இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 செப்டம்பர், 2016

கோடுகள் நமக்கு செய்தது என்ன?

#001. கோடுகள்  நமக்கு செய்தது என்ன? 

இந்த கேள்வியை நான் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. அதாவது நான் எப்போதெல்லாம் ஏதாவது கதைகளுக்கு படம் வரைகிறேனோ அப்போதெல்லாம். ஏன் ஒரு கதையை வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போறாதா என்று. ஆனால் படங்களுடன் அந்த கதைகள் முற்றிலும் வேறு ஒரு பரிணாமம் அடைவதற்கான சாத்திய கூறுகளை ஒரு ஓவியர் உருவாக்கிவிட முடியும். ஓவியர் ஒரு விடையத்தைக் காட்சிப்படுத்திய விதம் எழுத்தாளர் முற்றிலுமாக கற்பணை செய்து பார்க்காத காட்சியாக இருக்கலாம். 


பள்ளிகாலங்களில் படித்த ஆங்கில க்ளாஸிக்குகளின் abridged  version களில் வரும் படமானது கதையில் வரும் காடசிகளை கற்பனை செய்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தன. உதாரணத்திற்கு Tom  sawyer  கதையில் வரும் Becky என்ற சிறுமி பற்றி வரும். டாம் அவலை காதலிப்பான். நமக்கு அவள் எப்படி இருப்பாள் என்று கற்பணை செய்துபார்க்க அந்த ஓவியங்கள் ஏதுவாக இருந்தது. Becky  எவ்வளவு உயரம், அவள் கூந்தல் எவ்வளவு நீளம், டாமை விட உயரமா, அவள் கண் என்ன நிறம் போன்றவற்றை ஊகிக்க உதவும் . அந்த தகவல்கள் எல்லாம் அப்போது மிக முக்கியமானதாக இருந்தது. முக்கியமாக பெக்கி எங்கள் வகுப்பிலோ பள்ளியிலோ இருந்த பிள்ளைகளை விட முற்றிலும் வேறுமாதிரி இருந்தாள். அது மிகப்பெரிய திறப்பு. அது கதையை மேலும் ஒன்றிப் படிக்க உதவியது.  மேலும் கதாசிரியர் சொல்லும் கதையானது மற்றும் ஒருவரால் வாசிக்கப்பட்டு வேறு ஒரு மீடியத்தில் வெளிப்படும் பொது அதனுடைய நம்பகத்தன்மை அதிகமாகிறது.

அதுவும் குழந்தைகளுக்கான புத்தகங்களில் படங்கள் அதிகமாகவும் எழுத்துக்கள் குறைவாகவும் இருப்பதற்கு அல்லது இருக்கவேண்டியதற்கு காரணம் படங்கள்வழியாக கற்றல் எளிமையானது என்பதால் தான். படங்கள் சுளுவாக ஞாபகங்களில் தங்கிவிடக்கூடியது. கனவுகள் கூட அப்படித்தான். நினைத்துப்பார்த்தால் நம் கனவுகள் அனைத்தும் காட்சிமையமானவை தான். ஒரு இடமோ அல்லது ஒரு சூழலோ "நாம் இதை முன்னமே பார்த்திருக்கிறோமே " என்ற நினைவை déjà vu என்று சொல்லுவோம் இல்லையா, அது அனைத்தும் நமக்கு ஒருவகையில் காட்சிப்படிமங்களாக பதிவானவையே. எழுத்துக்கள் உருவாக்கிய தாக்கங்களைக் காட்டில் படங்கள் துரிதமான தாக்கங்களை உருவாக்க வல்லது.

நினைத்துப்பாருங்கள், ஒரு சிறிய கொடு வரைந்து அதன் இரண்டு புறமும் நான் ஒரு இலை வரைந்தால் அதை நீங்கள் ஒரு இலையின் படமாக மட்டும் பார்ப்பீர்களா? அல்லது ஒரு 'கை' படத்தை வரைந்தால், அல்லது சுவஸ்திக் வரைந்தால்...அதை வெறுமெனே கோடுகளாக பார்க்க முடியுமா. அவை அதனுடன் தொடர்புடைய ஒரு நபரை, ஒரு நிகழ்வை, ஒரு அரசியலை, ஒரு கொள்கையை, ஒரு வரலாற்றை, ஒரு துர்கனவை என்று தன்னை விஸ்தாரப்படுத்துக்கொண்டுவிடும் அல்லவா? அதை அறிந்து தானே நம் தெரு சுவர்களெங்கும், சுவரொட்டிகளிலும் , பேருந்துகளிலும் எல்லாம் பலதரப்படட கோடுகளை நம்மிடத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்? ஏனென்றால் அநிச்சையாக பார்த்தலும்  கூட நாம்விருப்பமின்றியும்̀ நம் நினைவுகளில் பதியக்கூடியது. அதுதான் படங்களின் முக்கியத்துவமாக கருதுகிறேன்.

புகைப்படம்கூட  ஓவியத்தின் நீட்சியே. எங்கே, இன்று ஏதேனும் ஒரு செய்தித்தாள் ஒரு படம் கூட இல்லாமல் எழுத்துக்கள் மட்டும் கொண்டு வெளியிடட்டும் பார்ப்போம். அந்த செய்திகள்  மனித நினைவிலிருந்து வேகமாக அழிந்து போகக்கூடும் என்பது என் யூகம் . 

உலக புகைப்பட தினத்தன்று, ஒரு பிரபல பத்திரிகை அவ்வாறு செய்தது. புகைப்படக்கலையின் முக்கியத்துவத்தை காண்பிப்பதற்காக அந்த ஒரு நாள் பத்திரிகையில் புகைப்படங்கள் வரவேண்டிய இடங்களில் எல்லாம், வெற்று வெள்ளைத் தாள்களை பிரசுரித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக