#005
நான் பள்ளி கல்லூரிகளிலிருந்து வெளியே வந்து வெகு காலங்கள் கழித்து தான் ஆசிரிய தரிசனங்கள் எனக்கு கிடைக்கப்பெற்றது. ஆசிரியர் என்பதற்கான விளக்கங்களையும் மாற்றியமைக்க வேண்டியிருந்தது. பள்ளிகளில் படிக்கையில் பெரும்பாலும் நமக்கு ஆசிரிய தரிசனங்கள் கிடைக்கப்பெற்வதில்லை. அந்த வயதில் நம்மைப் பொறுத்தமட்டில் பிடித்த ஆசிரியர்கள், பிடிக்காத ஆசிரியர்கள் - இரண்டு வகை தான். மற்றபடி ஆசிரியபிம்பம் எனப்படுவது பெரும்பாலும் நாம் retrospective ஆகத்தான் நமக்கு தென்படுகிறது. அதாவது இன்று ஒரு புள்ளியில் நாம் நின்றுகொண்டு ஒரு ஆசிரியரையோ அல்லது அவரது ஆசரியத்தன்மையையோ பின்னோக்கி பார்க்கும் போது அவரது பாடங்கள் அல்லது அவரிடமிருந்து நமது படிப்பினைகள் இன்றும் அர்த்தமுள்ளதாக இருந்தால் அந்த ஆசிரியபிம்பம் நம்மில் நிலைபெற்று நிற்கிறது.
பள்ளியில் நான் அதிக மதிப்பெண்கள்மட்டும் எடுக்க உதவிய எந்த ஆசிரியரும் என் நினைவில் இல்லை. மாறாக நான் இன்றும் நினைத்துக்கொள்ளக்கூடிய ஆசிரியர்கள் நான் பள்ளிப்பருவங்களில் வெறுத்த ஆசிரியர்கள் அல்லது எவர்மீது எங்களுக்கு புகார்கள் அதிகம் இருந்தனவோ அந்த ஆசிரியர்கள் தான். அதனால் ஆசிரியர்களுக்கும் மதிப்பெண்களுகும் சம்மந்தமில்லை. பெரும்பாலான பள்ளிகளில் தற்போது மதிப்பெண்களை உருவாக்குவது தான் அவர்களது கடமை என்று நினைத்தபடி இருக்கிறார்கள். அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவர்கள் வெகுசீக்கிரத்தில் காலத்தால் மறக்கடிக்கப்படுவார்கள். ஐடியல் போன்ற கொத்தடிமை பள்ளிகளில் படித்த எனது நண்பர்கள் அவர்கள் ஆசிரியர்களைப் பற்றி பேசி நான் கேட்டதே இல்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் அது ஒரு துன்பியல் காலம். அதை அவர்கள் நினைவு கொள்ள விரும்புவதில்லை. அவ்வளவே. எதற்கு இதைச்சொல்கிறேன் என்றால், தற்போது உள்ள பள்ளிகளில் அல்லது பள்ளி முறையால் ஒரு மாணவன் ஆசிரிய தரிசனம் கிட்டாமலே பள்ளியிலிருந்து கல்லூரியிலிருந்து வெளியே வந்துவிடுவதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு.
அதற்காகவாவது பிள்ளைகளுக்கு பாடத்திட்டத்திற்கு வெளியேயும் ஆசிரியர்கள் அமைவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது ஒரு பாட்டு வாத்தியாராக இருக்கலாம், நடன ஆசிரியாரக இருக்கலாம், உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கலாம், ஒரு விளையாட்டுப் பயிற்சியாளராக இருக்கலாம், ஓவிய ஆசிரியராகவோ ஏன் சில நேரங்களில் அது ஒரு ட்யூஷன் மாஸ்டராகக் கூட இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் அவர்களது வருங்கால ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக அவர் இருக்கலாம். எனது 25வது வயதில் ஃரெஞ்சு கற்றுக்கொள்ள ஒரு நிறுவனத்தில் நான் நுழைந்த போது தான் ஒரு அடல்டாக எனக்கு ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் புரிய ஆரம்பித்தது. அங்கேயே மோசமான உதாரணங்களும் இருந்தபடியால் அதை அப்பட்டமாக பார்க்கமுடிந்தது. நான் பள்ளி கல்லூரி ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்டதைவிட ஆசிரியர்கள் மீது அதிக மதிப்பு எனக்கு உருவானது அங்கு தான். நான் இவைரைப்போல வரவேண்டும் என்று நாம் தோன்றும் கணம் தான் ஒரு ஆசிரியர் நமது ஆளுமைக்குள் ஊடுருவும் தருணம்.
பொதுவாக ஒரு காலகட்டத்தில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு காரணங்களுக்காக அந்த பணிக்கு வந்திருக்க முடியும். இரண்டாம் காரணம் வேறு பணி கிடைக்கவில்லை என்பதாக இருக்கலாம். குறைந்தபட்ச தகுதிகளுடன், ப்ரத்யேக குணநலன்களை ஆரம்பநாட்களில் கோராமல், போகிற போக்கில் கற்றுக்கொள்ளலாம் என்ற நெகிழ்வுதன்மையுடைய ஒரு தொழில் ஆதலால். ஆனால் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்குக் காரணம், அவர்களது ஆசிரியர்கள் தான் அவர்களுக்கு முதல் ஹீரோவாக இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு ஆசிரியரின் பிம்பம் தான் அவர்களை துரத்தி ஆசிரிய சேவைக்குள் தள்ளியிருக்கும். நாம் குழந்தைகளை inspire செய்ய தவறின ஒரு தலைமுறையாக இருப்போமேயானால் தரமான ஒரு ஆசிரியர்கள் இல்லாத எந்த படிப்பினைகளும் இல்லாத ஒரு தலைமுறை உருவாக நாமே காரணமாக இருப்போம் என்பது நிச்சயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக