இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 மார்ச், 2009

துர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare


எல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாது. மூன்று தெருக்களும் ஒரு விளையாட்டு மைதானமும் சந்திக்கும் இடத்தில் நிறுத்தப் பட்டிருந்த கிரேனைச் சுற்றி மக்கள் கூடி நின்றிருந்தார்கள். எல்லாம் தெரிந்த முகமாகத் தான் இருக்கிறது. அதோ டெய்லர் அங்கிள், சலீமாவின் அம்மா, அப்பாவின் நண்பர்கள் சிலர். எவ்வளவோ துழாவியும் யாசீனைக் காணவில்லை. எல்லாம் முகமும் சிரிப்பற்று இருந்தது.

சிலர் கூட்டத்திலிருந்து எனக்கு வழிவிட்டார்கள். பையன்கள் கூட்டத்திலிருந்து "மாதுரி" என்று அழைத்தார்கள். சிலர் கேமரா மொபைலில் ்ஃபோட்டோ எடுத்தார்கள். எனக்கு உள்ளுக்குள் பெருமையாக இருந்தது. வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இவ்வளவு பெரிய கிரேனை இவ்வளவு நெருக்கத்தில் இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. நடக்கும் அனைத்தும் என்னால் நம்ப முடியவில்லை, நடந்த எதையும் நான் நம்ப மறுக்கிறேன். எல்லாம் தொடர்பற்ற ஒரு துக்க சொப்பணமாகவே தோன்றுகிறது.

**********
இனி சொப்பணக் குறிப்புகள்…

காஸ்பியன் கடலுக்கு மிக அருகாமையில் உள்ள இடம் எங்கள் ஊர். அதனால் எப்போதும் வாகனங்கள் சுற்றுலாப் பயணிகள் என்று கூட்டமாகவே இருக்கும் எங்கள் ஊர். எனக்கு 5 வயது இருக்… இருங்கள்...இன்னும் நான் யாரென்றே சொல்லவில்லையே? Sorry...நான் நசீமா ஜப்பார். எல்லோரும் நசீமா என்று தான் அழைப்பார்கள். யாசீன் மட்டும் தான் மெக்ரூநிசா என்று கூப்பிடுவான். Neka என்னுடைய ஊர். எனக்கு 5 வயது இருக்கும்போதெல்லாம் என் அம்மா செத்துவிட்டிருக்கிறாள். அதுவும் நல்லதென்றே நினைக்கிறேன். இல்லையானால் அப்பா என்னிடம் இவ்வளவு பரிவுடன் நடந்துகொண்டிருப்பாரா என்று சொல்ல முடியாது. அப்பா நான் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார். புதிய ஜீன் ஃபேன்ட், ஹீல் வைத்த செருப்பு, இந்திய நடிகை மாதுரி திக்ஷித்தின் புகப்ப்படம் என்று எதுவும். எல்லோரும் அம்மா இல்லாத பிள்ளை என்று என்னைப் பார்த்து பரிதாபப் படுவார்கள். ஆனால் நான் என் அம்மாவை அப்படியொன்றும் மிஸ் பண்ண வில்லை. எனக்கு மற்ற பிள்ளைகளை விடவும் அதிக சுதந்திரம் வாய்க்கப் பட்டிருந்தது. ஆனால் என் வீடு மிகவும் வெறுமையாகவும் பயமளிப்பதாகவும் இருந்தது. சில சமயம் கல்லரைக்குள் என்னை யாரோ வைத்து பூட்டிவிட்டதைப் போல உணர்வேன்.

என் அப்பாவிற்கு என் பிறப்பைப் பற்றி பெரிய மரியாதை ஒன்றும் இல்லை. எங்கள் சமுதாயத்தில் ஆண் வாரிசில்லாதவனின் ஆண்மைக்கு அவ்வளவாக கௌரவம் கிடையாது. இப்படியாக ஒரு விரோத மனோபாவம் இருப்பதாலோ என்னவோ அவர் என்னைப் பெரிதாக பொருட்படுத்தியாதகத் தெரியவில்லை. அன்பற்ற நிலையைக் காட்டிலும் புறக்கணிப்புத் தன்மை மிகவும் மோசமானதாக இருந்தது.

எல்லாம் கடந்தும் அந்த மனுஷனை எனக்கு பிடித்திருந்தது. அந்த ஆள் ஒரு முரட்டுத்ட்தனமான அன்பானவர். மனைவியின் பிண வாடை போகும் முன்பே அடுத்த மனைவியைக் கட்டிக் கொண்டு வந்துவிடும் சாத்தியங்கள் இருக்கும் போதிலும், அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அவர் வேறு திருமணம் செய்துகொள்ளவே இல்லை. எப்போதும் போதையிலே தான் இருப்பார். வேலை வெட்டிக்கும் போவதில்லை. தன்னால் என்னைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை என்று தன் பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். ஆனால் அங்கு நிலமையோ வேறு மதிரி இருந்தது. நான் தான் அவர்களைப் பார்த்துக்கொள்ளப் போகிறேன் என்பது அங்கு போன பிறகு தான் எனக்குத் தெரிந்தது.

வீடு பெறுக்குவது, சமையல் செய்வது, விறகுகள் எடுப்பது என்று எல்லாமே நான் தான் செய்ய வேண்டும். அது எனக்கு ஏதோ சமாதானத்தைக் கொடுத்து வந்தது உண்மைதான். வாரம் இரு முறை பாட்டியைக் குளிப்பாட்டுவது தான் எனக்கு மிகவும் பிடிக்காத வேலையாக இருந்தது. அவளது சுருங்கிய தோல் உலர்ந்த திராட்சைப் பழங்களை நினைவுபடுத்துவதாக இருந்தது.அவலைக் குளிப்பாட்டும் போது எப்போதும் மேலே விட்டத்தைப் பார்த்தவாறே இருப்பாள். அப்படி என்னதான் பாப்பாளோ தெரியவில்லை!. இவ்வளவு செய்தும் மாறாக ஒரு சின்ன கீற்று நன்றியுணர்வு கூட இருக்காது அவர்களிடம். வயசாளிகளிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று சொல்லுவதெல்லாம் வெறும் பேத்தல். அவர்களிடம் கற்றுக்கொள்ள ஒன்றும் இருப்பதில்லை. வெறும் உருளைக் கிழங்குகள் அவ்வளவு தான். ஒரு குழந்தையைப் போல தான் இருக்கிறார்கள். என் தினசரிகள் அலுப்பும் சலிப்புமூட்டுவதாக இருந்தன. என் தேவைகள் யாருக்கும் தெரியவில்லை. இதெல்லாம் நினைத்து தனியாக சாயிங்காலங்களில் அழுதிருக்கிறேன். பின் தொழுகை செய்தால் கொஞ்சம் சமாதானமாக இருக்கும்.

**********

நான் மிக அழகாக இருப்பேன். ஆமாம் அது எனக்கே தெரியும். இந்திய நடிகை மாதுரி திக்ஷித் போல இருக்கிறேன் என்று எஞ்சோட்டுப் பெண்கள் சொல்லுவார்கள். மற்ற பெண்களைவிட சற்றே கனமான தேகம் என்னுடையது. அதனால் சற்றே பெரிய பெண் போலதான் தெரிவேன். தெருவில் நடக்கையில் பையன்கள் உற்று நோக்குவது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

வீட்டு சுவர்களும் மனிதர்களும் எனக்கு எந்த அர்தத்தையும் தரவில்லை. எனக்கு அதிக காற்று அவசியப்பட்டது. இசையும் நடனமும் தெருக்களில் அனைவரும் பார்க்கும்படி நடந்துகொண்டே இருப்பதும் பிடித்திருந்தது. எனக்கு பிடித்ததையே செய்பவளாகவே நான் இருந்தேன். ஆனால் என் வாழ்வில் அன்பு முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்ட ஒன்றாக இருந்தது. ஒரு சிறிய அக்கறையும், குறைந்தபட்ச அன்பும் போதுமானதாக இருந்தது...நான் யாருக்கு வேண்டுமானாலும் அடிமையாகி இருப்பேன்.

அப்போது தான் யாசீனுடன் நட்பு ஏற்பட்டது, அவன் என் மீது அளவில்லா நட்பு கொண்டவனாக இருந்தான் என்று தான் நம்புகிறேன். எனக்கு விதவிதமான ஆடைகளை வாங்கி வந்தான். என்ன பயன்? அனைத்திற்கும் மேலே விழப்போவது படுதா தானே என்பேன். யாசீன் வேடிக்கையாக சொல்லுவான் "வானம் வண்ண வண்ண ஆடைகளை எடுத்துப் போட்டாலும்...இரவு கடைசியில் கருப்பைத்தானே உடுத்திக்கொள்கிறது" என்று. கெட்டிக்காரன்...அவன் ஒரு கவிஞன் தான். அவனுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆனாலும் அது வெகு நாள் நீடிக்கவில்லை.

அன்று இரவு ரெஸ்டாரன்டில் சாப்ப்பிட்டுவிட்டு நானும் யாசீனும் தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, நான் முதல் முதலில் அறநெறிக் காவலாலர்களால் கைது செய்யப்பட்டேன். ஆம் ஷரியா சட்டத்தின் படி திருமணத்தால் இணைக்கப்படாத ஒரு ஆணும் பெண்ணும் தனியாக உலவுவதோ, வெளியே செல்வதோ ஏன் பேசுவது கூட தண்டணைக்குரிய குற்றமாகும். ஆனால் இரானிய குழந்தைகள் இந்த சட்டத்தை மீறுவது என்பது ஒன்றும் அரிதான ஒன்று இல்லை. அதுவும் இந்த Moral Police கள் பெரும்பாலும் மஃப்டியிலே இருப்பதால் இப்படிப்பட்ட விசாரிப்புகள், கைதுகள் அன்றாட நிகழ்ச்சியாகவே இருந்தன. கைதாவதிலிருந்து தப்பித்துக்கொள்ள அனைவரும் தத்தம் குடும்பத்தின் ஒழுக்கசீல முன்னோர்களைக் காரணம் காட்டி தப்பித்துக்கொள்வார்கள். எனக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. மேலும் 'மகாகனம் பொருந்திய...டவுனின் சிறந்த குடிகாரனுடைய கன்னியம் மிக்க புதல்வி நான்' - என்று சொல்லிக்கொள்வதில் பெரிய பயன் ஒன்றும் உண்டாகப் போவதில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இப்படியாக யாசீன் விடுவிக்கப் பட்டு நான் விசாரணைக்கு அழைத்துச்செல்லப் பட்டேன்.

**********

விசாரணை...

ஜெயிலின் மணமும் அந்த சூழலும் புதுமையாக இருந்தது. ஒரு பிக்னிக் செல்வது போல தான் சென்றுகொண்டிருந்தேன். ஒரு முல்லாவின் துணையுடன், இரண்டு நன்நெறிக் காவலர்களின் உதவியுடன் விசாரணை நடந்தது.

"உன் பெயர் நசீமா ஜப்பார் என்று அறிகிறோம்"

"ஆமாம்"

"வயது?"

"பதிமூன்று"

"கைது செய்யப்பட்ட போது உன்னுடன் இருந்த ஆணுடன் என்ன செய்து கொண்டிருந்தாய்?"

"நாங்கள் எதுவும் 'செய்து'கொண்டிருக்கவில்லை... நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்"

"அவன் உன் சகோதரனா?"

"இல்லை... எனக்கு அப்படி யாரும் இல்லை."

"என்றால் உன் கணவனா? உனக்கு திருமணம் ஆகவில்லை தானே?"

"இல்லை. ஆனால் ஆகலாம்!" நான் என்ன பேசுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.

"திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணுடன் இருப்பது மதச் சட்டத்தின்படி குற்றம் என்பதை நீ அறிந்திருக்கிறாயா?"

"நாங்கள் பேசிக்கொண்டு தான் இருந்தோம் என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன்"

"நீங்கள் பேசிக்கொண்டு தான் இருந்தீர்கள் என்பதை நிரூபிக்க 4 சாட்சியங்களை உன்னால் அளிக்க முடியுமா?"

"நான்கு பேரை வைத்துக் கொண்டு பேசுவதற்கு நான் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?"

"அப்போது நீ உண்மையை ஒப்புக்கொள்கிறாய்? அப்படித்தானே?"
"எது உண்மை?"

"எவ்வளவு கூர்மையான நாக்கு பாருங்கள்...முல்லாவை எதிர்த்தா பேசுகிறாய்...சாத்தானின் பிள்ளை!" என்று அதட்டினான் ஒரு காவலாளி.

அந்த முல்லாவுக்கு, கேவலம் ஒரு காவலாளி தலையிட்டு தன் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டியதாயிற்றே என்று சங்கடமாயிருக்க வேண்டும்.

உரத்த குரலில் கேட்டார் "ஆக நான்கு பேர் முன்னிலையில் பேசவொணா எதையோ, இல்லை புரியவொணா எதையோ செய்ய எத்தனித்திருக்கிறாய்" என்று சொல்லும் போது அங்கு குற்றம் முக்கியத்துவத்தை இழந்து எல்லோருடைய கவனமும் என் மீது திரும்பியது.

"ஆக உன் வாக்கு மூலம் தெளிவாக இருக்கிறது குழந்தையே... நீ ஒப்புக்கொள்கிறாய்.... உன்னைத் திருத்திக்கொள்வது தான் பாக்கி" - என்று ஒரு வெற்றிப் புன்னகை காட்டினார் முல்லா.

அதுவரை நடந்துகொண்டிருப்பது விசாரணை என்றே நம்பிவந்தேன். மாறாக, நி
ர்னையிக்கப்பட்ட அவர்களது விருப்பங்கள் தான் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. என் கண்கள் இறுகியது... இதயம் வேகமாக அடித்தது... தொண்டையில் காற்று வந்து அடத்து வலியை ஏற்படுத்தியது.

நீதிபதி முல்லா குற்றப்பத்திரிக்கையை வாசித்தார்... விஷயம் இது தான்- மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டது; அறிந்தே குற்றத்தைச் செய்ய எத்தனித்தது போன்ற குற்றத்திற்கு எனக்கு விதிக்கப்பட்டது, 3 மாதம் சிறை மற்றும் 95 கசை அடிகள்!.

அப்போது தான் எனக்கு அரிதான ஒரு உண்மை விளங்கியது. 'எங்கள் வாழ்வு எங்களால் முழுவதுமாக நடத்தப்படுவதில்லை. எந்த நேரமும் நாங்கள் முற்றிலுமாக அறிந்திராத ஒரு ஒழுக்கக்குறை குற்றத்தின் பேரில், வாழ்வில் நீங்கள் மறக்கவே முடியாத அவமானங்களையும், அடையாளங்களையும் சுமக்க நேரிடலாம்'. அதுவரை என்னை அடிப்பதற்கு யாருமற்று போனது தான் இவ்வளவு பெரிய தண்டணைக்குக் காரணமா? தெரியவில்லை!. ஜெயிலின் பணியாளர்கள் என்னை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். எனக்கு தலையெல்லாம் சில்லிட்டது. உள்ளங்காலில் எல்லாம் வியர்ப்பது போலிருந்தது. அடிவயிற்றில் இனம்புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. நான் அழுவதற்கு தயாராக இல்லை.

அந்த பெரிய ஒற்றை அறையின் மத்தியில் ஒரு நீண்ட பெஞ்ச் போடப்பட்டிருந்தது. நிலத்தின் சில இடங்களில் காணப்பட்ட பழுப்பு கறைகள் என்னைக் கலவரமடையச் செய்தன. என் முகம் இந்நேரம் வெளிறியிருக்க வேண்டும். பெஞ்சின் இரு முனைகளிலும் கட்டப்படுவதற்காக சரடுகள் இருந்தன. என் ஆடைகளைக் களையும்படி கட்டளையிட்டார்கள். நான் மெல்லிய ஒரு பிளௌஸ் தான் போட்டிருந்தேன். துணியுடனே நான் அடிகளை வாங்கிக் கொள்கிறென் என்றேன். "இல்லை...இல்லை...வெறும் மேனியில் தான் தண்டணையை வாங்கிக் கொள்ள வேண்டும்" என்று சொல்லி என் ஆடைகள் களையப்பட்டன. நினைவு தெரிந்தபின் இவ்வாறு யார்முன்னும் நான் நின்றதில்லை. நான் இறந்து விட்டதாகவே நினைத்துக்கொண்டேன். அவமானம் என்னை அள்ளித் தின்றது. கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

முதல் அடி குதிகாலில் விழுந்தது. நான் சத்தம் போடவில்லை. அடுத்தடுத்த அடிகள் மேல்நோக்கி பயணித்தன. பிரம்புகள் காற்றில் ஏற்படுத்திய‌ சப்தம் அச்சமூட்டுவதாக இருந்தது. பாம்புகளின் சீறலை ஒத்து இருந்தது அந்த சப்தம். என்னுடைய வேதனை எத்தகைய அடியையும் விழுங்கவல்லதாக இருந்தது. சதை உரிந்து வருவது போலவும், குருதி பீய்ச்சியடிப்பது போலவும் தோன்றியது. பின்தொடைகளில் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். எவ்வளவு அடிகள் என்று எண்ண சிந்தையில்லை. அதற்குள் புட்டத்தில் வந்து விழுந்தது ஒரு சீற்றமடந்த பிரம்பு. மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. உடல் வதையைக்காட்டில் நாண உணர்வே அதிக வேதணையை அளிப்பதாக இருந்தது. இறுதியில் தோள்பட்டையில் சென்றடைந்தது முடிந்தது பிரம்படியின் பல்லக்குப் பயணம். நான் அதற்கு வெகு நேரத்திற்கு முன்பே நினைவிழந்திருந்தேன்.

கண்விழிக்கும் போது என் முதுகில் ஏதோ கணமான பெட்டியை வைத்திருப்பதாக உணர்ந்தேன். எப்படி முயற்சி செய்தும் நகர முடியவில்லை. ஒரு வயசான சீக்காளி போல நகர்வற்று இருந்தேன். ஜெயிலின் அசாத்தியமான சுத்தம் வேதணையை அதிகப்படுத்துவதாக இருந்தது. ஒரு முறை யாசீன் என்னை சந்திக்க முயற்சி செய்தான். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும், அழுகையாகவும் இருந்தது. நான் சந்திக்க மறுத்துவிட்டேன். அவன் இந்த கோலத்தில் எப்படி என்னை 'மெக்ரூனிசா' என்று அழைப்பான் என்ற அச்சம் தான். மெக்ரூனிசா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா... "பேரழகி" என்று பொருள்.

**********

எழுச்சியும் வீழலும்...

நாட்கள் சென்றது. ஒரு மாலைப் பொழுதில் டார்மட்டரியின் காலி இடங்களில் நான் மார்பிள் வீசி நொண்டி விளையாடிக் கொண்டிருந்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை. தண்டணை எனக்கு எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அது என்னுடைய அவமானங்களை வெறுப்புணர்ச்சியாக மாற்றியிருந்தது. கேவலம் தண்டணைக்கு பயந்து என்னால் அதிகாரத்திற்கு அடிபணிந்து போக விருப்பமில்லை. என்னுடைய நிலைப்பாடு தண்டணைகளுக்கு எதிரானதாக இருந்தது. அது சட்டத்திற்கு எதிரானதாகவும் இருக்கக்கூடும் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. நான் முழுவதும் என் அறிவால் அல்ல.., என் உணர்ச்சியாலே வழிநடத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். முதல்முறை நிர்வாணப்படுத்தப்பட்ட பிறகு என்னை நிரந்திர நிர்வாணியாகவே என் மனம் என்னைப் பார்த்தது. என் உடலின் சுதந்திரமே என்னை முற்றிலும் ஆண்டுகொண்டிருந்தது.

நான் வெளியே வந்த போது என்னுடைய சுதந்திரம் பறக்கக் கற்றுக்கொண்ட பறவையினுடைய‌தாக இருந்தது. பொது பூங்காக்களில் புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். பலரும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு வருத்தமோ பிரச்சணையோ இல்லை. நான் என் படுதாக்களையும் அணிவதில்லை. தெருவில் பையன்கள் விசில் அடித்துக் கூப்பிடத் துடங்கினார்கள். ஒரு முறை மத நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டுக்கொண்டு தான் இருந்தார்கள். நான் எங்கு போனாலும் யாரவது பின்தொடர்வதாகவே உணர்ந்தேன். கழிவறை ஒரு இடத்தில் மட்டும் தான் இந்த பயத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைத்தது.

தேவையில்லா பரிதாபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று எந்த உற‌வினர்களையும் சந்திக்கவில்லை. ஒரு தாயோ தந்தையோ அற்றவளின் அந்தரங்க வாழ்வில் நடத்தைகளை கற்பிக்க எவர் வேண்டுமானாலும், அனுமதியின்றி நாய் நுழைவதைப் போல நுழைந்து விடுகிறார்கள். நிலையான எந்த முடிவுமின்றி சுற்றியலையும் ஒரு Gypsyயைப் போல நேகாவில் திரிந்தேன். வியாபாரத்திற்கு வருபவர்களுக்குக் கூட என்னைத் தெரிந்திருந்தது. என்றால்...மாறு வேடத்தில் இருக்கும் மதகுருமார்களுக்கு சொல்லவா வேண்டும்?.

இந்த சமயத்தில் தான் என் வாழ்வைப் புரட்டிப் போட்ட ஒரு சம்பவம் நடந்தது. நான் கடற்கரைச் சாலையில் வழக்கம் போல நடந்து கொண்டிருந்த போது அந்த Taxi என் அருகில் வந்து நின்றது. "எங்கு போக வேண்டும்... மேடம்" என்று கேட்டார் Taxi Driver. என் அப்பாவை விட வயது மதிக்கத்தக்க ஆள் என்னை 'மேடம்' என்று அழைத்ததும் எனக்கு ஏற்பட்ட மரியாதை மிதப்பில் காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தேன். "எங்கே போக வேண்டும்" என்றார். நான் என்னவென்று சொல்வது.... "நேரா போய்...ம்ம்..வலது பக்கம்...." என்றேன்.

"சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது…" என்று தோழமையோடு சொன்னார். நானும் புன்னகைத்தேன். அவர் பெயர் அல்பதர் என்றும் அவர் ஒரு முன்னாள் புரட்சிப்படை ராணுவ வீரன் என்றும் தெரிந்து கொண்டேன். போகும் வழியெல்லாம் திரும்பித் திரும்பி பேசிக்கொண்டே வந்தார். வானம் இருட்டிக்கொண்டு வந்து தெருவிளக்குகள் ஒளிரத் துவங்கியிருந்தன. "நான் இப்படியே திரும்பித் திரும்பி ஓட்டிக்கொண்டு வந்தால், யாராவது மேல் விட்டுவிடப் போகிறேன்" "இது தான் கடைசி சவாரி... இனி நானும் வீட்டுக்கு போக வேண்டியது தான்...நீ முன்னாலே வந்து உட்காரலாம்" என்றார் பரிவாக. நான் அவர் சொன்னபடியெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். தெருவிளக்குகள் குறைவாக இருந்த சாலைகளின் வழியாக சென்றுகொண்டிருந்த Taxi, விளக்கற்ற ஒரு பகுதியில் நின்றுவிட்டது. கண நேரத்தில் டிஷ்ஷூ பேப்பர் போன்ற ஏதோ ஒன்று என் முகத்தில் தாக்கியதை அறிந்தேன். பின்னாளில் அதை க்ளோரோஃபாம் என்று தெரிந்துகொண்டேன்.

இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்று நீங்களே ஊகித்திருக்கக் கூடும். எனக்கு எதுவும் நினைவு இல்லை. காலையில் மிகவும் அழுக்கான ஒரு தனி அறையில் நகர்வற்ற நிலையில் கண்விழித்தேன். அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. என் ஆடைகள் அனைத்தும் வடவடத்துப் போயிருந்தன. எத்தனை பேர் என்று கூட எனக்கு நினைவில்லை. நான் அப்படியே இறந்து போயிருக்க தான் விரும்பினேன். சற்று நேரத்தில் அவன் அறைக்குள் நுழைந்தான். அந்த அறையில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. இரவெல்லாம் இடைவிடாமல் புணர்ந்திருப்பான் போலிருக்கிறது. மாட்டு ஜென்மம்....அறையெல்லாம் துர்நாற்றமாக வீசிக்கொண்டிருந்தது. அவனைப் பார்த்துக் கத்தினேன், வாயில் வந்ததையெல்லாம் வசவினேன். அவனைக் கொன்றுவிட மிரட்டினேன், பிதற்றினேன். ஆனால் என்னால் தன்னிச்சையாக காலூன்றி எழ கூட முடியவில்லை. அவன் பொறுமையிழந்து தாக்க முற்பட்டு வந்து அமைதியாக அமர்ந்தான்.

"இதோ பார். வெறுமனே கூச்சல் போட்டு ஆகப் போவது எதுவும் இல்லை. நீ என்ன கூச்சலிட்டாலும் யாரும் நம்பப்போவதில்லை. தேவை இல்லாமல் நீயே உன்னை மேலும் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாதே. நீ ஏற்கனவே சிறையில் பட்டது பத்தாதா?. அமைதியாக இரு. இது நமக்குள் மட்டுமே இருக்கும்" என்று கூறிவிட்டு மீண்டும் அவன் உடைகளைக் களைய ஆரம்பித்தான். அவனுக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது. தெரிந்து தான் என்னை இப்படி செய்திருக்கிறான்.

அவன் சொல்வதும் உண்மைதான். நான் சொல்லி யார் நம்பப் போகிறார்கள். ஏற்கனவே ஒழுக்கக்கேடு என்ற பேரில் சிறை சென்றவளின் பேச்சு யார் காதுகளில் விழப் போகிறது? மேலும் ஒரு வன்புணர்ச்சி குற்றம் போலீசாரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், சம்பவத்தைப் பார்த்ததாக மதகோட்பாட்டில் சிறந்து விளங்கும் நான்கு பேர் சாட்சியம் அளிக்க வேண்டும் என்பது சட்டம். பாலியல் வல்லுறவு கொள்பவன் சாட்சிக்கு நான்கு பேரை வைத்துக்கொண்டா பண்ணுவான். அப்படி இருந்தாலும் அந்த நான்கு பேர் எப்படி ஒழுக்கசீலர்களாக இருக்க முடியும். இப்படியெல்லாம் கேட்க யாருக்கும் உரமோ உரிமையோ இல்லாத சூழ்நிலையில், அவன் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. இல்லை..அப்படித் தான் நான் நினைத்தேன். ஒரு பெண்ணின் மரண ஓலத்தை விட, ஒரு ஆணின் அலட்சியமான வார்த்தைகளே இந்த சமுதாயத்தில் மிகத் தெளிவாக பதிவுசெய்யப் படுகிறது.
தெருமுனையில் என்னை இறக்கிவிட்டு போய்விட்டான். அத்தையின் வீட்டில் தஞ்சம் புகுந்தேன். நடந்த எல்லாவற்றையும் அவளுக்குத் தெரிவித்தேன். இது ஒன்றும் புதிதல்லவே என்ற தோரணையுடன் அவள் நடந்துகொண்டாள். நான் ஒருவாரத்திற்கும் மேலாக கால் அகட்டவும், நடக்கவும் வலுவின்றி வீட்டிற்குள் நான்கு கால் பிராணி போல தவழ்ந்து கொண்டிருந்தேன்.

**********

வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பது எனக்கு வெறுக்கத்தக்கது. உடலில் ஏற்பட்ட ரணமும், அவமானங்களும் வெளி உலகைப் பற்றிய அச்சத்தைத் தோற்றுவித்தது. சுய கழிவிரக்கம் என்னை வேறு திசையில் நகர்த்திச் சென்றது. என்னை சுய சிதைவுக்கு ஆளாக்கிக்கொள்வேனோ என்ற எச்சரிக்கை உணர்வு ஆட்கொண்டிருந்தது. ஆனால் அப்போது தான் ஒரு உண்மையை நான் உணர ஆரம்பித்தேன். மிருகத்தனமாக என் மீது செலுத்தப்பட்ட பாலியல் வன்முறை, இந்த சமூகம் கட்டமைத்த பெண்ணூடலில் இருந்து எனக்கு விடுதலை பெற்றுத் தந்தது. என் உடலின் சுதந்திரம் என்ன வழிநடத்தி வெளியே அழைத்து வந்தது. என் உடலை ஒரு அஸ்த்திரம் போல உபயோகிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். உடலின் மொழிகளையும், வடிவங்களையும் சிருஷ்டிப்பவள் நானாகவே இருந்தேன், மாறாக அழுகிய சமூகமோ, சட்டதிட்டமோ அல்ல. சிருஷ்டிக்கும் ஆற்றல் பெறப்படுமாயின், அழித்தல் நோக்கும் அமையப்ப்பெறுவது இயல்பு தானே?. அப்படி சுயச்சிதைவு சிந்தைகள் வரும்போது தான் யாசீனின் அன்பு தேவைப்பட்டது. நிபந்தணையற்ற அவனுடைய அன்பு எனக்கு பெரும் ஆறுதலாகவும் வாழ்வின் மீது நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது. அவன் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டே இருந்தான்.

மூன்று வருடங்கள் கடந்திருந்தது. இதற்கிடையில் மேலும் 2 முறை கைது செய்யப்பட்டேன். சரியாக உடை அணியாததற்காக ஒரு முறையும், விடலைப் பையன்களை ஊக்குவிக்குமாறு நடந்து கொண்டதற்காக ஒரு முறையும். நான் மீண்டும் Neka-வின் Gypsy யாக மாறி இருந்தேன். தொடர்ந்து கலாச்சார பாதுகாவலர்கள் கண்களிலும் பட்டுத்தொலைந்தேன். அந்த டேக்ஸி டிரைவர் அல்பதர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்து பலமுறை பலாத்காரமாக உறவுகொண்டான். எனக்கு சிறையின் மேலிருந்த அச்சத்தைத் தொடர்ந்து பயன் படுத்திக்கொண்டவர்களில் அவனும் ஒருவன். ஏனென்றால் இந்த விஷயம் நீதிமன்றத்துக்குச் சென்றால் விபரீதமாகிவிடலாம். பெரும்பாலும் தீர்ப்பு ஆண்களுக்கு சாதகமாக அமைந்து விடும். ஒன்றுமில்லை "அவள் சரியாக உடை அணியவில்லை..முழுமையாக மறைக்கவில்லை.... என்னை ஊக்குவித்தாள் " என்று ஏதோ ஒன்றைச்சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் பெண்களுக்கு பெரும்பாலும் கல்லடிக் கொடுமையோ, தூக்கு தண்டணையோ நேரலாம். ஒரு முறை 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட தெக்ரான் பெண்ணொருத்தி போலீஸில் புகார் செய்யவே, அது அவளுக்கே ஆபத்தாக முடிந்தது. "இதை வெட்கமின்றி விளம்பரப்ப் படுத்தியிருக்கிறாய்" என்று போலீசாலும், அவள் குடும்பத்தினராலும்
Honor Killing-க்கு உட்படுத்தப் பட்டாள். அந்த நான்கு பேர் சொற்ப காசுகளை அபராதமாகக் கட்டினார்கள்!.

அப்பாவின் நிலைமையோ எப்போதும் விட மோசமாகிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு வருவதே இல்லை. பொட்டலத்திற்கு அளவாக எங்காவது வேலை செய்துவிட்டு அங்கேயே இருந்து விடுகிறார். தொடர்ந்த சிறைவாசமும், துன்புறுத்தல்களும் தற்கொலை மனப்பான்மையைத் தூண்டுவதாக இருக்கிறது. ஒரு முறை ஒரு குப்பி நகப் பாலீஷைக் குடித்துப் பார்த்தேன், சாகிறோமா என்று பார்ப்பதற்கு. நான்கு நாள் பேதி போனது தான் மிச்சம். சாவும் எனக்கு கைகொடுக்கவில்லை. அது தான் வாழ முடிவெடுத்துவிட்டேன்!.

அந்த Taxi Driver போன்ற எச்சத்தின் அச்சுறுத்தலுக்கெல்லாம் மசிவதில்லை என தீர்மாணித்தேன். யாசீனை சந்திக்க வரச்சொல்லியிருந்தேன். என்னைத் திருமண‌ம் செய்து கொள்ளச்சொல்லிக் கேட்டேன். அவன் முதல் முறையாக என்னை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். என் உடல் சிலிர்த்து கண்களில் நீர் வந்தது. நான் அழுகிறேனா என்று தெரியவில்லை. என்னை அழைத்துச் சென்று விலை உயர்ந்த மேற்கத்திய திருமண உடை ஒன்றை வாங்கித்தந்தான். பிறகு ரெஸ்டாரன்டில் சாப்பிட்டோம். ஞாயிற்றுக்கிழமை தன் குடும்பத் திருமண நிகழ்சிக்கு வருமாறு சொன்னான். அங்கு வைத்து பெற்றோரிடம் அறிமுகப் படுத்திக்கொள்வதாக ஏற்பாடு. உணவு முடிந்து கிளம்பும் போது அவன் செல்லமாக சொன்னான் "ஏய் Gypsy!! ஞாயிற்றுக்கிழமை நீ ஒரு தேவதை போல இருக்க வேண்டும்" என்று.

உலகம் திடீரென கனவில் வருவதைப் போல நீல நிறமாயின. என்னைச் சுற்றி சந்தோஷமும், பரவசமும் குடிகொண்டன. உலகின் வேறு மூலைக்கு வந்து விட்டதாகத் தோன்றியது. முற்றிலும் கழுவப்பட்டவளாக உணர்ந்தேன். கடவுள் இருக்கிறான் தான் போலிருக்கிறது. இந்த அநாதைச் சிறுமியை அப்படியே நிராதரவாக விட்டு விடுவான் என்று தான் நினைத்தேன். தினமும் ஐந்து நேரமும் மனம் உருக பிராத்தணை செய்தேன். தாத்தா பாட்டியுடன் அன்போடு நடந்து கொண்டேன். அவர்களுக்கு வேண்டுமென்பதை சமைத்துக் கொடுத்தேன். ஆனால் இந்த சந்தோஷக் களிப்பும் எனக்கு சொந்தமானவை இல்லை என்றும். இவை வெறும் ஒரு சொப்பண கலவி போன்றது தான் என்பதை நான் அறிய வெகு நாட்கள் ஆகவில்லை!.

**********

மீண்டும் பயங்கரம்...

அன்று சனிக்கிழமை. பகல்ப்பொழுது. தாத்தாவுக்காக சிக்கன் சமைத்துக் கொண்டிருந்தேன். உரத்து தட்டப்பட்ட கதவைத் திறக்க அடுப்பை அணைக்காமல் கூட சென்றேன். வெளியே இருந்த தாத்தாவகத் தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தாத்தாவால் இவ்வள‌வு பலமாக தட்டமுடியாது என்ற யோசனையே ஏதோ தீயதொன்று நடக்கப்போவதை எனக்கு உணர்த்தியது.

மூன்று காவல‌ர்கள் கதவை அடைத்தபடி நின்றிருந்தார்கள். அதில் இரண்டுபேரை எனக்கு முன்பே தெரிந்திருந்தது. அவர்கள் சிறையிலிருந்து வெளிவரும் சிறுமிகளைக் கட்டாய விபச்சாரத்தில் தள்ளிவிட்டு தொழில் செய்துகொண்டிருந்தார்கள். அல்பதருக்கு என்னைப்பற்றி தெரிய வந்ததும் இப்படித்தான். என்னைக் கைது செய்ய வந்திருப்பதாகத் தெரிவித்தனர். எதற்கு என்பதைப்போல என் பார்வை இருந்திருக்க வேண்டும். "உன் மீது பெட்டிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. நீ உன்னுடைய ஒழுக்கக்கேட்டின் மூலம் நகரத்தில் கலகமூட்டுவதாகவும், தங்கள் குழந்தைகளின் நன்நடத்தைக்கு நீ அச்சுறுத்தலாக‌ இருப்பதாகவும் பெற்றோர்களிடமிருந்து கம்ப்ளைன்ட் வந்துள்ளது"என்றான் அதில் உயரமானவன்.

"யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது" என்றேன்.

அந்த பெட்டிஷனில் மூன்றே பெயர்கள் தான் இருந்தன. அவை ஒரே பேனா மைய்யால் கையெழுத்திடப்பட்டிருந்தது. கட்டாயமாக அது அவர்கள் மூவருடைய கையெழுத்தாகத்தான் இருக்கும். வற்புறுத்தலின் பேரில் கைது என்ற பேரில் இழுத்து செல்லப் படுகிறேன்... நான்காவது முறையாக. என் அடுப்பில் கோழியின் மாமிசம் கருகி புகையைக் கிளப்பிக்கொண்டிருந்தது. என் தாத்தா எதுவும் செய்ய வக்கற்று, நடப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார்.

மீண்டும் என் விதி மர்மமான ஒரு சூத்திரதாரியின் கையில் அகப்பட்டுக் கொண்டதைப்போல ஆனது. சட்டத்திற்கு எதிரான, வாழ்கைக்கு எதிரான, அதிகாரத்துக்கு எனது தோல்விகள் என்னை மிகுந்த கோபம் கொண்டவளாக ஆக்கியிருந்தது. நடப்பது என்ன...நடக்கப் போவது என்ன..என்று ஒரு பிடியும் இல்லை. மீண்டும் என்னைப் புணர எடுத்துச் செல்கிறார்களோ என்ற எண்ணமே அச்சுறுத்தலைத் தருவதாக இருந்தது. "புணர்வதாயின்...போய் உங்கள் அக்காள் தங்கைகளை புணருங்களேன்.." என்று கத்தினேன். அவர்கள் அமைதியாக புன்ன‌கைத்தார்கள். அது என் அச்சத்தை அதிகப் படுத்தியது.

கண்டிப்பாக விசாரணையில் எனக்கு ஞாயம் கிடைத்துவிடும் என்று நம்பினேன். இம்முறை நான் எதுவும் குறிப்பிடும்படியாக தவறு செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அங்கு எனக்காக காத்திருந்தது வேறு. ஹமீது ராஜி என்னும் பழம்பெரும் மதகுரு நீதிபதியாக இருந்தார். அவர் இந்த காவலாளிகள் சொல்வதை அப்படியே நம்புபவராக இருந்தார்.

"நீ ஒழுங்கீனமான பெண் என்று உன் மீது குற்றச்சாட்டு உள்ளதே, அதை நீ மறுக்கிறாயா?"

"உங்கள் காவலாளிகள் ஒன்றும் அவ்வளவு ஒழுக்கசீலர்கள் இல்லை.."

"நீ மற்ற குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறாய் என்று சொல்கிறார்களே?"

"நான் எனக்கு சுதந்திரமான விஷயங்களையே செய்கிறேன். யாரையும் நான் என்னிடமிருந்து கற்றுக்கொள்ள சொல்வதில்லை. மாறாக மற்றவர்களும் அப்படிப்பட்ட சுதந்திரத்தை விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். அது எப்படி என் தவறாகும்? "

"நீ ஹதீதில் குறிப்பிடுவது போல உடை அணிவதில்லை...உன் உடலைக் கடைவிரித்துச் செல்கிறாய் என்கிறார்கள்"

"நான் என் நிர்வாணத்தை மறைக்கவே செய்கிறேன். வெளிப்படும் கைகளையும் கால்களையும் பார்த்தால் கூட ஏன் உங்களுக்கு விரைத்துக் கொள்கிறது?"

"உன் நாக்கு கூர்மை என்று இவர்கள் சொன்னது சரிதான்; அப்படியானால்.... உன் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நீ மறுப்பதாக இல்லை? அப்படித்தானே?. நீ பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சொல்கிறார்களே...அதை மறுக்கிறாயா? "

"அதில் உண்மை இல்லை. நான் திருமணம் கூட ஆகாத பெண்...எனக்கு யாருடனும் உறவு கிடையாது" என்று யாரையும் பார்க்காமல் சொன்னேன்.

"ஓ...அப்படியா??? எங்கே நான் பார்க்க வேண்டுமே?" என்றான் அந்த ஈனப்பயல்.

ஏதோ புலமை மிக்க ஒரு நகைச்சுவையை அவிழ்த்துவிட்டது போல அனைவரும் சிரித்தனர்...ஒரு பெண் காவலாளி உட்பட!. என்ன செய்வது? இந்த தேசத்தில் ஒரு பெண்ணை கண்ணியமாக நடத்தி விசாரிக்க ஒரு பெண் நீதிபதி கிடையாது. ஏனெனில் ஒரு பெண் இங்கு எப்போதும் நீதிபதியாக வர இயலாது.

"இந்தப் பெண் தான் அவளுடைய எந்த தவறையும் மறுக்கவில்லையே எஜமானே...அவளுக்கு தண்டணையை நிறைவேற்ற வேண்டியது தானே?" என்றாள் அந்தப் பெண் காவலாளி.

"நான் யோசிப்பது அதுவல்ல...பிரியமான‌ காவலாளியே...இவள் தண்டணைக்குரிய சைத்தான் தான் என்பது தெளிவாக இருக்கிறது, ஆனால் இவள் வேறு யாருடனெல்லாம் உறவு வைத்திருந்தாள் என்பதை அறிய இவளை சித்திரவதைக்கு உள்ளாக்கலாமா என்பதே எனது யோசனையாக இருக்கிறது"

"அதுவும் சரி தான்...என்ன புத்திசாலி நீங்கள்!"

இப்போது மிகவும் கர்வமும் அலட்சியமும் கொண்ட ஒரு மந்தகாசப் புன்னகை அவன் முகத்தில் தோன்றி மறைந்தது.

"இவளை மூன்று தினங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்குங்கள்..வேறு ஏதாவது சொல்கிறாளா என்று பார்ப்போம். அவள் கூறியவாரே அவள் இன்னும் கன்னித் தன்மையோடு இருக்கிறாளா என்று சோதனையிடுங்கள்." என்று எழுந்தான்.

ஒரு ஆராய்ச்சி எலியைப் போல என்னை ஆக்கிவிட்ட இந்த கட்டமைப்பைத் தூற்றினேன். எனக்கு அழுகையாக வந்தது. தலையில் அணிந்திருந்த ஹிஜாபை (தலைக் கச்சை) கழற்றி வீசினேன். அத்தோடு இல்லாமல் என் செருப்புகளை கழற்றி அவன் மீது எறிந்தேன். நான் என் வாழ்கையிலே செய்த உருப்படியான காரியம் இதாகத் தான் இருக்கும். விரைவிலேயே காவலர்களால் பலமாக தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டேன்.

**********

7 நாட்களுக்குப் பிறகு....

தனித்து விடப்பட்ட என்னிடம் வந்து சேர்ந்தது தீர்ப்பும் , குற்றப்பத்திரிக்கையின் நகலும். 3 நாட்கள் ஏற்பட்ட சித்திரவதையில் நான் என்னவெல்லாம் உளறினேன் என்று எனக்கு நினைவில்லை. முதல் நாளே அந்த காட்டுமிராண்டி என்னை வல்லுறவு கொண்டது உட்பட எல்லமே சொல்லி கறைந்துவிட்டேன். அதற்கு மேல் என்னிடம் என்ன எதிர்பார்த்து துன்புறுத்தினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு தான் அவர்கள் என்னிம் எதையும் எதிர்பார்க்கவில்ல, மாறாக என்னை எதிர்பார்த்து தான் துன்புறுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தேன்.

தீர்ப்பு நகலில் எழுதி இருந்தது இது தான்.

பெயர்: நசீமா ஜப்பார்

வயது: 22(?)

குற்றங்கள்:
  • திருமணத்திற்கு வெளியில் பல்லுறவு கொண்டது
  • ஒழுக்கக்கேடிற்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டிருக்கிறாள் என்பது குறிப்பிடத தக்கது.
  • நீதி மன்றத்தில் உடையைக் கழற்றி நிர்வாணமாக முயற்சி செய்தது.
  • நீதிபதி மீது செருப்பை எறிந்து நீதியை அவமானப் படுத்தியது

இந்தப் பெண்மணியின் இருப்பு புனிதம் போற்றும் இந்த சமுதாயத்திற்கும் மத நம்பிக்கைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதி, இதுபோல முன்னுதாரனங்கள் இனி செயல் படாமல் இருக்கவும், நன்நடத்தையைக் கடைபிடிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் அமையுமாறு, பொது மக்களின் நலன் கருதி 'இவருக்கு மரண தண்டணை விதிக்கிறேன்' என்று அச்சிடப்பட்டிருந்தது.


என் தீர்ப்பு பற்றிய செய்தி என் குடும்பதுக்கு சொல்லப்பட வில்லை. எனக்கு சாதகமாக வாதாட வக்கீல்கள் இல்லை. அதற்கெல்லாம் வசதியும் இல்லை. ஒவ்வொறு முறை நான் சிறைபடும் போதும் வந்து பார்க்கும் யாசீனும் வந்து பார்க்கவில்லை. ஒரு வேளை அவன் பெற்றோர்கள் அவனைத் தடுத்திருக்கலாம். அந்த காட்டுமிராண்டி அல்பதருக்கு 100 கசையடிகள் மட்டுமே வழங்கப் பட்டது. சிலர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களைத் தூக்கிலிட முடியாது என்று சொன்னார்கள். அதனால் தான் சாதுர்யமாக நீதிபதி. எந்த சான்றிதழையும் பார்க்காமல், வயது 22 என்று போட்டுவிட்டான்.


"அவளது வனப்பான வளர்ந்த சரீரத்தை வைத்தே சொல்லிவிடுவேன், அவள் வயது என்னவென்று. ஒரு சான்றிதழும் தேவை இல்லை" என்று மறுத்துவிடார். உடல் முழுவதும் மறைக்குமாறு உடை அணியும் ஒரு கலாச்சாரத்தில் என் "வனப்பான வளர்ந்த சரீரத்தைக்" கண்டு மதிப்ப்பிட ஒரு நீதிபதிக்கு கிடைத்த சந்தர்ப்பம் எப்போது என்று யாருமே குரல் எழுப்பவே இல்லை!.

**********

என்-நாளும் வந்துவிட்டது...

எல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாது. மூன்று தெருக்களும் ஒரு விளையாட்டு மைதானமும் சந்திக்கும் இடத்தில் நிறுத்தப் பட்டிருந்த கிரேனைச் சுற்றி மக்கள் கூடி நின்றிருந்தார்கள். எல்லாம் தெரிந்த முகமாகத் தான் இருக்கிறது. அதோ டெய்லர் அங்கிள், சலீமாவின் அம்மா, அப்பாவின் நண்பர்கள் சிலர். எவ்வளவோ துழாவியும் யாசீனைக் காணவில்லை. எல்லாம் முகமும் சிரிப்பற்று இருந்தது.

சிலர் கூட்டத்திலிருந்து எனக்கு வழிவிட்டார்கள். பையன்கள் கூட்டத்திலிருந்து "மாதுரி" என்று அழைத்தார்கள். சிலர் கேமரா மொபைலில் ்ஃபோட்டோ எடுத்தார்கள். எனக்கு உள்ளுக்குள் பெருமையாக இருந்தது. வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இவ்வளவு பெரிய கிரேனை இவ்வளவு நெருக்கத்தில் இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. நடக்கும் அனைத்தும் என்னால் நம்ப முடியவில்லை, நடந்த எதையும் நான் நம்ப மறுக்கிறேன். எல்லாம் தொடர்பற்ற ஒரு துக்க சொப்பணமாகவே தோன்றுகிறது.

அந்த நீதிபதி தன் கையாலேயே தண்டணையை நிறைவேற்ற வேண்டி என் அருகிலேயே நின்றான். கிரேனின் கயிறு இறக்கப்படுகிறது. அதை கழுத்தில் அணிவிக்கிறாள் ஒரு காவலாளி. என் கண்களில் கருப்புத்துணி ஒன்று கட்டப்படும் வரை எல்லாம் ஒருவகை வினோத விளையாட்டு என்றும், போகிற வரைப் போய் நின்றுவிடும் என்றே நம்பி வந்தேன். என் மரணத்திற்காக நானே அழுகத் துடங்கினேன் முதல்முறையாக. நான் சாகத் தயாராகிவிட்டேன். எதற்காக மறிக்கிறேன் என்ற கேள்வி தான் என்னை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. என்னைப் பிய்த்துத் தின்ற மிருகங்களும், வல்லூறுகளும் இந்தக் கூட்டத்தில்ல் நின்று இதைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கக் கூடும் என்ற எண்ணம் தான் என் மரணத்தை அர்த்தமற்றதாக ஆக்குகிறது என்று வருந்துகிறேன். மற்றபடி நான் வாழ்ந்ததில் ஏதும் அர்த்தம் இருக்கவில்லை தான். எனக்கு வருத்தமளிப்பதெல்லாம் இன்னும் அந்த சிறையில் என்னைப்போலவே சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் 60க்கும் மேற்பட்டவரை நினைத்துதான். அவர்களைக் காப்பாற்றவாவது யாராவது வர மாட்டார்களா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே..கால்கள் நிலத்தில் இருந்து உயர்ந்து கழுத்து இருகுகிறது... இடது கழுத்து எலும்பில் பெருத்த வலி உண்டாகிறது...என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை... இத்தோடு இந்த குறிப்புகளை முடித்துக்கொள்ள அனுமதியுங்கள்...

முடிந்தால் அந்த 60 பேரையும் உங்கள் பிராத்தணைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்..!

**********

பி.கு

1. மேலே விவரித்துள்ள சம்பவங்கள் 2004 ஆகஸ்டு 14ம் தேதி இரானிய அரசால் தூக்கிலடப்பட்ட 16 வயதே நிறம்பிய அதிஃப்ஹ் சஹாலெ (Atefeh Sahaaleh) யுடைய வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அதிஃப்ஹ் சஹாலெ வுடைய மரணத்தைத் தொடர்ந்து எழுந்த மனித உரிமைக் குரல்களின் விளைவாக சில பெண்களின் மரண தண்டணைகள் ஆயுள்தண்டையாக குறிக்கப்பட்டன. 2007 ஆகஸ்டு 14ன் புள்ளி விவரப்படி இரானிய சிறைகளில், மேலும் 75 குழந்தைகள் மரண வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


2. அதிஃபெஹ்கைக் கைது செய்த 2 காவலளிகள் குழந்தைகளை வைத்து விபச்சாரம் செய்தபடிக்காக கைது செய்யப்பட்டார்கள். நீதிபதி ஹமீது (பெயர் மாற்றப்பட்டுளது) இந்த வழக்கில் காண்பித்த அசாதரணமான வேகத்தை சந்தேகித்து தொடர்ந்த விசாரணைகளில் அதிஃபெஹ் நீதிபதியாலும், காவலாளிகளாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகிநிருந்தது தெரியவந்தது. காவலாளிகள் சிறையெடுக்கப் பட்டார்கள். நீதிபதி ஹமீதுக்கு மரண தண்டணை வழங்கி, நிறைவேற்றப் பட்டது.

3. "அவள் அடிக்கடி சொல்லுவாள். நிலவு எப்போதும் மேகத்துக்குப் பின்னலேயே இருந்துவிடாது என்று...அது உண்மையாகிவிட்டது"
~ அவள் மரணத்துக்குப் பின் அதிஃபெஹின் தந்தை.

நன்றிகள்

இந்த நெடுங் கட்டுரைக்கான உபயோகமான‌ Inputs வழங்கிய இஸ்லாமிய தோழிகளுக்கும், முதல் பிரதியை Censorship செய்து பின்னூட்டம் வழங்கிய பாலாவிற்கும்.

கவிதைகள்  

வைரமுத்து [..வானம் வண்ண வண்ண...] 
பிரமிள் [...சிறகிலிருந்து பிரிந்த...]

உதவிய ஆதாரங்கள்:

http://www.blogsofwar.com/
http://women4peace.org/
http://www.iranhumanrights.org/
http://www.wikipedia.org/
http://www.bbc.co.uk/