காலகாலமாக ஆஸ்கருக்கு படம் அனுப்பும் கமிட்டிக்கு எப்படி கொஞ்சம்
விவஸ்தை குறைவு இருக்கிறதோ, ஆஸ்கர் கமிட்டிக்கும் அப்படி கொஞ்சம் விவஸ்தைக் குறைவுகளுண்டு. அதை நாம் பல தருணங்களில் பார்த்திருக்கிறோம் தான். அதனால் விசாரணை திரைப்படம் இறுதி பரிந்துரைப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆஸ்கர் பரிந்துரைக்கு தகுதியுறும் தரம் அந்த படத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை வைத்தே இன்று விவாதங்கள் செய்யப்படுகின்றன. அது ஒரு கேள்வி தான். ஆனால் எளிதாக மேற்குலக சென்சிபிலிட்டீஸ்ஸு-குள் கடத்திவிடக்கூடிய விளம்பர கண்டெண்ட் 'விசாரணையில்' இருக்கிறது.
எளிய வாழ்வாதாரத்திலிருந்து வரக்கூடிய ஒரு ஆட்டொ ஓட்டுநர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்ட படம் என்று விளம்பரப்படுத்தப்
படலாம். மனித நேய கேள்விகளை முன்வைக்கலாம். இந்த திரைப்படம் வெளிவந்த காலக்கட்டிடத்தில் தான் சிறைச்சாவுகள் தினம் தினம் நடுந்துகொன்டு இருக்கின்றன என்று ராம்குமார் உதாரணம் காட்டப்படலாம். புள்ளிவிபரங்கள் காண்பிக்கலாம். மேற்குலகத்துக்கு கிளர்ச்சி கொடுக்கும் என்ற உத்திரவாதம் இருந்தால் அது பரவலாக 'பார்க்க வைக்கப்பட்டு' பரிந்துரை பட்டியலில் இடம் பெறலாம்.
ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்
என்ன வென்றால், ஒரு திரைப்படம் ஆஸ்கரில் கௌரவப்படுத்தப்படுகிறது என்றால், அது அந்த
தனி படத்திற்கான அங்கிகாரமோ அல்லது அந்த தனி படத்தின் விளைவாகவோ கருதமுடியாது. பெரும்பாலும்
ஆஸ்கர் வென்ற பிற நாட்டுப் படங்களை கவனித்தால் தெரியும். அதற்குப்பின்புலத்தில் அந்த
நாடுகளில் நடைபெற்ற ஒரு ஒரு சினிமா இயக்கத்தின், ஒரு படைப்பூக்க அலையின் நீட்சியாகவே
அவை பரிநமிக்கும். ஒரு படத்தின் பிரதிநிதித்துவமாக அது இல்லாமல் ஒரு நாட்டின், அல்லது
ஒரு கலாச்சாரத்தில் நடைபெற்ற ஒரு சினிமா முன்னெடுப்பின் பிரதிநிதியாக தான் அந்த சினிமா
இருக்கும். இது கொரிய படங்கள், இரானிய படங்கள், ஹாங்காங் படங்கள் எல்லாவற்ருக்கும் பொருந்தும். நாமறிந்த ஒன்று தான். நமது நாட்டில் அப்படிப்பட்ட முன்னெடுப்பு ஒன்றும் நிகழப்பெறவில்லை. அதற்கான சாத்தியங்கள் இந்த அடுத்தகாலத்தில் தென்படவும் இல்லை.
மேலும் ஒரு சிக்கலான ஒரு கட்டமைப்பு வேறு
இருக்கிறது. சினிமா என்பது ஒரு கலாச்சார செயல்பாடு. வெறும் மொழியால் மட்டும் பாகுபடுத்த
வேண்டிய விஷயம் அல்ல. மொழியாகவும் கலாச்சார ரீதியாகவும் பரந்துபட்டு கிடக்கும் இந்தியாவில் அப்படிப்படட ஒருங்கிணைந்த முன்னெடுப்புகள்
நடக்க சாத்தியமில்லை என்றே படுகிறது. எனவே பொதுவாக ‘இந்திய’ சினிமா என்று வகைமைப்படுத்துவதே
உடன்பாடற்ற காரியம் தான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நல்ல சில முயற்சிகள்
( உதாரணம் : ஒழிவு திவசத்தே காளி) நடைபெற்று வரும் போதிலும் நமது சினிமாக்கள் தனித்தன்மையற்ற
, டெம்ப்லேட்டுகள் சார்ந்த , நாடகத்தன்மை வாய்ந்த கரகாட்டத்தனமான படங்கள் தான். இதை
நாம் ஒத்துக்கொள்வதில் ஒரு தாழ்வுணர்ச்சியும் நமக்குத் தேவையில்லை. வித்தியாசமான படம்
என்று நமது சமூகம் அடையாளப்படுத்தும் படங்கள் கூட அமெரிக்க சினிமாவின் மோசமான விளைவாகவோ
அல்லது நமது பொறியியல் கல்லூரிகளில் சமர்ப்பிக்கப்படும் இறுதியாண்டு ப்ராஜெக்ட்டுகள்
போலவும் தான் இருக்கிறது.
நாம் நமக்கான கலாச்சாரம் சார்ந்த சினிமாவை
முன்னெடுக்க இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கும் என்பதே நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய
நிதர்சனமான உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக