப்புகளை படித்தேன். அதில் இரண்டாவது புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இவ்வாறு எழுதுயிருப்பார் அ.மு. 

“கடல் ஆமையின் வாழ்க்கை விசித்திரமானது. பெண் ஆமைகள் இரவில் நீந்திவந்து கடற்கரை மணலில் குழி பறித்து முட்டைகள் இட்டுவிட்டு போய்விடும், அதற்கு பிறகு அவை திரும்பிப்பார்ப்பதேயில்லை. 
சூரிய வெப்பத்தில் இந்த முட்டைகள் பொறிக்கும். வெளியே வந்த குஞ்சுகள் நாலாபக்கமும் சிதறியோடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து வழி தேடி கடலில் போய் சேர்ந்து கொள்ளும்.
நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர் என் எழுத்தை முற்றும் உணர்ந்த்தவர், காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழிதேடி அவரைப் போய்ச் சேர்ந்த்துவிடும். அப்படி நம்பிக்கை.
இந்த நூல் அந்த வாசகருக்கு; அந்த உலகத்துக்கு” 

அந்தவாசகன் நான் தான் என்று கூச்சலிடத்தோன்றுவதாய் இருந்தது அவரது படைப்புகளுக்கும் எனக்கும் ஏற்பட்ட நெருக்கம். விசித்திரம் என்னவென்றால் அவரை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் இப்படித்தான் எண்ணக்கூடும். அது தான் அ.முத்துலிங்கம். 

புதிய சொல் புதிய மொழி புதிய உலகம் என்று அ.மு நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். சற்றும் அலட்டிக்கொள்ளாமல் ஒரு பாதிரியின் பிராத்தணைக்குரல் போல சாதாரணமாக வேடிக்கைகளையும் சிரிப்பையும் அழுகையையும் கதைகளாக வடித்துக்கொண்டே போகிறார் முத்துலிங்கம். இதுநாள்வரை எனக்கு எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியதில்லை. ஆனால் முத்துலுங்கத்திற்கு எழுதலாம் என்ற நெருக்கம் தானாக அவர் சொற்களின் மூலம் ஏற்பட்டுவிடுகிறது. 

சமீபத்தில் இந்திய வந்திருக்கையில் விமானத்தில் அருகே அமர்ந்த பெண்மணி தான் கல்கத்தா சென்றுகொண்டிருப்பதாக சொன்னார். அவர் ஒரு தன்னார்வதொண்டு நிறுவனத்திற்காக வேலைபார்ப்பதாக சொன்னார். அவர் வேலை நிமித்தமாக தமிழ் மற்றும் பெங்காலி கற்றுக்கொண்டதாக சொல்லி சற்று உடந்த தமிழில் பேச முற்பட்டார். அவர் கனடாவில் இருந்து வருவதாக சொன்னவுடன் நான் "கனடாவில் எங்க இருக்கீங்க ?" என்று கேட்டேன். அவர் றோறண்டோ என்றார். உடனே நான் “அங்கு அ.முத்துலிங்கம் என்று ஒரு தமிழ் எழுத்தாளர் இருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டேன். அதன் பிறகு தான் அந்த கேள்வியின் அபத்தம் உறைத்தது. அவருக்கு அ.முத்துலிங்கத்தை தெரியவில்லை. போகட்டும். ஆனால் அந்த ஒரு நிமிடத்தில் அவர் கதையில் வரும் ஒரு அசட்டுக் கதாபத்திரமாக என்னை மாற்றிவிட்டதை நினைத்துதான் நான் வியப்ப்டைகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக