இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூன், 2009

தாழிடப்பட்ட அறைகள்...

1. தாழிடப்பட்ட அறைகள்




என்னுடையவை தாழிடப்பட்ட அறைகள்

ஜன்னல்வழி உமிழும் வெயிலுக்கும்,
ஊறித்ததும்பும் நிலவுக்கும் மாறுபாடு இன்றி
மௌன சாட்சியாய் நிற்கின்றன என் அறைகள்!

எவளொ ஒருத்தி ஒட்டிச்சென்ற
கண்ணாடியின் மேல் ஸ்டிக்கர் பொட்டு,
அடையாளம் கண்டுகொள்ள முடியாத
யாருடையதோ ஒரு நீள முடி,
சற்றும் சம்மந்தமற்ற கசக்கிய நிலையில்
சிரிய, பூப்போட்ட கைக்குட்டை

பல அந்தரங்கங்களை விழுங்கிக்கொண்டு
படுத்திருக்கிறது அமைதியாய், அறை!

நாட்களை மறந்து
கொடியின் மீது உலறும் உல்லாடைகள்
சருகாகி உதிர்ந்துவிட்ட ஜாடி மலர்கள்
நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்ட படுக்கைகள்
உபயோகிப்பாரற்று நீரற்று உலர்ந்த கழிப்பறைகள்

கதவிடுக்கு கரைப்பான்களும்
பரண்கொண்டிருக்கும் பல்லிகளும்
சமத்துவமாய் உலவும்
கூச்சமற்று கூடித் திரியும்
வெட்டவெளியில் பட்டப்பகலில்!

அனிச்சையாய் கடிதமிட்டுச்செல்லும் அஞ்சல்காரர்கள்
அலுத்துப் போய் விலகிச்செல்லும் சிகண்டியடிப்பவர்கள்
அழைப்பு மணியை அடித்துச்செல்லும் சிறுவர்கள்
குழந்தைகளை எதிர்பார்த்துக் கூவி நிற்கும் ஐஸ்காரன் வண்டி
யவரும் அறிவதில்லை அவர்கள் இழைக்கும்
மூர்க்கத்தனம் எத்தகையது என்று!

என்னுடையவை தாழிடப்பட்ட அறைகள்

ஒரு நள்ளிரவு நேரதிலோ - இல்லை
ஒரு அதிகாலை விடியலிலோ
சாவி துவாரம் முயந்து
திறக்கப்படும் கதவுகளில்
உள்நுழையும் காலனின் வருகையில்

காணாமல் போகும் என் அறையும் - பின்
இந்தக் கவிதையும்...!


**********

2. நேர்மை

ஒற்றையில் சீட்டாடும் மனிதனின் நேர்மை

ஒரு நீதிபதியினுடையதைக் காட்டில்

நம்பகத்தன்மை உள்ளதாய் இருக்கிறது!


**********

3.



தனிமையில் குடிக்கப்படும் தேநீர்-கள்
எந்த சுவையுமற்று இருக்கின்றன
அது உற்சாகத்தை அளிக்கத் தவறுவது
மட்டுமில்லாமல் - அடித்தொண்டையில் நீடித்திருக்கும்
கசப்பையும் உண்டாக்குகிறது!

தானே சமைத்து தான் மட்டுமே உண்ணும்
உணவுகள் வாசணையற்று இருக்கின்றன
விரல் இடுக்குகளில் மீந்திருக்கும் சாம்பார்கூட
ருசியற்று போய்விடுகின்றன!

(இதைக்காட்டில் பல பட்டினிப்பகல்கள் இன்னும்
சந்தோஷமுற்றதாய் இருந்திருக்கிறது)

திரையரங்கிற்கு தனியே செல்ல நேர்கையில்
சிரிக்க நேரிடும் நகைச்சுவைக் காட்சிகள்
அதற்குப்பின் நினைவில் இருப்பதே இல்லை!

இரவு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்த தொலக்காட்சியை
நள்ளிரவு எழுந்து அணைத்த பின்பு
ஒரு நிமிடம் தாமதமாகவே உறங்கச் செல்கிறோம்!

ஒரு நீண்ட பகலில்
தேசிய நெடுஞ்சாலை மத்தியில்
ஒரு கோர விபத்தில்
அகால மரணமடைய நேரிடும் பொழுதின் தனிமை
இது எதைக்காட்டிலும் ஏகாந்தமாய் இருக்கக் கூடும்..!


****************

4. புகையானவள்...





நான் உன் சிகரெட்
என்னை உதடு சுடும் வரைக் குடி...
உன் நுரையீரலில் என்னை நிரப்பு!

"ஒரு முனையில் எரியும் கனலும்
மறுமுனையில் உருகும் பனியும்"
பூகோள முரண்பாடாய் எப்போதும் நீ
சிகரெட் பிடிக்கையில்...

பெட்டியின் கடைசி சிகரட்டின் பாசத்தோடும் - மீதியிருக்கும்
ஒற்றைத் தீக்குச்சியின் கவனத்தோடும்
நான் உன்னை அனுகுகிறேன்.

நீயோ, பூட்ஸ் காலால் நசுக்கப்பட்ட
சிகரெட்டின் உதாசீனத்துடன் என்னைவிட்டு
நகர்ந்து செல்கிறாய்

அனைக்கப்படாத சிகரெட்டைப்போல் புகைந்தபடி நான்
…கடைசிச் சாம்பல் வரை!


************

5. ஒரு கபடமற்ற மனதின் சித்திரங்கள்





முட்ட முட்டக் குடித்தாலும் இப்போதெல்லாம்
சாராயம் எந்த போதையும் தருவதில்லை..

நீலப்படங்கள் இப்போதெல்லாம்
எந்தக் கிளர்ச்சியையும் ஏற்படுத்துவது இல்லை..

எல்லா பெண்களிடமும்
வியர்வை கலந்த பவுடர் வாசமே வீசுகிறது..

பயமளிக்கவேண்டிய மயான இரவின் கும்மிருட்டும்
குற்ற முயற்சியையே தூண்டுகிறது..

வரவர...
கபடமற்ற பச்சிளங்குழந்தையின் ஸ்பரிசமும்
வயதான மூதாட்டியின் ஆழப்பார்வையும்..

அதிக நடுக்கத்தை உண்டுபண்ணுகிறது..!

*********

19 கருத்துகள்:

  1. // நான் உன் சிகரெட்
    என்னை உதடு சுடும் வரைக் குடி...
    உன் நுரையீரலில் என்னை நிரப்பு! //

    இன்னும் நிரப்பிகிட்டு தான் இருக்கேன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதைகள்!

    குறிப்பாய்

    "நேர்மை" மிக அருமை!

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான கவிதைகள்.
    எனக்கும் நேர்மையின் நேர்மை பிடித்திருக்கிறது.
    அதேபோல 3 ம் எண்ணுள்ள கவிதை அற்புதமானதொரு உணர்வை முடிக்கும்போது கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. எனது தேர்வு மூன்றாம் கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. //ஒற்றையில் சீட்டாடும் மனிதனின் நேர்மை
    ஒரு நீதிபதியினுடையதைக் காட்டில்
    நம்பகத்தன்மை உள்ளதாய் இருக்கிறது!//

    இதே போல் ஒற்றையில் செஸ் ஆடுபவன் அடையும் குழப்பம் அருமையாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  6. //நாட்களை மறந்து
    கொடியின் மீது உலறும் உல்லாடைகள்//

    ஏன் தல உள்ளாடைகள் தானெ கரெக்டு?? அப்புறம் கவிதைகள் அற்புதம் தல

    பதிலளிநீக்கு
  7. நீ கவிஞன் அய்யா ! நீ மட்டும் தான் கவிஞன்

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி சிபி,வேலன், கும்க்கி

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி சிபி, வேலன், கும்க்கி

    இளையகவி, 'உள்ளாடைகள்' தான் கரெக்ட்...திருத்ததிற்கு நன்றி

    ஐயா...இளையகவி...உங்கள் வாழ்துக்கு மிக்க நன்றி. இருந்தாலும் ''நீ மட்டிந்தான் கவி' ந்னெலாம் சொல்லாதீங்க. நான் விரும்பிப்படிக்கிற கவிஞர்களை எள்ளுவது போலாகிவிடும்.

    எனக்கு கவிதை யெல்லாம் எழுத வராது... எனக்கு சந்தோஷம் தரக்கூடிய காட்சிகளை, ஞாயமாக பட்ட...உணர்வுகளை எனக்கு தெரிந்த வார்த்தைகளில் சொல்ல முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. //ஐயா...இளையகவி...உங்கள் வாழ்துக்கு மிக்க நன்றி. இருந்தாலும் ''நீ மட்டிந்தான் கவி' ந்னெலாம் சொல்லாதீங்க. நான் விரும்பிப்படிக்கிற கவிஞர்களை எள்ளுவது போலாகிவிடும்.
    //

    ஒரு உணர்ச்சி பெருக்குல சொல்லீட்டேன் தல..அருவாளை கிழ போடுங்க ஆமா! பேச்சி பேச்சாத்தான் இருக்கனும்..

    பதிலளிநீக்கு
  11. //இளைய கவி சொன்னது…
    நீ கவிஞன் அய்யா ! நீ மட்டும் தான் கவிஞன்//

    நண்பர் இளைய கவி சொன்னதை மிக கொடூரமாக ஆதரிக்கிறேன், ஆமோதிக்கிறேன்....

    பிரவீன்,
    என்னோட பாசையில சொன்ன தாறு மாறு தக்காளி சோறு.....அதையும் இதையும் புப்ளிஷ் பண்ணி என்னோட தலைவர் கௌதம் அடுத்த ப்ளாக் எழுத விட மாட்டிங்க போல இருக்கே....

    சிவாஜி ஸ்டைல் ல சொன்ன,
    தலைவரே எழுத்தாளர்கள நாம உருவாக்கறதில்லை, தானா உருவாகறாங்க....கட்டுரை எழுதறான், க்விதை எழுதறான், போட்டோ எடுக்கறான், படம் வரையறான்....விட்டா எஸ்.ரா ஆயிருவான் போல :)

    பதிலளிநீக்கு
  12. அண்ணாச்சி (வடகரை வேலன்) மூலமாத்தான் உங்களை அறிந்துவந்தேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.ரொம்ப நல்லா எழுதறீங்க.3 வது உலுக்குது.
    /எனக்கு கவிதை யெல்லாம் எழுத வராது... எனக்கு சந்தோஷம் தரக்கூடிய காட்சிகளை, ஞாயமாக பட்ட...உணர்வுகளை எனக்கு தெரிந்த வார்த்தைகளில் சொல்ல முயற்சிக்கிறேன்./

    அப்புறம் இதுக்குப்பேரு என்னாங்க! :)

    பதிலளிநீக்கு
  13. உங்களை அறிவதிலும் மிக்க மகிழ்ச்சி முத்துவேல்..

    பதிலளிநீக்கு
  14. பாலா, உங்க அராஜகதுக்கு அளவே இல்லியா....

    கௌதம் க்கு யாராலும் தடைக்கட்டை போடமுடியாது. சூரியன் தினம் தினம் வருவதை யாரு தடுக்க முடியும் சொல்லுங்க ??

    பதிலளிநீக்கு
  15. ஒரு கபடமற்ற மனதின் சித்திரங்கள்....... அருமை நண்பரே

    பதிலளிநீக்கு