இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 டிசம்பர், 2019

நமது பிள்ளைகளின் பிரிய ஆண்ட்டிகள்


முதலில் பப்புவிற்கு 
ஜனனி ஆண்ட்டியை 
மழலைப்பள்ளியில் தான் பரிட்சையமானது

அவனை அழைத்துவரச் செல்லும் வேளைகளில் எல்லாம்
ஜனனி ஆண்ட்டியின் கையையோ அல்லது சீலையில் ஒரு முனையையோ 
பற்றிக்கொண்டு இருப்பான் பப்பு

உள்ளதிலேயே சிறிய குழந்தையாதலால் 
எப்போதும் ஜனனி ஆண்ட்டி அவனை இடுப்பிலே வைத்திருப்பாள்
அப்பள்ளியிலிருந்து வெளியே வந்தநாளில் 
பப்புவை கையில் வைத்தவாறு 
புகைப்படம் எடுத்துக்கொண்டாள் ஜனனி ஆண்ட்டி

ஆரம்பப்பள்ளியில் சேர்த்த போது 
அவனது டீச்சர் பேர் அங்கும்ஜனனி ஆண்ட்டிஎன்றான் பப்பு...
அதை நான் எப்போதும் கேட்டு சரிபார்த்துக்கொண்டதில்லை

ஜனனி ஆண்டி அம்மாவிலிருந்து வேறுமாதிரி இருக்கிறாள்
ஜனனி ஆண்ட்டி, பாட்டு பாடுகிறாள்...
ஜனனி ஆண்ட்டி, சாவிகொடுக்கும் பொம்மைபோல் ஆடுகிறாள்...
ஜனனி ஆண்ட்டி, எல்லொருக்கும் செல்லப்பெயர் வைக்கிறாள்...
ஜனனி ஆண்ட்டி, மிருகங்கள் போல் பாசாங்குசெய்து சிரிக்கவைக்கிறாள்...

ஜனனி ஆண்ட்டி தன்னை லட்டு..லட்டு... என்று கூப்பிடுவதாக 
மிகவும் வெட்கத்துடன் ஒரு நாள் சொன்னான் பப்பு...

தினமும் பள்ளி முடிந்து வருகையில் 
எல்லோரிடமும் ஜனனி ஆண்ட்டி முத்தம் வாங்கிப் பெற்றுக்கொள்வாள் என்பதை 
ஏனோஅம்மாவிடம் இருந்து மறைத்தான்

ஒரு நாளில் ஜனனி ஆண்ட்டி பத்து நாள் லீவில் போவதாகவும்
அதற்காக எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்ததாகவும்
சொன்னான் பப்பு...

பலநாட்கள் ஆகியும் ஜனனி ஆண்ட்டி திரும்பியிருக்கவில்லை...
அந்தக் கேள்வியை அவனால் அழுகையின்றி எதிர்கொள்ள முடியவில்லை...

ஜனனி ஆண்ட்டி பாடும் ஏதோ ஒருபாடல்
எங்கோ ஒலிக்கையில் அது அவனை சஞ்சலப்படுத்தியது...
பின் அது அவனது விருப்பப் பாடலாக மாறிப்போனது

வெகுநாட்கள் கழித்து ஒரு ஓவியப்பள்ளியில் சேர்க்கப்பட்டான் பப்பு
அவனது ஓவியடீச்சரின் பேரென்ன என்று கேட்டபோது...
அவன் யோசிக்காமல் சொன்னான்ஜனனி ஆண்ட்டிஎன்று
இப்போதும் அதை நான் கேட்டு சரிபார்த்துக்கொள்ளவில்லை 

அவனது உலகம் ஜனனி ஆண்ட்டிகளால் நிறப்பப்ட்டிருக்கிறது...

நான் அவனிடம் சொல்ல விரும்பினேன்...

இது இப்படித்தான் மீண்டும் மீண்டும் நிகழும் என்பதை...
கைவிடுதலின் சாபம் இப்படி கருணையற்றது என்பதை ...
ஜனனி ஆண்ட்டிகளின் நினைவறுத்தல் அத்தனை எளிமையானதல்ல  என்பதை....

ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல்
அவன் விருப்ப ஓவியம் ஒன்றிற்கு

வண்ணம் தீட்டுகிறான் பப்பு


1 கருத்து: