இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 பிப்ரவரி, 2016

Funny Games 1997 - மைக்கல் ஹேனெக்

Funny Games படத்தை A Haneke Thriller என்று குறிப்பிட்டிருந்தேன். அது ஏன் என்றால் இதுதான். கதை என்று பார்த்தால் ஒரு சாதரண home invasion கதை தான். ஆனால் அதில் இருக்கும் ஹேனெக்தனம் தான் வித்தியாசம். படம் நெடுக பிரதான வில்லன் பௌல் பார்வையாளர்களுடன் ஒரு இரகசிய தொடர்பிலே இருப்பான் (கேமராவைப் பார்த்து க்ளோசப் ஷாட்ஸ்), பார்வையாளர்களைப் பார்த்து சிரிப்பது கண்ணடிப்பது போன்றவை. பார்வையாளர்களுடன் பேசுவது, கேள்வி கேட்பது இருந்துகொண்டே இருக்கும். பௌல் ஒரு கதாபத்திரமாக இருந்துகொண்டே தான் ஒரு கதாபாத்திரம் என்று தெரிந்த ஒருவன். அவன் பார்வையாளர்களுன் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்திசையிலே தான் படத்தை நடத்துகிறான். படம் இன்னும் feature film நீளத்துக்கு வரவில்லை என்று மற்றவர்களையும் கொல்வதை தள்ளிப்போடுகிறான். பர்வையாளர்களை பார்த்து பெட் வைக்கிறீர்களா என கேட்கிறான்...நீங்கள் அந்த குடும்பம் பிழைக்க வேண்டும் என்று தான் பெட் கட்டுவீர்கள் என்கிறான். வழக்கமான அமரிக்க திரில்லர்களில் ஒரு பார்வையாளரின் Sympathy-ஐ சம்பாரித்த அல்லது பலவீனமான கதாபாத்திரம் தப்பித்தே ஆகவேண்டும். குழந்தைகள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள். ஆனால் இந்த வேலையெல்லாம் இங்கு இல்லை! எல்லாரும் காலி! அவ்வளவு தான். உண்மையான வில்லன்கள் அப்படி தான் இருக்கவேண்டும். சினிமா வில்லன்கள் தான் மிச்ச சொச்சம் எல்லாம் வெப்பாங்க. 

பெரும்பாலான திரில்லர்களில் வரும் ஒரு கிளிஷே அந்த ஒரு ரெவல்யூஷனரி மொமண்ட். வேதணையின் உச்சத்தில் உள்ள அந்த கதாபாத்திரம் வில்லன் எதிர்பாராத நேரத்தில் ஒரு துப்பாக்கியோ, கத்தியோ எடுத்து அவனை கொன்று விடுவது. அது பார்வையாளரின் ரியாக்‌ஷனைத் தான் அப்படி காட்டுகிறார்கள். அது காண்பிக்கபட்டவுடன் படம் பார்க்கும் சாதாரண ஆடியன்ஸ் ஆசுவாசம் அடைவான் (நல்ல படம் பா!) தமிழில் ஒரு உதாரணம் என்றால் குருதிப்புணல் கவுதமி இறுதி காட்சியை ஊகித்திருப்பீர்கள். வேறு மோசமான உதாரணம் வழக்கு எண் 18/9. கடைசியில் அந்த பெண் வந்து போலீசின் மீது ஆசிட் வீசுவது. மிகவும் fetishஷான காட்சி. அந்த காட்சியை நீக்கிவிட்டால் அது ஒரு நல்ல படம் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அந்த காட்சியை வைத்ததால் தான் நம்ம மக்கள் ஆசுவாசம் அடந்தார்கள். இதிலும் அவ்வாறே நடக்கிறது. ஆனால் மிகவும் பிரக்ஞையான பௌல் ஒரு ரிமோட்டை எடுத்து அந்த காட்சியை ரிவைண்ட் செய்து விட்டு தனது தவறை திருத்திக்கொள்கிறான். மீண்டும் பார்வையாளர்களுக்கு பன்னு கொடுக்கப்படுகிறது. 

அதுபோல படம் ஆரம்பிக்கும் காட்சிகளில் சம்மந்தம் இல்லாமல் ஒரு பொருளை க்ளோசம் வைத்தால் அந்த பொருள் பின்னால் எங்கேயோ உதவியாக இருக்கப்போகிறது என்று எந்த சுண்டைக்காயும் சொல்லிவிடுவான். அதையும் காண்பிக்கிறார் ஹேனெக். ஆனால் பௌல் அதை ஜுஜுப்பியாக பிடிங்கி வீசிவிடுவான். இப்படி சாதாரண மொன்னையான திரில்லர்கள் கட்டமைக்கப்பட்ட காரணிகளை வைத்துக்கொண்டே அவற்றை நையாண்டி செய்வது போலவும், சுயபிரக்ஞையுள்ள ஒரு கதாபாத்திரத்தை அமைத்ததும் தான் ஹேனெக் இந்த படத்தில் வருவித்த அவரது சிக்னேசர். மற்றபடி ஹேனெக்கின் படங்களிலேயே கொஞ்சம் சுமாரனது இந்த படமாக தான் இருக்க முடியும்.