L’Etranger (Albert Camu), அந்நியன் (ஆல்பர்ட் காம்யூ),
Part-1, Chapter 1 பகுதி-1, அத்யாயம் 1
அம்மா இன்றைக்கு காலமானாள். ஒருவேளை நேற்றாகக் கூட இருக்கலாம், எனக்குத்
தெரியாது. எனக்கு முதியோரில்லத்திலிருந்து ஒரு தந்தி மட்டும் தான் வந்தது “அம்மா மரணம். இறுதி சடங்குகள் நாளை. ஆழ்ந்த அனுதாபங்கள்”. அதில் ஒன்னும்
சொல்லப்படவில்லை. ஒருவேளை நேற்றாக இருக்கலாம்.
முதியோருக்கான விடுதியானது மரெங்கோவில் இருந்தது. அல்ஜெரில் இருந்து எண்பது
கிலோமீட்டர் தொலைவில். நான் இரண்டு மணி பஸ்ஸைப் பிடித்தால் மதியம் போய்
சேரமுடியும். மரியாதைகளை செலுத்திவிட்டு நாளை சாயிங்காலம் திரும்பிவிடலாம். நான்
எனது முதலாளியிடம் இரண்டு நாள் விடுப்பு கேட்டேன். இப்படிப்பட்ட இக்கட்டான சாக்குகளைக் கூறுவதனால் இம்முறை அவரால் விடுப்பை நிராகரிக்க முடியாது. இருப்பினும் அவருக்கு
அது மிகவும் உவப்பானதாக இருக்கவில்லை. நான் “இதில் என்னுடைய குற்றம் ஒன்றும் இல்லை” என்று
சொல்லிவிட்டேன். அவர் எதுவும் பதிலளிக்கவில்லை. அதன் பிறகுதான் நான் அப்படி சொல்லியிருக்கக்
கஊடது என்று தோன்றியது. அதற்காக நான் அவரிடம் வருத்தமெல்லாம் தெரிவிக்கவில்லை.
ஞாயப்படி அவர் தான் எனக்கு அனுதாபங்களை தெரிவிக்க வேண்டும். இருக்கட்டும், இறுதிச்சடங்குகள் முடிந்து திரும்பும் போது
கண்டிப்பாக துக்கம் விசாரிப்பாராக இருக்கும். இப்போதைக்கு அம்மா இன்னும் ஏதோ
இறக்காததைப் போல. மாறாக அடக்கம் செய்துவிட்ட பிறகு அது ஒரு முழுமைபெற்றுவிட்ட அதிகாரப்பூர்வமான
ஒரு சமாசாரம் ஆகிவிடும்.
நான் இரண்டு மணி பஸ்ஸைப் பிடித்தேன். வெயில் மிகவும் வாட்டியது. வழக்கம் போல
‘சே செலேஸ்ட்’ உணவகத்தில் தான் சாப்பிட்டேன். அவர்கள் எல்லோரும் எனக்காக ரொம்பவும்
வருத்தப்பட்டனர். செலேஸ்ட் என்னிடம் சொன்னார் “நமக்கெல்லாம் ஒரு தாய் தானே
இருக்கிறாள்”. நான் கிளம்பும் போது அவர்கள் வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி
வைத்தார்கள். ஏற்கனவே எனக்கு கொஞ்சம் தலைசுற்றுவதுபோலிருந்தது. நான் எம்மானுவல்
வீட்டிற்கு சென்று ஒரு கருப்பு டையும் கைக்கச்சையும் கடன் வாங்க வேண்டும்.
சமீபத்தில் தான் அவனது ஒரு மாமா இறந்துபோயிருந்தார்.
பஸ்ஸை தவரவிடாதபடிக்கு ஓடினேன். இந்த அவசரகதி, இந்த ஓட்டம் காரணமாக இருக்கலாம், கூடவே சாலையின் மேடுபள்ளங்கள், டீசலின் வாசனை, வழித்தடத்தினதும் ஆகாயத்தினதும் எதிரொலி
– எல்லாம் சேர்ந்து சற்று அசந்து சாய்ந்தேன். கிட்டத்தட்ட பயணநேரமும் முழுக்க
தூங்கியபடிதான் வந்தேன். நான் தூக்கத்திலிருந்து எழும்பொழுது ஒரு சிப்பாயின் மீது
நெருக்கியபடி அமர்ந்திருந்தேன். அவர் என்னைப்
பார்த்து புன்னகைத்தபடி நான் வெகுதூரத்திலிருந்து வருகிறேனா என வினவினார். நான்
அவருக்கு மேலும் பதிலளிக்காதபடிக்கு “ஆம்” என்று சொல்லிவைத்தேன்.
...
Part-1, Chapter 5 பகுதி-1, அத்யாயம் 5
...
நான் வீடு திரும்புகையில் எனது கதவருகில் கிழவர் சாலமனோ நின்றிருப்பதைக்
கவனித்தேன். அவரை உள்ளே வரச்செய்தேன். அவர் அவரது நாய் தொலைந்துவிட்டதைத்
தெரிவித்தார். அது நாய்கள் காப்பகத்தில் இருந்திருக்கவில்லை. காப்பக ஊழியர்கள்
அவரிடத்தில் ஒரு வேளை அது எங்காவது அடித்து எறியப்பட்டிருக்கும் என்று
சொல்லியிருந்தார்கள். அவர் காவல் நிலையத்தில் எதுவும் தகவல் தெரிய வாய்ப்பில்லையா
என வினவியுள்ளார். அவர்களோ, இந்த சமாசாரத்தை எல்லாம் அவர்கள் கண்காணிப்பதில்லை,
இது வாடிக்கையாக நடக்கிற ஒன்று என்றும் கூறியுள்ளனர். நான் கிழவரிடம் நீங்கள் வேறு
ஒரு நாயை வாங்கிக் கொள்ளலாம் தானே என்றேன். அனால் அவர் எனக்கு சரியாகத்தான்
சுட்டிக்காட்டினார். அவர் அந்த நாய்க்கு பழகிப் போயிருந்தார்.
நான் எனது கட்டிலில் குத்தவைத்து
அமர்ந்திருந்தேன். சாலமனோ மேசைக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
அவர் இரு கைகளை முட்டியின் மீது கொடுத்து என்னைப் பார்த்தவாறு இருந்தார். அவருடைய
பழைய தொப்பியை காவியிருந்தார். வாக்கியங்களின் இறுதிகளை தனது பழுப்பேறிய
மீசைமயிர்களுக்கடியில் மென்று கொன்றிருந்தார். என்னைக் கொஞ்சம் அயற்சியடையத்தான்
செய்தார், எனினும் எனக்கும் செய்வதற்கும் எதுவும் இல்லை, உறக்கமும் வரவில்லை.
எதாவது சொல்லவேண்டும என்பதற்காக அவரது நாயை பற்றி விசாரித்தேன். அதை அவர் மனைவி
இறந்த பிற்பாடு வாங்கியதாக சொன்னார். கொஞ்சம் காலம் கடந்து தான் திருமணம் செய்து
கொண்டார். இளவயதில் ஒரு நாடகக்காரனாக வேண்டும் என விரும்பினார். படைப்பிரிவில்
ராணுவக் கலை இயக்கங்களில் பங்கேற்றார். அதன் பிறகு போக்குவரத்து துறைக்குள்
வந்துவிட்டார். அதற்காக அவர் கொஞ்சமும் வருந்தவில்லை. அதனால் தான் தற்போது
அவருக்கு சிறியதொரு ஓய்வூதியமாவது
கிடைக்கிறது. அவரது மனைவியுடன் மிகவும் மகிழ்ச்சியாகவெல்லாம் இருக்கவில்லை, ஆனால்
ஒரு மாதிரி அவர் மனைவிக்கு மிகவும் பழகிப்போயிருந்தார்.
அவள் இறந்தபோது அவர் மிகவும் தனிமையாக உணர்ந்தார். அதனால் ஒரு நண்பரிடம் ஒரு
நாயைக் கேட்டு பெற்றிருந்தார். அவரிடம் வரும்போது அது மிகவும் குட்டியாக இருந்தது.
ஒரு புட்டியை வைத்து தான் அதற்கு புகட்ட வேண்டி வந்தது. ஒரு நாயாகப்பட்டது மனிதனை
விட குறைந்த காலமே வாழ்கிறது. ஆதலால் நாங்கள் ஒன்றாகவே முதுமை அடைவதென்று ஆயிற்று
என்றார். “அவன் கொஞ்சம் மோசமானவன் தான். அவ்வப்போது எங்களுக்குள் வாக்குவாதங்கள்
வருவதுண்டு . இருந்தாலும் அவன் ஒரு நல்ல நாயாகத்தான் இருந்தான்”. நான் அது ஒரு
நல்ல இன நாய் என்று சொன்னேன், அது அவரை சற்று ஆசுவாசப்படுத்தியது போலிருந்தது.
அவர் தொடர்ந்தார்... “நீங்கள் அவனுக்கு
இந்த தோல் வியாதி வரும் முன்பாக அறிந்திருக்கவில்லை. அவனது முடிதான் அவனில் மிக
அழகு”. அந்த தோல் வியாதி வந்தது முதல், பலகாலம் எல்லா காலையிலும் மாலையிலும்
சாலமனோ களிம்பைக்கொண்டு அதன் மீது எப்போதும் தேய்த்தவண்ணம் இருந்தார். ஆனால்
அவரைமட்டில் அதனுடைய உண்மையான வியாதி வயோதிகம்! வயோதிகத்தை சொஸ்தப்படுத்தக்கூடிய நோய் அல்ல!
அச்சமயத்தில் எனக்கு கொட்டாவி வந்தது. கிழவர் தான் கிளம்புவதாக அறிவித்தார். அவர்
வேண்டுமானால் இங்கேயே இருக்கலாம் என்று சொன்னேன். அவரது நாய்க்கு நேர்ந்தது
குறித்து வருந்துவதாக சொன்னேன். அவர் நன்றி கூறினார். என் அம்மா அவர் நாயை மிகவும்
விரும்பியதாக சொன்னார். அம்மாவைப் பற்றி பேசும்போது அவர் “உன் பாவப்பட்ட அம்மா”
என்று குறிப்பிட்டார். அம்மா இறந்தது முதல் நான் மிகவும் வருத்தத்தில்
இருந்திருக்க வேண்டும் என்று அவர் ஊகித்தார் போலும். நான் எதுவும் மறுப்பி
சொல்லவில்லை. பிறகு அவர் சற்று வேகமாகவும் சங்கடமானதுமான தொணியில், நான் அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டமைக்காக
இந்த குடியிருப்பில் எல்லோரும் என்னைத் தவறாக எண்ணிவிட்டிருந்ததாகவும், அனால் அவருக்கு
நான் அம்மாவை அதிகமாக நேசித்தது தெரியும் என்றும் சொன்னார். இந்த விஷயமாக நான்
தவறாக புரிந்துகொள்ளப்பட்டது ஏன் எனக்கு தெரியாமல் போனது என்றேன். மேலும் முதியோர்
இல்லம் என்பது எனக்கு மிகவும் இயல்பான ஒரு
விஷயமகப்பட்டது. என்னிடம் அம்மாவை பார்த்துக்கொள்ளும் அளவிற்கு பணம் இல்லை. மீண்டும் நான் சொன்னேன் “ மட்டுமல்லாது வெகு நாட்களாக அம்மாவுக்கு என்னிடம் சொல்வதற்கு
எதுவும் இருக்கவில்லை. அவள் தனியாக இருந்து சலித்துக்கொண்டிருந்தாள். அதனால் நான்
அவளிடம் முதியோரரில்லத்தில் குறைந்த பட்சம் நண்பர்களாவது கிடைப்பார்கள் என்று
சொன்னது உண்மைதான்”. பின்னர் சாலமனோ விடைப்பெற்றுக்கொண்டார். அவருக்கு
தூங்கவேண்டும் போலிருந்தது. நாயற்ற அவரது வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறிப்போயிருந்தது
–அவருக்கு என்ன செய்வதென்று தெரிந்திருக்கவில்லை. அவரை எனக்கு பரிட்சையமான நாள்
முதல் முன்னெப்போதும் இல்லாத ஒரு தயக்கத்துடன் கூடிய ஒரு சைகையில் எனது கையைப்
பற்றிக்கொண்டார். அவரது கைகளின் உரிந்த தோலின் செதில்களை உணர முடிந்தது. அவர் லேசாக
புன்னகைத்து புறப்படும் முன், என்னிடம் சொன்னார் – “இன்று இரவு எந்த நாயும்
குறைக்காமல் இருக்க வேண்டுகிறேன்... இல்லாவிடில் அது என்னுடையதாக இருக்குமோ என்றே நினைத்துக்கொண்டிருப்பேன்...”