இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 செப்டம்பர், 2006

பயணங்களின் முடிவில்...

( நிலைகொள்ளா உலகில் நினைவுகள் மட்டுமே நமக்கு சொந்தமாகின்றன.பால்ய வயதிலிருந்து பதின் வயதுகளின் சிறகுகளைக் ஏதோ ஒரு அவசரத்தில் களைந்து விட்டு வந்திருக்கிறோம்.நாம் படித்த கல்லூரியோ பள்ளியோ நம் முறிந்த சிறகுகளைச் சேகரம் செய்து வைத்துள்ளது.கல்லூரிக்கால நண்பர்களும் மனிதர்களும் அப்படியே காலத்தின் கைபடாமல் மனதில் நிலைகொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு நிலவெளியில் பிரவேசித்த நினைவின் மணற்பரப்பிலிருந்து இருந்து சில கிளிஞ்சல்கள் இதோ ...)



சஞ்சி* நிறைய துணிகளுடனும் மனது நிறைய அனுபவங்களுடனும் பேருந்திலிருந்து இறங்குகிறேன்.அருகில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் ஏதோ மிகவும் நெருக்கமான நண்பர் போல விடை சொல்கிறேன்.ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் காலியான கீசை**களும் ,பிதுஙும் அனுபவங்களும் திணிக்கப்பட்டிருக்கின்றன.ஓரிரு சஞ்சிகள் அதிகமாயிருக்ககூடும்.ஒவ்வொரு பயணமும் பெண்மையை முழுமையாக சுகித்தவனைப் போல சோர்வையும் சுகத்தயும் அளிக்கிறது. [ *சஞ்சி-( பயணப் ) பை **கீசை-பாக்கெட் ]

நான் ஒரு தூரதேசி.காற்றின் பாடலுக்கு காது கொடுத்துக் கொண்டே,இலைகள் படபடக்கும் இரகசியங்களை சேகரித்துக் கொண்டே இந்த பிரதேசத்திற்க்கு வந்தவர்கள் தானே நாம்.நான் ஒரு கூழாங்கற்களைப் போல நினைவுகளைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.கூழாங்கற்களை கன்னங்களில் வைத்து பார்த்திருக்கிறீர்களா?.அதில் நதி ஓடும்ம் சப்தம் கேற்கும்.நமக்குள்ளும் ஒரு நதி ஓடியவண்ணம் தானிருக்கிறது.அதனால் தான் நதி ஓய்வதே இல்லாமல் அலைபாய்ந்த படி இருக்கிறதோ?.நான் வார்த்தைகளை விழுங்கிவிட்ட கூழாங்கல்.

இந்த நிலப்பரப்பில் ஒரு ஆயிரம்பேர் இருப்பது தோராயமான கணக்கு தான்.பல்லாயிரக்கணக்கான பேர் தங்கள் சுவடுகளை விட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.மின் கம்பத்தில் தோய்த்த சுண்ணாம்பு போல அவை நிறம் மாறியிருக்கும் கவனித்திருக்கிறீர்களா?.நாம் எவரெவரோ காலடிச்சுவடிகளின் மேல் நடக்கிறோம்.யார் யாரோ அமர்ந்த இருக்கைகளில் உட்கார்ந்து தோள்களை பகிர்கிறோம்.நம் முகங்கள் யார்யாரையோ எவர்க்கோ நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.வசந்த காலத்தில் வீசும் காற்றில் இலைகள் ஆடும்போது எவனோ முன்னோன் ஒருவனைப் பற்றிய இரகசியத்தை கசிவதை கவனித்திருக்கிறேன்.உதடுகளில் தேக்கி வைக்கப்பட்டு செலவழிக்கப் படாத முத்தங்கள் கூட இங்கு நிராசைகளாக அலையக்கூடும்.யாரோ இரண்டுபேர் காரணமின்றி நட்பை அறுத்துக்கொண்ட துரதிஷ்டமான தடங்களில் மறுபடியும் பேசப்படாத வார்த்தைகள் மௌனமாக சஞ்ஜரித்துக் கொண்டே இருக்கிறது.நெடிய பொழுதுகளில் அவ்விடங்களை கடக்கையில் விசும்பல் சப்தம் மேலெழுகிறது.தொண்டையில் ஏதோ அடைத்து வலியை உண்டக்குகிறது.கண்களின் ஓரத்தில் சோகம் படிந்து விடுகிறது.

ஏதேதோ காரணங்களுக்காக எவெரெவரோ வெட்கி பூத்த மலர்களில் இன்னும் அதன் சிலிர்ப்பு மீளவே இல்லை.
பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்துடன் எவனோ மரத்தடியில் கற்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்.அந்த பரல்களின் சப்தம் ,ஒரு ஈரத்துணியைப் போல உலர்ந்த வண்ணம் இருக்கிறது.

கல்லூரியிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு கிளம்பும் பயணிக்கும் போதும் பேருந்து நிறுத்தம் வரை நண்பன் வருகிறான்.நாம் தனியே பயணிக்கிறோம்.தனியே விடப்பட்டவனாக திரும்புகிறான் நண்பன்.ஒவ்வொரு பயணத்திலும் யவரோ ஒருவர் விடப்பட்டுவிடுகிறார்கள்.மற்றவர் அவர்களை நினைத்தபடி பயணிக்கிறார்கள்....

வார்த்தைகள் தீர்ந்து விடப்போவது போல அவசர..அவசரமாக பேசிமுடிக்கிறான்.பேருந்து வந்துவிடுகிறது...ஓடிச்சென்று ஏறியவனிடம்.."எப்ப வருவ டா? " என்கிறான் உரத்தகுரலில்.அந்த கேள்வியே சீக்கிரம் வரவேண்டும் என்று தோன்ற வைக்கிறது.மனம் கணத்தவனாக திரும்பிக்கொண்டிருந்த அவனை கவனித்தேன்.அவன் தனியே நடக்கும் போது கூட நான்கு கால் தடங்களை விட்டுச்செல்பவனாக இருந்தான்.

பால்யத்தின் இறுதி நாட்களைக் கழித்த இடங்களைக் கடந்து வந்து கொண்டிருந்தேன்.அங்கு தொலைத்து விட்ட அறியாமையைத் தேடி கலைகிறேன்.காற்று அதை சேகரம் செய்து வைத்துள்ளது.தொடமுயன்ற போது விரல்களின் நடுவே கிழிந்து சென்றது காற்று.

காரணமற்ற சினேகம் கொண்ட மனிதர்களை அங்கு பார்க்க முடிகிறது.பால்யகிலேசத்தில் வந்து புகையிலைப் பொருட்க்கள் கேட்க்கும் பையன்களை விரட்டி விடும் கடைக்காரர்களையும்,ஒருமுறை 4 சிகரட் கேட்ட ஒருவனிடம் "இன்று இதுமட்டும் போதுஞ் சாமி " என்று இரண்டை மட்டும் கொடுத்தனுப்பும் டீக்கடை வியாபரிகளிடமும் சினேகம் கொண்டவனாகவே இருந்தேன்.வியாபாரத்தையும் மீறிய அவர்களின் முதிர்ச்சியான அன்பு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.




சிலுவையை சுமப்பவன் போல நகர முடியாமல் அவ்விடங்களைக் கடக்கிறேன்.சிலுவை சுமப்பவன் இன்னும் சில காலத்தில் அந்த சிலுவை தன்னை சுமக்க போவதை அறிந்தே இருக்கிறான்.தார்சாலை சூட்டில் உருகுவதைப் போல ரகசியமாய் துக்கம் ஏதோ மூலையில் கசிவதை உணர முடிகிறது.அப்போது தான் தெரிந்தது ஆண்டு மாற்றங்களில் இழந்தவைகள் பட்டியலில் கண்ணீரும் சேர்ந்துவிட்டது.

நண்பன் பையின் ஒரு மூலையைப் பிடித்தபடி வருகிறான்.கூடாத சாத்யங்களில் மனம் கூடுகிறது.மனம் ஒரு எடைக்கல்லைப் போல் கனமாக இருக்கிறது.அப்போது தான் வந்தேரிய ஒரு மாணவன் யாரையோ விசாரித்தபடி உள்ளே செல்கிறான்.ஓரு கர்பஸ்திரியைப் போல காலம் பார்த்துக் கொண்டே இருந்தது கண்ணீர்.இரண்டு பேருந்துகள் கடந்து போயின.."அடுத்த வண்டியில் போகலாம்", என்றான் நண்பன்.நிராகரிக்கப் பட்ட வன்மத்தில் சுட்டது சூரியன்.தூரத்தில் வரும் அடுத்த பேருந்தில் செல்ல ஒப்பியது மனம்.ஏறிக்கொண்டேன்...கையசைத்தேன்...நகரும் பேருந்தில் துண்டாகித் தெரிந்தது நண்பனின் பிம்பம். தேக்கி வைத்த கண்ணீர் தொண்டயில் வலியை உண்டாக்கியது...."எப்ப...வருவ..." என்பது போல எதையோ கேட்க வந்து மறந்தவன் போல நின்றான்.

வெயில் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது !

5 கருத்துகள்:

  1. அவன் தனியே நடக்கும் போது கூட நான்கு கால் தடங்களை விட்டுச்செல்பவனாக இருந்தான்


    super daaa

    பதிலளிநீக்கு
  2. // வெயில் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது !//

    உங்களின் மொழிநடையில் மிக அருமை பிரவீன்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான எழுத்து ப்ரவீன் !

    பதிலளிநீக்கு