இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 செப்டம்பர், 2013

சாதாரண கவிதை...



ஒரு கவிதை எழுத
அதீதமான ஏதோ ஒன்று தேவைப்படுகிறது
ஒரு பிறழ்வோ
ஒரு அதிசயமோ
ஒரு முரணோ...
சாதாரணமான எதற்கும்
கவிதைக்குள் இடமில்லை

பிரம்மாண்டமோ
பெரும் இரைச்சலோ
பேரமைதியோ
சாதாரணமற்ற ஏதோ ஒன்று
கவிதைக்கான மூலப்பொருளாகத் தேவைப்படுகிறது

ஒரு காதலோ
ஒரு தற்கொலையோ
ஒரு துரோகமோ
ஒரு அவமானமோ
 சுயகழிவிரக்கமோ...எதுவேனும்...

எதுவுமே மறுக்கப்பட்டவனாக
'கையது கொண்டு மெய்யது பொத்தி'
கவிதையின் வாசலில் நுழைய முடியாதவனாய் நிற்கிறான்
சாகசமற்ற ஒரு மனிதன்

அவனைக் கவிதைக்குள் கொண்டு சேர்ப்பதன் என் வார்த்த்தைகளை நம்பி
சவரம் செய்த முகத்துடன், கையில் ஒரு பூங்கொத்துடன் காத்திருக்கிறான்
மீன் நோக்கி கால் மாற்றி நிற்கும் நாரையைப் போல்...

அவனை சமாதானப்படுத்த வழியின்றி உலரிப்போகின்றன
பேனாவின் உள்சுவர்களில் அறையப்பட்ட எனது மை !
எழுத்துக்களின் பரிட்சையத்தை மறக்கும் அபாயத்தில் பேனா
வேறு பயன்பாடுகளின் சாத்தியங்களுக்குப் பழகிக்கொண்டன...
தன்னை விஸ்கி கோப்பைகள் கலக்கவும்
காதுகுடையவும் பயன்படுத்துவது குறித்து
எந்த புகாரும் இல்லை அவைகளுக்கு!

சாதாரண மனிதன் மீதிந்த வன்முறையை தாளமுடியாது
அவனது மலர்க்கொத்தோடு சேர்ந்து சருகாகிறேன் நானும்
எந்த சிறப்புமற்ற ஒரு மனிதனை
கவிதைக்குள் செலுத்துவது குறித்து இந்த முயற்யில்,

ஒன்றாவது,
தனது காய்ந்த மலர்களின் சருகுகளுக்கு பதிலாக
ஒரு வாளால் என்னைக் கொன்று,
கவிதையின் வாயில்களை அவன் உடைக்கலாம்

அல்லது,
அவனது காத்திருப்பின் துக்கம் சகிக்காமல்
எனது உலர்ந்த பேனாவின் கூர்முனையால் அவனைக்கொய்து
ஒரு குருதியின் கவிதையை நான் எழுத்த் தொடங்கலாம்! 

                              ***

painting: Ruth Edward

1 கருத்து:

  1. துக்கமும் துயரமுமே பெரும்பாலும் கவிதைகளை பெற்றுப் போடுகிறது . மகிழ்ச்சியில் திளைக்கிற மனதை விடவும் , சுய கழிவிரக்கத்தில் தளர்கிற மனம் கவிதா வெளியில் கசிந்து படர்கிறது . இத்தருணத்தில் "சொக ராகம் சோகம் தானே " என ஒரு பாடலசிரியனின் வரிகளை நான் நினைத்துக் கொள்கிறேன் ...

    பிரவீனின் கவிதையில் காத்துக் கிடக்கிற அந்த சாகசமற்ற ஒருவனின் காத்திருப்பின் துயர் என்னையும் ஒரு கவிதைக்கு இப்போது உசுப்புகிறது ..ஒருகுருதியின் கவிதையை நானும் கூட எழுதத் தொடங்கலாம்!

    பதிலளிநீக்கு