இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தூதுவன் (அ) கடைசி கடிதம்



ஒரு உரையாடலைப் போல மாறி மாறி கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி சத்தத்திற்கு நடுவில் ஒரு

சிப்பாய் ஊழியன் மிக்கையேலிடம் ஏதோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான்.

"நான் தலைமையகத்திலிருந்து வருகிறேன்"

"அதற்கு? இந்த துப்பாகியை கீழே வைத்துவிட்டு உனக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா?"

ஊழியன் நிலைகுத்தி அவனையே பார்த்து புன்னகைத்தான்.

"நீ ஜெனரலை பார்ப்பதற்கு கேட்டிருந்த அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது"

ஒரு நொடி அவனை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு "எப்போது" என்று அவனைப் பார்க்காதவாறு கேட்டான்.

"ஞாயிற்றுக்கிழமை"

"சரி ஆகட்டும்"

§§§

தைரியமாக காட்டிக்கொண்ட போதிலும் உள்ளுக்குள் பதட்டமாகவே உணர்ந்தான் மிக்கையேல். ஏனெனில் தெற்கு, வடக்கு என்று இரு பிரிவுகளாக பிரிந்திருந்த ராணுவப் படையில், தெற்குப் பகுதி முகாம்களில் நடக்கும் மோசடிகளையும், ஊழல்களையும், மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்து தலைமையகத்திற்கு தெரிவித்தவண்ணம் இருந்தான் அவன். ஆனால் இப்படிப்பட்ட ராணுவ சூழலில் சந்தேகத்திற்குரியது போல் சின்னதாக கம்யூனிச சிந்தனைகள் வேர்விடுவது தெரிந்தால் கூட அது உயிருக்கே ஆபத்தாக வந்து சேரும் என்பதை அறிந்தே இருந்தான். இதற்கு முன் அவனைப்போல் அதிகப்பிரசங்கித்தனமாக செயல்பட்ட சில அதிகாரிக ளையும் தண்டிக்கத் தவறியதில்லை அந்த சர்வாதிகார அயோக்கியப் பயல்கள். எனினும் நிலைமை இப்போது கட்டுக்கடங்காமல் போய்விட்டது. ராணுவத்திற்குள்ளாகவே கொள்கை முரண்பாடுகள், பிரிவினைவாதமும் எதற்காக சண்டையிடுகிறோம் என்ற நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கியது. நாளுக்கு நாள் அதிகமாகும் அதிகார மோதல்கள் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்து வந்தது. அதனால் தான் மிக்கையேல் இந்த முடிவுக்கு வந்திருந்தான். அப்போது அமைந்திருந்த நம்பத்தகுந்த தலைமைக்கு தொடர்ந்து கடிதங்களும் எழுதி வந்தான். ஆனால் இப்போது அதிகார விஸ்தரிப்புக்குப் பிறகு நடந்த இடமாற்றங்கள், பதவி மாற்றங்களுக்குப் பிறகு இந்த கடிதங்கள் தூசு தட்டி எடுக்கப்படுவது தான் மிக்கையேலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கிழக்கு முகாமில் பலத்த போர் நடக்கிறது. படைகள் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள். வடக்கு எல்லையில் மறைமுகமாக தாக்குதல்கள் நடக்கும் போதிலும் எந்த நிமிடமும் பகிரங்கமாக‌ போர் தொடங்கும் அபாயம் இருக்கிறது. இந்த நிலைமையில் தலைமையகத்திலிருந்து வந்த இச்செய்தி ஒரு கெட்ட சகுனத்தைப் போலவே இருந்தது!

§§§


ஞாயிற்றுக்கிழமை.

அன்று எந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை போலவே மிக சாதாரணமாகவே விடிந்தது. காலை உடற்பயிற்சி, பரேட், காலை உணவு முடிந்து அனுமதிசீட்டுபெற்று தலைமையகம் நோக்கி புறப்பட்டான். தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்பை எண்ணி திருப்தி ஏற்பட்டாலும் தனக்கே அது எதிராகவும் அமைந்துவிடும் வாய்ப்பிருப்பதை எண்ணும் போது அது திகிலளிப்பதாகவே இருந்தது. எப்படி இருப்பினும் ஜெனரலைப் பார்ப்பதே பெரிய விஷயம் தான். இங்கு எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்?. இங்கு யாருக்காக, எதற்காக சண்டையிடுகிறோம் என்பது கூட தெரியாமல் இருப்பவர்கள் எத்தனைபேர்? என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கையில் வெயில் மேலேறத் துவங்கியிருந்தது.

தலைமையகத்தை அடைந்தபோது சூரியன் உச்சியில் இருந்தது. அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருப்பதாகத் தோன்றியது. ஒருவேளை தெற்கு மூலையில் உள்ள சிறிய முகாம்கள் பற்றிய முன்னுதாரண‌ம் காரண‌மாக இப்படி தோன்றியும் இருக்கலாம்.

காத்திருப்பு அறையில் சில நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அங்கு நிலவிய அசாத்திய அமைதியும், எல்லா இடங்களிலும் வெளிப்பட்ட நேர்த்தியும், அப்பழுகில்லாத சுத்தமும் அதிகார குணாம்சம் கொண்டதாகவும் மிக‌வும் அசௌக‌ரிய‌மான‌தாகவும் இருந்தது. மாலை ப‌ணி நேர‌ங்க‌ளுக்குப் பிற‌கு பெரிய‌ க‌த‌வுக‌ளின் பின்னால் சாத்தப்படும் இந்த அறைக‌ளின் த‌னிமையை நினைத்து வருத்தப்பட்டான் மிக்கையேல்.

தனக்கு முன்னதாக‌ ஜெனரலை சந்திக்க நம்பர் வரிசையில் ஆட்கள் காத்திருந்தனர். ஜெனரலின் அறைக்குச்செல்லும் வழி சிவப்பு கம்பள‌ங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரு புறமும் தங்க முலாம் பூசிய ஜாடிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. ஜெனரலின் அறை திறந்து திறந்து மூடியவண்ண‌ம் இருந்தது. அதனுள்ளே அங்கிகள் அணிந்த சில உடல்கள் நகர்வதும் கையசைத்துக் கொள்வதுமாக தெரிந்தது. சுமார் ஒருமணி நேரம் வரை காத்திருந்தாயிற்று. ஜெனரல் மாளிகை எவ்வளவு அலுப்பூட்டுவதாக இருக்கிறது என்று நொந்துகொண்டான் மிக்கையேல். வேலையாட்கள் வெண்ணிற கோப்பைகளில் தேநீர் கொண்டு தந்தனர். அதிலுள்ள‌ அழகிய பூ வேலைப்பாடுகளை ரசித்தவண்ணம் டீ அருந்தினான். பீங்கான் கப்பும் சாசரும் முட்டிக்கொள்ளும் போது எழுப்பும் சப்தம் அந்த அமைதியில் பேரோசையாக ஒலித்தது சங்கடத்தை ஏற்படுத்தியது. சாசரையும் கப்பையும் விலக்கி வைத்தே குடித்தான். இப்படிப்பட்ட பீங்கான் கோப்பைகளையும் சாசர்களையும் தெற்கு முகாம்களில் கண்டதே இல்லை. தினமும் கேண்டீனில் காலி ரம் பாட்டில்களில் டீ குடித்து பழகிவிட்டது. இதையும் பழகிக்கொள்ள வேண்டும். நாளையே எல்லா சச்சரவுகளும் முடிந்துவிட்டு அரசியல் தீர்வு ஏற்பட்டு விட்டால், பின் ஏதோ ஒரு சிறிய வணிகம் செய்து ஒரு பணிப்பையனையும் வேலைக்கு வைத்து, வருகிறவர்களுக்கு பீங்கான் கப்‍களில் டீ கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இதற்கிடையில் மிக்கையேலின் நம்பர் விளிக்கப்பட, அவசரமாக தேநீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, சற்று சத்தம் எழும்புமாறே சாசரை வைத்துவிட்டு விரைந்தான்.

அச்சமயம் பெரும் சப்தத்தோடு வந்து இறங்கிய காராவேன் அங்கிருந்த‌ பேரமைதியை உடைத்தது. ஒரு ஆஃபீசர் குழு உரத்த பூட் ஓசைகளை எழுப்பியபடி வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து சில ஸ்டேம்பிங் ஓசையும் கேட்கவே தானும் எழுந்து அனிச்சையாக காலை உயர்த்தி அடித்து சல்யூட் வைத்தான். தொடர்ந்து ஒரு அறைகளில் இருந்து மறு அறைக்கு மாறி மாறி சிலர் நடந்தது, எதிர்கொள்ளும் தினவேலைகாரர்கள் மீது காரமின்றி வசை கூட்டியது, தொடர்ந்து ஒலிக்கப்பட்ட தந்தியின் சப்தம் எல்லாமே ஏதோ ஒரு அதிமுக்கியமான அவசரகதியை உணர்த்தியது. இதற்கிடையில் தான் அழைக்கப்பட்ட காரணம் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று யோசித்துக்கொண்டே ஜெனரல் அறையினுள் நுழைந்தான்.


அவ்வளவு ஆபீசர்களின் மத்தியிலும் ஜெனரல் துல்லியமாக அவர்களிலிருந்து தனித்துக் காண‌ப்பட்டார். புகைப்படங்களில் கண்டதைக் காட்டிலும் பொலிவுடனும், சற்று தடிமனாகவும் தான் தெரிந்தார். அவரது கண்பார்வை அவன் மீது படுவதற்காய் சற்று இடம் மாறி இடம் மாறி நின்று பார்த்தான். முடிவாக அவனைப் பார்த்துவிட்டார்!. பெருமிதத்துடன் ஒரு சல்யூட் வைத்தான். அவரும் அதை ஏற்றுக்கொள்ளுவதாக பாவனை செய்தார். தான் கிழக்கு முகாமிலிருந்து வருவதாக சொல்லவந்தான். 'எல்லாம் தெரியும்' என்பதாக தலையசைத்தார்.உங்களைப் போன்ற உண்மையான வீரர்கள் தான் நமது பலம். உங்கள் கடிதங்களை பரிசீலணை செய்ய தான் உங்களை வரச்செய்தேன்.." என்று சொல்லும் போது அவரது காரியதரிசி அவரது காதை கடன்வாங்கி ஏதொ சொன்னான். மீண்டும் அவர் "...ஆனால் அதற்கு முன்பு நீங்கள் ஆற்ற வேண்டிய இன்னும் ஒரு பணி பாக்கி உள்ளது' என்று ஒருவாறு பார்த்தார். ராணுவத்தில் பெரும் அதிகாரிகளுடன் உரையாடும் போது சொல்ல வேண்டிய ஒரே வார்த்தை 'சரி' என்பது மட்டும் தான். வேறு எதையும் சொல்லவோ அதை அவர்கள் கேட்கவோ யவரும் விரும்புவது இல்லை.

"உத்தரவு" என்று பதில் அளித்தான்.

காரியதரிசி அளித்த ஒரு சீல் செய்யப்பட்ட சிவப்பு நிற தபால் உரையை மிக்கையேலிடம் கைமாற்றினார். ஜெனரல் இந்த கடிதத்தை வடக்கு முகாமில் உடனடியாக சேர்பிக்க வேண்டும். உடனே கிளம்புங்கள். மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி நகரத் தொடங்கினார். ஜெனரலற்ற அறையில் நானும் காரியதரிசியும் மட்டும் நின்றிருந்தோம். அவர் என்னுடன் மற்றுமொரு சிப்பாய் வருவதாகவும். அவன் வடக்குநோக்கு பாதைகளை நன்கு அறிந்தவன் என்றும் சொன்னார். "அப்படியானால் அதை அவனை வைத்தே சேர்பித்திருக்கலாமே?' என்று அவனுக்கு கேட்கத் தோன்றியது தான். ஆனால் மிக்கையேல் எதையும் கேட்கவில்லை.


அந்த கடிதத்தை வடக்கு போர் மையத்தில் சேர்க்கச் சொல்லியிருந்தார்கள். ஒருவனை வடக்கு நோக்கி பயனிக்கச் சொல்லும் முன்பு தனது வீட்டினருக்கு தொலைபேசுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். இந்த முட்டாள்தனமாக பழமையான வழக்கங்கள் மிக்கையேலுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. வடக்கு மையத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலும் அதுவே தமது வீட்டாருடன் பேசுவது கடைசிமுறையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. இந்த கட்டாயகரமான அன்புகாட்டுதல் எரிச்சலூட்டுவதாக இருந்தது. அவன் யாருக்கும் தொலைபேசவில்லை. அப்படி பேச யாரும் இல்லை என்பது தான் உண்மை. ஒருவேளை ரோசம்மா திருமணம் செய்ய ஒப்புக்கொண்டிருந்தால் அவளுடன் பேச விருப்பப்பட்டிருக்கலாம். இப்போது அவள் அவளுடைய கடைமுதலாளி கணவனுடன் உல்லாசமாக இருக்கக்கூடும். அவன் திருமணமாகி முதல் ஒரு வருட காலமெல்லாம் மதிய உணவு இடைவேளைகளில் கூட இடைவிடாது புணர்வதாக கடந்தமுறை சொன்னாள். இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிரு ந்தவன் சட்டென ஒரு கனவிலிருந்து எழுபவன் போல‌ நானொன்றும் சிவிலியன் கிடையாதே? இவ்வாறு கனவு கண்டுகொண்டிருந்தால் எவனாவது புட்டத்தில் குண்டு பாய்ச்சிவிட்டுப் போய்விடுவான்என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.


வடக்கு மையத்திற்குப் போகும் பாதை செங்குத்தானது. எதிரிகள் எப்படியோ பனிக்காலங்களில் ஊடுறுவி அதன் உச்சியிலுள்ள நமது எல்லையை ஆக்கிரமித்துவிட்டார்கள். கடந்த 2 ஆண்டுகளில் ராணுவம் சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று 75 சதமான நிலங்களை மீட்டெடுத்துவிட்டது. மிக சமீபத்தில் நம் படை முன்னேறிய இடத்திற்குதான் இதைக் கொண்டு சேர்பிக்க வேண்டும். எதிரிகளின் ஊடுறுவல் முழுதாக அடங்கிவிட்டதாக சொல்ல இயலாது. போர் முற்றிய சம‌யத்தில் பல எதிரிப் போராளிகள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டனர். மறைந்திருந்து அவ்வப்போது தாக்குதல் நடந்தவண்ணமே இருக்கிறது. ஆதலால் கிரேனைட் தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடுகளும் இருந்தவண்ணமே தான் இருக்கிறது. முறைப்படி போர்செய்ய‌ அனுமதி இல்லாததால் ராணுவர்களும் மறைந்திருந்த தாக்குதல்கலையே மேற்கொள்கிறார்கள். இவ்வாறு நேரும் மரண‌ங்கள் கணக்கில் வருவதில்லை. இதர உயிரிழபுக்கள், விபத்துகள், உடல்நல கோளாறு, எதிரிகளால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் என்று வருடந்தோறும் கண‌க்கு காட்டப்பட்டனர். மேலே முன்னேறிய படைகள் சும்மா இருக்க மாட்டாமல் போராளிகள் என்று சந்தேகித்து அங்கு வாழும் குடியானவர்கள் வீடுகளில் பல அட்டூழியங்கள் நிகழ்த்தியிருந்ததால் அப்பகுதியின் பழங்குடியினரும் ஆபத்து தோற்றுவிப்பவர்களாகவே இருந்தார்கள். ஆடு மேய்க்கும் ஒரு சிற்வன் மூலமாகவோ, அல்லது தண்ணீர் எடுத்துச் செல்லும் ஒரு மெலிந்த பெண்மணி மூலமாகவோ ஒரு சாதாரண குடியானவன் போல காட்சியளிப்பவன் மூலம் கூட எதிர்பாராத ஆபத்து ஏற்படும் என்பதால் வடக்கு முகாம் நோக்கி பயனப்படுதல் சிரமமானதாக கருதப்பட்டது. மொத்தத்தில் வடக்கு நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக்க ஆபத்தும் அதிர்ச்சியும் நிறைந்ததாகவே இருக்கும் என்று தெரியவந்தது.


மிக்கையேலுடன் அனுப்பப்பட்டவன் பல நேரம் யார்யாருடனோ தொலைப் பேசிவிட்டு வந்து சேர்ந்தான். அவன் மிகவும் மெலிந்தவனாக இருந்தான். பார்த்த மத்திரத்திலேயே அவன் அதிகம் பேசுபவனாகத் தெரிந்தான். "நீ யாருடனும் பேசவில்லை?" என்ற அவனது கேள்வி மிகவும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. மிக்கயேலிடமிருந்து "இல்லை" என்று மட்டும் பதில் வந்தது.

அவர்கள் சென்ற‌ வாகனம் மிக குறைந்த சத்தத்தில் மிக வேகமாகவும் சென்றுகொண்டிருந்தது. வழியெங்கும் ராணுவப் படையின் கொட்டாரங்களே காணப்பட்டன. சுமார் ஒருமணிநேரம் கடந்திருக்கும். மிக்கையேல் மற்றவனுடன் எதையும் பேசிக்கொள்ளவில்லை. எதற்காக தன்னை இவனுடன் அனுப்ப வேண்டும். அதுவும் வெறும் ஏதோ ஒரு கடிதத்தை யாருக்கோ கொடுப்பதற்காக, அதுவும் பாதுகாப்பற்ற இந்த வழியில். ராணுவத்தில் மரணமடைவது பெருமைக்குரிய விஷ‌யம் தான். ஆனால் அதற்காக ஒரு அலுவலக பணியின் பொருட்டாக மரண‌மடைவது எப்படி மரியாதைக்குரிய செயலாகும். களத்தில் மரிப்பதைத் தானே ஒவ்வொறு பட்டாளத்தானும் விரும்புவான்? இவ்வாறு தனியே மாட்டிக்கொள்பவர்களை பெரும்பாலும் கொல்வதைவிட வளைத்துப் பிடித்து கைது செய்வதற்கே வாய்ப்பு அதிகம் உள்ள‌து. கிடைக்கும் எதிரிகளின் பிணத்தைக்கூட அவர்கள் சும்மா விடுவதிலை...உயிருடன் கிடைத்தால் சொல்லவா வேண்டும்?. அவ்வாறு மாட்டிகொள்வதைக்காட்டில் மரித்து விடுவதே நல்லது என்று எண்ணிக்கொண்டே வந்தான் மிக்கையேல். அப்படி யாரேனும் ஒருவர் மாட்டிக்கொள்ளும் சூழலில் தாமே மற்றொருவரை சுட்டுக்கொன்றுவிடும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். தன் கையால் மற்றவனோ, அல்லது அவன் கையால் தானோ சாவதற்கான சாத்தியம் இருப்பதை எண்ணுவது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.


சீரான தார்சாலைகள் கடந்து, மண்சாலைகளும் கடந்து ஆங்காங்கே மரங்கள் தென்பட ஆரம்பித்திருந்தன. அவற்றில் சில தற்போது தான் வெட்டியது போன்று பச்சைதேகத்தைக் காட்டியபடி நின்றுகொண்டிருந்தன. எதிரிகள் ஒருவேளை கொட்டகைகள் அமைப்பதற்காக வெட்டிச் சென்றிருக்கலாம். மற்றவன், அவ்வாறு இருக்காது என்று மறுத்தான். ஏதேனும் காட்டு யானைகளின் வேலையாக இருக்கலாம் என்றான். மிக்கையேல் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தியபடியே வந்துகொண்டிருந்தான். மற்றவன் கிழக்கு மையத்தில் நிலவி வரும் அரசியல்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். தொடர்ந்து அதைப்பற்றி பேச எனக்கு விருப்பமில்லை என்ற போதிலும், மேலும் அதைப் பற்றி பேசுமாறு வலியுறுத்தினான். தலைமைக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் தலைமையகத்திற்கு விசாரனைக்கு கூப்பிட்ட பிறகு அவர்கள் மையத்திற்கு திரும்பவே இல்லை. சிலர் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுவிட்டதாக சொன்னாலும், அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று யாருக்கும் சரியாக தெரியவில்லை. மற்றவன் 'அவர்களுக்கெல்லாம் என்னவாகி இருக்கும் என்று எண்ணுகிறாய்?' என்று ஒரு கள்ளத்தனமான சிரிப்புடன் கேட்டான். அதன் அர்த்தங்களை யூகிப்பது பெரும் பயங்கரமாக இருந்தது. இவனும் புல்லுறுவி கும்பலைச் சேர்ந்தவனாக இருப்பான் என்பது போல இருந்தது அவனது பேச்சுக்களும் நடத்தைகளும்.


ம‌ண்சாலையோரங்களில் மரங்களின் நெருக்கம் கூடிக்கொண்டே வந்தது. வெயிலின் வெப்பத்தினால் பச்சிலைகள் ஆவியாகி புழுக்கத்தை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட இடைவெளியே இல்லாத அளவுக்கு மரங்களின் அடர்த்தி கூடிவிட்டிருந்தது. வண்டியின் ஹெட்லைட்டின் அவசியம் இருந்த போதும், அவன் போடவேண்டாமென மறுத்துவிட்டான். தூரத்தில் ஒளிந்திருபவர்கள் கூட நமது ஹெட்லைட் ஒளியை வைத்து நம்மை துல்லியமாக தாக்கிவிடக் கூடும் என்று எண்ணினான். ஒளியற்ற பாதையிலேயே வண்டி தடுமாறி போய்க் கொண்டிருந்தது. இந்த பாதையைத் தான் வேகமாக கடக்க முடியும், ஏனெனில் சுற்றிலும் உள்ள மரங்களின் மறைவில் மற்றவர்கள் கண்ணில் படாமல் போய்விடலாம். மரங்கள் விலகிப் போகத் தொடங்கினால் எதிரிகள் பார்க்க நேரிடலாம். அவர்கள் குறி சரியாக இருப்பின் கண்டிப்பாக தாக்கப்படுவது உறுதி. கரடுமுரடான பாதையில் ஒரு குடிகாரனைப் போன்ற அசைவில் சென்றுகொண்டிருந்தது வாகனம். சுமார் ஒரு 40 நிமிடம் இருக்கும், கிட்டத்தட்ட முன்னைவிட இரண்டு மடங்கு தூரத்தைக் கடந்திருந்தார்கள். சற்றுநேரம் ஓய்விற்காக வண்டியை நிறுத்தினான். அடுத்து இனி மையத்தில் தான் நின்றாக வேண்டும். இனி வருவது இடைவெளி மிகுந்த பாதை, புதர்களின் மறைவில் நின்று கவனித்து தான் செல்ல வேண்டும். வடக்கு பிரந்தியங்களில் தாக்குதல் இல்லை என்று அரசியல் ரீதியாக தெரிவித்தாலும் கொரில்லாத்தனமாக அவர்கள் தாக்கிக்கொண்டே தான் இருக்கிறார்கள், இந்த மடையன்மார்க ள் ஜனரஞ்சகமாக போர் அறிவிப்பு செய்தால்தான் என்ன‌, என்று தன் வெறுப்பைத் தெரிவித்தான் மிக்கையேல். அப்போது காட்டுவோம் இவர்களுக்கு நாம் யாரென்று, இந்த பிராந்திய பெண்களும் அறியவேண்டும் தங்கள் சூரப்புலிகள் அவர்களை எப்போதும் காப்பாற்றிவைக்க முடியாது என்று”, என்றான் மற்றவன். அதற்கு அவசியமிருக்காது என்று சொல்லிவைத்தான் மிக்கையேல். அவன் சொன்னதன் பொருள் இன்னதென்று புரியாமல் மிக்கையேலை முறைக்கலானான் மற்றவன்.


ஒரு குவளைத் தண்ணீரை இருவரும் பகிர்ந்து கொண்டனர். கடிதம் மிக்கையேலின் சட்டையின் உள்பாக்கெட்டில் இருந்தது. கடிதம் தண்ணீரில் நனையாது இருப்பதற்காக அதை கால்சராய்க்கு மாற்றினான். அந்த கடிதம் தாங்கியுள்ள மர்மத்தை அவிழ்த்துவிட வேண்டுமென்று தீராத வேட்கை உண்டாகிக்கொண்டே இருந்தது. அது முற்றிலும் தவறான செயல்தான் என்றபோதும் இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற அரசியல் சூழலில் அதைத் தெரிந்துகொள்வது மிக்கையேலுக்கு ஞாயமாகவே பட்டது. கிழக்கு முகாம்களில் இப்படி நிலவும் முக்கிய கடிதங்கள் எப்படியும் வாசிக்கப்பட்டுவிடும். மீண்டும் அதை பிரித்துப் படித்ததற்கான சுவடே இல்லாமல் மடித்து வைக்கவும், அழிந்துசென்ற முத்திரை தெரியாமல் வரைந்துவிடவும் கற்றுத்தேர்ந்திருந்தார்கள். ஏதேனும் சிறிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்கூட போதும் அந்தக் கடிதத்தை எப்படியாவது படித்து விடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் மற்றவனோ எந்த நேரமும் தன் அருகாமையிலே நிழலைப்போல ஒட்டிக்கொண்டிருந்ததால் அதற்கு வாய்ப்பு ஏற்படாமலே இருந்தது. ஓரிரு முறை புதர்களிடையே நின்று சென்றபோதும் போதுமான சந்தர்ப்பம் அமையாமல் போனது. ஒரு வேளை இத்தகைய நெருக்கடியை ஏற்படுத்த வேண்டிதான் இரண்டுபேராக‌ அனுப்பி இருக்கிறார்களோ என்னவோ? என்று மிக்கையேலுக்குத் தோன்றியது. அக்கடிததை பிரித்துப் படிக்க தன்க்கு இருக்கும் தவிப்பைப் போலன்றி மற்றவன் சிரிதும் சலனமற்று காணப்பட்டான். ஒருவேளை கடிதத்தில் என்ன இருக்கின்றது என்ற தகவல் அவனுக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டது!.


இன்னும் 15 மைல்களே கடக்க வேண்டியிருந்தது. ஆனால் இதுவரைக் கடந்த தூரத்தைக்காட்டில் இது அபாயகரமாக இருக்கும் என்பதற்கான அறிகிறிகள் காணப்பட்டது. முற்றிலும் மரங்களே இல்லாத வெட்டவெளிகளாகவும், மனித மற்றும் ராணுவ வாகணங்களின் நடமாட்டம் அதிககமாக இருப்பதும் கண்ணுக்கு புலனானது. இந்த் அசொற்ப தூரத்தைக் கடப்பது வாழ்வா சாவா பிரச்சனையாக இருக்கும் என்றே தோன்றியது. மிக்கையேலுக்கு சுபமான முடிவு எதுவும் கண்களுக்கு தெரியவில்லை. அதுவரை இயல்பாக இருந்து வந்த கூட்டுகாரனும் சற்று கலவரமடந்து தான் போனான். மிக வெகு தூரங்களில் துப்பாக்கிகளின் எதிரொலிகளைப் போல சத்தங்கள் கேட்க்கத் துவங்கின. மிக்கையேலும் அவனது கூட்டாளியும் தங்களது வ்யூகத்தை தீர்மாணித்து விட்டவர்களைப் போல கிளம்பினார்கள். கையிலிருந்த வழிகாட்டி பயனளிப்பதாக இல்லை. அதில் குறித்துள்ளதைக் காட்டில் அந்த வழிகள் மிக வித்தியாசமானதாக இருந்தன. இருந்தும் போக வேண்டிய இடம் இதுவென்பது தெளிவாக தெரிந்திருந்தது. அவர்களது வண்டி தறிகெட்டு வளைந்தோடி அடுத்தடுத்து இருந்த மறைவான புதர்களில் நின்று நின்று சென்றது. வண்டி நிற்கும் நேரத்தில் அவர்களை நோக்கி தாக்குதல்கள் நடக்கத் துவங்கின.


முதல் குண்டு அவர்கள் கடந்துவந்த திசையிலிருந்து வந்தது. மிக்கையேல் துப்பாக்கியை சரியாக பொருத்திக்கொண்டான். மற்றவன் சற்றே அதிர்ச்சி அடைந்தது போல் வண்டியின் போக்கை தவறவிட்டான். அவனை அமைதியாக ஓட்டச்சொல்லி எதிர் தாக்குதலை மேற்கொண்டான். மூன்றுபேர் தாக்குவதாக தெரிந்தது. வண்டி நிலைகொள்ளாமல் சென்றது அவர்கள் குறியை தப்பச்செய்தது, ஆனால் அது மிக்கையேலின் குறியை எவ்வாறும் பாதிக்கவில்லை. மூன்றில் ஒரு பக்கத்திலிருந்து குண்டுவருவது நின்று போனது. அவன் செத்திருக்கக்கூடும், அல்லது காயம் பட்டிருக்கலாம். தூரத்தில் ஒரு புதர் தென்பட்டதைப் போலிருந்தது. அங்கு விரைந்து சென்றுவிட்டால் இம்மூவரிலிருந்து வெகுதூரம் சென்றுவிடலாம், என்று மற்றவனை விரட்டினான். ஆனால் எதிரிகளின் வ்யூகம் வேறுவிதமாக செயல்பட்டது. ஆவர்கள் மிக்கையேலைத் தாக்குவதை நிறுத்தி வண்டி ஓட்டுபவன் மீது கவனம் கொண்டார்கள். மிக்கையேல் மற்றவனை எச்சரிப்பதற்குள் பாய்ந்து வந்த ஒரு தோட்டா அவனது விலாவை பதம் பார்த்தது. அந்த நிமிடமே வாகனம் அவன் கட்டுப்பாடிலிருந்து விலகிப் போனது. வேறு வழியின்றி அவனைத் தள்ளிவிட்டு, ஒருவாறு வாகனத்தை தனது பிடியில் கொண்டுவந்தான் மிக்கையேல். விரைந்து வெகுதூரம் கடந்து அடுத்த புதரை நோக்கி பயனித்தபோது, தோட்டா தெரிக்கும் சத்தங்கள் முதுகுக்கு பின்னால் ஒலித்தன.


புதரை வந்தடைந்தார்கள்!. மற்றவன் எந்த முனங்கலுமற்றுக் கிடந்தான். மிக்கையேல் சட்டையை விலக்கி பார்த்தபோது எக்கச்சக்கமாக இரத்தம் வழிந்திருந்தது. அவனது நினைவு தப்பிக்கொண்டிருந்தது. இவன் விளிப்பதை அவன் உண்ர்ந்ததாகத் தெரியவில்லை. கண்கள் சொருகிக்கொண்டு சென்றன. தோட்டா நுரையீரலை சென்றடைந்திருந்தால் அவன் இன்னும் முப்பது நிமிடம் தாங்குவதே சிரமம். உடனே கிளம்பி அதிவிரைவாக வண்டியை செலுத்தனால் கூட முப்பது நிமிடத்தில் சென்றடைவது கஷ்டம் தான். யோசித்து நேரத்தை வீணடிக்காமல் வண்டியைக் கிளப்பலாம் என்று நினைத்த அந்நேரம், அந்த எண்ணம் மீண்டும் உதையமானது!

.


இந்த இரகசிய கடிதத்தினுள் என்ன இருக்கிறது? படித்துப் பார்த்துவிடலாமா? நான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இது தானே? இதை தவற விடலாமா?” என்பது தான் அந்த எண்ணம். மற்றவனோ உயிருக்குத் துடித்துக்கொண்டிருக்கிறான், இப்போது களையும் ஒவ்வொரு நேரமும் அவது உயிருக்கு ஆபத்தானது. இருப்பினும்...

இருப்பினும்அக்கடிதத்தை ஏற்கனவே பிரிக்கத்துவங்கியிருந்தான். பிர‌த்யேகமான மையினால் அந்த தபால் சீல் செய்யப்பட்டிருந்தது அந்த கடிதம். அடுத்த தாக்குதல்கள் வருவதற்கு முன் புறப்பட வேண்டும் என்ற அவசரத்துடனும், கிழிந்துவிடாமலிருக்க வேண்டி லாவகமாகவும் பிரிக்கப்பட்ட உறையிலிருந்து மடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காகிதத்தை பிரித்த போது, அதில் ஒற்றை வரியில் அழகாக நேர்த்தியான முறையில் அந்த வாசகம் அச்சடிக்கப் பட்டிருந்தது "இந்த கடிதம் எடுத்து வரும் துரோகியை கொன்றுவிடுங்கள்" என்று!!!.


மிக்கையேலுக்கு மொத்த உலகமும் சற்று நேரம் இருண்டு போனது. சுற்றி நடப்பது எதுவும் புரியாத பிரம்மை ஏற்பட்டது. தூரத்தில் மீண்டும் ஒலித்த துப்பாக்கியின் சத்தத்தில் சுயநினைவிற்குத் திரும்பினான். தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சூட்சமங்கள் மெல்ல தெளியத் தொடங்கின. காலையிலிருந்து நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் அர்த்தமுள்ளதாகத் தோன்றியது. தன்னை மிக அருகாமையில் தொடர்ந்து வந்த சூழ்ச்சிகள் விளங்கத் தொடங்கியது. தற்போது திரும்பிச்செல்ல முடியாத பேராபத்தில் வந்து சிக்கியாயிற்று என்று உணர்ந்தான். ஒன்றாவது எதிரிகள் கையில் மடிய நேரிடும், இல்லையேல் நமது இன துரோகிகளிடமே! எப்படியும் மடிவதென்பது உறுதியாகி விட்டது. இரத்தம் வேகமாக பாய்ந்தது. மூளை வேகமாக சிந்திக்கத் தொடங்கியது. இனி இந்த துரோகக் கும்பலுக்கு ஞாயமாக இருப்பதில் பலனில்லை. அர்த்தமற்று தன் வாழ்வை முடித்துக்கொள்ள விருப்பமும் இல்லை. எனது உயிரைக் காப்பாற்றுவது மிக முக்கியம் என்று பட்டது. “இந்த உலகத்தில் எனக்கு மிக முக்கியமான ஒருவன் உண்டென்றால், அது தான் தான். என்னை நான் காப்பாற்றியாக வேண்டும்! என்ற தீர்மாணம் அவனை ஆட்கொண்டது. அடுத்தடித்த செயல்கள் அனிச்சையாக நிகழ்ந்தேறியது.


முதலில் அந்தக் கடிதத்தை பிரித்த அடையாளமின்றி மடித்துவிட்டு, நினைவின்றி கிடந்த மற்றவனின் சட்டைப் பைக்குள் வைத்தான். எப்படியும் இவன் வடக்கு மையம் வரை உயிரோடு இருப்பது கடினம் தான், குற்றுயிராக கிடப்பினும், அவன் கையிலிருக்கும் கடிதத்தின் பயனாக அவன் எப்படியும் சுட்டுக் கொல்லப்படுவான். நான் வாகனம் ஓட்டிவந்தவனாக காட்டிக்கொள்ளலாம் என சிந்தித்தது மனம். அவ்வாறே சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வாகனத்தை ஓட்டத்துவங்கினான் மிக்கையேல். மற்றவன் இன்னும் சுயநினைவின்றியே கிடந்தான். உயிரோடு இருக்கிறானா என்று அறிவதற்காக அவனது காயத்தில் குத்திப் பார்த்தான் , அவன் ஒரு மாற்றமும் இல்லாமல் கிடந்தான். இரத்த ஓட்டம் நின்றுவிட்டிருந்தது. ஏறத்தாழ அவன் சாவது உறுதியாகி இருந்தது.


