இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

ஜாராவின் காலணிகள் - அயல் சினிமா

( மிகுந்த சமாதானமும் பேரமைதியையும் கொடுத்த பள்ளி மரங்களுக்கு...)


எவருடைய கவனத்தையும் ஈர்க்க நினைக்காமல் நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் சிறப்பாகவே அமைகின்றன. கவனிப்பாரற்ற தனிமையின் காரணமாக நாம் செய்யும் சில முட்டாள்த்தனங்கள் சில சமையம் ஒரு கண்திறப்பு நிகழ்வாகவோ, சில சமையம் மிக அரிதான படிப்பினைகளை கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது.

பள்ளியில் மணியடித்த பின்னும் வீட்டிற்குச் செல்ல மணமற்றவனாக அனைவரும் சென்றுவிட்ட ஆள் நடமாற்றமற்ற மைதானத்தை க் கண்டபடி அமர்ந்திருப்பேன். வகுப்பறைகளின் வெளியே சீரான வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் திட்டுகள் தான் என்னுடைய வசிப்பிடம். அங்கு அமர்ந்தபடியே தூரத்தில் கடந்து செல்லும் ஒன்றிரண்டு ஜோடி கால்களைக் கண்டபடி இருப்பேன். பல விதமன கால்கள். வெண்மையான அழகிய கால்கள், காயத்தழும்புகள் நிறைந்த கால்கள், பூனைமயிரடர்ந்த கால்கள்,போலியோ கால்கள், சாக்ஸில் ரப்பர்பேண்ட் சுற்றி ரத்தம் கட்டிய கால்கள்,வெட்கும் கால்கள், டீச்சரிடம் வாங்கிய பிரம்படியை பாவாடையால் மறைக்கும் கால்கள் என‌ நாளடைவில் அந்த கால்களே எனக்கு மிகவும் பரிட்சயமாயின.கால்களை கவனிக்கத் துடங்கிய பிறகு மனிதரின் முகங்கள் தனித்துவமற்றவையாக தோன்றியது. ஏனென்றால் கால்கள் பொய்பேச அறிந்திருக்க்வில்லை... போலியாக‌ புன்னகைக்க பழக்கப்பட்டிருக்கவில்லை.

நகர நாகரிகத்தில் எல்லா மனிதற்களுடைய முகமும் ஒன்று போலவே இருக்கின்றன. எல்லா முகங்களும் 'குட்மார்னிங் சார்' சொல்கின்றன. எல்லா முகங்களும் வழிந்து தலைசொரிகின்றன, எல்லா முகங்களும் கடன்கேட்டால் முகம் திருப்புகின்றது அதனாலோ என்னவோ எனக்கு இப்போதெல்லாம் எவரது முகமும் நினைவிலிருப்பதில்லை.

அப்போது பள்ளி சாய்ங்காலங்களில் சிறியதும் பெரியதுமாக பென்சில் ஊக்குகள் கீழே கிடப்பதைக் கவனித்திருக்கிறேன். அதைப் பின் தொடரவே மேலும் நிறைய ஊக்குகள். கையால் அவற்றை பொறுக்கியெடுத்துக்கொள்வேன். ஒரு சாயிங்காலத்தில் ஒரு பென்சில் பாக்ஸ் நிறைய சிறிய ஊக்குகள் நிரம்பிவிடும். மீண்டும் அடுத்த நாள் அதே அளவு ஊக்குகள். நான் ஊக்குகளை எடுப்பது அறிந்து யாரோ கவனித்து மீண்டும் கொண்டுவந்து போடுகிறார்க்ளோ என எனக்கு சந்தேகம்.

ஒருவேளை ஊக்குகள் பூமியிலிருந்து தான் முளைக்கின்றன. அதிலிருந்து தான் பென்சில் செய்யப்படுகிறதோ என்று நம்பிக்கொண்டிருந்தேன்.சில சகமாண‌ வர்கள் அங்கிருந்த ஒரு பந்தல் மரத்தை அது பென்சில்மரம்' என்றும்.அதிலிருந்து தான் பென்சில் ஊக்குகள் முளைக்கின்றன என்றார்கள். ஒரு மாலைப்பொழுதில் ஒரு சிறுமியை டீச்சர் வெளியே போய் பென்சில் சீவச்சொல்லி எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் என்று சொன்ன போது அந்த மாணவி அந்த மரத்தடியில் வந்து பென்சில் சீவி விட்டு சென்றாள்... மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். அன்றிலிருந்து தான் 'பென்சில்மரங்களின்' ரகசியம் எனக்கு தெரியவந்தது. அதன் பிறகு பெசில் ஊக்கு பொறுக்குவதில் மனம் ஈடுபடவில்லை.

இப்படியாக பள்ளி நாட்களும், பள்ளிகால மனப்பாண்மைகளும் தங்களுக்கே உண்டான வாசனையும், அழகையும் உடையவை. இவையனைத்தையும் அசைபோட வைத்தது சமீபத்தில் கண்ட ஒரு சிறந்த திரைப்படம். திரையில் பெயரிடுகையில் ஏற்கனவே முழுவதும் பிய்ந்துபோன ஒரு ஜோடி ரோஸ் நிற ஷூக்களை ஒரு ஜோடி கைகள் தைத்துக்கொண்டிருக்கின்றன. தனது தங்கையின் ஷீ தைக்கப்படுவதை நிதானமாக பார்த்துக்கொண்டிருகும் அலி என்னும் சிறுவன், அதை ஒரு கருப்புக் கவரில் இட்டு எடுத்துச் செல்கிறான். வீட்டிற்கு ரொட்டி வாங்கிவிட்டு, காய்கறிகடைக்கு செல்கிறான். செருப்புக்கவரை வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்று உருளைக்கிழங்குகளைப் பொருக்குகிறான். கடைக்காரர் மேலே உள்ள கிழங்குககை விட்டுவிட்டு ஒதுக்கிவைத்துள்ள கிழங்குகளைப் பொருக்கச் சொல்கிறார். பதிலேதும்

பேசாமல் அவனும் பொருக்கியெடுக்கிறான். வெளியே குப்பைக்கவர்கள் அள்ளியெடுக்க வரும் பார்வையற்ற ஆள் அலி வைத்த செருப்புக்கவரையும் எடுதுச் சென்றுவிடுகிறார்.

உருளைக்கிழங்குக்கான காசை கடனாகத்தருமாறு கேட்கிறான் அலி. பழைய பாக்கியை பாதியாவது தரச்சொல்லி அம்மாவிடம் சொல்ல சொல்கிறார் கடைக்காரர். வெளியே வந்து பார்க்கும் அலிக்கு அதிர்ச்சி!. தனது தங்கையின் செருப்புக் கவரைக் காணவில்லை!. தேடிப்பார்க்கும் முயற்சியில் காய்கறிகள் அனைத்தும் சரிந்துவிழ கடைக்காரர் அவனை அங்கிருந்து விரட்டிவிடுகிறார்.
***
அலியின் வீடு:

அலி வீட்டினுள் நுழையும் போது வீட்டுவாடகை பாக்கி கேட்டு வீட்டுக்காரர் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார். அலியின் தாய் வீட்டில் ஆம்பிளைகள் இருக்கும்போது வருமாறு வலியுறுத்துகிறாள்.அழும் குழந்தையை பார்க்கச்சொல்லி ஜாராவை சத்தமிடுகிறாள் அலியின் அம்மா.

வீட்டிற்குள் செல்லும் அலியை சிரித்தமுகத்துடன் வரவேற்கிறாள் சிறுமி ஜாரா. "என் ஷூவை அழகாக தைத்திருக்கிறாரா?" என்று வினவுகிறாள். அலி ஷீ தொலைந்துபோன விஷயத்தைக் கேட்டு அழ ஆரம்பிக்கிறாள் ஜாரா. அதைக்கண்டு கலவரமடைகிறான் அலி. "நான் எப்படி நாளை ஸ்கூலுக்குப் போவது" என்று அழுதபடி கேட்கிறாள்.

அம்மாவிடம் சொல்லப் போகிறேன் என்கிறாள் ஜாரா.வேண்டாம் என்று கெஞ்சுகிறான் அலி. "எப்படியும் தேடி எடுத்துவந்து விடுகிறேன் " என்கிறான் அலி. வீட்டை விட்டு தனது அழுக்கேறிய கேன்வாஸ் ஷூவை அணிந்துவிட்டு ஓடுகிறான் அலி!!

"எங்கே டா போற!" என்று உரக்க கத்துகிறாள் அம்மா... துணிகளைத் துவைத்தபடி..

நாள் முழுக்கத் தேடியும் ஷூ கவர் கிடைத்தபாடில்லை. அலியின் தந்தையிடம் உடைத்துக் கொடுக்கச்சொல்லி மூட்டை சர்க்கரைக் கட்டியை அலியிடம் கொடுத்துவிடுகிறார் மசூதியின் ஒரு மூத்தவர்.
*-*-*-*-*
இரவு::

அலியின் தந்தை சர்கரைக்கட்டியை உடைத்துக்கொண்டே பினாத்திக்கொண்டிருந்தார். "பச்ச ஒடம்புக்காரி...நீ இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா...பாரு எவ்வளவு துணி தொவச்சிருக்க. இந்தப் பையன் நாள்முழுக்க ஊர்சுத்திட்டு இருந்தானா?. ஏன்டா...அம்மாவுக்கு நீ உதவி செய்யக் கூடாதா? நீ இன்னும் சின்னப் பையன் இல்ல... 9 வயசாகுது உனக்கு. எனக்கு 9 வயசிருக்கும் போது வீட்டுவேலையெல்லாம் நான் தான் செஞ்சேன் தெரியுமா?" என்று திட்டிக்கொண்டிருக்கிறார்.

"நீங்க ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க...மொதல்ல வீட்டுவாடகைக்கு ஏற்பாடு பன்னுங்க. "ஜாரா...அபாவுக்கு கொஞ்சம் டீ ஊத்திக்கொடும்மா" என்றாள் அம்மா .

ஜாரா ஒரு கோப்பையில் டீ ஊற்றி கொண்டுவருகிறாள். "வழக்கம் போல சர்க்கரை எடுக்காம வந்திருக்கையே கண்ணு" என்கிறார் அப்பா.

"இங்க தான் இவ்வளவு சர்க்கரை உடைக்கறீங்களே" என்றாள் ஜாரா.

"இல்லமா...அது கூடாது... பாரு இதெல்லாம் நம்மள நம்பி மசூதில இருந்து கொடுத்துவிட்டிருக்காங்க" என்றபடி வீட்டு சர்க்கரை எடுத்து டீயில் இடுகிறார். "நான் நாள் முழுக்க ஆபீஸ்ல எல்லாருக்கும் டீ கொடுக்குறேன்..ஆனால் என் ஜாரா கொடுக்குற டீயோட சுவையே தனி" என்கிறார் அப்பா. வெட்கப்பட்டபடி ஜாரா அலியின் பக்கத்தில் வந்து உட்காருகிறாள்.

"ஷூ இல்லாம நாளைக்கு நான் எப்படி ஸ்கூலுக்கு போறது " ‍என்று நோட்டில் பென்சிலால் எழுதி காட்டுகிறாள் ஜாரா.

"செருப்பு போடுட்டு போ" என்று அலி பேனாவால் எழுதி காட்டுகிறான்.

ஜாரா: "உனக்கு இப்படி சொல்ல வெட்கமா இல்ல? உன்னால தான் இப்படி...அப்பாகிட்ட நான் சொல்லப் போறேன்" .

அலி: "வேண்டாம். அப்பா ரெண்டுப்பேரையும் தான் போட்டு அடிப்பார்.அதுவுமில்லாம‌ல் உன‌க்கு புது ஷூ வாங்க‌ அப்பாகிட்ட‌ காசில்ல‌...திரும்ப‌வும் க‌ட‌ன் தான் வாங்க‌ணும்"

ஜாரா: "நான் என்ன‌ தான் செய்யட்டும்?"

அலி: "என்னோட‌ கேன்வாஸ் ஷூ போடுட்டு போ"
ஜாரா: "அப்போ உன‌க்கு"

அலி: "உன் ஸ்கூல் முடிஞ்ச‌தும் நான் போறேன்."

ஒப்புக்கொள்கிறாள் ஜாரா. அவ‌ளுக்கு ப‌ரிசாக‌ ஒரு ர‌ப்ப‌ர்வைத்த‌ பென்சிலைக் கொடுக்கிறான் அலி.
*-*-*-*-*
மறு நாள் காலை:

மிகவும் வெட்கத்துடனும் கூச்சத்துடனும் அந்த அழுக்குப் படிந்த கிழிந்த நிலையில் உள்ள கேன்வாஸ் ஷூவை அணிந்து செல்கிறாள். அவளுடைய அவமாண உணர்ச்சியால் கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது. மற்றவர்கள் முன்னால் அதைக்காட்ட மனமின்றி மிகுந்த லஜ்ஜையுடன் தன் பாவடையால் ஷூவை மறைக்கிறாள். விளையட்டு வகுப்பு வருகிறது. அதில் ஒரு சிறுமி நல்லதொரு தோல் ஷூவைப்போட்டு நீலந்தாண்டும் போது விழுந்துவிடுகிறாள். ஜாரா பின் வரிசையில் இப்பொதும் சுருங்கிய முகத்துடன் நிற்கிறாள். "எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? கேன்வாஸ் போடுட்டு வாங்கன்னு...ஸ்போர்ட் ஷூ போடுட்டு வந்தா இந்த மாதிரி ஆயிருக்குமா?" என்கிறார். ஜாரா சந்தோஷம் தாளாமல் சிரிக்கிறாள். இப்போது அவளுடைய ஷூக்கள் பாவாடையிலிருந்து வெளியே இருந்தன.
அலி பள்ளிக்கு போகாமல் ஜாரா வருவதற்காக தெருவோரமாக உள்ள ஒரு சந்தில் யாருக்கும் தெரியாமல் காத்திருக்கிறான். பள்ளி முடிந்து ஜாரா ஓட்டமெடுத்து வருகிறாள். அலி பொறுமையிழந்து பதட்டத்துடன் நிற்கிறான். ஜாரா வருவதைக் கண்டு சற்றே சமாதானம் அடைகிறான் அலி. "இவ்வளவு நேரமா வரதுக்கு? என‌க்கு ஸ்கூலுக்கு போக‌ வேண்டாம்?"

"நான் என்ன செய்வேன்.. என்னால முடிஞ்ச வரைக்கும் ஓடி தான் வந்தேன். உன்னால தான எல்லாம். நான் இனிமேல் இந்த ஷூவை போடுட்டு போகமாட்டேன் போ! இது ரொம்ப‌ அசிங்க‌மா இருக்கு... ஒரே அழுக்கு!"

இதை எதிர்பார்க்காத அலி "அட‌...அதுனால‌ என்ன‌... க‌ழுவிக்க‌லாம்...ச‌ரியா?" என்று ஒருவ‌ழியாக‌ அவ‌ளை ச‌மாதான‌ம் செய்துவிட்டு அவசரமாக புறப்பட்டான்.

பரிதாபமாக புத்தகமூட்டையை ஒரு கையில் சுமந்துகொண்டு பள்ளிக்கு ஓடுகிறான். தாமதமாக வருவதைப் பள்ளி முதல்வர் கண்டுகொள்கிறார். பள்ளிக் கூட்டாளிகள் "இன்று சாயிங்காலம் கால்பந்து ஆட வா..." என்று வகுப்பில் சீட்டு எழுதி அனுப்புகிறார்கள். "அம்மாவுக் உடம்பு சரியில்லை...வர முடியாது" மறுபடி எழுதி அனுப்புகிறான் அலி."நம் பரமஎதிரியின் அணியுடனாக்கும் நாம் ஆடப் போகிறோம்" என்று சொல்லியும், தன் பரிதாபமான கேன்வாஸ் ஷூவின் நிலை கருதி போக மறுத்துவிடுகிறான். கணக்கு பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண்கள் வாங்கியதற்காக ஒரு பேனாவைப் பரிசளிக்கிறார் கணக்கு வாத்தியார்.

வீடு திரும்புகையில் ஜாரா மிகவும் கோபமாக இருப்பதைக் காண்கிறான். அவள் மீண்டும் காணாமல் போன ஷூவைக்குறித்து புகார் சொல்கிறாள். அவளுக்கு அவனுடைய பரிசுப் பேனாவைக் கொடுத்து சமாதானம் செய்கிறான். இருவரும் சேர்ந்து தங்கள் இருவருக்குமேயான ஒற்றைஜோடி ஷூவை சோப்பால் கழுவுகிறார்கள். பொங்கி எழும் சோப்பு நுரை ஜாராவுக்கு தாங்காத சிரிப்பை ஏற்படுத்துகிறது. ஜாரா சிரிப்பதைப் பார்த்து அலியும் சந்தோஷித்து சிரிக்கிறான். மழை வருவதைப் போல இருந்தது மேகம்.இடிசப்தத்தால் உறக்கத்திலிருந்து திடிக்கிட்டு எழும் ஜாரா சன்னலையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். பின் அலியை எழுப்ப நினைத்து "ஆலீ... அலீ..." என இரகசியமாக கூப்பிடுகிறாள். 'வெளியில மழை பெய்யுது...ஜன்னல் கிட்ட போக பயமா இருக்கு' என்கிறாள். வெளியே துவைத்து காய வைத்த ஷூ நனைந்து கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி ஓடிச்சென்று அதை பத்திரமாக எடுத்துவைக்கிறான் அலி.

மறுநாள் சந்தோஷமாக பள்ளிக்கு செல்கிறாள் ஜாரா. போகும் இடமெல்லாம் எல்லா பெண்கள் காலையும் கவனித்தபடியே போகிறாள். கடையோரம் நின்று காட்சிக்காக வைக்கப் பட்டிருக்கும் வண்ணமிகு ஷூக்களை பரிதாபமாக பார்த்து நகர்கிறாள். பி.டிவகுப்பில் விளையாடுவதை விட்டு எல்லார் கால்களையும் பார்த்தே நடக்கிறாள் ஜாரா. அவளுக்கு எல்லா கால்களும் பரிட்சயமாகி விட்ட நிலையில் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவளது காணாமல் போன செருப்பைப்போலவே ஒரு ஜோடி செருப்பணிந்து செல்கிறாள் ஒருத்தி. ஆனாலும் கேட்பத்ற்கு பயமாக இருக்கிறது... செய்வது அறியாது அவள் பின்னாடியே அவள் வீடு வரைக்கும் செல்கிறாள்... அது அந்த பார்வையற்ற காகிதம் பொறுக்கும் தொழிலாளியின் வீடு. அலியையும் கொண்டு வந்து காண்பிக்கிறாள்.

மறுநாள் தனது கீழே விழுந்த பேனாவை எடுத்துக் கொடுத்து உதவிசெய்கிறாள் அந்த பெண். நாளடைவில் இருவரும் நண்பர்களாகிவிடுகிறார்கள். மறுநாள் எப்படியும் அந்த ஷூவைப் பற்றி விசரித்து விட வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறாள் ஜாரா. அதே நேரம் பார்வையற்ற அந்த பேப்பர் வியாபாரி ஒரு ஷூக்கடையில் விலைகளை விசாரித்துக் கொண்டிருந்தார். கடைக்காரர் 'இதுல வைலட் கலர்ல பூபோட்டிருக்குங்க... நல்லா இருக்கும் எடுத்துக்கங்க' என ஒவ்வொன்றாக விவரிக்கிறார்.அடுத்தநாள் காலையில் அந்த சிறுமிக்காக வெகுநேரமாக காத்திருக்கிறாள் ஜாரா..மனதைத் தயார் படுத்திக்கொண்டு. ஆனால் மீண்டும் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!. அவள் ஒரு ஜோடி புதிய செருப்புகளை அணிந்துகொண்டு வந்தாள்.
"என் ஷூ எப்படி இருக்கு" என்றாள்.
"ம்...நல்லா இருக்கு"

"எங்கப்பா வாங்கிக் குடுத்தார்.நான் நல்ல மார்க் வாங்கும் போதெல்லாம் எதாவது பரிசு வாங்கிக் குடுப்பார்...நான் எல்லா பரிச்சைலயும் நல்ல மார்க் தான் வாங்குவேன்... ம்ஹூம்ம்.." என சிரிக்கிறாள்.

"அது இருக்கட்டும்...உன்னோட பழைய ஷூ என்னாச்சு?"

"அதுவா? பழசாயிடிசுன்னு அம்மா தூக்கி எறிஞ்சுட்டாங்க..."

ஜாராவுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது...

"அது அவ்வளவு பழயது ஒன்னும் இல்ல" என்று கோபமாக‌ சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஜாரா.

*-*-*-*-*
இதற்கிடையே அனைத்து பள்ளிகளுக்குமான மாராத்தன் ஓட்டப்பந்தையம் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. அலியில் பி.டி மாஸ்டர் அதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார். பரிசுக்கான விபரம் மறுநாள் தெரிவிக்கப்படும் என்றும், ஆர்வமிருப்பவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றும் அறிவிக்கிறார். தன்னுடைய அதிபயங்கரமான நிலையில் இருக்கும் இந்த ஷூவை வைத்துக்கொண்டு எப்படி போட்டியில் கலந்துகொள்வது? இருவருக்கும் சேர்த்து இருப்பது இந்த ஒரே ஷூ தான். ஜாரா வேறு ஏற்கனவே கஷ்டப்படுகிறாள்... என்று என்னென்னவோ யோசித்துப் பார்த்துவிட்டு போட்டிக்கு பெயர் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிடுகிறான். வெளியே போட்டிக்கான தேர்ந்தெடுப்பு நடப்பதை மனம் பொருக்காமல் வகுப்பறையில் இருந்தபடி கவனிக்கிறான். சாயிங்காலம் போட்டியில் பங்கு பெறுபவர் பட்டியலுடன் இறுதிப்போட்டி பரிசுகளுக்கான அறிவிப்பும் ஒட்டப்படுகிறது.

அது அலியை இரண்டாக கிழித்தது போல அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. முதல் பரிசு விளையாட்டு உடைகள் மற்றும் விளையாட்டு முகாமில் பங்குகொள்ள முடியும், இரண்டாம் பரிசு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு முகாமில் பங்குகொள்ள முடியும், மூன்றாவது பரிசு புத்தம் புதிய ஸ்போர்ட் ஷூ. அலி தான் பெயர் கொடுக்காமல் விட்ட முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினான். அந்த ஷூ மட்டும் கிடைத்துவிட்டால் தனது எல்லா துன்பமும் தீர்ந்து விடும் என்று தோன்றியது.

பி.டி மாஸ்டரின் அறைக்கு சென்று தான் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவதாக கூறுகிறான் அலி. திரும்பியும் கூட பார்க்காமல் "ஆள் எல்லாம் செலக்ட் பண்ணியாச்சு...அடுத்த வருஷம் பாதுக்கலாம் போ" என்கிறார்.

"இல்ல சார் நான் கண்டிப்பா இதுல கலந்துக்கனும்...நான் நல்லா ஓடுவேன் சார்" என்கிறான்.

"அது தான் சொல்றேன்ல...இவ்ளோ நேரம் என்ன பண்ணீட்டு இருந்தே... "

என்று சொல்லி திரும்பிய அவர் முன் கண்ணீருடன் தேம்பித் தேம்பி அழுதபடி அலி "நான் நல்லா ஓடுவேன் சார்...நான் கண்டிப்பா முதல் பரிசு வாங்கிடுவேன் சார்" என்று அடம்பிடித்து நின்றுகொண்டிருந்தான். பொறுமை இழந்த மாஸ்டர் அவனை மைதானத்தில் ஓடவிட்டு டைம் செய்தார். அவனுடய வேகம் அதியசமாகவும்... ஆச்சர்யமளிப்பதாகவும் இருக்கவே அவனைத் தேர்வு செய்துவிடுகிறார் மாஸ்டர். .

அலி சந்தோஷமாக வீடு திரும்பினான்.காரணம் புரியாமல் ஜாரா சிரித்தாள். விஷயத்தைச் சொல்லி பரிசு விபரங்களையும் சொன்னான். "மாஸ்டரிடம் நான் முதல் பரிசு வாங்குவேன்னு சொல்லியிருக்கேன். ஆனா எப்படியும் மூனாவது பரிசை வாங்கிடுவேன்" என்கிறான் அலி.

"ஏன்" என்று கேட்கும் ஜாராவிடம் "மூன்றாம் இடத்துக்கு தானே ஷூ கிடைக்கிரது" என்று வேடிக்கையாக சிரித்தான். ஜாராவும் ரகசியமாக சிரிக்கத்துடங்கினாள். மீன்கள் நிறந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து வரும் நீரை மிகவும் ஆசையுடன் குடிக்கத் துடங்கினான் அலி.

பல்வேறு நகரங்களிலும், பணக்கார பள்ளிகளிளும் இருந்து மாணவர்கள் போட்டிக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ஒரு பழைய ட்ரக்கில் வந்து சேர்ந்தார்கள் அலியின் பள்ளியினர். அலி சுற்றிலும் பார்த்தபடி இருந்தான். அனைவரது பெற்றோர்களும் உடன் வந்து உற்சாகமளித்துக் கொண்டிருந்தனர். சிலர் போட்டி உடையில் நிற்க வைத்து தத்தம் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அலி தூரத்தில் வைத்திருக்கும் பரிசு ஷூவையும் பார்த்தான்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வந்திருந்த அனைவருகும் நன்றி சொல்லிவிட்டு, போட்டியில் கலந்துகொள்வது தான் முக்கியம், வெல்லுவது அல்ல... அந்த முகடு கடந்து உள்ள Lake கை யார் முதலில் அடைகிறார்களே அவரே வெற்றியாளர். யாரும் யாரையும் தள்ளி விடாமல் செல்லவேண்டும்...இலக்கை அடைவது மட்டுமே நமது நோக்கம் என்றும் அறிவுறுத்தினார்.

துப்பாக்கி மேல்நோக்கி சுடப்படுகிறது. பிள்ளைகள் ஓடத்துவங்கினர். ஒன்றிரண்டு கிலோ மீட்டர்களிலேயே சிலர் நின்றுவிட்டிருந்தனர். முகடின் மேல் செல்லச் செல்ல போட்டியாளர்களின் கூட்டம் குறைந்துகொண்டே வருகின்றது. அலி அவ‌னுடைய பரிதாபமான ஷூவுடன் முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தான். சட்டென்று தான் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற ப்ரக்ஞை ஏற்பட்டு அவன் முன் காட்சிகள் ஓடியது. ஜாராவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது... "உன்னால தான் எல்லாமே" "இந்த ஷூவை போட்டுட்டு போக வெக்கமா இருக்கு.." அவன் கொடுத்த உறுதியும் நினைவு இருக்கிறது "...நான் எப்படியும் மூன்றாம் பரிசு வாங்கிடுவேன்..." "அது பசங்க ஷூவாச்சே?" "அதுனால என்ன. அதுக்கு பதிலா...பொண்ணுக ஷூவ மாத்திக்கலாம்..." இப்படியே ஓடினால் முதல் பரிசு முதல் பரிசு தான் கிடைக்கும் என்று எண்ணி, தன் வேகத்தைக் குறைத்து மற்ற 2 பேருக்கு வழி விடுகிறான். மூன்றாவது ஆள் தன்னைக் கடக்க நினைக்கயில் பெரும் முயற்சி எடுத்து அவனை முந்துகிறான். கால்களில் வலி எடுத்தது. தினமும் ஜாரா ப ள்ளி முடிந்து தனக்காக புத்தகப்பையுடன் ஓடி வருவது எண்ணிப்பார்க்கிறான். "நான் என்ன செய்வது...என்னால் முடிஞ்ச வரைக்கும் வேகமா தான ஓடி வர்ரேன்" என்ற அவள் குரல் கேட்கிறது ...அவனது வேகம் அதிகமாகிறது.

இலக்கு பக்கத்தில் வரும் போது மொத்தமாக ஐந்து அல்லது ஆறு பேரே இருக்கிறார்கள். எல்லோருமே மிகவும் சோர்வுடனும், சக்தியற்றும் காணப்பட்டார்கள். அலி மயக்கமடையும் நிலையிலிருந்தான். அப்போது தான் அந்த துயரம் நடந்த்தது. அலியை முந்தும் முயற்சியில் ஒரு மாணவன் அலியைக் கீழே தள்ளி விட்டுவிடுகிறான். இலக்கு மிக அருகில் வந்துவிட்டிருந்தது... தன் கண்முன்னே இரண்டு மூன்று பேர் கடந்து போவதைப் பார்க்கிறான் அலி. ஜாராவின் முகம் மீண்டும் அவன் முன் வந்து போகிறது... எழுந்து ஓடத்துவங்குகிறான். எல்லா மாணவர்களும் தான் எத்தனையாவதாக வருகிறோம் என்ற நினைவே இல்லாமல் சோர்வுடன் கிட்டத்தட்ட இணையாகவே ஓடிக்கொண்டிருந்தனர்.

முன்னேறி வந்து கொண்டிருந்த அலியை உற்சாகப்படுத்தி பி.டி மாஸ்டரும் ஓரத்தில் ஆர்வமாக "வாடா..வாடா.." என்று ஓடிவந்துகொண்டிருந்தார்... உடன் பள்ளி முதல்வரும் இணைந்த்துகொண்டார். இலக்கை அடையும் போது யவரும்

சுயநினைவற்றவர்களாக திபு திபு வென்று இலக்கில் வந்து விழுந்தனர்... யார் வென்றது என்று தெரியவில்லை... கூட வந்த மாணவன் ஒருவன் மிகுந்த கோபத்துடன் அழ ஆரம்பித்திருந்தான். அவன் தாய் வந்து அவன் கால்களைப் பிடித்து விட்டாள்.

பி.டி மாஸ்டர் ஓடி வந்து அலியைக் கட்டிக்கொண்டார்... இன்னும் முழுசுயநினைவில்லாமல் அலி..."நான் மூன்றாவது பரிசு வாங்கிட்டேனா சார்..?" என்றான்...

"மூன்றாவது பரிசா...அடப்ப்போடா... முதல் பரிசே நீதான்!!" என்று ஆரவாரித்தார் மாஸ்டர். அலியைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டார். பத்திரிக்கைக் காரர்கள் வந்து புகைப்படங்கள் எடுத்தனர். ஒருங்கிணைப்பாளர் ஒரு கோப்பையும் பரிசும் வழங்கினார். புகைப்படம் எடுக்கப்படுகிறது. பின்னர் பள்ளி முதல்வர் அலியுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். அலி மிகவும் கூச்சத்துடன் தலையைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டிருந்தான்.

"பையனை பட்டும் தனியா ஒரு போட்டோ எடுக்கானும்..எல்லாம் கொஞ்சம் விலகிப் போங்க என்றார். "எங்கே சாம்பியன்.... தலையை மேலே தூக்கு பாப்போம்.." என்றார்.

அலி மெதுவாக தலையைத் தூக்கியபோது கண்கள் முழுக்க நீருடன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தான். ஏமாற்றத்தையும் இயலாமையும் வெளிப்படுத்த கண்ணீரைவிட வேறு கருவி என்ன இருக்கிறது...?

வீட்டில் ஜாரா...தண்ணீர்த் தொட்டியில் குழந்தையின் புட்டியைக் கழுகிக்கொண்டிருந்தாள். வாசலில் வந்து நின்ற அலியை கண்கள் விரிய பார்த்தாள் ஜாரா. அலி தலையைக் கீழே குனிந்தபடி நின்றிருந்தான். ஜாரா அவனது கால்கலைப் பார்த்தாள். அதே பழைய ஷூ... இன்னும் மோசமான நிலமையில்... உள்ளே குழந்தை அழும் குரல் கேட்கிறது... அவள் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறாள்.

அலி மிகவும் வேதனை மிகுந்தவனாக மீன் உள்ள தொட்டியின் அருகே வந்து உட்காருகிறான். தண்ணீரை அள்ளிக் குடித்தான். மேலும் பிய்ந்து பய்ந்து பயனற்று போய்விட்ட கேன்வாஸ் ஷூவை கழற்றி எறிகிறான். உள்ளே கால்கள் எல்லாம் பழுக்க காச்சியிருந்தது. சாக்ஸுடன்.. தோல் ஒட்டிக்கொண்டு வந்தது வலியைக் கொடுத்தது... ஜாராவின் புறக்கணிப்பும்...அவளுக்கு ஷூவைப் பெற்றுத் தர முடியாத தோல்வியும், அதையும் விட வேதனையை ஏற்படுத்தியது...

கால்களை தண்ணீர்த் தொட்டிக்குள் விட்டு அமர்ந்திருந்தான் அலி.... மீன்கள் கூட்டமாக அவனது காயத்தை நெருங்கி கொத்த ஆரம்பித்தன..... அது அவனுக்கு சற்றே சமாதானமாக இருந்தது.... மேலே சூரியன் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது....

திரை இருண்டு... மெல்லிய இசையுடன் பெயர்வரிசை இடப்படுகிறது....

*-*-*-*-*
சர்வ தேச திரைப்பட விழாக்கள் எங்கும் திரையிடப்பட்டு பெரும் அங்கிகாரம் பெற்ற இந்த இரானிய படம் Majid Majidi யின் Bacheha-Ye aseman (Children of Heaven) ஆகும்.

குழந்தைகளின் உலகை உன்னதமாக கண்முன் சில மணிநேரம் ஓடவிட்டு...பல ஆண்டுகளுக்கு முன்பு நம்மை பயணிக்க செய்தது இப்படம். இப்படத்தைப் பார்த்த ஒரு தோழி ...பரிசுகள் ... விருதுகள் எல்லாம் அவற்றின் மதிப்பைப் பொறுத்து அல்ல... நமது தேவையைக் குறித்தே நிர்ணையிக்கப் படுகிறது... என்றார... எவ்வளவு உண்மை.!
பல்வேறு தளங்களிலும் பொதுவான திரையிடலுக்கு மிகவும் ஏற்புடைய படமாகவும், டிவைன் என்ற சொல்லை சினிமாவுடன் பொருத்திப் பார்க்க உதவுவது இதுபோல சில படங்கள் மட்டும் தான். ஒரு கிறித்துவ மிஷ‌னரி ஆதரவற்றவர்களுக்கும், குளிர் காலத்தில் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட வழியில்லாத மக்களுக்காக ஒரு சேரிட்டி ஷோ நடத்தியது. ஷோவில் "Children of Heaven" திரையிடப்பட்டது. சேரிட்டி ஷோவுக்கு Entry Fee யாக‌ வசூல் செய்யப்பட்டது, ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஜோடி உபயோகித்த அல்லது பழைய ஷூ... சினிமா என்பதைக் கடந்து இவை வாழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது...

பல மாதங்கள் கழித்து என் பழைய மேலாலரை மின்சார இரயிலில் சந்திக்க நேர்ந்தபோது, பேசிக்கொண்டிருந்தவர் சட்டென்று தன் மொபைல் எடுத்து கையில் கொடுத்தார். அதில் அவரது பிறந்த 7,8 மாதமான குழந்தையின் படம் இர்ந்தது. அப்போது தான் அவர் சமீபத்தில் தந்தையாகியிருந்தது நினைவுக்கு வந்தது. "எப்படி இருக்கிறாள்" என்று விசாரித்தேன். வழி முழுக்க குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார்... ஒவ்வொரு மாசமும் அவளுக்குன்னு ஏதாவது புதுசா வாங்கிடுவேன். சின்ன பொம்மையே, புது தொட்டிலோ எதுவானாலும் சரி... அவளுக்கு நான் 8ம் மாசத்துல இது வாங்கிக் கொடுதேன்னு அவளுக்கு தெரியாது தான்... ஆனா நானே எனக்கு அப்படி ஒரு Commitment பண்ணிகிட்டேன். எனக்கு சிரிப்பதைத் தவிர எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை... "இந்த தலைமுறைக் குழந்தைகள் நம்மை விட அதிர்ஷ்டசாலிகள்" என்றேன். அவரும் ஆமோதிப்பவரைப்போல..."ஆமா...உண்மைதான்...நான் வளர்ர வரைக்குமே என் அப்பா வீட்டு பொருளாதாரத்த ஈடுகட்டவே அலஞ்சுட்டு இருந்தார்... என்னை அவர் தூக்குனதே இலன்னு என் அம்மா சொல்லுவாங்க... ஃபுல்லா...பொம்பளைங்ககூடையே தான் வளந்தேன்... " என்று குறிப்பிடார். எனக்கு அவர் இத்திரைப் படத்தில் வரும் காகிதம் பொறுக்கும் குறுட்டு வியாபாரியை நினைவு படுத்தினார். தனது ஏழ்மையைப் பொருட்படுத்தாது தன் குழந்தைக்காக அளிக்கப்படும் சமர்ப்பணத் தன்மை அந்த பார்வையற்றவரின் மீது பரிதாபத்தைக் கடந்து மிகுந்த மரியாதையை வரவழைத்தது.

உலகில் எல்லா தந்தைகளுக்கும், தங்கள் பிள்ளைகள் என்பது...தாங்கள் கண்ட கனவின் தொடர்ச்சி. தாங்கள் கைவிட்ட கனவை தொடர வந்த இந்திர தூதுவர்கள்.தங்களுக்கும் தங்கள் கனவுலகத்திற்குமான பாலம். எல்லா அப்பாக்களுமே தாங்கள் கற்பனை செய்துவைத்திருந்த பால்யத்தை அவரவர் பிள்ளைகளுக்கு கொடுக்கவே முனைகிறார்கள். அப்பாக்களின் கனவுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணமும் சுபாவமும் கொண்டிருந்தாலும், எலாருடைய பொதுவான கனவு "என் பிள்ளை, என்னைப் போல வரக்கூடாது!" என்பதாகத்தான் இருக்கிறது!.

செவ்வாய், 21 அக்டோபர், 2008

நரசிம்மர் கூத்தும்.. நசுருதீன் சவுண்டு சர்வீசும்...

சித்திரை மாதம். வழிபாடு முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்கிறார்கள். அவதார‌ நரசிம்மர் கையில் ப்ளாஸ்டர் ஆஃப் பேரிஸ் பொம்மையுடன் வர, ஊர்ப்பிரதானிகள் ஊர்வலமாக வந்தனர். விருந்துகள் தயார் நிலையில் இருந்தது. இரண்யன் இன்னும் சோர்வாகவே காணப்பட்டான். அவனுக்கு இன்னும் அவமான உணர்ச்சியும், கோபமும் தீர்ந்திருக்கவில்லை. பிரகலாதன் என்னுடன் வந்து பேசிக்கொண்டிருந்தார். நான் ஏதோ தலையசைத்தபடி இருந்தேன். மற்றுமொரு இரண்யன் நரசிம்மருக்கு தண்ணீர் கொண்டுவந்து தந்தார். எமணைக் காணோமே என்று எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, எமணை அழைக்க ஆள் அனுப்பப்பட்டது. வாட்ச்-வார் அறுந்துவிட்டதாக புகார் சொன்னபடியே வந்து சேர்ந்தான் எமண். என்னைப் பார்த்தபடியே சென்ற எமணைக் காண தைரியமின்றி நான் வெளிநோக்கி நடக்கத் துடங்கினேன். தெருவெங்கும் எருமைகள் கூட்டம் கூட்டமாக நின்று கத்தின. ஒரே பந்தியில் இரண்யர்களும், நரசிம்மரும், எமராஜனும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்னை எதுவோசெய்தது. சித்திரை வெயில் உச்சியில் காய்ந்து கொண்டிருக்க தெருவில் தனியே நடக்கத்துவங்கினேன். பாலைவனமெங்கும் செவ்வந்திப் பூக்கள் சிதறிக்கிடந்தன. வெயிலைப் பொருட்படுத்தாமல் நசுருதீன் சவுண்டு சர்வீஸ்காரர் மட்டும் மல்லார்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். *** அந்தக் கோயில் நகரத்திலிருந்து சற்றே விலகிய ஒரு சிறுகிராமம் நண்பனுடையது. சுற்றும் ஒரு ஐம்பது வீடுகள் நெருக்கிக் கட்டிய மல்லிகைச்சரம் போல அமைந்திருந்தன. சித்திராபௌர்ணமியை ஒட்டி அங்கு நரசிம்மர் கூத்து நிகழ்ச்சி நடக்கிறது என்றும், இரவில் துடங்கி விடிய விடிய நடந்தேறுமெனவும் சொல்லக் கேட்டு அங்குள்ள நண்பனது வீட்டை வந்தடைந்தேன். நண்பர் மற்றும் அவர்கள் கிராமத்தில் பெரும்பான்மையான மக்கள் சௌராஷ்டிரர்கள். அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். வஸ்திர வணிகங்களுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குடிபெயர்ந்தவர்கள். தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, காஞ்சிபுரம் பகுதிகளில் அதிகமாக வசிக்கிறார்கள். முக சாடையிலேயே 'இவர்கள் சௌராஷ்டிரர்கள்' என்று கண்டுகொள்ளும் நுணுக்கம் அறிந்தவராக இருந்தார் நண்பர். பொதுவாகவே சௌராஷ்டிரப் பெண்கள் பிரத்யேக சௌந்தர்யத்துடனுன் இருக்கிறார்கள் என்றுணர்ந்தேன். அவர்களது மொழி சற்றே ஹிந்தி போல இருந்தாலும் புரிந்துகொள்ள கடிணமாகவே இருந்தது, ஆகையால் சாப்பிடும் நேரத்தைத் தவிர எனக்கு வாய்திறக்க அவசியம் ஏற்படவில்லை. நண்பருடைய குடும்பம் அந்த கிராமத்திலேயே சற்றே 'பெரிய குடும்பம்'. ஒரு காலத்தில் இருநுறு தறிகள் வைத்து பட்டு நெய்துவந்திருக்கிறார்கள். ஆனால் இந்த தலைமுறையில் எல்லோரும் பொறியாளர்களாகவும், ஸ்கூல் வாத்தியாராகவும், எல்.ஐ.சி. ஏஜன்ட்டுகளாகவும் மாறிவிட்டதால் அதெல்லாம் இப்போது கிடையாது. ஆனாலும் அவர்களுக்கான நல்மதிப்பும் மரியாதையும் இன்னும் அவ்வூரில்இருந்தது. நான் சித்ரா பௌரணமிக்கு இரண்டு நாட்கள் முன்பே வந்தடைந்திருந்தேன். அவர்கள் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் சென்று வந்த வண்ணம் இருந்தார்கள். கோயில் ப்ரகாரத் தெருக்களில் சமைக்கும் நெய் வாசணையும், மலர்கள் தொடுக்கும் பெண்டிரும், ஒத்திகை பார்க்கும் சப்தமுமே நிறைந்திருந்தது. நண்பர் ஒருவரை அழைத்து நான் கூத்து பார்ப்பதற்கு தான் மெட்ராஸிலிருந்து வந்திருப்பதாக அறிமுகம் செய்து வைத்தார். பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாகவும், எப்போதும் தெய்வ நாமங்களை உச்சரித்தபடியுமே இருந்தார். அவர் "பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...ஒத்திகைக்கு தான் போறோம்...அந்தப் பக்கமா வந்தா வாங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரது தோணியில் பெருமிதமும், தன்னம்பிக்கையும் புலப்பட்டது. அவர் போன பின்புதான் அவர் தான் ப்ரதான ப்ரகலாதன் வேடத்தில் நடிப்பவர் என்று தெரிந்தது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், வேடம் என்பது வெறும் ஒப்பணை மட்டுமே அல்ல. ப்ரகலாதன் வேடம் என்றால், அவர்கள் அதே நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக, அதே ராசி, ஜாதக அமைப்பு எல்லாம் பொருந்தி இருக்க வேண்டும். விஷ்ணு வேடம் என்றால், அவருக்கும் அதே போல. இரண்யன் வேடமென்றால் அவருக்கும் ப்ரகலாதவேடம் புணைபவருக்கும் ஜாதக பொருத்தம் இருக்க வேண்டும். இப்படியே ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் தேர்வு செய்யப்படுகிறது. கதாபாத்தித்தை தாங்கள் தேர்ந்தெடுப்பது அன்றி, இங்கே கதாபாத்திரமே அவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. அதனாலேயோ என்னவோ, அது நாடகம் என்பது கடந்து தங்கள் மீது கவிந்த ஒரு கடமை என்பது போல மிகுந்த பக்தியும், பற்றுதலும் கொண்டவர்களாக இருந்தார்கள். மாலை சாய்ந்த உடனேயே நாடகக்காரர்கள் ஒப்பனைக்கு தயாராகிவிட்டார்கள். எல்லோரும் இறைவர் சன்னதிக்குச் சென்று குங்குமம் இட்டுக்கொண்டனர். ஒப்பனை செய்யும் போதே அவரவர் அந்த ரூபங்களாக மாறிக்கொண்டிருந்தனர். இரவு கவியத்துடங்கிய உடனே ஊரே சற்று புலம்பெயர்ந்து அந்த நாடகத்தெருவில் கூடிவிட்டிருந்தது. கூத்து துடங்கும்வரை குழந்தைகளின் கூச்சல் மிகுதியாக இருக்கிறது. நசருதீன் சவுண்டு சர்வீஸ்காரர் கடுமையான மைக் டெஸ்டிங்கில், வெவ்வேறு ஸ்தாதியில் பதம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த ஊரில் இருக்கக்கூடிய ஒரே சவுண்டு சர்வீஸ்காரர் நசருதீன் மட்டும் தான். நாளை பக்கத்து ஊரில் சித்திரைத் திருவிழா ஆர்கஸ்ட்ரா இருப்பதாகவும். இங்கு முடித்துவிட்டு இதே பொருட்களை அப்படியே எடுத்துசெல்ல வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெண்மணி நாடக மேடை முன்பாக அந்த இரவு நேரத்தில், தண்ணீர் தெளித்து கோலமிட்டுக்கொண்டிருந்தாள். இளம் பெண்கள் இருந்த இடங்களில் மல்லிகை வாசனை மிகுதியாக இருந்தது. நாடக மேடை அமைப்பு மிகவும் பிரும்மாண்டமற்றதாக இருந்தது. மாறாக மேடை எங்கும் செவ்வந்தி பூக்களும், ஊதுவத்தி புகையுமாய் ஒரு வழிபாட்டு ஸ்தலம் போலவே புலப்பட்டது. முதல் பாடல் ஒலிக்கத்துடங்கியவுடனேயே கூத்து கலைகட்டத் துடங்கிவிடுகிறது. கூத்தாடிகளும் மிகுந்த உற்சாகத்தனுடன் உச்சஸ்தாதியில் பாடினார்கள். அடுத்த சில நிமிடங்களில் மஹாவிஷ்ணு பார்க்கடலில் படுத்திருக்கும் காட்சி. கூட்டத்திலிருந்த சிலர் கைகூப்பி வணங்கி கண்ணங்களில் போட்டுக்கொண்டனர். மரபெஞ்சில் விஷ்ணு படுத்திருக்க, பெஞ்சின் நடுவில் செங்கல் வைத்து உயரம் அதிகமாக்கப் பட்டிருந்தது. செங்கல் மேலிருந்த பெஞ்சை இருவர் சீசா போல ஆட்ட, மேடையின் இருபுறமிருந்தும் சிலர் நீலநிற வஸ்த்திரங்களை அசைத்தபடி அலைகள உருவாக்கிக்கொண்டிருக்க...திருப்பார்க்கடல் காட்சி கண்முன்னே மாயமாய் விரிகிறது. கண்களுக்குப் புலப்படாத மெல்லிய கயிற்றால் கட்டப்பட்ட தீபம் விஷ்ணுவைச் சுற்றி வருவதைக் காண அதிசயமாய் இருந்தது. மிகக்குறைந்த நேரத்திலேயே இரண்யாட்சன் உலகைக் கவர்ந்து சென்றுவிட, போஸ்ட் ஆபீசில் வேலை பார்க்கும் இந்திரன் தலைமையில் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, மரபெஞ்சிலிருந்து ஒருவழியாக‌ கீழிறங்கி நாராயணன் கூர்மாவதாரம் எடுக்கிறார். கூர்மருடைய பாடல்கள் ஒலிக்கத்துடங்கும் முன்னரே கூர்மமேறிவிட்டிருந்தார் பள்ளி வாத்தியாரான அந்தக் கலைஞர். அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் நான்கு பேர் நீளமான வஸ்த்திரங்கள் கொண்டு இழுக்கிறார்கள். இரண்யாட்சனை வதம் செய்தும் சாந்தி அடையாமல் தன்னிலை மறந்தபடியே இருந்தார் வாத்தியார். அவருக்கு கற்பூறம் காண்பித்து மாலை அணிவிக்கப்பட்டது. பெரியவர் குழந்தைகள் எல்லாம் அவர் காலில் விழுந்து வணங்கினர். இந்த சிறு முதல் பகுதி முடிந்தவுடன், சிலர் சிகரெட் புகைக்க கிளம்பினர். சில வயசாளிகளும் வேறு சிலரும் கலைந்து செல்ல அதுவரை நின்றிருந்தவர்களுக்கு இருக்கை கிடைக்கிறது. மீண்டுவரும் இரண்யனது சபை மிகவும் பிரம்மாண்டம் மிக்கதாக இருக்கிறது. பெண் ஒப்பனையிட்ட ஆண்கள் அழகிகள் போல வந்து இரண்யனது சபையில் நடனமாடுகிறார்கள். இரண்யன் பெரிய மீசையுடனும், பரந்த மார்புடனும், ஆடம்பரமான ஆடைகளுடனும் அலங்காரத்தோடும் காட்சியளிக்கிறார். இரண்யன் வைக்கும் ஒவ்வொரு அடியும் மேடையை ஆட்டம் கொள்ளச்செய்கிறது. அவனது உரத்த குரலெடுத்த சிரிப்பு சவுண்டு சர்வீஸ்காரரைக் கொஞ்சம் பீதியுறச்செய்கிறது. நீண்ட பாடல்கள் வரும் காட்சிகளில் இரண்டு இரண்யண்கள் மேடையில் தோன்றி பாடுகிறார்கள். ஒருவர் ஒரு பாடலைப் பாடி முடிக்க, மற்றோருவர் விட்ட இடத்தில் தொடர்கிறார். உள்ளூர் மக்கள் யாதொரு குழப்பமுமின்றி பார்த்துக்கொண்டிருந்தனர். நான் சற்றே கடைமுற்றத்தில் இருந்தவர்களிடையே போய் அமர்ந்தேன். கரகரத்த..மிக வசீகரமான குரல் கொண்ட ஒருவருடன் பேசத்துடங்கியிருந்தேன். "அடுத்து என்ன நடக்கும்" என்ற என்னுடைய கேள்வியை என்னால் அடக்க முடிந்தபோதும், அவரால் அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நன்றாக குத்த வைத்து அமர்ந்து, கால்களை இரு கைகளாலும் அனைத்து சொல்லத் துடங்கினார். "அதுலபாருங்க...இரண்யனோட கண்பார்வைக்கே ராஜியம் முழுக்க கட்டுப்படும். தன்னையே சாமியா கும்பிடச் சொன்னான்னா பாதுக்கொங்க!. ஆமா..படியளக்கறவனும், நினச்சப்போ உசுரெடுக்கறவனும் அவந்தானுங்களே!. ஆனா விதி... அவன் சொல்றத கேக்காதமாதிரி ஒரு புள்ளைய குடுத்தான் ஆண்டவன். மத்தவங்கள செய்யறாப்ல சாதாரணமா வெட்டிப்போட்டுட முடியுங்களா?..நிக்கிறது யாரு?...பெத்த மகனாச்சே!. இரண்யன் மொத தடவையா வேதனப் பட ஆரம்பிச்சுட்டான். அவனோட நிம்மதியெல்லாம் சரியத்தொடங்குதுங்க. சொல்லப்போனா அவனோட மரணத்தோட தொடக்கம்னு சொல்லலாம். அது தானே... நிம்மதி போயிறுச்சுன்னா மனுஷன் பாதி பொணந்தானப்பா?" அவரது குரல் என்னை வேறு எதையும் கவனிக்க விடாமல் ஈர்த்துக்கொண்டிருந்தது. அவன் வாய்வழி விரியும் வார்த்தைகளில் நான் கரைந்துகொண்டிருந்தேனோ என்று தோன்றியது. அதே சமயம் மேடையில், பிரகலாதன் இரண்யனுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிறான். ஆத்திரம் அடைகிறான் இரண்யன். மனைவியிடம் பிரகலாதனை எண்ணி புலம்புகிறான். தகப்பனுடைய பாசத்துகும், தான் கொண்ட கொள்கைக்கும் இடையில் தவித்தவாறே, எப்போதும் கலவரமடைந்தவனாக இருக்கிறான். மீண்டும் அந்த மனிதன் தொடர்ந்தார் "விஷ்ணுவ வெறுத்த இரண்யனே, பிரகலாதன் மூலமா கடைசி வரைக்கும் ஹரியை நினைக்க வச்சதுதான் அந்த தெய்வத்தோட விளையாட்டு". மீதி இருந்த கூட்டம் சற்றே கலையத்தொடங்க, பிரகலாதனின் குருகுலத்தில் பஃபூன்கள் வந்து மேடையை சற்று கலைகட்ட வைக்கிறார்கள். மணி ஒன்றைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. இரு பிரதான இரண்யன் முழுவதுமாக விடைபெற்று சென்றுவிட மற்றுமோர் இரண்யன் இரவு முழுவதும் தன் கோபத்தையும், ஆதங்கத்தையும் அரற்றிப் பாடிக்கொண்டே இருந்தான். விதவிதமாக பிரகலாதனை மிரட்டியும், கொல்ல முயற்சித்தும் மேடையின் ஏதோ ஒரு மூலையிலிருந்து விஷ்ணு காட்சி தந்து காப்பாறிவிடுகிறார். மீதமிருந்தவர்கள் "கிருஷ்ணா..கிருஷ்ணா " என்று குதூகலிக்கின்றனர். அனைத்தையும் கவனித்தபடி சவுண்டு சர்வீஸ்காரர் தூக்கம் துரத்திக்கொண்டிருந்தார். இரண்யனோட தொடர்ந்த கொடுமைகளால் ஆத்திரமடைகிரார் விஷ்ணு. "என்ன தான் இரண்யனோட பிள்ளையா இருந்தாலும் லோக ஜீவன் எல்லாருக்கும் 'அவன்' தாங்க தந்தை. அதெப்படி...பிள்ளைக்கு ஒன்னுன்னா சும்மா இருந்திருவாரா?". "எல்லா அவதாரத்துலயும் சாந்தமாகவும், கொஞ்சம் அமைதியானவனா இருந்த விஷ்ணு, இந்த அவதாரம் மாதிரி ஆக்ரோஷமடஞ்சது கிடையாது. சும்மாவா...'பிள்ளைப் பாசம்'" என்றார் அவர். இந்தக்கதை ஒரே பிள்ளையை வெவ்வேறு விதமாக நேசித்த இரண்டு தந்தைகளுக்கான சண்டையோ என்று தோன்றத்துவங்கியது. அவர் தொடர்ந்தார் "ஆனா கஷ்டகாலம். இரண்யனுக்கு அவனோட மரணம் நெருங்கிடிச்சு. அது அவனுக்கு இன்னும் தெரியாது. ஆனா எனக்குத் தெரியும். அத ஊர்மக்களுக்கும் சொல்லியாகனும். நான் வரேன்..!" என்று புறப்படத்தொடங்கினார் அவர். அடுத்தவர் மரணத்தை இப்படி துல்லியமாக குறித்துவிட்டு, அதை அனைவருக்கும் அறிவிக்கவும் செல்லும் இந்த மனிதர் யாரென வியப்போடு கேட்டேன். அவன் என் கண்களை ஒருமுறை உற்று நோக்கி "நான் தான் எமண்" என்றான். தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்த்தேன். அவன் கரிய வர்ணம் பூசி, எமணுடைய ஒப்பனையில் இருந்தான். அவன் இரண்யனின் மரணச்செய்தியை அறிவிப்பதற்காக...ஊரின் எல்லா தெருக்களிலும் கூச்சலிட்டபடி கதவுகளைத்தட்டி ஒலியெழுப்பியபடி செல்கிறான். தற்காலிக மரணத்திலிருந்த தெருக்கள் உயிர்த்தெழுகின்றன. உறங்கப் போன இல்லத்தரசிகள், குழந்தைகள் எமணின் கூச்சல் கேட்டு எழுந்துவிடுகிறார்கள். யாருடைய கண்களிலும் படுவதற்கு முன்பாக எமண் தெருவைக் கடந்து விடுகிறான். ஆம்...யாருக்கு தான் எமணை நேரிடப் பார்க்க விருப்பம் இருக்கிறது சொல்லுங்கள்!. அரை விடியலில் அனைவரும் மேடையை நோக்கிச் செல்கிறார்கள். பெண்கள் குளித்த ஈரத்தலையுடன் பூஜைப் பொருட்களுடன் வந்து சேர்கிறார்கள். ப்ரதான பிரகலாதனும் இரண்யனும் அவரவர் ஒலிவாங்கியின் முன் நின்று பாடுகிறார்கள். நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஒரு பாய்த்தூண் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தூணின் பின் ஏற்கனவே மூர்க்கமேறிவிட்ட விஷ்ணு அச்சம் கொள்ளும் வகையில் சப்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தார். அவரது அசைவில் மேடையும் சற்று ஆட்டம் கொள்கிறது. பந்தல்காரர் ஒருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொள்கிறார். இரண்யனுடைய முகம் கடந்த இரவில் தர்பாரில் கண்டது போல் இல்லை. அவனது முகத்தில் இப்போது அச்சமும், கவலையுமே கூடியிருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாதபடிக்கு உரத்த குரலெடுத்து "எங்க இருக்கிறாண்டா உன்னுடைய விஷ்ணு" என்று கர்ஜித்து நிலத்தைக் காலால் உதைக்கிறான். பாய்த்தூணிலிருந்து உரத்த ஒலி வருகிறது. உள்ளே இருக்கும் நபர் ஏற்கனவே சன்னத நிலையில் இருக்கக்கூடும். விஷ்ணு தூணிலும் இருப்பான் துறும்பிலும் இருப்பான் எனும்படியாக பாடுகிறான் பிரகலாதன். இது தான் நாடக உச்சகட்டமென்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும், பதட்டத்துடனும், அச்சத்துடனும், அமைதியாகவும் எல்லாரும் தூணிற்கு பின்னிருக்கும் சப்த்தத்தால் கட்டுப்பட்டிருந்தனர். "அப்படியானால்...இந்தத்தூணிலும் இருக்கிறானா உன் விஷ்ணு" என்று எள்ளி நகைக்கிறான் இரண்யன். அவனது சிரிப்பில் சப்தம் இருந்தது, ஜீவன் இல்லை. "எங்கே இந்த தூணிலிருந்து வரட்டும்" என்று துணை உடக்க முனைகிறான். எந்தநேரத்திலும் விஷ்ணு வெளிப்பட்டு வந்துவிடக்கூடிய அபாயம் அறிந்து இரண்யன் பதட்டத்துடன் காணப்பட்டான். இரண்யனைக் காப்பாற்றுவதற்காக ஊர்மக்கள் சிலர் மேடையின் வாயிலில் தயாராக இருந்தனர். காலை வெயில் மேலேறத்துவங்கி இருந்த சமயம், தூணிலிருந்து ஆக்ரோஷமாக வெளிப்பட்டது நரசிம்ஹம். முகத்தில் கட்டப்பட்டிருந்த நரசிம்மப்பாவையுடன் இரண்யனை நோக்கித் துள்ளியது நரசிம்மம். சுமார் பத்து பேராவது வஸ்திரங்களைக் கொண்டு நரசிம்மரை இழுக்க வேண்டிதாயிற்று. இரண்யன் சிறு பிள்ளையைப்போல அச்சமுற்று ஆட்கள் பின்னல் ஒளிந்துகொண்டு அழத் துடங்குகிறான். இரண்யனைப் பார்க்கும் தோறும் நரசிம்மம் மூர்க்கம் அடைவதால், இரண்யனை அங்கிருந்து விலக்கிக் கூட்டிச்செல்கிறார்கள். எதையும் பார்க முடியாவண்ணம் பிரகலாதன் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். ரௌத்திரமேறிய நரசிம்மத்தின் கைகளில் சரசரமாக செவ்வந்தி மாலைகள் கொடுக்கப்படுகிறது. அதை இரண்யனுடைய குடலென பிய்த்து வாயிலிட்டு மெல்லத்துடங்குகிறார். மேலும் மேலும் மாலைகள் கொடுக்கப்படுகிறது. மேடை, தெருக்கள் எங்கும் செவ்வந்தி மாலைகளாக சிதறிக்கிடக்கிறது. ஒரு புராணக்காட்சி கண்முன்னே நடப்ப‌து போல ஊர்மக்கள் வாயடைத்துப் போய் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். சில குழந்தைகள் வ்ரீச்...என்று குரலெடுத்து கத்தத் தொடங்கினார்கள். சிறிதுசிறிதாக விஷ்ணு சாந்தமடையத் துடங்குகிறார். ஊர்மக்கள் சிலர் சுயம் மறந்து மயங்கி விழுந்தனர். மற்றவர்கள் தன்னிலைக்கு வருகிறார்கள். சாந்தமடைந்த நரசிம்மத்திற்கு ஆராதனை காட்டப்படுகிறது. தெருவெங்கும் சிதறிக்கிடந்த பூக்களைப் பெண்களும் பெரியவர்களும் சேகரித்து எடுத்து முடிந்து கொள்கிறார்கள். அது தங்களைக் துன்பங்களில் இருந்து காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். மிகவும் வயது முதிர்ந்த சிலர், 'அடுத்த வருஷம் கூத்துக்கு நான் இருக்க மாட்டேன்' என்று முணுமுணுத்த படி உருக்கமாக ப்ராத்திப்பதைக் கண்டேன். அனிச்சையாக எல்லோரும் சென்று அவர்காலில் விழுந்து ஆசி வாங்குகிறார்கள். இரண்யன் அழைத்துவரப் படுகிறான். அவன் இப்போது கிரீடம் இல்லாதவனக, கண்கள் வீங்கி, தன்னகந்தை உடைந்து காட்சியளிக்கிறான். நரசிம்மம் காலில் விழுந்து வெகுநேரம் முகம் புதைத்து அழுகிறான். இரண்யன் மேல் எல்லோருக்கும் மிகுந்த பாசம் கூடிவிட்டிருந்தது. நரசிம்மர் அவன் தலையைப் பற்றி ஒரு தந்தை போல ஆசி தருகிறார். அவன் நெற்றியில் செந்நிற திலகமிடுகிறார். அந்தக் காட்சி மனதை மிகவும் நெகிழ வைப்பதாக இருந்தது. ஊர் ஜனங்கள் கூடி அருகில் உள்ள ஒரு ஆலயத்துக்கு சென்று 'நரசிம்ம பாவை'யை வைத்து வழிபட்டு, கூத்தை நிறைவு செய்கின்றனர். *** சித்திரை மாதம். அனைவரும் வழிபாடு முடிந்து அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்கிறார்கள். நரசிம்மப்பாவையுடன் ஊர் ப்ராதானிகள் ஊர்வலமாக வந்தார்கள். நாடகக் குழுவிற்கு நண்பரது வீட்டில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடக குழுவினர் எல்லோரும் வந்து சேர்ந்தனர். இரண்யன் இன்னும் சோர்வாகவே காணப்பட்டார். கொடுத்த காப்பியைக்கூட வேண்டமென மறுத்துவிட்டார். பிரகலாதன் என்னிடம் வந்து கூத்து எப்படி இருந்தது என்று கேட்டார். நான் சொல்வதறியாது மிகுந்த கூச்சத்துடன் தலையசைத்தேன். நரசிம்மரும் மற்றுமொரு இரண்யனும் வெகுசாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர். எங்கே எமணைக் கானோம் என்று எல்லாரும் தேடிக்கொண்டிருக்க, எமணை அழைக்க ஆள் அனுப்பப்பட்டது. பந்தி துடங்கும் நேரத்தில் வந்து சேர்ந்த எமண், என்னைப் பார்த்தவாறே சென்றார். நான் எமணது பார்வையை புறக்கணித்தவனாக வெளிநோக்கி நடந்துகொண்டு வந்தேன். தெருவெங்கும் எருமைகள் கூட்டம் கூட்டமாக நின்று கத்தின. ஒரே பந்தியில் இரண்யர்களும், நரசிம்மரும், எமராஜனும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்னை எதுவோசெய்தது. சித்திரை வெயில் உச்சியில் காய்ந்து கொண்டிருக்க தெருவில் தனியே நடக்கத் தொடங்கினேன். மேடை அமைந்த இடம் ஒரு பாலைவனம் போல ஆளரவமற்று இருந்தது. வழியெங்கும் செவ்வந்திப் பூக்கள் சிதறிக்கிடந்தன. நடந்தவை எல்லாம் ஒரு கனவுபோல இருந்தது. இரவு ஆர்கஸ்ட்ராவிற்கு கண்விழிக்க வேண்டி மேடையருகே வெயிலையும் பொருட்படுத்தாமல் நசுருதீன் சவுண்டு சர்வீஸ்காரர் மட்டும் மல்லார்ந்து கிடந்து உறங்கிக்கொண்டிருந்தார். பாவமோ புண்ணியமோ யாதுமறியாது அவன் அவனது அடுத்த கருமத்திற்காக தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தான். மற்றுமொரு சிறுவன் வயர்களைச் சுருட்டிய வண்ணம் இருந்தான். ஐஸ் வண்டிக்காரர்கள் சப்தமும் டீக்கடைப் பாடலோசையும் வழக்கம் போல ஒலித்துக்கொண்டிருந்தன. நான் ஊருக்கான அடுத்த வண்டி எப்போது என்று விசாரிக்கத் துடங்கியிருந்தேன்.

திங்கள், 7 ஜூலை, 2008

வெகு நாள்களுகுப் பிறகு சில கவிதைகள்...

(காணாமல் போய்விட்ட ஷானுவின் கடிதங்களுக்காக...)

உல‌கில் க‌டைசி ம‌னித‌ன்
உயிரோடு இருக்கும் வ‌ரையில்
க‌விதை வாழும் !‍
க‌விக்கோ ~ அப்துல் ர‌குமான்.ஜ‌ன‌ நெரிச‌லும் விஞ்ஞான‌ க‌ருவிக‌ளும் அதிக‌ரித்து விட்ட‌ சூழ‌லில், அது ம‌னித‌ர்க‌ளுக்கிடையே ஆன‌ தூரங்க‌ளை குறைப்ப‌தை விட்டுவிட்டு அதை அதிக‌ரிக்க‌வே செய்திருக்கிற‌து. மகப்பெரிய தூரங்களை இணைக்க உதவிய தொழில்நுட்பம், மிகச்சிறிய இடைவெளிகளை நிலைநாட்டிக் கொள்ளும் சூட்சமத்தைக் கற்றுக்கொடுக்கவில்லை. அருகருகே நடந்தவாறு வரும் இரு நண்பர்கள் தத்தம் செல்பேசிகளில் வேறு எவருடனோ பேசிக்கொண்டு வரும் காட்சி, நம் மீது விழுந்த சாபக்கேட்டையே பரைசாற்றுகிறது. மிக அருகில் இருக்கும் மனிதனைப்பற்றிய எந்த அக்கரையும் இன்றி நம் சிந்தணைகள் அனைத்தும் எப்போதும் அகப்படாத ஏதோ ஒன்றில் தான் நிலைகுத்தி இருக்கிறது.

மறுதலிக்கப் பட்ட சம்பாக்ஷனைகளின் விளைவாக தனிமையில் பேசுதல் என்ற வசதி ஏற்படுகிறது. தனகுத்தானே பேசுதலின் ஒழுங்குபெற்ற வடிவமே கவிதை என்கிறார் மனுஷ்யபுத்திரன். தனித்து பேசும் கலாச்சாரம் அதிகரித்துவிட்ட ஒரு சமூகத்தில் கவிதையின் அத்யாவிசயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எவெனொருவனில் இருந்தும் ஒரு கவிஞன் பிரசவிக்க ஆயத்தமாகவே இருப்பதாகவே தெரிகிறது. வரும் காலங்களில் 'கவிஞன்' என்னும் பெயர்ச்சொல் மறைந்து போய் 'கவிதை' மட்டுமே நிலைபெற்றிருக்கும் என்றே தெரிகிறது. . .காற்றைப் போல!
************************************************
1.உடல் பெருத்தவர்கள்
==================உடல் பெருத்தவர்கள்
பெரும்பாலும் பொதுவிருந்துக‌ளில்
குறைவாக‌வே சாப்பிடுகிறார்க‌ள்

வேறு யாரும் முந்திக்கொள்ளும்
முன்பே த‌ங்க‌ளைத் தானே
எள்ளிக்கொள்வ‌து சௌக‌ரிய‌மாக‌வும்
பாதுகாப்பான‌துமாக‌ இருக்கிற‌து

ப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ
தாங்க‌ள் ஒரு த‌ட‌க‌ள‌ வீர‌ராக‌ இருந்த‌தை
அடிக்க‌டி ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம்

நினைவுப‌டுத்துகிறார்க‌ள்.

அவ‌ர்க‌ள்
ஆய‌த்த‌ ஆடை க‌டைக‌ளுக்கு
செல்வ‌தை த‌விர்த்து விடுகிறார்க‌ள்.
"அந்த‌ லாஸ்ட்டு ரேக்ல‌ பாருங்க‌" என்ற‌
புற‌க்க‌ணிப்பை த‌விர்ப்ப‌து கூட‌

கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்

அதிக‌ம்
ஒரே மாதிரி
க‌ருத்த‌ ஆடைக‌ளையே அணிகிறார்க‌ள்.

தாங்க‌ள் துவ‌ங்க‌ப் போகும்
காலை‍ஓட்ட‌த்தைக் குறித்தோ,
சேர‌ப்போகும் முத‌ல் ஜிம் நாளையோ
எதிர் நோக்கி காத்திருக்கிறார்க‌ள்

ஷேர் ஆட்டோவில் 2 இருக்கை;
சொகுசு பேருந்தில் இரட்டைக் கட்டணம்
செலுத்தச் சொல்வதற்கான ஆபத்தை எதிர் நோக்கி
பதட்டத்துடன் காணப்படிகிறார்கள்

இந்தக் கவிதைக்குப் பின்
கண்ணாடி முன் செல்ல நேர்கையில்
"நம்ம அப்படியொன்றும் குண்டாக இல்ல"
என்று சொன்னாலும் சொல்லலாம்.


*************************************************
2. குறைந்தபட்சம்
================


ஒரு கவிதை எழுதுவதற்கு
குறைந்தபட்சம் ஒரு சிகரட் அவசியப்படும் என்றால்
இந்த பிரபஞ்ச கவிதையின் எண்ணிகையில் ஒன்று
குறைவாகவே இருக்கட்டும் !

ஒருமணி நேரம் நண்பனிடம் பேச‌
பாருக்கு தான் போகவேண்டுமென்றால்
அன்று மௌனவிரத நாளாகவே
இருந்துவிட்டுப் போகட்டும் !

என் பிற‌ந்த‌ நாளை நினைவுப‌டுத்த‌
கண்டிப்பாக ஒரு புது சட்டை வேண்டுமென்றால்
அந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ வ‌ய‌து அதிக‌ரிக்காம‌லே போக‌ட்டும் !

இர‌வு உறக்க‌ம் கொண்டுவ‌ர‌
தாயின் அர‌வ‌ணைப்போ
காத‌லியின் முத்த‌மோ தேவைப்ப‌டுமெனில்
அது ம‌ற்றும் ஒரு உர‌க்க‌ம‌ற்ற‌ இர‌வாக‌வே இருக்க‌ட்டும் !


ஒரு புன்னகைக்காக ஒரு வழியலும்
கொஞ்சம் அன்புக்காக அதிக கீழ்படிதலும்
ஒரு சிறு தலையசைப்புகாய் நீண்ட காத்திரிப்பும்
அவசியம் வேண்டுமென்றால்...
வேண்டவே வேண்டாம்...
யாரொருத்தியின் அன்பும்!
எவெனொருவனின் ஆதரவும்..!

*************************************************


3. ஒவ்வொருமுறையும்
====================
நீ சரிசெய்து விடும்வரை
நான் சத்தியமாய் அறிந்திருக்க வில்லை
உன் முந்தானை சரிந்திருந்ததை !

*************************************************

4.

நிச்சயிக்கப் பட்ட
உன் விடுமுறை நாட்களில்
என் நிலைக் கண்ணாடிகளுக்கு
வேலை இருப்பதில்லை

என் உடைகளும் கூட
என் நிர்வாணத்தின் பொருட்டல்ல‌
உன் கண்களை முன்வைத்தே
தேர்ந்தெடுக்கப் படுகிறது...

உன்னில் காணும் என்னைவிட‌
எப்போதும் அழகாய் காட்டிவிடாத‌
என் கண்ணாடியை வெறித்தபடி நான்
உனதாகிவிட்ட என்னுடைய தினங்களை
நெற்றி மேல் ஒரு கற்றை முடியைப் போல‌
அழகாய் ஒதுக்கிவிட்ட படி நீ !

*************************************************
5.

அனைவரையும் அனுப்பிவிட்டு
மூச்சுவிட்டபடி வகுப்பறை இருக்கைகள்

எதிர்எதிர் பெஞ்சில்
கண்களையும் கண்களையுமே பார்த்து விளையாடும்
வினோத பால்யம் வாய்க்கப்பட்டவர்களாய் நாம்

முதலில் கண்சிமிட்டுபவர்கள்
தோற்றுவிட்டதாய் நாமே வரையறுத்துக்கொண்ட
கண்துடைப்பு விதிகள்

முதலில் நீ தோற்றுவிட்டால்
வெட்கத்தில் நீயும், வெற்றியில் நானும்
நான் தோற்பின்
குற்றவுணர்ச்சியில் நானும், பொய்கோபத்தில் நீயும்

காக்கைக‌ளும் க‌ரைய‌ எத்த‌ணிக்காத‌
அந்த‌ ச‌ல‌ன‌ம‌ற்ற‌ ம‌திய‌ங்க‌ளில் நீயும் நானும்

இருவ‌ருக்கும் ந‌டுவில்
ப‌டிக்க‌க் கொண்டுவ‌ந்த‌ புத்த‌க‌மும்
காற்றில் ப‌ட‌பட‌த்த‌ப‌டி!


*************************************************
6. தனிமையில் பேசுபவர்கள்
=======================


உனக்குத் தெரிந்திருக்க ஞாயம் இல்லை
தனிமையில் பேசுபவர்கள்,
பேச ஆளற்றிருப்பவர்கள் வார்த்தைகள்
கவிஞனுடையதைவிட தேர்ந்த ஒன்றாக இருக்கிறது

வெறுமையின் நாவுகள் வழியாக
உமிழ்கிறது யாருக்கும் அற்ற கவிதைகள்

பேச ஆள்தேடி அலைவதைக் காட்டில்
இது அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது

அறைந்து சாத்தும் ஜன்னல்கள் கூட
புறக்கணிப்பையே நினைவுபடுத்துகின்றன

அந்தி இருளத்துடங்கும் வானில்
கூட்டம்விட்டுத் தொலைந்த
ஒற்றைக் காக்கையின் கரைதல் சத்தம்
அழுகையைக் கூட்டுகிறது

இதையத்தின் நீள்சுவர்களில்
எதிரொலிக்கும் அந்த‌ பெருத்தகுரல்
என்னை எவ்வளவு பலவீனப் படுத்துகிறது தெரியுமா

உனக்கு தெரிந்திருக்க ஞாயம் இல்லை!


************************************************
7.


என் கவன ஈர்ப்பு தீர்மாணங்கள்
தோல்வியைத் தழுவுகையில்
உன் விரல் ஸ்பரிஸங்களில்
முறியடிக்கிறாய்......
என் நம்பிக்கையில்லா தீர்மாணங்களை!


************************************************
8.


கவனித்திருக்கிறாயா...
நாம் எவ்வளவு நெருக்கத்தில்
நடக்கும் போதும்
தொட்டுக்கொள்வதே இல்லை!

உன் காரணமற்ற விலகுதலுக்கும்
கேள்விகளில்லா நெருக்கத்திற்கும்
நான் பழக்கப் பட்டவனாகவே இருக்கிறேன் !

எவ்வளவு பெரிய ஜன நெருக்கடியிலும்
சிரமம் இல்லாமல் உன்னைக்
கண்டுகொள்ள முடிகிறது
என்னால்..
என்னை உனக்கும்!

மற்ற அழகிய
பெண்களைப் பற்றிய பேச்சின்போது
உன்னுடைய முகச்சுழிப்பு
நான் எதிர்பாராரதாக இருக்கிறது!

நம் சந்திப்புகளின் நடுவேகடக்கும்
நண்பர்களைக் கண்டு நீ பதட்டப்படுவது
எனக்கு அவமான உணர்வை ஏற்படுத்துகிறது...

நம் உரையல்களின் நடுவே...
குறுக்கிடும் செல் அழைப்புகளை
நீ செல்லமாய்த் துண்டிப்பது
எனக்கு கர்வத்தை அளிக்கிற‌து !

அடுத்த முறையாவது
நீ நிராகரித்த,
காதல் கடிதங்களைப் பற்றி
பேசுகையில்
என் கண்களைப் பார்த்து பேசு !


நான் எப்போதாவது
வாங்கிக்கொடுக்கும் மிட்டாய் உறைகளை
சேகரிப்பதை இன்றோடு நிறுத்திக்கொள்!


நான் இன்னும் உனக்காய்
கரடி பொம்மைகளைத் தேடி சேக‌ரிக்கிறென்...
உன்னுடைய எதிர்பார்ப்பு
ஒரு பூங்கொத்தாக இருக்கிறது!

என்னை உன் கனவுகளில்
என்னைக் கண்டிருந்தாலும்
என்னிடம் சொல்லாதே...
என் இர‌வுகளின்
உன் வாயில்க‌ளை நான்
என்றோ அறைந்து சாத்திவிட்டேன்!

விரைவில் நாம்
ப‌ரிமாரிக்கொள்ளும் செய்திக‌ள்
முன்பெதையும் விட‌
துக்க‌க‌ர‌மான‌தாக‌ இருக்க‌க் கூடும்...

நான் க‌விதைக‌ளில் நாட்ட‌மில்லாத‌
ஒருத்தியுட‌ன் உட‌ன் போக்கு கொள்கிறென்!
நீ எனக்கு முக‌ம் தெரியாத‌ ஒருவ‌னுட‌ன்
திரும‌ண‌ம் செய்துகொள் !!

*************************************************

வெள்ளி, 9 மே, 2008

புரட்சிக்கு அப்பால் !

இன்று :
மணி 9.00
நல்ல மழை... தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அவன் வீட்டிற்கு எப்போதும் நடந்து செல்வதே வழக்கம். இன்று ஷேர் ஆட்டோவில் ஏற வேண்டியதாயிற்று. ஏற்கனவே ஒரு 9 பேர் இருப்பார்கள். ஆண்கள் பெண்கள் பேதமற்று வெறும் மாமிச மூட்டைகள் போல எல்லோரும் திணித்துக்கொண்டிருந்தனர். அவன் சென்னை ஷேர் ஆட்டோ வில் பெண்களுடன் பயணித்தது போல தன் காதலிகளுடன் கூட அவ்வளவு நெருக்கத்தில் பயணித்ததில்லை. நடந்து போய்விடலாம் என்று சொன்னாலும் நண்பன் கேட்பானில்லை. வீட்டருகே வந்ததும் ஆட்டோக்காரர் ஆளுக்கு பத்து ரூபாய் தருமாறு சொன்னான்.

நண்பன் வழக்கமாக 5 கொடுப்பது தான் வழக்கம் என்றான். அவனிடம் சொற்போர் புரிவதாகிவிட்டது. மழ பேஞ்சா 10 ரூபா, கலவரம்னா 50 ரூபா...அடிபட்டு கெடந்தா சொத்தெழுதிக் கேப்பீங்க...போ யா போ... மத்தவனோட கஷ்டத்துல திங்கோனும்னு நெனைக்கர இல்ல... நல்லா இருப்ப.. போ என்றான். ஏதோ தமிழ் சினிமாவில் வரும் கிளிஷே காட்சிபோல இருந்தால் மன்னிக்கவும். அப்படி அவன் நடந்துகொள்வதாக முன் ஏற்பாடு ஏதுவுமில்லை. அதற்கு ஆட்டோக்காரன் எப்படி நடந்துகொண்டிருப்பான் சொல்ல வேண்டியிருக்காது. அதற்குள் நண்பர் மாப்பி

அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். மக்களின் இக்கட்டான சூழ்நிலையை காசாக்கும் இவன் மிகக் கொடூரமாணவனாக தெரிந்தான். அவசர காலங்களில் தனது தேவை அவசியம் என்று தெரியும் போதுதானே அவனுடைய உண்மையான ஊழியத்தை காட்டவேண்டும். சமீபத்தில் வாகன விபத்தை சந்தித்த ஒரு நண்பனை ஒரு ஆட்டோக்காரர் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்து, வீட்டிற்கும் அறிவித்து விட்டு ஒரு காசும்
வாங்காமல் சென்றுவிட்டார். இலவசமாக உழியம் செய்யாவிட்டாலும் கிடக்கிறது, குறைந்தபட்சம் ஞாயமானமுறையிலாவது நடந்துகொள்ளலாம் இல்லையா?" என்றெல்லாம் மாப்பியிடம் புலம்பியபடி வந்தான்.

நண்பர் "உடுங்க...உடுங்க " என்றே சொல்லிக்கொண்டு வந்தார். சாலையில் எல்லோரும் அவன் ஏதோ போதையில் கலாட்டா செய்யும் தோரணையுடன் பார்க்கிறார்கள்.

நண்பர் அவனை Eccentric என்றான்.

*--------------------*

இரவு மணி 10.00.

நேற்று இதே நேரம் இருக்கும். அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை அவிழ்த்திருப்பேன். இன்று இரவு உறக்கம்
விழித்து இதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். படித்து முடிக்கப்பட்ட அந்த புத்தகம் மாமிசம் உண்டு படுத்துக்
கிடக்கும் ஒரு வெற்றிப்புலியைப் போல என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் இவ்வளவு வேகமாக எந்த

புத்தகதையும் படித்ததில்லை. தோழர் கௌதம், நண்பர் எம்.எஸ், தோழி அனு எல்லாம் ஒரு இரவில் ஒரு 300
பக்க நாவலையும் வாசித்து விடுவார்கள். எப்போதும் என்னுடைய வாசிப்புவேகத்தை அவர்களிடம் கூறி
குறைபட்டுக் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நான் அசுர வேகத்தில் ஒரு இரவில் இதைப் படித்து முடித்ததன்
காரணம் எனக்கே விளங்கவில்லை. மேற்கூறிய சம்பவத்துடன் சேர்த்து இன்றைய‌ நாள் முழுவதும் என்னை ஏதோ
நிம்மதியற்று இருக்கச் செய்தது. மிகச்சிறிய காரணங்களுக்காக நண்பர்களிடம் கடுமையாக பேசினேன். காரணமற்ற
கோபமும்,தீராக்கவலையும் என்னைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருந்தன. யவரிடமும் பேச பிடிக்கவில்லை.
இப்படி Chain reaction போல ஒரு பாதிப்பை ஏற்படுத்திய அந்த புத்தகம் க்யூபன் புரட்சியாளன் சேகுவேரா
வாழ்வைப் பற்றியதாகும்.

திடீரென்று சுற்றியிருக்கும் குற்றங்களெல்லாம் சுர்ர்ர்ர்ரென்று உரைக்கத்துடங்கின. சமூகத்தின் பல செயல்கள்
மீது நாம் சாதிக்கும் மௌனத்தின் அர்த்தம் பிடிபடவில்லை !.

*--------------------*

அர்ஜன்டினாவின் குளிர் கால வானின் கீழ் ஒரு பெண்மணி தனது பலவீணமான பிரியத்துக்குறிய
கைக்குழந்தையுடன் நடந்து கொண்டிருக்கிறாள். குளிர் கொள்ளவியலா அந்த குழந்தை நடுங்கத்துடங்குகிறது.

பதறிப் போன அவள் வீட்டிற்கு விரைகிறாள். மருத்துவர்கள் குழந்தைக்கு ஆஸ்த்துமா இருப்பதாக
சந்தேகிக்கிறார்கள். அக்குழந்தையின் நிலைக்கு தானே காரணம் என கவலையுறுகிறாள் அந்த தாய். அக்குழந்தை
படும் துன்பம் யாவும் தன்னாலே தான் என கற்பிதம் கொள்கிறாள். அவனது எதிர்காலம் பற்றி கவலை
கொண்டவளாகவே இருக்கிறாள். அந்த பலவீணமான மகன் அன்னையின் நீங்கா அரவணைப்பிலேயே வளர்கிறான்.
10 வயதிருக்கும்... அவன் தாயிடம் எதோ அரசியல் பற்றிய சந்தேகத்தைக் கேட்க அவனை அடுப்படியில்
அமரவைத்து தனது அரசியல் அறிவையும் உணவுடன் சேர்த்து புகட்டுகிறாள். அச்சிறுவன் அதன் எதிர்கால
முக்கியத்துவம் தெரியாமல் அன்னையிடம் உபதேசம் பெற்றுக்கொண்டிருக்கிறான். இப்படித் துடங்குகிறது தோழர்
சேகுவேராவின் வரலாறாய் மாறிப்போன வாழ்கை.

நான் சேகுவேராவின் சரித்தரத்தை பற்றியோ, சாகச வாழ்வைப் பற்றியோ, தியாகத்தைப் பற்றியோ எழுத
முனையவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. (ஏற்கனவே கூகிள் தேடியந்திரத்தில் 'சேகுவாரா' என்று
தட்டச்சினால் 11,800 இணைய பொருந்துதல்கள் வருகிறது.

இந்த புத்தகத்தை படித்து முடித்த ஒரு நண்பன் இரவு நாள் 11 மணிக்கு செல்பேசியில் அழைத்து ஒன்றரை
மணிநேரம் தனது வியப்பையும் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
மற்றுமொரு நண்பன் ஒரு வார இதழில் வெளிவந்த சே வின் இறுதி தொடரைப்படித்துவிட்டு ஒரு நள்ளிரவில் செல்பேசியில் அழைத்து "... சே அப்படி வாழ்ந்ததுக்கு..அவரை தக்க மரியாதயோட கொன்னிருக்கலாம்... ராணுவம் கைது செய்து வரும் புகைப்படத்தில் மரணம் அவர் கண்ணுல தெரியுதுங்க‌...தோத்துட்டம்னு ஒத்துகிட்டமாதிரி இருக்கு...வேணாம்... நமக்கு தெரிந்த சே ஒரு வெற்றிவீரனாகவே இருக்கட்டும்" என்றான். என்ன செய்வது நம்மவர்கள் எல்லாம் இப்படியே பூமனசுக்காரர்களாகவே இருக்கிறார்கள். நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் 'சே' வின் மரணம் 'இல்லை'யென்று ஆகிவிடப்போகிறதா என்று நான் அவனை அப்போது கேட்டிருக்க முடியாது.

சரியாகப் பார்த்தால் சாதாரண பலவீணங்கள் நிறைந்த ஒரு சாதாரண மனிதன் தான் 'சே'. அவனது வாழ்விற்கு
சரித்திர முக்கியத்துவம் கொடுத்தது ப்ரத்யேகமாக ஒரு 10 வருடங்களே இருக்கும். தனது 28வது வயதில்
கிரன்மாவில் தனது எதிர்திசையில் வரும் வீரர்களைப் பார்த்து யாரென வினவுகிறார். "நாங்கள் க்யூபாவில்
ராணுவத்திற்கு எதிரான போரில் தோல்வியுற்று வருகிறோம். ஆனால் எங்களுக்கு கவலையில்லை நாங்கள்
கண்டிப்பாக வெற்றிபெறுவோம் " என்கின்றனர். ராணுவத்திற்கு எதிராக போர்புரிய இங்கு ஆள் இருக்கிறதா என்று
அவருக்கு குழப்பம். "உங்களை யார் வழிநடத்துவது" என்று கேட்கிறார். அவர்கள் "தோழர் ஃபிடெல் கேஸ்ட்ரோ"
என்று சொல்லி மறைகிறார்கள். கேஸ்ட்ரோ என்ற மனிதனின் மீது அளவுகடந்த பிரியமும் ஈர்ப்பும் ஏற்படுகிறது.

தன் அம்மாவிற்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடுகிறார் 'ஃபிடெல் என்னை ஈர்ததுவிட்டார். இனி அவர் வழிதான்
என்வழி. இனி எனக்கு வாழ்வானாலும் மரணமானாலும் அது ஃபிடலுக்காக தான்' என்று.
அனைவரையும் வசீகரித்த 'சே' வைக் கவர்ந்த ஃபிடலின் மீது 'சே' வைப்போல வெளிச்சம் படரவில்லை. அவர்
இன்னும் உயிருடன் இருப்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் ஃபிடல் ஒரு சிறந்த ராஜதந்திரி,
அரசியல்வாதி,ஒரு நிகரற்ற தலைவன் மற்றும் போராளி. க்யூபாவுடன் ஃபிடலின் தேடல் நின்று போனது.

பல்வேறு காரணங்களால் 'சே' க்யூபாவை விட்டு வெளியேறியதும், சுதந்திர வெளிச்சம் படாத தேசங்களுக்காக
போராடப் போவதாக அவர் பிரகடணப்படுத்திக்கொண்டதும் அவரை உலக அளவில் பிரபலப் படுத்தியது. அனைத்து
தேச மக்களும் தனக்காகவும் ஒரு நாள் 'சே' போராட வருவார் என்று நம்பினர், அவர்கள் 'சே' வை ஒரு
சகோதரன் போலவே எண்ணினர். ஃபிடல் அடைய முடியாத மக்களுடனான நெருக்கம் சே விற்கு சாத்தியப்பட்டது.

அவர் எழுதிய தனது கடைசி கடிதங்கள் மிகவும் குறிப்பிடித்தக்கதும், பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. ப்ரத்யேகமாக சொந்த மொழிப்பெயர்ப்பில் இவை:

குழந்தைகளுக்கு எழுதியது:
========================

"அன்புக் குழந்தைகளே,

நீங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். ஞாயமாக சொல்லப்போனால் என்முகம் கூட உங்களுக்கு நினைவிருக்காதென்றே நினைக்கிறேன்.

உங்கள் தந்தை தன்னுடைய நம்பிக்கைகளின் வழி நடப்பவனாகவே வாழ்ந்தான். அவனது கொள்கைகளுக்கு மிக விசுவாசமாகவும் இருந்தான். நீங்கள் சிறந்த புரட்சியாளர்களாக வளருங்கள். தொழில்நுட்பத்தை கற்கவேண்டும். அதுவே இன்னல்களைக் களைய உங்களுக்கு உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சி தான் முக்கியம் குழந்தைகளே!. நாம் அனைவரும் தனியாளாக பிரியோஜனமற்றவர்கள்.

உலகில் எந்த மூலையில் யாருக்கேனும் தீமை நடந்தாலும், அவர்கலுக்காக வருத்தப்படுங்கள். அதுவே ஒரு புரட்சியாளனின் மிக அழகான குணாதிஸயம். இப்போதும் உங்களைக் காணவே ஆர்வமாக இருக்கிறேன். ஒரு நீண்ட முத்தத்துடன் உங்களை வாரி அனைத்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு அப்பா."

மூத்தவள் ஹில்திதாவுக்கு எழுதியது:
=================================

"மிகுந்த பாசத்திற்குரிய ஹில்திதா,

இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் கடிதம், உனக்கு வெகு தாமதமாக கிடைக்கும் என்பதை நான் அறிவேன்.


நான் உன்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன் கண்ணே!. இன்றைக்கு உன்னுடைய பிறந்தநாள், நீ மிகவும் சந்தோஷமாகவே இருந்திருப்பாய் என நம்புகிறேன். நீ இப்போது பெரியவளாகிவிட்டாய், கிட்டத்தட்ட ஒரு இளங்குமரியாகி விட்டிருப்பாய். உனக்கு என் செல்லக்குட்டிகளுக்கு எழுதுவதைப் போல எழுதமுடியாது,
விளையாட்டாக...அற்ப விஷயங்களைப் பற்றி எல்லாம்.

உனக்குத் தெரியும் நான் வெகு தூரத்தில் இருக்கிறேன், இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது நம் எதிரிகளை எதிர்த்து. அதற்காக நான் பெரியதொரு செயலைச் செய்துவிட்டதாக சொல்ல மாட்டேன். ஆனால் நான்
உங்களை எண்ணி பெருமைப்படுவதைப் போலவே, உன் தந்தையும் நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இருப்பேன் என்றே நம்புகிறேன்.

இன்னும் போராட்டம் பாக்கியிருக்கிறது. நீ பெரிய பெண்மணியானாலும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அதற்கு உன்னைத் தயார்படுத்திக்கொள். உன் தாயின் சொல்படி கேள். நீ செய்யும் காரியத்தில்
சிறப்பாக வர எப்பவும் முயற்சி செய்.

உன் வயதில் நான் அப்படியெல்லாம் இருக்கவில்லை தான். ஆனால் நாங்கள் வாழ்ந்த சமுதாயம் வித்தியாசமானது. அங்கு மனிதனே மனிதனுக்கு எதிரியாக இருந்தான். அப்படி இல்லாமல் நீங்கள் வேறு ஒரு சூழ்நிலையில் வாழ ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள். அதற்கு நன்றியாக இருங்கள்.

மற்ற குழந்தைகள் மீதும் உனது கவனத்தை வைத்துக்கொள். அவர்களை நன்றாக படிக்கவும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவும் அவர்களுக்கு அரிவுறைப்படுத்து கண்ணே!. அதிலும் அல்திதாவிடம் அதிகம் கவனம் செலுத்து. அவள் உன்மீது அதீத பாசத்தோடு இருக்கிறாள்.

சரி எனது சீமாட்டியே. மீண்டும் பிறந்தநாள் வாழ்துக்கள் உனக்கு. இன்று உன் தாயையும், ஜினாவையும் ஒருமுறை சென்றுபார். நாம் அடுத்த முறை பார்க்கும்வரைக்கும் நினைவுகொள்ளக்கூடிய ஒரு நீண்ட நெருக்கமான அடைப்புடன் விடைபெறுகிறேன்.

இப்படிக்கு அப்பா."

பெற்றோருக்கு எழுதியது:
=======================


"என் பிரியத்துக்குரிய முதியவர்களே!

மீண்டும் என் பாதங்களுக்கு அடியில் ரோசினேன்ட் குதிரையின் மெல்லிய எலும்புகளை உணர்கிறேன். எனது கேடையத்தை கையில் ஏந்தியபடி. ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்பாக இதேபோல் ஒரு பிரிவுரை கடிதத்தை
எழுதினேன். அப்போது நான் வருத்தப்பட்டிருந்தேன் 'நான் சிறந்த போராளியகவோ, மருத்துவனாகவோ இருக்க லாயக்கில்லை என்று'. மருத்துவம் எனக்கு எப்போதும் ஆர்வமூட்டக்கூடியாதாக இருந்ததில்லை. ஆனால் இப்போது நான் அவ்வளவு மோசமான போராளி யொன்றும் இல்லை!.

ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை, முன்பைவிட சற்று விழிப்பாக இருக்கிறேன் அவ்வளவுதான். எனது மார்க்ஸியம் ஆழமானதாக மாறியிருக்கிறது. அது என்னைப் புனிதமடைய செய்திருக்கிறது. ஆயுதப்புரட்சி மட்டுமே தங்கள் சுதந்திரத்தை விரும்புபவர்களுக்கு ஒரே தீர்வு. நான் எனது நம்பிக்கைகளில் தெளிவாக இருக்கிறேன். பலர் என்னை ஒரு சாகசக்காரன் என்கின்றனர். இருக்கலாம்...ஆனால் சற்று வித்தியாசமானவன், தான் நம்பும் உண்மைக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவன்.

இதுவே எனது முடிவாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. சில நேரங்களின் என் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று அறிந்திலன், மற்றபடி நான் உங்களை மிகவும் நேசித்தேன். நான் எனது செயல்களில் சிலசமயம் இருமப்போடு நடந்துகொண்டிருக்கிறேன், சிலசமயங்களில் உங்களால் என்னை புரிந்துகொண்டிருக்க முடியாது.
அது உங்கள் தவறல்ல‌. என்னைப் புரிந்து கொள்ளுதல் எப்போதும் எளிதாக இருந்ததில்லை.

நான் இப்போது ஒரு ஓவியத்தைப்போல என்னைத் தயார்படுத்தியிருக்கிறேன். எனது தன்னம்பிக்கை, நடுங்கும்
எனது கால்களையும், சோர்வுற்ற எனது நுரையீரலையும் எதிர்த்து போராடவல்லது.

20ம் நூற்றாண்டின் இந்த சிறிய போராளியை அடிக்கடி நினைவு கொள்ளுங்கள்.

இந்த அடங்காப்பிடாரி தறுதலைப் பிள்ளை கடைசிமுறையாக‌ உங்களை ஆறத்தழுவிக்கொள்கிறான். ஏற்றுக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு
எர்னெஸ்டோ."

தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் "நீங்கள் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு தகப்பனாக தான்
நான் வாழ்ந்திருக்கிறேன் என நம்புகிறேன்" என்று கூறுகிறார். இவ்வாறு எத்தனை தகப்பன்களுக்கு
சொல்லிக்கொள்ள முடியுமோ தெரியாது. தனது பெற்றோருக்கு எழுதும் கடைசி கடிதத்தில் "நீங்கள்
விருப்பப்பட்டது போல நான் எப்போதும் நட்டந்துகொண்டதில்லை. இந்த அடங்காப்பிடாரி தறுதலைப்பிள்ளை
உங்களை கடைசியாக ஆறத்தழுவிக்கொள்கிறேன்" என்று ஒரு சிறு பிள்ளையென உடைந்து விழுகிறார்.
ஒரு குழந்தையின் பணிவோடும், ஒரு பொறுப்பு மிக்க தகப்பனாகவும் 'சே' வை தரிசிக்க வைக்கிறது இக்கடிதங்கள்.

*-----------------------------------*

சமீபத்தில் எழும்பூர் கவின்கலைக் கல்லூரியில் நடந்த தமிழ் இலக்கியத்தை மையப்படுத்தி, அதில் ஃப்ரெஸ்கோ ஓவியம் பயிலச்செயும் செயலரங்கில் கலந்துகொள்ள வந்த ஒரு மாணவன் என் அறையில் தங்கியிருந்தான்.
பயிலரங்கில் கலந்துகொள்வோருக்கு ஐம்பெருங்காப்பியங்கள் பதிப்பு பரிசாக கொடுக்கப்பட்டது. பணி முடிந்த இரவுகளில் அதில் வரும் பாடல்களை அவனுக்கு படித்துக்காட்டி பொருள் கூறிக்கொண்டிருப்பேன். அவற்றில் சில
அவன் ஓவியமாக வரைந்து சென்றான். அறையை விட்டுச்செல்கையில் தூக்கிச்செல்ல சுமையாக இருக்கிறது என்று எண்ணியோ, இல்லை இதைவைத்து என்ன செய்வதென்று தெரியாமலோ அப்புத்தகங்களை எனக்கே
கொடுத்துச் சென்றுவிட்டான். சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை படிக்க எடுத்தேன். அது...

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்
தீதும், நன்றும், பிறர் தர வாரா
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே!
இனிது என மகிழ்ந்தன்றும்
இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடுமாறி,
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
ஆகையால்,பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! "

இதில் வரும் ஒவ்வொரு வரிக்கும் உதாரணமாகவே சே வாழ்ந்ததாக எனக்குப்பட்டது. தமிழன் சொன்ன மனிதனின் வாழிமுறையை ஏதோ ஒரு அர்ஜன்டினன் செப்பனாக வாழ்ந்துகாட்டிவிட்டான்.

*------------------------------*

பொலீவியாவில் அவர் கைப்பற்றப்பட்ட போது மிகவும் சிதிலமடைந்த ஒரு இடத்தில் சிறைவைக்கப் பட்டிருந்தார். அப்போது அவருக்கு உணவளிக்க அந்தப் பள்ளி ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரிடம் 'சே' "இது
என்ன இடம்" என்று கேட்கிறார்.

அதற்கு அந்தப் பெண்மணி "இது ஒரு பள்ளி ஐயா!" என்கிறார்.

"பள்ளியா... இப்படிப்பட்ட இடத்திலா குழந்தைகள் படிக்கிறார்கள்?... எங்கள் புரட்சி வெல்லும்போது கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த பள்ளிகளைக் கட்டித்தருவோம் " என்கிறார், இன்னும் மிக‌விரைவில் அவ‌ர் செத்துவிட‌
வாய்ப்பிருப்ப‌தை தெரிந்திரிந்தும்.

அவ‌ரைத் தீர்த்துக்க‌ட்டுவ‌த‌ற்காக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட சிப்பாய் "உன்னுடைய‌ மார்க‌ண்டேய‌த்த‌ன‌த்தை ப‌ற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாயா?". என்றான்.
அவ‌ர் "நான் புர‌ட்சியின் நிலைபெற்றிருத்த‌லைப் ப‌ற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்" என்றார். "என‌க்குத்
தெரியும் நீ என்னைக் கொள்வ‌த‌ற்காக‌ தான் வ‌ந்திருக்கிறாய் என்று. சுடு கோழையே... நீ சுடுப்போவ‌து ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னைத்தான். சேகுவேராவை அல்ல‌!" என்கிறார்.

சிப்பாய் த‌னது துப்பாக்கியால் அவ‌ர‌து கால்க‌ளிலும், கையிலும் சுடுகிறான். தான் ஒலி எழுப்பிவிடாம‌ல் இருக்க‌ த‌ன‌து ம‌ணிக்க‌ட்டை இறுக்கி க‌டித்த‌ப‌டியே கீழே விழுகிறார். இந்த‌முறை குண்டு அவ‌ர‌து மார்பில் பாய்ந்து
ம‌ர‌ண‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌து.

'சே' கூறியதைப் போலவே மறித்தது என்னவோ 'சே' என்னும் மனிதன் மட்டுமே. "காளா! உன்னை சிறுபுல்லென மதிக்கிறேன். என் காலருகே வாடா! உன்னை மிதிக்கிறேன்... " என்கிறார் பாரதி. புரட்சியாளர்கள் எல்லாம் அடிப்படையில் ஒரே போலதான் இருக்கிறார்கள். அவரவரது கால்கள் பூமியைத் தொட்டுக்கொண்டிருப்பது மட்டுமே சிலரது இருப்பை நிரூபிக்கிறது. ஆனால் சரித்திரத்தால் எப்போதும் நிலைபெற்றிருக்ககூடிய immortality வெகுசிலராலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தனக்கும், தான் நம்பிய கொள்கைக்கும், உலகில் எந்த மூலையில் வாழும் சக மனிதனுக்கும் அன்பை செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இங்கு நம்மூரில் புரட்சி என்ற பேருக்கு மதிப்பே கிடையாது. புரட்சி என்று எதன்பெயரால் சொல்லப்படுகிறது என்று தெரியாமலே அதை சூட்டிக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் தயங்குவதில்லை. 'புரட்சி' த்தலைவர்,
'புரட்சி'த்தலைவி, 'புரட்சி'க்கலைஞர் இப்படி எத்தனையோ. இதில் ஒரு வளரும் அரசியல்வாதி ஒருவருக்கு 'தென்னகத்தின் சேகுவேரா' என்று வேறு போஸ்டர் அடிக்கிறார்கள். புரட்சியின் வாசனைகூட தெரியாத இவர்கள்,
அதை அவமதிப்பதையாவது தவிற்கவேண்டும். சில நேரத்தில் வேடிக்கையாக தான் இருக்கிறது. சாதரணமாக ஒரு தனிமனிதனுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தப்படுவதே ஒரு சாகசமாக நம்முள் அங்கீகாரம் பெறுவதான அவலம் கண்டிபாக வரவேற்கத்தக்கதல்ல.


மனித உரிமைகள் எதன் பெயரால் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத மனித உரிமைப் போராளி. சே பின்பற்றத்தக்க வாழ்கையை வாழ்ந்தாரா என்று என்னால் தீர்கமாக சொல்லமுடியாது. ஆனால் அனைவரும் வாழவிரும்பும் ஒரு வாழ்கையை வாழ்ந்துவிட்டிருக்கிறார் என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன். அதனால் தான் இன்னும் அனைவராலும் வசீகரிக்கப்படும் ஒப்பற்ற தலைவனாக நிலைத்திருக்கிறார்.

சனி, 19 ஏப்ரல், 2008

யாரலும் காதலிக்கப் படாதவர்கள்...


"என்னோடு
தேநீர் அருந்த
ஒப்புக்கொண்டதற்கு
மிகவும் நன்றி

நீங்கள் என்னைக்
காண வந்திருப்பதை அறியும்போது
கூடுதலாக மகிழ்ச்சிய‌டைகிறேன்

உண்மையில்
நாம் சந்தித்து
நீண்ட நாட்கள் ஆகிவிட்டண‌

ஆரம்பத்திலிருந்த இறுக்கமோ நெருக்கமோ
இப்போது நம்மிடமில்லை

வ‌ந்து சேர்ந்த‌ க‌டித‌த்தின் வெறுமையையும்
அழைக்க‌ப்ப‌ட்ட‌ தொலைப் பேசியின் மௌன‌த்தையும்
என்னைப் போல‌வே நீங்க‌ளும் அறிய‌க் கூடும்.

வ‌ழ‌க்க‌த்தைவிட கூடுத‌லாக‌ ந‌ல‌ம் பாராட்டுகிறீர்க‌ள்
இது என‌க்கு அச்ச‌த்தைக் கொடுக்கிற‌து
மேலும் உங்க‌ள் முக‌த்தில் அதிக‌மான‌
குதூக‌ல‌த்தையும் காண்கிறேன்

என‌க்குத் தெரியும்
இந்த‌ச் செய்தி
இதுவ‌ரை நீங்க‌ள் கொண்டுவ‌ந்த‌திலேயே
துய‌ர‌மான‌தாக‌ இருக்க‌க்கூடுமென்ப‌து !".

ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை மொத்தமாக புத்தகம் வாங்குவதில் எனக்கு தொடர்ந்து தொந்திரவு இருந்து வருகிறது. ஒன்று தோள் வலிக்க சுமந்துவரக் கூடிய துரம். மற்றொன்று, ஒவ்வொருமுறையும் நான் விருப்பப்படாமல் வந்து ஒட்டிக்கொள்ளும் சிறு புத்தகங்கள். ஆள் மாறி கொடுக்கப் பட்ட முத்தத்தைப் போல, இவை அன்பற்றும், சுவையின்றியும் வாசிக்கப் படுகிறது. அப்படி இம்முறை மாட்டிக்கொண்ட புத்தகத்திலிருந்து சிலவற்றை...

"என் எளிய பரிசுகளை
நீ மறுக்கும் பொழுது
அதனைத் திருடி வந்தவன் போல
அவமானமடைகிறேன்

என் நீண்ட காத்திருப்பை
நீ புறக்கணிக்கும் சமயம்
புதிதாக கால்களை இழந்தவனாய்
திரும்பப் போகிறேன்

என் ப்ரிய விசாரிப்புகளை
நீ நிராகரிக்கும் கணம்
தீராத வியாதிக்காரணாய்
மாறிப் போகிறேன்"

எந்தக் கவிதையையும் இப்படி இருக்கிறது என்று நிலை தூக்கிப் பார்க்க நான் விரும்பவில்லை...

கவிதை...
வெறும் கவிதை தான்
வேறொன்றுமில்லை...
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
ச‌மாதான‌ம் நிர‌ம்பியும்
க‌ண்ணீர‌ற்றும்
ஒரு பெண் கூட‌
இன்னும் ப‌டைக்க‌ப்ப்ட‌வில்லை !
யாராலும் காத‌லிக்க‌ப் ப‌டாத‌வ‌ர்க‌ள்
மிகுந்த குற்ற‌வுண‌ர்வோடு ந‌ட‌மாடுகிறார்க‌ள்

பெண்க‌ளைப் பார்க்கும் பார்வையில்
பேராசையும் அவ‌ந‌ம்பிக்கையும் க‌ல‌ந்திருக்கின்ற‌ன‌

உறுத்தும் த‌னிமையால்
பூங்காக்க‌ளையும் க‌ட‌ற்க‌ரையையும்
த‌விர்த்துவிடுகிறார்க‌ள்

ஜோடியாக‌ க‌ட‌ப்ப‌வ‌ர்க‌ளைக் காண‌ நேர்கையில்
க‌ட‌வுளைப் ப‌ற்றிய‌ வ‌சையைக் கூட்டுகிறார்க‌ள்

காத‌ல் க‌விதைக‌ளைப் ப‌டிக்க‌ நேர்கையில்
கூடுத‌லாக‌ ப‌த‌ட்ட‌ம‌டைகிறார்க‌ள்

யாராலும் காத‌லிக்க‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ளை
எளிதில் க‌ண்டுகொள்கிறேன்

அவ‌ர்க‌ளும் என்னைப் போல‌வே இருக்கிறார்க‌ள் !

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
க‌ட‌ற்க‌ரையில் காத‌லிப்ப‌வ‌ர்க‌ள்
பிரியும் வேளையில்
உள்ளாடைக‌ள் ந‌னைன்திருக்கின்ற‌ன‌

தியேட்ட‌ரில் நீல‌ப்ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள்
எல்லோருமே அதிருப்த்தியுட‌னே
வெளியேறுகிறார்க‌ள்

தாழ்ப்பாள் ப‌ழுதுப‌ட்டிருக்கும்
குளியலறைக‌ளில் கூட‌
நிர்வான‌க் குளிய‌லே ந‌ட‌க்கிற‌து

த‌னிமையில்
ம‌ஞ்ச‌ள் புத்த‌க‌ம் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள்
யாரோ வ‌ர‌லாமென்ற‌
ப‌த‌ற்ற‌த்தோடு காண‌ப் ப‌டுகிறார்க‌ள் !
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
ச‌ம‌ய‌ங்க‌ளில்

நீதிப‌திக‌ளின் முக‌ங்க‌ள்
குற்ற‌வாளிக‌ளோடு
பொருந்திப் போகின்ற‌ன‌

வேசைக‌ளின் க‌ற்பு
குடும்ப‌ஸ்திரியை விட‌வும்
ஒழுக்க‌மான‌தாக‌ இருக்கிற‌து

ரோகியின் விர‌ல்க‌ள்
பெரும் செல்வந்த‌னை விட‌வும்
சுத்த‌மாக‌ இருக்கின்ற‌ன‌

ஞானிக‌ளைக் காட்டிலும்
பைத்திய‌க்கார‌ன்
அழ‌காய் சிரிக்கிறான்.

உண்மையில் நான் யாருடைய புத்தகமென்று நினைத்து வாங்கினேனோ, அந்த எழுத்தாளனைக் காட்டிலும் சிறப்பாகவே இருந்தது. இவர் கண்டிப்பாக கவனிக்கப் படவேண்டிய எழுத்தாளராகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட அழையா விருந்தாளி புத்தகங்களே இன்னும் என்னை சிறு புத்தகங்களை வாங்க ஊக்கமளிக்கின்றது.
கவிஞர் - க. ஜான‌கிராம‌ன், இய‌ற்கை ப‌திப்ப‌க‌ம், விலை ரூ.50