விரித்து வைத்த ஒரு சேலையின் தலைப்பில்
வந்துதான் விழ வேண்டும்
ராஜாவும், மந்திரியும், ஜோக்கர்களும் கூட!
கருப்பும் சிவப்புமென இனம் பிரித்து நின்றாலும்
கூட்டும் கலவியும் அறிவதில்லை நிறமும், குணமும்.
சில சமயம் கட்டியணைக்கும் சிலசமயம் எட்டியுதைக்கும்
சுழலும் துவந்த யுத்தத்தில் நிரந்தர நண்பனெவன்
நிரந்தர எதிரியெவன்?
கட்டுக்களைக் குலுக்கியபடி
ராணியின் வருகைய்காய்
இடம் விட்டுக் கிடந்திருக்கும் ராஜனும் மந்திரியும்,
வாய்ப்பிருந்தால் வரக்கூடும் ஜோக்கரும்...
ஆனாலும் மீண்டும் மீண்டும் வருவதென்னவோ
அடுத்தவன் மனைவியே!
முதுமை நெருங்குவதெண்ணி
மரித்து வீழும் அபாயத்தில்
விலகிச்சென்று கூட்டு மாறக்கூடும்
மந்திரிமார்களும் மந்திரவாதிகளும்!
ஒற்றையில் விடப்படுவதன் பாதகம் அறிந்தும்
பலவாறு தயக்கமுண்டு பகைவருடன் சேர்வதற்கும்.
எவன் எடுப்பான் எவன் கவுப்பான்
எடுத்து கவுப்பான் போலெவன் பாசாங்கு செய்வான்...
எண்ணி எண்ணி எவ்வாறோ
ரம்மியின்றி நீள்கிறது வாழ்கை…
கலைத்து கலைத்து அடுக்கி வைத்தும்
முடிவின்றி சுழன்றாடும் சூதின் பிடியில்
அகப்படாமல் எங்கோ, எவனருகோ
கிடந்திருக்கிறாள் எனக்கான ராணி
நான் சீட்டுக்களை எடுப்பது மட்டும் நிற்பதே இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக