இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ça ma madeline de proust - உங்கள் மேடலின் எது?

#004

எது உங்களது மேடலின் ?

ஃப்ரெஞ்சு மொழியில் அழகான சொலவடைகள் நிறைய இருப்பதைப்பற்றி முன்னொருமுறை எழுதியிருந்தேன் அல்லவா. அந்த வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது. ça ma madeline... அதன் முழு வடிவம் "ça ma madeline de proust" என்பது. இந்த சொற்றொடருக்கு ஒரு பின்கதை உண்டு. அதற்கு முன் ப்ரூஸ்டை பார்த்துவிடலாம். 

உங்களுக்கு Marcel Proust ஐ தெரிந்திருக்கலாம். ஃரெஞ்சின் மிக முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவர். அவரது À la recherche du temps perdu (ஆ லா ரிஷர்ஷ் த்யு தா(ந்) பெர்த்யூ) நாவல்  இலக்கிய உலகில் ஒரு சாதணையாக சொல்லப்படுகிறது. சுமார் 13 ஆண்டுகள் 7 பகுதிகளாக 4000 பக்கங்களில் எழுதப்பட்ட மிகப்பெரிய நாவல் அது. அதில் மூன்று பகுதிகள் அவர் இறந்தபிறகே வெளிவந்தது. 

மார்செல் ஒரு பெரிய நாவலை எழுத திட்டமிட்டு ஆனால் எந்தபுள்ளியிலிருந்து அதைத் துடங்குவது என்று தெரியாமல் ரைட்டர்ஸ் ப்ளாக்கால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் காலை உணவிற்காக டீ யும் மேடலினும் தரப்பட்டது. மேடலின் என்பது மாவு, முட்டை, வெண்ணையில் செய்யபட்ட கடல் சிப்பி வடிவில் இருக்கும் ஒரு வகை கேக். அந்த மேடலினை டீயில் முக்கி வாயிலிடும் வேளையில் அது நாக்கில் கரையும் போது உருவான அந்த ப்ரத்தேகமான வாசனை அவருக்கு தனது பால்யகால நினைவுகளை எல்லாம் நினைவுபடுத்தியது. சிறுவனாக இருக்கும் போது தனது ஆண்டின் அறைக்கு செல்லும் வேளைகளில் அவள் டீயில் முக்கிய மேடலின்களைத் தருவாள். அந்த நினைவுக்கீற்று என்றோ மனதின் அடி ஆழத்தில் தொலைந்து போன ஒரு ஞாபகம். முற்றிலும் முக்கியத்துவமில்லாத ஒரு நிகழ்வு. ஆனால் இந்த காலையின் மேடலினின் மணம் சட்டென்று அவருடைய கடந்தகாலத்தின் ஜன்னல்களை திறந்து போட்டது. அவரது பால்யத்தைக் குறித்தும் நினைவுகளைக் குறித்தும் எண்ணங்கள் மடைதிறந்தன. தனது நாவல் இது குறித்து தான் இருக்கப்போகிறது என்று முடிவு செய்தார். அப்படி எழுதத் துடங்கியது தான் 13 ஆண்டுகள் அவர் எழுதிய 4000 பக்க நாவல் À la recherche du temps perdu ("தொலைந்த காலத்தின் தேடலில்..." என்று வைத்துக்கொள்ளலாம்). 

இந்த ஒரு நிகழ்வைதான் இந்த சொற்றொடர் ça ma madeline de proust குறிக்கிறது. ஏதோ ஒரு சிறிய நிகழ்வோ, ஒரு உணவோ, ஒரு செய்கையோ, ஒரு குரலோ, பெரும்பாலும் ஒரு வாசனையோ சட்டென்று (இல்லையென்றால்) மறந்துவிட்டோம் என்று நினைத்த உங்கள் குழந்தைப்பருவ சம்பவத்தையோ அதை ஒட்டிய நினைவையோ  ஞாபகத்தின் அடியாழத்திலிருந்து கொண்டு வரும் என்றால் அது தான் உங்கள் மேடலின். ça ma madeline (ச ம மேடலின்). அதாவது உங்கள் Involuntary memory யில் இருந்து ஒரு சம்பவத்தை/ ஞாபகத்தை வெளிக்கொணரும் என்றால், அப்படியொன்றை நீங்கள் கண்டுகொண்டீர்கள் என்றால் அதை நீங்கள் "ça ma madeline" என்று சொல்லிக்கொள்ளலாம். 

என்னளவில் சுத்தமான சாக்லேட்டின் மணம் எனது 6ம் வகுப்பை எனக்கு நினைவுபடுத்தும். முகமது ரஃபி உடனே நினைவுக்கு வருவான். அவர் துபாயில் படித்துவிட்டு இடையில் வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்தான். அதுவரை எங்களுக்கு பழக்கமில்லாத வெளிநாட்டு மிட்டாய்களைக் கொண்டுவருவான். பகிர்வான். அந்த ஒரு வருடம் தான் எங்கள் வகுப்பில் அவன் படித்தான். எல்லோரிடமும் உடனே நட்பாகிக்கொண்டான். சாக்லேட்டின் வாசனை என்னை எனது 6 வகுப்பிற்கு கொண்டுசென்றுவிடும். ça ma madeline de proust!. உங்களது மேடலின் எது? 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக