இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 ஜூன், 2012

திரவம்


 திரவம் 
======


ஒரு யுக மௌனத்தை 
உடைக்கிறது ஒரு குவளை காஃபி 
சூல் கொண்ட ஒரு சொல்லை 
அது சுகமாக பிரசவிக்கிறது 

சொற்கள் தோன்றுவது
நாவிலிருந்தா?
இதயத்திலிருந்தா? 
மூளையிலிருந்தா?
இல்லை...காப்பிக் கொட்டைகளிலிருந்தா? 

எல்லா பிரச்சனைகளும் 
ஒரு காப்பி குடித்தால் தீர்ந்துவிடும் 
என்று தீவிரமாக நம்பவைக்கிறது

துல்லியமான சகவிகிதத்தில் 
கேட்காமலே நமக்காக தயாரிக்கப்படும் காப்பிகள் 
இருப்பைக் கொஞ்சம் அர்த்தமாக்குகின்றன 

தனியாக கொஞ்சம் அழவேண்டியிருந்தாலும்  
ஒவ்வொருமுறை காதலைச் சொல்ல 
சரியான தருணத்தைத் தேடும் போதும் 
முதலில் நீள்வது ஒரு குவளைக் காஃபி 

எதையும் பேசிக்கொள்ளாமலே
குடித்துக் கலையும் காப்பியின் கடைசி துளியில்
மிஞ்சியிருக்கும் கசப்பு
பின் எப்போதும் சுவையுணராத‌ நாவுகளை விட்டுச்செல்லும்
நிரந்திர பிரிவுகளை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக