போதைப்பழக்கத்தின் காரணமாக முறிந்த விவியன் லிபர்தோ-வுடனான இவரது முதல் திருமண வாழ்கையை இரண்டு வருடங்கள் கழித்து அப்போது பிரபலாமாக அறியப் பட்டு வந்த பாடகியும், பாடலாசிரியருமான ஜூன் கார்ட்டருடன் துடங்கினார்.
தன் பாடல்கள் பிரபலாகத் துடங்கியிருக்கையில் போதையின் பிடியிலானார் ஜானி கேஷ். ஒளித்து வைக்கப் பட்ட போதை மாத்திரைகளை, வைத்த் இடம் மறந்தவராக தனது அறை நண்பர்களே திருடிவிட்டதாக கூறித்திரிந்தார். இதனாலே தன் நண்பர்கள் மத்தியில் கேலிக்குள்ளானார். 1970 களில் போதைப் பழக்கத்திலிருந்து விடுபெற்று கிறித்துவத்தில் நாட்டம் காட்டத்துடங்கினார் கேஷ். பின்னாளில் Ring Of Fire என்ற பாடலில் தனது போதைப் பழக்கத்தைக் குறித்து தான் ஒரு தீ வளையத்தினுள் மாட்டிக்கொண்டதாகப் பாடுகிறார்.
மிதமிஞ்சிய போதையில் அவரது நடவடிக்கைகள் மிக வேடிக்கை நிறைந்ததாக இருந்தது. 1965தில் அதிக போதையில் ஒரு முறை ஒரு சரணாலயம் வழியாக தனது ட்ரக்கை ஓட்டிச்சென்று காரின் ஒரு பகுதி பற்றிக்கொள்ள, காட்டினுள் விட்டுவிடுகிறார். அதில் பற்றத் துடங்கிய தீயில் சுமார் 100 ஏக்கர்கள் நாசமாயின. "ஏன் இப்படிச் செய்தீர்கள்" என்ற நீதிபதியின் கேள்விக்கு. "இதை நான் செய்யவில்லை...மாறாக எனது ட்ரக்கே செய்தது. அதுவும் அங்கேயே எரிந்து செத்துவிட்டது, அதனால் அதனிடம் நீங்கள் கேட்க முடியாது" என்று தெனாவெட்டாக பதில் சொன்னார். இவ்வாறு பலமுறை அவர் சிறைக்கு சென்றிருக்கிறார், ஆனால் அச்சிறைவாசம் அவருக்கு ஒரு நாளுக்கு மேல் நிலைத்ததில்லை. காரணமற்று அவருக்கு சிறைக்கைதிகள் மீது ஒரு மெல்லிய அன்பு இருந்து வந்தது. அப்போதைய அமரிக்காவின் ஜனாதிபதி நிக்ஸனின் நண்பராக அறியப்பட்ட கேஷ், சிறைக் கைதிகளின் மறுவாழ்வை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
பாடலெழுதுவது, பாடுவது, இசைஅமைப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துவது, சினிமாப்படம் எடுப்பது என்று தன் கலை வெளிப்பாட்டில் Ironicalலாக இருந்தவர் கேஷ். தான் எப்படி வாழவேண்டுமென்று நினைத்தாரோ அப்படியே வாழ்ந்தார் கேஷ். எப்படி வாழவேண்டுமென்று நினைத்தாரோ அப்படி மட்டுமே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மனிதனின் வாழ்வு இவ்வளவு கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்ததாக இருக்க முடியுமா என்று கேட்டால்...சாருநிவேதிதா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது."பொய்யாக வாழாத எல்லா வாழ்விலும் கேளிக்கைக்கும் இன்பத்திற்கும் குறைவே இருக்காது" என்பார்.
ஜூன் கார்ட்டருடனான வாழ்வு அவருக்கு சற்றே சமாதானத்தை அளித்திருக்க வேண்டும். இல்லையேல் 30 வருடங்களுக்கு மேலாக அத்தம்பதி வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. 1997-98 ஆண்டுகளில் நரம்பு சம்மந்தப்பட்ட நோய்களுக்காகவும், சர்க்கரை நோயாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் உடல்நிலை வெகுவாக பாதிக்கப் பட்டது. ஜூன் கார்ட்டர் 2003ம் ஆண்டு இறுதைய நோயால் இறந்துபோனார். அவள் "தொடர்ந்து இசைக்க வேண்டும் என்று" கேட்டுக்கொண்டபடியே தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார் கேஷ்.
