இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஆகஸ்ட், 2006

என் ஜன்னலின் வழியே- 'நெடுங்குருதி'

நெடுங்குருதி - தமிழின் தலை சிறந்த படைப்பு




புத்தக கடைகளில் ஒரு நாவல் என்னை படிக்குமாறு நீண்ட நாள் கேட்டுக்கொண்டிருக்கிறது.விலையும்,வேலையும் ஒத்திப்போட்டுக் கொண்டே வந்தது.

படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏற்கனவே அலமாரிகளில் காத்திருந்த போதும் புது புத்தகங்கள் வாங்குவதை நிறுத்த முடிவதே இல்லை. மிட்டாய்க்காரன் பின்னால் செல்லும் ஒரு குழந்தையைப் போல மனம் மீண்டும் மீண்டும் அச்சுக்களை நோக்கி செல்கிறது.அப்படி புத்தகமே வாங்கக்கூடாது என்று வைராக்கியமாக கடைக்குள் நுழைந்த ஒரு பொழுதில் 'நெடுங்குருதி' வாங்கினேன்.

நாவலின் முதல் பக்கத்திலிருந்தே புதிய ஒரு உலகத்தில் ப்ரவேசிக்கும் அனுபவம் உண்டாகிறது.வெயில் உக்கிரமேறிப் போன 'வேம்பலை' என்ற கிராமத்தில் கதை சம்பவிக்கின்றது.எந்த கதாபாத்திரத்தயும் சுற்றிவராமல் நிகழ்வுகள் வேம்பலை என்ற நிலவெளியை சஞ்சரித்து வருகிறது.கதையில் படிந்திருப்பது வேம்பலையின் நிழல் மட்டும் அல்ல!.ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற ஆட்கள்-ஒடுங்கிவிட்ட-கிராமங்களின் நிழல் தான் கதை எங்கும் படிந்து கிடக்கிறது.

வேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள்.அவர்கள் நம்பிக்கைகள் ,வழிபாடுகள் அனைத்தும் கேட்டிராதவையாக இருக்கிறது.ஒருவேளை நம் முன்னோர்கள் இப்படித்தான் அலைந்து கொண்டிருந்திருப்பார்கள் போல."எறும்புகள் ஒரு ஊரை விட்டு விலகிப்பொனால்,அந்த ஊர் மனிதர்கள் வாழ சாத்தியமற்று போகிறது"."எறும்புகள் இரவுகளில் வானில் பரந்து போவதாகவும் .எறும்புகளுக்கு கடவுளின் இடம் தெரியும்" என்றும் ஆதிலட்சுமி சொல்லும் போது வாயடைத்து போய் கேட்டுக்கொண்டிருக்கும் நாகு போல் நானும் ஆதிலட்சுமி வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.சிறுவன் நாகு நம்முடன் அலைந்து திரிந்த பால்ய கால நண்பர்களை நினைவுபடுத்துகிறான்..எறும்புகள் மொய்த்துப் போய் தரையில் கைகளை தேய்த்தபடி இருக்கும் சென்னம்மாவின் வீட்டைக்கடக்க நமக்கும் பயம் கவ்விக் கொள்கிறது.

ஒரு கதை என்பது உண்மைக்கு எவ்வளவு நெறுக்கமாக உள்ளது,அதே சமையம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கொண்டே தீர்மாணிக்கப்படுகிறது.இந்த அளவுகளில் நேர்த்தியாக விளையாடக் கூடியவர் ராமகிருஷ்ணன்.

ஊரைச்சுற்றி வரும் இரண்டு பரதேசிகள் மனதிற்கு மிகவும் நெறுக்கமானவர்களாக உள்ளார்கள்.வெகு நாள் கழித்து ஊருக்கு வரும் பரதேசிகள் வரவேற்பவர்களற்று தின்ன உணவற்று அலைகிறார்கள்.பசி புரயோடிப்பொகும் போது ரோஜாவின் அழகு தெரிவதில்லை.பஞ்சம் பரதேசிகளைக் கூட பீடித்து விடுகிறது.புறக்கணிப்பயும் உதாசீனத்தயும் தாங்கமுடியாமல் பசியோடு மூத்திரம் பெய்தபடியே கொச்சையாக ஏசிக்கொண்டு நடந்துசெல்லும் அவர்களின் இரவு மனதை கசக்குவதாய் இருக்கிறது.

சொந்த பூமி என்பது ரத்த சம்மந்தமுள்ள உறவாகவே கிராமங்களில் கருதப்படுகிறது.பசு மாடுகளையும் ,ஆடுகளையும் புத்திரர்களைப் போல நேசிக்கும் மனிதர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்.அழுகையை மறைக்க தெரியாத பெண்களும்.உக்கிரத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஆண்களுமாய் வேம்பலை வெம்மை உடையதாகவே இருக்கிறது.

வீட்டின் மீது பூனை போல் ஏறி வரும் வெயிலை நோக்கி, "என்னடா பெரிய மசுருன்னு நெனப்பா ? .வந்தேன் வக்காளி வகுந்திடுவேன் !" ன்னு தன் சூரிக்கத்தி எடுத்து கத்தும் சிங்கிக் கிழவனின் சப்தம் பிரம்மாண்டமானதாக எதிரொலிக்கிறது.


"ஊரின் சுபாவம் மக்களின் மீது படிந்து விடுகிறதா? அல்லது மக்களின் சுபாவம் ஊரின் மீது படிந்து விடுகிறதா என்றே தெரிவதில்லை".என்று 'கதாவிலாசத்தில்' ஒரு வாக்கியம் வரும்.கோடையில் துடங்கும் கதைவெளி வசந்தம்,மழை காலங்களைக் கடந்து பனிக்காலத்தில் முடிகிறது.பருவ காலங்கள் கூட மக்களின் மீது அப்பிக்கொண்டு விடுகிறது.வெயிலில் உக்கிரமேறிப்போகும் சுபாவமும்,"மழைக்குப் பின் மக்களின் பேச்சில் கூட குளிர்மை ஏறி இருந்தது..."மழை முடிந்த காலையில் மக்கள் விடாது புன்னகைத்த வண்ணமே இருந்தார்கள்" போன்ற அவதானிப்புகளே இதற்கு சான்று.

வருடங்கள் ஏறிய பின்னும் ஊர் தன் சுபாவங்களை மாற்றிக் கொள்வதே இல்லை.கதைவேளையில் மூன்று தலைமுறைகளை கடந்து விட்ட பின்னும் வேம்பலைக்குத்திரும்பும் மக்கள் தன் ஊரிடம் தங்களை ஒப்படைத்தபடியே இருக்கிறார்கள்.

ஊர் ஓர் விசித்திர முடிச்சு!.தனக்கு பிரியப்பட்டவர்கள் கால்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கயிற்றை கட்டி வைத்துள்ளது.தனக்கு தேவையான போது அவர்களை தனக்குள் இழுத்த்க் கொள்ளவும், நினைக்கும் போது அவர்களை வேளியேற்றவும் அது தயங்குவதே இல்லை.வேம்பலை ஒரு நீள் கதை.

இதைப் படிக்கும் போது நாம் சுற்றி அலைந்த ஊர்களும்,பிரிந்து வந்து விட்ட வீடுகளும்,ஏதேதோ ஊர்களில் கிடந்து உறங்கிய விழாக்கால ஊர்களின் நினைவு மேலெழுகிறது.கயிறு ஏதேனும் தென்படுகிறதா என்று என் கால்களிலும் தடவிப் பார்க்கிறேன்.எந்த ஊர் நம்மை எப்போது இழுத்துக் கொள்ளுமோ என்று பயமாக உள்ளது !.

வீட்டிலிருந்து திடீரென காணாமல் போகும் ஆண்களும்,கண்ணீர் உரைந்து போன பெண்களும்,மிதமிஞ்சிய போதையில் திரியும் வாலிபர்களும்,குறுதிக்கறை ருசிகண்ட பூமி என வேம்பலை கண்முன்னே விரிந்து கிடக்கிறது.வேம்பலை எங்கோ இருக்கும் இடமல்ல !.நம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு வாழ்வியல்.

