இந்த வலைப்பதிவில் தேடு

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 அக்டோபர், 2016

தீபன் - புலம்பெயர் சினிமா

வெளிநாடுகளுக்கு பயனம் செல்லும் போது நமது நாட்டவர்களைக் காண நேரிடும். அதுவும் சில பகுதிகள் முழுக்கவே தமிழர்களாக காட்சியளிப்பார்கள். லண்டனில் ஈஸ்ட்-ஹேம், க்ராய்டன், பரீசில் லா ஷாப்பெல். பரீஸின் பிரத்யேகதை என்னவென்றால் அங்கு இந்திய தமிழர்களான பாண்டிச்சேரிக்காரர்களும் அதிகம் வசிக்கிறார்கள். அதனால் ஆழமானதொரு தமிழ் கலாச்சார சூழல் லா ஷாப்பெல் அமைந்திருப்பதைக் காணலாம். கோயில் திருவிழாக்கள், வியாபார கூட்டமைப்புகள், தொழில்முறைப் போட்டிகள் கொடுகல் வாங்கல், சாயங்காலம் பல கடைகளில் பணிபுரிவோர் சேரும் டீக்கடைகள் எல்லாம், தாயகத்திலிருந்து வெகுதூரம் விலகிச்செல்லா தன்மையுடன் இருக்கும். 
கார்-த்யு-நோர் தொடங்கி ஏரோபோர்டைச் சுற்றி பல சிறு சிறு கிராமங்களில், சிரிய, பெரிய வீடுகளை வாங்கி தமிழாக்கள் வசிக்கிறார்கள். அதுக்குள்ளாகவே சிரிய தொழில்கள் செய்து, அந்த தமிழ் குழுக்களுக்குள்ளாகவே பிழைப்புகள் நடத்தி வாழ்கிறார்கள். இதில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு உதவிப்பணம் வாங்கி ஜீவிக்கும் பெரியவர்கள், கள்ள விசாவில் திரிபவர்கள், நிரந்திர தொழிலென்று ஏதும் இல்லாமல் சின்னச் சின்ன வேலைகளையே பல வருடங்களாக செய்பவர்கள். இவர்களது சடங்குகள், பெண்பார்த்தல், பெண்கொடுத்தல் எடுத்தல்...என்று அந்நிய தேசமொன்றில் ஒரு இனம் தனது வேர்களை முழுமையாக பற்றவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் வாழ்வதை ஒரு அந்நியனாக நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். 
அப்போது எனக்குள் எழும் கேள்வி இதுதான்...இவ்வளவு உயிர்ப்புடனான ஒரு புலம்பெயர் கலாச்சாரத்திலிருந்து அதன் வெளிப்பாடாக இலக்கியத்தளத்திலும், கலைத்தளத்திலும் எவ்வகையான பங்களிப்புகள் நடந்திருக்கின்றன? (அப்படி நான் தேடியபோது கண்டெடுத்தது தான் ஷோபாசக்தியின் சிறுகதை உலகம். தேசத்துரோகி சிறுகதைத் தொகுப்பை நான் வாசிக்கத் தொடங்கி இருந்தேன்). நான் மிகவும் மதிக்கிற மற்றுமொரு கலைவடிவம் சினிமா. திரைத்துறையில் ஏதாவது முன்னெடுப்புகள் புலம்பெயர்த் தமிழர்களை வைத்து முன்னெடுக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினேன். இலங்கையில் தமிழ்சினிமா என்ற ஒன்று இருந்திருக்கிறதா? என்றெல்லாம் தேடிப்பார்க்கத் தோன்றியது. 
நான் சில இலங்கைத்தமிழ் இளைஞ்சர்களுடன் பேசும்போதும் சரி, வெறுமனே அவர்கள் பேசுவதை அவதானிக்கும் போதும் கவனித்த ஒரு விஷயம் அவர்கள் இந்தியதமிழர்களாகிய நம்மைவிட இந்தியதமிழ் சினிமாவை நேசிக்கிறார்கள். திரும்பத் திரும்ப பிடித்த படங்களைப் பார்க்கிரார்கள். சினிமா பற்றி நம்மைப்போலவே கதைக்கிறார்கள், அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களுக்கு எல்லா நடிகைகளையும் தெரிந்திருக்கிறது. முடிதிருத்தகங்களில் அஜித் படங்கள் காட்சியளிக்கின்றன.  நாம் 'மொக்கை' என்று ஒதுக்கிய படங்களைக் கூட அவர்கள் விட்டுவைக்காமல் கண்டு களிக்கிறார்கள். சினிமா வசனங்களை அடிக்கடி உபயோகிக்கிறார்கள்.... "அந்த கவுண்டமணி சொல்லுவான்ல..." "வடிவேலு சொல்லுற மாதிரி..." என்று. 
லா ஷாப்பெலில் உள்ள ஒரு புத்தகக் கடையில் சில பழைய புத்தகங்களை மேலாக‌ அலசிக்கொண்டிருந்த போது, ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அது "இலங்கைத் தமிழ் சினிமா" குறித்த புத்தகம். இலங்கைத் தமிழ் சினிமா கடந்து வந்த பாதை, முக்கிய நடிகர்கள், குறிப்பிடும்படியான திரைப்படங்கள் என, ஒரு சில புகைப்படங்களுடன் இருந்தது. மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட இந்திய தமிழ்சினிமா நீரோட்டத்தின் கூடவே இணைகோடாக இலங்கைத் தமிழ்சினிமா பயணிக்கத் தொடங்கி இடையே வற்றி உலர்ந்து காணாமல் போன நதி அது. மொத்தமாகவே 50 படங்களுக்கும் குறைவான படங்களே அங்கு தயாரிக்கப்பட்டதாக இணையத் தகவல்கள் சொல்லுகின்றன. தொடர்ந்த போராட்டமும் அலைக்கழிப்பும் நாட்டிலிருந்து தொடர்ந்து வெளியேறும் சூழலும் அரசியல் நிலையற்றத்தன்மையும் அங்கு சினிமாவைக் கைவிடச் செய்ததோ என்னவோ? 
ஆனால் இக்கட்டான அழுத்தங்களில் தான் படைப்பூக்க எழுச்சியும் அதிகமாக இருக்கும். உன்னதமான கலைப்படைப்புகள் பெரும்பாலும் உள்ளார்ந்த மனஎழுச்சியின் காரணமாக விளைந்தவையாகவே இருக்கும். அப்படியிருக்க இலங்கையில் சினிமா முன்னெடுப்பு தோய்வடைந்ததைக் குறித்து எனக்கு மிகவும் வருத்தம் உண்டு. அதுவும், சிங்கள சினிமா என்ற ஒன்று நடைமுறையில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளும் போது நமக்கான பதில் எளிதாக கிடைத்துவிடும். இருந்தபோதும் கிட்டத்தட்ட 2 தலைமுறைக்கும் மேலாக இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்துவருகிறார்கள். பல்வேறு துறைகளில் அவர்கள் ஈடுபட்டும் வருகிறார்கள். சில நகரங்களில் தொழில்ரீதியாக மிகுந்த செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அப்படிப்படியிருந்தும் பெரியளவிலான கலாரீதியான முன்னெடுப்புகள் எதுவும் நிகழப்பெறவில்லை என்றே தோன்றுகிறது. 
தாய்நாட்டில் தினந்தோறும் நிகழும், நிகழ்ந்த விடயங்கள் ஒருபுறம் என்றால், புலம்பெயர் சமூகத்தில் அவர்கள் தினசரி எதிர்கொள்ளும் சமுதாய சிக்கல்கள், கலாச்சார அபத்தங்கள், அவர்கள் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பிழைபில்லாவிட்டாலும் சுமந்துகொண்டு திரியும் பழமைவாதங்கள், புலம்பெயர் நாட்டின் சட்டதிட்டங்களை தனக்கு சாதகமாக தனக்கு இயங்க வைக்கும் ஆட்கள், அதன்பொருட்டு அவர்கள் செலுத்தும் ஆதிக்கம், இரண்டாம் தலைமுறைகள் படித்து வேலை என்று ஏற்பட்ட பிறகு உள்ளூர் கலாச்சாரத்துடன் தங்களை சங்கமித்துக்கொள்வது, பின் ஒருங்கிணைந்த இந்த கூட்டு வாழ்வை விட்டு தூர நகரங்களுக்கு பிரக்ஞைப் பூர்வமாக இடம்பெயர்ந்டு போதல்....இப்படி எவ்வளவோ விஷயங்கள் எழுதப்படவும், பேசப்படவும், திரைப்படங்களாக எடுக்கப்படவும் சாத்தியம் இருக்கும் பட்சத்தில் ஏன் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று நான் நினைப்பதுண்டு.
ஒரு முறை லாஷப்பலில் ஒருமுறை சுற்றிக்கொண்டிருந்தபோது தான் அந்த போஸ்டரைக் கண்டேன். யாருடைய முகமும் இல்லை. இரண்டு கைகளை பாதுகக்கும் இன்னொரு கை. ஒரு கசங்கிய பழைய ஓவர்கோட்டின் பின்னனியில். படத்தின் பெயர்  'தீபன்' என்று பார்த்ததுமே...ஆஹா..! என்று ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. இயக்கம் ஜாக் ஒடியார் (jaques audiard). படம் திரைக்கு வரும்போது பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

(...தொடரும்)



சனி, 24 செப்டம்பர், 2016

Battle of Algiers - ஒரு வரலாற்றின் ஆவணம்


பேட்டில்  ஆஃப்  அல்ஜியர்ஸ் (Battle of Algiers) திரைப்படம் நான் அடிக்கடி திரும்பத் திரும்ப பார்க்கும் வேற்றுலக படங்களில் ஒன்று. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சற்றும் அலுப்புதட்டாத திரைப்படம். பேட்டில்  ஆஃப்  அல்ஜியர்ஸ் படம் 1966ம் ஆண்டு வெளிவந்தது. 1962 ம் ஆண்டு அல்ஜீரியாவிற்கு ஃபிரெஞ்சுகளிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. 1957 லிருந்து ஃபிரஞ்சு ஆட்சிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை அல்ஜீரியர்கள் ஆயுதபோராட்டமாகவும், பின்னர் அரசியல் போராட்டமாகவும் முன்னெடுத்தனர். அவர்களது சுதந்திர போராட்டத்தின் முக்கிய எழுச்சியானது அல்ஜியர் யுத்தம் என்று அறியப்பட்ட மோசமான ஆயுதப்போரகும். 

FLN என்ற பேரில் ஒருங்கிணைந்திருந்த சுதந்திர போராட்ட வீரர்கள் தீவிரமான ஆயுதபோராட்டங்களை அரங்கேற்றினார்கள். அல்ஜீரிய ஃபிரெஞ்சு வசிப்பிடங்களில் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்தனர். அதிகாரிகள் பொதுமக்கள் என்று பாராமல் நிறைய உயிரிழப்புகளை அது ஏற்படுத்தியது. பியட்-நுவார் (pied noir) என்று அழைக்கப்பட்ட அல்ஜீரிய ஃபிரெஞ்சுக்காரர்களும் அவர்கள் பங்கிற்கு கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தினர். அர்பன் கொரில்லா யுத்தத்திற்கு இன்றும் ஒரு உதாரணமாக இருப்பது அல்ஜியர்ஸ் யுத்தம் தான். கட்டுக்கடங்காத சமூக சூழலைக்கட்டுப்படுத்த சிறப்பு ராணுவப்படைகளை இறக்க வேண்டியதாயிற்று. அந்த ராணுவத்தினர் செய்த அட்டூழியங்கள் பிற்பாடு பெரிய விவாதப் பொருளாக மாறிப்போனது. எப்படி இருப்பினும் FLN படையின் முக்கியத் தலைவர்கள் ஒடுக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர். 

ஆனால் அதன்பின் தொடர்ந்த சுதந்திரப் போராட்ட எழுச்சிக்கும், பின் தொடர்ந்த அல்ஜீரிய சுதந்திரத்திற்கும்  அல்ஜியர்ஸ் யுத்தமே மையப்புள்ளியாக அமைந்தது என்று சொல்லலாம்.  மிகப்பிரபலாமன ஒரு சொல்லாடல் ஒன்று உண்டு அந்த சமயத்தில் "ஃபிரெஞ்சு அல்ஜியர்ஸ் யுத்தத்தை வென்றிருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த அல்ஜீரியா போரை இழந்தது" என்று. 
இந்த வரலாற்று நிகழ்வுகளை செய்திப்பட(news reel)  பாணியில் தந்த படம் தான் Battle of Algiers. வரலாறு புனைவைக்காட்டிலும் சுவாரஸ்யமானது என்று சொல்லுவார்கள் அல்லவா, அதைப்போல தான் புனைவு சினிமாக்களை விட இந்த வரலாற்றுப் படம் வெகு சுவாரஸ்யமாகவும், ஒரு போரை நேரில் கண்டறிவதைப்போலவும் ஒரு அசலான வரலாற்று அனுபவத்தை தரும்.  Gillo Pontecorvo என்னும் இத்தாலிய இயக்குனாரால் இயக்கப்பட்டது இந்த திரைப்படம். அதற்கான முன்னெடுப்புகளை சுதந்திர அல்ஜீரியாவின் போராளிகள் செய்தார்கள். 

சுதந்திரப் போராட்ட படமான போதிலும் படத்தின் நரேட்டிவ் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இருந்தது. இரண்டு தரப்பிலும் செய்த வன்முறைகளை படமாக்கியது. அந்த நேர்மைதான் இப்படத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக ஆக்கியது. அவை FLN வீரர்களையோ சுதந்திரப்போராட்டத்தையோ எவ்விதத்த்திலும் Romanticise செய்யவில்லை.  இன்றும் அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய ஆவணமாக இத்திரைப்படம் விளங்குகிறது. மட்டுமல்லாது இத்தாலிய நியோரியலிச சினிமாவின் ஒரு உச்சகட்ட முயற்சியாகவும் இத்திரைப்படத்தைக் கொள்ள முடியும். 

அல்ஜீரியா என்று ஒரு தேசம் சுதந்திரம் பெற்று 4 வருடங்களில் இனி எப்போதும் வாழக்கூடிய ஒரு திரைப்படத்தை 1966ல் அது வெளியிடுகிறது. அதற்காக அது செலவிடுகிறது. சினிமா என்பது அப்படி ஒரு முக்கியமான பண்பாட்டு செயல்பாடு என்று அந்த கலாச்சாரம் புரிந்துவைத்துள்ளது. தனது தேசத்தின் சுதந்திரப்போராட்டத்தை ஆவனப்படுத்துவதை அதன் முதன்முக்கியமான கடமைகளின் ஒன்றாக கருதியிருக்கிறது. இந்த விஷயம் என்னை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. 2016 இல் Battle of Algiers திரைப்படம் வெளியாகி 50ம் வருடம் நிறைவு பெறுகிறது. அதையொட்டி இன்னொருமுறை இப்படத்தைக் காண ஆவலாக உள்ளது. 



 


வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நமது சினிமா போகவேண்டிய தூரம்



காலகாலமாக ஆஸ்கருக்கு படம் அனுப்பும் கமிட்டிக்கு எப்படி கொஞ்சம் விவஸ்தை குறைவு இருக்கிறதோ, ஆஸ்கர் கமிட்டிக்கும் அப்படி கொஞ்சம் விவஸ்தைக் குறைவுகளுண்டு. அதை நாம் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம்  தான். அதனால் விசாரணை திரைப்படம் இறுதி பரிந்துரைப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும்  இல்லை. ஆஸ்கர் பரிந்துரைக்கு தகுதியுறும் தரம் அந்த படத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை வைத்தே இன்று விவாதங்கள் செய்யப்படுகின்றன. அது ஒரு கேள்வி தான். ஆனால்  எளிதாக  மேற்குலக சென்சிபிலிட்டீஸ்ஸு-குள் கடத்திவிடக்கூடிய விளம்பர கண்டெண்ட்  'விசாரணையில்' இருக்கிறது. 

எளிய வாழ்வாதாரத்திலிருந்து வரக்கூடிய ஒரு ஆட்டொ ஓட்டுநர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்ட படம் என்று விளம்பரப்படுத்தப்  படலாம். மனித நேய கேள்விகளை முன்வைக்கலாம். இந்த திரைப்படம் வெளிவந்த காலக்கட்டிடத்தில் தான் சிறைச்சாவுகள்  தினம் தினம் நடுந்துகொன்டு இருக்கின்றன என்று ராம்குமார் உதாரணம் காட்டப்படலாம். புள்ளிவிபரங்கள் காண்பிக்கலாம். மேற்குலகத்துக்கு கிளர்ச்சி கொடுக்கும் என்ற உத்திரவாதம் இருந்தால் அது பரவலாக 'பார்க்க வைக்கப்பட்டு' பரிந்துரை பட்டியலில் இடம் பெறலாம். 

ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன வென்றால், ஒரு திரைப்படம் ஆஸ்கரில் கௌரவப்படுத்தப்படுகிறது என்றால், அது அந்த தனி படத்திற்கான அங்கிகாரமோ அல்லது அந்த தனி படத்தின் விளைவாகவோ கருதமுடியாது. பெரும்பாலும் ஆஸ்கர் வென்ற பிற நாட்டுப் படங்களை கவனித்தால் தெரியும். அதற்குப்பின்புலத்தில் அந்த நாடுகளில் நடைபெற்ற ஒரு ஒரு சினிமா இயக்கத்தின், ஒரு படைப்பூக்க அலையின் நீட்சியாகவே அவை பரிநமிக்கும். ஒரு படத்தின் பிரதிநிதித்துவமாக அது இல்லாமல் ஒரு நாட்டின், அல்லது ஒரு கலாச்சாரத்தில் நடைபெற்ற ஒரு சினிமா முன்னெடுப்பின் பிரதிநிதியாக தான் அந்த சினிமா இருக்கும். இது கொரிய படங்கள், இரானிய படங்கள், ஹாங்காங் படங்கள் எல்லாவற்ருக்கும் பொருந்தும். நாமறிந்த ஒன்று தான். நமது நாட்டில் அப்படிப்பட்ட முன்னெடுப்பு ஒன்றும் நிகழப்பெறவில்லை. அதற்கான சாத்தியங்கள் இந்த அடுத்தகாலத்தில் தென்படவும் இல்லை. 

மேலும் ஒரு சிக்கலான ஒரு கட்டமைப்பு வேறு இருக்கிறது. சினிமா என்பது ஒரு கலாச்சார செயல்பாடு. வெறும் மொழியால் மட்டும் பாகுபடுத்த வேண்டிய விஷயம் அல்ல. மொழியாகவும் கலாச்சார ரீதியாகவும் பரந்துபட்டு கிடக்கும்   இந்தியாவில் அப்படிப்படட ஒருங்கிணைந்த முன்னெடுப்புகள் நடக்க சாத்தியமில்லை என்றே படுகிறது. எனவே பொதுவாக ‘இந்திய’ சினிமா என்று வகைமைப்படுத்துவதே உடன்பாடற்ற காரியம் தான். 

அங்கொன்றும் இங்கொன்றுமாக நல்ல சில முயற்சிகள் ( உதாரணம் : ஒழிவு திவசத்தே காளி) நடைபெற்று வரும் போதிலும் நமது சினிமாக்கள் தனித்தன்மையற்ற , டெம்ப்லேட்டுகள் சார்ந்த , நாடகத்தன்மை வாய்ந்த கரகாட்டத்தனமான படங்கள் தான். இதை நாம் ஒத்துக்கொள்வதில் ஒரு தாழ்வுணர்ச்சியும் நமக்குத் தேவையில்லை. வித்தியாசமான படம் என்று நமது சமூகம் அடையாளப்படுத்தும் படங்கள் கூட அமெரிக்க சினிமாவின் மோசமான விளைவாகவோ அல்லது நமது பொறியியல் கல்லூரிகளில் சமர்ப்பிக்கப்படும் இறுதியாண்டு ப்ராஜெக்ட்டுகள் போலவும் தான் இருக்கிறது. 

நாம் நமக்கான கலாச்சாரம் சார்ந்த சினிமாவை முன்னெடுக்க இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கும் என்பதே நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நிதர்சனமான உண்மை. 


சனி, 3 செப்டம்பர், 2016

கம்மட்டிப்பாடம்

#003

கம்மட்டிப்பாடம் என்று ஒரு மலையாலப்படம் பார்த்தேன். அறியப்பட்ட ஒளிப்பதிவாளர் ராஜிவ்ரவி இயக்கியிருக்கிறார். சமீபகாலங்களில் வரும் மலையாள படங்களின் தரம் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் கதைக்களங்கள் மிக ஆரோக்கியமான ஒரு சிந்தணைச்சூழல் நிலவுவதைக் காட்டுகிறது.
கம்மட்டிப்பாடம் என்பது பழைய எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கிராமப்பகுதி. தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறியப்படுபவர்கள் வசிக்கும் இடமாக காட்டப்படுகிறது. 1950 களில் கம்யூனிச ஆட்சியில் நிலமில்லாத எல்லா விவசாயிகளுக்கும், அளவுக்கதிகமாக நிலம் வைத்திருக்கும் நிலச்சுவாந்தாரர்களிடமிருந்து பறிக்கப்பட்டு நிலம் கொடுக்கப்பட்டது. அதில் இவர்கள் எளிய முறையில் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். 1980-90 களில் வரும் சமூக மாற்றங்கள் பொருளாதார மாற்றங்கள் நிலுவையில் உள்ள மதிப்பீடுகளையும் மாற்றிப்போடுகிறது. அப்போது ஈளந்தாரியாக இருக்கும் சிலர் எளிய முறையில் விவசாயம் செய்து பிழைப்பதில் காட்டிலும் பெரும் முதலாளிகளுக்கும் கம்பெனிகளுக்கும் விசுவாசிகளாக இருப்பது தான் சாமர்த்தியம் என்று எண்ணியிருந்தார்கள்.

அப்படி ஒரு சிரிய அலவிலான கொள்கையுடன் சின்ன ரவுடித்தனங்கள் செய்துகொண்டிருக்கும் குழு பாலனுடையது (பாலேட்டன்). அவனது தம்பி கங்காதரன், அவனுடைய உற்ற நண்பன் கிருஷ்ணா இருவரும் பாலனின் கூட்டாளிகள். இவர்கள் இருவரும் காதலிக்கும் கம்மட்டிப்பாட பெண் அநிமோள். "நல்லாக வேண்டுமென்றால் இந்த ஊரை விட்டு போக வேண்டும் " என்று பாலனின் பெரியவர்கள் எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் அநிமோள் சொல்லுவாள் "நல்லாகவேண்டும் என்றால் எங்க இருந்து வேணுமானாலும் நல்லாகலாம்" என்று. ஆனால் கடைசியில் யாரும் நல்லாகவில்லை.

பெரிய கம்பெனிக்காரர்களுக்காக சொந்த இனமக்களுடைய நிலங்களையே கையகப்படுத்த பாலன் கேங்க் உதவி செய்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுகிறது. விற்கிறது. போட்டிகள் வருகின்றன. பகைகள் வளர்கின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். 1990 களில் எர்ணாகுளம் கொச்சி பெரிய நகரமாக உருவெடுக்கும் போது ஏகதேசம் பலநூற்றுக்கணக்கான விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டு தங்களது நிலங்களை பெருமுதலாளிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டி வந்தது. தாமாக முன்வந்தவர்களும் உண்டு. இல்லையென்றால் எல்லாவற்றையும் நேர் செய்ய பாலன் போல, கங்கா போல கிருஷ்ணன் போல பலரும் உண்டு.

இவர்கள் செய்யும் காரியங்களில் மனமுடைந்து பாலனின் மூத்தோர் மரணமாகிறார். அந்த மரணம் பாலனின் மனசாட்சியை அழுத்துகிறது. தனக்கு பிள்ளைகள் வாய்க்காமல் இருப்பதற்கு காரணம் மூத்தோர்களுடைய சாபமாக இருக்கும் என நம்புகிறான். அதீதமாக குடிக்கிறான். தனது குற்றங்களுக்கு பரிகாரங்களைத் தேடுகிறான். ஆனால் முதலாளிகளுடைய அகராதியில் அப்படிப்பட்ட இளகிய உணர்ச்சிகளுக்கெல்லாம் இடமில்லை. கோஷ்டிப் பகையின் காரணமாக பாலன் லாரி ஏற்றி கொல்லப்படுகிறான். கம்மட்டிப்பாடத்தின் நெஞ்சில் நேராகவந்து ஏரியது அந்த லாரி.

கிருஷ்ணனுக்கும் கங்காவுக்குமான நட்பில் விரிசல் ஏற்படுகிறது. கிருஷ்ணன் திருந்தி வாழ முடிவு செய்து பாலகுருஷ்ணன் டிரேவல்ஸ் என்று ஒன்றை நடத்தி வருகிறான். கங்கா இன்னும் கேங்க் வேலைகளிலேயே இருக்கிறான். இதற்கிடையில் பாலனை கொன்ற சதிகாரர்கள் யாரென தெரியவர கிருஷ்ணனும் கங்காவும் அவனை (ஜானி) கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார்கள். குத்தியுரும் கொலை உயிருமாக அவனை விட்டு விட்டு கங்காவும் கிருஷ்ணாவும் தலைமறைவாகிறார்கள். கங்கா தான் திருந்திவாழ முடிவெடுத்திருப்பதாகவும்  "ரேஷன் கடைக்கு சென்று அரிசி-மண்ணெண்னை வாங்கும்" ஒரு சாதாரணக்காரனாகவேண்டும் என்று சொல்கிறான்.  அநிமோளை தான் கல்யாணம் செய்ய விரும்புவதாகவும், நீ அவலை விட்டு விலகிவிடும்படியும் கேட்கிறான். அன்று இரவு கிருஷ்ணன் கங்காவை விட்டு தனியே செல்கிறான். அநிமோளுடன் ஓடிப்போக தயார் செய்துவிட்டு புறப்படுகையில் போலீஸ் குருஷ்ணனை கைது செய்கிறது.

பிறகு எந்தத்தொடர்பும் இல்லை. கங்கா அநிமோளை கல்யாணம் செய்து வாழ்கிறான். 12 வருஷம் கழித்து கங்கா பேசுறேன்னு....வந்த ஒரு தொலைப்பேசி அழைப்பில் கங்காவை யாரோ ஸ்கெட்ச் போடுவதாக தெரிந்து அவனைத் தேடி அவன் வசிக்கும் மும்பையிலிருந்து கிளம்புகிறான் கிருஷ்ணன். கங்காவுக்கு என்ன ஆயிற்று...கடந்த 12 வருடத்தில் கங்கா என்ன ஆனான், என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தான் என்று பலரது வாய்வழியாக அவனது கடந்தகாலம் தெரியப்படுத்தப்படுகிறது.

பெருமுதலாளிகளால் உருவாக்கப்பட கங்காக்கள் பிறகு அவர்களுக்கு அவசியமில்லாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் அபகரித்துக்கொடுத்த நிலங்களுக்கு மேல் இன்று ஒரு கொச்சின் சிட்டி நிற்கிறது. பழைய நினைவில் நெடுஞ்சாலைகளில் அலையும் பசுமாடுகளைப்போல கங்காக்கள் அந்த நகரங்களின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் தங்கியிருந்து அந்த நகரங்கள் எங்கும் வெறிநாயைப்போல சுற்றி வருகின்றார்கள். அந்த நகரங்களுக்கு இனியும் கங்காக்கள் அவசியமில்லை.  அத்துமீறி வீட்டிற்குள் ஏறி வரும் வெறிநாயை என்ன செய்வார்களோ அதை தான் அந்த முதலாளிகள் அவனுக்கு வருத்தினார்கள்.

கங்காவாக வரும் விநாயகன், அவரது சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். எனக்குத் தெரிந்த, நான் பார்த்த ஏதேதோ மனிதர்களை கங்கா நினைவுபடுத்தினான். நான் கண்டு வளர்ந்த ஆக்கள் எல்லாம் கங்காவைப்போலவோ கங்காவின் தன்மை கொண்டவர்கள் போலவோ தான் இருந்திருக்கிறார்கள். மாறும் காலத்துடம் பிடி குடுக்கமுடியாமல் அலைக்கழிக்கப்படும் நாம் எல்லோரும் கங்காவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

இந்தப்படத்தில் வரும் ஒரு பாடல் இந்தப்படத்தின் மொத்த சாராத்தையும் தாங்கியுள்ளதாக இருக்கிறது. ஒரு மகனுக்கும், தந்தைக்குமான உரையாடலாக அந்தப்பாடல் இப்படி நீள்கிறது:

"...நாம் பொட்டிய பொக்காலிக்கர
எவிடேபோய் எண்ட அச்சா
நீ வாரிய சுடுசோர் ஒப்பம்
வெந்தே போய் நன்மகனே

ஆகாணும் மாமலை ஒன்றும்
நம்முடையதல்(ல) என்மகனே
ஈ(இந்த) காயல் கயவும் கரையும்
ஆருடயுமல்ல என்மகனே....

புழுபுலிகள் பக்கி பருந்துகள்
கடலானைகள் காட்டுருவங்கள்
பலகாலம் பரதெய்வங்கள்
புலையாடிகள் நம்மோடொப்பம்

நரகிச்சு பொருக்கிம்மிவிடம்
பூலோகம் திருமகனே
கலகிச்சு மரிக்கும்மிவிடம்
இகலோகம் எந்திருமகனே..."
















வியாழன், 4 பிப்ரவரி, 2016

Funny Games 1997 - மைக்கல் ஹேனெக்

Funny Games படத்தை A Haneke Thriller என்று குறிப்பிட்டிருந்தேன். அது ஏன் என்றால் இதுதான். கதை என்று பார்த்தால் ஒரு சாதரண home invasion கதை தான். ஆனால் அதில் இருக்கும் ஹேனெக்தனம் தான் வித்தியாசம். படம் நெடுக பிரதான வில்லன் பௌல் பார்வையாளர்களுடன் ஒரு இரகசிய தொடர்பிலே இருப்பான் (கேமராவைப் பார்த்து க்ளோசப் ஷாட்ஸ்), பார்வையாளர்களைப் பார்த்து சிரிப்பது கண்ணடிப்பது போன்றவை. பார்வையாளர்களுடன் பேசுவது, கேள்வி கேட்பது இருந்துகொண்டே இருக்கும். பௌல் ஒரு கதாபத்திரமாக இருந்துகொண்டே தான் ஒரு கதாபாத்திரம் என்று தெரிந்த ஒருவன். அவன் பார்வையாளர்களுன் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்திசையிலே தான் படத்தை நடத்துகிறான். படம் இன்னும் feature film நீளத்துக்கு வரவில்லை என்று மற்றவர்களையும் கொல்வதை தள்ளிப்போடுகிறான். பர்வையாளர்களை பார்த்து பெட் வைக்கிறீர்களா என கேட்கிறான்...நீங்கள் அந்த குடும்பம் பிழைக்க வேண்டும் என்று தான் பெட் கட்டுவீர்கள் என்கிறான். வழக்கமான அமரிக்க திரில்லர்களில் ஒரு பார்வையாளரின் Sympathy-ஐ சம்பாரித்த அல்லது பலவீனமான கதாபாத்திரம் தப்பித்தே ஆகவேண்டும். குழந்தைகள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள். ஆனால் இந்த வேலையெல்லாம் இங்கு இல்லை! எல்லாரும் காலி! அவ்வளவு தான். உண்மையான வில்லன்கள் அப்படி தான் இருக்கவேண்டும். சினிமா வில்லன்கள் தான் மிச்ச சொச்சம் எல்லாம் வெப்பாங்க. 

பெரும்பாலான திரில்லர்களில் வரும் ஒரு கிளிஷே அந்த ஒரு ரெவல்யூஷனரி மொமண்ட். வேதணையின் உச்சத்தில் உள்ள அந்த கதாபாத்திரம் வில்லன் எதிர்பாராத நேரத்தில் ஒரு துப்பாக்கியோ, கத்தியோ எடுத்து அவனை கொன்று விடுவது. அது பார்வையாளரின் ரியாக்‌ஷனைத் தான் அப்படி காட்டுகிறார்கள். அது காண்பிக்கபட்டவுடன் படம் பார்க்கும் சாதாரண ஆடியன்ஸ் ஆசுவாசம் அடைவான் (நல்ல படம் பா!) தமிழில் ஒரு உதாரணம் என்றால் குருதிப்புணல் கவுதமி இறுதி காட்சியை ஊகித்திருப்பீர்கள். வேறு மோசமான உதாரணம் வழக்கு எண் 18/9. கடைசியில் அந்த பெண் வந்து போலீசின் மீது ஆசிட் வீசுவது. மிகவும் fetishஷான காட்சி. அந்த காட்சியை நீக்கிவிட்டால் அது ஒரு நல்ல படம் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அந்த காட்சியை வைத்ததால் தான் நம்ம மக்கள் ஆசுவாசம் அடந்தார்கள். இதிலும் அவ்வாறே நடக்கிறது. ஆனால் மிகவும் பிரக்ஞையான பௌல் ஒரு ரிமோட்டை எடுத்து அந்த காட்சியை ரிவைண்ட் செய்து விட்டு தனது தவறை திருத்திக்கொள்கிறான். மீண்டும் பார்வையாளர்களுக்கு பன்னு கொடுக்கப்படுகிறது. 

அதுபோல படம் ஆரம்பிக்கும் காட்சிகளில் சம்மந்தம் இல்லாமல் ஒரு பொருளை க்ளோசம் வைத்தால் அந்த பொருள் பின்னால் எங்கேயோ உதவியாக இருக்கப்போகிறது என்று எந்த சுண்டைக்காயும் சொல்லிவிடுவான். அதையும் காண்பிக்கிறார் ஹேனெக். ஆனால் பௌல் அதை ஜுஜுப்பியாக பிடிங்கி வீசிவிடுவான். இப்படி சாதாரண மொன்னையான திரில்லர்கள் கட்டமைக்கப்பட்ட காரணிகளை வைத்துக்கொண்டே அவற்றை நையாண்டி செய்வது போலவும், சுயபிரக்ஞையுள்ள ஒரு கதாபாத்திரத்தை அமைத்ததும் தான் ஹேனெக் இந்த படத்தில் வருவித்த அவரது சிக்னேசர். மற்றபடி ஹேனெக்கின் படங்களிலேயே கொஞ்சம் சுமாரனது இந்த படமாக தான் இருக்க முடியும்.