ஜூன் கார்ட்டர் மறைந்து 4 மாதங்களுக்குள்ளாக சுவாச சம்மந்தப்பட்ட பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது 71வது வயதில் அந்த இசைஞன் பிரபஞ்சப் பாடலில் தன்னை கலந்து விட்டுச்சென்றான்.
இதோ நான் மிகவும் விரும்பும் ஜான் கேஷின் இந்தப்பாடலும் கூட ஒரு சிறைக்கைதியின் காதலைப் பாடுகிறது:
-----------------------------------------
இந்தக் காலைப் பொழுதில் ரயில்பாதையின் ஓரம் அவனைக்கண்டேன்
அவன் ஏதோ முணுமுணுத்தபடியிருந்தான்
செத்துக்கொண்டிருக்கும் அவனின் கடைசி வார்த்தைகளுக்காக செவி சாய்த்தேன்
அவன் சொல்லத்துடங்கினான்:
"என்னை ஃபிரிஸ்கோ சிறையிலிருந்து விடிவித்தார்கள்
பத்துவருடம் என் கருமங்களுக்கு பலன் கிடைத்துவிட்டது
நான் லூசியானோவிற்க்கு சென்றுகொண்டிருந்தேன்
என் ரோசைப் பார்ப்பதற்கும் என் மகனை தெரிந்துகொள்ளவும்
"என் காதலை என் ரோசிடம் நீ சேர்த்துவிட மாட்டாயா? பாதசாரியே...
என் பணம் முழுவதையும் அவளுக்காக எடுத்து செல்வாயா?
அதைக்கொண்டு அவளை சில நல்ல துணிகளை வாங்கிக்கொள்ளச் சொல்
என் மகனிடம் சொல்வாயா...
உன் தந்தை உன்னை எண்ணிப் பெருமைப் படுகிறான் என்று..
கடைசியாக ரோசிடம் என் காதலையும் தந்துவிடு பாதசாரியே..."
எனக்காக காத்திருந்தமைகாக அவர்களுக்கு என் நன்றியைச் சொல்லிவிடு
என் மகனை அம்மாவிற்கு உதவியாய் இருக்கச் சொல்
எனது ரோசை வேறொறு வாழ்வைத் தேடிக்கொள்ளச் சொல் பயனியே...
என்ன நான் சொல்வது சரி தானே...
இல்லையேல் அவள் தன்னந்தனியாய் தன் காலத்தை கழிக்க வேண்டியிருக்குமே...
இதோ என் காசுப்பை முழுக்க இதோ...
இருந்தும் அவர்களுக்கு இது வெகுநாள் நீடிக்காது
இந்த காலையில் என்னை நீ கண்டதற்காக நீ ஆசீர்வதிக்கப்படுவாய் தோழனே
கடைசியாக ரோசிடம் என் காதலையும் தந்துவிடு பாதசாரியே...
என் காதலைத் தந்துவிடு "

மெல்லிய ஒற்றை கிட்டார் இசையுடன் ஒலிக்கும் இந்தப் பாடல், சொல்லாத சோகங்களை ஏந்திச் செல்கிறது. ஏனோ பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்த பாதசாரி ரோசை சந்தித்திருக்க வேண்டும் என மனம் தன்னையறியாமல் பிராத்திக்கிறது. இதுவரைக் கண்டிராத ரோசின் மீது மனம் இரங்குகிறது. காதலைக் காட்டிலும் சிரமமானது காதலை வெளிப்படுத்துதலும், அதை சரியாக புரிந்துகொள்ளுதலுமே ஆகும். வெளிப்படுத்த முடியாத காதலின் சோகப் படிமனாக அமைந்துள்ளது இப்பாடல்.
பல பல தேசங்களில் வருடங்களைக் கழிக்கும் சிறைக்கைதிகளின் குடும்பங்கள் காரணமற்று துன்பப் பட்டவராகத்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு போரிலும் பெண்களும் குழந்தைகளுமே மீண்டும் மீண்டும் நிரந்தரமாக தோற்கடிக்கப் படுகிறார்கள் . போருக்கு பிந்திய வன்முறைகள் ஆனாலும் சரி, சகதுணைவனை இழந்த குடும்பவாழ்வானாலும் சரி. இதை பிரதிபலிக்கும் விதமாக, பற்பரிநாமத்தில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜானி கேஷ்.