மீண்டும் வெட்டவெளியான பாதை, சற்றுநேரத்திற்கு ஒன்றும் தடங்கல் இல்லை. மற்றவனுடைய இரத்ததால் மேப் நனைந்து உபயோகமற்றதாகி இருந்தது. மிக்கையேல், கண்பார்த்த திசையில் சென்று கொண்டிருக்கையில், மீண்டும் துடங்கியது துப்பாக்கி ஓசைகள். வண்டியின் பல பாகங்களிலும் தோட்டாக்கள் பட்டுத் தெரித்தன. முடிந்தவரையில் தறிகெட்டு வண்டியை செலுத்தினான் .முன்பு எப்போதையும்விட உயிரின் மீதான பயம் இப்போது அதிகப்பட்டிருந்தது. இங்கு இறப்பதென்பது அநியாய‌த்திற்கு எதிரான தோல்வியாக இருக்கும். தன் உயிரைக் காப்பாற்றுவதன் அவசியம் அவனை முழுவதும் ஆட்கொண்டு ராட்சதத்தனமாக வெறிகொண்டு வண்டியைச் செலுத்தினான், எதிர் தாக்குதல்கள் செய்தபடியே. இப்படியாக ஒருசில மைல்கள் கடந்துவிட்டிருந்தான். பாதைகள் முடிவற்று போய்க்கொண்டிருந்தது. அப்போது தான் சற்றும் எதிர்பாராமல் எதிரியின் ஒரு தோட்டா அவனது கைகளிலும் பாய்ந்தது. அதிர்ச்சியில் உண்மையிலேயே தறிகெட்டு ஓடியது வாகனம். நிறுத்தாமல் வண்டியை முடிந்தவரை செலுத்தினான். வழிந்தோடும் இரத்ததை உணர முடிந்தது. எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் ஓட்டினான் என்பது தெரியவில்லை. மெல்ல மெல்ல துப்பாக்கியின் ஓசைகள் சன்னமாக ஒலிக்கத் தொடங்கின. முன்னால் இருக்கும் பாதை கூட‌ மங்கலாகத் தெரியத் தொடங்கியது. தூரத்தில் சில உருவங்கள் அவனை நோக்கி வருவதைப் போல இருந்தது. அனைத்தும் இருட்டாகிவிட்டது.

§§§

மிக்கையேல் கண்விழித்த போது ஒரு கூடாரத்தினுள் இருந்தான். கூடாரத்தினுள் வெயில் புகுந்து வழிந்துகொண்டிருந்தது. அவ்வப்போது பலத்த குண்டுகளில் அதிர்வு கேட்டபடி இருந்தது. அதிர்வினால் மருந்து புட்டிகள் ஒன்றோடு ஒன்று முட்டி ஓசை எழுப்பிக்கொண்டிருந்தன‌. கைகளில் பெருத்த வலி இருந்தது. பாய்ந்த தோட்டா எடுக்கப் பட்டிருக்க வேண்டும். புதிதாக டிரெஸிங் செய்யப்பட்டிருந்தது. அவனைச் சுற்றி செவிலியர்களும், காயம்பட்ட மற்ற வீரர்களும் இருந்தனர். அனைவரும் அவனைப் போலவே சீருடைய் அணிந்திருந்தார்கள். அப்போது தான் குருதி வெள்ளத்தில் ஒரு சிப்பாயை உள்ளே கொண்டுவந்து சேர்த்தார்கள். மிக்கையேல் விழித்துக் கொண்டதை ஒரு செவிலியச்சி ஒரு சிப்பாயிடம் அறிவிக்க சென்றாள். மிக்கையேல் மெல்ல மெல்ல தான் தான் வந்து சேரவேண்டிய‌ வடக்கு மையத்தின் மருத்துவ பிரிவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதை உணரத் துவங்கினான். செவிலி அறிவித்த சிப்பாய் மற்றுமொரு உயரதிகாரியுடன் அக்கூடாரத்திற்குள் நுழைந்தான். உயரதிகாரி மிகுந்த உற்சாகத்துடன் அவனை நோக்கி வந்தார். கை குலுக்கினார். "நலமா இருக்கீங்களா? மிக்க நன்றி! நல்ல வேளையாக குறித்த நேரத்தில் நீங்க செய்தியை கொண்டு வந்து சேத்தீங்க...அதனால் தான் உடனடியாக நாம் தாக்குதலில் ஈடுபட முடிந்தது, நல்ல முன்னேற்றம். 18 மணி நேரமா தாக்குதல் நடக்குது. இரவுக்குள் வடக்குப் பகுதியை மீட்டெடுத்துடுவோம்...எல்லாம் உங்களால் தான்!" என்று சொல்லி சென்றார். நடப்பது அறியாது மிக்கையேல் தயக்கத்துடன் "என்னுடன் வந்தவர்?" என்று வினவினான். அவர் திரும்பிப் பார்த்தவாரே "அவர் உடல் நலம் தேறி வருகிறார்" என்று சொல்லி வெளியேறினார். தூரத்தில் துப்பாக்கிகளின் ஒலி கேட்டவண்ணம் இருந்தது.


*** முற்றும்***


பின்குறிப்பு:


1920 களில் ஜெர்மானிய படைகளில் போர் மையங்களுக்கு மத்தியில் செய்திப் மாற்றத்திற்காக‌ குறியீடுகள் பயன்படுத்தப் பட்டன. தூதுவர்கள் எதிரிகளிடம் மாட்டிக் கொண்ட போதும், அவர்கள் கொண்டுசெல்லும் செய்தியை கண்டறியாத வண்ணம் அக்குறியீடுகள் அமைக்கப் பட்டன. உதாரணத்திற்கு "இந்த கடிதத்தை எடுத்து வருபவனைக் கொன்றுவிடுங்கள்" என்பது "போர் தாக்குதல் தொடங்கலாம்" என்ற செய்தியின் குறியீடாக பயண்படுத்தப்பட்டன‌.