பொன்னும் பவழமும் சிதரிக்கிடக்கும்,வனிகம் செழித்துப் பொங்கும், மும்மாரி பெய்யும்,கற்புக்கரசிகள் மழை கொண்டுவருவார்கள் என்றெல்லாம் மட்டுமே சொல்லப்பட்ட முலாம் பூசிய சரித்திர விஸ்தரிப்புகளிலிருந்து வேறுபட்டு ஒரு கலாச்சாரத்தின் உண்மயான,எதார்த்தமான வாழ்வியல்,அவர்களின் நம்பிக்கைகள்,சட்டதிட்டங்கள்,உறவுகள் என்று உண்மயின் ஒரு துண்டாக விழுந்திருக்கும் இந்நாவல் தமிழர்களை பிரதிபலிப்பதில் முக்கியாமான படைப்பு.அதனாலே இதை தமிழில் தலைசிறந்த படைப்பு என்று சொல்கிறேன்.

நெடுங்குறுதி என்பது ஒரு புத்தகம் அல்ல.அது ஒரு அனுபவம்.தீவிர இலக்கிய ,கலாச்சார தேடல் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று !

(இதில் கதையில் ஒரு பகுதியை மட்டுமே நான் எடுத்தாண்டுள்ளேன்.இனி இப்புத்தகத்தைப் படிப்பவர்களின் ஆர்வத்தை குறைக்காமலிருக்கவும், நேரமின்மையாலும் கதையின் பெரும்பான்மையானவற்றை பற்றி நான் பேசவில்லை.என்னை மிகவும் கவர்ந்த வேம்பலை பற்றி மட்டுமே பேசியுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

புத்த்கத்தின்...

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : உயிர்மை
விலை : 275

* * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

புதன், 23 ஆகஸ்ட், 2006

கல்வெட்டுக்கள்


கல்வெட்டுக்கள்
-----------------------

பாழான பழைய தியேட்டர்
சுவர்கள் புதுப்பிக்கும் போதும்

பொதுக்க் கழிப்பிடம் எப்போதாவது
பெயிண்ட்டடிக்கும் போதும்

மந்திரி வருவதறிந்து, அவசரமாய் ரயில்கள்
அழகுபடும் போதும்

கட்டுப்பட்டுக் காத்திருந்த சாலயோர மரங்கள்
வெட்டப்படும் போதும்

சரிந்து ஆடும் கல்லூரி மேசைகள்
சரிபார்க்கப்படும் போதும்

சிதைவு பலபட்ட ஹாஸ்டல் கதவுகள்
அலங்கரிக்கும் போதும்

பள்ளியோர கள்ளி மரங்கள்
களையெடுக்கப்படும் போதும்...

காணாமல் போகும்
சில காதல் கல்வெட்டுக்கள் !!

-2003


நெடுங்கேள்வி


நிலவின் பின் பக்கத்தை
ஏன் யாரும் ரசிப்பதே இல்லை ?

காதலியின் கோபத்தை
ஏன் யாரும் சகிப்பதில்லை ?

அலாரம் அடிக்கும் முன்னே
அம்மா ஏன் எழுந்து கொள்கிறாள் ?

பள்ளிக்கூட கடைசி மணி
ஏன் மிக வேறுமையாய் உள்ளது ?

கல்லறைப் பூக்கள்
ஏன் சிரிப்பை மறந்து விடுகிறன ?

கடற்கரை காதலர்களுக்கு
ஏன் மணல் சுடுவதே இல்லை ?

சண்டையிட்ட நண்பர்கள்
ஏன் மண்ணிப்பு கேட்பதே இல்லை ?

பொய் சொல்லும் கவிஞனை
அவன் அம்மா தண்டித்திருப்பாளா ?

கழுதை ஏன் பாடுவதே இல்லை ?

பாரதி ஏன் இறந்து போனான் ?

அடுத்த ஊருக்கு வழியனுப்பினாளும்
ஏன் அழுகிறாள் தாய் ?

ஓளிந்து கோண்டே வந்த பஸ் பயண பெண்மணி
இறங்கியவுடன் ஏன் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் ?

'ஔவை' -யை ஏன்
ஒ-ள-வை என்று நாம் படிப்பதில்லை ?

காதலி ஏன் கண்பார்த்து அழுவதில்லை ?

கண்விழிக்கும் போது மட்டும்
ஏன் இரவு நீளமாய் உள்ளது ?

அலாவுதீனின் விளக்கை
இப்போது யார் வைத்திருக்கிறார்கள் ?

நாம் ஏன் இன்னும்
கேள்விகேட்டுக்கோண்டெ இருக்கிறொம் ?

ஆமாம்...
நீங்கள் ஏன் இன்னும் கவிதை படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் ? !

-2005

புரியாவிடை

எல்லா ஹோட்டலிலும்
தொலைந்துபோன தன் படிப்பை
தொடைத்து எறிகிறான் ஒரு சிறுவன்


'என் மகனை எந்த கல்லூரியில் சேர்ப்பது ?'
பழைய மாணவனிடம் பாடம் கேட்கிறார்
வாத்தியார்

வளர்ந்த பிறகு
பிடித்து விடுகிறது
வெறுத்த பள்ளியும்
சபித்த டீச்சர்களும்

பிரிவின் நினைவில்
ரசித்து சிரிக்கிறோம்
காதலியின் கோபத்தை

கவிதை வரி முண்டியடித்துக்கொண்டு
வரும் வேளையில்...

இதோ.!
முடிந்து போகிறது பக்கம் !!

-2005

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2006

ரேகைகளற்றவன்

சொந்த வீடு என்பது சிலருக்கு கனவு ,சிலருக்கு நனவு, பலருக்கு அது நினைவில் மட்டும் நிற்க்கும் ஒரு சொர்க பூமி.எங்கெங்கோ ஊரை விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு சொந்த ஊர் நினைவுகள்,சொந்த வீட்டின் நினைவுகள் ஒரு பூனையைப் போல் நம் கால்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கின்றது.வீடு; சந்தோஷம்;அது இருக்கும் வரை இருப்பதாகவே தெரிவதில்லை.சொந்த வீட்டை இழந்தவர்கள் சிதைந்தவர்கள் தங்கள் அடையாளங்கள் அழிந்து விட்டதாகவே அலைகிறார்கள்.அப்படியொரு அடயாளமற்ற பின்குறிப்பு இதோ....


ரேகைகளற்றவன்



டிசம்பர் 25 மதியம் வீட்டுக்கு தொலைப் பேசியிருந்தேன்.எங்கள் வீடு விலைபேசப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.அதன் பிறகு என்னவெல்லாம் சொன்னார்கள் என்று எனக்கு நினைவில்லை.தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை.

ஒரு நாளில் எத்தனையோ பொருட்களை வாங்குகிறோம் , செலவழிக்கிறோம்.அதுபொல வீடும் ஒரு பண்டம் தானா?.வீடு கற்களாலும் , மண்ணாலும் மட்டும்தான் ஆக்கப்பட்டுள்ளதா?.அப்படியானால் ஏன் இதயம் இப்படி கிணற்றுக்கடியில் கிடக்கும் கல்லைப்போல் கணக்க வேண்டும் ?.

வீடு என்பது ஒரு விசித்திர வெளி ( வேலியும் தான் ! ).அங்கு தனித் தனி உலகங்கள் இயங்குகின்றன,போர்கள் நடக்கின்றன,தெய்வங்கள் வருகின்றன,தோன்றி மறைகின்றன.வீடுகள், கல் மண்ணைத் தவிர்த்து கண்ணீர்,புண்ணகைகள்,ஆசைகள்,நிசப்தம்,விசும்பல்,வெளிப்படுத்த முடியாத கோபங்கள்,போராட்டங்களால் ஆனது தானே?.வருடங்கள் ஏற ஏற வீட்டின் மூலப்பொருட்கள் கூடிக்கொன்டே போகிறது.இது ஒரு மர்மச் சாம்பல் !

காங்ரீட் பூக்களாக என் மலர்ந்திருக்கும் வீடு என்னை என் தாயை விட அதிக நாள் சுமந்திருக்கிறது.முதல் முறை நடக்க பழகிய போது தடுக்கி விழுந்த போது தரைகளின் மீது கொண்டிருந்த கோபம் அளப்பறியது.பெரியவனானதும் கண்டிப்பாக ஒரு நாள் தரைக்கு வலிக்குமாறு அடித்து விடவேண்டும் என ரௌத்திரம் கொண்டிருந்தவனாக இருந்தேன். அக்கோபம் பின்னாளில் பாசமாக மாறியிருக்கும்படி பரிபாஷைகள் புரிந்த நிலவெளியை உயிரற்றது என்று எப்படி சொல்ல முடியும் .இன்னும் ஏதேதோ மூலைகளில் யார் யாருடைய விசும்பல் சத்தங்களையோ என் வீடு சேகரம் செய்து வைத்துள்ளது தானே ?.என் வீடெங்கும் என் பாத சுவடுகள் நிரம்பிக்கிடக்கின்றன.எல்லா சுவர்களிலும் என் கைரேகைகள் பதிந்து இருக்கிறது...என் கைரேகைகளின் ஓவியப்பதிவு அல்லவா என் வீடு!- அப்படியானால் என் வீடல்லாத நான் ரேகைகளற்றவனாகிவிடுவேனா ? வீடு என்பது எப்போதும் பால்யத்தின் பதிவு.இன்னும் ஏதேதோ சுவர் விளிம்புகளில்,படிக்கட்டு முக்குகளில் அடித்துத் தெரித்த குறுதிக் கறைகளை சுமந்துகொண்டல்லவா இருக்கிறது.நான் மறுமுறை அங்கு செல்ல நேரிட்டால் என்னை நினைவு வைத்திருக்குமா என் சுவர்கள்.

ஆண்களுக்கு வீடு என்பது ஒரு அறை அவ்வளவு தான்.பெண்களுக்கு அது உலகம்...ஒரு பொருள் நம்மை விட்டு போய்விடும் என்று தெரிந்த பிறகு அவர்கள் அதன் மீது காட்டும் அன்பை மறைக்கத்தெரியாத நிராகரிப்பு நிலைகொள்ள முடியாததாக இருக்கிறது.விலை பேசப்பட்ட வீட்டின் பெண்கள் உறக்கமற்று விழித்த இரவுடயவர்களாகவே உள்ளார்கள். ஆண்கள் வீட்டிற்க்கு வர விருப்பமற்றவர்களைப் போல ஊர் அடங்கி பின்னிரவினில் வருவதும்,அதிகாலயிலேயே கிளம்புபவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியூர் செல்பவர்கள் ஏதோ உறவினர்களை விட்டு செல்வதைப் போல் சென்று விடுகிறார்கள்.ஆட்களின் வருகைகளற்ற பூட்டப்பட்ட வீடுகள் தனக்குள் ஒரு ரகசியத்தைப் பேசி அசை போட்ட வண்ணம் இருக்கிறது.வீட்டை விற்ற நகரத்தில் மீண்டும் வாழ்வது துரதிஷ்டமானது !.

ஆயிரமாயிரம் துன்பங்கள் இருக்கும் போதும் தாய் மடிபோல் ஆறுதல் அளிப்பது வீட்டின் நிழல் தான்.அது நினைவுகளின் பத்தாயம்.வீட்டின் ஒவ்வொரு செங்கலும் நம்க்கு ஒவ்வொன்றை நினைவு படுத்திய விதமே இருக்கின்றது.அது ஞாபகங்களின் அடுக்கு.அதை விட்டு வேறு ஒரு விசித்திர கிரகத்தில் நான் குடியேறிய பிறகு - நான் சிரிப்பது சிரிப்பு போலவே இருக்குமோ என்றோ,சமையலின் ருசி அதே போல் இருக்குமோ என்றோ...என்னால் உறுதியாக கூற முடியாது !.ஏனெனில் வீடு ஒவ்வொருவர் காற்றில் கலந்திருக்கிறது !

என் நினைவுகளின் பெட்டி தொலைந்துவிட்டிருக்கிறது !

***முற்றும்***